அறன் அல்ல செய்யாமை நன்று

 


அறன் அல்ல செய்யாமை நன்று

-----

 

     யாதொரு காரணம் பற்றியோஅறிவு இன்மையாலோ பிறர் தமக்குச் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்வதோடுஅவ்வாறான செயல்களை அவர்க்குத் திருப்பிச் செய்யாது விடுத்தல் "பொறை உடைமை" ஆகும்.

 

     "பொறையுடைமை" என்னும் அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "செய்யத்தகாத தீய செயல்களைத் தன்னிடத்தில் ஒருவர் செய்தாராயினும்இந்தப் பாவச் செயல் காரணமாகஇவர் மறு பிறவியில் கொடுமையான நரகத் துன்பத்தை அனுபவிப்பாரே என்று வருந்திஅவர் மீது இரக்கம் கொண்டுஅறம் அல்லாத செயல்களைத் திரும்பச் செய்யாது இருத்தல் நல்லது" என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

 

"திறன் அல்ல தன்பிறர் செய்யினும்நோ நொந்து,

அறன் அல்ல செய்யாமை நன்று"

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகவும் ஒப்பாகவும் பின்வரும் பாடல்கள் அமைந்திருத்தலைக் காணலாம்....

 

ஒறுப்பாரை யான் ஒறுப்பன்தீயார்க்கும் தீயேன்,

வெறுப்பார்க்கு நான்மடங்கே என்ப, --- ஒறுத்தியேல்

ஆர்வம்மயக்கம்குரோதம் இவை மூன்றும்

ஊர்பகை நின்கண் ஒறு.              --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     ஒறுப்பாரை யான் ஒறுப்பன் --- என்னைத் துன்புறுத்துகின்றவர்களை நான் துன்புறுத்துவேன் எனவும்தீயார்க்கும் தீயேன் --- கொடியவர்களுக்கு நான் கொடியவன் ஆவேன் எனவும்வெறுப்பார்க்கு நான் மடங்கே என்ப --- என்னை வெறுப்பவர்களை நான் நான்கு மடங்கு வெறுப்பேன் எனவும் உலகத்தார் கூறுவர். ஒறுத்தியேல் --- நீ இவற்றை மேற்கொண்டு பிறரைத் துன்புறுத்த்தக்தி அடக்கக் கருதுவாயாயின்ஆர்வம் மயக்கம் குரோதம் இவை மூன்றும் --- ஆசை, அறியாமை, வெகுளி என்னும் மூன்றும்ஊர் பகை --- உன்னை மேற்கொள்ளும் பகைகளாகத் தோன்றும்நின்கண் ஓறு --- ஆதலின் உன்னிடத்து அவை உண்டாகாதவாறு அடக்குத்தல் வேண்டும்.

 

     ''அடிக்கு அடிகுத்துக்குக் குத்துபொய்க்குப் பொய்கோளுக்குக் கோள்;'' என்ற உலகத்தார் பொதுவாகக் கூறுவதுமக்களிடையே பெருங் குழப்பத்தினை உண்டாக்கும். இது எக்காலத்திலும் தீராத துன்பத்தையே விளைத்துக் கொண்டு இருக்கும். எக்காலத்திலும் பொறுமையினை மேற்கொண்டு இருத்தல் வேண்டும் என்பது கருத்து.

 

"உபகாரம் செய்ததனை ஓராதே, தங்கண்

அபகாரம் ஆற்றச் செயினும், - உபகாரம்

தாம்செய்வது அல்லால், தவற்றினால் தீங்கு ஊக்கல்

வான்தோய் குடிப்பிறந்தார்க்கு இல்".     --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     உபகாரம் செய்ததனை ஓராது --- தாம் முன்பு செய்த உதவியை ஒருவர் நினைந்து பார்க்காமல், தம் கண் அபகாரம் ஆற்றச் செயினும் --- தம்மிடத்துத் தீமைகளை மிகுதியாகச் செய்தாலும்,உபகாரம் தாம் செய்வது அல்லால் --- அவருக்குத் தாம் திரும்பவும் உதவி செய்வது அல்லாமல்தவற்றினால் தீங்கு ஊக்கல் --- அவர் குற்றம் காரணமாக அவருக்குத் தீங்கு செய்ய முயலுதல்வான் தோய் குடிப்பிறந்தார்க்கு இல் --- உயர்குலத்தில் தோன்றிய மேலோர்களுக்கு இல்லை.

 

         தாம் நன்மை செய்தும் தமக்குத் தீமை செய்வோர்க்கு மேலுமேலும் நன்மை செய்வதல்லாமல்தீங்கு செய்ய முயலார் சான்றோர் என்பது கருத்து.

 

         பிறர்பால் உண்டாகும் தீய நினைவைஅவருக்கு நன்மை செய்து செய்தே மாற்றுதல் இயலும் என்பதனாலும்தமக்கும் அம் மனப்பான்மை மேன்மேலும் ஞான விளக்கத்துக்கு இடம் செய்யும் என்பதனாலும் இங்ஙனம் கூறப்பட்டது. 

 

நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால், மற்று அது

தாரித்து இருத்தல் தகுதிமற்று --- ஓரும்

புகழ்மையாக் கொள்ளாது, பொங்குநீர் ஞாலம்,

சமழ்மையாக் கொண்டு விடும்.              ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     நேர் அல்லார் --- தமக்கு ஒப்பு இல்லாத கீழ்மக்கள், நீர் அல்ல சொல்லியக்கால் --- தகாத வார்த்தைகளால் தம்மைத் திட்டினாலும்மற்று அது தாரித்து இருத்தல் தகுதி --- அதைத் தாங்கிக் கொள்வதே பெரியோருக்கு அழகு ஆகும். மற்று ---அப்படி இல்லாமல்,அவர்களும் கீழோர் மீது இழிசொல் வீசினால்பொங்கு நீர் ஞாலம் --- கடலால் சூழப்பட்ட இந்த உலகம்,புகழ்மையாக் கொள்ளாது --- புகழுக்கு உரிய செயலாகக் கருதாது, சமழ்மையாக் கொண்டு விடும் --- பழிப்புக்கு உரிய இழிந்த குணமாகவே கருதி விடும்.

 

கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும், தம்வாயால்

பேர்த்துநாய் கௌவினார் ஈங்கு இல்லை, - நீர்த்துஅன்றிக்

கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ

மேன்மக்கள் வாயால் மீட்டு.         --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     கூர்த்து நாய் கௌவிக் கொளக் கண்டும் --- சினம் மிகுந்த நாய் தமது உடம்பை வாயினால் கடித்துத் தசையைப் பிடுங்குதலைப் பார்த்தும்தம் வாயால் பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை --- அதற்கு எதிராகத் தமது வாயினால் திருப்பி நாயைக் கடித்தவர் இவ்வுலகத்தில் இல்லை;அதுபோல;  நீர்த்து அன்றிக் கீழ் மக்கள் கீழாய சொல்லியக்கால் --- தகுதியான சொல் அல்லாமல் கீழ்மக்கள் தாழ்வான சொற்களைச் சொன்னால்சொல்பவோ மேன்மக்கள் தம் வாயால் மீட்டு --- மேன்மக்கள் தம் வாயினால் திருப்பி அத் தாழ்வான சொற்களையே சொல்வார்களோ?

 

         கீழ்மக்களுக்கு எதிராக மேன்மக்கள் ஒருகாலும் தாழ்வான சொற்களைத் திருப்பிச் சொல்ல மாட்டார்கள்.

 

"தெரியாதவர் தம் திறன் இல்சொல் கேட்டால்,

பரியாதார் போல் இருக்க,--- பரிவுஇல்லா

வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே,

அம்பலம் தாழ்க் கூட்டுவார்".        --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     தெரியாதவர் தம் திறனில் சொல் கேட்டால் தவ--- அறிவில்லாதவருடைய (அவர் தம்மை இகழ்ந்து கூறும்) திறமை இல்லாத சொற்களைக் கேட்டால்பரியாதார் போல இருக்க --- துன்புறாதவர்களைப்போல் பொறுத்திருக்க வேண்டும்பரிவு இல்லா வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே - (அங்ஙனம் இல்லாது) அன்பில்லாத அந்த அயலார் வாயை அடக்கப் புகுவார்களோஇல்லை, (புகுவரேல்) அம்பலம் தாழ்க் கூட்டுவார் --- பொது இடத்தைத் தாழ் இடுவாரோடு ஒப்பார்.

 

     பொது இடத்தைத் தாழிட்டு மூட முடியாது. அதுபோலவே, அறிவில்லாருடைய வாயை அடக்குதல் முடியாது. தமது அறிவின்மையால் அவ்வாறு பேசுகின்றார் என்று அறிந்து, அதற்காக வருத்தம் கொள்ளாமல் இருத்தல் வேண்டும்.

 

"இன்னல் எமக்கு இழைத்ததனால்,வீடு இழந்து

             நரகு ஆழ்வார் என நினைந்து,

பன்னரிய பெரியர் பிழை பொறுப்பர்,பொறார்

             தம் பிழையைப் பரமன் ஆற்றான்,

முன்ஒருவன் செய்தனன் என்று அவற்கு இறப்பச்

             செயும் இடர்ம் முறையிலான் சேய்

பன்னி தமரையும் சேரும் அவர் நமக்கு எப்

             பிழைசெய்தார் பகராய் நெஞ்சே:.  --- நீதிநூல்.

         

இதன் பொருள் ---

 

     அறியாமல் தீங்கு இழைத்தவர், அத்தீவினைப் பயத்தால் பேரின்பப் பெருவாழ்வை இழந்து, மீளா நரகத்தில் ஆழ்ந்து விடுவாரே என்று வருந்தி அப்பிழையைப் பெரியவர் பொறுப்பர். பிழையைப் பொறுத்துக் கொள்ளாதவர்கள் செய்யும் குற்றத்தை ஆண்டவனும் பொறுத்து அருளமாட்டான். தனக்கு முன்பு ஒருவர் குற்றம் செய்தனர் என்று அவர்க்குத் தாமும் ஒரு குற்றத்தை,சாவினைத் தரும் பேரிடரைச் செய்தால்அவ் இடரால் அவருடைய மக்கள்மனைவியர்உறவினர் முதலானவர்கள் துன்புறுவர். அவர்கள் இடர் எய்தும்படி உனக்கு என்ன பிழை செய்தார்கள் மனமே! சொல்லுவாயாக.

 

     தவறு செய்தவனுக்குத் திருப்பித் தவறு செய்தால், அதனால், ஒரு பாவமும் அறியாத,அவனைச் சார்ந்தோரும் துன்புறுவர் என்பது அறிந்து பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். துன்பம் செய்தவன் எப்படியும் அதன் பலனை அனுபவிக்கத் தான் போகின்றான். ஏனவே, ஒருவன் துன்பம் செய்தான் என்பதற்காகத் திருப்பி அவனுக்குத் துன்பம் செய்தல் அறம் அல்லாத செயல் ஆகும். அறம் அல்லாத செயல்களைச் செய்தல் கூடாது.

 

 

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...