பயந்த தனிவழிக்குத் துணையாகத் தொடர்ந்து வருவது எது?
-----
மக்களில் பலரும் தம்மிடம் உள்ள பொருளை, இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல், கொடுத்து உதவாமல் பொருளை வெகுவாகச் சேர்த்து வைக்கவே நினைக்கிறார்கள். தம்மிடம் உள்ள பணம், பொன், தாங்கள் கட்டிக்கொண்ட அழகான வீடு, கட்டிக் கொண்ட மனைவி, பெற்றுள்ள மக்கள் ஆகிய எல்லாம் தங்களுக்கு எப்போதும் துணை என நினைக்கிறார்கள்.
உடம்பை எடுத்து வந்த எல்லோரும், உடம்பை விட்டுவிட்டு, போகப் போகின்ற நெடுவழிப் பயணம் ஒன்று உள்ளது. உயிர் போக் போகின்ற அந்த நெடுவழிப் பயணத்துக்கு பொன் பொருள், சுற்றம் என்னும் இவை எல்லாம் துணையாக வரமாட்டா என்று அறிவுறுத்துகின்றார் அருணகிரிதாநப் பெருமான்.
"பொங்குஆர வேலையில் வேலை விட்டோன் அருள்போல் உதவ,
எங்கு ஆயினும் வரும் ஏற்பவர்க்கு இட்டது;இடாமல் வைத்த
வங்காரமும் உங்கள் சிங்கார வீடும் மடந்தையரும்
சங்காதமோ? கெடுவீர்!உயிர்போம் அத் தனிவழிக்கே?"
என்பது கந்தர் அலங்காரத்தில் வரும் பாடல்.
பொங்கு ஆர வேலை --- ஆரவாரித்துப் பொங்குகின்ற அலைகளை உடைய கடல். வங்காரம் --- பொன் (வங்காரம் என்னும் சொல், தெலுங்கில் "பங்காரு" எனப்படும்.) சங்காதமோ --- துணையாக வருமோ?
இதன் பொருள் ---
நல்வழியில் அல்லாமல் தீயவழியில் சென்று கேடு அடையும் மனிதர்களே! மிகுதியாக ஒலிக்கும் கடலில் வேலாயுதத்தை விடுத்தருளிய முருகப்பெருமானின் திருவருளைப் போல, இல்லை என்று யாசித்து வந்த ஏழைகளுக்குப் பொருளை நீங்கள் வழங்கியதன் பலனானது தப்பாமல் உங்களுக்கு உதவும் பொருட்டு எவ்விடத்தில் ஆயினும் உங்களை நாடி வரும். யாசிப்பவர்களுக்கு தருமம் செய்யாமல் பெட்டியில் அழுத்தாமகப் பூட்டி வைத்திருந்த உங்களுடைய பொன்னும், நீங்கள் கட்டிய அழகிய வீடும்,மனைவி மக்கள் முதலானோரும், உமது உயிர் போகின்ற தனிமையான வழிக்குத் துணையாகுமோ?
ஒருவன் தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் தங்கமாக மாற்றி வைத்துக் கொள்கிறான். தங்கத்தின் மதிப்பு என்றைக்கும் ஏறக் கூடியது என்று நினைக்கிறான். நிலத்தை வாங்கிப் போடுகின்றான். நிலத்தின் மதிப்பு பின்னாளில் பன்மடங்கு உயரும் என்று நினைக்கின்றான். எப்போதும் அது துணையாக இருக்கும் என்றும் நினைக்கிறான். நாமும் ஒரு நாள் சாகப் போகின்றோம் என்னும் நினைவு வருவதில்லை.
வசிப்பதற்குப் பெரிய வீடு வேண்டும் என்று ஒன்றைக் கட்டிக் கொள்கிறான். வீடு சிங்காரமாகத் தான் உள்ளது. மிகப் பெரிய அந்த வீட்டில் இறைவனை வழிபடுகின்ற இடம்தான் மிகக் குறுகியதாக உள்ளது. உள்ளத்தில் இறைவனுக்கு இடம் இருந்தால்தானே அங்கே இடம் பண்ண முடியும். இறைவனை மறந்து சிங்காரமாகக் கட்டிய வீடு அது. அந்த வீட்டைத் தன்னுடைய மனைவியின் விருப்பத்தின்படி கட்டி இருக்கிறான். அவள் என்ன வசதி சமையலறையில் வேண்டும் என்றாளோ அவற்றையெல்லாம் அமைத்து இருக்கிறான். அவள் விருப்பப்படியே நல்ல காற்று வரும் இடத்தில் படுக்கை அறையை வகுத்திருக்கிறான். சிங்கார வீட்டில் அந்தச் சிங்கார மடந்தையுடன் வாழ்கிறான்.
தன்னுடைய கைப்பொருளை மனைவிக்கே சிலர் கொடுத்து விடுகிறார்கள். காரணம் அவளால்தான் இன்பம் கிடைக்கிறது என்ற நினைவு. இப்படித் தம்மிடம் இருக்கும் பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல், யாசிப்பவர்க்கு இடாமல் தங்கமாக வைத்துக் கொண்டிருப்பவர்களும், வீடாக வைத்திருப்பவர்களும், மடந்தையரோடு வாழும் வாழ்வாக வைத்திருப்பவர்களும் கடைசியில் செத்துத்தான் போகிறார்கள். அவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு திடமாக இத்தனை காலம் வாழலாம் என்ற வரையறையாவது உண்டா? "சென்றநாள் எல்லாம் சிறுவிரல் வைத்து எண்ணலாம் நின்ற நாள் யார்க்கும் உணர்வு அரிது" என்கின்றது "அறநெறிச்சாரம்" என்னும் நூல்.
"இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே" என்கின்றார் தாயுமானார். "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு" என்கிறார் திருவள்ளுவ நாயனார். "நேற்று இருந்தார்,இன்று வெந்து நீறு ஆனார்" என்கின்றனர் பெரியோர். நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார் நமக்கு ஒரு காட்சியைக் காட்டுகிறார். ஒருவருக்கு நாக்குச் சுவை அதிகம். அதற்கு ஏற்றபடி அவருடைய மனைவியும் நன்றாகச் சமைத்துப் போடும் ஆற்றல் படைத்து இருக்கின்றாள். தினமும் அவரே காய்கறிக் கடைக்குப் போய், காய்கறிகளைத் தேர்வு செய்து வாங்கி வருகின்றார். மனைவியிடம் கொடுத்து அடிசில் பண்ணச் சொன்னார். அந்த அம்மையாரின் சமையலும் வெகு சுவையாகவே இருந்தது. "அறுசுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட" உண்டு மகிழ்ந்தார். உண்ட களைப்புத் தீர உள்ளே போய் இளைப்பாறினார். மனைவி சாப்பிட்டு வந்தவுடன் அவரோடு மகிழ்ந்து இருந்தார். அதற்குப் பின்பு, "என்னவோ இடப் பக்கமாக வலிக்கிறது" என்று சொல்லிப் படுத்தார். படுத்தவர் படுத்தவர்தான். எழுந்திருக்கவே இல்லை.
"அடப்பண்ணி வைத்தார்; அடிசிலை உண்டார்;
மடக்கொடி யாரொடு மந்தணம் கொண்டார்;
இடப்பக்கமே இறை நொந்த்துத என்றார்;
கிடக்கப் படுத்தார்; கிடந்து ஒழிந்தாரே".
இதுதான் திருமூல நாயனார் நமக்குக் காட்டியருளும் காட்சி.
இறந்தவரோடு, அன்புடைய மனைவி அவருடன் போகவில்லை. அவர் செல்வமும் போகவில்லை. எல்லாம் இந்த உடம்பு வாழும் வரைக்கும் இங்கே தொடர்புடையவை போல இருக்கும். அவை எல்லாம் எதுவரையில் வரும் என்றால்,
"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மி விம்மி இரு
கைத்தலை மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே"
என்கின்றார் பட்டினத்து அடிகளார்.
"அத்தம்" (பொருள்) என்னும் தமிழ்ச் சொல் வடமொழியில் அர்த்தம் என்று வழங்கப்படும்.
பொன், பொருள், வீடு என்பவை எல்லாம், உடம்பில் உயிர் இருக்கும்வவரவரை தான் பயன்படும். உயிர் போன பின்பு அவை பயன்படா. உயிரோடு கூடவும் வரமாட்டா. சரி, அதுதான் கிடக்கட்டும். அன்போடு இருந்த மனைவியாவது வருவாரா? என்றால், அவரும் வரமாட்டார். பெண்கள் சுடுகாட்டுக்குப் போகும் வழக்கம் இல்லை. பிணத்தை எடுத்துக் கொண்டு போகும்போது தெருமுனை வரையில் வருவார்கள். ஆகவே பெண்களும் வீதிமட்டும் தான் வருவார்கள். அப்பா அப்பா என்று விம்மி விம்மி அலறி, கையைத் தலையில் அடித்துக் கொண்டு அழுகின்ற மைந்தர்களாவது கூட வருவார்களா? அவர்களும் சுடுகாட்டோடு நின்று விடுவார்கள்.
எதுதான் உயிரோடு கூட வரும் என்றால், "பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே" என்கின்றார் பட்டினத்து அடிகளார். நாம் செய்கின்ற புண்ணிய பாவ வினைகளே நம்மைத் தொடர்ந்து வரும் என்கிறார்.
"ஈட்டிய ஒண்பொருளும் இல் ஒழியும், சுற்றத்தார்
காட்டுவாய் நேரே கலுழ்ந்து ஒழிவர், -- மூட்டும்
எரியின் உடம்பு ஒழியும், ஈர்ங்குன்ற நாட!
தெரியின் அறமே துணை".
என்கின்றது "அறநெறிச்சாரம்" என்னும் நூல்.
இதன் பொருள் ---
குளிர்ந்த மலைநாட்டுக்கு அரசனே! பாடுபட்டுத் தேடிய, சிறந்த செல்வமும் மனையிலேயே நின்றுவிடும். சுற்றத்தார்சுடுகாடு வரை கூடவே அழுதுகொண்டு வந்து நீங்குவர். மூட்டப்படுகின்ற நெருப்பால் உடம்பு அழிந்து ஒழியும். இவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்த்தால், ஒருவனுக்குத் துணையாக வருவது அறமே ஆகும்.
அறமானது துணையாக எவ்விதம் வரும் என்றால்,
"தனக்குத் துணை ஆகி, தன்னை விளக்கி,
இனத்துள் இறைமையும் செய்து, -- மனக்கு இனிய
போகம் தருதலால், பொன்னே! அறத்துணையோடு
ஏகமா நண்பு ஒன்றும் இல்".
என்று விடை பகருகின்றது "அறநெறிச்சாரம்" என்னும் நூல்.
இதன் பொருள் ---
இலக்குமி போன்றவளே! செய்தவனுக்கு இம்மை மறுமைகளில் துணையாக நின்று,அவனைப் பலரும் அறியுமாறு செய்து, சுற்றத்தார் பலருக்கும் தலைவனாகவும் செய்து, மனதிற்கு இனிமையான செல்வத்தினையும் கொடுப்பதால், அறமாகிய துணையோடு ஒன்றாக வைத்து எண்ணுதற்கு உரிய, நட்பினர் ஒருவரும் இல்லை.
கண்ணுக்குத் தெரிந்தவை எல்லாம் உயிரோடு வருவதில்லை. இருவினைகள் ஆகிய புண்ணிய பாவ வினைகள் என்பன உலகிலுள்ள மக்களின் கண்ணுக்குத் தெரியாதவை. அவை உண்டு என்பதை, அவற்றின் விளைவாகிய இன்ப துன்பங்களை அனுபவிக்கும்போது உணர்ந்து கொள்ள முடிகிறது.
இரண்டு கம்பிகள் ஒரே மாதிரியாகத்தான் ஒடுகின்றன. இரண்டுக்கும் வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை. ஒரு கம்பியைத் தொடுகிறான். ஒன்றும் தெரியவில்லை. மற்றொரு கம்பியைத் தொடுகிறான். அதிர்ச்சி உண்டாகின்றது. இந்த விளைவைக் கொண்டே "இது மின்சாரக் கம்பி, தொடக் கூடாது" என்று உணர்கின்றான். சாதாரணக் கம்பிக்கும் மின்சாரக் கம்பிக்கும் வித்தியாசம் கண்ணுக்குத் தெரியவில்லை. அதுபோலவே, இருவினைகளும் அனுபவமாக வந்து தாக்கும்போதுதான், அவற்றின் உண்மை தெரியும். ஒருவருக்கு இரண்டு பிள்ளைகள், இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கிறார்கள். இரண்டு பேரையும் படிக்க வைக்கிறார். ஒருவனுடைய முயற்சி எல்லாம் பயன் அளித்து வருகிறது. மற்றொருவன் தொட்டது எல்லாம் தோல்வியாக முடிகிறது. ஒருவன் கல்வியில் தேர்ச்சி பெறுகின்றான். இன்னொருவன் தின்னும் கூலியாக உள்ளான்.
இதற்குக் காரணம் என்ன? இரண்டு கம்பியும் ஒன்றாகத் தோன்றினாலும் ஒரு கம்பியைத் தொடும் போது, அதிர்ச்சி உண்டாவதால், அது மின்சாரக் கம்பி என்று தெரிந்து கொள்வதுபோல, இரண்டு பிள்ளைகளும் ஒருவனுக்கு, ஒரே சமயத்தில் பிறந்து, ஒரே வீட்டில் வளர்ந்து வந்தாலும், புண்ணிய வினையால் ஒருவனுக்கு எல்லாம் அனுகூலமாகின்றன. இன்னொருவனுடைய பாவம் அவனுடைய முயற்சி எல்லாம் தோல்வி அடையும்படியாகச் செய்கிறது. இப்படி உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தப் பிறப்பில் அவர்கள் எவ்விதமான பாவ புண்ணியங்களையும் செய்யவில்லை. என்றாலும், அவர்கள் முன் பிறப்பில் செய்தவை தொடர்ந்து வருகின்றன என்று கொள்ள வேண்டும். ஆகவே, ஒருவன் இறக்கும்போது அவன் உயிர் செல்கின்ற தனி வழியே அவனுடைய சிங்கார வீடு தொடர்ந்து வருவது இல்லை. அவன் சேர்த்து வைத்திருக்கிற தங்கம், அவனுடைய மனைவி, மைந்தர்கள் யாரும் தொடர்ந்து வருவது இல்லை. அவன் செய்த புண்ணிய பாவமே தொடரும்.
உயிர் போகின்ற கடைசி வழி எப்படிப்பட்டது? என்றால், அது தனி வழி. யாரும் உடன் வரமுடியாத தனி வழி. அது "பயந்த தனிவழி" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். உடம்போடு இருக்கத் துணை உண்டு. உயிரோடு போகத் துணை இல்லை. "நும்மை நேடிவரும் தொலையா வழி' என்றும் காட்டி அருள்கின்றார். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தானாகவே உங்களைத் தேடி வருகிற தொலையா வழி அது. அத்தகு தனிவழியில் நீங்கள் யாத்திரை செல்லும் போதும் நீங்கள் தனியாகச் செல்ல முடியாது. அங்கும் ஒரு துணை வேண்டும். அது தக்க துணையாக இருத்தல் வேண்டும். அத்தகைய துணை வேண்டுமென்றால், மலை ஆறு கூறுகளாகப் போகும்படி வேலை விடுத்த வேலாயுதப் பெருமானை வணங்கி, ஏற்றவர்களுக்கு வெந்தது எது இருந்தாலும பகிர்ந்து கொடுக்கும் நிலையான மாதவத்தைச் செய்யுங்கள் என்கின்றார். அந்த அறம்தான், நீங்கள் போகப் போகின்றதொலையா வழிக்குப் பொதி சோறும் உற்ற துணையுமாக உங்களுக்கு வந்து உதவும்"என்று அருள்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.
"மலை ஆறு கூறு எழ வேல்வாங்கினானை வணங்கி அன்பின்
நிலையான மாதவம் செய்குமினோ,நும்மை நேடிவரும்
தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்றதுணையும் கண்டீர்!
இலையாயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்து ஏற்றவர்க்கே". --- கந்தர் அலங்காரம்.
இதன் பொருள் ---
கிரௌஞ்சமலையின் நடுப்பாகம் பிளவுபட்டு அங்கு வழிதோன்றுமாறு வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகப்பெருமானை அன்புடன் வணங்கி, இரப்போர்க்குத் தானம் செய்வதாகிய நிலையான பெருந்தவத்தைச் செய்வீர்களாக. இத்தகைய தவத்தின் பயனானது, உங்களைத் தேடிவரும் தொலையாத இறுதி யாத்திரை வழிக்கு கட்டுச் சோறு போன்ற பொருத்தமான துணையாக அமையும் என்பதை உணர்வீர்களாக. உம்மிடம் வந்து யாசித்தவர்களுக்கு இலைக் கறியாயினும், வெந்தது எதுவாயினும்,பகிர்ந்து கொள்ளுங்கள்.
"துணையோடு அல்லது நெடு வழி போகேல்" என்கின்றது வெற்றிவேற்கை. ஒரு நாள் இரண்டு நாள் போகக்கூடிய பயணமாக இருந்தாலே துணையோடு போகவேண்டும் என்று சொல்வார்கள். உயிர் எத்தனை பிறவிகளை எடுத்ததோ, இன்னும் எத்தனை பிறவிகளை எடுத்து யாத்திரை செய்யப்போகிறதோ தெரியாது. அது போகின்ற வழி தொலையா வழி, நெடு வழி, பயந்த தனிவழி. யாரும் துணைக்கு வர இயலாத தனி வழி. பொன், பொருள், மனைவி, மக்கள் எல்லாம் உயிர் போகின்ற அந்தத் தனி வழிக்குத் துணையாக வரமுடியாது. அவற்றைச் சங்காதம்(துணை) என்று எண்ணிக் கொண்டிருந்தால் கெட்டுப்போக வேண்டிவரும். உயிரைத் தொடர்ந்து வருவது, செய்தபுண்ணிய பாவ வினைகள்தான். எனவே, நம்மிடம் உள்ள பொருள்களை ஏற்பவர்களுக்கு இட்டுப் புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டும். பொங்கு ஆர வேலையில் வேலை விட்ட முருகப் பெருமானுடைய அருள் ஒன்றுதான் எங்காயினும் உயிருக்கு உதவ வரும். அதுவே உற்ற துணை ஆகும்.
இந்த நாட்டில் தேடிவைத்த பொருளை அப்படியே, பிறநாட்டுக்குக் கொண்டு செல்ல முடியாது. போகின்ற நாட்டுக்கு உரிய பணமாக அதை மாற்றிக் கொண்டுதான் செல்லவேண்டும். உலகியலே இப்படி என்றால், அருளியலும் அப்படித் தான். எடுத்த பிறவியில் ஈட்டிய பொருளை, போகப் போகின்ற நெடுவழிக்குத் துணையாக வருகின்ற வகையில், அதை அறமாக மாற்றிக் கொள்ள வேண்டும். பொருளை அருளாக மாற்றிக் கொள்ள வேண்டும். இறைவனுடைய அருளைப் பொருளாக நினைக்கிறவர்களுக்குத் தங்கள் கையிலுள்ள பொருள் எதுவும் பொருளாகத் தோன்றாது. இறை அருளில் நம்பிக்கை உடையவர்களுக்குப் பொருளிலே பற்று இருக்காது. பொருள் அற்றவர்க்குக் கொடுத்து உதவினால், அது இறைவனுடைய அருளாக மாறும்.
எனவே, ஈட்டிய ஒண்பொருளை, அருளாக மாற்றிக் கொள்ளுகின்ற உத்தியை நமது முன்னோர் அருளிச் செய்துள்ளதை உணர்ந்து, நிச்சயமாகப் போகப் போகின்ற நெடுவழிக்குத் துணையை இப்போதே தேடிவைத்துக் கொள்ளுவோம்.
No comments:
Post a Comment