தொண்டுநெறி சிறக்க வேண்டும்

 


தொண்டு நெறி சிறக்க வேண்டும்

-----

 

     உலகமக்கள் அனைவரும் இன்புற்று வாழவேண்டும் என்றால் தொண்டுநெறி சிறக்கவேண்டும். தொண்டு செய்பவர்கள் தொண்டர்கள். தானாக முன்வந்துபிறர் நலனுக்காகவோ அல்லது இறைவனுக்காகவோ எதனையும் எதிர்பாராமல் உழைப்பவர் தொண்டர் ஆவார். இதுவே திருத்தொண்டுமெய்த்தொண்டு.

 

     மனித உலகத்தை அன்பு வழியில் நடத்தி வாழ்வாங்கு வாழச் செய்வது கடவுள்நெறி. சமயம் என்பது வாழ்க்கையின் தத்துவம். சமய வாழ்வு கற்பனை அல்ல. பொய்யும் அல்ல. புனைந்து சொல்லப்பட்டதும் அல்ல. அது உண்மைநெறி. அனுபவத்தில் தோன்றியது. வாழ்க்கையில் இரண்டறக் கலந்தது.

 

     உலகின் பல்வேறு நாடுகளில் தோன்றிய சமுதாய முற்போக்குச் சிந்தனையாளர்கள் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர் அப்பரடிகள் எனப்படும் திருநாவுக்கரசு நாயானார். மனித இனத்தின் ஈடேற்றத்திற்காக உலகில் உண்டான புரட்சிகளுக்கு எல்லாம் முன்னோடியாகபலநூறு ஆண்டுகட்கு முன்பேசான்றோர் தோன்றும் நிலம் எனப் பாராட்டப்பெறும் தொண்டை மண்டலத்தில் திருநாவுக்கரசு நாயனார் தோன்றித் தமிழகத்தில் புரட்சி நடத்தினார். அவருடைய புரட்சி அருள் வழிப் பாய்ந்தோடிய புரட்சி. 

 

     ஆளும் இனம்ஆளப்படும் இனம் என்ற வேறுபாட்டை அருளியல் தலைவராகிய அப்பரடிகள் எதிர்க்கிறார். செம்மையாக ஆட்சி புரிபவன் இறைவன் ஆவான். "முறை செய்து காப்பாற்றும் மன்னவன்மக்கட்கு இறை என்று வைக்கப்படும்" என்றார் திருவள்ளுவ நாயனார். செம்மைநெறி என்று சொல்லிக் கொண்டு ஆட்சியாளரைத் தமது வசப்படுத்திபிற நெறியைச் சார்ந்தவர்களை எல்லாம் கொடுமைப்படுத்துவதை எதிர்த்தவர் அப்பரடிகள். 

 

     சமயங்களின் உண்மை நெறி எது என்று தெளிய முடியாமையால் தாம் பிறந்த சமயத்தை விட்டுமற்றோர் சமயம் சார்ந்து இருந்துதிரும்பவும் தாய்ச் சமயத்திற்குத் திரும்புதல் குற்றமாகாது. இது ஒரு குற்றம் என்று தமது சமயம் சார்ந்து இருந்த மன்னவனுக்குச் சொல்லப்படுகின்றது. "நமது சமயம் கெடுத்த பாவியைத் துற்புறுத்தல் வேண்டும்" என்று மன்னவனுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. என்ன நடந்தது என்பதை ஆராயாமல் "இவர்கள் குறிப்பிட்ட தீயோனைப் பிடித்து வாருங்கள்" என்று மன்னன் கட்டளை இடுகின்றான். ஆள்பவர்க்கு ஆராய்ச்சி அறிவு இருக்கவேண்டும். அவசரத்தில் ஒருதலைப் பட்சமாக முடிவு எடுத்தல் கூடாது. அப்படிஒருதலைப் பட்சமாக முடிவு கட்டியதால்தானே பாண்டியன் உயிர் துறக்க நேரிட்டது. எனவேஅப்படிப்பட்ட கொடுங்கோலனுக்கு எப்படிக் குடியாக முடியும்?

 

     அப்பரடிகள்தம்மை வந்து அழைத்த அமைச்சர்களைப் பார்த்துநாம் ஆர்க்கும் குடி அல்லோம்” என்று விடுதலை முழக்கம் செய்தார். முறைசெய்து காப்பாற்றும் மன்னவனே இறைவன். இறைவனே உலகின் தலைவன். அவன் ஒருவனுக்கே நாங்கள் குடிமக்கள் என்பது அவர் கொள்கை. ஆன்மாவிற்கு வயது இல்லைஉடலுக்குத்தான் வயது. ஆன்ம ஈடேற்றம் பெறுவதற்காகவே இந்த உடம்பு வாய்த்தது. "வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவிமதித்திடுமின்" என்றார் அப்பர் பெருமான். உயிர் மரணம் அடைவது இல்லை. உடலுக்கு ஏற்படுகின்ற மரணம் அறியாமையால் வருவதுநோயால் வருவதுஅறியாமையை நீக்கிமெய்யறிவைப் பெற்றால்பிறவி நோய் தீரும். அதற்கு வாய்ப்பாக இந்த உடம்பு கிடைத்து இருக்கஎமனுக்கு அஞ்ச வேண்டியது இல்லை. அந்த நெறியில் நின்ற அப்பரடிகள்."நமனை அஞ்சோம்என்றார்.

 

     இந்த நன்னெறிக்குத் தடைக் கற்களாக இருப்பவை சாதிகுலம்சமயவேறுபாடுகள். இவற்றின் பெயரால் மக்களைக் கொடுமைப்படுத்துவது கூடாது. கொடுமைப்படுத்துபவர்களைக் கொடுமைக்கு உள்ளாக்கவும் கூடாது. திருவருள் துணையால் வெற்றி கொள்ள வேண்டும். தவம் என்பதேதமக்குப் பிறரால் உண்டாகும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுதல்பிற உயிர்க்குத் துன்பம் செய்யாது இருத்தல்தான் என்பதை, "உற்ற நோய் நோன்றல்உயிர்க்கு உறுகண் செய்யாமைஅற்றே தவத்திற்கு உரு" என்று காட்டினார் திருவள்ளுவ நாயனார். வேண்டியவற்றை வேண்டியபடியே அடையப் பெறுவதால்செய்ய வேண்டிய தவத்தை இப்பிறவியிலேயே முயன்று மேற்கொள்ள வேண்டும். "வேண்டிய வேண்டியாங்கு எய்தலால்செய்தவம் ஈண்டு முயலப்படும்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     பிறசமயத்தாரின் தூண்டுதலால்மன்னவன் பலவகையிலும் தம்மைத் துன்புறுத்தியபோதும்துன்புறுத்திய மன்னவனையோபிறரையோ எவ்வகையிலும் அப்பரடிகள் கடிந்து கொள்ளவில்லை. அப்படிச் செய்தால் அது சமய வாழ்க்கை அல்ல. தமக்குத் துன்பம் உண்டாகக் காரணமானவர்களை மன்னிக்கும்படி இறைவனிடம் இயேசுபிரான் வேண்டினார்.

 

     அப்பரடிகள் அகம் நிறைந்த அன்பு கலந்த வழிபாட்டையே வற்புறுத்துகிறார். இறைவனின் திருவருளைப் பெறுதற்கு வாயில்அன்பு ஒன்றே ஆகும்.ஆன்மாக்கள்அன்பினைப் பெறுதற்குரிய வாயில்வழிபாடு.  திருவருளைப் பெறுவதற்கு வழிபாடு நேரிடையாத் துணை செய்யாது.

 

     இறை வழிபாட்டால் மனத்தினுள் கனிவும்கசிவும் தோன்றி அன்பு வெள்ளம் பெருக்கெடுக்க வேண்டும். அந்த அன்பே தூய திருவருளைத் தரும். திருவருளைப் பெறுதற்குரிய வாயில் அன்புஅந்த அன்பைப் பெறுதற்குரிய வாயில் பூசை. அன்பினைத் தூண்டி வளர்க்கும் சாதனமே வழிபாடு. "நுங்கள் வினை தீர மிக ஏத்தி வழிபாடு நுகரா எழுமினே" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான். வினை தீருவதற்கே வழிபாடு.

 

     சைவத் திருமுறைகள் அனைத்தும் அன்பு வழிபாட்டையே வற்புறுத்துகின்றன. இறைவன் மகிழ்வது நாம் அன்பு மிகுதியால் இடக்கூடிய பூவினாலும்நீரினாலுமே. "புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டுநீர் உண்டுஅண்ணல் அதுகண்டு அருள் புரியா நிற்கும்"என்று நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார் அருளினார். நாவிற்குச் சுவைதரும் பொருள்களைப் படைப்பதனால் இறையருளைப் பெறமுடியாது. "அன்பே சிவம்என்பது சைவநெறியின் முடிவு. "அன்பும்சிவமும்இரண்டு என்பர் அறிவிலார்"என்று குறிப்பிடுகிறார் திருமூல நாயனார். சேக்கிழார் அடிகள் "அன்பினால் இன்பம் ஆர்வார்'"என்றும் 'இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்என்றும் அருளிச் செய்துள்ளது சிந்தனைக்கு உரியது.

 

     அன்பு ஒன்றினால் மட்டுமே ஆன்மா இன்பத்தை அடைய முடியும். அந்த அன்பு ஒன்றிறால் மட்டுமே இறையருளைப் பெறமுடியும். எனவேஇன்பமே என்னுடைய அன்பே" என்றார் மணிவாசகப் பெருமான்.  அப்பரடிகள் குறிப்பிடுவதுபோலப் போதொடு நீர் சுமந்து பலர் திருக்கோயிலுக்கு வர வேண்டும். திருக்கோயிலுக்கு வருபவர்கள் திருக்கோயிலைத் தமது வீடுபோல எண்ணித் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உழவாரத் திருப்பணி இதுவே ஆகும். இத்தகு வழிபாட்டுமுறை வளர்வதால் மக்களுக்குள் ஒருமைப்பாடு பெருகும். திருத்தொண்டின் நெறி வளரும். இந்த அன்பை வளர்த்துக் கொள்ளத் துணை புரிவது இறைவழிபாடு. மற்றொன்று,மக்களுக்குச் செய்யும் தொண்டு. 

 

     நம்முடைய சமய நெறி தொண்டினாலேயே வளர்ந்த ஒன்று. அப்பரடிகள் எங்கும் ஈசன் இருக்கிறான் என்று கருதித் தொண்டு செய்யாமல்கங்கையிலும்காவிரியிலும் சென்று நீராடுவதைக் கடிந்து பேசுகிறார். "கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்?கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?ஒங்குமா கடல் ஒத நீர் ஆடில் என்?எங்கும் ஈசன் என்னாதவர்க்கு இல்லேயேஎன்று குறிப்பிடுகிறார். இதுவே சமயம் காட்டும் முற்போக்குக் கொள்கை."இரப்பவர்க்கு ஈய வைத்தார்ஈபவர்க்கு அருளும் வைத்தார்கரப்பவர் தங்கட்கு எல்லாம்கடுநரகங்கள் வைத்தார்"என்றும் பாடுகிறார். மக்களுக்குத் தொண்டு செய்வது இறைவன் உவக்கும் செயல் என்பது நம் ஆன்றோர் கொள்கை. அதுவே புண்ணியம் ஆகும்..

 

     பிற்காலத்தில் புண்ணியத்தை இருவகையாகப் பிரித்தார்கள். பசு புண்ணியம் உயிர்களுக்குத் தொண்டு செய்வதின் மூலம் பெறக்கூடியது. பதி புண்ணியம் இறைவனுக்குத் தொண்டு செய்வதின் மூலம் பெறக்கூடியது. இதில் பசு புண்ணியத்திலும்பதி புண்ணியம் சிறந்தது. இக் கொள்கை தத்துவ ரீதியில் தவறானது அல்ல.நான் செய்கின்றேன் என்னும் தன்னுணர்வோடு செய்யாமல் இறைச் சிந்தனையோடு கடமையைச் செய்ய வேண்டும். ஆண்டவன் நினைவோடு ஆருயிர் அனைத்தையும் ஒம்புதல் வேண்டும். இங்ஙனம் செய்யப் பெறும் பசு புண்ணியமும்பதி புண்ணியமே. மக்களுக்குச் செய்யும் தொண்டு மகேசனுக்குச் செய்யும் தொண்டு ஆகும்.

 

படமாடக் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில் 

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஓன்று ஈயில்,

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே” 

 

என்று இக் கொள்கையை நிறுவினார் திருமூல நாயனார்.

 

     நாம் விரும்பிய ஒருவருக்குச் சேர வேண்டும்என்று விரும்பி முகவரியை எழுதி உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கிற அஞ்சல் பெட்டியில் இட்டாலும்,அது உரியவரையே சென்று சேரும். அது போல இறைவனை நினைந்து,அவனால் அங்கீகரிக்கப் பெற்ற எந்த ஓர் உயிருக்காவது நாம் ஒன்றைத் தருவோமானால்,அது அவனையே சென்று சேரும். இத்தகைய மிகச் சிறந்த தொண்டின் நெறியை ஏழாம் நூற்றாண்டிலேயே மிக மிகத் தெளிவாக விளக்கியவர் அப்பரடிகள். "கரவாது இடுவாய்வடிவேல் இறை தாள் நினைவாய்" என்று வற்புறுத்தினார் அருணகிரிநாதப் பெருமான். இல்லை என்று வந்தவர்க்குஅவரது துன்பத்தைக் களையத் தம்மிடம் உள்ள ஒன்றை ஒளிக்காமல்இல்லை என்று வாயாரச் சொல்லாமல் கொடுத்து உதவ வேண்டும். அந்த உள்ளதோடு இறைவழிபாடு செய்தலும் வேண்டும். கரவாமல் கொடுத்த அந்த புண்ணியம் எப்படியாவதுஎங்காவது வந்துஇறைவன் திருவருள் போல உதவும் என்பதைக் காட்ட, " பொங்கு ஆர வேலையில் வேலை விட்டோன் அருள் போல் உதவ எங்காயினும் வரும் ஏற்பவர்க்கு இட்டது" என்று அற்புதமான ஒரு வழியைக் காட்டினார் அருணகிரிநாதப்பெருமான். இதுவே திருத்தொண்டு.

 

     அப்பரடிகள் திருத்தொண்டின் நெறி இந்த உலகில் வாழவேண்டும் என்பதற்காகவே வாழ்ந்தவர் என்பதால், "திருத்தொண்டின் நெறி வாழவரும் ஞானத் தவமுனிவர்" என்று சிறப்பித்தார் தெய்வச் சேக்கிழார் பெருமான். திருத்தொண்டு நெறி சிறக்கவேண்டும். தொண்டர்கள் என்று சொல்லப்படுபவர்கள்தொண்டுநெறியில் நிற்கவேண்டும்.

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...