பரபரக்க வேண்டாம்
-----
பரபரத்தல் என்னும் சொல்லுக்கு, தீவிரப்படல், மிக விரைதல், தன்வசம் அழிதல் என்று பொருள். வாழ்க்கையில் ஈடுபடும் முயற்சிகளில் வெற்றி பெற்று அமைதியும் இன்பமும் சூழ வாழ விரும்பினால் பரபரப்பு உணர்ச்சி கூடாது. அவசரக் கோலத்தில், பரபரப்பு உணர்ச்சியுடன் ஒன்றைப் பற்றி முடிவு எடுப்பதும் செய்வதும் நன்மை தராது. அவசரப்படுதல் என்ற குணத்தைக் கெட்ட குணங்களின் வரிசையிலேயே வைத்து மூத்தோர் முடிவு செய்திருக்கிறார்கள். மோசடி செய்யும் இயல்பு உடையவர்களும் ஏமாற்றுகிறவர்களுமே அவசரப்படுவார்கள். அவர்களுடைய நட்பும், உறவும் அவசரமானதாகவே இருக்கும்.அவர்களுடைய அன்பும் அவசரமானதாகவே இருக்கும். அதுபோல அவர்கள் காட்டும் பகைமையும் அவசரமானதாகவே இருக்கும்.
அவசரப்படுகிறவர்கள், வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்கின்றார்கள். நல்லவர்களைப் பகைவர்களாக மதித்து விடுகின்றனர். பகைவர்களை நல்லவர்களாக மதித்து விடுகின்றனர். இதன் காரணமாக வாழ்க்கை சுவையற்றதாகி, பயனற்றதாகி விடுகின்றது. ஆற்றல் இழப்பும் பொருள் இழப்பும் ஏற்படுகின்றன. மோசடி எண்ணமும் தந்திர புத்தியும் உடையவர்கள் மிக அவசரமாக விரும்பிப் பழுகுவார்கள். பரிவுரைகளையும், புகழுரைகளையும் குவிப்பார்கள். பின்னர், தமது மோசடி எண்ணம் நிறைவேறாத போது தூற்றுவார்கள். தவறான செயல்களைத் தவறான வழிகளில் செய்து முடித்துக் கொள்ளும் நோக்கம் உடையவர்களே அவசரப்படுவார்கள்; பரபரப்பாக இருப்பார்கள்.
இக் கருத்தை மாணிக்கவாசகப் பெருமான் தாம் பாடி அருளிய திருவாசகத்தில் தெளிவாக விளக்குகிறார். அருளார்ந்த நிலையில் விளங்குவது இன்ப வீடு என்னும் மோட்சம். அந்த வீட்டினுள் நுழையத் தகுதியுடையோர் பலர் காத்து நிற்கிறார்கள். ஆனால்,அத் தகுதியில்லாத ஒருவர் தகுதியுடைய அடியாரின் மேம்பட்டவராக நடிக்கிறார். ஆனால் அவர், காத்திருக்கும் மற்ற அடியார்களோடு காத்திருக்கவில்லை. அவர்கள் எல்லோரையும் முந்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைய விரைந்து முயற்சிக்கிறார்.
காத்திருக்கும் தகுதியுடைய அடியார்களுக்குக் காலந்தாழ்த்தியாவது நிச்சயமாக இடம் கிடைக்கும். தமது நடிப்பு வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, விரைந்து இடம்பெற முயற்சிப்பதால் பலனில்லை. தொடர் வண்டியில் ஏற்கெனவே தமது பயணத்துக்கு உரிய இடத்தை முன்பதிவு செய்துகொண்டவர்கள், எந்தவிதமான அச்ச உணர்வோ, பரபரப்போ இல்லாமல், பொறுமையாக வந்து வண்டியில் உரிய நேரத்தில் ஏறிக் கொள்ளலாம். ஆனால், முன்பதிவு செய்து கொள்ளாத ஒருவர் தானும் அந்த வண்டியில் பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதறத்காக, வண்டி வருவதற்கு முன்னதாகவே பரபரப்போடு வந்து காத்து இருந்து, வந்தவுடன் விரைந்து சென்று ஒரு இடத்தைப் பிடித்து அமர்கின்றார். சிறிது நேரத்தில், இடத்திற்கு முன்பதிவு செய்தவர் வந்தவுடன் எழுந்து வேறு ஒரு இடத்தில் அமர்கின்றார். அங்கும் முன்பதிவு செய்துகொண்ட ஒருவர் வந்த பிறகு, அந்த இடத்தையும் காலி பண்ண வேண்டியது ஆகின்றது. இப்படியே அந்தப் பெட்டி முழுவதும், முன்பதிவு செய்து கொண்டவர்களால் நிரம்பப் பெற்ற பிறகு, வேறு வழி இல்லாமல், விரைந்து சென்றவர் ஏமாற்றத்துடன், வண்டியை விட்டுக் கீழ் இறங்க வேண்டி வருகின்றது. இதுபோலத்தான், வாழவேண்டிய வழியில் வாழ்ந்து இறைவனுடைய அருளைப் பெறுவதற்கு ஏங்கி இருந்த அடியவர்கள் எல்லாம் அவனது அருளைப் பெற்று அமைதி பெறுகின்றார்கள். ஆனால், பொய்யாக வாழ்ந்து, பரபரப்புடன் வாழ்ந்து, அந்தப் பரபரப்பிலேயே இறையருளையும் பெற்றுவிடலாம் என்று விரைந்தவர், தாம் எண்ணியதைப் பெறமுடியாமல் ஏமாற்றத்தை அடைகின்றனர். இறைவனுடைய அருளைப் பெறுவதற்கு அவனிடத்து இடையறா அன்பு உள்ளத்தில் ஊற்றுப் போலப் பெருக்கெடுக்கவேண்டும். அன்பு வடிவாக உள்ள இறைவனை அன்பு வடிவானவர்தான் அடைய முடியும். அன்பு ஒன்றே இறையருளைப் பெறுவதற்கு உரிய தகுதி ஆகும். எனவே, இடையறாத அன்பு தமது ஊற்றெடுத்துப் பெருகும் வண்ணம் அருள் புரியவேண்டுகின்றார் மணிவாசகப் பெருமான்.
"நாடகத்தால் உன்அடியார் போல்நடித்து, நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்,
ஆடகச்சீர் மணிக்குன்றே! இடையறா அன்பு உனக்கு, என்
ஊடகத்தே நின்று உருகத் தந்து அருள்எம் உடையானே”
என்று உள்ளம் உருகப் பாடுகின்றார்.
இதன் பொருள் ---
எம் உடையானே --- எம்மை அடிமையாக உடையவனே, நான் உன் அடியார் போல --- நான் போலியாக உனது மெய்த்தொண்டர் போல வேடமிட்டு, நடுவே நடித்து --- அம்மெய்த் தொண்டர்களுக்கு இடையே தோற்றம் காட்டி, வீடு அகத்தே புகுந்திடுவான் --- முத்தி உலகத்தில் புகுவதற்கு, மிகப் பெரிதும் விரைகின்றேன் --- மிகப் பெரிதாகவும் விரைந்து நின்றேன்; ஆதலால், சீர் ஆடகக் குன்றே --- சிறப்பு வாய்ந்த, பொன் மலையே, மணிக்குன்றே --- மாணிக்க மலையே, உனக்கு இடையறா அன்பு --- உன்னிடத்து எப்பொழுதும் நிகழும் அன்பினை, என் அகத்து ஊடு --- என் நெஞ்சின் ஊடே, நின்று உருக --- நிலைத்து நின்று,அதனால் என் நெஞ்சம் உருகும் வண்ணம், தந்தருள் --- உதவி அருள்வாயாக.
நாடகத்தில் நடிப்பவர்களது நடிப்புகள் அவர்களது மனத்தோடு பொருந்தாது இருப்பதை உலகியலில் காணலாம். அது போல, இறை இறையியலில் அடியார்கள் போல நடிக்கின்ற தமது செயல்கள் மனத்தோடு பொருந்தாது இருக்கின்றன என்பார், "நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து" என்றார். உள்ளத்தில் உண்மை அன்பு இல்லை. ஆனால், உண்மையான அடியார் பெறும் உண்மையான பயனை மட்டும் விரும்புகின்றேன் என்பதால், "வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்" என்றார்.
தருமை ஞானமுதல்வர் வாழ்க்கையை வெற்றிகரமாக்க அற்புதமானதொரு உபதேசத்தை அருளிச் செய்கின்றார்.
"பரபரக்க வேண்டாம், பலகாலும் சொன்னேன்,
வர வரக் கண்டு ஆராய், மனமே! – ஒருவருக்கும்
தீங்கு நினையாதே, செய்ந்நன்றி குன்றாதே,
ஏங்கி இளையாது இரு"
"சிவபோகசாரம்" என்னும் நூலில் வரும் அற்புதமான உபதேசப் பாடல் இது.
இதன் பொருள் ---
மனமே! பரபரப்புக் கொள்ள வேண்டாம். உனக்குப் பலமுறையம் சொல்கின்றேன். அதன் பயனை நீ போகப் போகத் தெரிந்து கொள்வாய். ஒருவருக்கும் கேடு நினைக்காதே. ஒருவர் உனக்குச் செய்த நன்றியை மறவாதே. கிட்டாத பொருளுக்காக் கவலைப்பட்டு, ஏங்கித் துன்பப் படாமல் இரு.
பரபரக்க வேண்டாம். உணர்ச்சி வேண்டாம். எதையும் தேர்ந்து தெளியவேண்டும். உள்ளத்தில் உள்ள குப்பைகள் அகற்றப்பட வேண்டியவை. குப்பைகள் உடைய இடங்கள் அகற்றப்படுவன அல்ல. அவற்றை அகற்றவும் இயலாது. குற்றங்களைத் திருத்திப் பயன் கொள்ள முயல வேண்டும். இதனால், நாளும் குற்றங்களில் இருந்து விடுபடும் பண்பு வளரும்.
நம்முடைய வாழ்க்கையையும் வாழ்க்கைப் போக்குகளையும் பரபரப்பில்லாத உணர்வுடன் ஆராய்ந்தறிய நம்மை நாம் பழக்கிக் கொள்ள வேண்டும். ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று முடிவு எடுப்பதில் அவசரப்படக் கூடாது. அந்த அவசர முடிவால் நாமே பல நல்லவர்களைக் கெட்டவர்களாக்கி விடவும் முடியும். கெட்டவர்களை நல்லவர்களாக்கி விடவும் முடியும். கெட்டவர்களை நல்லவர்களாக நினைத்து அல்லல் படவும் நேரும்.
எந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த உடனாவது அல்லது பிறருடைய வாழ்த்து, வசை முதலியவற்றைக் கேட்டவுடனாவது அவசரப்பட்டு முடிவெடுப்பது நல்லதல்ல. ஒவ்வொன்றுக்கும் இருக்கிற காரண காரியங்களையும் உள்நோக்கங்களையும் சூழ்நிலைகளையும் ஒரு தடவைக்கு மூன்று தடவையாவது அமைதியாக ஆராய்ந்து முடிவெடுத்துப் பழகுவதும் செய்வதுமே நல்லது.
அவசரப்படக் கூடாது என்பதால், அமைதியாகக் காலங் கடத்துவது என்பது பொருள் அல்ல. வாழ்க்கையில் தெளிவும் உறுதியும் பெற, ஆராய்கின்ற மனப் பண்பு தேவை. வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தனித்தனியே வைத்துப் பார்த்து, நல்லதா, தீயதா என்று முடிவு செய்வது நல்லதல்ல. ஒவ்வொருவரிடத்தும், ஒவ்வொரு பொருளிலும் குறைகள் நிறைகள் விரவியே இருக்கும். குணங்களை அறிந்து கொள்ளவேண்டும். குற்றங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். பின்னர். அவற்றுள் மிகை எது என்று கணக்கெடுத்து, நல்லது தீயது என்று முடிவெடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
"குணம்நாடி, குற்றமும் நாடி, அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்"
என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.
ஒருவரின் குணத்தை மட்டுமல்ல, குற்றத்தையும் ஆராய வேண்டும் என்றதால், "குற்றமும் நாடி" என்றார். குற்றத்தையும் ஆராய்ந்தால், அது எதனால் உண்டானது என்று தெளிந்து கொள்ளலாம். அந்தக் குற்றத்திற்கு ஏதுவான குணம் நம்மிடம் இருந்தால், அதனை விலக்கிக் கொள்ளலாம். குணங்களையே முதன்முதலில் ஆராய வேண்டும், குற்றங்களையும் பின்னர் ஆராய வேண்டும்.
இன்றைய வாழ்க்கை முறையில் பலர், குணங்களைப் பார்க்க மறுக்கின்றனர். குற்றங்களையே நாடுகின்றனர். குணங்களை மறைத்துக் குற்றங்களையே பேசுகின்றனர். தன்னுடைய நிறைவின்மையை, பிறரிடத்து உள்ள குறையைக் காட்டுவதன் மூலம் மறைக்க முயற்சிக்கின்றனர். நன்றா தீதா என்று காண்பது மட்டும் போதாது. நன்றும் தீதும் நிகழ்வதற்குரிய காரணங்கள் என்ன என்று ஆராய்தலே வாழ்க்கையின் உயர்ந்த முறை.
ஒரு நிகழ்ச்சி தீமையாக இருக்குமானால் அத்தீமையினுடைய தோற்றங்கள், அதற்கான சூழ்நிலைகளை ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொண்டு நலம் விளைவதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டும். தீமையை வெறுப்பது மட்டும் சீர்திருத்தம் அல்ல. தீமை உள்ள இடத்தில் அதற்கு மாறான ஒரு நன்மையை வைத்துத் தீமையை அகற்றுவதே சீர்திருத்தம்.
உயர்ந்த ஒன்றைப் பெறவேண்டுமானால், அதற்குரிய தகுதியை வளர்த்துக் கொள்ளவேண்டும். எப்படி வாழவேண்டுமோ அப்படி வாழத் தலைப்பட வேண்டும். அல்லாமல், தன் மனம் போன போக்கில் நடக்க விரும்புதல் கூடாது. தகுதியை வளர்த்துக் கொள்ளாமல், தகுதியான ஒன்றைப் பெறுவதற்கு விரைவதால் ஏமாற்றமே மிஞ்சும். எனவே, "பரபரக்க வேண்டாம்" என்றனர் நமது முன்னோர்.
இதனை ஓர் உவமையில் வைத்துக் காட்டுகின்றது மெய்கண்ட சாத்திரம். பசியோடு வருகிற ஒரு பூனை,உறியின்மேல் தொங்க விடப்பட்டிருந்த பால் குடத்தைப் பார்த்தது. பூனை அதன் மேல் தாவி அமர்ந்தது. அந்த நேரத்தில் பக்கத்துச் சுவரிலே ஒரு கரப்பான் பூச்சி ஓடியது. அதைப் பார்த்த பூனை உயர்ந்ததாகிய பாலை மறந்தது. இழிந்ததாகிய கரப்பான் பூச்சி மீதே அதன் எண்ணம் சென்றது. பாலைக் குடிக்க விரும்பாமல், கரப்பானைத் தாவிப் பிடிக்க முயன்றது. அந்தப் பூனையின் நிலையில் நாம் இருக்கிறோம். உயர்ந்ததாகிய திருவருள் இன்பத்தை நாடாமல், இழிந்ததாகிய சிற்றின்பத்தையே நாடி அலைகிறோம். அதனாலே துன்பத்தை அடைகிறோம். ஆழாய்ச்சி அறிவு இல்லாமல், பரப்பபு மட்டும் இருந்தால் இந்த இழிநிலைதான் வாய்க்கும்.
"பரப்பு அமைந்து கேண்மின்! இது பாற்கலன்மேல் பூஞை
கரப்பு அருந்த நாடும் கடன்"
என்கின்றது "திருவருட்பயன்" என்னும் சித்தாந்த சாத்திர நூல்.
இதன் பொருள் ---
உலகப் பொருள்களின் மேல் பரந்து ஓடுகின்ற மனத்தை ஒரு நெறிப்படுத்தி நான் கூறுவதைக் கேளுங்கள். திருவருளை மறந்து, உலகப் பொருள்களில் கிடைக்கும் அற்ப சுகத்தைப் பெறுதற்கு நீங்கள் விரைகிறீர்கள். இந்த விரைவு எது போன்றது என்றால், பால் நிறைந்த குடத்தின் மேல் ஏறி அமர்ந்த பூனைட,அந்த பாலைப் பருக நினையாமல், சற்றுத் தொலைவில் காணப்படும் கரப்பான் என்னும் பூச்சியைப் பிடித்து உண்ணுதற்குக் கருதும் முறைமை போன்றதாகும்.
பெண்கள் ஊர்ப் புறத்தில் உள்ள கிணற்றுக்கோ, குளத்திற்கோ சென்று நீர் எடுத்து வருவார்கள். அவர்கள் தலைமேலே பெரிய நீர்க்குடம் இருக்கும். அக் குடத்தின் மேல் மற்றொரு சிறிய குடமும் வைத்திருப்பார்கள். இவை போதாது என்று இடுப்பிலும் ஒரு நீர்க் குடத்தை வைத்துக் கொண்டு வருவார்கள். வரும்போது ஊர்க் கதையெல்லாம் பேசுவார்கள். கையை வீசிக் கொண்டு நடப்பார்கள். அவர்களைப் பார்த்தால் தலைமேல் உள்ள குடத்தையே மறந்து விட்டவர்களைப் போலத் தோன்றும். பார்க்கின்ற நமக்குத்தான் குடம் கீழே விழுந்து விடுமோ என்ற கவலை உண்டாகும். அப்படி அவர்கள் பேசிக் கொண்டும், கை வீசிக் கொண்டும் வந்தாலும் அவர்கள் மனம் நீர்க்குடத்தின் மேலேயே இருக்கும். ஆனால், அது நமக்குத் தெரியாது. அதுபோல ஞானிகள் உலகத்தில் மற்றவர்களைப் போல உண்டும் உடுத்தும் தொழில் செய்து வாழ்ந்தாலும், அவர்கள் மனம் திருவருளையே பற்றியிருக்கும்.
இந்த நிலையோடு நமது மனத்தின் நிலையை ஒப்பிட்டுப் பார்க்க, நமது மனம் ஓரிடத்தில் நில்லாமல் எங்கெல்லாமோ ஓடி அலைகிறது. ஒரே பரபரப்புத் தான். வழிபாடு செய்யும்போது வெளியே ஏதேனும் ஓசை கேட்டால் மனம் அங்கே ஓடுகிறது. கோயிலுக்குப் போய் இறைவன் சந்நிதியில் நிற்கும்போது கூட மனம் அக்காட்சியில் ஈடுபடாமல் பற்பலவற்றை எண்ணி அலைபாய்கிறது. இப்படிப்பட்ட மனம் உடையவர்களுக்கு உபதேசம் செய்வது வீண் செயலாகும். அவர்கள் யார் என்ன சொன்னாலும் அதை ஏற்கமாட்டார்கள். அறியாக் குழந்தையிடம் வெறும் தாளைக் கொடுத்தாலும் அதைக் கிழித்து விடும். நூறு ரூபாய்த் தாளைக் கொடுத்தாலும் கிழித்து எறியும். இரண்டு தாளுக்கும் உள்ள வேறுபாடு அக்குழந்தைக்குத் தெரியாது. அதே குழந்தைக்கு நூறு ரூபாய்த் தாளின் மதிப்பை உணரச் செய்து, பிறகு கொடுத்தால் அது கிழித்து எறியாமல் பாதுகாக்கும். அதுபோலப் பரந்து ஓடுகின்ற, அமைதியற்ற மனம் உபதேசத்தின் அருமையை உணராது அதைத் தூக்கி எறிந்து விடும். ஆகவே முதலில் மனத்தை ஒரு நெறிப்படுத்த வேண்டும். அப்பொழுது தான் உபதேசத்தின் மதிப்பை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே, பரபரப்பு இல்லாமல் எதையும் கேளுங்கள் என்னும் பொருளில் "பரப்பமைந்து கேண்மின்" என்றார்.
No comments:
Post a Comment