பிரபஞ்சச் சேற்றைக் கழிக்க வழிவிட்டவன்
-----
கந்தர் அலங்காரமே ஒரு பெரிய கோயிலைப் போன்றது. அது ஓர் அருமையான சொற்கோயில். அதன் முகப்பில் விநாயகர் அமர்ந்து இருக்கிறார். அந்தக் கோயிலை அணுகும்போதே அருணகிரிநாதருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி உண்டாகிறது.
பலகாலம் வறுமையினால் அல்லல் பட்டுப் பணம் இல்லாமல் தவிக்கின்ற ஒருவனுக்குத் தன் உழைப்பினால் பணம் கிடைத்தால் மகிழ்ச்சி உண்டாகிறது. உழைப்பே இல்லாமல் திடீரென்று ஒருவர் இரண்டு இலட்சம் ரூபாயை கொடுத்தார் என்றால், அவன் அடையும் ஆனந்தம் அளவு கடந்து விளங்கும். கேளாமலே, உழைப்பு ஏதும் இல்லாமலே, தனக்குப் பெருநிதி கொடுத்தவரை எந்த எந்த வகையில் புகழ இயலுமோ அப்படியெல்லாம் புகழ முயல்வான்.
அருணகிரிநாதப் பெருமானும் கோயிலுக்குள் நுழையும் போதே, "கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே கண்டு கொண்டேன" என்று உள்ள மகிழ்ச்சியோடு துள்ளிக் கொண்டு போகிறார். இளைய களிற்றைக் காண்பதில் அவருக்கு அவ்வளவு ஆனந்தம்! "நான் பெரும் பாவியாக இருந்தேன். பற்பல பிறவிகள் எடுத்து உழன்று கொண்டிருந்தேன். எத்தனையோ பெரியோர்கள் இறைவன் திருவருளை அடைவதற்குப் பல்லூழி காலம் தவம் செய்திருக்கிறார்கள். நான் எந்தவிதமான தவமும் முன் பிறவிகளில் செய்யவில்லை. விட்ட குறை தொட்ட குறை என்பதைப் போல, எனக்கு இப்போது முருகன் அருளால், கிடைத்த இன்பம், நான் முன் பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பயன் அல்ல. அதற்கான பாக்கியம் சற்றும் இல்லாதவன்.முந்தைய பிறவிகளில் தவம் செய்யவில்லை. இந்தப் பிறவியிலாவது செய்தேனா என்றால், அதுவும் இல்லை. முன்னே செய்த தவத்தின் விளைவான பேறும், பின்னே செய்த தவமும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவன் அந்த முருகன்" என்று பாடுகிறார்.
உலகம் என்னும் ஆற்றில்,அனுபவம் என்னும் கல்லில்,நம் வினைகளைத் துவைத்துத் தூய்மை செய்து கொண்டு இறைவன்பால் போவதற்குப் பதிலாக, ஆற்றிலுள்ள சேற்றையெல்லாம் பூசிக் கொள்ளுகிறோம். ஏற்கெனவே இருந்த அழுக்குப் போதாது எனப் பின்னும் அழுக்கை ஏற்றிக் கொள்ளுகிறோம். உயிரிலே ஏறியிருக்கிற வினையாகிய அழுக்கை உலகமாகிற ஆற்றிலே போட்டுக் கழுவுவதற்குப் பதிலாக, வினைச் சேற்றைப் பின்னும் பூசிக் கொள்ளுகிறோம். இப்படி மூன்று விதமான சேறு, அழுக்கு நம்மேல் ஏறியிருக்கின்றன. புண்ணியம், பாவம் என்ற இரண்டுமே பிறப்புக்குக் காரணம். எனவே,இரு வினையையும் அழுக்கு என்றுதான் சொல்ல வேண்டும்.
பலகாலமாகச் சேர்த்து வைத்திருக்கிற அழுக்குக்கு சஞ்சிதம் என்று பெயர். அந்தச் சஞ்சிதம் நம்முடைய பெயர் போட்டு அப்படியே ஆண்டவனிடம் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டவன் நம்பாலுள்ள கருணையினால் அத்தனை அழுக்கு மூட்டைகளையும் வெளுத்து வா என்று சொல்லாமல், அவற்றையெல்லாம் தன்னிடம் மூட்டை கட்டி வைக்கச் சொல்லிவிட்டு, ஓர் அழுக்கு வேட்டி, ஒரு மேல் துண்டோடு நம்மைஇந்த உலகமாகிய ஆற்றுக்குப் போய் வெளுத்துக் கொண்டு வா என்று அனுப்புகிறான். இந்தப் பிறவியில் போக்கிக் கொள்வதற்கென்று பங்கிட்டு அமைத்த வினைக்குப் "பிராரத்தம்" என்று பெயர். இங்கு நாம் வந்து புதியதாக பூசிக் கொள்ளுகிற சேற்றுக்கு "ஆகாமியம்" என்று பெயர்.
இறைவனைப் போலக் கருணை மிக்கவர்கள் ஒருவரும் இல்லை. குளிக்கச் செல்வது உடம்பைப் பற்றி உள்ள அழுக்கு நீங்குவதற்காக. அழுக்கை நீக்குவதற்குப் பதிலாக சேற்றைப் பூசிக்கொள்ளக் கூடாது. இப் பிறப்பில் கொண்டு வந்த பிராரத்தம் என்னும் அழுக்கைப் போக்கி,பின் ஆகாமியம் என்னும் சேற்றைப் பூசிக் கொள்ளாமல் சென்றால், முன் பிறவிகளிலே சேர்த்து வைத்திருக்கிற சஞ்சிதமாகிற அழுக்கு மூட்டைகளைக் கொடுத்துத் துவைக்கச் சொல்வதில்லை. "அந்த அழுக்குத் துணிகளை எல்லாம் நான் பொசுக்கி விட்டேன். உனக்குப் புதுச்சட்டை தருகிறேன். இதை அணிந்து கொள்” என்று சொல்லுகிறான்."ஞானம் பெற்றவர்களுக்கு ஆகாமியம் இல்லை. சஞ்சிதமும் இல்லை"என்று சொல்கின்றன.
சஞ்சிதம் எப்படி இல்லையாகிறது என்பதை அப்பர் பெருமான் அழகுறப் பாடி உள்ளார்.
"விண்உற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில், அவை ஒன்றும் இல்லையாம்;
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சி வாயவே".
வானளாவ அடுக்கிய விறகிலே கொடிய நெருப்பு அவற்றை உண்பதற்கு உள்ளே புகுந்தால் விறகினுள் ஒன்றும் மீதி இராது எல்லாம் சாம்பலாகும் . இறைவனால் படைக்கப்பட்ட உலகில் மக்கள் பலகாலும் பழகிச் செய்த பாவத்தை நெருங்கி நின்று போக்குவது திருவைந்தெழுத்தே ஆகும்.
நெருப்பு சிறியதாக இருந்தாலும், எல்லா விறகுகளையும் எரித்து அழிக்கும் வல்லமை உடையது. விண்ணுற அடுக்கிய விறகு போல்வது நமக்காக இறைவன் பண்ணிய உலகினில் நாம் பயின்ற பாவம். விறகு என்பது நாம் செய்த பாவம். நெருப்பு என்பது இறைவனுடைய திருவைந்தெழுத்து.
பிரபஞ்சம் என்பது உலகமாயை. அது,உலக பசு பாச தொந்தம் அதுவான உறவு, கிளை தாயர், தந்தை, மனை, பாலர் என்பவற்றால் மனநிலை கெட்டுப்போகும் நிலையை உண்டாக்கும். உலக மாயையிலே பற்றுக் கொண்டு, அந்தச் சேற்றிலே வீழ்ந்தவர் அவ்வளவு எளிதில், இறைவன் துணை இல்லாமல் கரை சேர முடியாது.
"நேற்று உ(ள்)ளார் இன்று மாளா
நின்றனர்;அதனைக் கண்டும்
போற்றிலேன் நின்னை;அந்தோ!
போக்கினேன் வீணே காலம்;
ஆற்றிலேன்;அகண்ட ஆனந்த
அண்ணலே! அளவில் மாயைச்
சேற்றிலே இன்னம் வீழ்ந்து
திளைக்கவோ சிறியனேனே".
என்று பாடினார் தாயுமான அடிகளார்.
"நேற்றைப் பொழுதில் நோய்நொடி ஏதும் இன்றி நன்றாக இருந்த ஒருவரே, எதிர்பாராவண்ணம் திடும் என இன்று மாண்டு ஒழிந்தனர். இத்தகைய உலக நிலையாமையினைக் கண்ணாரக் கண்டும், இறைவனே நின் திருவடியினைத் தாமரையைப் போற்றி வழிபாடு புரியாமல், ஐயோ! வீணாகக் காலம் போக்கினேன். இன்னமும் அடியேனால் அந்நிலையினைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. எல்லையற்ற பேரின்பப் பெருமையனே! அளவில்லாத பிறப்பு இறப்புகட்கு உட்படுத்தும் மாயாகாரியமாகிய சேற்றிலே சிறியேன் இன்னமும் வீழ்ந்து துன்பத்தில் அழுந்தவோ?" என்று இறைவனிடம் முறையிடுகின்றார்.
"குளிக்க வந்தவன் சேற்றைப் பூசிக் கொள்வதுபோல நான் இந்தப் பிறவியிலும் பல பாவங்களைச் செய்து, பல குற்றங்களைச் செய்து ஆகாமியத்தை அதிகப்படுத்திக் கொண்டு இருந்தேன். பிரபஞ்சம் என்னும் சேற்றைப் பூசிக் கொண்டிருந்தேன். அந்தச் சேற்றை முருகன் போக்கி விட்டான் என்ன ஆச்சரியம்" என்று பெருமிதத்தோடு பேசுகிறார் அருணகிரிநாதர்.
பஞ்ச பூதங்களின் சம்பந்தம் உடையது இந்தப் பிரபஞ்சம். சித்து என்றும், சடம் என்றும் இரண்டு வகைப் பொருள்கள் உலகில் இருக்கின்றன. சித்து என்பது உயிர்; மற்றவை சடம்.சித்துப் பொருளாகிய உயிரும் சடப்பொருள் ஆகிய உடம்பும் சேர்ந்திருக்கின்றன. சித்தும் சடமும் சேர்ந்து உலகம் நடைபெறுகிறது. சித்தாகிய உயிரோடு மனம் என்ற ஒன்று இணைந்திருக்கிறது. சடம் ஐந்து பொருள்களாலானது. மூன்று விதமான வர்ணங்களைக் கொண்டு பல வர்ணமுள்ள படங்களையும் போட முடியும் என்று ஓவியக்காரர்கள் சொல்வார்கள். மஞ்சள், சிவப்பு, நீலம் ஆகிய இந்த மூன்று வண்ணங்களின் சேர்க்கையினால் பல வண்ணங்கள் உண்டாகின்றன. அதைப் போலவே சத்துவம், ராஜசம், தாதம் ஆகிய மூன்று குணங்களினால் மனம் அமைகிறது. எல்லாக் குணங்களையும் இந்த மூன்றில் அடக்கி விடலாம். சடப் பொருள்களும் மண், நீர், தீ, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து தத்துவங்களினால் ஆனவை.
"அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள்"என்று ஒரு பழமொழி உண்டு. அஞ்சும் மூன்றும் எட்டு என்று சேர்த்து, எட்டு வயதானால் எந்தப் பெண்ணும் சமையல் செய்வாள் என்றும் ஒருவகையில் இதற்கு பொருள் கொள்ளலாம். இன்னொரு வகையும் உண்டு. அதுதான் உண்மை. அடுப்புக்கு வேண்டியது மூன்று கல். சமையலுக்கு வேண்டிய சாமான்களைப் போட்டு வைத்துக் கொள்வது அஞ்சறைப் பெட்டி. அடுப்புக்கல் மூன்றும் பண்டம் நிரம்பிய அஞ்சறைப் பெட்டியும் இருந்தால் அறியாத பெண்ணும் கறி சமைப்பாள் என்று பொருள் கொள்ளலாம்.
இந்த உலகத்தைச் சித்து, சடம் ஆகிய இருவகைப் பொருள்களையும் கொண்டு பராசத்தி படைக்கிறாள். சடத்தை ஐந்து தத்துவங்களைக் கொண்டும், சித்தோடு இணைந்த மனத்தை மூன்று குணங்களைக் கொண்டும் படைக்கிறாள். வேதமும் முனிவரும் அறியாத பெண்ணாகிய பராசக்தி (அறியாப் பெண்) முக்குணத்தையும், ஐம்பூதத்தையும் கொண்டு உலகத்தைப் படைத்து நடத்துகிறாள். இந்த கருத்தை உள்ளடக்கியது அந்தப் பழமொழி.
ஐந்து பொருள்களாலானது இந்தப் பிரபஞ்சம். பிரபஞ்சம் என்னும் சேற்றிலே நாம் எல்லோரும் உழன்று கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தச் சேற்றில்தான் அழகான தாமரை முளைக்கிறது. தாயுமான சுவாமிகள் "பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற" இறைவனைக் கண்டார்; பிரபஞ்சச் சேற்றிலே தாமரையைக் கண்ட பெரியார் அவர். அவரைப் போன்றவர்கள் உலகத்திலுள்ள யாவும் இறைமயம் எனக் கண்டு மாயா விகாரத்தில் அகப்படாமல் தெளிவான காட்சி பெற்றவர்கள். "எல்லா உலகமும் ஆனாய் நீயே" என்று அப்பர் பெருமான் அனுபவிக்கிறார்.
"முன் பிறப்பிலும் இறைவன் கருணையை அடைவதற்கான முயற்சி செய்து புண்ணியத்தைச் (பேற்றைச்) சேர்க்கவில்லை. இந்தப் பிறவியிலும் அவன் அருளைப் பெறுவதற்கான தவம் ஒன்றும் செய்யவில்லை. பேறு சற்றும் இல்லாதவன். தவம் சற்றும் இல்லாதவன். நான் இந்தப் பிரபஞ்சச் சேற்றிலே விழுந்தேன். முருகனுடைய கருணையைப் பெறுவதற்கு எந்த விதமான தகுதியும் இல்லாத பாவி நான். அவனை நினைப்பதற்கேற்ற பக்குவம் என் மனத்தில் இல்லை. இப்படிப் பக்குவமற்ற நிலையிலே இருந்த என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டானே, என்ன அதிசயம்!" என்று ஆனந்த அதிசயத்தோடு பாடுகிறார்.
முருகன் கருணையைச் சொல்லத் தொடங்கிய அருணகிரிநாதர்,முருகனை முதலில் சொல்லவில்லை. அவன் பேற்றைப் பெற்ற எல்லையில்லா ஆனந்தத்தில் தமது பழைய நிலையைப் பற்றிச் சொல்லுகிறார். 'பேற்றைத் தவம் சற்று மில்லாத பாவி’ என்று தம்மைச் சொல்லுகிறார். பக்குவம் இல்லாத என்னை இறைவன் ஆண்டு கொண்டான் என்று சொல்லும்போது அவரது நன்றி பொங்குகிறது. "வழிவிட்டவா" என்று ஆச்சரியத்தோடு சொன்னார். வழி விட்டவன் யார் என்பதை முதலில் சொல்லவில்லை. பின்பு சொல்லத் தொடங்குகிறார்.அவன் கிருபாகரன் அவன் என்கிறார். கிருபை + ஆகரம் = கிருபாகரம். கிருபை = கருணை. ஆகரம் = இருப்பிடம், உறவிடம். கிருபைக்கு உறைவிடம் ஆன முருகப் பெருமான் சிவபரம்பொருளின் திருக்குமாரர்.
ஐந்து பூதங்களாலான பிரபஞ்சத்தைப் பற்றிச் சொன்னவர், ஐந்து அடையாளங்களைச் சொல்லிச் சிவபெருமானை முதலில் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.அந்த ஐந்து பொருள்களும் மிக உயர்ந்த பொருள்களா?ஆண்டவனுடைய திருச் சந்நிதியில் சேர்ந்து விட்டால் உயர்வு, தாழ்வு என்ற பேதம் இல்லை. எல்லாமே உயர்ந்தவை ஆகிவிடுகின்றன.கங்கையில் யமுனை புகுந்தாலும் கங்கைதான். சாக்கடை புகுந்தாலும் கங்கைதான். இரண்டிற்கும் அதில் வேறுபாடு இல்லை. அதைப்போல பெருமானுடைய சம்பந்தம் பெற்ற பொருள்கள் யாவும் ஒன்றுதான்; ஒன்றுக்கொன்று வேறுபாடு கிடையாது.
சிவபெருமானைப் பற்றிச் சொல்லும்போது முதலில் அவனது திருமுடியைக் காட்டுகிறார். உடம்புக்குள் தலை உத்தமமானது. அதற்கு 'உத்தமாங்கம்'எனப் பெயர். திருமுடியில் உள்ள சடைக் காட்டில் உள்ள பொருள்களைப் பற்றிப் பேசுகிறார்.அவனது கருணையை காட்டுகிற பொருள்கள் அங்கே இருக்கின்றன. அப்படி உள்ளனவற்றுள் ஐந்து பொருள்களைச் சொல்கிறார். அவன் கங்கை ஆற்றை அணிந்த பெருமான்-பாம்பை அணிந்த பெருமான்- இதழியை (கொன்றையை) அணிந்த பெருமான்-தும்பை மலரை அணிந்த பெருமான்- அம்புலியின் கீற்றை (பிறைச்சந்திரனை) அணிந்த பெருமான்.
எம்பெருமானுடைய செஞ்சடை ஆகிய அடவியில் (காட்டில்) இருக்கிற பொருள்களைச் சொல்ல வந்தவர் முதலில் ஆற்றைச் சொன்னார். "பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா" என்று சேற்றைச் சொன்னவர் உடனே ஆற்றைச் சொல்வது பொருத்தமானது. பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்ட கிருபாகரனுடைய தந்தை கங்கையைத் தலையில் சுமந்து கொண்டிருக்கிறார் என்று முதலில் அடையாளம் காட்டுகிறார்.கங்கை எல்லோருடைய அசுத்தத்தையும் போக்கும் புனிதம் உடையது. அப்பர் பெருமான் இறைவனைப் புனிதமானவன் என்று சொல்ல வந்தார். அவன் எல்லோருடைய அழுக்கையும் போக்குகின்ற தன்மை உடையவன்."புரிசடைமேல் புனல் ஏற்ற புனிதன் தான்காண்”என்பது அவர் அருள்வாக்கு.
"ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப்பு உடைத்து"என்கிறார் திருவள்ளுவ நாயனார். நல்ல முறையில் படித்திருந்தால், கல்வியால் பயன் என்ன என்பதை உணர்ந்து படித்திருந்தால்,ஏழு பிறப்புக்கும் உதவும்.ஆனால், படித்தவனுக்கு செருக்கு வந்தாலோ யாரும் சமாளிக்க முடியாது. அதனால்தான்,"கற்றாரை யான் வேண்டேன்,கற்பனவும் இனி அமையும்"என்றார் மணிவாசகப் பெருமான். "கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்; கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்வேன்"என்று தாயுமானவர் பாடுகிறார்.
மெத்தப் படித்து விட்டது காரணமாக, கடவுளே இல்லை; நான்தான் உயர்ந்தவன் என்று பிதற்றி அலையும் நிலைக்கு வந்து விடுவதும் உண்டு.அத்தகையவர்கள் இந்தக் காலத்தில் மட்டும் இருக்கிறார்கள் என்பதில்லை. அந்தக் காலத்திலும் தாருகாவனத்தில் இருந்தார்கள். "ஆண்டவன் என்ன? நான்தான் பெரியவன்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் சிலர். அவர்கள் வேதம் படித்தவர்கள்;வேள்வி செய்தவர்கள். வேதம் படித்தாலும் ஞானம் வரவில்லை.
உயிர்களிடத்தில் அன்பு, இறைவனிடத்தில் நம்பிக்கை இவை மிகவும் அடிப்படையானவை. கடைக்கால் இல்லாத கட்டிடத்தைப் போல அவர்கள்,நாம் வேதம் படித்தோம் என்ற செருக்கால் இறைவனை நினையாமல் இருந்தார்கள். எம்பெருமான் அவர்கள் செருக்கை அடக்கினான். அப்போது அவர்கள் வேள்வி செய்து பாம்பை வருவித்து இறைவன்மேல் படையாக விட்டார்கள். இறைவன் அதனைப் பற்றிச் சடையின் மேல் வைத்துக் கொண்டான்.இறைவன் நஞ்சுக்கு நஞ்சாக இருப்பவன்- காலகாலன். அவன் திருமுன் கல்வித் தருக்கு உள்ளவர்களும், கர்மத் தருக்கு உள்ளவர்களும் தருக்கு அடங்கியவர்களாகப் போய் விடுவார்கள் என்பதற்கு அடையாளம் பாம்பு.
சிவபெருமான் திருமுடியில் அணிந்திருப்பது கொன்றை மலர். கொன்றை மலர் பொன்னிறம் பெற்றது. அதனைப் பிரணவ புட்பம் என்று சொல்வார்கள். ஒம் என்ற எழுத்தைப் போல் அது வளைந்திருக்கிறது. பிரணவத்தை இந்த நாட்டில் இருக்கிற எல்லாச் சமயங்களும், புத்த சமண சமயங்களும்கூட,ஒப்புக் கொள்கின்றன. ஓங்காரத்தை விளக்கப் பலப்பல உருவங்களை வைத்திருக்கிறார்கள். விநாயகரே பிரணவ உருவம் உடையவர்தான். அவரது உருவத்தைத் தலையோடும், தும்பிக்கையோடும் பார்த்தால் பிரணவ உருவத்துக்கும், அந்தக் கோலத்துக்கும் உள்ள ஒப்புமை தெரியவரும்.கொன்றை ஓங்காரத்தை நினைப்பூட்டும் கொன்றை மலர் சிவபெருமானுக்கு மிகவும் விருப்பமானது.
சிலர் பிறக்கும் பொழுதே தீயவர்களாகப் பிறப்பார்கள். வாழ்நாள் முழுவதும் தீயவர்களாகவே இருப்பார்கள். சிலர் பிறக்கும் பொழுது இயற்கையிலேயே நல்லவர்களாகப் பிறப்பார்கள், வாழ்நாள் முழுவதும் நல்லவர்களாகவே இருப்பார்கள்.இயற்கையிலேயே நல்லவர்களாகப் பிறந்து, நடுவில் தலை திரும்பிப் போய்ப் பின்பு இறைவனை அடைந்ததால் மறுபடியும் நல்லவர்களாக மாறி விடுகிறவர்களுடைய கூட்டத்திற்கு எடுத்துக்காட்டு கங்கை. இயற்கையிலேயே கெட்டவர்களாகப் பிறந்து, வாழ்நாள் முழுவதும் கெட்டவர்களாகவே இருப்பவர்களும் கூட இறைவனை அடைந்த மாத்திரத்திலே தங்கள் கெட்ட குணத்தை விட்டவர்களாகிறார்கள். இப்படிப்பட்டவர்களுடைய கூட்டத்திற்கு எடுத்துக்காடு பாம்பு.இயற்கையிலேயே நல்லவர்களாக பிறந்து, வாழ்நாள் முழுவதும் நல்லவர்களாகவே இருக்கின்றவர்களும் இறைவனை அடைகிறார்கள். இத்தகையவர்களுடைய கூட்டத்தின் எடுத்துக்காட்டு கொன்றைமலர்.இறைவனுடைய சந்நிதிக்கு நல்லவர்கள் மாத்திரம் போக வேண்டும் என்பதில்லை. பிறக்கின்றபோதே நல்லவர்களாக இருந்தாலும் சரி, பிறக்கின்றபோதே கெட்டவர்களாக இருந்தாலும் சரி, பிறக்கின்ற போது நல்லவார்களாக இருந்து இடையில் ஏற்பட்ட சேர்க்கையினால் கெட்டவர்களாக மாறினாலும் சரி, இறைவன் சந்நிதியை அடைந்து விட்டால் உயர்வு பெற்று விடுவார்கள் என்பதை இந்த மூன்று பொருள்களும் காட்டுகின்றன.
நான்காவது பொருள் தும்பை. அதுவும் இறைவனுடைய சிவந்த சடைக் காட்டின்மேல் இருக்கின்றது. தும்பை மலர்,ஒர் இதழை உடையது. மலர் என்றால்,மணம் இல்லாவிட்டாலும், நிறம் வேண்டும் என்பதை இன்றைய நாகரிகத்தில் பார்க்கிறோம். மணமே இல்லாத கனகாம்பரத்தை யாவரும் விரும்பி வாங்குகிறார்கள்! நமது நாகரிகம் அப்படி வளர்ந்திருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள மலர்களுக்குத்தான் சிறந்த மணம் உண்டு. குருடனும் மலரை அனுபவிக்கும்படி உள்ளது தமிழ்நாடு. இத்தகைய தமிழ்நாட்டில் மணமுள்ள மலரை விட்டு, வண்ண மலரைச் சூடி அனுபவிக்கிற நாகரிகம் வந்துவிட்டது. மலர் என்றால் மணம் வேண்டும்; இதழ்கள் இருக்க வேண்டும்; நிறம் வேண்டும். ஆனால் தும்பை மலருக்கு நிறம் இல்லை; இதழ்களும் இல்லை; வாசனையும் இல்லை. அதுவும் இறைவன் திருச்சடையில் இருக்கிறது. தும்பையை யாரும் சூடிக் கொள்வது இல்லை. அதை இறைவன் அணிந்திருக்கிறான். தும்பை மலருக்கு மணம் இல்லாவிட்டாலும், நிறம் இல்லாவிட்டாலும், இதழ்கள் இல்லாவிட்டாலும், ஒன்றே ஒன்று மாத்திரம் இருக்கிறது; அது மென்மை.மலருக்கு மென்மை ஓர் இயல்பு.
நிறம் இல்லாத வெள்ளை நிறம் உடைய தும்பை மலர் அமைதிக்கும் அன்புக்கும் உதாரணமாக உள்ளது. மணம் இல்லாவிட்டாலும்,மலருக்கு உரிய மென்மை தும்பையில் இருப்பதனால்,அதனை எம்பெருமான் ஏற்றுக் கொண்டான். ஆடம்பரம் வேண்டுவதில்லை. மந்திரசெபம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெரிய கோயில்களுக்குப் போய்த் தவம் பண்ண வேண்டுவதும் இல்லை. அன்பு என்ற ஒன்று இருந்தால் போதும், ஆண்டவன் ஏற்றுக் கொள்வான் என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்திக் கொண்டு,சின்னப் பூவாகிய தும்பை இறைவன் திருமுடியில் கொன்றை மலருக்கு அருகில் இருக்கிறது.
இறைவனுடைய செஞ்சடையில் பெரிய, அழகான, மணமுள்ள கொன்றை மலருக்கு அருகிலேயே, நிறம் இல்லாத, வாசனையற்ற தும்பை மலரும் இருக்கிறது. எவ்வளவு பெரியவனாக இருந்தாலும், எவ்வளவு சிறியவனாக இருந்தாலும் இறைவன் சந்நதிக்கு வந்து விட்டால் ஒரே நிலையை உடையவர்கள் என்ற உண்மையை இது உணர்த்துகின்றது.
ஐந்தாவது பொருளாக இறைவனுடைய சடையில் இருப்பது சந்திரன். சிவபெருமான் "அம்புலியின் கீற்றைப் புனைந்தவன்". அம்புலியின் கீற்று அவன் செஞ்சடா அடவியின் மேல் ஏறிக் கொண்டு, அவனுடைய அளப்பருங் கருணையைக் காட்டுகிறது.அம்புலியைச் சூடிக் கொண்டிருப்பதால்தான் அவனுக்குச் சந்திரசேகரன் என்ற பெயர் வந்தது. தவறு இழைத்தவர்களும் தன்னைச் சரண் அடைந்து விட்டால், இறைவன் அவர்களை மிக உசயர்ந்த நிலையில் வைப்பான் என்பதை இது காட்டுகின்றது.அபராதம் செய்தவனாக இருந்தாலும் இறைவன் திருவடியை அடைந்துவிட்டால், அவன் தன் தலையில் வைத்துக் கொள்வதற்குரிய உயர்ந்த பொருள் ஆகி விடலாம் என்பதைச் சந்திரன் காட்டுகிறான்.
இறைவன் அருளைப் பெறத் தவம் செய்ய வேண்டும் என்கிறார்கள். "எனக்கு முன்னைப் பேறு இல்லை. பின்னைத் தவமும் இல்லை. கருணையே வடிவான சிவபிரான் தன்னுடைய திருச்சடையிலே தன் கருணையைப் புலப்படுத்தும் அடையாளமாக ஐந்து பொருள்களை வைத்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய திருக்குமரன் ஆகிய முருகப் பெருமான், பேறு தவம் என்னும்இரண்டும் கெட்ட எனக்கு அற்புதமான ஆனந்தத்தைத் தந்தான். அவன் அருளிய பேற்றை என்ன என்று சொல்வேன்"என்று அருணகிரிநாதர் பாடுகிறார்.
"பேற்றைத் தவம் சற்றும் இல்லாதஎன்னை, பிரபஞ்சம்என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா! செஞ்சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே!"
என்பது கந்தர் அலங்காரத்தில் வரும் பாடல்.
இதன் பொருள் ---
சிவந்த திருச்சடையின் மீது கங்கை நதியையும், பாம்பையும், கொன்றை மலரையும், தும்பை மலரையும், பிறைச்சந்திரனையும் சூடியுள்ள பெருமைக்கு உரியவர் ஆகிய சிவபரம்பொருளின் திருக்குமாரரே! கருணைக்கு இருப்பிடம் ஆனவரே! முத்திப் பயனைப் பெருவதற்கு உரிய பாக்கியம் இல்லாதவனும், நல்ல தவம் சிறிதும் செய்யாதவனும் ஆன அடியேனை, உலகமாஐ என்கிற சேற்றில் இருந்து அகன்று உய்யுமாறு உண்மைநெறியை உணர்த்தி அருளிய தேவரீரது எளிவந்த திருக்கருணை இருந்தவாறு என்னே?
"பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை" என்பது ஆன்மாவைப் (பசுவைப்) பற்றிச் சொல்லியது. "பிரபஞ்சம் என்னும் சேறு" என்பது ஆன்மாவை இயல்பாகவே பற்றி உள்ள மலம் அல்லது பாசத்தைப் பற்றிச் சொல்லியது. மற்றவை பதியைப் (இறைவனைப்) பற்றிச் சொல்லியவை. மாயையாகிய சேற்றிலே இருந்த ஆன்மா, அதைக்கழுவப் பெற்று இறைவன் இருப்பிடத்தில் போய் சேர்ந்தது. இதையே உலகத்திலுள்ள எல்லாத் தத்துவ நூல்களும் வெவ்வேறு வகையில் சொல்கின்றன.
ஆன்மா இறைவனை அடைவதற்குத் தடையாக இருப்பது ஒன்று. அதுதான் பிரபஞ்சச் சேறு. ஆன்மா இந்தப் பிரபஞ்சச் சேற்றிலே புதைந்து, செய்ய வேண்டிய தவங்களைச் செய்யாமல், பெறவேண்டிய பேறுகளைப் பெறாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. சேற்றைக் கழுவி இன்பம் அடைய வேண்டுமானால்,புனிதமான இறைவன் திருவருளைப் பெறவேண்டும்.
No comments:
Post a Comment