கடமையைச் செய்தலே கடவுள் வழிபாடு.
-----
"கடமையைச் செய். அதுவே போதும்; கடவுள் வழிபாடு அவசியமில்லை" என்று ஒருபுறம் குரல் கேட்கிறது. இது பகுத்தறிவு வாதம் எனப்படுகின்றது. "இறைவனை வழிபடுவதே கடமை. அவனை வழிபடாமல் எந்தக் கடமையைச் செய்தாலும் பயனில்லை" என்று இன்னொரு புறம் இப்படி ஒரு குரல் கேட்கிறது! இப்படிக் குரல் கொடுப்பவர்கள் பழைமைவாதிகள். பழைமையாக இருப்பது ஒரு குறை அல்ல. ஆனால், முன்னோர் வகுத்துக் காட்டிய, வாழ்ந்து காட்டிய நெறி என்ன என்பதை உள்ளவாறு உணரவேண்டும். "கடமையைச் செய்; கடவுளை வழிபடு" என்று மூன்றாவது குரல் கேட்கிறது! இந்தக் குரல்தான் நடைமுறை வாழ்க்கையோடு கூடியது.
கடமை - இந்த உலகத்தின் இயக்கத்திற்குரிய அச்சாணி. கடமை என்ற அச்சாணியில்தான் உலகம் சுழல்கிறது; இயங்குகிறது. வாழ்தலுக்கும், சாதலுக்கும் இடையே உள்ள போராட்டம் கடமையை மையமாகக் கொண்டது. சுவர்க்கத்தை அடைய வேண்டுமானாலும் படிப்படியாக நகர்ந்து சென்றுதான் அடையவேண்டும். சுவர்க்கத்தை அடையும் காலம் வரையில் வாழ்கின்ற வாழ்க்கை என்ற ஒன்று உண்டு. அந்த வாழ்க்கையை மனிதன் கடன் படாமல் நிகழ்த்த வேண்டும். களவு செய்யாமல் நடத்தவேண்டும். வாழ்க்கையைக் கடன் படாமலும் களவு செய்யாமலும் நடத்த வேண்டுமானால், கடமை செய்தலைத் தவிர வேறு வழி இல்லை. உழைக்காமல் ஒருவன் உண்கின்றான் என்றால், அவன் உழைத்துப் பொருளை விளைத்தவனுடைய உழைப்பை அல்லவா உண்கின்றான்? அது கடன் தானே. கடனை எப்போதாவது திருப்பிக் கொடுத்துத் தானே ஆகவேண்டும்? உழைப்பைச் சுரண்டுகின்றவனுக்கும் இறைவன் அருள் புரிவான் என்றால், அது நகைப்புக்கு இடமானதே.
"என்கடன் பணி செய்து கிடப்பதே" என்றார் அப்பர் பெருமான். அதன் காரணத்தை அப் பாடலிலேயே நாம் உணர வைத்துள்ளார். "திருக்கரக் கோயிலான்தன் கடன் அடியேனையும் தாங்குதல், என்கடன் பணி செய்து கிடப்பதே". கடமையாகப் பணியைச் செய்து, பலனை எதிர்பாராமல் கிடப்பவர்களைத் தாங்குவது இறைவன் கடமை அல்லது தொழில் ஆகிறது. "தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே" என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இறைவனுக்கு ஒரு தொழில் உள்ளது என்றால், அது தன்னைத் தொழுபவர்கள் துன்பத்தைத் தீர்த்தலே ஆகும். திருக்கரக் கோயிலான் ஆகிய இறைவன் நம்மைத் தாங்கி அருள் புரியவேண்டும் என்றால், நமது கடமை, நமக்கு விதிக்கப்பட்ட பணியைச் செய்து, பலனை எதிர்பாராமல் கிடப்பது ஒன்றே வழி ஆகும். இறைவன் அவனது கடமையை ஒழுங்காகச் செய்யவேண்டும் என்றால், நமது கடமையை நாம் ஒழுங்காகச் செய்யவேண்டும். அதுதான் "பணிவிடை" என்று சொல்லப்படுவது. "கலக்கு உண்டாகு புவிதனில் எனக்கு உண்டாகு பணிவிடை கணக்கு உண்டாதல் திருவுள்ளம் அறியாதோ?" என்பது அருணகிரிநாதர் திருப்புகழ்.
கடமையைச் செய்யாதவன் உரிமைக்குப் பாத்திரம் ஆக முடியாது. முப்பது நாட்கள் பணி செய்தால்தான், முப்பதாவது நாள் பணிசெய்தமைக்கு உரிய ஊதியம் கிடைக்கும். முதலிலேயே ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு கடமையைச் செய்கின்றேன் என்று சொன்னால், அது நடக்குமா? நடக்காது, நடக்காது. முப்பது நாட்களும் பணியே செய்யவில்லை என்றால், பணியில் நிலைத்து இருக்கவும் முடியாது.
திருஞானசம்பந்தர் இறைவன் தமது தொழிலைச் செம்மையாகச் செய்வதாகச் சொல்கின்றார். இறைவன் தொழில் என்ன? அருள் வழங்கும் தொழில் ஆகும். செய்தொழில் பேணுபவர்க்குச் செல்வமாக இறைவன் இருக்கின்றான் என்கின்றார். இறைவன், தனது கடமையைச் செவ்வனே செய்பவனைத் தேடி வந்து தோழமை கொள்வான். துணை நிற்பான். இறைவன் செல்வனாக வீற்றிருப்பான்; இன்பம் தருவான். யாருக்கு? பூவும் நீரும் இட்டவர்க்கு மட்டுமா? இல்லை, செய்தொழில் பேணியோர்க்கும் என்கின்றார் திருஞானசம்பந்தர்.
"பைம்மா நாகம் பன்மலர் கொன்றை
பன்றிவெண் கொம்பு ஒன்று பூண்டு,
செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லிச்
செய்தொழில் பேணியோர் செல்வர்,
அம்மான் நோக்கிய அந்தளிர் மேனி
அரிவை ஒர் பாகம் அமர்ந்த
பெம்மான் நல்கிய தொல்புக ழாளர்
பேணுபெருந்துறை யாரே".
இதன் பொருள் ---
திருப்பேணு பெருந்துறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவர், படம் பொருந்திய பெரிய நாகம், பல மலர்களோடு இணைந்த கொன்றை மலர், வெண்மையான பன்றிக் கொம்பு ஆகியவற்றை அணிந்து செம்மாப்பு உடையவராய்ப் பலர் இல்லங்களுக்கும் சென்று "பிச்சைஇடுக"என்று கேட்டு, ஐயம் இட்ட கடமையைச் செய்தவர்களுக்குச் செல்வமாய் இருப்பவர்; அழகிய மான்விழி போன்ற விழிகளையும், தளிர் போன்ற மேனியையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட தலைவர்; நிலைத்த பழமையான புகழை உடையவர்.
உடம்பு எடுத்து வந்த பிறவியின் பயனாக, செய்ய வேண்டிய தொழில்களைத் தவறாது செய்யும் அடியார்களுக்கு, ஒர் செல்வம் போன்றவர் பேணுபெருந்துறையார். கடமை தவறாதவர்க்குச் செல்வத்துள் செல்வமாய் இருக்கின்றார் என்பதை, "தொழில் பேணியோர்க்குச் செல்வர்" என்னும் சொற்றொடர் குறிக்கும். செய்ய வேண்டிய தொழிலைப் பேணிச் செய்தல் வேண்டும். பேணுதல் என்னும் சொல்லுக்கு, மதித்தல், விரும்புதல், பாதுகாத்தல், வழிபடுதல், பொருட்படுத்துதல் என்று பொருள்கள் உண்டு.
திருஞானசம்பந்தர் காட்டும் நெறியே செம்மைநெறி. அதுவே உண்மையான புதிய நெறியும் கூட,கடமையைச் செய்! கடமையைக் கடவுள் வழிபாடு எனச் செய்தல் வேண்டும். செய்யும் பணி எதையும் ஒன்றிய உணர்வுடன் செய்ய வேண்டும். ஏனோதானோ என்று செய்வது கூடாது.
"திருக்கரக் கோயிலான் தன் கடன் அடியேனையும் தாங்குதல், என கடன் பணி செய்து கிடப்பதே" என்று அப்பர் பெருமான் காட்டிய நெறியே உண்மைச் சைவநெறி. வாழ்வியல் நெறி.இதுவே திருமுறை காட்டும் செந்நெறி.
"தவம் செய்வார் தம்கருமம் செய்வார், மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு"
என்றார் திருவள்ளுவ நாயனார்.
தமது கடமையைச் செவ்வனே செய்வரே தவத்தைச் செய்பவர் ஆவார். அவ்வாறு அல்லாதவர் பேராசையுள் விழுந்து தவம் அல்லாத, அவச் செயல்களைச் செய்பவர் ஆவார்.
திருமுருகாற்றுப்படையில், "தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகன்" என்று முருகப் பெருமானுடைய ஒரு முகத்தைப் பற்றிக் கூறுகிறார் நக்கீரதேவ நாயனார். குற்றம் இல்லாத கொள்கையை உடைய தங்கள் தொழிலை முடிப்பவரது மனத்தை ஏற்று அங்கே தோன்றுகின்ற ஒளிவீசும் நிறத்தை உடைய முகம் என்று கூறுகிறார்.
உலகத்தில் வாழ்கின்ற காலத்தில் பொன் பொருள் என்று நிலையாதவற்றில் ஆசை வைத்து உழல்பவர்கள் தமது கடமையைச் செய்ய மாட்டார்கள். அதனால் வரும் துன்பத்தைத் தீர்க்க எண்ணி சாத்திரம் சோதிடம் என்று அலைந்து கொண்டு இருப்பார்கள் என்கிறது "நாலடியார்" என்னும் நூல். நிலையாதவற்றை உணர்ந்து கொண்டால், நிலையான ஒன்றின் மீது விருப்பம் வரும். அது தவ உணர்ச்சி ஆகும். அதனைத் தமது கடமையாகச் செய்வார்கள்.
நிலையாமை நோய்மூப்புச் சாக்காடு என்று எண்ணித்
தலையாயார் தம் கருமம் செய்வார் --- தொலைவு இல்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவை பிதற்றும்
பித்தரின் பேதையார் இல். --- நாலடியார்.
இதன் பதவுரை ---
நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி - நிலையாமை இயல்பும் பல பிணிகளும் மூப்புத் தன்மையும் இறப்புத் துன்பமும் இவ்வுடம்புக்கு உள்ளன என்று நினைத்து, தலையாயார் - சிறந்த அறிவு உள்ளவர்கள், தம் கருமம் செய்வார் - தமது கடமையாகிய தவமுயற்சியைச் செய்வார்கள், தொலைவு இல்லா சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவை பிதற்றும் பித்தரின் - கற்று முடிதல் இல்லாத இலக்கண நூலும் கோள் நூலும் என்று இவை போல்வன கூவிக்கொண்டிருக்கும் பித்தரை விட, பேதையார் இல் - அறிவிலாதவர் பிறர் இல்லை.
கோள் நூல் என்பது சோதிடத்தை. இலக்கண நூல் என்பது சாத்திரங்களை. இலக்கணம் முதலிய கருவி நூல்களையே என்றும் கற்றுக் கொண்டிராமல், நிலையாமை முதலியன உணர்ந்து உடனே தவஞ்செய்ய வேண்டும். கடமையைச் செய்யாமல், சாத்திரங்களையும், சோதிட நூல்களையும் அலசிக் கொண்டு இருத்தல் பயன் தராது.
நல்வினை செய்யாமல் தீவினை செய்வார் கடையானவர். மறுபிறவியின் நற்பயன் கருதி நல்வினை செய்வார் இடையானவர். பிறவியையே அஞ்சிப் பயன் கருதாது, தம் கடமை என்று கடைப்பிடித்துத் தவம் செய்வார் தலையானவர்.
No comments:
Post a Comment