நம்முடனேயே ஐந்து பகைவர்

 


நம்முடனேயே ஐந்து பகைவர்

-----

 

     உலகத்தில் சொத்துப் படைத்தவர்கள் எல்லாம் நிலமும், பொன்னும், வீடும் படைத்திருக்கிறார்கள். சிலருக்கு நிலம், பொன் இல்லாவிட்டாலும் வீடு இருக்கிறது. பலருக்கு வீடு இல்லை என்ற நிலை உள்ளது. ஆனால் நம் எல்லோருக்கும் வீடு என்று ஒன்று இருக்கின்றது. உயிர்கள் தங்கி வாழ்கின்ற அந்த வீட்டிற்கு உடம்பு என்று பெயர். தேகமாகிய வீட்டில் இருக்கின்ற உயிரைத் 'தேகிஎன்பார்கள். தேகமாகிய வீட்டுக்கு முகவரி உண்டுபெயர் உண்டு. முகவரி உள்ள அந்த வீட்டில் உயிர் குடியிருக்கிறது. மனிதன் என்று உயிர் உள்ளவனைத்தான் சொல்கிறோம். முதலியார்,செட்டியார் என்றெல்லாம் முகவரி போட்டுச் சொல்வது உயிருக்கு அடையாளம் அல்லஅது வாழும் உடம்பை அடையாளம் காண்பதற்காகத்தான். உயிரோடு வாழ்கிற உடம்புக்குத்தான் அத்தகைய முகவரி இட்டுச் சொல்கிறோம். உடம்பில் வாழ்கிற உயிர் புறப்பட்டுப் போய் விட்டால் அந்த உடம்புக்கு முகவரி இல்லை. எல்லா உடம்புக்கும் அப்பொழுது ஒரே பெயர்தான் அமைகிறது. மக்கள் வசிக்காத இடிந்த வீடுகளை முகவரி இல்லாமல் 'குட்டிச்சுவர் என்று அழைப்பதைப் போலஉடம்பாகிய வீட்டிலிருந்து உயிர் போய்விட்டால்பேர் இல்லை. அதைப் "பிணம்" என்று அழைக்கிறோம்.

 

 "ஊர் எல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

 பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச்

 சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

 நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே"

 

என்கிறார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூலர்.

 

     உடம்பாகிய இந்த வீட்டில் உயிர் குடியிருக்கிறது. இந்த வீடு உயிருக்குச்  சொந்தமானதும் அல்ல. இந்த உடம்பு உயிருக்குச் சொந்தம் என்றால்உயிர் நினைத்தபடி உடம்பு அமைய வேண்டும். நமக்குச் சொந்தமான வீட்டினை நாம் விரும்பினால் மேலும் விரிவு படுத்திக் கொள்ளலாம். மாறுதல்களைச் செய்து கொள்ளலாம். நமக்குப் பிள்ளைகள் அதிகமானாலும்மருமகப்பிள்ளைகள் வீட்டுக்கு வந்தாலும் மேலும் தேவையான அறைகளைத் தடுத்துக் கொள்ளலாம். வீட்டுக்குச் சொந்தக்காரர் தம் விருப்பப்படி அதில் பலவிதமான மாறுதல்களைச் செய்து கொள்ள முடியும். ஆனால் வீட்டில் வாடக்கைக்குக் குடியிருப்பவர் எந்த மாறுதலையும் செய்துகொள்ள முடியாது.

 

     உயிர் குடி இருப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த உடம்பில் வேண்டிய மாறுதல்களைச் செய்து கொள்ள முடியாது.  நமக்கு இரண்டு கைகள் போதவில்லை.  நான்கு கைகள் வேண்டும் என்று விரும்பினால் மற்றக் கைகளை ஒட்டிக் கொள்ள முடியாது. நடப்பதற்கு இரண்டு கால்கள் போதாது என்று மேலும் இரண்டு கால்களை ஒட்டி வைத்துக் கொள்ள முடியாது. ஆகையால் இந்த உடம்பு நமக்குச் சொந்தம் அல்ல. இதில் நாம் குடியிருக்கிறோம். வீட்டைப் படைத்தவன் எந்த எந்த மாதிரியாகப் படைத்தானோ அதில் சிறிதளவு கூட மாற்றம் செய்ய முடியாது. இப்படி இருந்தும் இந்த உடம்பு நமக்குச் சொந்தம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

 

     நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார் இதை மிக அழகாகப் பாடி உள்ளார்.

 

"உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி

உடம்பிடை நின்ற உயிரை அறியார்;

உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார்

மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே" 

 

இதன் பொருள் ---

 

     அதிசூக்கும சரீரம் முதலில் சூக்கும சரீரத்தைப் பற்றிப் பின்பு அவ்விரண்டும் கூடித் தூல சரீரத்தைப் பற்றுதலினால் உயிர் அம் மூன்று சரீரத்தோடும் பொருந்தித் தனது செயலைச் செய்துவரும் நிலையைப் பலர் அறியாது, `உடம்புதான் உயிர்என மயங்குகின்றனர். உடம்போடு உயிருக்குள்ள தொடர்புவினை காரணமாகச் சிறிது கால அளவினதே என அறியாதவர்கள்தூய திருமடங்களின் உள்ளே எவ்வாறோ புகுந்துவிட்ட  நாய் `இந்த இடம் நமக்கு நிலையானது அல்லஎன்பதை உணராமல்நிலைத்த ஒன்றுபோல நினைத்துஅங்கு அமைக்கப்பட்டுள்ள உணவைத் தனக்கே உரியனவாக எண்ணிக் களிப்பதுபோலக் களித்திருக்கின்றார்கள்.

 

     நமக்கு என்று ஒன்று இருந்தால்அதில் என்ன என்ன இருப்பவை என்ன என்று தெரிந்திருக்கவேண்டும்.  நாம் ஒரு பெட்டியை வாங்கிப் பல பொருள்களை வைத்துக் கொள்கிறோம். அந்தப் பெட்டி நம்முடையது. அதில் பல பொருள்களையும் வைத்தது நாம்தான்.  எப்போது கேட்டாலும் அந்தப் பெட்டியில் என்ன இருக்கின்றன என்று நம்மால் சொல்ல முடியும். இந்த உடம்பு நமக்குச் சொந்தம் என்றால் இதற்குள் என்ன இருக்கின்றன என்று சொல்ல நமக்குத் தெரிய வேண்டும்.  வயிற்று வலி வந்தால் அது எப்படி வந்தது என்று நமக்குத் தெரிவதில்லை. மருத்துவரிடம் போய்க் காட்டுகிறோம். அவருக்கும் தெரிவதில்லை. எக்ஸ்ரே எடுக்க வேண்டுமென்கிறார். எக்ஸ்ரேக்கும் தெரியாமல் எத்தனையோ நோய்கள் இருக்கின்றன. 

 

     நாம் பல ஆண்டுகள் ஒரு வீட்டில் மாதம் மாதம் வாடகை கொடுத்துக் கொண்டு வாழ்ந்தால் அந்த வீட்டை நம்முடையது என்று சொல்கிறோம்"என்னுடைய வீட்டுக்கு வாருங்கள்" என்று அழைக்கிறோம். அது வழக்கமாகப் போய்விட்டது. அதைப் போல இந்த உடம்பில் நாம் குடியிருப்பதனால் இதை நம்முடையது என்று சொல்லலாம். அந்த மட்டும் உண்மை. ஆனால் குடியிருக்கும் போதாவது அது நமக்கு முழுச் சொந்தமாக இருக்கிறதா? நம்முடைய விருப்பப்படி அதில் வாழமுடியுமா

 

     ஒருவர் இறக்கும்போது அவருக்கு ஒரு வீடுதான் சொந்தமாக இருந்தது. வீட்டில் ஒருவர் குடியிருந்தார். இறந்தவருக்கு ஐந்து பிள்ளைகள். அவர்களும் அந்த வீட்டிலேயே வசிக்க வந்துவிட்டார்கள். சின்னஞ்சிறு பிள்ளைகள்செல்லப் பிள்ளைகளாக வாழ்ந்தவர்கள். அவர்கள் செய்கின்ற குறும்பு சொல்லி முடியாது. அந்த வீட்டில் குடியிருந்தவர் திருவாசகம் பாடலாம் என்று உட்காருகிறார். அந்த சமயம் பார்த்து,வீட்டு உரிமையாளரின் பிள்ளைகளில் ஒருவன் ஒரு தகர டப்பாவை வைத்துக் கொண்டு மிருதங்கம் வாசிக்கிறான். அவனுக்கு மிருதங்கம் கிடைக்கவில்லை. ஆகவேதகர டப்பாவை வைத்துக் கொண்டு கர்ணகடோரமான ஒலியை எழுப்புகிறான். கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்று பேசுகிறான். நல்ல மணமுள்ள ஊதுவத்தியை அவர் வாங்கி வந்திருந்தார். இறைவன் படத்திற்கு முன்னாலே உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யும்போதுஅந்த மணமுள்ள வத்தியை ஏற்றி வைத்திருந்தார். அதே சமயத்தில் மற்றொரு பிள்ளை அவர் வீட்டு ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு சுருட்டு ஒன்றைப் புகைக்கிறான். இருக்கிற நாற்றம் போதாது என்று புகையிலைச் சுருட்டு நாற்றத்தை வேறு விடுகிறான். அது அவர் மூக்கில் ஏறித் தலைவலி எடுக்கிறது. கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப்படி சுருட்டுக் குடிக்க எனக்கு உரிமை உண்டு" என்று அவன் பேசுகிறான். அந்த வீட்டின் வாயிலிலே அழகழகான வண்ணக் கோலங்களைக் குடியிருக்கிறவர் போடுகிறார். அடுத்த கணம் மற்றொரு பிள்ளை வாளி நிறையத் தண்ணீரைக் கொண்டு வந்து அதில் கொட்டிக் கோலம் அழிந்து போகும்படி செய்கிறான். கேட்டால் "இது என் வீடு. என் விருப்பப்படி வீதியில் தண்ணிர் கொட்டுவேன். அதைக் கேட்க நீர் யார்?" என்று பேசுகிறான். நல்ல தென்றல் காற்று வருகிறதே என்று அவர் தம் வீட்டு ஜன்னலின் பக்கம் உட்கார்ந்து கொண்டு திருமுறையைக் கொஞ்சம் படிக்கலாம் என்று ஆரம்பிக்கிறார். மற்றொரு பிள்ளை வந்து ஜன்னலை அடைக்கச் சொல்லுகிறான். கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப்படி நடக்கத்தான் வேண்டும்" என்று பேசுகிறான்.

 

     இப்படி அந்த வீட்டின் சொந்தக்காரர்களாகிய ஐந்து பிள்ளைகளாலும்அந்த வீட்டில் குடியிருக்கின்ற ஒருவர் ஐந்து விதமான புலன்களினாலும் அனுபவிக்கின்ற அனுபவங்களுக்குத் தடை உண்டாகிறது. அவர்களுடைய வீட்டில் வசிக்கிற அவர் என்ன செய்வார் குடிக் கூலி கொடுத்துக் கொண்டுதான் அந்த வீட்டில் வசிக்கிறார். ஆனால் தம் விருப்பப்படி எதையும் அங்கே அனுபவிக்கச் சுதந்தரம் இல்லை.

 

     இதைப் போன்றதுதான் நம்முடைய வாழ்வும். நம்முடைய உடம்பாகிய வீட்டில் நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சி இது. 'அற்புதமாகத் திருமுறையைப் பாடுகிறார்களேஅதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கலாம்என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் அவனுடைய காதோ அதைக் கேட்கப் போகிறதில்லை. அந்த வீட்டுக்கு எதிரேயுள்ள கடையிலிருந்து வரும் திரைப் பாடலைக் கேட்கத் தாவுகிறது. இறைவன் நமக்கு உண்டாக்கிய கைகளால் நல்ல நல்ல பூக்களை எடுத்துஅலங்கரித்து அருச்சனை செய்யலாம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் இவனுடைய கைகள் அதைச் செய்யப் போவதில்லைசெய்யத்தகாத பல காரியங்களை எல்லாம் செய்ய மனம் திரும்புகிறது. இறைவனது திருவுருவத்திற்கு மலராலும்அணியாலும் அலங்காரம் செய்திருப்பதைக் கண் குளிரக் கண்டு கொஞ்சம் களிக்கலாம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால்அந்தக் கண்கள் அதைக் காணப்போவதில்லைபார்க்கத் தகாத பொருளை எல்லாம் காசு கொடுத்துப் பார்க்கப் போகின்றன. திருக்கோயிலைச் சுற்றி அழகான நந்தவனங்களை எல்லாம் வைத்து இருக்கிறார்கள். அங்கே போய்க் கொஞ்சம் நல்ல காற்றை அனுபவித்துவிட்டு வரலாம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் இவன் கால்கள் அங்கே போவதில்லை. இறைவனுக்கு நிவேதனம் செய்து கோயிலிலே நல்ல பிரசாதங்கள் கொடுக்கிறார்கள்அவற்றை வாங்கிச் சாப்பிடுவோம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால்இவன் நாக்கு அதைச் சுவைப்பதில்லை. சுவை உணர்வைத் தூண்டி உணவு விடுதிக்கு இழுத்துப் போய்க் காசு கொடுத்துவாங்கித் தின்னச் சொல்லி விட்டுவீட்டுக்கு வந்து வாந்தி எடுக்கச் செய்கிறது.

 

     இப்படியாகஇந்த உடம்பாகிய வீட்டில் இருக்கிற நாம்நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென்று விரும்பினாலும் கூடஇந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் என்று சொல்லிக் கொள்ளுகிற உயிரோடு கூடவே வாழுகின்ற ஐந்து இந்திரியங்களும் நம்மை அந்த அந்தக் காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுக்கின்றன. உண்மையில் இந்திரியங்கள் நமக்குத் துணை புரியவேண்டும். கோயிலுக்குப் போகலாம்இறைவன் திருவுருவத்தைத் தரிசிக்கலாம்அதனை மனத்திலே தாங்கிச் சிறிது நேரம் தியானம் செய்யலாம் என்பன போன்ற நினைப்புக்கள் நமக்கு வந்தாலும்,அந்த நினைப்பின்படி நடக்கவொட்டாமல்ஐந்து இந்திரியங்களும் நம்மை வேறு வழிக்கு இழுத்துச் சென்று துன்பப்படுத்துகின்றன.

 

     மெய்வாய்கண்மூக்குசெவி ஆகிய ஐந்து கருவிகளையும் பொறிகள் என்று சொல்வார்கள். இந்திரியம் என்பது வடமொழி. உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் அனுபவிப்பதற்கு இந்த ஐந்து பொறிகளும் உதவுகின்றன. காதாகிய பொறியினால் அனுபவிப்பது ஓசை. கண்ணாகிய பொறியினால் அனுபவிப்பது காட்சிப் பொருள். மூக்காகிய பொறியினால் அனுபவிக்கக் கூடியது மணம். உடம்பாகிய பொறியினால் அனுபவிக்கக் கூடியது பரிசம். நாக்காகிய பொறியினால் அனுபவிக்கக் கூடியது சுவை.

 

     பல சமயங்களில் மனம் நினைப்பதை இந்திரியங்கள் செய்வதில்லை. நல்ல உணவைத்தான் சாப்பிட வேண்டுமென்று நினைக்கிறோம். சாப்பிடுகின்ற பொறி அதனைக் கேட்பதில்லை. நல்ல பொருள்களையே காண வேண்டுமென்று நினைக்கிறோம். ஆனால் காணுகின்ற பொறி காணத் தகாத பொருளைத்தான் காண்கின்றது. இவ்வாறு இந்த உடம்பாகிய வீட்டில் இருக்கின்ற ஐந்து பொறிகளும்நாம் ஏதேனும்ஒன்றை நினைத்தால் அதற்கு ஏற்ப நடப்பதில்லை. நமக்கு அவை பகைவர்களாகவே இருக்கின்றன. 

 

     இந்த ஐந்து பொறிகளும் மதம் பிடித்த யானைக்குச் சமானம் என்று திருவள்ளுவ நாயனார் சொல்லுகிறார். "உரன் என்னும் தோட்டியான் ஒர் ஐந்தும் காப்பான்,வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து" என்பது திருக்குறள். இந்த்த் திருக்குறளில் யானையைப் பற்றிச் சொல்லவில்லையே என்று தோன்றலாம். அங்குசத்தைப் பற்றிச் சொன்னதால், யானை என்பதை வருவித்துக் கொள்ளவேண்டும். 'மனத் திண்மை என்னும் அங்குசத்தால் பொறிகள் ஐந்தாகிய மதயானைகளை அடக்கிக் காப்பவன்எல்லாவற்றையும் விட மேலானது என்று சொல்லப் பெறும் முத்தி நிலத்தில் சென்று முளைக்கும் வித்துப் போன்றவன்என்பது இதற்குப் பொருள்.

 

     இந்த உலகத்தில் சாவியாய்ப் போகும் நெல் உண்டு. பயனுள்ள நெல்லும் உண்டு. அறுவடை செய்த எல்லா நெல்லும் நல்ல நெல்லாக இருப்பதில்லை. அறுவடை செய்த நெல்லைத் தூற்றினால் பதர் தனியாகப் பறந்து போய் விழுவது தெரியும். நெல்லாக இருக்கிறவற்றிலும் எல்லா நெல்லும் விதை நெல்லாக இருப்பதில்லை. பெரும்பாலானவை உணவுக்குப் பயன்படும் நெல்லாகத்தான் இருக்கும். விதை நெல் சற்றுக் கனமாக இருக்கும். நன்றாக விளைந்து முற்றிய நெல்லையே விதையாகத் தேர்ந்தெடுப்பார்கள்.விளைகின்ற நெல்லிலே சாவியாய்ப் போன நெல் இருப்பது போமனித இனத்திலும் சாவியாய்ப் போன மனிதர்கள் இருக்கிறார்கள். தம்முடைய அருமையான வாழ்நாளை வீணாக அடிக்கிற மனிதர்கள் அவர்கள். இவர்களை மக்கள் என்று சொல்லக்கூடாது. "மக்கட் பதடி எனல்" என்று சொல்கிறார் திருவள்ளுவ நாயனார். தான் பேசுகின்ற பேச்சினாலே தனக்கும் பயன் இல்லாமல்கேட்பவர்களுக்கும் பயன் இல்லாமல் வழவழவென்று பயனில்லாத சொற்களையே பேசுகின்றானே அவனை மனிதன் என்று சொல்லக்கூடாதாம்பதடி என்று சொல்ல வேண்டுமாம்.

 

     இனிமேல் இந்த உலகத்தில் பிறவாமல் முத்தி இன்பத்தை அடைய இப்பொழுதே கடைக்கால் போடுபவர்கள் விதை நெல்லுக்கு ஒப்பானவர்கள். நன்றாக முற்றி விளைந்த நெல்தான் விளையும்.முற்றின இந்த நெல் முத்தி என்னும் உலகத்தில் விளைவதாகும். 'வரன்’ என்னும் வைப்பாவது முத்தியுலகம். 

 

     மாயாகாரியமாகிய இந்தப் பூவுலகத்திலே வந்து பிறந்த ஆன்மாஇன்பதுன்பங்களை அனுபவித்துபத்திநெறியிலே நின்று தவம் பண்ணிஇறைவன் திருவருளைப் பெற்றுச் சிறந்து நின்றால்அது திரும்பவும் இந்த உலகத்திலே வந்து பிறவாமல்முத்தி உலகத்திலே போய் விளைகின்றது. இந்த ஆன்மாவானது. இந்தப் பூவுலகத்தில் வளர்ந்து விளைந்து கடைசியில் விதை நெல்லாக முற்றிமுத்தியுலகத்தில் போய் விளைகின்றது. இன்பதுன்பத்திற்கு அப்பாற்பட்ட ஆனந்தத்தை அங்கே அடைகின்றது. இங்கே விளைந்த வித்து அங்கே போய் முளைக்கிறது. தேவர்கள் நம்மைக் காட்டிலும் சிறந்த இன்ப வாழ்வை அனுபவிக்கிறார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் அவர்கள்அடைவது இன்ப வாழ்வு அல்லசுக வாழ்வு. முத்தி உலகத்தில் பெறப்படும் ஆனந்தம் என்பது,சுகத்திற்கும் துக்கத்திற்கும் அப்பாற்பட்டது.

 

     "விளக்கினை ஏற்றி வெளியினை அறிமின்" என்றார் திருமூலர். வெளி என்பது வெளிச்சத்தைக் குறிக்கும். விளக்கிலிருந்து வெளிச்சம் வருகிறது. ஆனால் அந்த விளக்குக்கு அடியில் அந்த விளக்கின் நிழல் படிந்திருக்கும். தேவர்கள் விளக்கு ஒளியைப் போன்றவர்கள். இன்பமாகிய ஒளியும் துன்பமாகிய நிழலும் உடையவர்கள். ஆனந்தம் என்பது சுகமும் அல்லாமல்துக்கமும் அல்லாமல் எல்லாவற்றையும் கடந்துநிழலே விழாத சூரியனின் ஒளியைப் போன்றது. துன்பத்தின் சுவடே இல்லாத ஆனந்தத்தை அடைய வேண்டும் என்றால் முத்தியை அடைய வேண்டும். அதனைப் பெறுவதற்குஅந்த முத்தியை விளைவிக்கக் கூடிய இந்தப் பூலோகத்தில் வந்து பிறந்துநற்பணிகளை எல்லாம் செய்துபொறிகளை அடக்கித் தவம் பண்ண வேண்டும் ஈரம் காய்ந்து முற்றிய வித்தைப் போல ஆக வேண்டும். ஐம்பொறிகளை அடக்கிஈரமின்றி முற்றினால்முத்தி நிலத்தில் முளைத்துப் போகம் பெறலாம்.

 

     திருவள்ளுவர் ஐந்து களிறுகளை அடக்க வேண்டுமென்று சொல்கிறார். இந்த ஐந்து யானைகளும் மதம் பிடித்த யானைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் இழுத்துக் கொண்டு போகின்றது. அவற்றை அடக்க வேண்டும். களிற்றை அடக்குவதற்கு யானைப் பாகன் தன் கையில் அங்குசத்தை வைத்திருக்கிறான். பொறிகளை அடக்கும் அங்குசம்தான் ஞானம். யார் ஞானம் என்ற அங்குசத்தைப் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் ஐந்து பொறிகளாகிய யானைகளை அடக்கி விடுவார்கள். அந்த ஞானத்திற்குத்தான் 'உரன்’  என்று பெயர். உரன் பெற்றவர்கள்ஞானம் பெற்றவர்கள்ஆன்மாவுக்குத் துன்பத்தைத் தருவதற்குக் காரணமான ஐந்து இந்திரியங்கள் என்ற மதம் பிடித்த யானைகளை அடக்குகிறார்கள். அவ்வாறு பொறிகளை அடக்கி வென்றவர்கள் முத்தி நிலத்தில் விளைகின்ற வித்துப் போன்றவர்கள்.

 

     முத்தி அடைவதற்கு எளிய வழி ஒன்றுஇருக்கிறது. "உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் ஐந்துபொறிகளின் மூலம் அனுபவிக்க விரும்பினால்அப்படியே அனுபவி. ஆனால் அதில் ஒரே ஒரு சின்ன மாறுதல் செய்ய வேண்டும். ஐந்து புலன்களை அவ்வவ் வழியே போகவிடு. அவ்வாறு போக விடுவதில் ஒரு ஒழுங்கு இருக்கட்டும்" என்று நம் பெரியோர்கள் நமக்குச் சொன்னார்கள்.

 

     அடங்காத கொண்டி மாடு இருக்கிறது. அதை அவிழ்த்து விட்டால் வயல்களில் போய் மேய்ந்து பயிர்களை அழித்துவிடும் அதனைக் கட்டிப் போட்டே வைத்தாலும் பயனில்லை. அதை மேயவும் விட வேண்டும். பயிர் பச்சைகளை அழித்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கா பழைய காலத்தில் பசுக்கள் மேய்வதற்காக என்று ஒவ்வோர் ஊரிலும் மேய்ச்சல் நிலத்தை ஒதுக்கியிருப்பார்கள்.  மாடு புல்தரையில் மேயவும் அதே சமயத்தில் அப்பால் இருக்கிற வயலில் இறங்கிப் பயிரை அழிக்காமல் இருக்கவும் மாட்டுக்காரன் அந்த மைதானத்தின் நடுவே ஒரு முளையை அடித்துநீளமான கயிற்றினால் மாட்டைக் கட்டிஅந்தக் கயிற்றின் மறுமுனையை இந்த முளையில் கட்டி விடுகிறான்.  மாடு எத்தனை ஓடினாலும்முளையைச் சுற்றி சுற்றித்தான் ஓட முடியும். அது ஓட ஓடக் கயிறு முளையில் சுற்றிக் கொண்டே வருகிறது. கயிறு சுற்றச் சுற்ற மாட்டுக்கும் முளைக்கும் உள்ள தூரம் குறைந்து கொண்டே வரும். மாடு முளையை நெருங்கி வந்து விடும். பின்னும் சுற்றும்போதுகயிறு குறுகிவிடுகிறது. அப்போது வேறு வழியில்லாமல்மாடு அப்படியே முளையின் அடியில் படுத்துக் கொண்டுவிடுகிறது.

 

     அதுபோலஇறைவன் என்ற முளையை அடித்துஐந்து பொறிகளான மாட்டை அந்த முளையோடு நீண்ட கயிற்றினால் கட்டி மேய விடவேண்டும். நன்றாகச் சாப்பிட வேண்டுமென்று நாக்கு விரும்புகிறது. "சாப்பாடா வேண்டும்வா கோயிலுக்கு. அங்கே நல்ல சர்க்கரைப் பொங்கல் கொடுக்கிறார்கள். புளியோதரை கொடுக்கிறார்கள். அவற்றை வாங்கி நன்றாகச் சாப்பிடு" என்று சொல்ல வேண்டும். சர்க்கரைப் பொங்கல் வேண்டுமென்ற நாவின் ஆசையை இங்கே நாம் அடக்கவில்லை. ஆனால் இறைவன் பிரசாதத்தைச் சாப்பிட வேண்டுமென்ற நாட்டத்தை எழுப்புகிறோம். இறைவன் என்ற முளையை அடித்துவிட்டதால்ஆண்டவனுடைய பிரசாதத்தைச் சாப்பிட வேண்டுமென்ற ஆசை எழுகிறது. இதனால் இறைவனுடன் தொடர்பு உண்டாகிறது. சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வேண்டுமென்ற ஆசை அப்படியே இராது. வர வரக் குறைந்து கொண்டே வரும். இறைவனுடைய சம்பந்தமுள்ள பொருள்களையே நாடும்படியாக முளையடித்து விட்டால் ஒழுங்கற்ற பொறிகளிடம் ஒர் ஒழுங்கு உண்டாகும். அவை யாவும் கடைசியில் வேறு ஒன்றையும் நாடாமல் செயலற்று நிற்கும் நிலைமை வந்து விடும்.

 

     அழகான பொருள்களைப் பார்க்க விரும்பும் கண்களுக்குஅழகாக அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள இறைவன் திருவுருவத்தைப் பார்க்கப் பழக்கவேண்டும். காது இனிமையான இனிமையான இசையைக் கேட்க வேண்டுமென்று விரும்புகிறது. இனிமையான இறைவன் திருப்புகழைக் கேட்கச் செய்யவேண்டும். கேட்கக் கேட்க இறைவனுடைய தொடர்பு அதற்கு ஏற்படுகிறது. இப்படியே ஒவ்வொரு புலனையும் ஆண்டவன் என்ற முளையை அடித்துத் தொடர்பு படுத்திவிட்டு அதனதன் இச்சைப்படி போக விட வேண்டும்.

 

     இது ஒன்றும் செயற்கு அரிய செயல் அல்ல. ஒரு குழந்தை எல்லாப் புத்தகத்தையும் கிழிக்கிறது. நாம் ஏதாவது ஒரு முக்கியமான புத்தகத்தை வைத்துவிட்டுப் போனால் அதனைக் கிழித்து விடுகிறது. "அதைக் கிழிக்காதேஅடிப்பேன்" என்று கோபித்துக் கொண்டால்,நம்மிடம் இருக்கும் பயத்தில் அப்போதைக்கு அது அதனைக் கிழிக்காமல் இருக்கும். நாம் கொஞ்சம் அப்புறம் போனால் அதைக் கிழித்துவிடும்."இங்கே நார் இருக்கிறது. இதைக் கிழித்து வை" என்று பழக்க வேண்டும். குழந்தையின் கிழிக்கிற கைஅந்த நாரைக் கிழிக்கிறது. கிழிய வேண்டியது கிழிகிறது. அதுபோநமது பொறிகளைப் பழக்கவேண்டும்.

 

     புலன்களாகிய யானைகளை இந்த முறையில் நம்முடைய அறிவினாலே ஒழுங்குபடுத்த வேண்டும். அந்த யானைகளை நம் விருப்பப்படி நடக்க வைக்கஅறிவாகிய அங்குசம் நம்மிடம் இருக்கிறது. அந்த அங்குசத்தினால் அவற்றை அடக்கிஇறைவன் என்ற முளையை (தறியை) அடித்துஅதைச் சுற்றிச் சுற்றி எல்லா விதமான இன்ப அனுபவங்களையும் அடையச் செய்தால்அவைதம் விருப்பப்படியே ஒடியாடி,கடைசியில் இறைவனுடைய தொடர்பினால் மனத்தோடு ஒன்றி இறைவன் திருவடியிலேயே படுத்துவிடும். "கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே" என்றார் அப்பர் பெருமான்.

 

     "எண்ணிய எண்ணியாங்கு எய்துஎண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின்" என்றார் திருவள்ளுவ நாயனார். நினைத்தவை அனைத்தையும் செயலாக மாற்றுபவர்கள் மனத்திண்மை உடையவர்கள். நினைத்ததில் சிலவற்றைச் செயலாக மாற்றுபவர்கள் முயற்சி உடையவர்கள். நினைத்தவற்றில் பலவற்றைச் செயலாக மாற்ற இயலாதவர்கள் மனத்திண்மை அடியோடு அற்றவர்கள்.

 

     எண்ணியதை எண்ணியபடி செயலிலே செய்வதற்கு மனத்திலே திண்மை வேண்டும்அவர்கள் தங்களால் செய்யக்கூடிய செயல்களையே எண்ணுவார்கள். அவற்றைச் செயலிலே காட்ட முயற்சி செய்வார்கள். அந்த முயற்சிக்கு எவ்வளவு இடையூறு வந்தாலும் அஞ்ச மாட்டார்கள். தங்கள் முயற்சியிலே கொஞ்சமேனும் தளரமாட்டார்கள். நான் எல்லாவற்றையும் செய்து விடுகிறேன் என்று அளக்க மாட்டார்கள். இவர்களைக் "கருமமே கண்ணாயினார்" என்பார் குமரகுருபர அடிகளார்.

 

     முதலில்செய்யக் கூடியவற்றையே நினைக்கும் பக்குவம் வந்துவிட்டால்பிறகு நினைத்த எல்லாவற்றையும் செய்யும் பக்குவம் வரும். அந்தப் பக்குவம் வருவதற்கு மனத்திண்மை வேண்டும். இந்த மனத்திண்மை ஒரு நாளில் வராது. பொறிகளை வசப்படுத்திநினைப்பையும் சொல்லையும் செயலையும் ஒரு நெறியிலே செலுத்த அந்தத் திண்மையே வேண்டும்.

 

     ஐந்து பொறிகளும் சேர்ந்து ஒன்றுபட்டு இறைவனுக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்ற நினைப்பு வருகிறது. ஆனால் ஐந்து பொறிகளும் அதற்கு விரோதமாக இருக்கின்றன. அவற்றை அடக்கும் திண்மை நம்மிடம் இருப்பதில்லை. நாம் தினமும் வழிபாடு செய்கிறோம். ஏதாவது கூச்சல் கேட்டால் அது என்ன சத்தம் என்று கேட்கக் காது போய்விடுகிறது. இறைவனுக்கு அழகாக அலங்காரம் பண்ணியிருக்கிறார்கள்  ஆனால் கோயிலுக்குள் போனால் இறைவனைக் கண் பார்ப்பதில்லை. அங்கே உள்ள வேறு காட்சிகளைப் பார்க்க ஓடி விடுகிறது. பட்டினத்து அடிகள்,

 

"கைஒன்று செய்ய,விழிஒன்று நாட,கருத்து ஒன்று எண்ண,

பொய்ஒன்று வஞ்சக நா ஒன்று பேச,புலால் கமழும்

மெய்ஒன்று சார,செவிஒன்று கேட்கவிரும்பும் யான்

செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினைதீர்த்தவனே."

 

என்று பாடுகிறார்.

 

     ஐந்து இந்திரியங்களும் வெவ்வேறாகக் சிதறுண்டு இருந்தாலும் அவற்றை நெறிப்படுத்தி இறைவன்பால் ஒருமுகமாகச் செலுத்துவது வழிபாடு. வழிபாடு செய்ய உட்கார்ந்தும் இந்த ஐந்து இந்திரியங்களை வெவ்வேறு வழியில் செல்ல விட்டுமனம் எதையோ நினைத்துக் கொண்டிருந்தால் அது வழிபாடு ஆகாது. வாய்ப் பாட்டுக்காரர் ஒரு பாட்டுப் பாடகுழல் ஊதுகிறவர் வேறொரு பாட்டை வாசிக்கமிருதங்கக்காரன் ஏதோ ஒரு தாளத்துக்கு வாசித்தால் அது கச்சேரி ஆகாது. ஒரே கூச்சலாக இருக்கும். அது போலத்தான் ஐந்து இந்திரியங்களும் வெவ்வேறு காரியங்களைச் செய்ய நாம் வழிபாடு செய்தால் அது வழிபாடாக இராது. "முருகா! நான் உன்னை வழிபடவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால்,இந்த உடம்பாகிய வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிற பொறிகளாகிய ஐந்து பேர்களும் நான் ஆசைப்படுவது போல வழிபாடு செய்யவிடவில்லையே" என்று அருணகிரிநாதர் முறையிடுகிறார்.

 

     இருள் என்பது மாயைஅஞ்ஞானம். நாம் இன்றைக்குச் செய்கிற செயல்கள் எல்லாம் அஞ்ஞானத்தின் விளைவு. இந்தக் செயல்களுக்குப் பொறிகளாகிய ஐந்து பேர்கள் துணையாக இருக்கிறார்கள். இன்பத்தை அடைவதற்கு உரிய செயல்கள் என்ன என்னவோ அவற்றை நாம் செய்யலாம் என்று நினைத்தால் இந்த ஐந்து பேர்களும் அதற்குச் சத்துருக்களாக இருக்கிறார்கள்நாம் சில நல்ல செயல்களைச் செய்ய வேண்டுமென்ற சங்கற்பம் செய்து கொள்ளுகிறோம். ஆனால் அவற்றைச் செய்யவொட்டாமல் இவர்கள் தடுக்கிறார்கள்.

 

     குறிப்பிட்ட ஒரு பொருளை மாத்திரம் நினைந்து சுழலுவது  இருக்கிறதே அதற்கு 'உன்னுதல்என்று பெயர். முதலிலே பவலவற்றை நினைக்கிறோம். இறைவன் திருக்கோயில் போக வேண்டும்அங்கே பாடுகிற அருட்பாடல்களைக் கேட்க வேண்டும்அங்கே அலங்காரம் செய்து வைத்திருக்கிற மூர்த்தியைக் காண வேண்டும்அங்கே இறைவனுக்கு நிவேதனம் செய்த பிரசாதத்தை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறோம். இவை எல்லாம் பல செயல்களாக இருந்தாலும் அவ்வளவும் ஆண்டவன் என்ற ஒரு பொருளோடு சம்பந்தம் உடையன. அவற்றை எல்லாம் நினைத்தல் "ஒர்தல்" எனப்படும். வெளியில் வரையறையின்றிச் சுற்றித் திரிந்த மனம் இப்போது ஆண்டவன் என்ற பொருளைச் சுற்றியுள்ள வட்டத்திற்குள் சுழலுகிறது.

 

     ஆனால் அது மாத்திரம் போதாது. அதுவே முடிவும் அல்ல. அதற்குப் பின் இறைவன் திருவடியில் மனம் நின்று சுழல வேண்டும். இறைவன் திருவடியில் தூங்க வேண்டும். மனம் வேறு ஒன்றையும் நினைக்காமல் இறைவனையே நினைந்து,அங்கே சுழல வேண்டும். இந்தத் தூக்கத்தைத்தான் தியானம் என்று சொல்வார்கள்.

 

     "மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்நிலமிசை நீடு வாழ்வார்" என்றும், "தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்மனக்கவலை மாற்றல் அரிது" என்றும் திருக்குறள் கூறுகிறது. திருக்குறளின் உரையில் "சேர்தல்" என்பதற்கு "இடைவிடாது நினைத்தல்" என்று பரிமேலழகர் பொருள் எழுதியிருக்கிறார்.

 

     இறைவனுடைய தாள்கள் இரண்டு. 'உன தாள்என்பதற்கு 'உன்னுடைய தாள்கள்என்று பொருள். உன என்பதில் உள்ள அகரம்பின்வருவது பன்மைச் சொல் என்பதைக் குறிக்கும். உனது தலை என்று சொல்லலாம். அது ஒருமை. உனதாள் என்பதில் உள்ள தாள்,பாதங்கள் என்ற பொருளில் வந்த பன்மை. 

 

     "என் உடம்பாகிய வீட்டில் மெய்வாய்விழிமூக்குசெவி என்னும் பொறிகளாகிய ஐந்து பாதகர்கள் இருக்கிறார்கள்அவர்கள் உன்னைப் பற்றியவற்றை எண்ணலாம் என்றால் விடமாட்டேன் என்கிறார்கள். உன்னை உன்ன வேண்டுமென்றால்,உன்ன விடமாட்டேன் என்கிறார்கள். (உன்னுதல் - நினைத்தல்) மலரிட்டு உன் தாளைத் தியானம் பண்ணலாம் என்றால் அதற்கும் விடமாட்டேன் என்கிறார்கள். நான் என்ன செய்வேன்எனக்கு ஒன்றும் தெரியவில்லையே!" என்று முறையிடுகிறார் அருணகிரிநாதர்.

 

"ஓர ஒட்டார்ஒன்றை உன்ன ஒட்டார்மலர்இட்டு உனதாள்

சேர ஒட்டார் ஐவர்செய்வது என் யான்சென்று தேவர் உய்யச்

சோர நிட்டூரனை சூரனை கார் உடல் சோரி கக்கக்

 கூர கட்டாரி இட்டு ஓர் இமைப் போதினில் கொன்றவனே!"

 

என்பது அவர் முறையிட்டுப் பாடிய பாடல்.

 

     தேவர்கள் உய்ய வேண்டும் என்பதற்காகவே சென்று சூரபதுமனை வதைத்தான் முருகன். மற்ற மற்ற அசுரர்களை எல்லாம் கொல்ல முருகன் போகவில்லை. வீரபாகு முதலிய வீரர்கள் பார்த்துக் கொண்டனர். ஆனால்சூரபதுமனைச் சம்மாரம் செய்ய முருகனே அவன் இருக்குமிடம் சென்றான். தேவர்கள் தங்கள் உரிமைகளை எல்லாம் பறிகொடுத்தார்கள்இன்பமயமாக இருந்த வாழ்க்கை துன்பமயம் ஆகிவிட்டது. அவர்களது வாழ்க்கையை மீண்டும் இன்பமயமாகக் செய்யஅவர்கள் உய்யும்படியாகச் செய்யமுருகன் சூரபதுமன் இருக்கும் இடத்துக்குச் சென்றான்.பகைவன் இருக்குமிடத்திற்கே சென்று முற்றுகை இட்டுஅவன் தோற்று ஒடும்படியாகச் செய்வது பெரிய வெற்றி. பகைவன் தன்னுடைய நாட்டுக்கு வந்து முற்றுகை போடும்போதுஅவனைத் தோல்வியுறச் செய்து ஒடச் செய்வது சாமானிய வெற்றி.

 

     முருகன் வெற்றிவேலைத் தனது திருக்கரத்திலே தாங்கியவன். அவனை வெல்வதற்குத் தன் கையில் உள்ள வேலை விட்டாலே போதும். ஆயினும்முருகன் தானே அவன் இருக்குமிடத்திற்கு நேரில் சென்றான். சூரனை முருகன் கொன்றது ஓர் இமைப் போதினில்தான் என்கிறார். முருகன் அவனோடு பலகாலம் தனது படைகளோடு போரிட்டான். இதற்குள் ஒரு விநாடியிலாவது அவனுக்கு ஞானம் பிறந்து, "இறைவா! என்னை மன்னித்துவிடு" என்று அவன் காலில் வந்து வீழ்ந்திருந்தாலும் முருகன் மன்னிக்கக் காத்துக் கொண்டுதான் இருந்தான்.

 

     "இராவணன் செய்த அபராதத்திற்காக அவன் மீது இராமனுக்கு சினம் இருந்தால்,  நிராயுதபாணியாக நின்ற இராவணனை இதுதான் சமயம் என்று ஒரே அம்பால் கொன்றிருக்கலாம். "இன்று போய் நாளை வா" என்றான். அந்தச் சமயத்தில் அவன் காட்டிய கருணை வீரக கருணை. 

 

"ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த

பூளை ஆயின கண்டனைஇன்று போய்போர்க்கு

நாளை வாஎன நல்கினன்நாகு இளங் கமுகின்

வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்".

 

என்பது கம்பராமாயணம்.

 

     இராவணனிடம் போர் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அவனுடைய துணைவர்கள் எல்லோரும்படைகள் எல்லாம்புயற்காற்றில் அடிபட்ட பூளைப் பூவைப் போலப் போய் விட்டன. அந்தச் சமயத்தில், "இன்று போய் நாளை வா" என்கிறான் கருணை வள்ளலாகிய இராமன். "இன்றைக்குப் போ. இரவில் நன்றாக எண்ணிப் பார். சீதையைத் திருப்பி அனுப்பிவிடுவோம் என்ற  எண்ணம் தோன்றலாம். அப்படித் தோன்றினால்நாளைக்கு நீ வரவேண்டியதில்லை. அப்படியின்றிப் போர் செய்யும் எண்ணம் இருந்தால் நாளைக்கு வா" என்கிறான்.

 

     அங்கே தன்னுடைய சிறந்த கருணை வீரத்தைக் காட்டினான் இராமன். இங்கே முருகன் நினைத்திருந்தால் சூரபதுமனை இருந்த இடத்தில் இருந்துகொண்டே வேலை விடுத்துகணப்பொழுதில் கொன்று இருக்கலாம். ஆனால்இவன் நல்லவனாக மாட்டானாதேவர்களுடைய அரசை அவர்களுக்கே திரும்பவும் கொடுத்துஅவர்களைச் சிறையிலிருந்து விடுவித்து விடமாட்டானா?” என்று பல காலம் போரை நீளச் செய்து காத்திருந்தான்தன் விசுவரூபத்தைக் கூட காட்டினான். சூரனுடைய ஆணவம் அடங்கவில்லை. இமைப் பொழுதில் சூரசம்மாரம் நிகழ்ந்தது.

 

     நம்மோடு உடன் இருக்கின்ற ஐந்து புலன்களும் நமக்கு இதம் புரிவன போலத் தோன்றி நம்மை நல்வழிபடுத்தத் துணை புரியாமையால், இவற்றை 'இதசத்துருஎன்று சொல்வார்கள். இறைவன் திருவருளால் அவர்களை நன்மை புரிய வைக்கவேண்டும். ஐந்து புலன்களும் மதம் பிடித்த யானைகள் போல உள்ளன. அவற்றை, (உரன் என்னும் தோட்டியால்) மனத் திண்மையால் அடக்க வேண்டும். வெறி பிடித்த பசுக்கள் போல உள்ளவற்றை நல்லபடியாக மேய்த்துபால் கறக்கும் பசுக்களாக மாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...