வேலின் பெருமை

 


வேலின் பெருமை

-----

 

      முருகனுடைய அவதாரத்திற்கு அடிப்படைக் காரணமே சூரனைச் சங்கரிப்பதுதான். சூரசங்காரம் செய்ததே அவன் திருக்கரத்தில் உள்ள வேல்தான். அந்த வேலின் பெருமையை அருணகிரிநாதர் விரித்துக் கூறுகிறார். சூரன் என்பது ஆணவமலத்தைக் குறிக்கும். ஆணவம் உண்மை அறிவை விளங்கவொட்டாமல் செய்வது. அறிவு விளக்கம் பெறாதவன் விலங்குத் தன்மையை உடையவன். ஆணவமலத்தின் வலிமையை அழித்துமெய்யறிவை விளங்கச் செய்ய வேண்டும். ஒளியின் முன்னே இருள் தனது வலிமை குறைந்துபோகும். ஆணவமலம் துன்பத்தை விளைக்கும். மெய்யறிவு இன்பத்தை விளைக்கும். மெய்யறிவு என்றாலும்மெய்யுணர்வு என்றாலும்ஞானம்  என்றாலும் ஒன்றே. ஞானசத்தியின் அடையாளம் முருகன் திருக்கையில் உள்ள வேல். அது ஆணவமலத்தை வலியிழக்கச் செய்தது என்பதுதான் சூரசம்மாரத்தை விளக்குவது. 

 

     ஏதாவது பொருளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் உள்ளபடியே சொன்னால் அந்தப் பொருளில் ஈடுபாடு தோன்றாது. வருணனைகளோடு அழகுபடுத்திச் சொன்னால் சுவை பிறக்கும். அழகான பொருளை அலங்காரம் பண்ணி வைக்கும்போது அதனைத் தரையில் வைக்க மாட்டார்கள். அடியிலே அழகான பீடம் போட்டுஅதனையும் அலங்காரம் செய்து அதன்மேல்தான் வைப்பார்கள். 

 

     முருகப் பெருமான் திருக்கரத்திலுள்ள வேலின் பெருமையைச் சொல்ல வந்த அருணகிரிநாதர் அதனை அழகாகச் சொல்கிறார். முருகன் தன் கையிலுள்ள வேலினால்தான் சூரனைச் சங்காரம் பண்ணினான். அவனது தந்தை யார் தெரியுமாஅவர், "தேர் அணி இட்டுப் புரம் எரித்தவர். "தேர் அணி இட்டு" என்றால் தேரை அலங்காரம் பண்ணி என்று பொருள். சிவபபரம்பொருள் முப்புரங்களைச் சங்கரித்தார். பறக்கும் கோட்டைகள் மூன்று இருந்தன. இரும்பாலான கோட்டைவெள்ளியால் ஆன கோட்டைதங்கத்தாலான கோட்டை ஆகிய மூன்றையும் முருகப் பெருமானுடைய தந்தை எரித்தார். அந்த மூன்று கோட்டைகளையும் உடைய மூன்று அசுரர்கள் மிக்க துன்பத்தைப் பிறருக்கு அளித்து வந்தார்கள். அதனால் அவர்களுடைய புரங்களை அழித்தான்.  உடம்பினாலும்

உள்ளத்தினாலும் அசுரர்களாக இருந்தவர்களைப் பற்றிப் புராணம் கூறுகிறது. உள்ளத்தினால் அசுரராக இருப்பவர்கள் எல்லாக் காலத்திலும் உண்டு. தனது செயல்களால் தானே இன்பம் அடைகிறவன் மனிதன். தன் செயல்களால் தானும் இன்புற்றுப் பிறரையும் இன்புறச் செய்பவன் தேவன்தன் செயலால் பிறருக்குத் துன்பத்தை விளைவித்து அதைக் கண்டு இன்புறுகிறவன் அசுரன். இன்றைக்கும் தமது செயல்களால் பிறருக்குத் துன்பத்தை விளைவித்து இன்பம் காணுகின்றவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் அசுர சாதியைச் சேர்ந்தவர்களே. மூன்று கோட்டைகளுக்கும் சொந்தக்காரராகிய அசுரர்கள் என்ன செய்தார்கள்ஆகாயத்தில் விமானம் போல மூன்று கோட்டைகளும் பறந்து வந்து மக்கள் மிகுதியாக வாழும் பகுதியில் அப்படியே இறங்கும். அவை கீழே உட்கார்ந்து கொண்டவுடன்அந்தப் பகுதியிலுள்ள மக்கள் அப்படியே நசுங்கிச் செத்துப் போவார்கள். இவ்வாறு மக்களைச் சாகச் செய்து பார்ப்பதில் அவர்களுக்குக் களிப்பு. இதைக் கண்டு தேவர்களுக்கு மிக்க கலக்கம் ஏற்பட்டு விட்டது. உலகம் வாழ்ந்தால்தான் தேவர்கள் எல்லோரும் வாழ முடியும். 

 

     உலகம் இப்படி அசுரர்களால் அழிந்து ஒழிந்து போவதைக் கண்டுதேவர்கள் அலறி அடித்துக் கொண்டு போய் இறைவனிடம் முறையிட்டார்கள். தேவர்களும் கொஞ்சம் அகங்காரத்தோடுதான் இருந்தார்கள். அவர்களுடைய அகங்காரத்தையும் போக்க வேண்டுமென்று இறைவன் நினைத்தான். நாம் ஒரு செயலைச் செய்தால்அதில் ஒரு பகுதி தான் நிறைவேறுகிறது. இறைவன்ஒரு செயலைச் செய்யும் போதுபல செயல்கள் நிறைவேறும். அவன் திரிபுரத்தில் இருந்த அசுரர்களை அடக்க விரும்பினான். அதோடு தேவர்களுடைய அகங்காரத்தையும் போக்க எண்ணினான். உடனே தேரில் ஏறிப் புறப்பட்டான். 

 

     சிவபுராணத்தில் திருமாலுக்கு அகங்காரம் வந்ததாகவும்சிவபெருமான் அடக்கியதாகவும் வருகிறது. விஷ்ணு புராணத்தை எடுத்துப் பார்த்தால்சிவபெருமானுக்கு அகங்காரம் சில சமயங்களில் உண்டானதாகவும்திருமால் அடக்கியதாகவும் இருக்கும். அவற்றைக் கொண்டு சிவபெருமான் உயர்ந்தவராவிஷ்ணு உயர்ந்தவரா என்னும் வாதத்தில் நாம் இறங்கிவிடக் கூடாது.  நாடகக் குழுவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பலவிதமான நாடகங்களை நடித்துக் காட்டுகிறார்கள். ஒரு நாடகத்தில் அண்ணன் அரசனாக வருகிறான்தம்பி வேலைக்காரனாக வருகிறான். மற்றொரு நாடகத்தில் தம்பி அரசனாக வருகிறான்அண்ணன் வேலைக்காரனாக வருகிறான். இரண்டு பேரும் ஒரே நாடகத்தில் அரசனாக இருக்க முடியாது அல்லவாஅவர்கள் இரண்டு பேரில் யாரும் உண்மையில் அரசன் அல்லவேலைக்காரனும் அல்ல. மாறிமாறி வேலைக்காரனாகவும் அரசனாகவும் வந்தாலும்இரண்டு பேரும் உண்மையில் சமமானவர்களே.

 

     சிவனும் திருமாலும் மாறி மாறி வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். அவர்கள் போட்டுக் கொள்ளுகிற வேஷம் எதுவும் உண்மை அல்ல. கதைகளின் உட்கருத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

     திரிபுர சங்காரக் கதையில் அகங்காரம் திருமால் முதலான தேவர்களுக்கும் உண்டானது. தேரும் படைக்கலங்களும் இல்லாமலேயே தம்மால் திரிபுர சம்மாரத்தைச் செய்யமுடியும் என்பதைக் காட்டவில்லை வளைத்துஅம்பினை எய்யாமல்தேவர்களின் அகங்காரத்தை எண்ணி வேடிக்கையாகச் சிரித்தார். திரிபுரங்கள் எரிந்தன. தேவர்களினட் அகந்தையும் எரிந்தது.சிவபிரான் தன் சிரிப்பினால் மூன்று கோட்டைகளையும் எரித்துச் சாம்பலாக்கினாலும்அந்த மூன்று அசுரர்களையும் அழிக்கவில்லை.

 

     அந்த மூன்று அசுரர்களும் பொல்லாத பிள்ளைகளாக இருந்தார்கள். அவர்களுக்கு அனுகூலமாக மூன்று கோட்டைகள் கிடைத்தன. அவர்கள் அந்தக் கோட்டையின் உதவியால் துன்பத்தை விளைவித்தார்கள். தன் குழந்தையின் கையிலுள்ள கோலைப் பிடுங்கி எரித்துவிடும் தாயைப் போலதன் குழந்தைகளாகிய அசுரர்களுடைய மூன்று கோட்டைகளையும் எரித்தான் சிவபிரான்.  ஆனால் அந்த மூன்று பேரையும் எரிக்கவில்லை. புரங்கள் எரிந்தவுடன் அந்த மூன்று அசுரர்களும் இறைவன் காலில் வந்து விழுந்தார்கள். அவனுடைய சந்நிதியில் அவர்கள் நல்லவர்கள் ஆகிவிட்டார்கள். இறைவன் தன் திருவிடியில் வந்து வீழ்ந்த வாணனை மிருதங்க வித்துவானாக வைத்துக் கொண்டான். மற்ற இரண்டு பேரையும் தன் வாயில் காவலராக வைத்துக் கொண்டான். அதைப் போலவேதன்னையும் ஆக்க வேண்டும் என்று வேண்டி சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடுகிறார்.

 

"மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில்

    இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்

காவலாளர் என்று ஏவிய பின்னை

    ஒருவன் நீ கரி காடு அரங்காக

மானை நோக்கியோர் மாநடம் மகிழ

    மணிமுழா முழக்க அருள் செய்த

தேவ தேவ! நின் திருவடி அடைந்தேன்,

    செழும்பொழில் திருப்புன்கூர் உள்ளானே."

 

 இதன் பொருள் ---

 

     தேவதேவனேவளமை மிக்க சோலைகளை உடைய திருப்புன்கூரில் எழுந்தருளி இருப்பவனே நீமுப்புரத்தை அழித்த காலத்தில் அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை உனது திருக் கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்த பின்பு

 மற்றொருவனைநீகரிந்த காடே அரங்கமாகஉமையவளை நோக்கி ஒப்பற்ற பெரிய நடனத்தை மகிழ்ந்து செய்யும் பொழுது அழகிய மத்தளத்தை முழக்கும்படி அருள்செய்ததை அறிந்து வந்து அடியேன் உன் திருவடியை அடைந்தேன்என்னையும் ஏன்றுகொண்டு அருள்.

 

     இந்தக் கதையின் உட்கருத்து --- ஆணவம்கன்மம்மாயை என்னும் மூன்று மலங்களோடும் உள்ள ஆன்மாஇந்த உலகத்தில் பிறந்து துன்பத்தை அடைகிறது. மலத்தோடு சேர்ந்திருக்கும் ஆன்மா களிம்போடு சேர்ந்துள்ள தாமிரத்திற்கு ஒப்பானது. தாமிரத்தை ரசவாதத்தால் பொன்னாக்குவார்கள்ஆனால் ஈயத்தைப் பொன்னாக்க மாட்டார்கள். பாதரசத்தை விட்டுஅதோடு சில மூலிகைச் சாற்றைப் பிழிந்து புடம் இட்டுப் பொன்னாக்குவதால் அதற்கு ரசவாதம் என்று பெயர் வந்தது. தாமிரத்தை நன்றாக விளக்கி வைத்துப் பார்த்தாலே அது பொன்போல ஒளிர்வதைப் பார்க்கலாம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அதில் மாசு ஏறிஅதன் ஒளி மங்குகிறது. தங்கத்தின் தன்மை தாமிரத்தில் இருக்கிறது. தாமிரத்தோடு களிம்பு ஏறாமல் தடுத்தால் அது தங்கம். களிம்பு இல்லாத தாமிரம் தங்கம்களிம்புள்ள தங்கம் தாமிரம்.

 

     தங்கம் இறைவன். தாமிரம் ஆன்மா. ஆன்மாவிடத்தில் என்றும் ஒட்டிக் கொண்டு பிறவிக்குக் காரணமாக இருக்கிறது மலம் அல்லது பாசம் என்பது. உயிர் இறைவனை ஒட்ட விடாமல் செய்து கொண்டிருப்பது அந்தக் களிம்பாகிய மலம். அது மூன்று விதம்ஆணவம்கன்மம்மாயை என்பன.  நான்எனது என்று கொள்ளும் அகங்கார மமகாரம் ஆணவம் புண்ணிய பாவ வினைகள் கன்மம் -  கடவுளை உணராமல் ஒன்றை ஒன்றாக மயங்கிக் கிடப்பது மாயை. இந்த மூன்றும் சேர்ந்த களிம்பினால் உயிர் மூடப்பட்டிருக்கிறது. இறைவன் எந்தக் காலத்திலும் மல சம்பந்தம் இல்லாதவன். ஆன்மாக்கள் யாவுமே மலத்தோடு சம்பந்தப்பட்ட தாமிரமாக இருக்கின்றன. தாமிரம் தங்கமாக வேண்டும். தாமிரத்தோடு சேர்ந்த களிம்பு போன்றது மலம். அதைப் போக்கும் ஞானமே அக்கினி. மலமாகிய ஆணவம்கன்மம்மாயை ஆகிய மூன்று கோட்டைகளையும் வைத்துக் கொண்டுதான் உயிர்கள் பலவிதமான தீமைகளைப் புரிகின்றன. தன் சிரிப்பினாலேயே திரிபுரங்களையும் சங்காரம் செய்த இறைவனை ஆன்மாக்கள் பற்றிக் கொண்டால்அவனுடைய சிரிப்பாகிய ஞான அக்கினியினால் மூன்று மலங்களும் சாம்பலாகிவிடும்.

 

"கருமருவு குகை அனைய காயத்தின் நடுவுள்

   களிம்புதோய் செம்பு அனைய யான்

காண்தக இருத்தியே ஞானஅனல் மூட்டியே

    கனிவுபெற உள்உருக்கிப்

பருவம் அது அறிந்துநின் அருளான குளிகைகொடு

   பரிசித்து,வேதிசெய்து,

பத்து மாற்றுத் தங்கம் ஆக்கியே பணிகொண்ட

    பட்சத்தை என்சொல்லுவேன்"

 

என்று இறைவன் செய்த ரசவாதம் குறித்துத் தாயுமானவர் பாடுகிறார். "குகையாகிய உடம்பில் களிம்பு தோய்ந்த செம்பைப் போல் உள்ளவன் ஆன்மாவாகிய நான். என்னை ஞான அனலால் உருக்கிக் களிம்பைப் போக்கி அருளாகிய குளிகையைக் கொண்டு தங்கம் ஆக்கினாய்" என்கிறார்.

 

     "ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள்ளுருக்கி" என்பதைக் கவனிக்க வேண்டும். ஞானத்தினால் உருக்கம் உண்டாகும். உள்ளம் உருகாவிட்டால் கனிவு இல்லைஇரக்கம் இல்லைஅருள் இல்லைபிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கும் இளகிய மனம் இல்லை. அன்பர்கள் இறைவனைத் துதிக்க அவர்களுடைய மனத்திலே இளக்கம் ஏற்படும் உள்ளம் உருகும். ஞானத் தீயினாலே  உயிரைப் பற்றிக் கொண்டிருக்கிற மலமாகிய களிம்பு பொசுங்கிப் போகும். களிம்பு நீங்கிய தாமிரம் தங்கத்தோடு தங்கமாகச் சேர்ந்து விடுவதைப் போலமலமாகிய களிம்பு நீங்கிய ஆன்மா இறைவனைச் சார்ந்து விடும்.  இறைவன் தன்னுடைய சிரிப்பினாலேயே ஆன்மாக்களைப் பற்றி இருக்கிற மும்மலக் கோட்டைகளை எரித்து விடுகிறான். தீயவர்களை அவன் சுட்டு எரிப்பதில்லை. அவர்களிடமுள்ள தீமையையே போக்கி ஆட்கொள்கிறான். இத்தனை பெரிய தத்துவங்களை விளக்குகிறது திரிபுர சங்காரம்.

 

     திரிபுர சம்மாரத்தை ஒரு புராணக் கதையாகவே சொல்லுவது மூடர்களின் செயல். அவர்கள் உண்மையை உணராதவர்கள். முப்புர தகனம் என்பது மும்மலங்களை எரித்த அருட்செயல் என்கிறார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

 

"அப்பு அணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்;

முப்புரம் ஆவது மும்மல காரியம்,

அப்புரம் எய்தமை யார் அறிவாரே"    --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாற்றைப் புராணங்கள் கூறக் கேட்கின்றஅறிவில்லாதார் அவ் வரலாற்றை மட்டுமே கேட்டுஅவ்வளவில் சிவபெருமானைப் புகழ்வதோடு அமைந்து விடுகின்றனர். அவ்வரலாற்றால் அறியத் தக்க உண்மையை அறிகின்றவர் மிகச் சிலரே. இரும்புவெள்ளிபொன் என்பவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் முறையே ஆணவம்மாயைகன்மம் என்னும் மும்மலக் கட்டினைக் குறிக்கும். சிவபெருமான் அக் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கினான்என்பது, `அம் மும்மலங்களின் வலியை அழித்து,கட்டு அறுத்து அருள் புரிந்தான்,  புரிகின்றான்

புரிவான் என்னும் உண்மையையே சிறப்பாக உணர்த்தி நிற்கும்.

 

     இப்படிதிரிபுரங்களை எரித்து அருளிய சிவபரம்பொருளின் திருமகன்தான் முருகப் பெருமான். அவன் திருக்கையில் வேல் இருக்கின்றது. ஐம்முகச் சிவத்திடம் உள்ள அருட்பண்பைஅறுமுகச் சிவத்திடமும் காணலாம். ஞானசத்தியாகிய வேலைக் கொண்டுசூரபதுமனுடைய அசுரத் தன்மையை மாற்றிஅவனை வேலும் மயிலுமாக ஏற்றுக் கொண்டு அருளினான் முருகப் பெருமான். அதனால் தேவேந்திர லோகம் பிழைத்தது என்று மங்களமாக முடிக்கிறார் அருணகிரிநாதர்.

 

     முருகன் திருக்கையில் உள்ள வேல் மூன்று காரியங்கள் செய்தது.  கிரெளஞ்சமலை குலைந்தது  அரக்கர் படை குலைந்தது சூரன் தலைவனாக இருந்து நடத்திய பெரும்படையும் கெட்டது. கிரெளஞ்சம் என்பது அன்றில் என்ற பறவையின் பெயர். அது நெய்தல் நிலத்தில் இருக்கும். பனை மரங்களில் ஆணும் பெண்ணுமாய் இரட்டை இரட்டையாகவே வாழும்கணமும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கும். அந்தப் பறவையைக் காதலுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்வது வழக்கம். அதன் பெயரை உடையது கிரெளஞ்ச மலை. கெட்டவர்கள் நல்ல பேரோடு நல்லவர்களைப் போல தோற்றம் அளிப்பதுண்டு. அதை இது நினைவூட்டுகிறது. பிறருக்குத் தீங்கு செய்யும் கயவர்கள்

மனிதர்களைப் போலவே இருப்பார்கள் என்று சொல்லுகிறது திருக்குறள். தாமரை போன்ற முகம் உடையவள் என்கிறோம். தாமரைக்கும் முகத்துக்கும் வேறுபாடு தெரியும். தம்பி மாதிரியே அண்ணன் இருக்கிறான் என்றால்தம்பி வேறுஅண்ணன் வேறு என்று தெரியும். ஒப்பாகச் சொல்லும் பொருள்களுக்குள் வித்தியாசத்தை அறிந்து கொள்ளலாம். ஆனால் நல்லவர்பொல்லாதவர் என்ற இருவருக்குள்ளும் வேறுபாடே தெரியாதாம். "மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன ஒப்பாரி யாம் கண்டது இல்" என்பது திருக்குறள்.  யார் கயவர் என்பதைக் கண்டுகொள்ள முடியாது. 

 

     கிரெளஞ்சாசுரன் காதல் உள்ளம் படைத்த அன்றில் பறவையைப் போலக் காட்சி அளித்தான். காதல் ஒட்டுவதுபகை வெட்டுவது. காதலுக்கு உதாரணமாகிய அன்றில் பறவையைப் போலப் புறத்திலே தோற்றம் அளித்த அவன்ஒர் அழகான மலைபோல் நின்றான்புலி பசுத்தோலைப் போர்த்துக் கொண்டதுபோல். பலர் உண்மையான மலை என்று எண்ணினார்கள். தவம் செய்வதற்குரிய அழகான இடம் என்று எண்ணிச் சிலர் அந்த மலையில் இருந்த குகைக்குள் செல்வார்கள். அந்தச் சமயம் பார்த்து அவன் அதை மூடிக் கொண்டு விடுவான். அவ்வளவுதான்உள்ளே போனவர்கள் அத்தனை பேரும் நசுங்கிச் செத்துப் போவார்கள். இது கிரெளஞ்சாசுரன் வேலை. இந்த அசுரனது சூழ்ச்சி நாளடைவில் எல்லோர்க்கும் தெரிந்தது. தேவர்களுக்கும் தெரிந்தது. அவர்கள் இறைவனிடம் முறையிட்டார்கள். இந்தக் கிரெளஞ்ச மலையைத் தன் கையிலுள்ள வேலினால் அணு அணுவாகக் குலைத்தான் முருகன். அவன் செங்கையில் உள்ள கூர்மையான வேல்  அணுககிரெளஞ்ச மலை குலைந்தது. கிரவுஞ்சம் என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். உயிர்களின் வினைத் தொகுதியை முருகன் விடுத்த ஞானசத்தியாகிய வேல் அழித்தது என்பதே இதற்குப் பொருள்.

 

     அதற்குப் பிறகு தாரகாசுரனாகிய யானைமுகன் தன் படையுடன் வந்தான். பின்பு சிங்கமுகாசுரன் வந்தான். முருகனது கூர்மையான வேல் அவர்களையும் சங்காரம் செய்துவிட்டது. சூரனுக்குத் துணையாக இருந்த கிரெளஞ்சம் குலைந்தது என்றவுடனேயே எதற்கும் அஞ்சாது இருந்து அசுரக் கூட்டதிற்கு அச்சம் வந்துவிட்டது. அடுத்துத் தாரகன் முதலிய அசுரர் நேரே அணிவகுத்து வளைந்த படையும் நிலை குலைந்தது.

 

     சூரபதுமனே போர்க்களத்திற்கு வந்துவிட்டான். மயிலின் மேல் சின்னஞ்சிறு குழந்தையாக வீற்றிருக்கிற இளம்பூரணரைப் பார்த்தவுடன், "இவனா நம் படைகளை எல்லாம் அழிக்க வந்தவன்இந்தச் சின்னஞ்சிறு குழந்தையை ஒரு நொடியில் என்ன செய்கிறேன் பார்!’ என்று கொக்கரித்தான். வேல் அவன் படையையும் அழித்தது.

 

     பெரிய போர்கள் மூன்று. பாரதப்போர்ராமாயணப் போர்சூரசங்காரம் என்பன அவை. பாரதப் போர் பதினெட்டு நாட்கள் நடந்ததாம். இராமராவண யுத்தம் அதைவிடப் பெரியது. அது பதினெட்டு மாதங்கள் நடந்தது என்பார்கள். ஆனால் சூரசங்காரப்போர் பதினெட்டு ஆண்டுகள் நடந்தது என்பர். அது எவ்வளவு பெரிய போர் என்பதை அதனால் தெரிந்து கொள்ளலாம். இந்தப் போரிலே தன் சிரிப்பினாலேயே திரிபுர சங்காரம் செய்த சிவபெருமானுடைய குமாரன் தன் செங்கை வேலினால் முதலில் சூரனது படைக்குப் பெரிய பாதுகாப்பாக அமைந்திருந்த கிரெளஞ்ச மலையை அணு அணுவாகிப் போகும்படி குலைத்தான்.  பின்பு மற்ற அசுரர் படைகளை ஒழிந்து போகும்படி செய்தான். கடைசியில் சூர்ப் பேரணி கெடச் சூரனையும் சங்காரம் செய்தான். பிறருக்குத் துன்பம் விளைவித்து வந்த அசுரர்களை எல்லாம் அழித்தான் முருகன். 

 

     அதனால் தேவேந்திர லோகம் பிழைத்தது. மனிதர்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொருவரிடமும் சூரசங்காரம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. நிகழவும் வேண்டும். ஒவ்வொரு மனிதனுடைய மனத்திலும் இருக்கின்றவை அசுர சம்பத்தாகிய தீய குணங்கள். தேவ சம்பத்தாகிய நல்ல குணங்களும் இருக்கின்றன. சூரபன்மனுடைய தாயின் பெயர் மாயை. மாயையின் பிள்ளைதான் சூரன். மாயையின் பிள்ளைகளே தீய குணங்கள். மாயையின் பிள்ளையாகிய சூரன் தேவர்கள் நல்ல காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுத்துச் சிறையில் போட்டுப் பலவிதமான துன்பங்களைச் செய்தான். நம் மனத்திலே இருக்கிற மாயையின் பிள்ளைகளாகிய காமம்குரோதம்லோபம்மோகம்மதம்மாச்சரியம் ஆகிய தீய குணங்களோ நல்ல குணங்களை அடக்கிஆன்மாக்களுக்கு மிகுந்த துன்பத்தை விளைவித்து வருகின்றன. தேவர்களுடைய வாழ்க்கையைப் போல இருக்க வேண்டியது நம் மனம். ஆனால்அது அசுரர்களின் பூமியாகிவிட்டது. அதனால் ஆன்மாக்கள் விடுதலை பெறாமல் துன்பம் அடைகின்றன. அது மாற வேண்டுமானால் தீய குணங்கள் மாற வேண்டும். அசுரர்களுடைய ஆளுகைக்கு உட்பட்டிருக்கிற மனம்தேவர் உலகம் ஆக வேண்டும். சூரனைத் தேவர்களால் அழித்துவிட முடியாது. அதற்கு ஏற்ற ஆற்றல் அவர்களிடம் இல்லை. அதைப்போலவே நம்முடைய மனத்தில் தோன்றுகிற தீய குணங்களை நாமே அழித்துவிட முடியாது. அதற்கு ஏற்ற ஆற்றல் நமக்கு இல்லை. இறைவன் அருளால் ஞானம் ஏற்பட்டு அவை அழிய வேண்டும். 

 

     நல்லதைக் கேட்கின்ற குழந்தைகளுக்கு நல்லதை அளிக்கும் தாயாகவும்கெட்ட காரியங்களைச் செய்கின்ற குழந்தைகளை அடித்து உதைத்து அவர்களை நல்வழிப்படுத்துகின்ற தாயாகவும் இறைவன் இருக்கின்றான். அறக் கருணை உடையவனாகவும்மறக் கருணை உடையவனாகவும் அவன் இருக்கிறான். அணைத்துக் காப்பாற்றுவது அறக்கருணைஅடித்துக் காப்பாற்றுவது மறக் கருணை. அசுரர்களை அழித்தது மறக்கருணை.

 

     முருகப் பெருமான் புரிந்தருளிய மறக்கருணையின் திறத்தை வள்ளல்பெருமான் பின்வருமாறு பாடிக் காட்டுகிறார்.

 

"வானம் எங்கேஅமுத பானம் எங்கேஅமரர்

                        வாழ்க்கை அபிமானம்  எங்கே?

            மாட்சி எங்கேஅவர்கள் சூழ்ச்சி எங்கேதேவ

                        மன்னர் அரசாட்சி எங்கே?

ஞானம் எங்கேமுனிவர் மோனம் எங்கேஅந்த

                        நான்முகன் செய்கை எங்கே?

            நாரணன் காத்தலை நடத்தல் எங்கேமறை

                        நவின்றிடும் ஒழுக்கம் எங்கே?

ஈனம்அங்கே செய்த தாருகனைஆயிர

                        இலக்கம் உறு சிங்கமுகனை,

            எண்ணஅரிய திறல் பெற்ற சூரனைமறக்கருணை

                        ஈந்துபணி கொண்டிலை எனில்,

தானம்இங்கு ஏர்சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

                        தலம் ஓங்கு கந்தவேளே!

            தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

                        சண்முகத் தெய்வமணியே!"

 

     நோயாளிகள் இரண்டு பேருடைய நோயையும் குணப்படுத்துபவன் ஒரே மருத்துவன்தான். ஆனால்அவன் ஒருவனுக்கு மருந்தைத் தேனிலே குழைத்துத் தருவான்.  மற்றவனுக்கோ கத்தியை எடுத்து உடலை அறுத்துச் சிகிச்சை செய்வான். நோயின் தன்மையைப் பொறுத்து மருத்துவம் செய்யப்படும். அதைப்போலவே இறைவன் எல்லோருக்கும் கருணை காட்ட வேண்டும் என்றே விரும்புகிறான். அவன் காட்டுகின்ற ஒரு கருணை மென்மையாகத் தோன்றுகிறது. மற்றொன்று கடுமையாகத் தோன்றுகிறது. மென்மையாகத் தோன்றுவது அறக்கருணைகடுமையாகத் தோன்றுவது மறக்கருணைமுருகன் சூரபதுமனிடம் மறக்கருணை காட்டி ஆட்கொண்டான்.

 

     கந்தபுராணத்தை மூன்று நிலையில் பார்க்கலாம். ஒன்று கதையியல். சூரபதுமன் வதையைக் கூறுவது கதை. இரண்டாவது உலகியல்மூன்றாவது அருளியல். ஒருவன் தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாததோடு பிறர் செய்கின்ற நல்ல காரியங்களையும் செய்ய விடாமல் தடுத்துஅவர்களுக்குத் துன்பத்தை உண்டாக்கி வந்தால் அவன் அசுரன்தான். அவனைத் தண்டித்து நல்லவர்கள் நல்ல காரியங்களைச் செய்யும்படியாக உதவுபவன் முருகன். இது உலக இயலை ஒட்டிய தத்துவம்.

 

     உள்ளமாகிய பீடத்தில் தேவர்களுடைய சம்பத்து ஆகிய நல்ல குணங்கள் தங்கள் கடமைகளைச் செய்யவொட்டாமல்அந்தப் பீடத்திலே அசுரர்களுடைய சம்பத்து ஆகிய காமக் குரோத லோப மோக மத மாச்சரியங்கள் வந்து ஆக்கிரமித்துக்கொண்டு

ஆன்மாவுக்குப் பல துன்பங்களை விளைவித்து வருகின்றன. நல்லறிவு என்றும்மெய்யறிவு என்றும் ஞானம் என்றும் சொல்லப்படும்கூர்மையான வேல் பாய்ந்தால்,அஞ்ஞானத்தின் விளைவாகிய அசுரக் கூட்டங்கள் அழிந்து ஒழிந்து போகின்றன என்பது அருளியலை ஒட்டிய தத்துவம்.

 

     அருணகிரிதாநர் கந்தர் அலங்காரத்தில் பின்வருமாறு பாடுகிறார்

 

"தேர் அணி இட்டுப் புரம் எரித்தான் மகன் 

     செங்கையில் வேல்

கூர்அணி இட்டு அணுவாகிகிரவுஞ்சம்

     குலைந்துரக்கர்

நேர்அணி இட்டு வளைந்தகடகம் 

     நெளிந்ததுசூர்ப்

பேர் அணி கெட்டதுதேவேந்த்ர

   லோகம் பிழைத்ததுவே".

 

இதன் பொருள் ---

 

     பூமிசக்கரவாளகிரிசூரியசந்திரர் முதலியவைகளால் செய்யப் பெற்ற தேரை அலங்கரித்துச் செலுத்தியும்திரிபுரங்களைத்  தனது பார்வையினாலேயே எரித்து அருளிய சிவபரம்பொருளின் திருக்குமாரர் ஆகிய முருகப் பெருமான் திருக்கரத்தில் இருந்த வெற்றிவேலானது கூர்மையுடன் தைத்துகிரவுஞ்ச மலையானது அணுஅணுவாகத் தூள்பட்டு அழிந்துஅணிவகுத்து வந்து வளைந்து கொண்ட அசுரர்களின் வட்டவடிவச் சேனை தளர்ந்து ஓடியது. சூரபதுமனுடைய நடுச் சேனை அழிந்தது. தேவேந்திரனுடைய உலகமானது அசுர பயத்தின் நீங்கிப் பிழைத்தது.

 

     இவ்வாறு வேலின் பெருமையை அருணகிரிநாதர் இப்பாட்டில் விரித்துக் கூறிஅதன் உட்பொருளை நமக்கு விளங்க வைத்தார் என்பதை உணர்ந்து நாமும்பொருள் உணர்ந்து ஓதி நற்கதியைப் பெறுவோமாக.

 

 

 

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...