வாமனாவதார வரலாறு, அதன் தத்துவம்.
-----
பிரகலாதருடைய புதல்வன் விரோசனன். விரோசனனுடைய புதல்வன் மாவலி. சிறந்த வலிமை உடையவன் ஆதலின், மாவலி எனப்பட்டான். அவனுடைய அமைச்சன் சுக்கிரன். மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி, வாள்வலியும், தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும் தன்வசப் படுத்தி ஆண்டு வந்தான். அதனால் சிறிது செருக்குற்று, இந்திராதி தேவர்கட்கு இடுக்கண் புரிந்து, அவர்களது குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான். தேவர் கோமானும் பாற்கடலினை அணுகி, அங்கு பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டான்.
காசிப முனிவரும், அதிதி தேவியும் நெடிது காலம் சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்து கொண்டு இருந்தனர். தேவர் குறை தீர்க்கவும், காசிபருக்கு அருளவும் வேண்டி, திருமால் அதிதி தேவியின் திருவயிற்றில் கருவாகி, சிறிய வடிவுடன் (குறளாகி) அவதாரம் புரிந்தார்.
"காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வாலறிவற்கு,அதிதிக்கு ஒரு மகவாய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்துஓர்
ஆல்அமர் வித்தின் அரும்குறள் ஆனான்."--- கம்பராமாயணம்.
இதன் பொருள் ---
முக்காலங்களையும் சூக்குமமாகக் கணித்து எதனையும் உணரவல்ல காசிபன் என்ற பெயருடையவரும், மெய்யறிவுடையவரும் ஆகிய முனிவருக்கும், அவனது மனைவியான அதிதி என்பவளுக்கும் ஒப்பற்ற குழந்தையாக, நீல நிறத்தை உடைய திருமால் வந்து பிறந்து; ஆலமரம் நுண்ணுருவில் தங்கியிருக்கத் தகுந்த ஆலம் விதையை ஒத்து, அரிய குறள் உருவத்தில் வளர்ந்து வந்தான்.
ஒரு பெரிய ஆல மரத்தினது முழு வளர்ச்சிக்கு உரிய நுண்ணிய உறுப்புக்கள் அதன் வித்தினுள் அடங்கியிருப்பது போல, பின்னர் எடுக்கத் தக்க ‘ஓங்கி உலகளந்த’ திருமாலின் பேருருவத்தைஉள்ளடக்கியிருப்பதை உணர்த்தும் விதமாக, "ஆல் அமர் வித்தின் அருங்குறள் ஆனான்" என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் நயம்படக் கூறினார்.
மாவலிச் சக்கரவர்த்தி ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான். அவ் வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக் கொடி உயர்த்தினான். திரள் திரளாகப் பலப்பல இரவலர் வந்து, பொன்னையும் பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர். மாவலி, தன்னிடம் வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.
அத் தருணத்தில், வாமனர் முச்சிப்புல் முடிந்த முப்புரி நூலும், வேதம் நவின்ற நாவும் ஆக, சிறிய வடிவுடன் சென்றார்.
"முப்புரி நூலினன், முஞ்சியன். விஞ்சை
கற்பது ஓர் நாவன்,அனல்படு கையன்,
அற்புதன், அற்புதரே அறியும் தன்
சிற்பதம் ஒப்பது ஓர் மெய்க்கொடு சென்றான்".
என்று கம்பர் வாமனத் திருக்கோலத்தை வருணிக்கிறார். இதன் பொருள் ---
ஆச்சரிய மாயையில் வல்லவனாகிய திருமால், மூன்றாகத் திரிக்கப்பட்ட பூணூலை அணிந்தவன் ஆகியும்; முஞ்சி என்னும் புல்லால் ஆகிய அரைநாணைஉடையவன் ஆகியும், வேதவித்தையைச் சொல்லுகின்ற நாவைக் கொண்டவன் ஆகவும், அனல் தோன்றும் கையை உடையவன் ஆகவும், அற்புத ஞானம் வாய்ந்த மேலோர்களே அறிந்து கொள்ளத் தகுந்ததான, தனது ஞான நிலைக்கு ஒப்பதாகிய ஒரு திருவடிவத்தை எடுத்துக் கொண்டு மாவலியின் வேள்விச் சாலைக்குச் சென்றான்.
வாமனராக வந்தவரை மாவலி எதிர்கொண்டு அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்" என்று வினவினான். வாமனர், "மாவலியே! உனது கொடைத் திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டு, எனது செவியும் சிந்தையும் குளிர்ந்தது. மிக்க மகிழ்ச்சி உறுகின்றேன். உன்னைப் போல் வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை. என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.
அருகிலிருந்த வெள்ளிபகவான் என்னும் சுக்கிராச்சாரியார், "மாவலியே! மாயவன் மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துள்ளான். அண்டமும் முற்றும் அகண்டமும் உண்ட மாயவன்தான் இந்த வாமனன். ஆதலினால், இவன் கேட்பதைத் தருவது நல்லது அல்ல" என்று தடுத்தான்.
மாவலி, "சுக்கிரபகவானே! உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்து, என் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது ஒன்று உண்டோ? கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று. இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கள் ஆகார். ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவர் ஆவார். இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர் ஆகும்”.
"மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்,
வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவரேனும்
ஈய்ந்தவர் அல்லது இருந்தவர் யாரே".--- கம்பராமாயணம்.
இதன் பொருள் ---
இறந்தவர்கள் இறந்தவர்களாக எண்ணப்படுபவர்கள் அல்ல. இழிவு வந்த போதும் இறந்து படாமல் ஏந்தியகைகளைக் கொண்டு வசதி உள்ளவர் முன் சென்று யாசிப்பவர்களே இறந்தவர்களாகக் கருதப்படுவோர் ஆவர். எனது தந்தைக்கு ஒப்பான ஆச்சாரியரே! பருவுடல் மறைந்து இறந்தவரே எனினும் உயர்ந்தவர்கள் மனத்தில் மறையாது புகழுடம்புடன் இருந்தவர்கள்தான் நாடி வந்தோர்க்கு ஈந்தவரே அல்லாது வேறு யார்?
தனது குருநாதரைத் தந்தைக்கு ஒப்பானவராக மதிக்கும் குணம் மாவிலியிடம் இருந்தது. எனவே, "எந்தாய்" என்று சுக்கிராச்சாரியரை விளித்தான். நமக்கும் அந்தக் குணம் இருக்கவேண்டும். மாவலி மேலும் சொல்லுகின்றான்.
"அடுப்ப அரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்;
கொடுப்பவர் முன்பு. ‘கொடேல்’ என நின்று.
தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார்
கெடுப்பவர்; அன்னது ஓர் கேடு இலை’’ என்றான்." --- கம்பராமாயணம்.
இதன் பொருள் ---
பிறர் அழியும்படி பழிச்செயல் செய்யும் தீத்தொழில் உடையோர் ஒருவனுக்குப் பகைவர் அல்லர்; இல்லை என்று வந்தோருக்கு இல்லை என்று சொல்லாது கொடுப்பவருக்கு எதிரே நின்றுகொண்டு கொடுக்காதே என்று கூறித் தடுப்பவரே பகைவர் ஆவார். அத்தகையோர் கொள்வாரையும் கொடுப்பாரையும் அல்லாது தம்மையும் கெடுத்துக் கொள்பவரே ஆவர். எனவே, ஒருவருக்குக் கொடுப்பதை விலக்குகின்ற செயலுக்கு ஈடான கேடு வேறு ஏதும் இல்லை என்றார்.
"கட்டுரையின். தம கைத்து உள போழ்தே
இட்டு. இசைகொண்டு. அறன் எய்த முயன்றோர்
உள் தெறு வெம் பகைஆவது உலோபம்;
‘விட்டிடல்’ என்று விலக்கினர் தாமே." --- கம்பராமாயணம்.
இதன் பொருள் --- தமது கைவசம் செல்வம் இருக்கும் காலத்திலேயே, இல்லை என்று வந்து இரப்போர்க்கு ஈந்து புகழ் பெற்று, அறத்தை அடைய முயல்பவர்களான அறவாளர்களின்
மனத்தை அழிக்கும் கொடிய பகையாய் இருப்பது உலோப குணமாகும். அதனை விட்டுவிட வேண்டும் என்று மேலோர் நீதி நூல்களில் விளக்கிக் கூறியுள்ளனர்.
உலோபத் தனம் ஒன்றுதான் ஒருவனிடம் உள்ள அனைத்து நற்குணங்களையும் அழிக்க வல்லது என்று தாடகை வதைப் படலத்தில் கம்பர் கூறியுள்ளதை இங்கே நினைவில் கொள்ளுதல் நலம். உள்ளத்தை அழிக்கும் கொடிய பகை உலோபம். அதனை விட்டு ஒழிக்கவேண்டும் என்பதே நீதி நூல்களின் துணிவு என்கிறார் கம்பநாட்டாழ்வார்.
மாவலி தனது ஆச்சாரியருக்கே நீதியை எடுத்து உரைக்கின்றான்.
"எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே
தடுப்பது நினக்கு அழகிதோ, தகைவு இல் வெள்ளி!
கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்." --- கம்பராமாயணம்.
இதன் பொருள் --- பெருந்தன்மை இல்லாத சுக்கிரனே! பொருளை உடையவர் ஒருவர் தன்னை நாடி வந்திருக்கும் ஒருவருக்கு அவர் கேட்ட பொருளை எடுத்துக் கொடுப்பதற்கு
முன்பு, கொடுக்க வேண்டாம் எனத் தடுப்பது உனக்கு அழகாகுமோ? ஈவதை விலக்கும் கொடிய குணம் கொண்டவனே! உன்னைச் சார்ந்து நிற்கும் உனது சந்ததியானது, உடுக்கத் துணியும்,உண்ண உணவும் இல்லாமல்போக விடுகின்றாய் என்பதைஅறிவாயாக.
"கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம்இன்றிக் கெடும்" என்னும் திருக்குறள் கருத்தினை இங்கே வலியுறுத்திக் காட்டுகின்றார் கம்பநாட்டாழ்வார்.
இவ்வாறு தனது ஆச்சாரியருக்கு நீதியைப் புகன்ற மாவலிச் சக்கரவர்த்தி, "இந்த வாமனர் கேட்டதை நான் மனம் உவந்து தருவேன்" என்று சொல்லி,வாமனரது கரத்தில் நீர் வார்த்து, "மூவடி மண் தந்தேன்" என்றான்.
உடனே வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல், அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம வடிவம் கொண்டார்.
"கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்.
பயந்தவர்களும் இகழ் குறளன்,பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள,விசும்பின் ஓங்கினான்,
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே.". --- கம்பராமாயணம்.
இதன் பொருள் --- குளத்தின் நறுமணமுள்ள அந்தத் தான நீர் தனது கைகளில் தீண்டபப்பட்டவுடனே, பெற்றவரும் கூட இகழும்படியான குறுகிய வடிவு கொண்ட வாமனமூர்த்தி, எதிர்நின்று பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும்; அஞ்சும்படியாக, அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மேலோருக்குச் செய்த உதவி சிறந்து விளங்குவதுபோல வானத்தின் அளவுக்கு வளர்ந்து நின்றான்.
நல்லார் ஒருவருக்குச் செய்த உதவியானது சிறிது அளவினதே ஆனாலும், அதன் பயன் வானத்தை விட மேலும் உயர்ந்து நிற்கும் என்னும் நாலடியார் கருத்தினை விளக்கும் முகத்தான், கம்பநாட்டாழ்வார், "உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்ப,விசும்பின் ஓங்கினான்" வாமனமூர்த்தி என்றார்.
உறக்கும் துணையது ஓர் ஆலம்வித்து, ஈண்டி
இறப்ப நிழல் பயந்தாஅங்கு,- அறப்பயனும்
தான்சிறிது ஆயினும்,தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும். --- நாலடியார்.
இதன் பொருள் ---
மிகச் சிறிய அளவினதான ஓர் ஆலம் விதையானது, மண்ணில் விழுந்து, தழைத்து வளர்ந்து மரமாகிப் பலநூறு பேர் வந்து தங்க நிழலைத் தருவதுபோல, ஒருவன் தக்கவருக்குச் செய்கின்ற தருமத்தின் அளவு சிறியதாக இருந்தாலும், அதன் பயனானது வானத்தை விட உயர்ந்ததாக விளங்கி நிற்கும்.
மண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும், விண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும் அளந்தார் திரிவிக்ரமர். "மூன்றாவது அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்து நின்றான் மாவலி. வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி மாவலியின் சென்னியில் வைத்து, அவனைபாதலத்தில் வாழவைத்தது. அந்தப் புண்ணியத்தின் பயனாக, அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும் பதமும் மாவலி பெற்றான்.
இந்த மாவலியின் முந்தைய பிறப்புப் பற்றி அறிந்து கொள்வது நலம். இறை திருப்பணிப் புண்ணியத்தால் விளையும் பயனை இது நன்கு எடுத்துக் காட்டும். சிறிய எலி ஒன்று, சிவன் கோயிலில் மெல்லிதாக எரிந்து கொண்டு இருந்து விளக்கில் உள்ள நெய்யை உண்ண வந்தது. திரியில் இருந்த நெருப்புச் சுட, அந்த அதிர்ச்சியில் திரியானது தூண்டபட்டு, விளக்கு சுடர்விட்டு எரிந்தது. எலியானது அபுத்தி பூர்வமாகச் செய்த அந்தப் புண்ணியத்திற்கு, அதனை மறுபிறவியில் மாவலிச் சக்கரவர்த்தியாக ஆகுமாறு அருள் புரிந்தார் சிவபெருமான். இந்த வரலாற்றை அப்பர் பெருமான் தேவாரம் காட்டுகிறது.
"நிறை மறைக் காடு தன்னில்
நீண்டு எரி தீபம் தன்னைக்
கறை நிறத்து எலி தன் மூக்குச்
சுட்டிடக் கனன்று தூண்ட,
நிறை கடல் மண்ணும் விண்ணும்
நீண்ட வான் உலகம் எல்லாம்
குறைவு அறக் கொடுப்பர் போலும்
குறுக்கை வீரட்டனாரே."
இதன் பொருள் --- மந்திர சித்தி நிறைந்த வேதங்கள் பூசித்த (வேதாரணியம் என்று இக்காலத்தில் வழங்குகின்ற) திருமறைக்காட்டில் உள்ள திருக்கோயிலில் நீண்டு எரியும் திறத்ததாகிய விளக்கினில் உள்ள எண்ணெயைக் குடிக்கக் கருதி வந்த கறுத்த நிறத்தை உடைய எலியின் மூக்கினை அத் தீப்பிழம்பு சுட்டிட, அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய அந்த எலிக்கு மறுபிறப்பில் கடலால் சூழப்பட்ட நிலஉலகம், தேவர் உலகம், நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை எல்லாம் குறைவற ஆளுமாறு அருள் வழங்கினார் குறுக்கை வீரட்டனார்.
மாவலி வரலாறு நமக்கு உணர்த்துவது, தன்னிடத்தில் பொருள் இருந்தும் இல்லை என்று வந்தவருக்கும் ஈயாது வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் இறந்தவர்களாகவே கருதப்படுவர் - உலோபத் தனமே ஒருவனை நற்கதி அடைய ஒட்டாமல் தடுக்கும் பகை ஆகும் - கொடுப்பவனைத் தடுப்பவன் சுற்றமானது உடுப்பதும் உண்பதும் இல்லாமல் கெட்டுப் போகும் - உயர்ந்தவர்க்குச் செய்த உதவியானது சிறிய அளவினதாக இருந்தாலும், அதன் பயன் வானத்தின் உயர்ந்ததாக இருக்கும் என்னும் உயர்ந்த கருத்துக்கள் ஆகும். சுருக்கமாகச் சொல்வது என்றால், "ஒருவனுக்கு இரவினும் இழிவும், ஈதலினும் உயர்வும் இல்லை."
திருமாலுக்கு நெடியோன் என்று ஒரு பேர். நெடியோனாகிய திருமால், மாவலிபால் குறியவனாகச் சென்றனர். அதற்குக் காரணம் என்ன?ஒருவரிடம் சென்று ஒரு பொருளை யாசிக்கின்ற போது, அந்த இழிநிலையை எண்ணி, எண்சாண் உடம்பு ஒரு சாணாகக் குறுகி விடும் என்ற இரவச்சத்தை இது உணர்த்துகின்றது. "இரவச்சம்" என்று ஓர் அதிகாரத்தையே திருவள்ளுவ நாயனார் வைத்து உள்ளார்.
No comments:
Post a Comment