திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 62 -- ஆள்வினை உடைமை
இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியில் செந்தாமரைச் செல்வியாகிய திருமகள் இருப்பாள். சோம்பல் இருப்பவனிடத்தில் கரிய மூதேவி இருப்பாள்" என்கின்றார் நாயனார்.
திருப்பாற்கடல் கடைந்த காலத்தில், அக் கடலில், இலக்குமிக்கு முன்னர் மூதேவி உண்டானது பற்றி அவள் மூத்தாள் எனப்பட்டாள். இவள் மக்களுக்கு சோம்பல் முதலியவற்றை உண்டாக்கும் தெய்வம் ஆவாள். கருமை நிறமும், பாம்பு ஆபரணமும், கழுதை வாகனமும் உடையவள். இவளுக்குக் கொடி காகம். ஆயுதம் துடைப்பம்.
தாள் என்பதற்கு முயற்சி என்றும், திருவடி என்றும் பொருள் கொள்ளலாம்.
அவ்வாறு கொண்டால், முயற்சி உடையவனுடைய திருவடியில் திருமகள் உறைவாள் என்று கொள்வதும் பொருத்தமாக இருக்கும் என்பது, "கொய்த அம்மலரடி கூடுவார் தம்மை தவழ் திருமகள் வணங்க வைத்து, பெய்தவன் பெருமழை, உலகம் உய்யச் செய்தவன் உறைவிடம் திருவல்லமே" என்னும் திருஞானசம்பந்தப் பெருமானாரின் அருள்வாக்கால் அறியப்படும்.
இதற்குத் திருக்குறள்...
மடிஉளாள் மாமுகடி என்ப, மடி இலான்
தாள் உளாள் தாமரையினாள்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
மா முகடி மடி உளாள் --- கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்;
தாமரையினாள் மடிஇலான் தாள் உளாள் என்ப - திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர்.
(பாவத்தின் கருமை அதன் பயனாய முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவைதம் மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறள் கருத்துக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...
ஆக்கம் இங்கு ஒருவரால் அணுக வேண்டுமேல்
ஊக்கம் உண்டாவரேல் உறுவர்; அன்னது
நீக்கம்இல் கொள்கையின் நிற்பரே எனின்,
மேக்குறு பெருந்திரு விரைவின் மேவுமால். --- கந்தபுராணம்.
இதன் பொருள் ---
ஒருவனுக்கு ஆக்கம் உண்டாகவேண்டுமானால், ஊக்கம் இருக்கவேண்டும். ஊக்கத்தைக் கொள்கைப் பிடிப்பாகக் கொண்டுள்ளவர் இடத்தில், மேன்மை பொருந்திய திருமகள் விரைந்து வந்து சேர்வாள்.
கொடி உளாளோ? தனிக் குடை உளாளோ? குலப்
படி உளாளோ? கடல் படை உளாளோ? பகர்
மடி இலா அரசன் மார்பினில் உளாளோ? வளர்
முடி உளாளோ? தெரிந்து உணர்கிலாம், முளரியாள்.
--- கம்பராமாயணம், எதிர்கோள் படலம்.
இதன் பொருள் ---
செந்தாமரை மலரில் வதியும் திருமகள் ஆனவள், புகழ்ந்து கூறப்படுகிற சோம்பல் இல்லாத அரசாட்சி செய்யும் தசரத மன்னனுடைய கொடியில் உள்ளாளோ? ஒப்பற்ற வெண்கொற்றக் குடையிலே இருக்கின்றாளோ? பரம்பரை பரம்பரையாக வருகின்ற அவனது இராச்சியத்தில் இருக்கின்றாளோ? கடல் போன்ற அவன் சேனையிலே இருக்கின்றாளோ? அம் மன்னர் மன்னனின் மார்பிடத்தே இருக்கின்றாளோ? அழகு வளரும் அவன் மணிமகுடத்தில் இருக்கின்றாளோ? திருமகள் இருக்குமிடம் இன்னது எனத் தெளிந்தறியக் கூடவில்லை.
மன்னர்களிடம் திருமகள் வாசம் புரியத்தக்க இவை அனைத்திலும் ஏதோ ஓரிடத்தில் வசிப்பது அவள் வழக்கம். தரசதன் ஆட்சியில் அவள் அனைத்திலும் உள்ளாள் என்றவாறு.
No comments:
Post a Comment