“பூவாது காய்க்கு மரமும் உள, நன்றுஅறிவார்
மூவாது மூத்தவர், நூல்வல்லார் - தாவா
விதையாமை நாறுவ வித்து உள, மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு.” -- சிறுபஞ்சமூலம்.
பூக்காமலே காய்க்கின்ற மரங்களும் உண்டு. இவை போல, நன்மையை அறிபவர், ஆண்டுகளால் மூவாத இளையவர்களாயினும் அறிவினால் மூத்தவரோடு ஒப்பர். நூல்களைக் கற்று வல்லவர் அத்தன்மையரே ஆவார். பறவை எச்சம் முதலியவற்றால் கெடாது இருக்க, விதைக்காமலே முளைப்பனவாகிய விதையும் உண்டு. இதைப் போலவே, அறிவு உடையவனுக்கு, பிறர் எடுத்து உரைக்காமலே அறிவானது தோன்றும்.
முதியோரைப் பெருந்தன்மை உடையவர் என்றும், இளைஞரைச் சிறுதன்மை உடையவர் என்றும் கூறுவது உலக இயற்கை. சில இளைஞர் நன்மையுணர்ச்சி நூலுணர்ச்சி முதலியவற்றால் பெரியாருக்கு உரிய தன்மைமையை அடைதலும் கூடும். சிலர் இளமையிலே அறிவால் பெருந்தன்மை அடைகின்றதும் உண்டு.
No comments:
Post a Comment