திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 62 -- ஆள்வினை உடைமை
இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "பயனைத் தருவதாகிய விதி இல்லாமை ஒருவருக்கும் பழி ஆகாது; செய்யவேண்டுவனவற்றை அறிந்து, செயலில் முயற்சி இல்லாமல் இருத்தலே பழி ஆகும்" என்கின்றார் நாயனார்.
ஒருவன் விடாமுயற்சியோடு இருக்கவேண்டும். விடாமுயற்சியோடு தொழிலைச் செய்யும்போது, அது முடியவில்லையாயினும், பாப்ப்பவர்கள் "இவன் முயற்சியைச் சரியாகத்தான் செய்தான், அவனுடைய வினைப்பயன் இவ்வாறு முடிந்தது" என்று வருந்துவார்களே ஒழிய, பழிக்கமாட்டார்கள். முயற்சி இல்லாமல் சோம்பி இருப்பவனையே பழிப்பார்கள்.
இதற்குத் திருக்குறள்...
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று, அறிவு அறிந்து
ஆள்வினை இன்மை பழி.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
பொறி இன்மை யார்க்கும் பழியன்று - பயனைத் தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது;
அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி --- அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது.
(அறிய வேண்டுவன - வலி முதலாயின. 'தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை', என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாது முயல்க என்பது குறிப்பெச்சம்.)
பின்வரும் பாடல், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதைக் காண்க...
வீங்குதோட் செம்பியன்சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால், - ஆங்கு
முடியும் திறத்தால் முயல்க,தாம் கூர்அம்பு
அடியிழுப்பின் இல்லை யரண். --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
வீங்கு தோள் செம்பியன் சீற்றம் --- பருத்ததோளை உடைய சோழனது சினம், விறல் விசும்பில் தூங்கும் எயிலும் தொலைத்தலால் --- மிக்க ஆகாயத்தின்கண்ணே அசைந்து கொண்டிருந்த அசுரர்களது ஊரினைத் தேவர்கள் பொருட்டுத் தொலைவித்தலால், முடியும் திறத்தால் முயல்க --- எவ்வளவு முடியுமோ முடியும் வழியால் முயற்சி செய்க. கூர் அம்பு அடி இழுப்பின் இல்லை அரண் --- கூரிய அம்பு அடியானது பொருந்த மிக விரைவாகத் தொடுப்பின் அதனைத் தடுத்தற்குரிய கவசம் இல்லையாதலால்.
நம்மால் முடிந்த அளவும் முயற்சி செய்தால் முடியாத காரியம் ஒன்றில்லையாம்.
செம்பியன் ஆகாயத்தின்கண் இருந்த அசுரர்களது ஊரினைத் தேவர்கள் பொருட்டு அழித்தான். இதுபற்றியே இவன் தூங்கெயி லெறிந்த தொடித்தோள் செம்பியன் எனப்பட்டான். அம்பினை வலிவாகத் தொடுப்பின் கவசமும் பிளந்துபோதல் போல, முடிந்த அளவு முயற்சிசெய்தால் பயன் அடையலாம் என்பது. இதற்குப் போதிய சான்று சோழனேயாவான்.
No comments:
Post a Comment