062. ஆள்வினை உடைமை --- 09. தெய்வத்தான்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 62 -- ஆள்வினை உடைமை


இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "முயன்று செய்த தொழிலானது, ஊழ் வகையால், கருதிய பயனைத் தரவில்லையானாலும், முயற்சியானது, உடல் உழைப்பிற்கு ஏற்ற கூலியையாவது கொடுக்கும்" என்கின்றார் நாயனார்.

தெய்வம் நோக்கிச் செய்கின்ற செயலானது, ஊழ்வலி. அந்த ஊழானது நல்வினைப் பயனாக இருக்குமாயின், எண்ணிய அளவிற்கு மேலான பயனையே கொடுத்துவிடும். தீவினைப் பயனாக அமையுமாயின், எண்ணிய பயனைத் தரவில்லையானாலும், முயற்சிக்குத் தக்க பயனையாவது தரும்.

விதியை எண்ணி இராமல், விதித்த செயலை முயற்சியோடு முடிக்கக் கருதவேண்டும்.


இதற்குத் திருக்குறள்...

தெய்வத்தான் ஆகாது எனினும், முயற்சி தன்

மெய்வருத்தக் கூலி தரும்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

தெய்வத்தான் ஆகாது எனினும் --- முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்; 

முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் --- முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலிஅளவு தரும்; பாழாகாது.

(தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும் என்பது உம்மையால் பெற்றாம். இருவழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் புகழ்த்துணை நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


வற்கடம்வந்து ஊண்போய்மெய் வாடியபு கழ்த்துணைகை

நற்கலசம் வீழஅர னார்கொடுத்தார் - பொற்காசு

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.


இதன் பொருள் ---


செருவிலிபுத்தூரிலே புகழ்த்துணை நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் ஆதிசைவ குலத்தினர். சிவாகம விதிப்படி பரமசிவனை அருச்சனை செய்துவரும் காலத்திலே பஞ்சம் உண்டாயிற்று. பசிமிகப் பெற்றார். "அருச்சனையை விடுவேன் அல்லேன்" என மன உறுதி பூண்டார். அல்லும் பகலும் அருச்சித்தார். ஒருநாள் அவர் திருமஞ்சனம் ஆட்டும்பொழுது மிகுந்த பசிநோயால் கை சோர, கலசம் திருமுடிமேல் விழுந்தது. அவரும் திருவடியிலே விழுந்து சோர்ந்து கிடந்தார். திருவருளினாலே உறக்கம் வந்தது. சிவபெருமான் அவருடைய கனவிலே தோன்றி, "பஞ்சம் நீங்கும் வரைக்கும் உனக்குத் தினம் தோறும் இங்கே ஒவ்வொரு காசு வைப்போம்" என்று அருளிச் செய்தார். விழித்தெழுந்த நாயனார் பீடத்தின்கீழ் ஒரு பொற்காசு இருக்கக் கண்டார். அதனைத் திருவருளாணை எனத் தேர்ந்து எடுத்து வாழ்ந்தார்.  நாளும் ஒரு காசு பெற்றார்.  பஞ்சம் நீங்கிய பின்னரும் நெடுங்காலம் மெய்யடிமைத் தொழில் செய்து சிவபெருமான் திருவடிநீழலை அடைந்தார்.


முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும், முயற்சி தனக்கு இடமாகிய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியளவு தரும், பாழாகாது என்று அருளினார் திருவள்ளுவ நாயனார். தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும் என்பது கருத்து.


அகத்து அடிமை செய்யும் அந்தணன்தான்

அரிசிற்புனல் கொண்டுவந்து ஆட்டுகின்றான்

மிகத்தளர்வு எய்திக் குடத்தையும் நும்

முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்

வகுத்து அவனுக்கு நித்தல் படியும்

வரும்என்றுஒரு காசினை நின்றநன்றிப்

புகழ்த்துணை கைப்புகச் செய்துஉகந்தீர்

பொழில்ஆர்திருப் புத்தூர்ப் புனிதனீரே.


எனவரும் நம்பியாரூர் திருப்பாட்டினை எண்ணுக.


ஊழ்வகையால் வந்த பஞ்சத்தை நோக்கி, சிவார்ச்சனையை விடாமல் நாயனார் செய்தார். தெய்வ அருள் உண்டானமையால், முயற்சிக்கு மீறிய நற்பலனைத் தந்தது.


No comments:

062. ஆள்வினை உடைமை - 10 ஊழையும் உப்பக்கம்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 62 -- ஆள்வினை உடைமை  இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "பயனை விலக்குவதாகிய ஊழ...