அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அஞ்சன வேல்விழி (தஞ்சை)
முருகா!
திருவருள் புரிவாய்
தந்தன தானன ...... தனதான
அஞ்சன வேல்விழி ...... மடமாதர்
அங்கவர் மாயையி ...... லலைவேனோ
விஞ்சுறு மாவுன ...... தடிசேர
விம்பம தாயரு ...... ளருளாதோ
நஞ்சமு தாவுணு ...... மரனார்தம்
நல்கும ராவுமை ...... யருள்பாலா
தஞ்சென வாமடி ...... யவர்வாழத்
தஞ்சையில் மேவிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அஞ்சன வேல்விழி ...... மடமாதர்
அங்கு அவர் மாயையில் ...... அலைவேனோ?
விஞ்சுறு மா உனது ...... அடிசேர
விம்பம் அதாய்அருள் ...... அருளாதோ?
நஞ்சு அமுதா உணும் ...... அரனார் தம்
நல் குமரா! உமை ...... அருள்பாலா
தஞ்சு என ஆம்அடி- ...... யவர்வாழத்
தஞ்சையில் மேவிய ...... பெருமாளே!
பதவுரை
நஞ்சு அமுதா உணும் அரனார் தம் நல் குமரா --- பாற்கடலில் தோன்றிய விடத்தை அமுதமாக உண்டருளிய சிவபெருமானுடைய திருமகனே!
உமை அருள் பாலா --- உமாதேவி பெற்றருளிய பாலகரே!
தஞ்சு என ஆம் அடியவர் வாழ --- உமது திருவடியையே அடைக்கலமாகக் கருதி வாழுகின்ற அடியவர்கள் பெருவாழ்வினைப் பெறும்பொருட்டு,
தஞ்சையில் மேவிய பெருமாளே --- தஞ்சையில் எழுந்தருளி இருக்கும் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
அஞ்சன வேல் விழி மட மாதர் --- மை தீட்டிய, வேலைப் போன்ற கண்களை உடைய அழகிய விலைமாதர்கள்,
அங்கு அவர் மாயையில் அலைவேனோ --- அவர்கள் வசப்பட்டு, அறிவு மயக்கத்தில் அடியேன் அலையலாமா?
விஞ்சுறுமா உனது அடி சேர --- மேம்பட்டு விளங்கும் உமது திருவடிகளைச் சேர்ந்து அடியேன் இன்புற,
விம்பம் அதாய் அருள் அருளாதோ --- விக்கிரக வடிவில் எழுந்தருளி உள்ள உமது திருவருள் வெளிப்படாதோ?
பொழிப்புரை
பாற்கடலில் தோன்றிய விடத்தை அமுதமாக உண்டருளிய சிவபெருமானுடைய திருமகனே!
உமாதேவி பெற்றருளிய பாலகரே!
உமது திருவடியையே அடைக்கலமாகக் கருதி வாழுகின்ற அடியவர்கள் பெருவாழ்வினைப் பெறும்பொருட்டு,
தஞ்சையில் எழுந்தருளி இருக்கும் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
மை தீட்டிய, வேலைப் போன்ற கண்களை உடையவர் அழகிய விலைமாதர்கள். அவர்கள் வசப்பட்டு, அறிவு மயக்கத்தில் அடியேன் அலையலாமா? மேம்பட்டு விளங்கும் உமது திருவடிகளைச் சேர்ந்து அடியேன் இன்புற, விக்கிரக வடிவில் எழுந்தருளி உள்ள உமது திருவருள் வெளிப்படாதோ?
விரிவுரை
விம்பம் அதாய் அருள் அருளாதோ ---
விம்பம் --- விக்கிரகம்.
திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனி. அவைகள், கும்பம், விம்பம் தம்பம் என மூவகைப்படும். கும்பம் --- குடம் அல்லது கலசம். விம்பம் --- விக்கிரகம். தம்பம் --- இலிங்கம் முதலாயின, இவ்வகைகளில் வைத்து வழிபடும் அடியவர்கட்கு, அவரது அன்பு நோக்கி அவ்விடங்களில் தோன்றி நின்று அருள் புரிபவன் இறைவன். அவ்விடங்களில் அவரவர் வழிபடும் இயல்பு நோக்கியும் அருள் புரிவான்.
இதனை, "தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி" என்றும், "தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி" என்றும் அப்பர் பெருமான் அருளிச் செய்தார்.
தஞ்சையில் மேவிய பெருமாளே ---
தஞ்சகன் ஆண்ட ஊராதலின் தஞ்சகனூர் என்பது மருவி தஞ்சாவூர் என்றாயிற்று என்பது வரலாறு. தஞ்சை என்றும் வழங்கப்படுகின்றது.
தஞ்சையில் உள்ள பிரகதீசுவரர் - பெருவுடையார் கோயிலே இராசராசேச்சரம் என்பதாகும். முதலாம் இராசராச சோழனால் கட்டப்பட்டதாதலின் இராசராசேச்சரம் எனப்பட்டது.
முதலாம் இராசராசன் கோயிலைக் கட்டி, சிவலிங்க பிரதிட்டை செய்த காலத்து, ஆவுடையாருடன் மூர்த்தியைச் சேர்த்து அட்டபந்தன மருந்து சார்த்தியபோது அம்மருந்து கெட்டியாகாமல் இளகிய நிலையிலேயே இருக்கக்கண்ட மன்னவன் வருத்தமுற்றான். அதறிந்த போகமுனிவர் மன்னனுக்குச் செய்தியனுப்ப, அதன்படி கருவூர்த்தேவரைத் தஞ்சைக்கு அழைத்து வந்தான். கருவூர்த்தேவர் தஞ்சை வந்து கோயிலுக்குள் சென்று தம்வாயிலுள்ள தாம்பூலத்தை மருந்தாக உமிழ்ந்து கெட்டியாக்கினார் என்பது வரலாறு.
கருவூர்த் தேவர் பாடிய திருவிசைப்பா பாடி அருளிய திருத்தலம்.
கருத்துரை
முருகா! திருவருள் புரிவாய்
No comments:
Post a Comment