பொறுத்தவர் பூமி ஆள்வார்
பொங்கினவர் காடு ஆள்வார்
-----
திருக்குறளில் "பொறை உடைமை" என்னும் அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறள், "தமக்குத் தீமை செய்தவனைத் தண்டித்தவர்க்கு ஒரு நாள் இன்பமே உண்டு; அந்தத் தீமையைப் பொறுத்துக் கொண்டவர்க்கு, இந்த உலகம் அழியும் அளவும் புகழ் நிலைத்து இருக்கும்" என்கின்றது.
உடனே தண்டித்தலால் வரும் இன்பமானது, தீமை புரிந்த உடனே தண்டித்து விட்டோம் என்னும் செருக்கால் வரும் இன்பம் ஆகும். அது, அந்த ஒரு நாள் மட்டுமே நிலைத்து இருக்கும் பொய்யான இன்பம்.
யாதொரு காரணம் பற்றியோ, அறிவு இன்மையாலோ பிறர் தமக்குச் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்வதோடு, அவ்வாறான செயல்களை அவர்க்குத் திருப்பிச் செய்யாது விடுத்தல் "பொறை உடைமை" ஆகும். எனவே, அறியாமை காரணமாகத் தமக்கு ஒருவர் தீங்கு இழைத்தார் என்று கருதி, அதைனப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும் என்பது கருத்து.
"ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம், பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்".
என்பது நாயனார் அருளிய திருக்குறள்.
இத் இருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தர் ஆகிய மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
ஓட்டலன்செய் தீமைக்கு ஒறாது,நமர் என்றுஉரைத்தார்
சுட்டியசீர் மெய்ப்பொருளார், சோமேசா! - முட்ட
ஓறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கு
பொன்றுந் துணையும் புகழ்.
இதன் பொருள் ---
சோமேசா! முட்ட --- மிகுதியாக, ஒறுத்தார்க்கு --- (தமக்குத் தீங்கு செய்தவனை) வருத்தினவர்கட்கு, ஒருநாளை இன்பம் --- (உண்டாவது) அந்த ஒரு நாளை இன்பமே ஆகும், பொறுத்தார்க்கு --- (அதனைப்) பொறுத்தார்க்கு, பொன்றும் துணையும் புகழ் --- உலகம் அழியும் அளவும் புகழ் உண்டாம்,
சுட்டிய சீர் --- சுட்டிக் கூறப்படும் சிறப்பு உடைய, மெய்ப்பொருளார் --- மெய்ப்பொருள் நாயனார், செய் தீமைக்கு --- (தமது பகைவனான முத்தநாதன்) செய்த தீங்கிற்கு, ஒறாது --- (அவனை) வருத்தாது, நமர் என்று உரைத்தார் --- (சிவவேடம் உடையராய் இருத்தலின் "தத்தா அவர்) நம்மவர்" என்று கூறினார் ஆகலான்.
ஒருநாளை இன்பம் --- அந்நாள் ஒன்றிலேயே கருதியது முடித்து விட்டோம் என்னும் செருக்கினால் உண்டாகும் பொய்யின்பம்.
"வெறுப்ப ஒருவன் காரணத்தால்
மிக்க மடத்தால் புனைபிழையைப்
பொறுப்பின் அதுவே பேர்அறமாம்,
புகழும் நிறையும் மிகவளரும்,
கறுப்புஒன்று அறியா அறிவினர்கள்
கருத்தின் மகிழ்ச்சி உளவாகும்
ஒறுப்பின் வருவது ஒன்றுஇல்லை
அதனால் பொறுமை உயிர்த்துணை ஆம்".
என்று விநாயக புராணம் கூறும்.
சேதி நாட்டில் திருக்கோவலூரில் மலையாளிகளுக்கு மன்னராய் அரசு புரிந்த மெய்ப்பொருள் நாயனார் என்பார் சிவனடியார் திருவேடத்தையே மெய்ப்பொருள் எனக் கொண்டு வழிபட்டு வாழும் நாளில், பலமுறையும் அவரை எதிர்த்துப் போர் செய்து தோற்ற முத்தநாதன் என்னும் ஓர் அரசன் வஞ்சனையால் அவரை வெல்லக் கருதி சிவசின்னங்கள் தாங்கி உடைவாளைப் புத்தகக் கவளியின் மறைத்துக் கட்டித் தவவேடத்தோடு அவர் அரண்மனை புகுந்து ஏனைய வாயில்களை எல்லாம் எளிதில் கடந்து சென்று அந்தப்புர வாயில் காப்போனான தத்தன் தடுப்பவும், நாயனார்க்கு ஞானோபதேசம் செய்ய வந்ததாகக் கூறி, உள் சென்று, நாயனார் கட்டிலில் தூங்கவும், அவர் திருத்தேவியார் பக்கத்தில் இருப்பவும் கண்டு, அருகு அணையத் தேவியார் நாயனாரைத் துயில் உணர்த்த, அவர் விரைந்து எழுந்து எதிரே வீழ்ந்து வணங்கினார். பொய் வேடத்தனாகிய முத்தநாதன் தான் ஞானோபதேசம் செய்ய வந்தமையால் தேவியாரும் வேற்றிடம் செல்ல, நாயனாரும் தானுமே அங்கிருக்க வேண்டுமென்ன, நாயனாரும் தேவியாரை வேற்றிடம் செலுத்தி, வஞ்சகனை ஓர் ஆசனத்து இருத்தித் தாம் எதிரில் வணங்கி நிற்ப, அப் பாதகன் புத்தகம் எடுப்பது போல உடைவாளை எடுத்துத் தன் எண்ணம் முடித்தான். நடந்தவற்றை எல்லாம் கருத்தோடு பார்த்திருந்த தத்தன் ஒரு கணப் பொழுதினுள் வந்து தன் வாளை ஓச்ச, பூமியில் வீழ்கின்ற நாயனார், "தத்தா நமர்" என்று தடுத்து வீழ்ந்தார். நாயனார் பணியை மேற்கொண்டு தத்தன் அவனை அழைத்து வெளிச்சென்று அவன் செய்கை அறிந்து அவனைக் கொல்லச் சூழ்ந்தவர்களை எல்லாம் விலக்கி, அந் நகர் எல்லையளவும் உடன் சென்று வழிவிட்டு, மீண்டு வந்து, "சிவனடியாரை இடையூறின்றி நகர்ப்புறத்து விட்டனன்" என்று சொல்லும் வரை உயிர்தாங்கி இருந்த நாயனார், "திருநீற்றன்பு பாதுகாத்து அளிப்பீர்" என்று மந்திரி முதலியவர்க்கு உரைத்துச் சிவனடி நீழல் அடைந்தார். இது பெரியபுராணத்து உள்ளது.
இத், திருக்குறளுக்கு மேலும் விளக்கமாக, பொறுத்தவரே பூமி ஆள்வார், பொங்கினவர் காடு ஆள்வார் என்பதை வலியுறுத்தும், "தண்டலையார் சதக"ப் பாடல்...
கறுத்தவிடம் உண்டு அருளும் தண்டலையார்
வளநாட்டில், கடிய தீயோர்
குறித்து மனையாள் அரையில் துகில் உரிந்து
ஐவர்மனம் கோபித்தாரே,
பறித்து
உரிய பொருள்முழுதும் கவர்ந்தாலும்,
அடித்தாலும், பழி செய்தாலும்,
பொறுத்தவரே
அரசு ஆள்வார், பொங்கினவர்
காடு உறைந்து போவர் தாமே.
இதன் பொருள் ---
கறுத்த விடம் உண்டு அருளும் தண்டலையார் வளநாட்டில் --- கரிய விடத்தினை உண்டு, உலகில் உள்ளோர் யாவருக்கும் அருளிய திருத்தண்டலை நீள்நெறி இறைவர் எழுந்தருளி உள்ள வளம் மிக்க நாட்டிலே, மனையாள் அரையில் துகில் கடிய தீயோர் குறித்து உரிந்தும் --- தங்களுடைய மனைவியான திரௌபதையின் இடையில் இருந்த ஆடையை மிகவும் கொடியரான கவுரவர் அவிழ்த்து அவமானப் படுத்திய காலத்திலும், ஐவர் மனம் கோபித்தாரோ --- பாண்டவர்கள் உள்ளத்திலே கோபம் கொண்டனரோ? உரிய பொருள் முழுதும் பறித்துக் கவர்ந்தாலும் அடித்தாலும் பழி செய்தாலும் --- தமக்கு உரிமையான எல்லாப் பொருளையும் வலிதில் கொண்டாலும், அடித்தாலும், இழிவு செய்தாலும், பொறுத்தவரே அரசு ஆள்வர் --- பொறுத்துக் கொண்டவரே உலகினைப் பின்னர் ஆள்வர், பொங்கினவர் காடு ஆளப் போவர் --- மனம் பொறாமல் சினத்தோடு பொங்கினவர் காட்டை ஆளப் போவர்.
பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதைக் காண்க...
நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால் மற்று அது
தாரித்து இருத்தல் தகுதி, மற்று --- ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்,
சமழ்மையாக் கொண்டு விடும். --- நாலடியார்.
இதன் பொருள் ---
கீழோர் தகாத வார்த்தைகளால் தம்மைத் திட்டினாலும், அதைத் தாங்கிக் கொள்வதே பெரியோருக்கு அழகு ஆகும். அப்படி இல்லாமல், அவர்களும் கீழோர் மீது இழிசொல்லை வீசினால், கடலால் சூழப்பட்ட இந்த உலகம், அத்தகைய பெரியோர் புகழைப் போற்றாமல், அவர்களையும் இழிந்த கீழோராகவே கருதி விடும்.
கறுத்து ஆற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்
பொறுத்து ஆற்றிச் சேறல்புகழால், --- ஒறுத்து ஆற்றின்
வான்ஓங்கு மால்வரை வெற்ப! பயன்இன்றே
தான் நோன்றிட வரும் சால்பு. --- பழமொழி நானூறு.
இதன் பதவுரை ---
வான் ஓங்கும் மால் வரை வெற்ப --- வானளவு உயர்ந்த பெரிய மலைகளை உடைய வெற்பனே!, தான் நோன்றிட வரும் சால்பு --- ஒருவன் பொறுக்கும் பொறையினால் வருவது அவனது குணம், (ஆகையால்) கறுத்து ஆற்றி தம்மை கடிய செய்தாரை --- கோபம் மிகுதியால் தமக்குத் தீய செயல்களைச் செய்தாரை, பொறுத்து ஆற்றி சேறல் புகழால் --- பொறுத்துக் கொண்டு, அவர்க்கு நன்மை செய்து ஒழுகுதல் புகழைத் தருவது ஆகும். ஒறுத்து ஆற்றின் பயன் இன்று --- பதிலுக்குத் தாமும் கோபித்து தீயசெய்கைகளைத் திரும்பச் செய்தால் அதனால் புகழ் உண்டாதல் இல்லை.
அறிவினில் பெரிய நீரார்
அறிந்து அரும் பிழைகள் செய்யார்;
அறிவினில் சிறிய நீரார்
அறிந்து அறியாமையானும்
செறிபிழை இழைப்ப, அவ்வத்
திறத்தினது உண்மை நாடிச்
சிறுமையின் நீங்கினோர்கள்
செயிர்த்து உள வயிரம் கொள்ளார். --- தணிகைப் புராணம்.
இதன் பொருள் ---
அறிவினாலே பெருந்தன்மை உடையராகிய பெரியார் அறிந்து, செய்தற்கு அருமையாகிய பிழைகளைச் செய்யமாட்டார்கள். சிற்றறிவினால் இழிந்த தன்மையினை உடையராகிய சிறியார் அறிந்தும் அறியாமலும் மிகுந்த பிழைகளைச் செய்வார்கள். குற்றங்களினின்றும் நீங்கிய பெரியோர்கள் அக்குற்ற வகைகளின் உண்மைத் தன்மையை (நூல் மறையாலும், அனுபவத்தாலும்) ஆராய்ந்து கோபித்து உள்ளத்தின்கண் கோபம் கொள்ளார்கள்.
No comments:
Post a Comment