மனத்தொடு வாய்மை

 

 

மனத்தொடு வாய்மை

-----

 

     உள்ளத்தில் பொய்மை இல்லாது வாய்மை இருந்தால், தவமும் தானமும் செய்யவேண்டுவது இல்லை.

    

     திருக்குறளில், வாய்மை என்னும் அதிகாரத்தில்  "ஒருவன் தனது மனத்தோடு பொருந்த உண்மையைப் பேசுவானாயின், அவன் தவத்தோடு தானத்தையும் செய்பவரினும் மேலானவன்" என்கின்றார் நாயனார்.

 

     மனத்தோடு பொருந்துதல் என்பது, புறத்தே வேடம் கொண்டு செய்யும் தவத்தினை விட, அகத்தே மனம் வாக்குத் தூய்மைகளால் செய்யும் தவம் ஆகும். அகத் தவமே மேலானது என்றார்.

 

     தவமாவது, மனம் பொறிகளின் வழிப் போகாது நிற்கும் பொருட்டு, விரதங்களால் உணவைச் சுருக்குதல் முதலானதைக் குறிக்கும். இது துறவறத்தார்க்கு உரியது. துறவறம் என்பது, இல்லறத்தைத் துறந்து, "காவி உடுத்தும், தாய்சடை வைத்தும், காடுகள் புக்கும் திரிவது" அல்ல. பற்றற்ற நிலையை துறவு ஆகும். துறத்தல் என்னும் சொல்லை அடியாக வைத்து "துறவு" வந்தது.

 

     தானம் என்பது, அறவழியில் வந்த பொருளைத் தக்கவர்களுக்கு மனம் மகிழ்ந்து கொடுத்தல். இது இல்லறத்தார்க்கு உரியது.

 

 

"மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு

தானம் செய்வாரின் தலை".

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.  

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

மூவர்அரிச் சந்திரற்கு முன்னின்ற காட்சிபோல்

ஏவர் பெற்றார் மேனாள், இரங்கேசா! --- பூவில்

மனத்தொடு வாய்மை மொழியில் தவத்தொடு

தானஞ் செய்வாரில் தலை.

 

இதன் பதவுரை --- 

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! மேனாள் --- முற்காலத்தில், மூவர் --- மும்மூர்த்திகளும், அரிச்சந்திரற்கு முன் --- அரிச்சந்திர மகாராஜனுக்கு எதிரில், நின்ற காட்சிபோல் --- காட்சி கொடுத்தது போல, ஏவர் பெற்றார் --- யார் அடைந்தார்கள்? (ஆகையால், இது) பூவில் --- இந்தப் பூலோகத்தில், மனத்தொடு --- ஒருவன் தன் மனத்தோடு வாக்கும் பொருந்த, வாய்மை மொழியின் --- உண்மை பேசுவான் ஆனால், (அவன்) தவத்தொடு --- தவத்துடனே, தானம் செய்வாரின் தலை --- தானம் செய்பவரைக் காட்டிலும் சிறந்தவனாவான் (என்பதை விளக்குகின்றது).

 

         கருத்துரை --- பொய்யா விரதமே மேலான விரதம்.

 

         விளக்கவுரை --- விசுவாமித்திரர் மாயத்தால், அரிச்சந்திரன் நாடு நகரங்களை இழந்து, மனைவி மக்களை விற்று, தானும் புலையற்கு அடிமையாய் அல்லல் பட்டும், சத்தியம் தவறாமையால், தவத்தொடு தானம் செய்வாரின் தலைவனானான். ஆகையால், கிடத்தற்கரிய காட்சியாகிய திரிமூர்த்தி தரசனம் கிடைக்கப்பெற்றுக் கடைசியாய்த் தன் நாடு நகரங்களை அடைந்து சுகமாய்ப் புகழோடு அரசாண்டான்.

 

     அடுத்து,  இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடி அருளிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

பொங்குபுகழ் வாய்மைப் புனிதவதியார்க்கு அரனார்

செங்கனியை ஈந்தார், சிவசிவா! --- அங்கம்

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானம்செய் வாரில் தலை.

 

     காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவர். நாயன்மார்களில் மூத்தவர். திருக்கயிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் "காரைக்கால் அம்மையார்" என்று வழங்கப் பெறுகிறார்.

 

     முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது காரைக்கால் என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வணிகக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.

 

     பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள், பரமதத்தன் தனது கடையில் இருந்தபோது ஒரு வணிகர் இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கனிகளைப் பெற்ற பரமதத்தன், அதனைத் தன் வீட்டிற்குக் கொடுத்து அனுப்பினான். அவரது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் உணவு வேண்டி வந்தார். அவரை வரவேற்று அமரச் செய்த அம்மையார், மத்திய உணவு தயாராக இல்லாததால் தயிர்கலந்த சோறு படைத்து, அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்குப் பல வகைப் பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.

 

     மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படிக் கேட்டார் பரமதத்தன். அம்மையார் செய்வதறியாது திகைத்துச் சமையல் அறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமான் அருளால் அம்மையார் கையில் ஒரு கனி வந்தது.

 

மற்றுஅதனைக் கொடுவந்து

         மகிழ்ந்து இடலும், அயின்ற அதனில்

உற்றசுவை அமுதினும் மேல்

         பட உளது ஆயிட, "இதுதான்

முன்தரும் மாங்கனி அன்று

         மூவுலகில் பெறற்கு அரிதால்

பெற்றது வேறு எங்கு?" என்று

         பெய்வளையார் தமைக்கேட்டான்.

 

     முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டான். அம்மையார் நடந்ததைக் கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தன் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படிக் கூறினான். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி கிடைத்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தன் அவரைத் தெய்வப் பெண் என்று கருதினார்.

 

ஈசன்அருள் எனக்கேட்ட

     இல்இறைவன் அதுதெளியான்

வாசமலர்த் திருஅனையார்

     தமைநோக்கி மற்றுஇதுதான்

தேசுஉடைய சடைப்பெருமான்

     திருவருளேல் இன்னமும்ஓர்

ஆசுஇல்கனி அவன் அருளால்

     அழைத்து அளிப்பாய் எனமொழிந்தான்.

 

பாங்கு அகன்று மனைவியார்

     பணிஅணிவார் தமைப்பரவி

ஈங்குஇது அளித்து அருளீரேல்

     என்உரைபொய் ஆம்என்ன

மாங்கனி ஒன்று அருளால் வந்து

     எய்துதலும் மற்று அதனை

ஆங்கு அவன்கைக் கொடுத்தலுமே

     அதிசயித்து வாங்கினான்.

 

வணிகனும் தன்கைப் புக்க

         மாங்கனி பின்னைக் காணான்

தணிவரும் பயமேல் கொள்ள

         உள்ளமும் தடுமாறு எய்தி

அணிகுழல் அவரை வேறுஓர்

         அணங்குஎனக் கருதி நீங்கும்

துணிவுகொண்டு எவர்க்குஞ் சொல்லான்

         தொடர்வுஇன்றி ஒழுகும் நாளில்.

 

     உடனுறையத் தனக்குத் தகுதியின்மையால் தான் அவரை விட்டு நீங்கிவிடுதல் வேண்டுமென்னும் முடிவில் அவரை நீங்கத் துணிந்தான். வாணிபம் செய்ய விரும்பும் பண்டங்களும் பொருந்துவனவற்றை நிரம்ப ஏற்றிக்கொண்டு கடலின்மீது பயணமாகச் சென்றார்.

 

     பின்னர் பரமதத்தன் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்தான். சிலகாலம் கழித்து அவளுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரையே வைத்தான். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு, மற்ற வணிகர்கள் மூலம் தெரிய வந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டை நோக்கி புறப்பட்டுப் போனார்கள். பாண்டி நாட்டில் பரமதத்தன் இருக்கும் நகருக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் தங்கி, அம்மையார் வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். தன்னைத் தேடி வந்த மனைவியைக் கண்ட பரமதத்தன் அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்து வணங்கினான். "இவர் தெய்வத்தன்மை உடையவர். அதனால் தான் காலில் விழுந்தேன். நீங்களும் இவரைப் போற்றி வழிபடுங்கள்" என்று கூறினான்.

 

     அதன் பிறகு "கணவருக்காக தாங்கிய உடல் நீங்கி, இறைவரைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடியேனுக்கு நற்பாங்கு பொருந்த அருளவேண்டும்" என்று இறைவனிடம் வேண்டி நின்றார். தாம் வேண்டிய அதனையே பெறுவாராகி உடம்பில் தசையும் அதனை இடமாகக் கொண்டு அடைந்த அழகுகளும் ஆகிய இவை எல்லாவற்றையும் உதறி, அனைவரும் வணங்கும் சிவபூதகண வடிவம் பெற்றார்.

 

     அம்மையார் இறைவனைக் காணத் திருக்கயிலாயம் சென்றார். திருக் கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் சென்றார். திருக் கயிலையில் இறைவனுடன் இடங்கொண்டு அமர்ந்திருந்த உமாதேவியார், தலையால் நடந்துவரும் அம்மையைக் கண்டு "இவர் யார்" எனக் கேட்க "வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண், அம்மையே!" எனக் கூறி "அம்மையே வருக" என்றழைத்து "வேண்டுவன கேள்" என விளித்தார், அதற்கு அம்மையார்,

 

 

இறவாத இன்ப அன்பு

         வேண்டி, பின் வேண்டுகின்றார்,

"பிறவாமை வேண்டும்; மீண்டும்

         பிறப்பு உண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும்; இன்னும்

         வேண்டும் நான் மகிழ்ந்து பாடி

அறவா! நீ ஆடும் போது உன்

         அடியின்கீழ் இருக்க" என்றார்.

 

     சிவபெருமான் திருவுள்ளம் மகிழ்ந்து, அவர் வேண்டும் வரம் கொடுத்து, "திருவாலங்காடு என்னும் திருத்தலத்தில் நாம் புரியும் திருநடனத்தைக் கண்டு மகிழ்ந்து. எப்போதும் நம்மைப் பாடுவாய்" என்று அருள் புரிந்தார்.

 

கூடுமாறு அருள் கொடுத்துக்

         "குலவுதென் திசையில் என்றும்

நீடுவாழ் பழன மூதூர்

         நிலவிய ஆலங் காட்டில்

ஆடுமா நடமும் நீ கண்டு

         ஆனந்தம் சேர்ந்து, எப்போதும்

பாடுவாய் நம்மை" என்றான்

         பரவுவார் பற்றாய் நின்றான்.

 

     காரைக்கால் அம்மையார் புராண உண்மைகளையும், இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பிற செய்திகளையும் மேலும் சிந்திப்போம்....

 

காரைக்கால் அம்மையார் புராண உண்மைகள்

-----

 

     "மண்ணினில் பிறந்தார் பெறும் பயன், மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்" என்னும் தெய்வச் சேக்கிழார் அருள் வாக்கின்படி, மனிதப் பிறவி எடுத்த நாம், நம்மிடத்தில் உள்ளதை இல்லாதவருக்குப் பகிர்ந்து வாழவேண்டும். குறைந்த பட்சம், உண்ணுகின்ற சோற்றில் ஒரு பிடியையாவது பசித்தோர்க்குக் கொடுத்து உண்ணவேண்டும். "பசித்தோர் முகம் பார்" என்றார் பட்டினத்து அடிகள். "கரவாது இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்" என்றார் அருணகிரிநாதர். "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" என்றார் திருமூலநாதர்.

 

     அடியார்கள் வந்தபோது, அவருக்கு உண்ண உணவையும், அவருக்கு வேண்டிய பிற பொருள்களையும் அவரது தகுதிக்கு ஏற்பக் கொடுத்து வந்தார் அம்மையார். அதுவே, பிறவியின் பயன் ஆகும்.

 

     பிறவியின் பயனைத் தருவதான அடியார் பணியைத் திறம்படச் செய்து வந்தால், ஒருவனுக்கு வேண்டியதை எல்லாம் இறையருள் நல்கும் என்பதற்கு, இறையருளால், அம்மையார் மாங்கனியைப் பெற்றதே சான்று.

 

     மனைவியை ஒரு பெண்ணாகவும், தமக்கு வயதில் இளையவளாகவும் மட்டுமே பார்ப்பது கூடாது. மனைவியையும் அவளது தகுதி நோக்கி மதிக்கவேண்டும் என்னும் மாண்பு அம்மையார் வரலாற்றின் மூலம் உணர்த்தப்பட்டது. ஆணாதிக்கம் நமது தமிழ்ச் சமுதாயத்தில் அக்காலத்தில் இல்லை. காரைக்கால் அம்மையாரின் தெய்வத் தன்மையை நோக்கி, அவளது கணவன், அவரை வணங்கியது காண்க.

 

     தனது கணவன், தம்மை வேண்டாதபோது, அவனுக்காகத் தாங்கிய உடல் அழகைத் துறந்தார் அம்மையார். இது மிகவும் உயர்ந்த நிலை. "இனி இவனுக்காகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்து, இங்கு உன்பால் ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப் பாங்கு உற வேண்டும்" என்று அம்மையார் வேண்டினார். கைம்மை நோன்பின் மாண்பு உணர்த்தப்பட்டது.

 

     தனக்காக நிச்சயிக்கப்பட்டவருடன் திருமணம் நிகழவில்லை. அதற்கு முன்பே இறந்து போனார். நிச்சயிக்கப்படவர் இறந்த பின்பு வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை திலகவதியார். "எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனைக் கொடுக்க இசைந்தார்கள். அந்த முறையால் அவர்க்கே உரியது நான்" என்று தமது உயிரையும் போக்கிக் கொள்ள எண்ணியவர், தம்பியின் மேல் கருணை வைத்தார். அந்தக் கருணையானது எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க எண்ணும் அளவுக்கு உயர்ந்தது. "உயிர் தாங்கி, அம்பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி, இம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார்" என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் காட்டும் வாழ்வியல் உண்மை உணர்ந்து போற்றுதற்கு உரியது.

 

     இறைவன், வேண்டும் வரத்தைக் கேள் என்றபோது, காரைக்கால் அம்மையார் முதலில் வேண்டியது, உள்ளத்தில் மிக்கு இருக்க வேண்டிய அன்பு ஒன்றைத் தான். அது கொஞ்சமும் குறைதலும், அழிதலும் இல்லாத அன்பாக அமையவேண்டும் என்பதால், "இறவாத அன்பு" வேண்டினார்.

 

     அடுத்து, பிறவாமையை வேண்டினார். பிறவியின் பயனே பிறவாத பெருநிலையை அடைவதுதான். இந்த ஊத்தை உடம்பையே பெரிதாக மதித்துப் போற்றி வாழுதல் கூடாது.

"செடிகொள் நோய் வடிவு ஒன்று இல்லா ஊத்தையைக் கழிக்கும் வண்ணம் உணர்வு தா, உலக மூர்த்தி" என்று அப்பர் பெருமான் வேண்டினார். 

 

     "வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை, மற்று, அது  வேண்டாமை வேண்ட வரும்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க.

 

     "மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே, கள்ளப் புலக் குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

     பிறவி மீண்டும் வரவும் வரலாம். அது மனிதப் பிறவியாகத் தான் இருக்கும் என்பது உறுதி இல்லை. அது எந்தப் பிறவியாகவும் இருக்கும். இது கருதியே, அப்பர் பெருமான், "புழுவாய்ப் பிறக்கினும், புண்ணியா, உன் அடி என் மனத்தே வழுவாது இருக்க வரம் தரல் வேண்டும்" என்றார். இங்கு அம்மையார், "மீண்டும் பிறப்பு உண்டேல், உன்னை என்றும் மறவாமை வேண்டும்" என்றார். "எது வரினும் வருக. அல்லது எது போகினும் போக. உன் இணையடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும்" என்றார் வள்ளல்பெருமான். நினைப்பும் மறப்பும் பிறவியில் உண்டு. இதனைக் கருதியே நினைப்பும் மறப்பும் மாறி மாறி வருதலை அஞ்சி, "என்றும் மறவாமை வேண்டும்" என்றார்.

 

     "உயிர்தானும் சிவானுபவம் ஒன்றிற்கு உரித்து" என்பது மெய்கண்ட சாத்திரம். இதனைக் கொண்டே, "நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க" என்று வேண்டினார் அம்மையார்.

 

     இறைவன் திருநடனம் புரியும் திருத்தலமாகிய திருவலங்காட்டை, காலால் மிதித்து நடப்பதை அஞ்சி, தலையால் நடந்தார் அம்மையார். அதனால் தலையான பேற்றைப் பெற்றார். அது மட்டும் அல்ல. சைவத்திற்கே தலைமகனாக வந்து அவதரித்த திருஞானசம்பந்தப் பெருமான், திருவாலங்காடு அம்மை திருத்தலையால் நடந்த பதி என்பதற்காக, அதனை மிதிக்க அஞ்சி, திருவாலங்காட்டுக்குள் புகாமலேயே, அருகில் உள்ள வேறு ஓர் ஊரில் தங்கினார் என்பது எண்ணத்தக்கது. இதனால், காரைக்கால் அம்மையார் பெருமை விளங்குவதோடு அன்றி, சேக்கிழார் அருளவாக்கின்படிக்கு, "தீய என்பன கனவிலும் நினையாச் சிந்தைத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டு இயல்பு சொல் வரைத்தோ" என்னும்படி விளங்கும், தொண்டை நாட்டில் விளங்கும் திருவாலங்காடு என்னும் அற்புதத் திருத்தலத்தின் அளப்பரும் பெருமை விளங்கும்.

 

     உண்மை சொல்லி வாழலாம். பொய்யைச் சொல்லி வாழமுடியாது, பொய் சொன்ன வாய்க்குப் போசனம் இல்லை என்பதுதான் உண்மை என்கின்றது "தண்டலையார் சதகம்".

 

கைசொல்லும் பனைகாட்டும் களிற்று உரியார்

         தண்டலையார் காணா போலப்
பொய்சொல்லும் வாய்க்குப் போசனமும்

         கிடையாது, பொருள் நில்லாது,
மைசொல்லும் கார்அளிசூழ் தாழைமலர்

         பொய்சொல்லி வாழ்வது உண்டோ?
மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி

         வாழ்வது இல்லை மெய்மை தானே.         

                                   

 

இதன் பொருள் ---

 

     சொல்லும் பனைகாட்டும் கை களிற்று  உரியார் தண்டலையைக் காணார் போல --- கூறப்படும் பனையைப் போலும் துதிக்கையினை உடைய யானையின் தோலைப் போர்த்தவரான சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தைக் கண்டு வழிபடாதவருக்கு, உணவு கிடைக்காததைப் போல,  பொய் சொல்லும் வாயினர்க்குப் போசனமும் கிடையாது--- பொய் கூறும் வாயார்க்கு உணவும் கிடைக்காது,  பொருள்  நில்லாது --- அவரிடத்திலே உள்ள பொருளும் அழியும், பொருள் அவரிடத்தில் வந்து சேராது, மை சொல்லும் கார் அளி சூழ் தாழை மலர் பொய் சொல்லி வாழ்ந்தது உண்டோ --- மேகம் சூழ்ந்ததைப் போலக் கரிய வண்டினத்தால் சூழப்பட்ட தாழை மலர் பொய் சொல்லி வாழ்வு  பெற்றதா?  (இல்லை. ஆகையால்) மெய் சொல்லி வாழாதான் பொய் சொல்லி வாழ்வது  இல்லை --- உண்மையைப் பேசி வாழாதவன் பொய் சொல்லி வாழப் போவது இல்லை,  மெய்ம்மை தான் --- இது உண்மையே ஆகும்.

 

     திருமாலும் பிரமனும் தம்முள் பிணங்கித் தாமே பரம்பொருள் என்று செருக்குக் கொண்ட போது, சிவபெருமான் கொண்டருளிய ஒளிமலை வடிவத்தின் அடியைத் திருமாலும் முடியை  நான்முகனும் காணச் சென்றனர்.  தான் கொண்ட அன்னப் பறவை வடிவத்தைக் கொண்டு மேலும் பறந்து செல்ல முடியாமல் சோர்வுற்று நின்ற பிரமன், சிவபிரான் முடியினின்றும் விழுகின்ற தாழை மலரைக் கண்டான். அது  சிவபிரான் முடியைப் பிரமன் கண்டதாக அவன் வேண்டுகோளின்படி சிவபிரானிடம் பொய்ச் சான்று கூறியது.

பொய் சென்னதால், மணம் நிறைந்த தாழம்பூவானது சிவபெருமானுக்கு ஏற்புடையதாகக் கொள்ளப்படவில்லை. தாழம் பூவானது பொய் சொல்லி, வாழ்வு இழந்தது.

 

     பிரமதேவன் பொய் சொன்னான் என்பதை, திருமூலர் திருமந்திரம் உறுதி செய்கின்றது.

 

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்

படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி

அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல

முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே.

 

     அடிமுடி காணும் பொருட்டு மாலும் அயனும் முயன்றனர். முயன்று இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய்த் தோன்றினர். இழிவாகும் கருவிலங்கு --- பன்றி. பறவை - அன்னம்.

 

     கருமை - மயக்கும் மாயையின் அறியாமை நிறம். வெண்மை - இயக்கும் மாயையின் அறிவின் நிறம்.

 

      பன்றி உருவெடுத்த அச்சுதனாகிய திருமால் அடிதேடப் போனான். அன்னப் பறவை உரு எடுத்த அயன் முடிதேடப் போனான். இருவரும் ஆற்றலழிந்து துன்புற்றுத் தேடமுடியாது வாடி நிலத்தே மீண்டனர். அச்சுதன் அடிகண்டிலேன் என உண்மைய்ச் சொன்னான். ஆனால், பிரமதேவனோ, முடிகண்டுள்ளேன் என்று படுபொய் உரைத்து குற்றப்பட்டான். நன்றியில் செல்வரினும் கன்றிய புல்லறிவாளர் பொய்ம் மொழிக்கு அஞ்சாதவர்தவ.

 

     மனிதனுக்கு வாய் வாய்த்தது இறைவனை வாழ்த்தவும், உண்மையே பேசவுமே. "வாயே வாழ்த்து கண்டாய், மதயானை உரி போர்த்துப் பேய் வாழ் காட்டு அகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய்" என்றார் அப்பர் பெருமான். "எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்று இருக்கும் வெறுவாய்" என்றார் வள்ளல் பெருமான்.

 

     எனவே, வாயால், உண்மையைப் பேசவேண்டும். இறைவனை வாழ்த்தவேண்டும்.

 

     உண்மையைப் பேசுகின்ற ஒருவரிடம் நன்மைகள் யாவும் ஒளி பெற்று விளங்கும். உலகத்தவர் அவர்களை மேலோர் என்று புகழ்ந்து ஏற்றுக் கொள்ளுவர். அவர்கள் மனிதரில் தேவர்கள் போல விளங்குவார்கள். (தவத்தைப் புரிந்தும், தானத்தைச் செய்தும் பெறுகின்ற உயர் நிலையை, அவர்கள் உண்மை பேசுவதால் அடைவார்கள்) பொய்யைச் சொல்வார்களானால், அவர்க்கு உண்ண உணவு கிடைக்காது. அறிவுடைய மக்கள் அந்தப் பொய்யர்களை அற்பர் என்று மதித்து, தமது கண்களால் ஏறிட்டுப் பார்க்கவும் மாட்டார்கள்.

 

மெய்அதைச் சொல்வார் ஆகில்

     விளங்கிடும் மேலாம் நன்மை,

வையகம் அதனைக் கொள்ளும்,

     மனிதரில் தேவர் ஆவார்,

பொய்அதைச் சொல்வார் ஆகில்,

     போசனம் அற்பம் ஆகும்,

நொய்யர் இவர்கள் என்று

     நோக்கிடார் அறிவு உள்ளோரே.

 

என வரும் "விவேக சிந்தாமணி"ப் பாடல் கருத்தையும் நோக்குக.

 

     மனத்தொடு வாய்மையுடன், தமக்கு உற்ற உழவாரப் பணியைச் செய்து வந்தார் அப்பர் பெருமான் என்பதை, தெய்வச் சேக்கிழார் பெருமான் பின்வரும் பாடலால் காட்டுகின்றார்.

 

மையல் துறைஏறி மகிழ்ந்து அலர்சீர்

         வாகீசர் "மனத்தொடு வாய்மையுடன்

மெய் உற்ற திருப்பணி செய்பவராய்"

         விரவும் சிவசின்னம் விளங்கிடவே

எய்துற்ற தியானம் அறா உணர்வும்

         ஈறுஇன்றி எழும் திருவாசகமும்

கையில்திகழும் உழவாரமுடன்

         கைக்கொண்டு கலந்து கசிந்தனரே.     

 

இதன் பொருள் ---

 

     மயக்கத்தைத் தரும் சமண் சமயத் துறையினின்றும் மேல் ஏறி மகிழும் சிறப்புடைய திருநாவுக்கரசர், உள்ளத்தாலும் சொல்லாலும் உடலாலும் பொருந்திய சிவப்பணியைச் செய்பவராய், அதற்கு ஏற்றவாறு பொருந்தும் சிவச் சின்னங்களான திருநீற்றையும் கண்டிகையையும் விளங்கப் பூண்டு, இடையீடு இல்லாது உள்ளத்தில் தோய்ந்து நிற்கும் திருவருள் உணர்வையும், தடைப்படாது மேன்மேலும் எழும் திருப்பதிகங்கள் பொருந்திய திருவாக்கையும், கையில் விளங்கும் உழவாரப் படையினையும் கொண்டவராய்த் தம் கைத்தொண்டை மனம் கலந்து கசிந்து செய்து வந்தார்.

 

         மனத்தொடு வாய்மையுடன் மெய்யுற்ற திருப்பணி --- மனம், மொழி, மெய் ஆகிய முக்கருவிகளாலும் செயத்தக்க திருப் பணி.

 

     மனத்தொடு பொருந்திய பணி --- தியானம் அறாத உணர்வு.

 

     மொழியொடு பொருந்திய திருப்பணி --- ஈறின்றி எழும் திருவாசகம்.

 

     மெய்யொடுபட்ட திருப்பணி --- சிவச் சின்னம் விளங்கிட உழவாரப் பணி செய்தமை.

 

     "மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம் செய்வாரின் தலை" என்னும் திருக்குறளை நினைவு கூர்க.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...