தஞ்சாவூர் --- 0892. அம்புராசியில்

 

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

அம்பு ராசியில் (தஞ்சை)

 

முருகா!

உண்மைப் பொருளை உபதேசித்து அருள்வாய்

 

 

தந்த தானனத் தந்த தானனத்

     தந்த தானனத் ...... தனதான

 

 

அம்பு ராசியிற் கெண்டை சேலொளித்

     தஞ்ச வேமணிக் ...... குழைவீசும்

 

அங்க ணாரிடத் தின்ப சாகரத்

     தங்கி மூழ்குமிச் ...... சையினாலே

 

எம்பி ரானுனைச் சிந்தி யாதொழித்

     திந்த்ர சாலஇப் ...... ப்ரமைதீர

 

இங்கு வாவெனப் பண்பி னாலழைத்

     தெங்கு மானமெய்ப் ...... பொருள்தாராய்

 

கொம்பு போலிடைத் தொண்டை போலிதழ்க்

     கொண்டல் போல்குழற் ...... கனமேருக்

 

குன்று போல்முலைப் பைங்கி ராதியைக்

     கொண்ட கோலசற் ...... குணவேலா

 

சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச்

     சம்பு போதகக் ...... குருநாதா

 

சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்

     தஞ்சை மாநகர்ப் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

அம்பு ராசியில் கெண்டை சேல்ஒளித்து

     அஞ்சவே, மணிக் ...... குழைவீசும்

 

அம் கணார் இடத்து இன்ப சாகரத்து

     அங்கி மூழ்கும்இச்- ...... சையினாலே,

 

எம் பிரான் உனைச் சிந்தியாது ஒழித்த,

     இந்த்ர சால இப் ...... ப்ரமை தீர,

 

இங்கு வா எனப் பண்பினால் அழைத்து

     எங்கும் ஆன மெய்ப் ...... பொருள்தாராய்.

 

கொம்பு போல்இடை, தொண்டை போல்இதழ்,

     கொண்டல் போல்குழல், ...... கனமேருக்

 

குன்று போல்முலை, பைங் கிராதியைக்

     கொண்ட கோல! சற்- ...... குணவேலா!

 

சம்பராரியைக் கொன்ற தீ விழிச்

     சம்பு போதகக் ...... குருநாதா!

 

சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்

     தஞ்சை மாநகர்ப் ...... பெருமாளே.

 

பதவுரை

 

      கொம்பு போல் இடை --- கொம்பு போன்ற மெல்லிய இடையும்,

 

     தொண்டை போல் இதழ் --- கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயிதழும்,

 

     கொண்டல் போல் குழல் --- மேகம் போன்ற கருங்கூந்தலும்,

 

      கனமேருக் குன்று போல் முலை --- பருத்த மேரு மலையைப் போன்ற முலைகளும்,

 

     பைங் கிராதியைக் கொண்ட கோல --- அழகிய வேட்டுவப் பெண் ஆகிய வள்ளிநாயகியை ஆட்கொண்டு மணம் கொண்ட அழகரே!

 

     சற்குண வேலா --- நற்குணங்களுக்கு இடமாக உள்ள வேலாயுதரே!

 

      சம்பராரியைக் கொன்ற தீ விழிச் சம்பு --- மன்மதனை எரித்து அழித்த தீவிழியை உடைய சிவபரம்பொருளுக்கு

 

     போதகக் குருநாதா --- உபதேசம் புரிந்த குருநாதரே!

 

      சண்ட கோபுரச் செம்பொன் மாளிகை --- வலிமை வாய்ந்த கோபுரமும், அழகிய மாளிகைகளும் பொருந்திய

 

     தஞ்சை மாநகர்ப் பெருமாளே --- தஞ்சை மாநகரில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

      அம்பு ராசியில் கெண்டை சேல் ஒளித்து அஞ்சவே --- கடலில் வாழும் கெண்டை மீன்களும், சேல் மீன்களும் அஞ்சி ஒளிக்குமாறு,

 

     மணிக் குழைவீசும் அம் கணார் இடத்து --- இரத்தினக் குண்டலங்கள் உள்ள காது அளவு ஓடிய அழகிய கண்களை உடைய மாதர்களின் கூட்டுறவால் உண்டாகும்,

 

      இன்ப சாகரத்து அங்கி மூழ்கும் இச்சையினாலே --- கடல் போன்ற இன்பமாகிய நெருப்பில் முழுகும் பெருவிருப்பால்,

 

      எம்பிரான் --- எம்பிரானே!

 

     உனைச் சிந்தியாது ஒழித்த இந்த்ரசால --- தேவரீரைச் சிந்தியாது என்னை விலக்கிய கண்கட்டு வித்தையைப் போன்,

 

      இப் ப்ரமை தீர --- இந்த எனது அறிவு மயக்கம் தீருமாறு

 

     இங்கு வா எனப் பண்பினால் அழைத்து ---  "இங்கே வா" என்று ஆட்கொள்ளும் முறையில் அழைத்து,

 

      எங்கும் ஆன மெய்ப்பொருள் தாராய் --- எங்கும் நிறைந்துள்ள உண்மைப் பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும்.

 

பொழிப்புரை

 

     கொம்பு போன்ற மெல்லிய இடையும், கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயிதழும், மேகம் போன்ற கருங்கூந்தலும், பருத்த மேரு மலையைப் போன்ற முலைகளும் கொண்டவளாகிய அழகிய வேட்டுவப் பெண் ஆகிய வள்ளிநாயகியை ஆட்கொண்டு மணம் கொண்ட அழகரே!

 

     நற்குணங்களுக்கு இடமாக உள்ள வேலாயுதரே!

 

         மன்மதனை எரித்து அழித்த தீவிழியை உடைய சிவபரம்பொருளுக்கு உபதேசம் புரிந்த குருநாதரே!

 

         வலிமை வாய்ந்த கோபுரமும், அழகிய மாளிகைகளும் பொருந்திய தஞ்சை மாநகரில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

     கடலில் வாழும் கெண்டை மீன்களும், சேல் மீன்களும் அஞ்சி ஒளிக்குமாறு, இரத்தினக் குண்டலங்கள் உள்ள காது அளவு ஓடிய அழகிய கண்களை உடைய மாதர்களின் கூட்டுறவால் உண்டாகும், கடல் போன்ற இன்பமாகிய நெருப்பில் முழுகும் பெருவிருப்பால், எம்பிரானே! தேவரீரைச் சிந்தியாது என்னை விலக்கிய கண்கட்டு வித்தையைப் போன், இந்த எனது அறிவு மயக்கம் தீருமாறு "இங்கே வா" என்று ஆட்கொள்ளும் முறையில் அழைத்து, எங்கும் நிறைந்துள்ள உண்மைப் பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும்.

 

விரிவுரை

 

அம்பு ராசியில் ஒளித்த கெண்டை சேல் ஒளித்து அஞ்சவே ---

 

அம்பு --- நீர். அம்புராசி --- நீர் நிறைந்துள்ள கடல்.

 

கடல் நீரில் கெண்டை மீன்களும், சேல் மீன்களும் இங்கும் அங்குமாக ஓடி ஒளித்தவாறு இருப்பன.

 

மணிக் குழைவீசும் அம் கணார் இடத்து ---

 

மணிக் குழை --- இரத்தினக் குண்டலங்கள்.

 

இரதன்னிக் குண்டலங்களை அணிந்துள்ள காதுகளைக் குறித்தது.

அம் கண் --- அழகிய கண்.

 

இன்ப சாகரத்து அங்கி மூழ்கும் இச்சையினாலே ---

 

சாகரம் --- கடல். இன்ப சாகரம் --- இன்பக் கடல்.

 

இன்ப சாகரத்து அங்கி என்றார். இன்பசாகரம் போன்று தோன்றுகின்ற பெருநெருப்பு.

 

விலைமாதர் தரும் இன்பமானது கடல் அளவு பெரிதாகத் தோன்றும். ஆனால், அது பெருநெருப்பு என்பதை அறியாமல் காமுகர் அதிலேயே மூழ்கி இருப்பார்கள்.

 

உனைச் சிந்தியாது ஒழித்த இந்த்ரசால ---

 

இந்திரசாலம் --- மாய வித்தை. கண்கட்டு வித்தை. ஏய்ப்பு.

 

வடமொழியில் "ஞாலம்" என்னும் சொல் வலை என்னும் பொருள்படுவது. எனவே, 'இந்திரன் விரித்த வலை' அல்லது 'இந்திரன் செய்த தந்திரங்கள்' என்னும் பொருள்பட, "இந்திரசாலம்" என வந்தது. இந்திரன் தனக்கு மாறான அரக்கர்களை அழிக்கும் பொருட்டுச் செய்த உபாயங்கள் இவ்வாறு கூறப்பட்டன.

 

ஜாலவித்தை காட்டுபவன் மக்களை மயக்கும் பொருட்டு ஓர் உருவத்தைக் காட்டி மயக்கி, பின்னர் அவ்வுருவத்தை மறைத்து விடுகிறான். அதுபோ, விலைமாதர் தரும் இன்பமானது, துன்பசொரூபமாக இருந்தாலும், அறிவினை மயக்கி, அதனை இன்பமாகவே கருதி, பின்னர் அந்த இன்பம் இல்லை என்று ஆகிவிடும்.

 

ப்ரமை தீர ---

 

பிரமை --- அறிவு மயக்கம். பைத்தியம், பெருமோகம், அறியாமை.

 

 

இங்கு வா எனப் பண்பினால் அழைத்து ---

 

"அருட்கண் பார்வையினால் அடியார் தமை, மகிழ்வோடே

அழைத்தும்" என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் கூறியது காண்க.

 

"எங்கள் வாழ்வே, `வா' என்று அருளாயே" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

பண்பு --- முறை. ஆண்டான் அடிமை முறை. குரு மாணவன் முறை.

          

எங்கும் ஆன மெய்ப்பொருள் தாராய் ---

 

எங்கும் நிறைந்துள்ள உண்மைப் பொருளை உபதேசித்து அருளவேண்டும் என்று அடிகளார் வேண்டுகின்றார்.

 

ஓங்காரத்து உள்ளே உதித்தஐம் பூதங்கள்

ஓங்காரத்து உள்ளே உதித்த சராசரம்

ஓங்கார அதீதத்து உயிர்மூன்றும் உற்றன

ஓங்கார சீவ பரசிவ ரூபமே.

 

என்று திருமூல நாயனார் அருளியது போ, ஓங்காரமே எங்கும் நிறைந்த உண்மைப் பொருள்.

 

"ஓங்காரத்து உட்பொருளை ஐயன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே" என்னும் மணிவாசகத்தை இங்கு வைத்து எண்ணுக.

 

சம்பராரியைக் கொன்ற தீ விழிச் சம்பு ---

 

சம்பரன் என்னும் அசுரனைக் கொன்றதால், மன்மதன், சம்பராரி எனப்பட்டான்.

 

தீ விழி --- நெருப்பு விழியாகிய நெற்றிக்கண்.

 

சம்பு --- இன்பத்தைத் தருபவனான சிவபெருமான்.

 

காமனைக் கண்ணுதல் எரித்த வரலாறு

 

இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார்.

 

"எந்தாய்! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை நான் நோக்கி, "மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள்" என்றேன். அவர்கள் அது கேட்டு, "நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம்" என்று கூறி, பெருந்தவத்தைச் செய்தனர். அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல் தோன்றி, "உங்கள் விருப்பம் என்ன" என்று கேட்க, வேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.

 

சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால், மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியை, கிரியை, யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, ஞானபாதத்தை விளக்க, சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி, தானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது. இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபதுமன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில் அமர்ந்துள்ளார். இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.

 

இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய், அருவமும், உருவமும், உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றார், உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"

 

"ஆவிகள் அனைத்தும் ஆகி,

     அருவமாய் உருவமாகி

மூவகை இயற்கைத்து ஆன

     மூலகாரணம் ஆது ஆகும்

தேவர்கள் தேவன் யோகின்

     செயல்முறை காட்டும் என்னில்,

ஏவர்கள் காமம் கன்றித்

     தொன்மை போல் இருக்கும்நீரார்".

 

"சிவமூர்த்தியின் பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி மறந்து, சிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபன்மனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், சிவபெருமானுடைய பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன் பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாக்கும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால், உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன் மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார்.  இதுவே செய்யத்தக்கது" என்றார்.

 

அது கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார்.

 

திருமால், "பிரமதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி நகரை அடைந்து, மன்மதனை வருமாறு நினைந்தார். மாயவானகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை உணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.

 

"கங்கையை மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்

மங்கையை மேவ, நின் வாளிகள் தூவி,

அங்கு உறை மோனம் அகற்றினை, இன்னே

எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்".

 

பிரமதேவர் கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருமானது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா?

 

மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி, திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.

 

"அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும், திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச்செய்து, இந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து, புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுதும் உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த காசிபர், வசிட்டர், மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது".

 

"சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில், வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர் யாரும் இல்லை".

 

"திரிபுர சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"

 

"தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"

 

"முன் ஒரு நாள், தாங்களும், நாராயணமூர்த்தியும் 'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட போது, அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"

 

"சலந்தரன் முதலான அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"

 

"உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"

 

"திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"

 

"உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே!"

 

"தாருகா வனத்தில், இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யானை, புலி, மான்,முயலகன், பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள் உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"

 

"சர்வ சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ?

இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."

 

இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம் ஆராய்ந்து, பெருமூச்சு விட்டு, மன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடைய விண்ணவரிடம் விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவு பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு யாராவது ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமமோ? ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து, பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும் வந்து சேரும்.

 

"ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,

ஓவில் குறை ஒன்று அளரேல், அது முடித்தற்கு

ஆவி விடினும் அறனே, மறுத்து உளரேல்

பாவம் அலது பழியும் ஒழியாதே".

 

பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ?

 

பாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ?

 

பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபன்மனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்ச பாணங்களுடன் செல்ல வேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.

 

அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான்.

 

பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு. ஆராய்ந்து சொல்" என்றார்.

 

மனமதன் அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு தெளிந்து, பிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள வேண்டாம்" என்றான்.

 

பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம்.  யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.

 

மன்மதன், பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்று, நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள் போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க, மீனக் கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது, தேரை விட்டு இறங்கி, தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு, பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்' என்று ஊங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்தி தேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.

 

மன்மதன் திருநந்தி தேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன் திருவருள் வழியே ஆகட்டும்.  இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் ஏற்றி, அரும்புக் கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.

 

இது நிற்க, மனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி, "மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான். எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான் மேல் படுதலும், பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது. 

 

 

போதகக் குருநாதா ---

 

போதகன் --- அறிவு கொளுத்துவோன்.

 

அறிவு கொளுத்துபவர் குருநாதர்.

 

சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணம் கூறுமாறு காண்க.

 

திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கு என வெளிப்படுத்தினர்.

 

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,

 

அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.

 

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

 

சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழறவல்லேம்” என்றனர்.

 

கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருந் தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

 

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர் வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.

 

"எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு

அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்

சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ

முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்".   --- தணிகைப் புராணம்.

                                                                            

நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே”   --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

                                                                    

நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி

 

தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே” --- (கொடியனைய) திருப்புகழ்.

                                                                  

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா....               --- (விறல்மாரன்) திருப்புகழ்.

 

சிவனார் மனம் குளி, உபதேச மந்த்ரம் இரு

செவி மீதிலும் பகர்செய் குருநாதா...      --- திருப்புகழ்.

 

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாதது; ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

 

அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.

                                                           --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

 

தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.

 

உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

 

"தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்

தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்".     ---  தணிகைப் புராணம்.

 

மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,

     வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,

     எம்பெருமான், இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,

     தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!

     பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

 

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

 

அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

 

திருக்கோவையாரிலும்,

 

"தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே".

 

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

 

வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.           --- திருமந்திரம்.

 

கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்....           --- குமரகுருபரர்.

 

பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்

காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு

மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.

                                                    --- அபிராமி அந்தாதி.

 

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.

                                                          --- அபிராமி அந்தாதி.

 

சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்து, ங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.--- சிவஞான சித்தியார்.

 

 

சண்ட கோபுரச் செம்பொன் மாளிகை ---

 

சண்ட --- வலிமை, திண்மை.

 

பொன் --- அழகு.

 

தஞ்சை மாநகர்ப் பெருமாளே ---

 

தஞ்சகன் ஆண்ட ஊராதலின் தஞ்சகனூர் என்பது மருவி தஞ்சாவூர் என்றாயிற்று என்பது வரலாறு. தஞ்சை என்றும் வழங்கப்படுகின்றது.

   

தஞ்சையில் உள்ள பிரகதீசுவரர் - பெருவுடையார் கோயிலே இராசராசேச்சரம் என்பதாகும். முதலாம் இராசராச சோழனால் கட்டப்பட்டதாதலின் இராசராசேச்சரம் எனப்பட்டது.

   

முதலாம் இராசராசன் கோயிலைக் கட்டி, சிவலிங்க பிரதிட்டை செய்த காலத்து, ஆவுடையாருடன் மூர்த்தியைச் சேர்த்து அட்டபந்தன மருந்து சார்த்தியபோது அம்மருந்து கெட்டியாகாமல் இளகிய நிலையிலேயே இருக்கக்கண்ட மன்னவன் வருத்தமுற்றான். அதறிந்த போகமுனிவர் மன்னனுக்குச் செய்தியனுப்ப, அதன்படி கருவூர்த்தேவரைத் தஞ்சைக்கு அழைத்து வந்தான். கருவூர்த்தேவர் தஞ்சை வந்து கோயிலுக்குள் சென்று தம்வாயிலுள்ள தாம்பூலத்தை மருந்தாக உமிழ்ந்து கெட்டியாக்கினார் என்பது வரலாறு.

 

கருவூர்த் தேவர் பாடிய திருவிசைப்பா பாடி அருளிய திருத்தலம்.

 

கருத்துரை

 

முருகா! உண்மைப் பொருளை உபதேசித்து அருள்வாய்


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...