அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கந்த வார்குழல் (தஞ்சை)
முருகா!
ஞானோபதேசம் புரிந்து ஆட்கொள்வாய்.
தந்த தானன தான தான தத்த தந்த
தந்த தானன தான தான தத்த தந்த
தந்த தானன தான தான தத்த தந்த ...... தனதான
கந்த வார்குழல் கோதி மாலை யைப்பு னைந்து
மஞ்ச ளாலழ காக மேனி யிற்றி மிர்ந்து
கண்ட மாலைக ளான ஆணி முத்த ணிந்து ...... தெருவூடே
கண்ட பேரையெ லாம வாவி னிற்கொ ணர்ந்து
வண்ப யோதர பார மேரு வைத்தி றந்து
கண்க ளாகிய கூர வேலை விட்டெ றிந்து ...... விலைகூறி
வந்த பேர்களை யேகை யாலெ டுத்த ணைந்து
கொண்டு தேனித ழூறு வாயை வைத்த ருந்தி
மந்த மாருதம் வீசு பாய லிற்பு ணர்ந்து ...... மயல்பூணு
மங்கை மாரநு போக தீவி னைப்ப வங்கள்
மங்கி யேகிடு மாறு ஞான வித்தை தந்து
வண்டு லாவிய நீப மாலை சற்றி லங்க ...... வருவாயே
இந்த்ர தாருவை ஞால மீதி னிற்கொ ணர்ந்த
சங்க பாணிய னாதி கேச வப்ர சங்க
னென்று வாழ்மணி மார்பன் வீர விக்ர மன்றன் ...... மருகோனே
எண்டி சாமுக வேலை ஞால முற்று மண்டு
கந்த தாருக சேனை நீறு பட்டொ துங்க
வென்று பேரொளி சேர்ப்ர காசம் விட்டி லங்கு ...... கதிர்வேலா
சந்த்ர சேகரி நாக பூஷ ணத்தி யண்ட
முண்ட நாரணி யால போஜ னத்தி யம்பை
தந்த பூரண ஞான வேள்கு றத்தி துஞ்சு ...... மணிமார்பா
சண்ட நீலக லாப வாசி யிற்றி கழ்ந்து
கஞ்சன் வாசவன் மேவி வாழ்ப திக்கு யர்ந்த
தஞ்சை மாநகர் ராஜ கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கந்த வார்குழல் கோதி, மாலையைப் புனைந்து,
மஞ்சளால் அழகாக மேனியில் திமிர்ந்து,
கண்ட மாலைகள் ஆன ஆணி முத்து அணிந்து ...... தெருஊடே
கண்ட பேரை எலாம் அவாவினில் கொணர்ந்து,
வண் பயோதர பார மேருவைத் திறந்து,
கண்கள் ஆகிய கூர வேலை விட்டு எறிந்து, ...... விலைகூறி,
வந்த பேர்களையே கையால் எடுத்து அணைந்து
கொண்டு, தேன்இதழ் ஊறு வாயை வைத்து அருந்தி,
மந்த மாருதம் வீசு பாயலில் புணர்ந்து, ...... மயல்பூணும்
மங்கைமார் அநுபோக தீவினைப் பவங்கள்
மங்கி ஏகிடுமாறு, ஞான வித்தை தந்து,
வண்டு உலாவிய நீப மாலை சற்று இலங்க ...... வருவாயே.
இந்த்ர தாருவை ஞால மீதினில் கொணர்ந்த
சங்க பாணியன், ஆதி கேசவ ப்ரசங்கன்
என்று வாழ்மணி மார்பன், வீர விக்ரமன் தன் ...... மருகோனே!
எண் திசாமுக வேலை ஞாலம் முற்றும் மண்டு
கந்த! தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க
வென்று, பேரொளி சேர், ப்ரகாசம் விட்டு இலங்கு ...... கதிர்வேலா!
சந்த்ர சேகரி, நாக பூஷணத்தி, அண்டம்
உண்ட நாரணி, ஆல போஜனத்தி, அம்பை,
தந்த பூரண ஞானவேள்! குறத்தி துஞ்சும் ...... மணிமார்பா!
சண்ட நீல கலாப வாசியில் திகழ்ந்து,
கஞ்சன் வாசவன் மேவி வாழ் பதிக்கு உயர்ந்த,
தஞ்சை மாநகர் ராஜ கோபுரத்து அமர்ந்த ...... பெருமாளே.
பதவுரை
இந்த்ர தாருவை ஞாலம் மீதினில் கொணர்ந்த சங்க பாணியன் --- இந்திரலோகத்தில் உள்ள பாரிசாத மரத்தைப் பூமிக்குக் கொண்டு வந்தவனும், பாஞ்ச சன்னியம் என்னும் சங்கைத் திருக்கையில் ஏந்தியவனும் ஆகிய
ஆதிகேசவ ப்ரசங்கன் --- ஆதிகேசவன் என்னும் பெருமையைப் பெற்றவன்,
என்று வாழ் மணிமார்பன் --- சூரியனுடைய ஒளி போன்று என்றும் ஒளிரும் கெளஸ்துபம் என்னும் மணியைத் திருமார்பில் அணிந்தவன்,
வீர விக்ரமன் தன் மருகோனே --- வீரமும் பேராற்றலும் வாய்ந்தவனாகிய திருமாலின் திருமருகரே!
எண் திசாமுக வேலை ஞாலம் முற்று மண்டு கந்த --- எட்டுத் திசைகளிலும் உள்ள கடலால் சூழப்பட்ட பூமி முற்றிலும் எங்கும் விளங்கும் கந்தனே!
தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க வென்று --- தாருகாசுரனும் அவனது சேனைகளும் அழிய வெற்றி கொண்ட,
பேரொளி சேர் ப்ரகாசம் விட்டு இலங்கு கதிர்வேலா --- பெரும்புகழ் கொண்ட ஒளி விளங்கும் கதிர்வேலவரே!
சந்த்ர சேகரி --- சந்திரனைத் திருச்சடையில் தரித்தவளும்,
நாக பூஷணத்தி --- பாம்புகளை அணிகன்களாக அணிந்தவளும்,
அண்டம் உண்ட நாரணி --- உலகை உண்ட நாராயணியும்,
ஆல போஜனத்தி --- விடத்தை அமிர்தாக உண்டவளும் ஆகிய
அம்பை தந்த பூரண ஞானவேள் --- அம்பிகை அருளிய ஞானபூரணரே!
குறத்தி துஞ்சு மணிமார்பா --- குறமகளாகிய வள்ளிநாயகி அணைந்திருக்கும் திருமாரபினை உடையவரே!
சண்ட நீலகலாப வாசியில் திகழ்ந்து --- அதிவேகமாகச் செல்லக்கூடியதும், நீலநிறத் தோகை உள்ளதுமான மயிலாகிய குதிரை மீது விளங்கி,
கஞ்சன் வாசவன் மேவி வாழ் பதிக்கு உயர்ந்த --- பிரமன், இந்திரன் வீற்றிருந்து வாழும் பதிகளினும் மேலான,
தஞ்சை மாநகர் ராஜகோபுரத்து அமர்ந்த பெருமாளே --- தஞ்சை மாநகரில் உள்ள திருக்கோயிலின் இராஜகோபுரத்தில் அமர்ந்த பெருமையில் மிக்கவரே!
கந்த வார்குழல் கோதி --- நறுமணம் கமழும் கூந்தலைக் கோதி முடித்து,
மாலையைப் புனைந்து --- மாலையைச் சூடிக்கொண்டு,
மஞ்சளால் அழகாக மேனியில் திமிர்ந்து --- மஞ்சளை அழகுடன் உடலில் நிரம்பப் பூசி,
கண்ட மாலைகள் ஆன ஆணி முத்து அணிந்து --- உயர்ந்து முத்துமாலைகளைக் கழுத்தில் அணிந்து,
தெரு ஊடே கண்ட பேரை எலாம் --- தெருவில் பார்த்த பேர்களை எல்லாம்
அவாவினில் கொணர்ந்து --- ஆசையுடன் அழைத்துக் கொண்டு வந்து,
வண் பயோதர பார மேருவை திறந்து --- வளப்பம் உள்ள, கனத்த மேருமலையை ஒத்த மார்பகங்களைத் திறந்து காட்டி,
கண்களாகிய கூர வேலை விட்டு எறிந்து --- கண்களாகிய கூர்மையான வேலினைச் செலுத்தி,
விலை கூறி --- தமக்கு வேண்டிய பொருளை, தாம் தரும் சிற்றின்பத்திற்கு விலையாகப் பேசி,
வந்த பேர்களையே கையால் எடுத்து அணைந்து கொண்டு --- அதற்கு உடன்பட்டு வந்தவர்களைக் கையால் எடுத்துத் தழுவிக் கொண்டு,
தேன் இதழ் ஊறு வாயை வைத்து அருந்தி --- தேன் போல் இனிக்கும் வாயிதழ் ஊறலை உதடுகளில் வைத்து அருந்தச் செய்து,
மந்த மாருதம் வீசு பாயலில் புணர்ந்து --- தென்றல் வீசும் படுக்கையில் புணர்ந்து
மயல் பூணும் மங்கைமார் அநுபோக தீ வினைப் பவங்கள் மங்கி ஏகிடுமாறு --- காம மயக்கம் கொள்ளும் விலைமாதர்களுடன் அநுபோகம் செய்வதால் வரும் கொடிய வினைகளுடன் கூடிய பிறப்புகள் எல்லாம் தொலைந்து போகும்படி,
ஞான வித்தை தந்து --- ஞான வித்தையை உபதேசித்து,
வண்டு உலாவிய நீப மாலை சற்று இலங்க வருவாயே --- வண்டுகள் உலாவுகின்ற கடப்ப மாலை விளங்க என் முன் சற்றே வருவாயாக.
பொழிப்புரை
இந்திரலோகத்தில் உள்ள பாரிசாத மரத்தைப் பூமிக்குக் கொண்டு வந்தவனும், பாஞ்ச சன்னியம் என்னும் சங்கைத் திருக்கையில் ஏந்தியவனும் ஆகிய ஆதிகேசவன் என்னும் பெருமையைப் பெற்றவன், சூரியனுடைய ஒளி போன்று என்றும் ஒளிரும் கெளஸ்துபம் என்னும் மணியைத் திருமார்பில் அணிந்தவன், வீரமும் பேராற்றலும் வாய்ந்தவனாகிய திருமாலின் திருமருகரே!
எட்டுத் திசைகளிலும் உள்ள கடலால் சூழப்பட்ட பூமி முற்றிலும் எங்கும் விளங்கும் கந்தனே!
தாருகாசுரனும் அவனது சேனைகளும் அழிய வெற்றி கொண்ட, பெரும்புகழ் கொண்ட ஒளி விளங்கும் கதிர்வேலவரே!
சந்திரனைத் திருச்சடையில் தரித்தவளும், பாம்புகளை அணிகன்களாக அணிந்தவளும், உலகை உண்ட நாராயணியும், விடத்தை அமிர்தாக உண்டவளும் ஆகிய அம்பிகை அருளிய ஞானபூரணரே!
குறமகளாகிய வள்ளிநாயகி அணைந்திருக்கும் திருமாரபினை உடையவரே!
அதிவேகமாகச் செல்லக்கூடியதும், நீலநிறத் தோகை உள்ளதுமான மயிலாகிய குதிரை மீது விளங்கி, பிரமன், இந்திரன் வீற்றிருந்து வாழும் பதிகளினும் மேலான, தஞ்சை மாநகரில் உள்ள திருக்கோயிலின் இராஜகோபுரத்தில் அமர்ந்த பெருமையில் மிக்கவரே!
நறுமணம் கமழும் கூந்தலைக் கோதி முடித்து, மாலையைச் சூடிக்கொண்டு, மஞ்சளை அழகுடன் உடலில் நிரம்பப் பூசி, உயர்ந்து முத்துமாலைகளைக் கழுத்தில் அணிந்து, தெருவில் பார்த்த பேர்களை எல்லாம் ஆசையுடன் அழைத்துக் கொண்டு வந்து, வளப்பம் உள்ள, கனத்த மேருமலையை ஒத்த மார்பகங்களைத் திறந்து காட்டி, கண்களாகிய கூர்மையான வேலினைச் செலுத்தி, தமக்கு வேண்டிய பொருளை, தாம் தரும் சிற்றின்பத்திற்கு விலையாகப் பேசி, அதற்கு உடன்பட்டு வந்தவர்களைக் கையால் எடுத்துத் தழுவிக் கொண்டு, தேன் போல் இனிக்கும் வாயிதழ் ஊறலை உதடுகளில் வைத்து அருந்தச் செய்து, தென்றல் வீசும் படுக்கையில் புணர்ந்து, காம மயக்கம் கொள்ளும் விலைமாதர்களுடன் அநுபோகம் செய்வதால் வரும் கொடிய வினைகளுடன் கூடிய பிறப்புகள் எல்லாம் தொலைந்து போகும்படி, ஞான வித்தையை அடியேனுக்கு உபதேசித்து, வண்டுகள் உலாவுகின்ற கடப்ப மாலை விளங்க என் முன் சற்றே வருவாயாக.
விரிவுரை
இத் திருப்புகழின் முதற்பகுதியில் அடிகளார் விலைமாதர்கள் மேனியழகையும், அவர்கள் புரியும் சாகசத்தையும், அவர்களால் கட்டுண்ட காமுகர் பிறவி வலையில் விழுவதையும் அறிவுறுத்துகின்றார். காம மக்கத்தால் உண்டாகும் துன்பமானது தீர, முருகப் பெருமான் ஞானகுருவாக எழுந்தருளி வந்து, நல்லுபதேசம் புரிந்து ஆட்கொள்ள வேண்டுகின்றார்.
இந்த்ர தாருவை ஞாலம் மீதினில் கொணர்ந்த சங்க பாணியன் ---
தாரு --- மரம். இந்திர தாரு --- இந்திர லோகத்தில் இருந்து பாரிஜாத மரம்.
ஒருமுறை கண்ணன் நரகாசுரனை வென்ற பின் இந்திரலோகத்திற்கு சத்யபாமாவுடன் செல்ல, இந்திரன் அவருக்குக் காணிக்கையாக பாரிஜாத மலர் மாலையை அணிவித்தான். ஆனால் சத்யபாமாவைப் பொருட்படுத்தவில்லை.
அங்கிருந்து வந்த கண்ணன் அந்த பாரிஜாத மலர் மாலையை ருக்மணிக்கு அன்பளிப்பாகத் தந்தான். நாரதர் அதைக் கண்டதும் கலகத்திற்கு ஒரு காரணம் கிடைத்ததென்று பாமாவிடம் வந்து, “நரகாசுரவதம் நடப்பதற்காக நீ தானே கண்ணனுக்கு சாரதியாகச் சென்றாய். அதற்குப் பரிசாகத் தானே கண்ணனுக்கு இந்திரன் எப்போதும் வாடாத பாரிஜாத மலர்களால் கட்டப்பட்ட மாலையை அணிவித்தான். நியாயமாக அதைக் கண்ணன் உனக்குத் தானே அணிவித்திருக்க வேண்டும். ஆனால் அதை அப்படியே கொண்டு வந்து ருக்மணியிடம் தந்து விட்டானே என்றார். ஏற்கனவே இந்திரன் தன்னை சரியாக கவுரவிக்கவில்லை என்று கொதித்துக் கொண்டிருந்த சத்தியபாமாவிற்கு மேலும் கோபம் பொங்கியது. கண்ணன் வந்தபோது அவனிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். காரணம் கேட்டபோது இந்திரனின் பாரிஜாத மரம் இங்கு வர வேண்டும். அப்போதுதான் பேசுவேன் என்றாள். கண்ணன் அந்த மரத்தை சில நாட்கள் தங்களிடம் இருக்க தந்தனுப்ப வேணடும் என்று இந்திரனுக்கு செய்தி அனுப்ப, அவன் முடியாது என்று மறுத்து விட்டான். அதனால் கண்ணன் இந்திரன் மீது போர் தொடுத்து வென்று அந்த பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்து சத்தியபாமாவின் அரண்மனைத் தோட்டத்தில் பதித்து வைத்தார்.
கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
நின்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள்
உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான்,
உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான். --- பெரியாழ்வார்.
என்நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன்நாதன் காணவே தண்பூ மரத்தினை
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட
என்நாதன் வன்மையைப் பாடிப் பற,
எம்பிரான் வன்மையைப் பாடிப் பற. --- பெரியாழ்வார்.
என்று வாழ் மணிமார்பன் ---
என்று --- சூரியன். கதிரோளி விளங்குகின்ற அழகிய திருமார்பை உடைய திருமால்.
சண்ட நீலகலாப வாசியில் திகழ்ந்து ---
சண்ட --- அதிவேகமாகச் செல்லுகின்ற.
நீலகலாபம் ல--- நீலத் தோகையை உடைய மயில்.
வாசி --- குதிரை.
"ஆடும்பரி" என்று அடிகளார் கந்தரனுபூதியில் குறித்தது காண்க.
கஞ்சன் வாசவன் மேவி வாழ் பதிக்கு உயர்ந்த ---
கஞ்சம் --- தாமரை. கஞ்சன் --- தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவன்.
வாசவன் --- இந்திரன்.
தஞ்சை மாநகர் ராஜகோபுரத்து அமர்ந்த பெருமாளே ---
தஞ்சகன் ஆண்ட ஊராதலின் தஞ்சகனூர் என்பது மருவி தஞ்சாவூர் என்றாயிற்று என்பது வரலாறு. தஞ்சை என்றும் வழங்கப்படுகின்றது.
தஞ்சையில் உள்ள பிரகதீசுவரர் - பெருவுடையார் கோயிலே இராசராசேச்சரம் என்பதாகும். முதலாம் இராசராச சோழனால் கட்டப்பட்டதாதலின் இராசராசேச்சரம் எனப்பட்டது.
முதலாம் இராசராசன் கோயிலைக் கட்டி, சிவலிங்க பிரதிட்டை செய்த காலத்து, ஆவுடையாருடன் மூர்த்தியைச் சேர்த்து அட்டபந்தன மருந்து சார்த்தியபோது அம்மருந்து கெட்டியாகாமல் இளகிய நிலையிலேயே இருக்கக்கண்ட மன்னவன் வருத்தமுற்றான். அதறிந்த போகமுனிவர் மன்னனுக்குச் செய்தியனுப்ப, அதன்படி கருவூர்த்தேவரைத் தஞ்சைக்கு அழைத்து வந்தான். கருவூர்த்தேவர் தஞ்சை வந்து கோயிலுக்குள் சென்று தம்வாயிலுள்ள தாம்பூலத்தை மருந்தாக உமிழ்ந்து கெட்டியாக்கினார் என்பது வரலாறு.
கருவூர்த் தேவர் பாடிய திருவிசைப்பா பாடி அருளிய திருத்தலம்.
கருத்துரை
முருகா! ஞானோபதேசம் புரிந்து ஆட்கொள்வாய்.
No comments:
Post a Comment