மனமாசு அறுதலே அறம்

 

 

மனமாசு அறுதலே அறம்

---

 

     திருக்குறளில் " அறன் வலியுறுத்தல்" என்னும் அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறள், "அறம் எனப்படுவது, மனத்தில் அழுக்கு இல்லாமல் இருத்தல் என்னும் இயல்பையே வரையறையாக உடையது; மனத்தூய்மை இல்லாமல் சொல்லுகின்ற சொற்களும், செய்யும் செயல்களும், கொள்ளுகின்ற வேடமும் ஆரவாரத் தன்மையை உடையன" என்கின்றது.

 

 

"மனத்துக்கண் மாசு இலன் ஆதல், அனைத்து அறன்,

ஆகுல நீர பிற".  

 

     மனத்தைத் தூய்மையாக்க வேண்டுமானால், அதில் பொருந்தி உள்ள அழுக்குப் பொருள்களாகிய பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கையும் நீக்கிவிட்டால் போதும். இது மிகவும் எளிமையான காரியம். ஆனால், இயலாத காரியம் போலத் தோன்றும். மனக் கட்டுப்பாட்டுடன் பழகினால் எளிதாகும்.

 

     உள்ளத்தில் எண்ணம் தூய்மையாக இல்லையானால், சொல்லுகின்ற சொற்களும், செய்கின்ற செயல்களும் அவ்வாறே அமையும்.

 

     மனத்தில் மாசு நிறைந்திருப்பதை வெளிக்காட்டாது இருக்க, நல்லவர் போல் சிலர் வேடமிட்டுக் கொள்ளலாம். அந்த வேடத்தைக் கொண்டு ஒருவன் செய்யும் நற்செயல்கள், தன்னை நல்லவன் என்று வெளிக்காட்டிக் கொள்வதாகவே அமையும். அது ஆரவாரத் தன்மையை உடையது. எண்ணிய பலனைத் தராது.

 

     தருமதீபிகை என்னும் நூலில் வரும் ஒரு பாடல் இத் திருக்குறளுக்கு மேல் விளக்கமாக அமைந்துள்ளது.

 

"உள்ளம் புனிதம் உறானேல், உயர்நலங்கள்

வெள்ளம் என உறினும் வீணாமே --- உள் ஒளியில்

கண்ணுக்கு மை எழுதிக் காட்சி உற வைத்தாலும்,

ஒண்ணுமோ மேன்மை உணர்". 

 

     உள்ளே ஒளி இல்லாத கண்ணுக்கு, வெளியே அழகாக மை தீட்டி வைத்தாலும் பயனில்லை. பெருமையும் இல்லை. அதுபோல, உள்ளத்தில் தூய்மை இல்லாதவன், உயர்ந்த பல நலங்களை உடையவனாக இருந்தாலும், சிறந்து விளங்கமாட்டான்.

 

     கற்ற கல்வியும், செய்கின்ற கடவுள் பூசையும், இயற்றுகின்ற நல்ல தவங்களும், குற்றமில்லாத தானங்களும், செய்கின்ற மற்ற மற்ற அறச் செயல்களும் மனத்தில் அழுக்கு இல்லாதவர்க்கே பயன் தரும் என்கின்றது "காசி காண்டம்"

 

"கற்றதம் கல்வியும், கடவுள் பூசையும்,

நல்தவம் இயற்றலும், நவையில் தானமும்,

மற்றுள அறங்களும், மனத்தின்பால் அழுக்கு

அற்றவர்க்கே பயன் அளிக்கும் என்பரால்".   

 

     இதனால், மனத் தூய்மையின் மாட்சி விளங்கும்.  

 

     இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்த பாடல் ஒன்று "இன்னா நாற்பது" என்னும் நூலில் இருந்து....

 

 

அற மனத்தார் கூறும் கடுமொழியும் இன்னா,

மறமனத்தார் ஞாட்பின் மடிந்து ஒழுகல் இன்னா,

இடும்பை உடையார் கொடை இன்னா, இன்னா

கொடும்பாடு உடையார்வாய்ச் சொல்.

 

இதன் பொருள் ---

 

     அற மனத்தார் கூறும் கடுமொழியும் இன்னா --- அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர் சொல்லுகின்ற கடுஞ் சொல்லும் துன்பமாம்;  மறம் மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா --- வீரத் தன்மையை உடைய நெஞ்சத்தினர் போரின்கண் சோம்பி இருத்தல் துன்பமாம்;  இடும்பை உடையார் கொடை இன்னா --- வறுமை உடையாரது ஈகைத் தன்மை துன்பமாம்;  கொடும்பாடு உடையார் வாய்ச்சொல் இன்னா --- கொடுமை உடையாரது வாயில் சொல்லும் துன்பமாம்.

 

     இதனால், அறவழியில் வாழும் நெஞ்சத்தினர், மனமாசு அற்றவர் என்பதும், அவர் கடுமொழி கூறமாட்டார் என்பதும் பெறப்படும்.

 

     அறம் என்பது அகம் சார்ந்தது. அகம் தூய்மையாக இருந்து செய்யும் செயல்கள் அறச் செயல்கள். அகத்தில் தூய்மை இல்லாமல், புறத்தில் செய்யும் அறச் செயல்கள் எல்லாம், தன்னை நல்லவராக வெளிக் காட்டிக் கொள்வதற்காகச் செய்யும் ஆரவாரச் செயல்களே ஆகும். அவற்றால் ஏதும் பயனில்லை.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...