அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்

 

 

 

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்

----

 

     பொன், பொருள், வீடு, மனை, தோட்டம், துரவு, வண்டி இன்னும் பலவாறானவைகளைச் செல்வம் என்று கொண்டாடுகின்றோம். செல்வம் என்றவுடனே உள்ளம் மகிழ்கின்றது. உடல் புளகாங்கிதம் கொள்ளுகின்றது. இவைகளை மட்டும்தான் செல்வம் என்று கொள்ளுகின்றோம். இவை யாவும் நிலையானவை அல்ல என்பதை மனதில் கொள்ளுதல் வேண்டும்.

 

     அருட்செல்வம், கல்விச் செல்வம், செவிச் செல்வம் ஆகியவைகளும் உண்டு என்றனர் முன்னோர். ஆயினும் அவற்றை ஒரு பொருட்டாகக் கொள்வது இல்லை. பொருட்செல்வத்தையே பெரிதாக மதிப்பது உலக இயல்பு.

 

     பொருட்செல்வமானது வமிச பரம்பரையாகவும் வந்து சேரும். கல்விச் செல்வமும் அருட்செல்வமும் அவ்வாறு வராது. அதற்கான முயற்சி உடையோர்க்கே அது வாய்க்கும். கல்வி அறிவு இல்லையானால், பொருட்செல்வத்தைப் பேணுதல் முடியாது போகும். அருட்செல்வம் இல்லை என்றால், எல்லாமே இல்லாது போகும்.

 

     பொருள் இருந்தால் எல்லாம் அகும் என்று எண்ணுவது கூடாது. அருள் இருந்தால் பொருளோடு அனைத்தும் வந்து சேரும் என்பதை அறிதல் வேண்டும். "அருள் உறின் எல்லாம் ஆகும். ஈது உண்மை. அருள் பெற முயலுக என்று அருளிய சிவமே" என்று வள்ளல்பெருமான் காட்டியதன் பொருளை உணர்ந்தால், தெளிவு பிறக்கும்.

 

     அருளுடைமை என்பது எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துதல் என்று பொருள்படும். உயிர்கள் மீது செல்லுகின்ற ஆசையே அன்பு உடைமை என்றும், அருள் உடைமை என்றும் சொல்லப்படும். ஆயினும், அன்பு என்பது தனக்குத் தொடர்பு உடைய மனைவி மக்கள், சுற்றத்தார் மீது காட்டுவது. அருள் என்பது தனக்குத் தொடர்பு இல்லாத பிற உயிர்கள் மீதும் செலுத்தப்படுவது.

 

     இல்லற இயலில் மக்கள் பேற்றுக்குப் பின்பு அன்புடைமையைக் கூறிய நாயனார், இல்லறத்தை அடுத்து வரும்  துறவற இயலில், முதலில் அருளுடைமையைக் கூறினார்.

 

     அருளுடைமை என்னும் அதிகாரத்தில் முதலாவதாக வரும் திருக்குறளில், "பொருளால் வரும் செல்வங்கள் இழிந்தவரிடத்தும் இருக்கின்றன; ஆதலால், செல்வங்கள் எல்லாவற்றுள்ளும், ஆராந்து தெளியப்பட்ட செல்வமானது அருளால் வரும் செல்வமே ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

 

"அருட்செல்வம் செல்வத்துள் செல்வம், பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள".

 

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்..

 

அன்றுமகப் பெறுவாட்கு அன்னை வடிவாகி அரன்

சென்றுதுணை செய்தான், சிவசிவா! --- என்றும்

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.

 

     திருச்சிராப்பள்ளி இறைவன் பத்திமிகு இரத்தினவதியின் பேறு காலத்துத் தாயாக வந்தருளியது கூறப்பட்டது.

 

     திருச்சிராப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வசித்து வந்த இரத்தினாவதி என்ற பெண் ஒரு சிவபக்தை. அவளின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவி செய்ய, அவள் தாயார் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த இரத்தினாவதியின் தாயாரால் இக்கரை வரமுடியவில்லை. அக்கரையில் இரத்தினாவதிக்கு பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தனது பக்தையின் துயரம் கண்டு இறைவன் அவளது தாய் உருவில் வந்து இரத்தினவதிக்கு சுகப் பிரசவம் ஆக அருள் செய்தார். இதனாலேயே இறைவன் தாயுமானசுவாமி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார்.

 

     இறையருளாகிய உயர்ந்த செல்வமே இரத்தினவதிக்கு உற்ற காலத்தில் உறுதுணையாக நின்றது. அதனால், அருட்செல்வம், பொருட்செல்வத்தைக் காட்டிலும் மேலானது.

 

பொருளால் எல்லாம் முடியும் என்பது அறிவின்மை.

அருளால் எல்லாம் முடியும் என்பது அறிவுடைமை.

 

"அருள் அலாது அணுவும் அசைந்திடாது, தனால்

அருள்நலம் பரவுக என்று அறைந்தமெய்ச் சிவமே!

அருள் உறின் எல்லாம் ஆகும், ஈது உண்மை

அருள் உற முயல்க என்று அருளிய சிவமே!

அருள்நெறி ஒன்றே தெருள்நெறி, மற்றெலாம்

இருள்நெறி என எனக்கு இயம்பிய சிவமே"!

 

என வரும் வள்ளல்பெருமான் அருள்வாக்கினை எண்ணுக.

 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்..

                                            

வம்பு ஊடு இலா "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்,பொருட்செல்

வம், பூரியார் கண்ணும் உள" என்று ஓதினர், மன்னியசெல்

வம், பூதலத்து உன் அருட்செல்வம் அல்லது மற்றும் உண்டோ?

வம்பு ஊதிய மலரோன் தந்தையே! புல்லை மாநிதியே!

 

இதன் பொழிப்புரை ---

 

     பொருட்செல்வமானது கீழ்மக்களிடத்தும் உள்ளதால், தீமை இல்லாத, நிலைபெற்ற அருட்செல்வமே செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த செல்வம் என்று சொல்லி வைத்தனர். ஏனவே, மணத்தை வெளிப்படுத்தும் தாமரையில் உள்ள பிரமதேவனுக்குத் தந்தையும், திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில், அடியவர்களுக்குப் பெருநிதியாகவும் எழுந்தருளி உள்ள திருமாலே! உனது அருட்செல்வத்தை விடச் சிறந்த நிலைபெற்ற செல்வம் இந்த உலகில் இல்லை.

      

     வம்பு --- தீமை. மன்னிய செல்வம் --- நிலைபெற்ற செல்வம்.  வம்பு ஊதிய --- மணத்தை வெளிப்படுத்திய. மலரோன் தந்தையே --- நான்முகனுடைய தந்தையே.

 

      பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

                                   

வையம் மன் உயிர் ஆக, அம் மன் உயிர்

உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு,

ஐயம் இன்றி, அறம் கடவாது, அருள்

மெய்யில் நின்றபின், வேள்வியும் வேண்டுமோ?

                                              ---  கம்பராமாயணம், மந்தரை சூழ்ச்சிப் படலம்.

 

இதன் பதவுரை ---

 

     வையம் --- உலக மக்கள்; மன் உயிர் ஆக --- நிலைத்த உயிராக; அம் மன் உயிர் --- அந்த நிலைத்த உயிர்களை; உய்ய --- வாழும்படி;  தாங்கும் --- சுமக்கின்ற;  உடல் அன்ன மன்னனுக்கு --- உடம்பை ஒத்த அரசனுக்கு; ஐயம் இன்றி --- மேற்கொண்ட நெறியின் உறுதி பற்றிய சந்தேகம் இல்லாமல்;  அறம் கடவாது அருள் மெய்யில் நின்றபின் --- அறத்தைவிட்டு விலகாது அருளிலும்,  சத்தியத்திலும் நிலைபெற்று நின்றபிறகு; வேள்வியும் வேண்டுமோ --- யாகங்களும் செய்தல் வேண்டுமோ? (வேண்டாம் என்றபடி.)

 

     அரசர்கள் பெரிய இராயசூயம்,  வாஜபேயம்,  அசுவமேதம் முதலிய யாகங்களைச் செய்தல் வேண்டும் என்பார். ஆயினும்,  அறம்,  அருள், சத்தியம் என்ற மூன்றிலும் நிலைத்து நின்று அரசாட்சி செய்யின் அதுவே வேள்வி ஆகும்.  வேறு வேள்வி செய்ய வேண்டுவது இல்லை. செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ்,  உயிர் எலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்" என்று தயரதனைப் பற்றி முன்னர்க் கூறியவாறு,  மக்களை உயிராகவும் மன்னனை உடலாகவும் கூறுவது கம்பரின் முடியரசில் குடியரசுக் கொள்கை. சங்ககாலத்தில் நெல்லும்  உயிரன்றே,  நீரும் உயிரன்றே, மன்னன் உயிர்த்தே  மலர்தலை உலகம்,  அதனால்,  "யான் உயிர் என்பது அறிகை, வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே" என்று மக்களை உடலாகவும், மன்னனை உயிராகவும் கருதிக் கூறும் கொள்கை நிலைபெற்றதைக் காணலாம்.

 

     அறம்,  அருள் சத்தியம் இல்லாதவன் யாகம் செய்வது வீண் ஆரவாமேயன்றி வேறு அல்ல.

 

 

உருளும் நேமியும், ஒண் கவர் எஃகமும்,

மருள் இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும்

தெருளும் நல் அறமும், மனச் செம்மையும்,

அருளும் நீத்தபின் ஆவது உண்டாகுமோ?

                                               ---  கம்பராமாயணம், மந்தரை சூழ்ச்சிப் படலம்.

 

இதன் பதவுரை ---

 

     உருளும் நேமியும் --- (வட்டவடிவாய் இருத்தலின்) உருண்டு செல்லும் சக்கரத்தையும்;  ஒண் --- ஒள்ளிய;  கவர் எஃகமும் --- முக்கிளையாய் உள்ள வேலாகிய சூலவேலையும்;  மருள் இல் --- மயக்கமற்ற;  வாணியும் --- சொல் மகளையும்;  வல்லவர் --- உடைமையாகக் கொண்டு வல்லமை பெற்றவராய; மூவர்க்கும் --- முக்கடவுளர்களுக்கும்; தெருளும் --- தெளிந்த ;நல் அறமும் --- நல்ல தருமமும்;  மனச் செம்மையும் --- கோடுதல் இல்லாத நேரியமனமும்; அருளும் --- இரக்கமாய கருணையும்; நீத்தபின் --- விட்ட பிறகு;  ஆவது- நன்மை;  உண்டாகுமோ - உளதாகுமோ?’  (ஆகாது என்றபடி).

 

     ஆற்றல் படைத்த முத்தேவரும் தம் ஆற்றலால் அன்றி, அறம், நடுவு நிலைமை,  அருள் என்னும் நற்பண்புகளைக் கொண்டே அனைத்தையும் சாதிக்க இயலும் என்பதை உணர்ந்து,  நீயும் இம்மூன்றையும் பற்றி  இரு என்று வசிட்டர் இராமபிரானுக்குக் கூறினார்.

 

 

     பூரியர் எனப்படும் கீழ்மக்கள் யார் என்று அருணகிரிநாதப் பெருமான் காட்டுவது காண்க......

 

அறிவு இலாதவர், ஈனர், பேச்சு இரண்டு

     பகரும் நாவினர், லோபர், தீக் குணங்கள்

     அதிக பாதகர், மாதர்மேல் கலன்கள் ......புனை ஆதர்,

அசடர், பூமிசை வீணராய்ப் பிறந்து

     திரியும் மானுடர், பேதைமார்க்கு இரங்கி

     அழியும் மாலினர், நீதிநூல் பயன்கள் ...... தெரியாத

 

நெறி இலாதவர், சூதினால் கவர்ந்து

     பொருள்செய் பூரியர்,.......            --- திருப்புகழ்.

 

        

இதன் பொருள் ---

 

     அறிவு இலாதவர் --- அறிவு அற்றவர்கள்; ஈனர் --- ஈனத் தன்மை உடையவர்கள்; பேச்சு இரண்டு பகரும் நாவினர் --- இருவிதமாகப் பேசும் நாவினை உடையவர்கள்;  லோபர் --- கஞ்சத்தனம் உடையவர்கள்; தீக் குணங்கள் அதிக பாதகர் --- தீய குணங்களுடன், மிகுந்த பாவங்களைப் புரிபவர்கள்; மேற்கொண்டு மிக்க பாவங்களைச் செய்பவர்கள்;  மாதர் மேல் கலன்கள் புனை ஆதர் --- பொதுமகளிருக்கு அணிகலன்களைப் புனைந்து அழகு பார்க்கும் அறிவிலிகள்; அசடர் --- கீழ்மக்கள்; பூமிசை வீணராய்ப் பிறந்து திரியும் மானுடர் --- பூமியில் பிறந்து பயனற்றவர்களாகத் திரிகின்ற மனிதர்கள்; பேதைமார்க்கு இரங்கி அழியும் மாலினர் --- விலைமாதர் மீது இரக்கம் கொண்டு அழியும் மோக மனத்தினர்;  நீதிநூல் பயன்கள் தெரியாத --- நீதி நூல்களின் பயன்களைத் தெரியாதவர்; நெறி இலாதவர் --- நன்னெறியில் நில்லாதவர்கள்;  சூதினால் கவர்ந்து பொருள் செய் பூரியர் --- சூதாட்டத்தால் (வஞ்சகத்தால்) பிறர் பொருளைக் கவர்ந்து பொருளைப் பெருக்கும் கீழ்மக்கள்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...