அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கூறும் மாரவேள் (பொது)
தான தான தானான தானத் ...... தனதான
கூறு மார வேளார வாரக் ...... கடலாலே
கோப மீது மாறாத கானக் ...... குயிலாலே
மாறு போலு மாதாவின் வார்மைப் ...... பகையாலே
மாது போத மாலாகி வாடத் ...... தகுமோதான்
ஏறு தோகை மீதேறி யாலித் ...... திடும்வீரா
ஏழு லோகம் வாழ்வான சேவற் ...... கொடியோனே
சீறு சூரர் நீறாக மோதிப் ...... பொரும்வேலா
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கூறும் மார வேள் ஆரவாரக் ...... கடலாலே,
கோப மீது மாறாத கானக் ...... குயிலாலே,
மாறு போலும் மாதாவின் வார்மைப் ...... பகையாலே,
மாது போத மாலாகி வாடத் ...... தகுமோதான்?
ஏறு தோகை மீது ஏறி ஆலித் ...... திடும்வீரா!
ஏழு லோகம் வாழ்வான சேவல் ...... கொடியோனே!
சீறு சூரர் நீறு ஆக மோதிப் ...... பொரும்வேலா!
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
பதவுரை
ஏறு தோகை மீது ஏறி ஆலித்திடும் வீரா--- அழகிய தோகையினை உடைய மயிலின் மீது ஏறி ஒலித்தல் செய்யும் வீரரே!
ஏழு லோகம் வாழ்வான சேவல் கொடியோனே--- ஏழு உலகங்களுக்கும் பெருவாழ்வாக அமைந்த சேவற்கொடியோனே!
சீறு சூரர் நீறு ஆக மோதிப் பொரும் வேலா--- கோபித்து எழுந்த சூராதி அவுணர்கள் பொடியாகும்படி தாக்கிப் போர் புரிந்த வேலாயுதரே!
தேவதேவ தேவாதி தேவப் பெருமாளே--- தேவர்களுக்கும், தேவதேவர்களுக்கும் தனிப்பெரும் தலைவராக விளங்கும் பெருமையில் சிறந்தவரே!
கூறும் மார வேள்--- கூறப்படுகின்ற மாரவேள் ஆகிய மன்மதன் (விடுக்கின்ற மலர்க்கணைகளின்) தாக்கத்தாலும்,
ஆரவாரக் கடலாலே--- பேரொலி செய்யும் கடல் அலைகளின் தாக்கத்தாலும்,
கோப மீது மாறாத கானக் குயிலாலே--- கோபம் நீங்காத, குயிலின் இசைக்குரலாலும்,
மாறு போலும் மாதாவின் வார்மைப் பகையாலே--- மாறுபாடு கொண்டு வசைச் சொற்களை வீசுகின்ற தாயின் நியாயமான பகையாலும்,
மாது போதம் மால் ஆகி வாடத் தகுமோ தான்--- பெண்ணாகிய நான் அறிவு மயக்கம் கொண்டு, காம மயக்கத்தால்வாடுதல் நியாயம் ஆகுமோ?
பொழிப்புரை
அழகிய தோகையினை உடைய மயிலின் மீது ஏறி ஒலித்தல் செய்யும் வீரரே!
ஏழு உலகங்களுக்கும் பெருவாழ்வாக அமைந்த சேவற்கொடியோனே!
கோபித்து எழுந்த சூராதி அவுணர்கள் பொடியாகும்படி தாக்கிப் போர் புரிந்த வேலாயுதரே!
தேவர்களுக்கும், தேவதேவர்களுக்கும் தனிப்பெரும் தலைவராக விளங்கும் பெருமையில் சிறந்தவரே!
கூறப்படுகின்ற மாரவேள் ஆகிய மன்மதன் விடுக்கின்ற மலர்க்கணைகளின் தாக்கத்தாலும், பேரொலி செய்யும் கடல் அலைகளின் தாக்கத்தாலும், என் மீது கோபம் நீங்காதகுயிலின் இசைக்குரலாலும், மாறுபாடு கொண்டு வசைச் சொற்களை வீசுகின்ற தாயின் நியாயமான பகையாலும், பெண்ணாகிய நான் அறிவு மயக்கம் கொண்டு, காம மயக்கத்தால் வாடுதல் நியாயம் ஆகுமோ?
விரிவுரை
இத் திருப்புகழ்ப் பாடல் அகத்துறையில் அமைந்துள்ளது.
இறைவனை அடைகின்ற நெறிகள் நான்கு.
தாச நெறி --- ஆண்டான் அடிமைத் திறம்.
சற்புத்ர நெறி --- தந்தையும் மைந்தனுமாக நிற்றல்.
தோழ நெறி --- தோழமை கொண்டு வணங்குதல்.
நாயகிநாயக நெறி --- இறைவனைக் கணவனாகக் கொண்டு, ஆன்மா நாயகியாக நின்று அன்பு
செய்தல்.
இந்த நான்காவது நெறிதான் சாலவும் சிறந்தது. இதுவே சன்மார்க்கம் எனப்படுவது.
ஆண்டான் அடிமைத் திறத்திலே சிறிது அச்சம் நிற்கும். அதனை விட, நெருங்கிய தொடர்பு இறைவனைத் தந்தையாகக் கொண்டு தன்னை மைந்தனாகக் கொண்டு அன்பு செய்யும் சற்புத்திர மார்க்கத்தில் உண்டு. ஆண்டான் அடிமைத் திறத்தில் இறைவன் தந்த ஊதியத்தை மட்டும் பெறமுடியும். சற்புத்திர மார்க்கத்தில் இறைவனுடைய செல்வம் அத்தனையும் மைந்தனுக்கு உரியவைதான்.
இந்த சற்புத்திர நெறியினும் அதிக தொடர்பு உடையது தோழமை நெறி. மைந்தனைக் காட்டிலும் தோழன் அதிகமாக நெருங்கிப் பழகுவான்.
இந்தத் தோழமை நெறியினும் மிகமிகத் தொடர்புடைய நெறி சன்மார்க்கம். அதாவது நாயகி நாயக நெறி. தோழனுடைய உடைமைகளை எல்லாம் தோழன் அநுபவிக்கலாம். ஆனால் தோழனையே அநுபவிக்க முடியாது.
நாயகிநாயக நெறியில் கணவனுடைய உடைமைகளை அநுபவிப்பதோடு, கணவனையே அநுபவிக்கும் வாய்ப்பு உண்டு. நாயகியும் நாயகனும் இரண்டற்று ஒன்றுபட்டு உவக்கும் இன்பம் வேறு எதனிலும் எய்தாது.
இந்த நாயகிநாயக நெறியே நான்காவது நெறி. இத் திருநெறியை நன்கு விளக்கி அருளிய வித்தகர் மணிவாசகப் பெருமான். அவர் வழிவந்த, இராமலிங்க அடிகளும் இந் நெறியைப் பலவாறு பன்னிப்பன்னிப் பாடி, பரமசுகம் பெற்றார்.
"கண்உறங்கேன்,உறங்கினும்என் கணவரோடு கலக்கும்
கனவே கண்டு உளம் மகிழ்வேன்,கனவு ஒன்றோ?நனவின்
எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே
இணைந்து,இரவு பகல் காணா இன்புறச் செய்கின்றார்;
மண் உறங்கும், மலை உறங்கும், அலைகடலும் உறங்கும்,
மற்றும் உள எல்லாம் உறங்கும்,மாநிலத்தே நமது
பெண் உறங்காள் எனத் தாயார் பேசி மகிழ்கின்றார்,
பெண்கள் எலாம் கூசுகின்றார் பெரும் தவம் செய்திலரே!"
"கண்ண உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
கனவுஅன்றி இலைஎன்றேன்,அதனாலோ,அன்றி
எண்ணஉறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன்
என்று உரைத்தேன்,இதனாலோ எதனாலோ அறியேன்;
பெண் அடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள்,
பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்து அயலாள் ஆனாள்,
மண்அடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார்
வள்ளல்நட ராயர்திரு வுள்ளம்அறிந் திலனே".
"எல்லாஞ்செய் வல்லதுரை என்கணவர் என்றால்,
எனக்கும்ஒன்று நினக்கும்ஒன்றா என்ற அதனாலோ,
இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன்
என்றுசொன்னேன்,இதனாலோ எதனாலோ அறியேன்,
கல்லார்போல் என்னைமுகம் கடுத்துநின்றாள் பாங்கி,
களித்து எடுத்து வளர்த்தவளும் கலந்தனள் அங்குஉடனே
செல்லாமை சிலபுகன்று சிரிக்கின்றார் மடவார்,
சித்தர்நட ராயர்திருச் சித்தமறிந் திலனே".
"இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
ஏடி எனக்கு இணை எவர்கள் என்ற அதனாலோ,
எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்
என்றுசொன்னேன்,இதனாலோ எதனாலோ அறியேன்,
நச்சுமரக் கனிபோலே பாங்கிமனம் கசந்தாள்,
நயந்து எடுத்து வளர்த்தவளும் கயந்து எடுப்புப் புகன்றாள்,
அச்சம் இலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்,
அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே". ---திருவருட்பா.
இந்த உயர்ந்த நாயகிநாயக நெறியில் பரமகுருநாதராகிய அருணகிரிநாதப் பெருமானார், பற்பல திருப்புகழ்ப் பாடல்கள் பாடியிருக்கின்றார். அவற்றுள் சில அடிகள் பின் வருகின்றன...
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக் கண்டு, ...... அதனாலே
மால்கொண்ட பேதைக்கு, உன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத் தந்து ...... அருள்வாயே.
--- திருப்புகழ்.
வாரி மீதே எழு ...... திங்களாலே,
மாரவேள் ஏவிய ...... அம்பினாலே,
பார் எலாம் ஏசிய ...... பண்பினாலே,
பாவியேன் ஆவி ம ...... யங்கலாமோ....... --- திருப்புகழ்.
இரவிஎன வடவைஎன ஆலால விடம்அது என,
உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர,
இரதிபதி கணைகள்ரு ஒ நால் ஏவ, விருதுகுயில் ...... அதுகூவ,
எழுகடலின் முரசின் இசை, வேய்ஓசை, விடையின்மணி
இசை குறுகி, இருசெவியில்ரா நாராசம்ச உறுவது என
இகல்புரிய, மதனகுரு வோராத அனையர்கொடு ...... வசைபேச,
அரகர என வநிதைபடு பாடு ஓத அரிது அரிது,
அமுதமயில் அது கருதி யாரோடும் இகல் புரிவள்,
அவசம் உற, அவசம் உற, ஆரோமல் தரவுமிக ...... மெலிவானாள்
அகுதியிவள் தலையில்விதி, ஆனாலும் விலக அரிது
அடிமைகொள வஉனதுபரம் ஆறாத ஒருதனிமை
அவளை அணை தரஇனிதின் ஓகார பரியின்மிசை ...... வருவாயே. --- திருப்புகழ்.
தெருவினில் நடவா மடவார்
திரண்டொ றுக்கும் ...... வசையாலே
தினகர னெனவே லையிலே
சிவந்து திக்கும் ...... மதியாலே
பொருசிலை வளையா இளையா
மதன்தொ டுக்குங் ...... கணையாலே
புளகித முலையா ளலையா
மனஞ்ச லித்தும் ...... விடலாமோ... --- திருப்புகழ்.
கூறும் மாரவேள்---
வேள் - விருப்பம். விருப்பத்தை விளைவிப்பவன்.
திருமாலின் மனத்தினின்றும் பிறந்தவனாதலின் மதவேள், மன்மதன் எனப்பட்டனன். சித்தஜன் என்பதும் அப் பொருள் குறித்ததுவே.
எத்தகைய தேவர்களையும், பொறிபுலன்களை வென்ற முனிவர்களையும் நான் வெல்லுவேன் என்று துள்ளுகின்றவன் மன்மதன். மால், அயன், இந்திரன், சந்திரன், வாயு, ஆதித்தன், அக்கினி முதலிய அமரரையும், காசிபன், விசுவாமித்திரன், பராசரன், புலத்தியன்,வியாழன், விபாண்டகன் முதலிய முனிவரரையும், மதனன் மலர்க்கணைகளால் மயக்கி வெற்றி கண்டான்.
ஆனால் சிவபெருமானிடம் அவனது ஆற்றல் அழிந்து வெந்தான். சிவனடியார்களிடத்தில் அவன் ஆற்றல் அழியும். திருநாவுக்கரசு சுவாமிகளிடத்திலும், அருச்சுனனிடத்திலும், மாதவச் சிவஞான யோகிகளிடத்திலும் மதனன் ஆற்றல் அழிந்து தோல்வி உற்றான்.
இங்கே முருகனைக் காதலித்த ஆன்மா மதனனுடைய மலர்க்கணையினால் வருந்தி இறைவனைத் தழுவும் பொருட்டு அவாவுகின்றது.
மன்மதன் தேவர்கள் மீது மலர் வில்லும், மனிதர்கள் மீது கரும்பு வில்லும், அரக்கர்கள் மீது இரும்பு வில்லும் கொண்டு அமராடுவான்.
ஆரவாரக் கடலாலே ---
மன்மதனுக்குக் கடல் முரசம் ஆகும். அக் கடல் ஒலி பிரிவுத் துன்பத்தைப் பெருக்கிப் பெருந்துயர் விளைக்கும். இனிமையான கடல் ஒலி நாராசம் போல் இருக்கும். கணவனைப் பிரிந்து உள்ளம் கரிந்து, மிகவும் பரிந்து ஒரு தலைவி புலம்புகின்றாள். உள்ளத்தை உருக்கும்அத் தமிழ்ப் பாடல் பின்னே வருகின்றது.
ஆழிவாய் சத்தம் அடங்காதோ?நான் வளர்த்த
கோழிவாய் மண்கூறு கொண்டதோ?-- ஊழி
திரண்டதோ கங்குல்?தினகரனும் தேரும்
உருண்டவோ பாதாளத்துள்.
கோப மீது மாறாத கானக் குயிலாலே ---
மிகவும் இனிய குரல் உடையது குயில். அது சோலையில் வாழ்வது. மெல்லப் பறந்து வருவது. குயிலின் இனிய குரலும் பிரிவுத் துன்பத்தை அதிகப்படுத்தும். குயில் இயல்பாகக் கூவுவது காதலர்க்குத் துன்பத்தை விளைவிக்கும். எனவே, தம் மீது கோபம் கொண்டுதான் குயில் இசைக்கின்றது என்கின்றார்.
குயில் முட்டை இட்டதும், தாய்க்குயில் முட்டையை விட்டுப் போய்விடும். அம் முட்டையைத்தனு முட்டை என்று காக்கை அடைகாக்கும். முட்டை அவிழ்ந்து குஞ்சு வெளிப்பட்ட பின்னும் நிற உருவ ஒற்றுமையால் தன் குஞ்சு என்றே கருதிக் காக்கை உணவு ஊட்டி வளர்க்கும். குயில் குஞ்சு சிறிது வளர்ந்து கூவத் தொடங்கியவுடன், வளர்ப்புத் தாயாகிய காக்கை அடித்து விரட்டிவிடும்.
இக் கருத்தை மனதில் கொண்டு, பிரபுலிங்கரை விரும்பிக் காதல் தீயினால் கரிந்து வாடும் மாயை புலம்புகின்றாள்.
"ஏ, குயிலே! நீ பிறந்தவுடன் வடிவமேனும் குரலேனும் காணா முன்னும் கேளா முன்னும், உன் தாயான குயில் உன்னை விட்டுப் பிரிந்தாள். அன்புடன் வளர்த்த காக்கையாகிய செவிலியோ உன் குரல் கேட்டவுடன் உன்னை வெறுத்து அகலும். எங்கும் பெற்றவளும் வளர்த்தவளும் குழந்தையை விருப்புடன் ஆதரிப்பார்களே அன்றி, வெறுப்புற மாட்டார்கள். உன்னைக் கண்டு உன்னைப் பெற்றவளும் வளர்த்தவளும் இளமையிலேயே வெறுத்து அகல்வார்களாயின், உன் கொடுமை அதனாலேயே புலப்படுகின்றது. ஆகவே, நான் உன்னை வெறுப்பதில் குற்றம் ஒன்றும் இல்லை"
மாறு போலும் மாதாவின் வார்மைப் பகையாலே ---
வார்மை - நேர்மை. நியாயமான முறை.
மேலே கூறப்பட்ட திருவருட்பாப் பாடல்களை நோக்கினால், தனது பெண் கொண்டுள்ள காதல் காரணமாக, தாய் மனம் நொந்து பகையாவாள் என்பது தெரியவரும். அது தாயைப் பொறுத்தமட்டில் நியாயமான பகையே ஆகும்.
No comments:
Post a Comment