திருத்தொண்டர் பெருமை
-----
மனிதன் எல்லாச் செல்வங்களையும் மதிப்பது இல்லை. பெரும்பாலான மக்கள் மதிப்பது பொருட்செல்வம் ஒன்றைத் தான். இறைவன் திருவருளுக்காக ஏங்கி நிற்பவர்கள் மதிப்பது அருட்செல்வம் ஒன்றைத் தான். நாம் நம்முடைய புறக் கண்ணைக் கொண்டு பார்த்து அந்தக் காட்சியை மதிக்கிறவர்கள். இந்தக் கண் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கியை இருக்கும். காலத்திற்கும் இடத்திற்கும் கட்டுப்பட்டிருக்கும் நாம் அந்த எல்லைக்குள் அடங்கியவற்றையே புறக்கண்ணால் காண முடியும். "இப்போது சோறு வேண்டும்; நாளைக்குச் சோற்றுக்குப் பணம் வேண்டும்" என்று நம்மால் நினைக்க முடிகிறது. நாள்தோறும் மனம் விரும்பும் உணவு உண்டு, நல்ல வீட்டில் வாழ்ந்து, ஆடை அணிகளைப் புனைந்து, கருவிப் பொருள்களைப் பெற்று வாழ வேண்டுமென்று நினைக்கிறோம். தொடர்ந்து வாழ்க்கை நடைபெறுவதற்குப் பயன்படும் கருவி பொருள் என்று நமக்குத் தெரிகிறது. அதனால் பணத்தைச் சேமித்து வைக்கிறோம்.
முதல் நாள் ஆக்கிய சோற்றை நீரில் போட்டு வைத்திருந்து மறுநாளும் உண்பவர்கள் ஏழைகள். அவர்களும் அந்தச் சோற்றை இரண்டு மூன்று நாளைக்கு வைத்துக் கொள்ள முடியுமேயொழிய நெடுநாள் வைத்திருக்க முடியாது. அப்படி வைத்திருந்தால் சோறு வீணாகி விடும். ஆகவே, அவர்கள் பலநாளைக்குப் பயன்படும் அரிசியை வாங்க வேண்டியிருக்கிறது. பிச்சைக்காரனோ ஒவ்வொரு நாளைக்கும் பிச்சைச் சோறு வாங்கி உண்கிறான். அவனைவிட ஒரு வேளை சோறாக்கி அதனை மூன்று வேளைக்குச் சாப்பிடுகிறவன் பணக்காரன். ஒவ்வொரு வேளையும் சூடாகச் சோறாக்கி உண்ணுகின்றவன் அவனையும் விடப் பணக்காரன். அந்த அந்த வேளைக்குச் சில்லறையாக அரிசி வாங்குபவனை விட ஒரு மாதத்திற்கு மொத்தமாக மூட்டை அரிசி வாங்கிச் சாப்பிடுகிறவன் இன்னும் பணக்காரன். அதுபோலவே ஆண்டுக்கு வேண்டிய அரிசிக்கு நெல்லாகக் குதிரில் கொட்டி வைக்கிறவன் பெரிய பணக்காரன். நெல் கூடச் சில ஆண்டுகளுக்கே இருக்கும். பல காலத்திற்கும் நெல் விளைந்து பயன்படும் என்று நிலமாக வாங்கிப் போட்டிருப்பவன் எல்லோரையும் விடப் பணக்காரன்.
ஒரு வேளை சோறு உண்டவனுடைய முயற்சி நீளுமானால் மறுவேளைக்குச் சோறு கிடைக்கிறது. அந்த முயற்சி பின்னும் நீளுமாயின் மாதம் முழுவதும் தட்டுப்பாடு இல்லாமல் சோறு உண்ணும் வசதி கிடைக்கிறது. மனிதனுடைய முயற்சிக்கு ஏற்ற செல்வம் உண்டாகிறது. செல்வம் அதிகமாக இருந்தால் பல காலத்திற்கு நன்றாக வாழலாம் என்ற எண்ணத்தினால்தான் மனிதன் பணத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறான். உலகத்தில் நன்றாக வாழ்கிறவர்கள் என்று பணம் படைத்தவர்களைச் சொல்கிறார்கள். பணம் இல்லாதவர்களை வாழத் தெரியாதவர்கள் என்று சொல்கிறார்கள்.
பணம், கல்வி ஆகிய இரண்டிலும் கல்வியைச் சிறந்ததாகப் பெரியவர்களும் அறிவாளிகளும் சொல்கிறார்கள். ஆனாலும் உலகத்தில் பெரும்பாலான மக்களுக்குப் பணத்தில்தான் மதிப்பு உண்டாகிறது. கல்வி பெரியது என்று வாயால் சொல்வார்கள். நேரம் வாய்த்தால், கல்விச் செல்வத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் பொருட்செல்வத்திற்கே மதிப்புக் கொடுப்பார்கள். ஒரு பெரிய விருந்து நடக்கிறது. நூல் ஆயிரம் படித்த பெரியவன் ஒருவன் அந்த விருந்துக்குப் போகிறான். ஒன்றுமே படிக்காத அறிவிலி ஒருவன் வருகிறான். படித்தவன் எளிமையாக சிறிய மேல் துண்டும் சாதாரண வேட்டியும் அணிந்து கொண்டு நடந்து வந்து உள்ளே நுழைகிறான். அவன் ஏழை. ஆனால் அறிவிலியாக இருப்பவன் பணம் படைத்தவன். நல்ல ஆடை அணிகளைப் புனைந்து கொண்டு காரில் போய் இறங்குகிறான். விருந்துக்கு வருகிறவர்களை வரவேற்பதற்காக அங்கே நிற்பவர்கள் "எல்லாம் படித்த புலவனாயிற்றே; ஒழுக்கத்தில் சிறந்தவன் ஆயிற்றே" என்று எண்ணி, கற்றவனை வரவேற்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இன்னும் இந்த உலகம் வளரவில்லை. கார் வந்து நின்றவுடன் அதில் வந்து இறங்கிய கற்றறியா மூடனுக்குக் கைலாகு கொடுத்து வரவேற்பார்கள். பன்னீரைத் தெளிப்பார்கள். பூச்செண்டைக் கொடுத்து உள்ளே அழைத்துப் போவார்கள். கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றைவிடப் பணமே உலகில் மதிப்பைப் பெறுகிறது. "கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்று ஔவைப் பிராட்டி கூறியது அந்தக் காலம்.
"நேரா அழுக்குத் துணி ஆகில், உன்தனை நேரில் கண்டும்
பாராதவர் என நிற்பார்,உடுத்தது பட்டு எனிலோ,
வாராது இருப்பது ஏன்?வாரும் என்பார், இந்த வஞ்சகர்பால்
சேராது, நன்னெஞ்சமே! ஒற்றியூரனேச் சேர் விரைந்தே"
என்று வள்ளல்பெருமான் பாடி அருளியது, இன்றையஉலகியல் நிலையைத் தெள்ளத் தெளிவாகவே காட்டுகின்றது.
ஒழுக்கத்தில் தளர்ந்தவனாக இருந்தாலும், அறிவிலே குறைந்தவனாக இருந்தாலும் பணக்காரன் தன்னிடத்திலுள்ள பணத்தை ஆடையாலும்,அணியாலும்,ஆடம்பரத்தாலும் விளம்பரம் செய்து கொள்வதைக் கண்டு உலகம் மயங்குகிறது. எவ்வளவு நூல்களைப் படித்த புலவனாக இருந்தாலும் இவ்வுலகம் அவனை மதிக்காது. அதனால்தான், பெரிய பேச்சாளர்கள், இசை விற்பன்னர்கள் முதலியோர் ஆடம்பரமாக உடையணிந்து வருகின்றதைக் காணாலம். காரணம், சபையினர் தம்மை மதிக்கவேண்டும் என்பதே. அவர்கள் தம்முடைய மதிப்பை வித்தையினால் புலப்படுத்தலாம். அதற்கு முன்பு அவர்கள் சபையில் போகவேண்டும் அல்லவா? அதற்கு ஆடம்பர உடையும் அணிகலன்களும் தேவைப்படுகின்றன.
நையாண்டிப் புலவர் தனது அனுபவத்தைப் பாடுகின்றார்...
"மேலாடை இன்றிச் சபை புகுந்தால், இந்த மேதினியோர்
நாலாயிரம் படித்தாலும் எண்ணார்,நுவல் பாற்கடலோ
மால் ஆனவர் மணி பொன்னாடை கண்டு மகளைத் தந்தே,
ஆலாலம் ஈந்தது தோலாடை கற்றும் அரன் தனக்கே!"
இதன் பொருள் ---
மேலாடை இன்றிச் சபை புகுந்தால் - உடலின் மேல் சிறந்த உடையை உடுத்துக் கொள்ளாமல்ஒரு சபைக்குள்ளே நுழைந்தால், இந்த மேதினியோர் - இந்த உலகத்தவர், நூல் ஆயிரம்படித்தாலும் எண்ணார் - அங்ஙனம் சபையில் புகுந்தவர் பல நூல்களை ஆயிரக் கணக்கில் கற்று இருந்தாலும்மதிப்பது இல்லை. நுவல் பாற்கடலோ - சிறப்பாகப் பேசப்படும் திருப்பாற்கடலானது, மால் ஆனவர் மணி பொன் ஆடை கண்டு - திருமால்அணிந்திருக்கும் பட்டுப் பீதாம்பரத்தைப் பார்த்து, மகளைத் தந்தே - தன்னிடத்தில் பிறந்த திருமகளை அவருக்கு தந்துவிட்டு, தோல் ஆடை சுற்றும்அரன் தனக்கே - புலித்தோலை உடையாகத் தரித்த சிவபெருமானுக்கு, ஆலாலம் ஈந்தது - ஆலகால விடத்தைக் கொடுத்தது.
இப் பாடலின் மூலம், இது இந்த உலகத்தில் மாத்திரம் நடப்பது அல்ல, மேல் உலகத்திலும் அப்படித்தான் என்று தெரிகின்றது. பட்டுப் பீதாம்பரங்களை அணிந்து இருந்த திருமாலுக்கு அவரது ஆடம்பரத்தைக் கண்டு மயங்கி, திருப்பாற்கடலானது அவருக்குத் தான் பெற்ற திருமகளைத் தந்தது. ஆனால் திருப்பாற்கடலைக் கடைந்து ஆலகால விடம் வெளிப்பட்ட காலத்தில் சிவபெருமான்பட்டுப் பீதாம்பரம் உடுத்துக் கொண்டு வரவில்லை. பொன்னாடை வேண்டாம்; சாதாரண நூல் ஆடையேனும் கட்டிக் கொண்டு வரவில்லை. தோல் ஆடையையாவது நாகரிகமாக அணிந்து இருந்தானா? என்றால் அதுவும் இல்லை. சும்மா இடுப்பில் சுற்றிக் கொண்டு வந்திருந்தான். அவனுக்குத் திருப்பாற்கடல் விடத்தை அளித்தது.
"கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள்,
செல்லாது அவன்வாயில் சொல்".
என்று அன்றே பாடி வைத்தார் ஔவைப் பிராட்டியார்.
இக்காலத்தில் இது மிகுதியாகி விட்டது. அதனால் பொருட் செல்வத்தைக் குவித்துக் கொள்ளும் ஆசை எங்கும் தாண்டவம் புரிகின்றது. இன்று பிச்சைக்காரனுக்கு ஒரு பிடி அரிசி போட்டால் அவன் மதிப்பது இல்லை. காசு கொடுத்தால், கொடுத்தவனுக்கு ஒன்பது கும்பிடு போடுகிறான். ஏழைகளுக்கே பணத்தாசை இருக்கிறதென்றால பணக்காரனைப் பற்றிச் சொல்லவா வேண்டும். பணம் படைத்தவன் தன்னிடம் இருக்கும் பணம் போதும் என்ற மன நிறைவு இல்லாமல் பின்னும் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறான். அதற்கு எந்த வழியானாலும் பரவாயில்லை என்னும் மனப்பாங்கு உள்ளது.
வாமனராகக் குறுகிய உருவம் தாங்கி வந்த திருமால் மூன்று உலகங்களையும் பெறவேண்டுமென்று ஆசைப்பட்டார். அவர் திரிவிக்கிரம அவதாரம் எடுத்துக் கொண்டு தம்முடைய இரண்டு அடியினால் மூன்று உலகங்களையும் அளந்தார். அதைக் கேட்டு நாம் வியக்கிறோம். ஆனால் நம்முடைய நெஞ்சமோ இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. ஆயினும் ஒரே விநாடியில் மூன்று உலகங்களையும் அளந்துவிடும் வகையில் திருமாலை விடவும் விரிந்து செல்கின்றது. மனத்தில் உண்டாகின்ற ஆசைக்கு அளவு என்பது இல்லை. ஆசைதான் துன்பத்திற்குக் காரணம் என்பதெல்லாம் மறந்து போய்விடுகின்றது.
எல்லையற்று விரிந்துகொண்டு போகும் ஆசையை அழித்து, பற்றை ஒழித்து, உலகப் பொருள்களை அறத்தை விடுத்து, இறைவன் திருவருளை அளக்கிற நெஞ்சமே நல்ல நெஞ்சம். நம்முடைய நெஞ்சமோ உலகத்திலுள்ள சொத்துக்களை நாம் பெறவேண்டுமென்று அளந்து கொண்டிருக்கிறது. செல்வத்தைப் பலவகையிலும் சேர்த்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து அவர்களுடைய செல்வம் நீரில் எழுத்துப் போல அழிந்து விடும் என்று அறியாமல, நாம் அவர்களைப் போல ஆக வேண்டுமென்ற ஆசை நீளுகின்றது.
இந்த நெஞ்சத்தை,"நெடுநெஞ்சம்"என்றும், "பாவி நெடுநெஞ்சம்" என்றும் அருணகிரியார் கூறுகின்றார். இது அறியாமையால் வந்தது. அறிவு மயக்கத்தால் வந்தது. நமது நெஞ்சமானது, பொருட்செல்வத்தை ஈட்டுவதில் நோக்கம் வைத்து, நாள்தோறும் எட்ட முடியாததை எட்டிப் பிடிக்கத் தாவுகிறது. எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதைத் தெரிந்து கொள்வது இல்லை. நமக்கு வேண்டாதவற்றை எல்லாம், நம்முடைய துன்பத்தை மிகுதியாக்குவதற்குக் காரணமானவற்றை எல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறது. மன அமைதியைக் குலைப்பதற்குக் காரணமான பொருள் முதலியவற்றையே நாடி நாடி அலைந்து ஏங்கி நிற்கிறது. "தண்டு தாவடி போய்த் தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம் நீரில் பொறி என்று அறியாத பாவி நெடுநெஞ்சமே" என்கின்றார் அருணகிரியார்.
"தண்டு தாவடி போய், தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம் நீரில் பொறி என்று அறியாத பாவி நெடுநெஞ்சமே!" என்று மனதுக்கு அறிவுரை பகருகின்றார் அடிகளார். தண்டு என்பது சேனை. தாவடி போதல் --- காலை வீசி நடத்தல்; தாவித் தாவிச் செல்லுதல். வீரர்கள் போர்க்களத்தில் நடக்கும் நடையைத் தாவடி போதல் என்று சொல்வார்கள். அடி வைத்துத் தாவிச் செல்பவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். நீரில் பொறி - நீரில் எழுதும் எழுத்து. தேர், யானை, குதிரை ஆகிய படைகளோடு சண்டைக்குப் போய்த் திரிகின்ற அரசர்களுடைய செல்வம் எல்லாம் நீரில் எழுதிய எழுத்துப் போன்றவை என்பதை அறியாத பாவி நெடுநெஞ்சமாக நமது நெஞ்சம் உள்ளது.
பணம் படைத்தவர்களிடம் உள்ளது உண்மையான செல்வமாக இருந்தால் மனத்திற்கு அமைதியும், மகிழ்ச்சியும் கொடுக்க வேண்டும். நன்றாக வாழ்வதற்குச் செல்வம் வேண்டுமென்ற நினைப்பிலே அதனை நிறையச் சேமித்துக் கொண்டிருக்கிறவர்கள் எல்லோரும் நன்றாக வாழ்கிறார்களா என்று கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால் உண்மை விளங்கும். செல்வத்தைப் பெற்றவர்களுக்குத் திருப்தி உண்டாவதில்லை. அதனால் குமருகுருபர அடிகளார் "செல்வம் என்பது சிந்தையின் நிறைவே" என்றும், "அல்கா நல்குரவு அவா எனப்படுமே" என்றும் கூறினார். மனத்தில் உண்டாகிற நிறைவுதான் உண்மையான செல்வம், மேலும் மேலும் வேண்டுமென்ற ஆசையே வறுமை என்றார். எத்தனை செல்வம் இருந்தாலும், அவன் செல்வனாக வாழாமல், "இன்னும் போதவில்லையே!' என்று ஏழையாகவே வாழ்கிறான். "நமக்குக் கிடைத்தது போதும். இறைவன் இந்த அளவுக்கு நம்மை வைத்திருக்கிறானே"என்று திருப்தியாக வாழ்கிறவர்களே உண்மையில் செல்வர்களாக ஆகிறார்கள்.
செல்வம் சேரச் சேர அவர்களுக்குக் கவலைகளும் சேர்ந்து விடுகின்றன. மனத்தில் அமைதி குலைகிறது. பொருட்செல்வம் மனத்தில் அமைதியைத் தராது என்பதை நன்றாகத் தெரிந்து கொண்ட பெரியவர்கள், அதைத் தருகின்ற வேறு செல்வம் எது என்று ஆராய்ந்தார்கள். இறைவனது திருவருட்செல்வம் உலக வாழ்க்கையிலும் சிறந்த இன்பத்தைத் தரும் என்று கண்டு கொண்டார்கள். அதனைக் கண்டு கொண்ட அடியவர்களில் வாழையடி வாழை என வந்த மரபில் அருணகிரிநாதரும் ஒருவர்.
உலகத்துப் பொருட்செல்வத்தை மதிக்காத அருட்செல்வர்கள் தாம் அமைதியைப் பெறுவதோடு பிறருக்கும் அமைதியைத் தருகின்ற ஆற்றல் படைத்தவர்கள். அமைதி இல்லாத மக்கள் அமைதியைப் பெறவேண்டுமானால் தாமாகப் பெற்றுக் கொள்ள முடியாது. அமைதியைப் பெற்ற தொண்டர்களுடைய கூட்டத்தில் சேருவதால் பெறமுடியும். அருட்செல்வம் பெற்ற தொண்டர்களைச் சார்ந்தால்தான் கதி உண்டு என்பதை அருணகிரியார் வற்புறுத்துகிறார். எனவே, "சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தோன் தொண்டர் குழாம் சாரில் கதி அன்றி வேறு இல்லை" என்று அருளிச் செய்தார்.
உண்மைத் தொண்டர்களுக்கு முத்தியைப் பெற்ற பிறகுதான் இன்பம் உண்டு என்பது இல்லை. அவர்கள் இந்த உலகத்திலேயே இன்பத்தைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு கணமும் அமைதியோடு வாழ்கிறார்கள். வறுமை, நோய், கவலை என்பவற்றைக் கண்டு அவர்கள் அஞ்சுவது இல்லை. அவர்கள் உள்ளம் எப்போதும் நோய் அற்றதாக, வறுமை அற்றதாக, கவலை அற்றதாக விளங்குகிறது. இறைவனுடைய திருவருள் நிச்சயமாக நமக்குத் துணை இருக்கிறது என்ற நினைவு எப்போதும் சுருதி ஓடுவதால் அவர்களிடம் அச்சம் என்பதே இல்லை. இறைவனுக்குத் தொண்டு பூண்டவன் நான். எனவே, "அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை"என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறார். உண்மைத் தொண்டர்களைப் பார்த்தால் ஏழை போல இருப்பார்கள். இடையில் கந்தையும், கோவணமும் இருப்பினும் அவர்கள் உள்ளத்தில் உறுதி வைரம் போலப் பாய்ந்து இருக்கும். அவர்களைப் போன்ற வீரர்கள் யாரும் இல்லை.
"ஆரம் கண்டிகை, ஆடையும் கந்தையே,
பாரம் ஈசன் பணிஅலது ஒன்று இலர்;
ஈர அன்பினர்; யாதும் குறைவிலார்;
வீரம் என்னால் விளம்பும் தகையதோ!"
என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் இறைத் தொண்டர்களை வியந்து பாடுகிறார்.
ஆண்டவனைச் சார்ந்து அவனுடைய அருட்செல்வத்தைப் பெறுவது நல்லது என்று சொல்வதைவிட்டு, தொண்டர் குழாத்தைச் சாருவதுதான் கதி என்று அருணகிரியார் சொல்கிறாரே என்ற கேள்வி எழலாம். இறைவன் திருவருளை நேரே பெறுவது என்பது அரிய காரியம். அந்த அருளைப் பெறுவதற்கு எத்தனையோ தகுதி வேண்டும். செல்வத்தையும், செல்வம் படைத்தவர்களையும் கண்டு மயங்கி அவர்களைப் போல நாமும் இருக்க வேண்டுமென்று ஒவ்வொரு கணமும் கவலைப்பட்டு, முயற்சி பண்ணி, அது பலித்தால் மேலும் செல்வத்தை ஈட்டவேண்டுமென்று நினைத்து, ஐயோ ஆசை நிறைவேறவில்லையே என்று துன்புற்று வாழ்கிற வாழ்க்கையைப் போன்ற அவலம் வேறு இல்லை. இந்த அவல வாழ்க்கையில் பற்றுக் கொண்டவர்களுக்குத் திடீரென்று இறைவன் சார்பு கிடைத்துவிடாது. ஆனால் தொண்டர்களுடைய, அடியார்களுடையதிருக்கூட்டத்தில் சேர்ந்து கொண்டார்களானால் அவர்களுடைய சேர்க்கைச் சிறப்பால் தெளிவு பெறுவார்கள். மெல்ல மெல்லச் செல்வத்தின்பாலும், செல்வர்களின்பாலும் உள்ள பற்று நழுவிவிடும். இறைவன் திருவருள் இன்பம் ஏறும்.
இறைவன் நமக்கு நேரே இன்பத்தைத் தருவதைக் காட்டிலும் தன் தொண்டர்கள் மூலமாகத் தருகிற இன்பம் பெரிது. காவிரி ஆற்றில் பாய்ந்து வருகின்ற வெள்ளம்,நேரே வயல்களுக்குப் பாயாது. கால்வாய் மூலமாகவும், மடையின் மூலமாகவும் பாய்ந்தால்தான் வயல்களுக்குப் பயன் உண்டு. நேரே பாய்ந்தால் வய ல்கள் அழிந்து போகும். அப்படி,தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெறும்படியாகச் செய்கிறவர்கள் தொண்டர்கள். இறைவனைக் காட்டிலும் தொண்டர்கள் மிக்க பயனைத் தருவார்கள். அவனைவிடத் தொண்டர்கள் பெரியவர்கள். இதனை ஒளவைப் பிராட்டி சொல்கிறார்.
நாம் வாழ்கிற இந்த உலகம் மிகப் பெரியது. பெரிய பொருளுக்கு உவமை சொல்ல வேண்டுமானால் இந்த நிலத்தைச் சொல்வார்கள். இவ்வளவு பரப்பும், விரிவும் உடைய இந்த நிலம் நாம் காணும் பொருள்கள் எல்லாவற்றினும் பெரியது. எனவே,பரந்து விரிந்துள்ள இந்த நிலவுலகத்தைப் படைத்த பிரமன் இதைவிடப் பெரியவனாக இருக்க வேண்டும். புவனம் பெரியதானால் இதைப் படைத்த பிரமன் இதைவிடப் பெரியவன். அந்த பிரமனும் வேறு ஒருவனுடைய படைப்பு. திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றியவன் அவன். எனவே, பிரமனைக் காட்டிலும் திருமால் பெரியவன். அவ்வளவு பெரியவனாகிய திருமால் திருப்பாற்கடலில் அறிதுயில் கொள்கிறான். ஆகையால், திருமாலைக் காட்டிலும் திருப்பாற்கடல் பெரியது. கடல் பெரிதாக இருந்தாலும், அகத்திய முனிவர் அந்தக் கடலைத் தம்முடைய கையில் எடுத்துக் குடித்துவிட்டார். எனவே கடலை விடக் குறுமுனி ஆகிய அகத்தியர் பெரியவர். அவர் கலசத்தில் பிறந்தவர். அதனால் குடமுனி என்ற பெயரைப் பெற்றார். ஆகையால் குறுமுனி ஆகிய அகத்தியரை விட, அவர் பிறந்தகுடம் பெரியது என்றுதான் கொள்ள வேண்டும். அந்தக் கலசமோ மண்ணால் ஆனது. மண் மிகப் பெரியது. அந்த மண்ணோ ஆதிசேடனுக்கு ஒரு தலைச் சுமையாக இருக்கிறது. ஆகவே மண்ணைச் சுமக்கும் ஆதிசேடன் பெரியவன் ஆகின்றான். அந்த ஆதிசேடனை உமாதேவியார் தனது சிறுவிரலில் மோதிரமாக அணிந்துகொண்டு உள்ளாள். அந்த இறைவியே பின்னும் பெரியவள். அப்படிப்பட்ட இறைவியைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் அடக்கிக் கொண்டிருக்கிற சிவபரம்பொருள் எல்லோரையும் விடப் பெரியவர். அவ்வளவு பெரியவரைத் தொண்டர்கள் தம்முடைய உள்ளமாகிய கமலத்திற்குள் அடக்கி வைத்திருக்கிறார்கள். ஆகையால் தொண்டர்களுடைய பெருமை மிக மிகப் பெரிது.
முருகப் பெருமான்,பெரிதினுக்கு எல்லாம் பெரியது எது? என்று கேட்டபோது, "தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்று சொன்னார். நாம் வாழுகின்ற இந்தப் பூமியில் இருந்து தொடங்கி, பெரியதாக மனிதர்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்ற அனைத்தையும் வரிசைப்படுத்தி, நாம் எளிதாக நினைத்துக் கொண்டு இருக்கின்ற அடியவர்கள், திருத்தொண்டர்கள்தான் உண்மையில் பெரியவர் என்பதை மிக அழகாக உணர்த்தி இருக்கின்றார்.
"பெரியது கேட்கின்,எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது;
புவனமோ நான்முகன் படைப்பு;
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்;
கலசமோ புவியில் சிறுமண்;
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்;
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" --- ஔவையார்.
"நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன், அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தன்" என்றும், "மறவாதே தன்திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலானைத் திருமுதுகுன்று உடையான்தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே" என்றும், "காலையும் மாலையும் கைதொழுவார் மனம் ஆலயம் ஆரூர் அறநெறியார்க்கே" என்றும் அப்பர் பெருமான் பாடி உள்ளார். "அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கி, ஞானப்புகல் உடையோர் தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர்" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான். புண்டரிகம் --- தாமரை. உள்ளப் புண்டரிகம் --- உள்ளமாகிய தாமரை.
"மலர்மிசை ஏகினான்" எனத் திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறளுக்கு விளக்கம் அளித்த பரிமேலழகர், "அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண், அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் "ஏகினான்" என்று இறந்த காலத்தால் கூறினார் என்று அளித்துள்ள விளக்கம் அருமை வாய்ந்தது.
"நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சன நீர்,பூசை கொள்ள வாராய் பராபரமே" என்று தாயுமான அடிகளார் கூறியுள்ளதும் இங்கு வைத்து எண்ணத் தக்கது. எனவே,பெரிதினுக்கு எல்லாம் பெரிய சிவன், அடியருள் அடக்கம் ஆவான் என்று அரிய ஔவை சொன்னதால், அடியவர்கள்தான் மிகப் பெரியவர்கள். அவர்களது எளிமை நோக்கி இகழுதல் கூடாது. "பணியுமாம் என்றும் பெருமை,சிறுமை அணியுமாம் தன்னை வியந்து" எனத் திருவள்ளுவ நாயனார் அருளியபடி, பெரியவர்கள் என்றும் அடக்கத்துடன்தான் இருப்பார்கள். அவர்களை இகழுதல் கூடாது. சிறுமை மதி படைத்தவர்கள் தன்னை வியந்துகொண்டு, ஆடம்பரத்தோடுதான் இருப்பார்கள். அது பெருமைக்கு உரியது அல்ல. "அருமையில் எளிய அழகே போற்றி" என்றார் மணிவாசகப் பெருமான்.யாவர்க்கும் அரியவன் என்பது இறைவனது உண்மை நிலை (சொரூப நிலை). எளியவனாய் வந்து அடியவர்க்கு அருள் புரிதல் இறைவனது அருள் நிலை. இதனை வடநூலார் "சௌலப்பியம்" என்பர். "இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணா எம்மானை, எளிவந்த பிரானை" என்பார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
ஒரு பெட்டிக்குள் ஏதேனும் ஒரு பொருள் அடங்கியிருந்தால் அந்தப் பொருளைக் காட்டிலும் பெட்டி பெரிது என்பதைச் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. அப்படியே இறைவனைத் தமது உள்ளத் தாமரையில் அடக்கிக் கொண்ட பெரிய பெட்டியாகிய தொண்டர்கள் பெரியவர்கள் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. எனவே, திருத்தொண்டர்களை எளிதாக எண்ணிவிடக் கூடாது.
No comments:
Post a Comment