கற்ற கல்வியும், பெற்ற அறிவும் எதற்கு?

 


ஓதிய கல்வியும்,பெற்ற அறிவும் எதற்கு?

-----

 

"யாம் ஓதிய கல்வியும்எம் அறிவும்

தாமே பெறவேலவர் தந்ததனால்

பூமேல் மயல்போய் அறம் மெய்ப் புணர்வீர்

நாமேல் நடவீர்நடவீர் இனியே".

 

என்னும் கந்தர் அனுபூதிப் பாடலின் வழி அருணகிரிநாதப் பெருமான் உலகில் வாழும் மக்களுக்கு ஓர் ஒப்பற்ற அறிவுரை கூறி உள்ளார்.

 

     நாம் கற்ற கல்வியும் அதனால் பெற்ற அறிவும் வேலாயுதப் பெருமான் தானே உவந்து நமக்கு அருளியவை. அவற்றை அவனே மீண்டும் நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காகவே கொடுத்தான். எனவேஇனிமேல் உலக வாழ்வின் மேல் நீங்கள் கொண்டுள்ள அறிவு மயக்கத்தை ஒழித்து அற வழியில் ஒழுகுவதை உண்மையாக மேற்கொண்டு, (அருளனுபவத்தைப் பெற்றுஅந்த அருளனுபவத்தால் உண்டான இன்பத்தை) மற்றவர்க்கும் உங்களின் நாவால் எடுத்து உரைப்பீராக. இதுவே அருணகிரிநாதப் பெருமான் கூறியருளிய அறிவுரை.

 

     திருவள்ளுவ நாயனார் அருளிய பொதுமறை என்னும் திருக்குறளில் காணும் அதிகார முறைப்படி பார்த்தால்மனிதனாகப் பிறந்தவனுக்கு முதலில் கல்வி வேண்டும்கல்லாமை கூடாதுகல்வியைக் கற்றதன் பயனாக அறிவுடைமையும் வேண்டும் என்பது தெளிவாகும். கல்வி மனிதனுக்கு மிகமிக அவசியம். அது கண்ணைப் போன்றது. என்பதால், "கண் உடையர் என்பவர் கற்றோர்" என்றும்முகத்தில்தான் கண்கள் உள்ளனவே என்றால்அவை முகத்தில் உள்ள புண்கள் என்றும் காட்டினார். கற்றல் என்பது ஒருவனுடைய வாழ்நாளில் முற்றப் பெறுவது அல்ல. அது தொடர் முயற்சி. எனவேசாகும் வரையிலும் ஒருவன் கற்றலை விடக் கூடாது. சாகும் வரையிலும் கூடக் கல்லாமல் இருத்தலும் கூடாது. "என் ஒருவன் சாந் துணையும் கல்லாதவாறு?" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     எனவேகல்வி அறிவு இல்லாமல் மனிதன் வாழ்வில் உயர்நிலையை அடையமுடியாது. கல்வி என்பது மனப் பயிற்சியால் வருவது. அறிவு என்பது உயிரினுடைய பண்பு அல்லது குணமாக மிளிருவது. "கற்றது கைம்மண் அளவுகல்லாதது உலகு அளவு" என்றார் ஔவைப் பிராட்டியார். கல்வியை எவ்வளவு காற்றலும்அதனாலேயே ஒருவனுக்கு அறிவு வருவது இல்லை. கல்வியைக் கசடு அறக் கற்றால்அறிவும் வளரும். கல்வி என்பது,கற்றதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் படிப்பு ஆகும். எனவேநிறைய நூல்களைக் கற்று விட்டோம் என்று யாரும் செருக்குக் கொள்ளுதல் கூடாது. "முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதூஉம் கற்றனம் என்று களியற்க" என்பது குமரகுருபர அடிகளார் அருள்வாக்கு.எல்லாம் தெரிந்தவர் உலகத்தில் ஒருவரும் இல்லைஆதலால்,எல்லாவற்றையும் கற்றுவிட்டோம் என்று செருக்குக் கொள்ளாதே என்கின்றார். எதுவுமே இறைவன் அருளால் வந்தவை. அவனருளால் வந்தவற்றை அவனுக்கே அர்ப்பணித்துஅவன் அருளைப் பெற முயலுதல் அறிவுடைமை ஆகும்.

 

     மனித உடம்பின் உள்ளேயும் வெளியேயும் கருவிகள் உள்ளன. வெளியே உள்ள கருவிகள் கண்ணுக்குப் புலனாவன. உள்ளே இருக்கும் கருவிகள் நம்மால் காணமுடியாதவை. கடிகாரம் போன்ற பொருள்களின் உள்ளே உள்ள கருவிகளைக் கழற்றிப் பார்த்துக் கொள்ளலாம். கண்ணுக்குப் புலனாகாத கருவிகள் ஆகிய மனம்புத்திசித்தம்அகங்காரம் ஆகியவைநமது உடம்பில் உள்ளன. இவை வேலை செய்யவில்லை என்றால்நமது உடம்பில் வெளியில் உள்ள கருவிகள் வேலை செய்யமாட்டா. 

 

     வீடு அழகாக இருந்தால் மட்டும் போதாது. வீட்டில் இருந்து வேலை செய்பவரும்வீட்டினை விட்டு வெளியில் சென்று வேலை செய்பவரும் செம்மையாகத் தத்தமது வேலைகளைச் செய்து வருதல் வேண்டும். உள்ளே இருப்பவர் தான் முதன்மையானவர். அப்பொழுதுதான் இல்லறம் செம்மையாக நடக்கும். 

 

     எனவேவெளியில் மட்டும் செம்மையாய் இருந்தால் போதும் என்று நினைத்தல் கூடாது. வெளியில் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று எண்ணுவது அறிவின் ஆரம்ப நிலை. அது ஆரவார நிலையே ஆகும். வெளித்தோற்றம் ஏறக்குறைய இருந்தாலும்அகத்தோற்றம் செம்மையாக இருக்கவேண்டும். நமது உடம்பிலும் புற அழுகுக்கே முதன்மை தருகின்ற நிலை உள்ளது. புற அழகினை விடஅக அழகுதான் இன்றியமையாதது. 

 

     நமது உடம்பின் உள்ளும் புறமும் இருகின்ற கருவிகளுள்உள்ளே இருக்கின்ற கருவிகள் செம்மையாக இருந்தால் போதும். இதற்குத் துணை செய்வதுமிக நுண்கருவியாக உள்ள நமது மனம்தான். அந்த மனமானது செம்மைப்பட வேண்டுமானால்கல்வி அறிவு விளங்க வேண்டும். எனவேதான், "வைத்தது ஒரு கல்வி மனப் பழக்கம்" என்றார் ஔவைப் பிராட்டியார். இங்கே அருணகிரிநாதர் "யாம் ஓதிய கல்வி" என்றும்அதனால் பெற்ற அறிவை "எம் அறிவு" என்றார். உலகியலில் ஒரு படிப்பை முடித்த பின் யாருக்கும் ஓர் எளிமைதனிமை தட்டும். ஒவ்வொரு படி நிலையிலும் இந்த உணர்வு தோன்றுவது இயல்பு. கற்று முடித்தாற்போன்ற ஒரு நிலை நமக்குத் தோன்றும்போதுகல்வியை நிறுத்திக் கொள்கின்றோம். ஆனால்திருவள்ளுவ நாயனார், "என் ஒருவன் சாந் துணையும் கல்லாதவாறு?" என்று வினவுகின்றார். "கற்றது கை மண் அளவு கல்லாதது உலகு அளவு என்று உற்ற கலை மடந்தை ஓதுகிறாள்" என்கின்றார் ஔவைப் பிராட்டியார். "கற்றோம் என்று சொல்லுவது கையில் எடுக்கப்பட்ட மண்ணின் அளவே ஆகும். ஆனால்கல்லாதது என்பது உலகில் உள்ள மண் அளவு" என்று உணர்ந்துகொண்ட கலைமகளே இன்னமும் ஓதிக் கொண்டு இருக்கின்றாள். எனவே, "ஓதுவது ஒழியேல்" என்றார் ஔவைப் பிராட்டியார்.

 

     நமது முயற்சியால் கற்கின்ற கல்வி முடிந்து போன நிலையில்திருவருள் உணர்வு வந்து தோன்றும். அதற்கு மேல் கற்பதற்கு ஒன்றும் தோன்றாது. "கற்பனவும் இனி அமையும்" என்று மணிவாசகப் பெருமான் காட்டிய துரிய நிலை தோன்றும். "படிப்பு அற்றுத் துடிப்பு அற்று" என்று தாயுமானார் காட்டிய நிலை தோன்றும். அந்த நிலையில் நாம் பிடித்த கையை நழுவ விட்டாலும்இறைவன் விடமாட்டான். அந்த நிலை வருவதற்கு முன் ஆன்மா இறைவனைப் பிடித்துக் கொண்டுதான் இருக்கும். ஆனால்நான் பிடித்துக் கொண்டு இருக்கின்றேன் என்ற தன்னுணர்வு இருக்கும். அந்த நிலையில் இறைவன் கைகொடுப்பது இல்லை. தனது முயற்சியால் நடக்க முடியாத ஒரு முதியவர் வந்தால் அவரை உடனடியாகத் தாங்குவோம்.

 

     "என்னால் ஆவது ஒன்று இல்லை. எல்லாம்இறைவா! உன் செயலே" என்று மனம் பொருந்தி இருக்கும் நிலை வந்தால் இறைவன் ஏன்று கொள்வான். "மெய்தரு வேதியன் ஆகிவினை கெடக் கை தரவல்ல கடவுள்" என்றார் மணிவாசகப் பெருமான். "அருள்தரு கை கொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே" என்றார் அப்பர் பெருமான். எமன் வரும்போதுநம்முடைய செயலால் ஆவது ஏதும் இல்லை. அந்த நேரத்தில் இறைவன் நினைவு இருக்குமானால்அவன் வந்து நம்மை எமனிடம் இருந்து காப்பாற்றித் தனது திருவடியில் சேர்த்துக் கொள்வான். "இறுகிய சிறுபிறை எயிறு உடை எமபடர் எனது உயிர் கொள்ள வரின் யான் ஏங்குதல் கண்டுஎதிர் தான் ஏன்று கொள்ளும் குயில்" என்று அம்பிகையின் அருளை வியந்து "தேவேந்திர சங்க வகுப்பு" என்னும் பாடலில் அருணகிரிநாதப் பெருமான் காட்டினார்.

 

     கல்வி அறிவு என்பது ஒரே பிறவியில் பெற்றுவிடக் கூடியது அல்ல. "ஒருமைக் கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு எழுமமையும் ஏமாப்பு உடைத்து" என்றார் திருவள்ளுவ நாயனார். கல்விக்கும் மேம்பட்ட திருவருள் நிலையும் அவ்வாறேதான். ஒரு பிறவியில் வந்து விடாது. கல்வியைக் கசடு அறக் கற்றுஒழுக்க நெறியில் நின்று உயர்ந்துமனம் அடங்கப் பெற்றோர் உண்டு. கல்வியைக் கற்றும் அறிவு விளங்காமல்நெறி பிறழ வாழ்ந்து கழிபவர்களும் உண்டு. எவ்வளவோ கற்றுதவம் செய்த பெரியோர்கள் கூடப் பெறாத அரும்பேற்றைக் கண்ணப்ப நாயனார்அந்தப் பிறவியில் ஏதும் செய்யமலேயே பெற்றுவிட்டார். என்பதாலேயை அவர் கல்வி கல்லாதவர் என்று பொருள் கொண்டவிடக் கூடாது. பல பிறிவிகளில் கல்வியைக் கசடு அறக் கற்றுஅதன் பயனை உண்மையிலேயே அவர் பெற்று இருந்தார். அது இந்தப் பிறவியில் வந்து கைகூடியது. சிலருக்கு வாழ்வு எளிதாக அமைந்து விடுகின்றது. சிலருக்குப் பெருமுயற்சி தேவைப்படுகின்றது. சிலர் என்னதான் முயன்றாலும் முடிவதில்லை. முற்பிறவிகளில் முயன்று வைத்தோருக்கு இப்பிறவியில் எளிமை ஆயிற்று. முயலாதோருக்கு அருமை ஆயிற்று.

 

     "இலர் பலர் ஆகிய காரணம்நோற்பார் சிலர்பலர் நோலாதவர்" என்னும் திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கை ஆழ்ந்து பொருள் உணர்ந்து சிந்தித்தால் இந்த உண்மை விளங்கும். எனவேகல்வி கற்பது அனைவருக்கும் இன்றி அமையாதது ஆகும்.

 

     ஒருவனுக்கு வாழ்வில் கல்வி கற்பதற்கு ஏற்ற காலம் இளமைக் காலமே ஆகும். எனவேதான், "இளமையில் கல்" என்று சொன்னார் ஔவைப் பிராட்டியார். அவரே "ஓதுவது ஒழியேல்" என்று சொன்னபோது காலவரையறை ஏதும் காட்டவில்லை. கல்வி கற்றல் வேறு. ஓதுதல் வேறு. கற்பது தனக்காக. ஓதுவது பிறருக்காக. கற்ற கல்வியைப் பிறர் நன்மைக்காக ஓதி வரவேண்டும். ஓதுதலுக்குக் காலவரையறை இல்லை. இளமையில் கற்கத் தொடங்கிவிட்டால்ஓதுதல் சாகும் வரையும் தொடரும். ஓதுதல் பிறர் நல்லுணர்வு பெறுவதற்காக. காதலாகிகசிந்து கண்ணீர் மல்கி ஓதுதல் வேண்டும். ஒரு பொருளை ஒருவருக்குப் பரிசாகத் தரும்போது, "ஓதிக் கொடுத்தல்" என்னும் வழக்கம் உண்டு.

 

     மேற்குறித்த பாடலில் அருணகிரிநாதர் "யாம் ஓதிய கல்வி" என்றதுஅவர் பிறருக்காக ஓதி வைத்த அருள்நூல்களைக் குறிக்கும். நமது நன்மைக்காகப் பலப்பல அருட்பாடல்களை அவர் ஓதி வைத்தார். "யாம் ஓதிய கல்வி" என்றது நூல் உணர்வை. அது பாசஞானம் எனப்படும். "எம் அறிவு" என்றது பசுஞானம் ஆகிய ஆன்ம உணர்வைக் குறிக்கும். இவ்விரண்டையும்வேலவர் தந்தார் என்றார். "வேல்" என்பது ஞானசத்தி ஆகும். ஞானமே வடிவாகிய முருகப் பெருமான் தந்தார் என்கின்றார். பாச ஞானத்தாலும்பசு ஞானத்தாலும் பெற்றதன் பயனை இறைவன் திருவடிக்கே அர்ப்பணிக்க வேண்டும். பாச ஞானமும்,பசுஞானமும் தாமாக இறைவனைச் சென்று சேரமாட்டா. நாம்தான் சேர்க்கவேண்டும். கல்வியையும்அதனால் பெற்ற அறிவையும் உலகியலுக்குப் பயன்படுத்திநாமே அனுபவித்துக் கொண்டு இருப்பதன் மூலம்கல்வியின் தரத்தையும்அறிவின் சிறப்பையும் தாழ்த்தி விடக் கூடாது. இறையருளைப் பெறுவதற்கே பயன்படுத்த வேண்டும்.

 

"எக்கலையும் கற்று உணர்ந்தோம் என்று எவர்க்கும்  சம்மதம் சொல்

 வக்கணையால் இன்பம் வருமோ பராபரமே".

 

என்றார் தாயுமான அடிகளார்.

 

     கலை --- நூல்கள். உலகியல் கல்வியாகிய இலக்கிய இலக்கணங்களை ஐயம் திரிபு அறக் கற்று உணர்ந்தோம் என்னும் செருக்கால்கேட்போர் மெச்சும்படி விரித்து உரைப்பதுபலரோடும் சொற்போரிடுவது முதலியவற்றால் திறமை பெற்றவர்க்குத் திருவடிப் பேரின்பம் வாய்த்து வருமோ? (வாராது.  அருள்நூல் கற்று உணர்ந்துஓதி அருள் நெறியில் நின்றோர்க்கே உண்மை இன்பம் உண்டாகும்)

 

"கற்கும் மது உண்டு களித்தது அல்லால்நின் அருளில்

நிற்கும் மது தந்தது உண்டோநீதான் பராபரமே".

 

என்றார் தாயுமான அடிகளார். 

 

     பரம்பொருளே! உலகியல் நூல் உணர்வைத் தந்து,அவற்றைக் கற்றுக் களித்துத் திரியும்படி செய்தது அல்லாமல்தேவரீர் திருவடி உணர்வைத் தந்துஉனது திருவருளில்ஒன்றி நிற்கும் நிலையினை எளியேனுக்குத் தந்து அருளியது உண்டோ?

 

     உலகியல் கல்வி உணர்வு என்பது உலகியலில் காணப்படும் மது. அருளியல் கல்வி உணர்வு என்பது அருளியிலில் அனுபவிக்கப்படும் மது.இது குறித்து வள்ளல்பெருமான் அருளிய திருவருட்பாவில்....

 

"கள்உண்டாள் எனப் புகன்றார்,கனகசபை நடுவே

கண்டது உண்டு,சிற்சபையில் உண்டதும் உண்டு அடிநான்;

எள் உண்ட பலவிடயத்து இறங்கும் கள் அன்றே;

என்றும் இறவா நிலையில் இருத்தும் கள்;உலகர்

உள் உண்ட போது மயக்கு உற்றிடும் கள் அலவே;

உள்ள மயக்கு அனைத்தினையும் ஒழித்திடும் கள்;மடவாய்!

அள்ளுண்ட பிறரும் எனை அடுத்து அடுத்துக் கண்டால்,

அறிவு தரும் அவர்க்கும்இங்கே யான் உண்ட கள்ளே".

 

என்று அருளிச் செய்தார். அற்புதமான இந்த திருவருட்பாவை ஓதும்தோறும் உள்ளம் உவகைப் பெருங்கடலில் திளைப்பது நிச்சயம். என்ன அற்புதமான பாடல்!!!!

 

இதன் பொருள் ---

 

     தோழி! எனது அருட்செயல்களைக் கண்ட பலரும், "இவள் கள் உண்டவள் போலக் களித்து இருக்கின்றாள்" என்று சொல்லுகின்றார்கள்ஆமாம்நான் கள்ளை உண்டது உண்மை.  நான் அந்தக் கள்ளை,பொற்சபையின் நடுவே கண்டதும் உண்மைஎம்பெருமான் திருநடனம் புரிந்து அருள்கின்ற ஞான சபையிலே நான் அந்தக் கள்ளை உண்டு மகிழ்ந்ததும் உண்டுநான் உண்ட கள்உலகியல் மயக்கில் என்னைக் கிடத்திப் பிறந்து இறந்து வருத்தும் கீழ்மைத் தன்மையை அடைவிக்கும் கள் அல்ல. எக்காலத்தும் இறந்து ஒழியாத  இன்பம் நிலைத்த இடத்தில் என்னை இருக்க வைக்கும் உயர்நிலைக் கள் அது ஆகும். உலகத்தவர்கள் வயிற்றுக்குள்ளே உண்டபோது மயக்கத்தை உண்டாக்கும் கள் அல்லஉள்ளத்தில் உள்ள மாயா மயக்கங்கள் அனைத்தையும் போக்குகின்ற ஞானக் கள் ஆகும். என்னை நெருங்கியுள்ள மற்றவர்களும் அடுத்தடுத்து என்னைப் பலமுறையும் காண்பார்களானால்நான் உண்ட அந்தச் சிவபோகமாகிய கள்அவர்களுக்கும் இங்கே ஞான விளக்கத்தைத் தரும் என்று அறிவாயாக. 

 

     உலகில் கிடைக்கும் கள்ளை உண்டுதான் அனுபவிக்க முடியும். ஆனால்ஞான உணர்வில் கிடைக்கும் அனுபவத்தைக் காண்ணாலும் காணமுடியும்வாயாலும் அனுபவிக்க முடியும்செவியாலும் நுகரமுடியும். எனவேதான்வள்ளல்பெருமான் பொற்சபையில் கண்டதாகவும்சிற்சபையில் உண்டதாகவும் பாடினார்.

 

     குலசேகர ஆழ்வாரும், "தில்லை நகர் திருச்சித்திரகூடம் தன்னுள் எம்பெருமான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம்" என்றே தமது அனுபவத்தைப் பாடினார். மணிவாசகப் பெருமானும், "நினைத்தொறும்காண்தொறும்பேசுந்தொறும்எப்போதும் அனைத்து எலும்பு உள்நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்பு உடையான்" என்று தமது அனுபவத்தை அருளிச் செய்தார்.

 

     இந்த ஞானக் கள்தன்னை உண்டவரை ஞானத் தெளிவு பெறச் செய்வதோடுஉண்டவரைக் கண்டாலும் கண்டவருடைய மயக்கத்தைத் தெளிவிக்க வல்லது என்பதால், “பிறரும் எனை அடுத்தடுத்துக் கண்டால் அவர்க்கும் இங்கே யான் உண்ட கள் அறிவு தரும்” என்று அருமையாக மொழிந்தார் வள்ளல் பெருமான்.

 

"பெற்றவர் பெற்ற பெருந்தவக் குன்றே,

     பெருகிய கருணை வாரிதியே,

நல்தவத் துணையேஆனந்தக் கடலே,

     ஞாதுரு ஞான ஞேயங்கள்

அற்றவர்க்கு அறாத நட்புஉடைக் கலப்பே,

     அநேகம் நின் அடிக்கு அன்பு

கற்றதும்கேள்வி கேட்டதும்நின்னைக்

     கண்டிடும் பொருட்டு அன்றோ காணே". 

 

"கற்றும்பலபல கேள்விகள் கேட்டும்கறங்கு எனவே

சுற்றும் தொழில்கற்றுசிற்றின்பத்து ஊடு சுழலின்என்னாம்,

குற்றம் குறைந்து குணம் மேலிடும் அன்பர் கூட்டத்தையே

முற்றும் துணை என நம்பு கண்டாய் சுத்த மூடநெஞ்சே". 

                                              

எனவரும் தாயுமான அடிகளார் அருட்படால்கள் சிந்தனைக்கு உரியவை.

 

     உலகியல் கல்வியால் உண்டான அறிவு மயக்கத்தால்பொருளை ஈட்டுவதும்சிற்றின்பத்தில் திளைத்து இருப்பதும் கூடாது. கல்வி கற்றதும்கற்றோரிடத்துக் கேட்டுத் தெளிவு பெற்றதும்இறைவனைக் காணும் பொருட்டாகவே அமைதல் வேண்டும். கற்றதன் மூலம் அறிவு ஒழுக்கங்களில் சிறந்து நின்றுஉயிர்க்கு உள்ள குற்றம் குறைந்து குணமே மேலிட வேண்டும். குற்றம் குறைந்துகுணம் மேலிட்டு விளங்கும் இறையன்பர் திருக்கூட்டத்தையே தனக்கு உற்ற துணை என்று நம்பி வாழ்தல் வேண்டும்.

 

     நாம் ஓதிய கல்வி இறைவன் அருளால் பெறப்பட்டது. நாம் மெய்யறிவு பெறுவதற்காகவே இறைவனால் அருளப்பட்டது. இறைவன் நமக்குத் தந்த கல்வியையம்அதனால் பெற்ற அறிவையும்அவனருளைப் பெறுவதற்கே நாம் பயன்படுத்த வேண்டும் என்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

 

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...