இறைவனைக் காணும் முறை

 


இறைவனைக் காணும் வழி

-----

 

     பக்தியோகம்கர்மயோகம்ஞானயோகம் என்னும் மூன்று நெறிகளும் ஒன்றிற்கு ஒன்று தொடர்பு உடையன. ஞானம் ஒன்றே வீட்டிற்கு நேர்ச் சாதனம்.

 

--- பக்தி இல்லாமல் நற்கருமம் இல்லைஞானமும் இல்லை. 

--- நற்கருமம் இல்லாமல் ஞானம் இல்லைபக்தியும் இல்லை. 

--- ஞானம் இல்லாமல்,நற்கருமமும் பக்தியும் இல்லை. 

 

     இந்த மூன்றில் எது மிகுதியாக இருக்கிறதோ அதைக் கருதி பக்திநெறிகர்மநெறிஞானநெறி என்று சொல்லப்படும். இதன் விளக்கத்தை அப்பர் பெருமான் அருளிய தேவாரப் பாடல் ஒன்றினால் அறியலாம். 

 

     இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறான். அப்படி இருந்தாலும் எல்லோருக்கும் தெரியவில்லை. விறகு முழுவதும் தீயானது பரவி இருக்கிறது. விறகை எந்த இடத்தில் கடைந்தாலும் தீயானது தோன்றும். விறகு முழுவதும் இருக்கும் தீயானதுவிறகைக் கடைந்தால் வெளிப்படும். பாலில் நெய்யானது ஒவ்வொரு துளியிலும் இருக்கிறது. அதைத் தயிராக்கிக் கடையும்போது வெண்ணெய் தோன்றுகிறது. கடையாவிட்டால் தோன்றுவதில்லை. வைரம் முதலிய மணிகள் சுடர் வீசுபவை. அவற்றைச் சாணையிட்டுக் கடைய வேண்டும். கடையாத மணியானது ஒளி இன்றி மங்கலாக இருக்கும். விறகுபால்மணி என்னும் மூன்று விதமான பொருள்களையும் கடைந்தால் அவற்றினூடே மறைந்திருக்கும் தீநெய்ஒளி ஆகியவை வெளிப்படும். அப்படியே எம்பெருமான் பார்க்குமிடம் எங்கும் நீக்கமற இருந்தாலும் அன்பு என்னும் கோலை நட்டு ஞானம் என்னும் கயிற்றினால் கடைந்தால் வெளிப்படுவான்.

 

"விறகில் தீயினன்பாலில் படுநெய்போல் 

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால் 

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே."

 

என்கின்றார் அப்பர் பெருமான்.

 

     இறைவன் தீயைப் போலவும் வெண்ணெயைப் போலவும் ஒளியைப் போலவும் மறைந்து நிற்கிறான். கடையும் பொருள்கள் மூன்றிலிருந்து வெளிப்படுபவை. மூன்றும் கடையும் பொருள்களே ஆயினும்கடைதலில் மேற்கொள்ளும் முயற்சியில் வேற்றுமை உண்டு. விறகை நன்றாக முறுக வாங்கிக் கடைந்தால்தான் நெருப்பு உண்டாகும். பாலில் வெண்ணெய் தோன்ற அவ்வளவு பலம் வேண்டாம்.வாங்கிக் கடைய வேண்டும். மணியைக் கடைந்தாலே போதும்ஒளி தோன்றிவிடும். முறுகக் கடைய வேண்டியது விறகு, நடுத்தரமாகக் கடைவது பால். மெல்லக் கடைவது மணி. 

 

     இதுபோலத்தான்இப்படியே மனிதர்களில் மூன்று வகையான மன இயல்புடையவர்கள் இருக்கிறார்கள். பலவகையால் முயன்று பக்குவம் பெறுவார் உண்டு. ஓரளவு முயன்று பக்குவம் பெறுவாரும் உண்டு. சிறிதளவில் பக்குவம் பெறுவாரும் உண்டு. தாய்மார்கள் தயிர் கடைவதைப் பார்த்திருக்கிறோம். ஒரு கம்பத்தை ஒட்டிச் சட்டியை வைத்துஅதிலே தயிரை ஊற்றிமத்தைச் சட்டியில் இட்டு அதைக் கம்பத்தோடு தொடர்பு உடையதாக்கிமத்தைச் சுற்றியுள்ள கயிற்றைப் பிடித்து இழுத்து இழுத்துத் தயிர் கடைகிறார்கள். மத்துச் சுழலும் போது அதற்கு ஆதாரமாக இருக்கிற கம்பம் அசையாமல் இருக்க வேண்டும். அது ஆடினால் எத்தனை தான் கடைந்தாலும் வெண்ணெய் திரளாது. தயிர்ச் சட்டியே உடைந்து போதலும் கூடும். கடவுளை உணர்வது கடைவது போன்ற செயல். கடைவதற்கு நட்ட கோலும்கயிறும் வேண்டும். இறைவனைக் காணும் முயற்சிக்கும் உறவு என்னும் கோல் வேண்டும்உணர்வு என்னும் கயிறு வேண்டும்.உறவு என்ற கோலை நட்டுஉணர்வு என்ற கயிற்றைக் கொண்டு கடைய வேண்டும். உறவு என்பது இறையன்புஅல்லதுபத்தி எனப்படும். அது அசையாமல்தளராததாக இருக்க வேண்டும். பாலைக் கடைவதற்குக் கோல் நடுவது அவசியம். கயிறு மாறும்சட்டி மாறும்தயிர் மாறும்கடைபவர் கூட மாறலாம். ஆனால் நட்ட கம்பம் மாத்திரம் நிலையாக இருக்கும். அதுபோல இறைவனைக் கடைந்து உணரும் செயலில் பக்தி இன்றியமையாதது.தளர்வற்ற அன்பு அல்லது பக்தி இருக்க வேண்டும். உணர்வு அல்லது ஞானத்தைக் கயிறாகச் சொல்கிறார். ஞானம் என்பது வரவர வளர்வது. அறியப்படும் பொருள் விரிய விரிய ஞானம் விரிகிறது. அதில் பல நிலைகள் உண்டு. இந்த இரண்டோடுகடைவதாகிய செயலும் வேண்டும். அது இல்லாவிட்டால் மற்றவை இருந்தும் பயன் இல்லை. உறவு என்பது பத்தி. உணர்வு என்பது ஞானம்கடைதல் கருமம் அல்லது செயல். உறவுஉணர்வுகருமம் என்னும் மூன்றும் சேர்ந்து முயற்சி செய்தால் இறைவன் முன் நிற்பான். 

 

     விறகுக் கட்டை மனிதர்கள் உண்டு. பால் போன்ற மனிதர்கள் உண்டுமணி போன்ற மனிதர்களும் உண்டு. பிறவித் துன்பத்தில் உழன்று உழன்று தடித்துப் போன உள்ளம் படைத்தவர்களுக்கு எளிதில் இறைவனைப் பற்றிய உணர்வு வருவதில்லை. வாழ்க்கையில் மிகவும் அல்லல் பட்டு,நைந்து போன பிறகே அவர்கள் அறிவு பெறுகிறார்கள். 

 

     உள்குவர் உள்ளத்து உளன் கண்டாய்" என்றார் ஆழ்வார். இறைவன் எங்கே இருக்கின்றான் என்றால்அவனை நினைப்பவர் உள்ளத்தில் இருக்கின்றான் என்கின்றார். "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்றார் அப்பர் பெருமான். "ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானை" என்றார் மணிவாசகப் பெருமான். இவ்வளவையும் உணராது  "கடவுள் உள்ளத்தில் இருக்கிறார் என்கிறீர்களேஎன் உள்ளத்தில் இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம்" என்று சொல்கிற அறிவாளிகள் உலகில் இல்லாமல் இல்லை. ஒரு சின்னக் குழந்தை தனது தாயிடம் போய், "இந்தப் பாலில் வெண்ணெய் இருக்கிறது என்றாயே! வெண்ணெயைக் காணோமே. எங்கே காட்டுபார்ப்போம்” எனக் கேட்டால் "அருமைக் குழந்தையேபாலை இப்படியே வைத்துக் கொண்டு பார்த்தால் உனக்கு வெண்ணெய் தெரியாது. பாலின் ஒவ்வொரு துளியிலும் வெண்ணெய் இருக்கிறது. அதைக் காட்டுகிறேன்வாஎன்று சொல்லிப் பாலை வாங்கிக் காய்ச்சி உறை குத்திதயிராக்கிவாங்கிக் கடைந்து வெண்ணெயை உருட்டிஅதன் கையில் கொடுப்பாள். அதைப்போலஇறைவனைக் காண்பதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாதுமனம் போன போக்கில் வாழ்ந்துகொண்டு என் மனத்தில் இருக்கிற கடவுளைக் காட்டுபார்ப்போம்" எனக் கேட்டுக் கொண்டு இருப்பவர்களைப் பார்த்துநமது அருட்குரு ஆகிய அப்பர் பெருமான்அவர்களை விட்டே அன்பு என்னும் உறவுகோல் நட்டுஉணர்வு என்னும் கயிற்றைக் கொண்டுவாங்கிக் கடையச் சொல்லி இறைவனைக் காட்டுகிறார். 

 

     முதல் தரமான மக்கள் மணியைப் போன்றவர்கள். கொஞ்சம் பாசி படர்ந்திருக்கிற மணியைக் கடைந்தாலே ஒளி வீசுவதைப் போலஅந்த மக்கள் முன்னைப் பிறப்பில் கடுந்தவம் செய்துயோகப் பயிற்சிகளை மேற்கொண்டுஇறைவனைக் காண இடைவிடாது முயற்சி செய்தவர்களாக இருப்பார்கள். உணவிற்கு உப்புப் போட மறந்த்து போகுழம்புக்கு மாவு கரைத்து ஊற்றி இறக்கி வைக்க மறந்துவிட்டது போலதலைவாரிப் பின்னிக் கொண்டுஉடைகளையும்அணகலன்களையும் பூண்டுகொண்ட பெண் ஒருத்தி,நெற்றிக்குப் போட்டு வைத்துக் கொள்ள மறந்துவிட்டது போல இவர்கள் முற்பிறப்பில் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு இருந்துவிட்டுஇறைவன் அருளைப் பெறுவதற்குள் வாழ்நாள் முடிவைச் சந்தித்து இருப்பார்கள். அது அவர்களது வினைப்பயன். அவர்கள் இப்பிறப்பில் விட்ட குறை தொட்ட குறையாக மிக விரைவில் இறைவன் அருளைப் பெற்றுவிடுவார்கள். 

 

     நரைவரும் என்று எண்ணி நல்லறிவாளர் குழவி இடத்தே துறந்தார்" என்பது நாலடியார். நல்ல அறிவுடையவர்கள் இளம்பருவத்திலேயே துறவு உள்ளத்தைப் பெற்றுவிடுவார்கள். 

திருஞானசம்பந்தப் பெருமான் குழந்தைப் பருவத்திலேயே ஞானம் பெற்றார். 

 

     மிகப் பெரிய கட்டிடத்தைப் பார்க்கின்ற குழந்தைக்குப் பூமிக்கு அடியில் கடைக்கால் எத்தனை ஆழத்தில் போடப்பட்டு இருக்கிறது எனத் தெரியாது. அந்தக் கடைக்கால் மறைந்து இருக்கும். கட்டிடம் மேலே தெரியும். விட்டகுறை தொட்டகுறை உடைய யோகப் பயிற்சியாளர்கள்முந்திய பிறப்பிலேயே பலமான கடைக்கால் போட்டுக் கொண்டவர்கள்அவர்களுக்கு இந்தப் பிறப்பில் கொஞ்சம் முயற்சி இருந்தால் போதும். இறைவனைக் காணும் நிலை வந்து விடும். 

 

     எந்த நிலையில் இருப்பவர்களானாலும் உறவுஉணர்வுசெய்கை என்னும் மூன்றும் வேண்டும். இது பத்திஞானம்கர்மம் என்று சொல்லப்படும். மூன்றும் ஒன்றனோடு ஒன்று தொடர்பு உடையவை. அந்த மூன்றும் இணைந்த முயற்சியிலேதான் இறைவனைக் காண முடியும். 

 

     இறைவனிடத்தில் பக்தி இல்லாமல்வெறும் கர்மாக்களை மட்டுமே மேற்கொண்டு இருந்த தாருகாவனத்து முனிவர்களிடத்தில் இறைவனுடைய பெருமையை உணரும் ஞானம் இல்லாமல் போயிற்று. இறைவனைப் பகைவனாக எண்ணித் தீயவேள்வி செய்து அதில் எழுந்த பாம்புகளை அவன் மேல் ஏவிவிட்டார்கள். இறைவன் அந்தப் பாம்புகளையே ஆபரணமாகப் பூண்டுஅவர்கள் செருக்கை அழித்தான். 

 

     மூட பத்தி என்பதுஞானம் இல்லாத பத்தி. மூடபத்தி உள்ளவர்கள்பத்தரைப் போலவே ஆடிப் பாடுவார்கள். ஆனால் பயன் விளையாது. தன்னுடைய உடம்பையே அறுத்து அறுத்துதான் செய்த வேள்வியில் அவிசாகப் போட்டான் சூரபதுமன்அவனுக்குப் பக்தியோ ஞானமோ இல்லை. ஆனாலும்அவனைப் போலக் கடுந்தவம் செய்ய யாராலும் இயலாது அந்தத் தவம் நல்ல பயனை உண்டாக்கவில்லை. மாறாஉலகத்திற்குத் தீங்கு விளைந்ததுஉலகிற்கு உண்டான தீங்குமுடிவில் அவனுக்கே தீங்காக முடிந்தது. 

 

     சாத்திரம் ஓதும் சில சழக்கர்கள், 'இறைவனிடத்தில் பக்தி செய்துதொண்டு செய்து பயன் என்னஅகம் பிரம்மாஸ்மி என்று பாவனை செய்தால் போதும்என்பார்கள். அவரகள் ஞான நூல்களைப் படித்த மாத்திரத்தில்தமக்கு ஞானமே வந்துவிட்டதாக எண்ணிக் கொள்வார்கள். இது ஆணவத்தின் விளைவு என்று அருமையாக அறிவுறுத்துகின்றார் வள்ளல்பெருமான்.

 

"அமைவு அறிந்திடா ஆணவப் பயலே!

     அகில கோடியும் ஆட்டுகின்றவன் காண்

எமை நடத்துவோன்ஈது உணராமல்,

     இன்று நாம் பரன் இணையடி தொழுதோம்,

கமைவின் ஏத்தினோம்அடியரும் ஆனோம்,

     கனிகின்றோம் எனக் கருதிட மயக்கேல்,

உமையன் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால்

     உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே".

 

இதன் பொருள் --- தகுதி அறியாது திமிர் கொள்ளும் ஆணவம் என்னும் சிறு பையனே!கோடிக் கணக்கான அண்டங்கள் அனைத்தையும் ஆட்டுகின்றவன் எம்மை நடத்துபவனாகிய சிவபெருமான் இதனை உணராமல், “இன்று நாம் பரமனுடைய இரண்டு திருவடிகளையும் தொழுகின்றோம். பொறுமைப் பண்புடன் ஏத்துகின்றோம்” என்று நாங்கள் கருதுமாறு தலைக்கனம் கொள்ளச் செய்ய்யாதே.  உமாதேவியை மனைவியாகக் கொண்டவனான திருவொற்றியூர்ச் சிவனுடைய திருவருள் வாளால் உன்னைத் துண்டாக வெட்டுவேன் இதனை உண்மையாக உணர்க. 

 

"கருமையாம் அகங்கார மர்க்கடவா!

     கடையே! உனைக் கலந்த அதனாலே,

அருமையாக நாம் பாடினோம்கல்வி

     அற அறிந்தனம்அருளையும் அடைந்தோம்,

இருமை இன்பமும் பெற்றன் என்றே

     என்னை மதித்து நான் இழிவு அடைந்தனன் காண்,

ஒருமை ஒற்றியூர்ச் சிவன் அருக் வாளால்

     உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே!"

 

இதன் பொருள் --- கருமைப் பண்பு உடைய அகங்காரம் என்னும் குரங்காகிய கடையனே உன்னோடு கலந்து நான் இருப்பதால், “நாம் அருமையாகப் பாடுகின்றோம்கல்வியும் முற்றக் கற்று உள்ளோம்திருவருளையும் பெற்று விட்டோம்இம்மை மறுமைக்கு உரிய இன்பமும் பெற்றுள்ளோம் என்று என்னை நானே வியந்து இழிவு உற்றேன் ஒருமை நலம் வாய்ந்த திருவொற்றியூரில் எழுந்தருளும் சிவபெருமானது திருவருளாகிய ஞான வாள் கொண்டு உன்னைத் துண்டாக வெட்டுவேன் இதனை மெய்யாக உணர்வாயாக.

 

     இந்த மாய மயக்கங்களே இன்று மிகுதியாக மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கின்றது. வெற்று வேடமும்சிறிது நூலறிவுமே போதும் என்னும் மனப்பாங்கு உள்ளது. வேடம் போடுதல் பெரிதல்ல. வேடநெறியின்படி வாழ்தல் வேண்டும். நூலறிவு தர்க்கம் புரிய உதவும். அநுபவஞானம் உண்டாகாது. பெரிய மாளிகையின் உள்ளே நுழைவதற்கு உதவிய வாயிற்படியைஉள்ளே நுழைந்த பின் அடைப்பவர்கள் இல்லை.  எந்த வாசலின் வழியாக உள்ளே நுழைந்தார்களோ அந்த வாசலை நன்றாக அலங்கரித்து வைப்பார்கள். தங்களுக்கு ஞானம் உண்டாவதற்குக் காரணமாய் இருந்த இறைவன் திருமேனியை அவரவர்கள் கடைசி வரையிலும் வைத்துப் பூசித்துப் பத்தி செய்வார்கள். 

 

     "சிவஞான போதம்" என்கிற ஞான நூலின் இறுதிச் சூத்திரம்,"செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலம் கழிஇ,அன்பராடு மரீஇ,மால்அற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே" என்பது.  சீவன் முத்தர்களுக்கும் சில சமயங்களில் வாசனை வந்து தாக்கும்.  உடம்பு இருக்கிற வரைக்கும் அந்தத் தாக்குதலுக்கு இடம் உண்டு. அதனால்ஞானம் பெற்றுவிட்டோம் என்று அசட்டையாக இருத்தல் கூடாது. வாசனை வந்து தாக்காமல் எப்பொழுதும் விழிப்பாக இருக்க வேண்டும். மேலான ஞானம் பெற்ற சீவன்முத்தர்களும் வாசனாமலம் தாக்காமல் இருக்க  சிவவேடத்தையும் ஆலயத்தையும் வழிபட வேண்டும். ஞானம் பெற்றவர்களுக்கு வாசனா மலம் தாக்காமல் இருப்பதற்காக ஆண்டவனிடத்தில் அன்பு செய்து தொண்டு செய்யத்தான் வேண்டுமாம். இல்லாவிட்டால் நாளடைவில் உலகம் வாசனா மலத்தை அவர்களுக்கும் கொண்டு வந்து விடுமாம். 

 

     இந்த உண்மையெல்லாம் அநுபவத்தினால் உணர்ந்த அருணகிரியார், "செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர் வடிவாள்"என்றார். 'என்னிடத்தில் செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய அன்பு என்னும் வாள் இருக்கிறது. அது ஞானத்திற்குப் புறம்பானது அல்ல. அதுவே அவிரோத ஞானச் சுடர் வடிவாள்என்கிறார். "ஞான வாள் ஏந்தும் ஐயர்" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

     ஞானம் என்பது மெய்யறிவு. இனிப்புப் பண்டத்தை வாயில் போட்டுஇனிக்கிறது என்று அநுபவித்துச் சொன்னால் அது அறிவுதான். இந்த அறிவு உலகியல் அறிவு. இத்தகைய அறிவைக் கொண்டு நாம் உலகில் உள்ளவற்றைப் பிரித்துப் பிரித்து அறிகிறோம். இவன் வேண்டியவன்இவன் வேண்டாதவன்இவன் நம் சாதிஇவன் வேறு சாதியைச் சேர்ந்தவன்இது ஆண்இது பெண் என்றெல்லாம் பிரித்துப் பிரித்து அறிகிறோம். இது நமக்கு வேண்டும்இது நமக்கு வேண்டாம் என்ற வேறுபாடு காண்கிறோம். இது பேதஞானம். இதையே விரோத ஞானம் என்றும் சொல்லலாம். எமனுக்குக் கூற்றுவன் என்று ஒரு பெயர். அவன் உடம்பையும் உயிரையும் கூறுபோட்டுப் பிரிப்பதனால் அப்பெயர் பெற்றான். உலகில் உள்ளனவற்றை எல்லாம் கூறு போட்டுப் பிரித்துப் பார்க்கின்ற பேதஞானம் உடைய நாம்இறுதியில் கூற்றுவன் கையிலே சிக்கிக் கொள்கிறோம். கூறு படுத்தும் ஞானம்நம்மைக் கூற்றுவன் கையில் நம்மைச் சிக்க வைத்து விடுகிறது. இறைவனுடைய திருவடியில் உண்மையான அன்பு செய்கிறவர்களுக்கு அபேதஞானம் வரும்.எல்லா உயிர்களிடத்திலும் சமமான அன்பு பிறக்கும். வேறுபடுத்திப் பார்க்கத் தோன்றாது. திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழில் முருகனை, “சேரா நிருதர் குலகலகாஎன்று அதன் ஆசிரியர் பாடுகிறார். நிருதர்களாகிய அசுரர்கள் தாமும் ஒன்று சேர மாட்டார்கள். பிறரையும் ஒன்று சேர விட மாட்டார்கள்இணைய வேண்டியவைகளையும் பிரித்துத் துன்புறுத்தும் நாட்டம் உடையவர்கள். அந்த உணர்ச்சி உடையவர்கள் யாராக இருந்தாலும்அவரைஅசுர பரம்பரையினர் என்று சொல்லிவிடலாம். 

 

     அணைக்கும் கை தாயின் கைதெய்வக் கை. பிரிக்கும் கை பேயின் கைஅசுரர் கை. இறைவனிடம் தொண்டு பூண்டவர்கள் அணைக்கும் கையும் இணைக்கும் மனமும் உடையவர்கள்.கண்ட ஞானம் இன்றி அகண்ட ஞானம் பெற்றவர்கள் அவிரோத ஞானிகள் அவர்கள்.யாரிடமும் பகையின்றிவெறுப்பின்றி வாழ்கிறவர்கள். 

 

     செந்தில் வேலனுக்குத் தொண்டு என்றாலும் அவிரோத ஞானம் என்றாலும் ஒன்றுதான். வேறுபாடு இல்லை. இறைவனுக்குத் தொண்டுபட்டதால்,உலகத்து ஆருயிர்கள் அத்தனையும் ஒன்று என்ற நினைப்பு வந்தது. ஆண்டவனுக்கு அவ்வுயிர்கள் எல்லாம் குழந்தைகள் என்று உணர்ந்துபிரித்துப் பிரித்துப் பார்க்கின்ற தன்மை மாறிஎல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்கின்ற அவிரோத ஞானம் வந்தது.

 

     இறைவனுக்குத் தொண்டு செய்பவர்கள் உயிர்களுக்கும் தொண்டு செய்து அன்பு பாலிப்பார்கள். இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டியவை. ஒரு தகப்பனிடம் அன்பு செய்பவர்கள் யாரும் அவனுடைய குழந்தையை அலட்சியம் செய்யமாட்டார்கள். சிவபெருமானிடம் பக்தியோடு தொண்டு புரியும் பிரமதேவன்சிவனை வணங்கிவிட்டுமுருகனை அலட்சியம் செய்து உள்ளே நுழைந்தான். அவனுடைய தலையில் குட்டிஅவனுக்கு உண்டாகி இருந்த மண்டைக் கனத்தைப் போக்கினார் முருகப் பெருமான். இறைவனிடம் அன்பு உள்ளவர்கள் என்றால் அவனுடைய குழந்தைகளாகிய உலகிலுள்ள உயிர்களிடத்திலும் அன்பு செய்தால் தான் இறைவன் அவர்களுக்கு அருள் செய்வான். அவன் வேறுஇவன் வேறு என்கிற விரோத ஞானம் போய்எல்லோரும் ஆண்டவனுடைய குழந்தைகள் என்கிற அவிரோத ஞானத்தால் காலனையும் வென்றுவிடலாம். அருணகிரியார், "என்னிடத்தில் தொண்டாகிய வாள் இருக்கிறது. அவிரோத ஞானம் என்கிற வாளும் அதுதான் என்கிறார்.

 

     இந்த அவிரோதஞானம் என்னும் வாளை இறையருளால் பெற்றவர்கள்எமனையே அச்சுறுத்துவார்கள். அவர்களுக்கு மரணம் என்பதே இல்லை. அருணகிரியார் எமனை அச்சுறுத்துகின்றார். எமனுக்கு அந்தகன் என்பதும் ஒரு பேர். அச்சொல்லுக்குக் குருடன் என்று பொருள். ஆகையால், "நீ அந்தகன் அல்லவாஉனக்கு இந்த வாளின் சுடரை உன்னால் காணமுடியாது. உடம்பிலே கொஞ்சம் பட்டால்தான் தெரியும். என் கைக்கு எட்டும்படி வா பார்க்கலாம்இதன் கூர்மையைக் காட்டுகிறேன்"என்கிறார். "செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டாய்டா அந்தகா! வந்து பார்சற்று என் கைக்கு எட்டவே". என்று பாடுகின்றார்.

 

     "ஏதோ நான் வெற்று வேட்டு என்று எண்ணாதே. என் கையில் பளபள என்று மின்னுகின்ற கத்தி உள்ளது. அந்தகாஎன் கைக்கு எட்டும்படியாகச் சற்று என் அருகில் வந்து பார். இந்தக் கத்தியின் கூர்மை எவ்வளவு என்பதை நீ உணர்ந்து கொள்வாய்" எனச் சொல்கின்றார்.

 

     அவரைப் போலவே நாமும் அச்சம் இல்லாமல் சொல்ல வேண்டும். என்றால்நமது நெஞ்சத்தில் அருணகிரியாருக்கு இருந்த முறுக்கு இருக்கவேண்டும். செந்தில் வேலனுக்குத் தொண்டு செய்தால் அந்த முறுக்கு ஏறும். அவனுக்குத் தொண்டனாக மாத்திரம் இருந்து கொண்டுஉலகிலுள்ள உயிர்களிடத்து அன்பு இல்லாமல் இருத்தலாகாது. அவன் உயர்ந்தவன்இவன் தாழ்ந்தவன் என்று கூறுபோட்டுக் கொண்டு இருந்தால்கூற்றுவனுக்குத் தான் இரையாகும்படி நேரிடும். செந்தில்வேலனுக்குத் தொண்டு செய்து கொண்டேஉலகிலுள்ள ஆருயிர்கள் எல்லாம் அவன் குழந்தைகள் என உணர்ந்துஎல்லா உயிர்களிடத்திலும் அன்பு பாலிப்பதே அவிரோத ஞானம். 

 

     அந்த ஞானம் நமக்கு வந்துவிட்டால் நெஞ்சிலே எத்தனை வீரம் வந்துவிடும்தெரியுமாயமனுக்கு அஞ்சாத தைரியம் வரும். திருடனையும் பாம்பையும் பேயையும் கண்டு அஞ்சாத தைரியம் தைரியம் அல்ல. காலனுக்கு அஞ்சாமல் நிமிர்ந்து நிற்கும் வீரமே வீரம். இந்திரியங்களின் வழியே செல்கிறவர்களுக்கு அந்த வீரம் வராது. இறைவன் அடியார்களுக்கே வரும். உண்மை அடியார்களை வீரர் என்று பெரியபுராண ஆசிரியர் ஆகிய தெய்வச் சேக்கிழார் பெருமான் அடையாளப் படுத்துகின்றார். 

 

"ஆரம் கண்டிகைஆடையும் கந்தையே

பாரம் ஈசன் பணிஅலது ஒன்று இலார்,

ஈர அன்பினர்யாதும் குறைவிலார்

வீரம் என்னால் விளம்பும் தகையதோ?”  --- பெரியபுராணம்.

 

     வாழையடி வாழை என வந்த திருக்கூட மரபினில் வந்தவர் அருணகிரியார். நம்முடைய கோழை நெஞ்சத்திலும் அத்தகைய வீரம் விளங்கவேண்டும் என்ற பெருங்கருணையோடு "கந்தர் அலங்காரம்" பாடுகின்றார்.

 

"தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னைத் 

திண்டாட வெட்டி விழவிடுவேன்;செந்தில் வேலனுக்குத் 

தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் 

கண்டாய்டா அந்தகா! வந்துபார் சற்று என் கைக்கு எட்டவே". 

 

இதன் பொருள் ---

 

கூற்றுவனே! திருச்செந்தூர் என்னுமு திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள வேலாயுதப் பெருமானுக்கு அடிமையாகிய என்னுடைய விரோதம் இல்லாத ஞானம் ஆகிய,ஒளி பொருந்தியதும் கூர்மை உடையதும் ஆகிய வாளைப் பார். எனது கைக்கு எட்டுகின்ற அளவில் சற்றே வந்து பார். அந்த வாளினால் உன்னுடைய கதாயுதமும்மூவிலைச் சூலமும் உனது கையில் இருந்து பொடிப்பட்டுப் போகுமாறு செய்துஉன்னையும் மோதி வலி அழிந்து வருந்துமாறு வெட்டி விடுவேன்.

 

     இறைத் தொண்டில் ஈடுபட்டுஅவிரோத ஞானத்தைப் பெற்றுமரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ வழி காட்டினார் அருணகிரிநாதப் பெருமான்.

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...