தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல



தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல.

-----

 

     உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார்வாழத் தெரிந்தவர்கள் யார்என்று கேட்டால்பணத்தை நிறையக் குவித்து வைத்துக் கொள்ளாதவர்களே வாழத் தெரியாதவர்கள் என்றும்பணத்தைப் படைத்தவர்களே வாழத் தெரிந்தவர்கள் என்றும்தான் உலகவர் சொல்வர். அருணகிரிநாதர் அப்படிச் சொல்லவில்லை. இந்த உலகத்தில் சுகமாக வாழலாம்பல வசதிகளைப் பெற்று அசதி இல்லாமல் வாழலாம். அத்தகைய வாழ்வுக்குக் கருவியாய் இருப்பது பணம். அதனால்தான் பணம் படைத்தவனை வாழத் தெரிந்தவன் என்றும்பணம் பண்ணத் தெரியாதவனை வாழத் தெரியாதவன் என்றும் உலகத்தார் சொல்கிறார்கள். பணம் உள்ளவன் அந்தப் பணத்தை வாழ்வதற்குரிய கருவியாகக் கொண்டு பொருள்களை வாங்கிப் பயன்படுத்த இயலும் என்ற நினைப்பில்பணமுள்ளவன் வாழ்கிறவன் என்கிறார்கள். பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொண்டு பயன்படுத்தாமல் இருப்பவனைப் பாராட்டுவதில் பொருள் இல்லை. பணத்தை வைத்துக் கொண்டிருந்தும் வாழத் தெரியாதவன் அவன் என்றே சொல்ல வேண்டும். வாழ்நாள் முழுவதும் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தாமல் வாழ்கிறவர்களைப் பற்றி என்ன சொல்வதுஅவர்களை எண்ணி இரங்குகிறார் அருணகிரியார். 

 

"கோழிக் கொடியன் அடிபணியாமல் குவலயத்தே 

வாழக் கருதும் மதி இலிகாள்! உங்கள் வல்வினைநோய் 

ஊழிற் பெருவலி உண்ண ஒட்டாது,உங்கள் அத்தம்எல்லாம் 

ஆழப் புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப்பிறகே?"

 

என்பது கந்தர் அலங்காரத்தில் வரும் ஒரு பாடல்.

 

     வாழ்வதற்குப் பொருள் அவசியம் என்று உலகம் கூறுகிறது. பொருள் படைத்தவனாக இருந்தால் இந்த உலகத்தில் வாழ்ந்து விடலாம் என்பது உலகவர் எண்ணம். அருணகிரிநாதரோ அருள் அவசியம் என்கின்றார். கோழிக் கொடியனாம் முருகப் பெருமானுடைய திருவடியைப் பணிந்து அருள் பெற்றால் இந்த உலகத்தில் வாழலாம் என்பது அருணகிரியார் அருட்சிந்தனை.அப்படி வாழத் தெரிந்து கொள்ளாதவர்கள் அறிவில்லாதவர்கள் என்பது அவர் கருத்து. 

 

     நம்முடைய வாழ்நாள் பல ஆண்டுகளை உடையது.  ஒவ்வொரு நாளின் தொடக்கத்தையும் காலை என்கிறோம். நாம் தூங்கி விழித்தவுடன் நமக்கு நாள் தொடங்குகிறது. நமக்கு விழிப்பை ஊட்டவும்நாள் ஆரம்பமாயிற்று என்று அறிவிக்கவும் கோழி கூவுகிறது.  கதிரவன் தனது பொன்னொளியைப் பரப்பிக் கொண்டு வான வீதியிலே எழுந்து வரப் போகிறான் என்பதை நினைவுறுத்தக் கோழி கூவுகிறது. அதைக் கேட்டவுடனே நாம் எழுந்து செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்குகிறோம். மணி பார்க்கிறவன் கடியாரத்தை மறக்கமாட்டான். காலையில் கூவி எழுப்பும் அந்தக் கோழியை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்பை மேலும் வளரவிட்டுத் கோழியைக் கையில் கொடியாக ஏந்திய ஆண்டவனை நினைக்க வேண்டும். வாழ்வில் ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது முருகனை நினைப்பதற்கு வாய்ப்பாக அல்லவா கோழி கூவுகிறதுநாம் கோழியின் குரலைக் கேட்டுத் தினமும் எழுந்திருக்கிறோம். ஆனால்,  கோழியையோஅந்தக் கோழியைக் கொடியாகப் பிடித்துள்ள. இறைவனையோ நினைப்பதில்லை. முருகனுடைய அன்பர்களுக்குக் கோழியின் குரல் கேட்ட மாத்திரத்தில் அத்தகைய நினைப்பே வரும். அவன் நினைப்பு இல்லாமல் இந்த உலகத்தில் வாழ முடியுமாஉலகத்தில் வாழ வேண்டுமென்று நினைக்கிற மக்கள்பொழுது விடிந்துவிட்டது என்று தெரியாமல் வாழ முடியுமாவிடிந்தது என்பதற்கு அறிகுறி கோழி. விழித்துக் கொள்பவனுக்குக் கோழியின் குரல் காதில் விழும். நன்றாக விழித்துக் கொள்பவனுக்குக் கோழிக் கொடியன் திருவடி மனத்தில் தோன்றும். 

 

     கோழிக் கொடியனைப் பணிவதால் வருவது அருள். வியாபாரம் முதலியவற்றால் வருவது பொருள். பொருள் இருந்தால் போதாது. அருள் இல்லாவிட்டால் இவ்வுலகில் வாழ முடியாது. 

 

"அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லைபொருள் இல்லார்க்கு 

இவ்வுலகம் இல்லாகி யாங்கு"

 

என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். 

 

     இந்த உலகத்தில் பொருள் இருந்தால்தானே வாழமுடியும். வாழ்ந்து முடிந்த பின்னர் தானே இறைவன் திருவடியை அடைய முடியும். எனவேமுதலில் பொருளோடு இவ்வுலகில் வாழ்வோம். அதன் பின்னர் அருளோடு அவ்வுலகம் செல்வோம் என்று கூறுகின்றவர்களும் உள்ளனர். அவர்களுக்கு அறிவுறுத்தவே

 

"பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்அருள் அற்றார் 

அற்றார் மற்று ஆதல் அரிது" 

 

என்று அருளின் சிறப்பை உணர்த்தினார் திருவள்ளுவ நாயனார். பொருளோடு அருளையும் தேடுவதே அறிவுடைமை.  இந்த உலகத்தில் பொருளோடு வாழும் காலத்திலேயேபொருளைக் கொண்டு அறச் செய்ல்களைப் புரிந்துஅருளைப் பெறாதவர்களுக்கு அந்த உலகம் இல்லை. அருளும் பொருளும் ஒருங்கே உடையவன் தான்இம்மையும் மறுமையும் நல்வாழ்வு பெறுவான். இதுதான் நாயனார் அருளிய இரண்டு திருக்குறள்களையும் ஒன்றாகச் சேர்த்து எண்ணினால் கிடைக்கின்ற விடை. எனவேபொருள் மாத்திரம் இருந்தால் வாழ்ந்துவிடலாம் என்பதை மறுக்கிறார் அருணகிரிநாதர். அருள் இருந்தால்தான் அந்தப் பொருளினால் நல்ல பயனை அடைந்து வாழ முடியும். அருள் தரும் முருகனைப் பணிந்து வாழ வேண்டும். "அவன் திருவடிகளைப் பணியாமல் வாழ்ந்துவிடலாம் என நினைக்கின்ற மதி அற்றவர்களே நீங்கள் நினைப்பது முடியாத காரியம்" என்று அறிவுறுத்துகிறார் அருணை வள்ளல்.

 

      வாழ்வு என்பது என்னஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்ந்தான் என்றால் நூறு ஆண்டுகள் உயிரோடு இருந்தான் என்பது பொருள் அல்ல. நல்ல நெறியில் இன்பமாகத் தானும் வாழ்ந்துபிறரையும் மகிழ்வித்துவாழ்வதே வாழ்வு. நல்லது அல்லாத வழியில் வாழ்நாள் கழிந்த போவது தாழ்வு. ஒருவன் நன்றாக வாழ்ந்தவன் என்பதற்குநல்ல நெறியிலே சென்றுஇன்ப வாழ்வு வாழ்ந்தவன் என்பதே பொருள். உயிரும்உடம்பும் ஒட்டிப் பல காலம் கிடப்பதை மட்டுமே வைத்துக் கொண்டு நல்ல வாழ்க்கை என்று சொல்ல இயலாது.

 

     நன்றாக வாழ்கிறவன் என்று பொருள் நிறைய வைத்துக் கொண்டிருப்பவனைச் சொல்கிறார்கள். பொருளினால் இன்பம் உண்டாவதனால் பொருளுடையோனை இன்பம் உடையவன் என்று சொல்லிவிடுகிறார்கள். பொருள் நிறைய இருப்பதனால் மட்டும் இன்பம் உண்டாகாது என்பதைப் பொருள் நிறையப் படைத்து உள்ளவர்களைக் கேட்டுப் பார்த்தால் தெரியும். பொருளை மலைமலையாகக் குவித்து வைத்திருக்கிறார்களுக்குஅந்தப் பொருள் ஒவ்வொரு கணமும் பயத்தைத் தருகிறது. பொருள் நிச்சயமாக இன்பத்தைத் தரவில்லை.  

 

     பொருள் உள்ளவர்களை விஆண்டவன் திருவருளைப் பெறும் முயற்சி உடையவர்கள்தான் உண்மையில் அமைதியுடன்  இன்பமாக வாழ்கிறார்கள். இறைவனை நினைக்காமல் வாழ்கின்றவர்கள் தங்களை எவ்வளவு அறிஞர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அருணகிரிநாதர் அவர்களை"மதியிலிகாள்என்றே அழைக்கின்றார்.

 

     நல்ல நெறியில் போகாத குழந்தையைப் பார்த்துமனம் பொறாமல் திட்டித் திருத்துகின்ற உரிமை தாய்க்கு உண்டு. உலகிலுள்ள மக்கள் எல்லாரும் இன்பம் தருகின்ற நல்ல நெறியைப் பின்பற்ற வேண்டுமென்ற மேலான கருணையை உடைய தாயைப் போன்ற அருணகிரிநாதர். செந்நெறியில் போகாமல்தீநெறியில் போவோரைப் பார்த்து"மதியிலிகாள்"என்று அவர் அழைப்பது தவறாகாது.  "எங்களிடம் அளவற்ற பணம் இருக்கிறது. நன்செய்புன்செய் நிலங்கள் நிறைந்திருக்கின்றன. நாங்கள் நினைத்தால் எங்கள் புத்தியைக் கொண்டு இன்னும் பத்தாயிரம் மடங்காகப் பெருக்கிக் கொள்வோம்எனவேநாங்கள் அறிவிலிகள் இல்லை"  என்று சிலர் சொல்லலாம். அவர்களைப் பார்த்து"உங்களை எது தொடர்ந்து வருகின்றதோஅது உங்களுடையது. உங்களை விட்டு நீங்குகின்றது உங்களுடையது அல்ல" என்கின்றார் அருணகிரிநாதர்.

 

     "உங்கள் வல்வினை நோய்,ஊழின் பெருவலி உண்ண ஒட்டாதுஉங்கள் அத்தம் எல்லாம் ஆழப் புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப்பிறகே?என்று கேட்கின்றார். "நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அத்தம் - பொருள் - எதற்குப் பயன்படும்நீங்கள் இறந்த பிறகு உங்களுடன் தொடர்ந்து வருமா அதைத்தான் ஆழமாகப் புதைத்து வைதுள்ளீர்களே. அது இப்போதும் பயன்படவில்லைஇனிமேலும் பயன்படாதுஎன்கிறார். 


     தானும் அனுபவிக்காதுபிறருக்கும் கொடுத்துப் புண்ணியத்தைத் தேடிக் கொள்ளாதுபுதைத்து வைப்பது இழப்புக்கு ஒப்பு என்கின்றது நாலடியார்.

 

"உண்ணான்,ஒளிநிறான்,ஓங்கு புகழ்செய்யான்,

துன்அருங் கேளிர் துயர்களையான்,- கொன்னே

வழங்கான் பொருள்காத்து இருப்பானேல்அஆ

இழந்தான் என்று எண்ணப் படும்".               --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     தானும் உண்ணாமல்பிறர்க்கு உதவி செய்து பெருமைப் படாமல்புகழை ஈட்டிக் கொள்ளாமல்தனது நெருங்கிய சுற்றத்தார் துயரைத் துடைக்கப் பொருளைத் தந்து உதவாமல்தேடிய செல்வத்தை வீணே பூட்டி வைத்துக் காத்து இருப்பவன் வாழ்க்கை... சீசீ. வாழ்க்கையா அது?  அவன் அந்தப் பொருளை இழந்து விட்டான் என்றே கருதப்படுவான்! (செல்வம் நிலையில்லாதது. ஆதலின் இருக்கும்போதே அதனை நன்கு பயன்படுத்தாவிடின் அந்தப் பொருள் இழந்த பொருளாகக் கருதப்படும்.)

 

"உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்

கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது

வைத்து ஈட்டினா ர்இழப்பர்வான்தோய் மலைநாட!

உய்த்து ஈட்டும் தேனீக் கரி".                       --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     அடுத்தவரை நெருங்க விடாதுதானும் உண்டும் மகிழாதுபாடுபட்டுத் திரட்டிய தேனைப் பிறர் எடுத்துச் செல்வர். தேனீக்கள் அழிந்து போகும். அதுபோலத்தான்பாடுபட்டுத் தேடிய செல்வத்தைக் கொண்டுதானும் நன்றாக உடுத்துஉண்டு மகிழாமல்கேட்டினைத் தராத நல்ல அறச் செயல்களையும் செய்யாமல்தமது உடம்பை வருத்தி மேலும் மேலும் செல்வத்தை ஈட்டுவதிலேயே கருத்தாக இருந்துசேர்த்து வைத்து இழந்துபோவர். செல்வமானது அவருக்கும் உதவாதுபிறருக்கும் பயன்படாது பறிபோகும்.

 

     அப்படிப் பயன்படுத்த ஒட்டாமல் செய்வது எதுஅதுபெரும் வல்லமை உள்ள ஊழ்வினை ஆகும். அந்த ஊழ்வினைநல்வினை என்னும் புண்ணியமாகவும் வரும். தீவினை என்னும் பாவமாகவும் வரும். வல்வினை நோய் என்பதுமுற்பிவிகளில் செய்த தீவினையால் உண்டாகும் கொடிய நோய். அது இப்பிறவியில் ஒருவன் ஈட்டிய செல்வத்தை அனுபவிக்க விடுவதில்லை. முற்பிறவியில் யாருக்கும் கொடுக்கவில்லை. அதனால் இப்பிறவியில் அதனை அனுபவிக்க விடவில்லை. 

 

"வகுத்தான் வகுத்த வகை அல்லால்கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது"

 

என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

 

      கோடி கோடியாகப் பணத்தைச் சேமித்து வைத்திருக்கிறவன் ஒரு கவளம் உண்ண முடிவதில்லைவயிற்று வலிவயிற்று வலி என்று துடித்துக் கொண்டே இருக்கிறான். ஒருவன் வெளிநாட்டிற்கு இன்பச் சுற்றுலாவுக்காக ஆறு மாத காலத்திற்கு வேண்டிய பணத்தைஅந்நாட்டில் உள்ள வங்கியில் போட்டுவிடுகிறான். அவன் தனி விமானத்தில்தான் போகிறான். அவன் வரப்போகிறான் என்று அங்கே விமான நிலையத்தில் பலர் காத்து நிற்கிறார்கள். இங்கே புறப்பட்டவன் அங்கே போய்ச் சேரவில்லை. வழியிலேயே மார்பு அடைத்துக் கொண்டது. அவன் இங்கே விமானத்தில் ஏறுவதற்கு முன் மருத்துவர்கள் அவனைப் பரிசீலனை செய்து பார்த்ததுத்தான் அனுப்பினார்கள். இப்படி ஆகும் எனத் தெரியவில்லை. அதற்குக் காரணம்தான் வல்வினை நோய். "ஒரு நோயும் இல்லை. நேற்று வரை காய்ச்சல்தலைவலி என்று கீழே படுத்ததும் இல்லை. அவன் இன்று செத்துப் போய் விட்டான். நம்ப முடியவில்லையே"  எனச் சொல்கிறோம். அருணகிரிநாதர் சொல்கிறார் "நீங்கள் சொல்கிறது உடம்புக்கு வருகிற நோய். இது வல்வினை நோய். பொல்லாத ஊழ்வினை நோய்"என்கிறார்.

 

     நல்வினை வேறு.  வல்வினை வேறு. ஒருவன் விமானத்தில் போக இடம் பதிவு செய்திருப்பான். அந்தச் சமயம் பார்த்து ஏதாவது ஒரு அவசர வேலை வரும். அதனால் பயணத்தை ஒத்திப் போட்டு விடுவான். அன்று இரவு அவன் பயணம் செய்ய இருந்த விமானம் போகும்போது நடுவழியில் எரிந்து விழுந்து விட்டது என மறுநாள் செய்தி வரும். அவன் அன்று போயிருந்தால் அவன் கதி என்ன ஆயிருக்கும்அவனுடைய நல்வினை அவனுக்குக் காவலாக இருந்தது.  அவன் நல்வினை அப்படி வந்தது. வல்வினை நோய் நேர்மாறாக இருக்கும். வல்வினையின் விளைவு உடம்பு குண்டாக,நோய் இல்லாமல் வாழ்கிறவருக்குத் திடீரென்று உயிர் போகிறது.  பணம் பணம் என்று அதைச் சேமிக்க அவர் என்ன பாடுபட்டார்அது அவருக்காவது பயன்பட்டதா இல்லை. அவர் உயிரைக் கொண்டு போக எந்த நோயும் வரவில்லை. வந்தது வல்வினை நோய்.

 

"ஊழில் பெருவலி யாஉமற்று ஒன்று

சூழினும் தான் முந்து உறும்"

 

என்று ஊழின் வலிமையைக் காட்டினார் திருவள்ளுவ நாயனார்.

 

     ஊழ் என்பதுஆகூழ் என்றும் இழவூழ் என்றும் இரண்டு பிரிவாக நிற்கிறது. புண்ணியப் பயனால் இன்பத்தைத் தரக் காரணமாக இருப்பது ஆகூழ் (ஆகு ஊழ்) என்னும்  நல்ல ஊழ். அது நல்வினை விளைவாகிய நலம். பாவத்தின் பயனாகத் துன்பத்தைத் தருவது இழவூழ் (இழவு ஊழ்). அது பொல்லாத ஊழ். அது வல்வினையின் விளைவாகிய நோய்.

 

      "ஊழிற் பெருவலி யாவுளஎன்று திருவள்ளுவ நாயானார் சொல்கிறார். அருணகிரிநாதரும்"ஊழிற் பெருவலிஎன்கிறார். நல்வினை நலமும்வல்வினை நோயும் சேர்ந்ததே ஊழ்.  வல்வினை நோயையே பெருவலி என்று சொல்வது ஏன்அதுதான் பெரும்பான்மையானது. அவரவர்களுடைய பாவ புண்ணியத்திற்கு ஏற்பத் துன்பமும்இன்பமும் விளைகின்றன. விதியின் ஆற்றலை நாம் எப்பொழுது உணர்கிறோம்இன்பம் உண்டாகும்போது யாரும்"இது என் தலைவிதிஎன்று சொல்வது இல்லை. "உங்கள் பையன் தேர்வில் முதல் வகுப்பில் தேறியிருக்கிறானாமே?"என்றால்,யாரும்"இது என் தலை எழுத்து" என்று சொல்வது இல்லை.  "வியாபாரத்தில் உங்களுக்கு நஷ்டம் உண்டாகி விட்டதாமே?என்று கேட்டால் மட்டும், "எல்லாம் என் தலை எழுத்துஎன்கின்றனர். வருகின்ற நன்மையைஇலாபத்தைத்  தலையெழுத்து என்று சொல்வதில்லை. நன்மை வந்தால்தன்னால் வந்ததாகவும்தீமை வந்தால் தலையெழுத்தால் வந்ததாகவும் அற்புதமாகச் சமாளிக்கின்றோம். உண்மையில் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்றுதான் புறநானூறு கூறுகின்றது. 

 

"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 

கருமமே கட்டளைக் கல்" 

 

என்றுதான் திருவள்ளுவ நாயனாரும் காட்டி அருளினார். 

 

     "தாமே தமக்குச் சுற்றமும்தாமே தமக்கு விதிவகையும்" என்றார் மணிவாசகப் பெருமான். எனவேதலையெழுத்து என்பது இலாபம்நட்டம் இரண்டுக்கும்தான் ஆதாரமாக இருக்கிறது. இருந்தாலும் பெரும்பாலும் தீமையை அனுபவிக்கும்போதே,அதனை ஊழின் விளைவு என்று சொல்லுகின்றோம். அது துன்பத்தையே மிகுவிப்பதால், "ஊழின் பெருவலி" என்கின்றோம்.

 

     பண்டைக் காலத்தில்காகித நாணயம் இல்லை. நிதி நிலயங்கள் இல்லை. எனவேசெல்வத்தைப் புதைத்து வைப்பது வழக்கமாய் இருந்தது. தங்கக் கட்டியை மறைத்து வைத்தவருக்கு அது சமயத்தில் பயன்படவில்லை. அவர் வல்வினை நோய் உண்ண ஒட்டாமல் தடுத்துவிட்டது. இத்தகைய அநுபவத்திலிருந்தே"உங்கள் அத்தம் எல்லாம் ஆழப் புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப்பிறகேஎன்று கேட்கிறார் அருணகிரிநாதர். "ஆழப் புதைத்து வைக்கின்ற பொருள் எல்லாம் இந்த உலகத்தில் உங்களுக்குப் பயன்படுவதில்லை. வல்வினையாகிய ஊழிற் பெருவலி அவற்றை இந்த உலகத்தில் நீங்கள் அநுபவிக்கும்படி விடுவது இல்லை. இங்கே பயன்படாவிட்டாலும் மறுமையிலாவது வருமா என்றால்,அங்கும் வராது. உம்முடைய அடியைப் பின்பற்றி வருவதாக இருந்தால் எவ்வளவு புதைத்து வைத்தாலும் நல்லதுதான். அப்படி வருமா பழங்காலத்தில் வங்கிகள் இல்லை. திருடர்கள் பயமோ அதிகம். ஆகவே,அக்காலத்தில் தாங்கள் சேமிக்கின்ற செல்வத்தைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக வீட்டிற்குள்ளேயே எங்கேயாவது குழி தோண்டிப் புதைத்து வைப்பது வழக்கம்.

 

     பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைப்பது என்பது அக்காலத்துப் பழக்கம். புதைத்து வைக்கும் செல்வந்தான் புதையல் எனப்படுகின்றது. ஒரு பழைய வீட்டை வாங்குகிறோம். அதை இடித்துக் கட்டும் போது புதையல் கிடைக்கிறது. அது நம்முடையதா! இல்லை. தனது உழைப்பினால் வந்த பொருளைப் புதைத்து வைத்தவன் எவனோ ஒருவன். அவனுக்கு அது பயன்படவில்லை. காரணம்அவனது வல்வினைநோய். 

 

"பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்

கேடுகெட்ட மானிடரே! கேளுங்கள் --- கூடுவிட்டு

ஆவிதான் போயினபின்யாரே அனுபவிப்பார்,

பாவிகாள்! அந்தப் பணம்"

 

என்றார் ஔவையார். தானும் அனுபவிக்காமல்பிறருக்கும் கொடுத்து உதவாமல்பாடுபட்டு ஈட்டிய செல்வத்தைப் புதைத்து வைத்துக் கேடு கெட்டுப் போகலாமா?

 

     சேமிக்க வேண்டியது பொருளை அல்ல. இறைவன் அருளை. கோழிக் கொடியனுடைய திருவடியைப் பணிந்தால் அருளைச் சேமிக்கலாம். முருகனை மறந்துவிட்டுப் பொருளைச் சேமித்துப் புதைத்து வைத்தால்அது இந்த உலகத்திலும் உதவாது. அருள் கிடைத்தால்,பெற்ற பொருளை நாமும் நுகர்ந்துபிறருக்கும் கொடுத்து வாழும் வாழ்க்கை அமையும். 

 

"கோழிக் கொடியன் அடி பணியாமல் குவலயத்தே 

வாழக் கருதும் மதியிலிகாள்! உங்கள் வல்வினை நோய் 

ஊழிற் பெருவலி உண்ண ஒட்டாதுஉங்கள் அத்தம்எல்லாம் 

ஆழப் புதைத்து வைத்தால் வருமோநும் அடிப்பிறகே?"

 

என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     கோழியைக் கொடியாகக் கொண்ட முருகப் பெருமானுடைய திருவடியைப் பணிந்து அவன் அருளைச் சேமிக்காமல், உலகில் நன்றாக வாழ எண்ணும் அறிவில்லாத மக்களே! உங்கள் தீவினை நோய் ஆகிய விதியிலேபெருவலிமையை உடைய பகுதி நீங்கள் சேமித்த பொருளை உண்ணும்படி உங்களை விடாது. நீங்கள் உண்ண முடியாமல் இருக்கும் உங்கள் பொருள் எல்லாவற்றையும் நிலத்தில் ஆழமாகப் புதைத்து வைத்தால்அவை நீங்கள் இறந்த பிறகு உங்கள் அடிக்குப் பிறகே உங்களைப் பின்பற்றி வருமா?வராது.

 

     அருளைத் தேடிக் கொண்டால்அது நீங்கள் எடுக்கின்ற பிறவிகள்தோறும் காவலாக வந்து அமையும். அடிப் பிறகே வருதல் என்பதுபோகும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து வருதல். 

ஈட்டிய பொருளை அனுபவிக்கவே முடியவில்லை. அவ்வளவு வன்மையாக உள்ளது உங்களது வலி்வினை நோய். அது உங்களைத் தொடர்ந்து வரவே வராது.

 

     இந்தப் பாடலைப் பொருள் உணர்ந்து ஓதிவந்தால்இதற்கு மறுதலையான ஒரு குறிப்புத் தோன்றும். கோழிக்கொடியன் ஆகிய முருகப் பெருமானுடைய திருவடி பணிந்தால் குவலயத்தே வாழலாம்ஈட்டிய பொருளை உண்டு அனுபவிக்கலாம். புதைத்து வைக்காமல் பிறருக்கும் கொடுத்துபொருளை அருளாக மாற்றிக் கொள்ளலாம். அதன் பயனாக விளையும் புண்ணியம் பிறவிகள்தோறும் தொடர்ந்து வரும்.

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...