சப்பாணி கொட்டிய பன்னிரு கைகள்
-----
"குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்! இருநான்கு வெற்பும்
அப்பாதியாய் விழ,மேரும் குலுங்க,விண்ணாரும் உய்யச்
சப்பாணி கொட்டியகை ஆறுஇரண்டு உடைச் சண்முகனே!"
என்பது அருணகிரிதாநப் பெருமான் அருளிய கந்தர் அலங்காரப் பாடல்களுள் ஒன்று.
இதன் பொருள் ---
எட்டுக் குலமலைகளும் சரிபாதியாய்ப் பிளந்து விழவும், மேருமலையும் நிலைகுலையவும், எஏவர்கள் சிறை நீங்கிப் பிழைக்கவும் சப்பாணி கொட்டிய பன்னிரு திருக்கைகளை உடைய ஆறுமுகப் பரம்பொருளே! இந்த மண்ணுலக வாழ்க்கையே நிறைபேறு உடையது என்று களித்துக் கூத்தாடுகின்ற ஐம்புலன்களினால் சுழற்சியை அடைந்த இந்தப் பாசத்தோடு கூடிய மனத்தை உடைய அடியேனைத் திருவருள் புரிந்து உய்யும்படிச் செய்வீராக.
குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விளையாட்டுச் சிறப்பாக இருக்கும். குழந்தை பிறந்த ஒன்பதாம் நாள் அதற்குக் காப்பு இடுவார்கள். தெய்வங்கள் தங்களின் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டி, வேப்பிலைக் காப்பும், தங்கக் காப்பும், வெள்ளிக் காப்பும் இடுவார்கள். அந்தப் பருவத்தைப் பிள்ளைத் தமிழில் அழகாக "காப்புப் பருவம்" என்று பாடினார்கள் புலவர் பெருமக்கள்.
அடுத்தபடி, தொட்டில் இட்டுத் தாலாட்டுப் பாடும் பருவத்திற்குத் "தாலப் பருவம்" என்று பெயர். குழந்தை இங்கு இங்கு என்று சொல்லும் பூமியில் படுத்துக் கொண்டு நீந்தத் தொடங்கும். இந்தப் பருவத்திற்குச் "செங்கீரைப் பருவம்" என்று பெயர். பின்பு குழந்தை எழுந்து உட்கார்ந்து கொண்டு இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டும். அது "சப்பாணிப் பருவம்"எனப்படும். பாணி என்பது கை. கையோடு கை சேர்த்துத் தட்டுவதனால் அப்பெயர் வந்தது. அடுத்து முத்தம் தா என்று கேட்கும் "முத்தப் பருவம்". வா வா என்று அழைப்பது "வருகைப் பருவம்". இப்படியே பத்துப் பருவங்கள் உண்டு.
குழந்தை சற்றே வளர்ந்து உட்காரத் தெரிந்து கொண்ட பிறகே இரண்டு கைகளையும் ஒசை எழும்படி தட்ட இயலும். பிறந்த குழந்தைக்குக் கை விரிவது இல்லை.
சரவணப் பொய்கையில் ஆறு திருவுருவங்களோடு விளங்கிய முருகப் பெருமானை, அம்பிகை அன்போடு எடுத்து அரவணைத்து, ஆறு திருவுருவங்களையும் ஒன்றாக்கி, "கந்தன்" என்று அருமையாகப் பேரைப் புனைந்து மகிழ்ந்தார். இந்த அருமையைக் குமரகுருபர அடிகள் தாம் அருளிச்செய்த "திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா"வில் பின்வருமாறு பாடி உள்ளார்.
"நறுநீர் முடிக்கு அணிந்த நாதன் - குறுமுறுவல்
கன்னியொடும் சென்று அவட்குக் காதல் உருக்காட்டுதலும்,
அன்னவள் கண்டு, அவ்வுருவம் ஆறினையும் - தன்இரண்டு
கையால் எடுத்து அணைத்து, கந்தன் எனப்பேர் புனைந்து,
மெய்ஆறும் ஒன்றாக மேவுவித்து, - செய்ய
முகத்தில் அணைத்து, உச்சி மோந்து, முலைப்பால்
அகத்துள் மகிழ் பூத்து அளித்து, -சகத்துஅளந்த
வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே!" --- கந்தர் கலிவெண்பா.
குழந்தை சற்று வளர்ந்துவிட்டது. மூடி இருக்கிற கையை விரித்துத் தட்டி, சப்பாணி கொட்டி விளையாடுகின்றது. சப்பாணி கொட்டும் குழந்தையைப் பார்த்து, அந்த அழகைப் பாட வந்த அருணகிரிநாதர், அந்தக் குழந்தையினிடத்தில் ஒரு வேண்டுகோளை வைக்கின்றார். மற்றக் குழந்தைகள் இரண்டு கைகளினாலே சப்பாணி கொட்டும். ஆனால், நமது சொந்தக் கடவுள் ஆகிய முருகன் என்னும் குழந்தை, ஆறு திருமுகங்களும், பன்னிரண்டு திருக்கரங்களும் உடையவன். ஆகையால் தன்னுடைய பன்னிரண்டு திருக்கைகளாலும் சப்பாணி கொட்டி விளையாடுகிறான். அவனைப் பார்த்து, "குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்" என்று வேண்டுகின்றார்.
ஒரு பெரிய மேடை பொம்மலாட்டம் நடக்கிறது. மேடைகளில் பொம்மைகள் வந்து ஆடும். திரைக்கு முன்னாலே மேடையில் ஆடுகின்ற அந்தப் பொம்மைகள் இயங்குவதற்குக் காரணமாய் இருப்பவன் திரைக்குப் பின்னால் இருப்பான். பொம்மைகளின் ஆட்டம் அத்தனையும் பின்னால் இருக்கிற மனிதனுடைய ஆட்டத்திற்கு ஏற்பவே நிகழும். அவன் ஆடாவிட்டால் அந்தப் பொம்மைகள் ஆடமாட்டா. மிகவும் மெல்லிய கறுப்புக் கயிற்றின் மூலம் பின்னால் ஆடுகின்ற மனிதனுக்கும் அந்த பொம்மைகளுக்கும் தொடர்பு இருக்கும். அவன் கையையும் காலையும் ஆட்டும் போது அந்தப் பொம்மையின் கையும் காலும் ஆடும். இந்த இரண்டு பேரையும் இணைக்கும் பொருள் கயிறு. கயிற்றை "பாசம்" என்பார்கள். பின்னால் இருக்கிற ஆளுக்கும், முன்னால் இருக்கிற பொம்மைகளுக்கும் "பாசம்" ஆகிய கயிறு தொடர்பாக இருப்பதால், அந்த மனிதன் இந்தப் பொம்மைகளை எல்லாம் ஆட்டி வைக்கிறான். கயிறு அறுந்தால் ஆட்டம் இல்லை. அப்படியே, பின்னால் இருக்கிற ஆளுக்கும், முன்னால் உள்ள பொம்மைகளுக்கும் இடையே தொடர்பாக உள்ள கயிறு அறுந்துவிட்டால், எவ்வளவுதான் பின்னால் இருக்கிற ஆள் ஆடினாலும், மேடையிலுள்ள பொம்மைகள் ஆடா. பொம்மைகள் ஆடவேண்டுமானால் கயிறு வேண்டும்.
பின்னால் ஐந்து பேர்கள் சேர்ந்து கொண்டு ஒரு பொம்மையை ஆட்டி வைக்கிறார்கள் என்பதை, "கூத்தாடும் ஐவர்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். பின்னால் இருந்து ஆட்டுகின்றவர்களோ ஐந்து பேர். என்றாலும் ஆடுவது ஒரு பொருள்தான். இந்த ஆட்டம் நிகழும் மேடை எங்கே அமைந்து உள்ளது?உலகம் என்ற மேடையிலே ஆட்டம் நடக்கிறது.
மிருகங்களை வேட்டை ஆடுகின்ற வேடர்கள் அவை நடமாடுகின்ற இடங்களில் எல்லாம் வலைகளைப் பரப்பி வைத்திருப்பார்கள். அவற்றில் மிருகங்கள் வந்து சிக்கிக் கொள்ளும். இந்த உலகம் முழுவதும் எங்கே போனாலும் அங்கே மனித மனமானது சிக்கிக் கொள்கிற கண்ணிகள் நிரம்பவே இருக்கின்றன. பார்ப்பதற்கு நல்ல இடமாக இருக்கிறதே என்று போனால், அங்கே சிக்கிக் கொள்ளும்.
அதுபோலத் தான் மனிதனும் பலவிதமான கண்ணிகளில் சிக்கிக் கொண்டு வாழத் தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றான். எங்கே போனாலும், அங்கங்கே வைக்கப்பட்டு உள்ள கண்ணியில் சிக்கிக் கொண்டு தடுமாற்றத்தை அடைவான். இறைவன் திருக்கோயிலை நாடிப் போனாலும், அங்கே உள்ள கண்ணிகளில் சிக்கிக் கொள்வான். எதற்காகக் கோயிலுக்குச் சென்றானோ, அந்த நோக்கம் ஈடேறாது. எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டுக் கோயில் கட்டி, மூர்த்திகளைத் தாபிதம் செய்து வைக்கின்றார்கள். அந்தக் கோயில்களின் கும்பங்களையும், மூர்த்திகளையுமே சிலர் திருடிக் கொண்டு போகின்றார்கள். கோயிலுக்கு வந்தவன்,கண்ணிகளில் சிக்கிக் கொண்டுதான் இம்மாதிரியான திருட்டுக் காரியங்களைச் செய்கிறான்.
திருவிழாவின் போது இறைவன் திருவீதி வலம் வருகின்றான். முழுக்க முழுக்க நகைகளால் இறைவனை அலங்கரித்து இருப்பார்கள். இறைவனிடத்தில் அன்பு உடையவர்கள், ஞானம் ஆகிய கத்தியைக் கட்டிக் கொண்டிருக்கும் நெஞ்சத்தை உடையவர்கள். அவர்கள் இறைவனைத் தரிசித்து, உள்ளம் உருக வழிபட்டு மகிழ்வார்கள். அலங்காரம் அவர்களது கண்ணை மறைக்காது. ஆனால், பலரும் இறைவனுக்குச் செய்துள்ள அலங்காரத்தில் மனதை இழப்பார்கள். சிலர், பிறர் அணிந்து வந்துள்ள நகைகளின் மீது கண்ணைச் செலுத்துவார்கள். இறைவனை மறப்பார்கள். இறைவனை வழிபடக் கோயிலுக்கு வந்தவர்கள், அதனை மறந்து, தேவையில்லாவதற்றில் தமது நெஞ்சைத் திருப்புவார்கள்.
இப்படி இந்த உலகம் முழுவதும் நல்ல இடமோ, பொல்லாத இடமோ எங்கே பார்த்தாலும், கண்ணிகள் பரப்பப்பட்டு உள்ளன. அவற்றில் சிச்கிக் கொள்ளாமல் நெஞ்சம் தப்பிக் கொள்ள வேண்டுமென்றால், ஞானம் என்ற கத்தி வேண்டும். ஞானம் இருந்தால் கண்ணிகள் அறுபட்டுப் போகும். பெரும்பாலான நெஞ்சங்களுக்கு அது இல்லை. பாசவலைக்குள் சிக்கிக் கொள்கிற ஆற்றல்தான் இருக்கிறது. அப்படிச் சிக்கிக் கொள்ளும்போது பின்னால் இருக்கிற ஐந்து பேர்வழிகள் அதை ஆட்டத் தொடங்குகிறார்கள். உலகமாகிய பெரிய மேடையில் பாசமாகிற கயிற்றால் நம்மைப் பிடித்துக் கொண்டு புலன்களாகிய ஐவரும் ஆட்டி வைக்கிறார்கள். கயிற்றைச் சுற்றி மிக வேகமாக இழுத்துவிட்டால் பம்பரம் மிகவேகமாகச் சுழலுகிறது. அதைப் போல நெஞ்சம் சுழன்று கொண்டே இருக்கிறது. பாசமாகிற கயிற்றினால் சுற்றப்பட்டு ஐந்து பேர்களால் மிக வேகமாகச் சுழலுகிறது. ஒர் இடத்தில் நிற்பதே இல்லை. ஒரே கணப் பொழுதிற்குள் எத்தனையோ தொலைவில் சென்று விடுகிறது மனம். சென்று சென்று சுழன்று கொண்டே இருக்கிறது.
ஐந்து பொறிகளென்னும் வாசல் வழியாக நமக்குப் பல அனுபவங்கள் வருகின்றன. அந்த அனுபவத்தின் வாசனை மனத்தில் ஏறுகிறது. மல்லிகை மலரை எடுத்து மோந்து பார்க்கிறோம். பிறகு ஒரு சமயம், அந்தப் பொருள் கண் முன்பு இல்லாவிட்டாலும் ஒரு மல்லிகை மலரை எடுத்து மோப்பது போன்ற அனுபவத்தை நினைப்பால் மனம் பெறுகிறது. நல்ல இனிப்பைச் சாப்பிடுகிறோம். சாப்பிடுவது வாய்தான் என்றாலும், சாப்பிட்ட பிற்பாடு அதை மனம் நினைக்கிறது. வாசனை நுகர்கின்ற நினைவு வேறு. சங்கீதம் கேட்கின்ற நினைவு வேறு. நினைப்பு ஒன்றாக இருந்தாலும் அனுபவ வேறுபாட்டால் ஐந்து விதமான நினைப்புக்கள் அமைகின்றன. இப்படி ஐந்து பொறிகளின் அனுபவமான வாசனைகளும் மனத்தில் படிந்திருக்கும். மனம் ஐந்து பொறிகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றை நினைக்க முடியாது தவிக்கும்.. ஐந்து பொறிகளுக்கும் உட்பட்ட அனுபவத்தையே நாம் நினைக்கிறோம்.
இளமைக் காலத்தில் பட்ட அனுபவங்களின் வடுக்கள் எல்லாம் வாசனையாக நின்று வயது ஆக ஆக, அதன் பரிணாமமான உணர்ச்சிகளை எழுப்பும். இந்தப் பிறவியில் இளமைக் காலத்தில் உண்டான அனுபவத்தை ஏடு புரட்டிப் பார்க்கிறார்கள். நம்மவர்கள் ஒருபடி மேலேயே சென்றிருக்கிறார்கள். மனம் என்பது இந்தப் பிறவி அனுபவத்தை மாத்திரம் கொண்டு அமைவது அல்ல. பிறவிகள் தோறும் வரும் வாசனை, படலம் படலமாக அதனிடத்தில் இருக்கும் என்று சொல்கிறார்கள். நம்முடைய மனத்தில் தோற்றுகின்றதை நினைவு என்று சொல்கிறோம். நாம் தெரிந்து கொள்ள முடியாதபடி மனத்துக்கு அடியில் இருந்து கொண்டு விளைவுகளை உண்டாக்கும் நினைவுகளை அடிமனப் பதிவுகள் என்று சொல்வார்கள். இந்த இரண்டுக்கும் கீழே ஆழமாகவும், மிகமிக நுட்பமாகவும் உள்ளவைகளை வாசனை என்று சொல்வது சமயமரபு. இந்த மூன்று நிலைகளில் முதல் நிலையாகிய நினைவை நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். இரண்டாவதாகிய அடிமன வடுவை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். மூன்றாவதாகிய வாசனையை மெய்ஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
ஒரு வயிற்றில் பிறந்து ஒரே ஆசிரியரிடம் பயிலும் இரண்டு மாணவர்களின் அறிவு வெவ்வேறு விதமாக இருப்பதைப் பார்க்கிறோம். இரட்டைப் பிள்ளைகளாகப் பிறந்தவர்களின் அறிவுகூட ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதற்குக் காரணம், இரண்டு பேரும் ஒரே வயிற்றில் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தாலும், முந்திய பிறப்பில் அவர்களின் உள்ளங்களில் அமைந்த வாசனையினால் அறிவு முதலியன மாறுபாடு அடைகின்றன. மனத்தில் முன்பு ஏற்பட்டிருக்கும் அனுபவங்களின் வடுக்கள் எல்லாம் வாசனையாக இருப்பதனால்தான் வெவ்வேறு வகையில் மனமும் செயல்களும் அமைகின்றன.
இந்த மனம் ஆகிய பொம்மையைப் பொறிகளாகிய ஐந்து பேர்கள் பின்னால் இருந்து வெவ்வேறு வகையில் ஆட்டுகிறார்கள். பாசம் என்ற ஒன்றோடு நெஞ்சைச் சேர்த்துக் கட்டி வைத்து ஆட்டுகிறார்கள். ஐந்து பேர் மனத்தைப் பாசத்தால் ஆட்டும் கூத்தாக வாழ்க்கை அமைகிறது. உடம்பைப் பெற்ற யாவருக்கும் ஐந்து பொறிகள் உண்டு. பொறிகளை இந்திரியங்கள் என்பர். மெய்ஞ்ஞானிகளுக்கும் அவை உண்டு. அவர்களும் கண்ணால்தான் பார்க்கிறார்கள். காதால்தான் கேட்கிறார்கள். காலால்தான் நடக்கிறார்கள். வாயால்தான் சாப்பிடுகிறார்கள். ஞானம் பெற்றவர்கள் என்பதற்காக அவர்கள் காது செவிடாகப் போகவில்லை. கண் குருடாகப் போகவில்லை. உடம்பு கட்டையாகக் கிடக்கவில்லை. அவர்களுக்கும் நமக்கும் என்ன வேற்றுமை? அவர்களுக்கும் நம்மைப் போல ஐந்து பொறிகளும் வேலை செய்கின்றன. ஆனால் மனம் அமைதியாக இருக்கிறது. பின்னே இருக்கிற மனிதன் எப்படி ஆட்டினாலும், வெளியிலுள்ள பொம்மைகள் ஆடவில்லை. இதற்குக் காரணம், இருசாராரையும் இணைத்து இருக்கும் கயிறு அறந்துபோய்விட்டது. ஐந்து பொறிகளுக்கும் மனத்திற்கும் இடையே உள்ள கயிறாகிய பாசம் அறுபட்டுப் போய்விட்டது.அதனால் மனம் ஆடுவது இல்லை.
பார்ப்பதற்கு நாமும், ஞானிகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும், நாம் பாசமாகிற கயிற்றினால் பொறிகளோடு கட்டப்பட்ட மனத்தை உடையவர்கள். அவர்கள் அந்தக் கயிற்றை ஞானம் என்னும் வாளினால் அறுத்து விட்டவர்கள். ஆகவே, அவர்கள் இருதயத்தில் இருக்கிற இறைவனோடு எப்போதும் ஒன்றுபட்டு ஞானமயமாக இருக்கிறார்கள். அவர்கள் செய்கிற காரியங்கள் அத்தனையும் ஞானத்தின் விளைவாகவே அமையும். நாமோ பாசமாகிற கயிற்றை அறுக்கும் ஞானம் இல்லாதவர்களாக இருக்கிறோம். நம்மை ஐந்து பொறிகளாகிய பேர்வழிகள் ஆட்டிக்கொண்டே இருக்கிறார்கள். நாம் சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்கிறோம். அப்படிச் சுழல்வதனால் நமக்கு இன்பம் இல்லை. துன்பத்தைத்தான் கண்டோம். இன்பம் போன்ற துன்பங்களையே அனுபவித்து வந்தோம், வருகின்றோம். ஐந்து பொறிகளையும் நமக்கு அடிமையாக்க முடியாமல் நாம் அவற்றுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். நம் மனம் அவற்றுக்கு அடிமைப்பட்டு நம்மையும் தன்னோடு இழுத்தடிக்கிறது. அதனால் விளைவது துன்பம்.
பொறிகளின் வசம் அகப்பட்டுப் படுகின்ற துன்பமே பலருடைய உயிரை மாய்க்கிறது. விட்டில் உள்ள பூச்சி எரிந்து கொண்டிருக்கிற விளக்கைக் கண்ணால் பார்க்கிறது. கண் என்னும் பொறிக்கு அடிமைப்பட்ட அது, அதனைப் பழம் என்று நினைத்துக் கொண்டு போய் அதில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறது. அசுணம் என்பது ஒரு பறவை. அதன் காது மிக நுட்பமானது. வீணை வாசித்தால் மகிழ்ந்து ஓடி வரும். பறையைக் கேட்டால் இறந்து விடும். "யாழ் நறை அடுத்த அசுணநன் மாச்செவி பறை அடித்தது போலும்" என்று இந்தச் செய்தியைக் கம்பர் உவமையாகச் சொல்லிக் காட்டி உள்ளார். இந்த அசுணப் பறவையைப் பிடிப்பதற்கு வேடர்கள் ஒரு தந்திரம் செய்வார்கள். முதலில் வீணையை வாசிப்பார்கள். வீணை இசையைக் கேட்ட அந்தப் பறவை வந்து நிற்கும். உடனே அதைப் பற்றிக் கொள்வார்கள். பிறகு பறை அடிப்பார்கள். காது என்ற பொறிக்கு அது அடிமையாவதனால் தான் வேடர்களிடம் சிக்கிக் கொண்டு உயிரை விடுகின்றது.
புலன்வழிபட்ட பறவைகளும் விலங்குகளும் படுகின்ற அவத்தையை, பட்டினத்து அடிகளார் பின்வருமாறு அழகாகப் பாடிக் காட்டி உள்ளார்.
"அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி
விளைவாய்த் தூண்டிலின் உள்இரை விழுங்கும்
பன்மீன் போலவும்,
மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும்,
ஆசையாம் பரிசத்து யானை போலவும்,
ஒசையின் விளிந்த புள்ளுப் போலவும்,
வீசிய மணத்தின் வண்டு போலவும்
உறுவது உணராது செறுவுழிச் சேர்ந்தனை" --- கோயில் நான்மணி மாலை.
இதன் பொருள் ---
அழுக்கு நிறைந்த ஐம்புலன்களுக்கு ஆட்பட்டு, குற்றம் உண்டாக வாழ்ந்து, வளைந்த வாயின உடைய தூண்டிலில் இடப்பட்டு உள்ள இரையை விரும்பிச் சென்று இறக்கின்ற மீன் `சுவை` என்னும் புலனால் கெடுதற்கு ஒப்பாகவும், விளக்கு ஒளியை `இரை` என ஓடி வீழ்ந்து இறக்கும் விட்டில் பூச்சி கண் என்னும் புலுனால் கெடுதற்கு ஒப்பாகவும், பரிச உணர்வு என்னும் ஆசையினால் உந்தப்பட்டு, காட்சியாக வைக்கப்பட்டு உள்ள பெண் யானையை விரும்பிச் சென்று குழியில் விழுகின்ற ஆண்யானைக்கு ஒப்பாகவும், வேடர்கள் வஞ்சனையால் இசைக்கும் இசைக்கு மயங்கிச் சென்று வலையில் விழுகின்ற அசுணம் என்னும் பறவை, காது என்னும் புலனால் அழிதற்கு ஒப்பாகவும், விரிந்த மலர்களில் இருந்து வீசும் மணநாற்றத்தால் மயங்கிச் சென்று, மலர்கள் குவிந்து கொள்வதால் அகப்பட்டு மாய்கின்ற வண்டுகள் போலவும், உனக்கு ஐம்புலன் ஆசையால் வரும் கேட்டினை உணராது வாழ்ந்து நரகத்தில் விழுந்தனை.
இப்படிப் பறவையும், விலங்கும் பொறிகளுக்கு அடிமைப்பட்டு அல்லல் படுவதைப் பார்க்கிறான் ஆறறிவு படைத்த மனிதன். ஆயினும் அவற்றைப் போலவே அவனும் அந்தக் கண்ணிகளில் சிக்கிக் கொள்கிறானே அன்றித் தப்புவதற்கு ஞானமாகிற வாளைத் தன்னிடத்தில் வைத்துக் கொள்ள அவன் அறியவில்லை.
மனம் என்ற ஒன்றை ஐந்து பொறிகளும் பாசமாகிய கயிற்றினால் கட்டிச் சுழற்றிக்கொண்டே இருக்கின்றன. மனம் கொஞ்ச நேரம் நின்றால் இறைவனை நினைக்க முடியும்.மிக வேகமாகச் சுழன்று கொண்டே இருக்கிற இயந்திரத்தின் அருகில் போய்த் தொட்டால் அது தொட்டவனைத் தூக்கி எறிந்துவிடும். கல்லையோ, வேறு ஏதாவது பொருளையோ போட்டாலும் அப்படித்தான் தூக்கி எறியும். ஐந்து பொறிகளுக்கும் அடிமைப்பட்டு எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும் மனத்தை உடையவனிடம் சென்று கொஞ்சம் உபதேசம் பண்ண முனைந்தால், அறிவுரை கூற முற்பட்டால், நம்மை அப்படியே தூக்கி எறிந்து விடுவான். ஒடுகின்ற தொடர்வண்டியின் மீது கல்லை விட்டெறிந்தால், அந்தக் கல் திரும்பி எறிந்தவன் மேலேயே வந்து விழுவது போல, ஐந்து பொறிகளுக்கும் அடிமைப்பட்டவன் காதிலே உபதேசம் செய்தால் சொன்ன வேகத்தைக் காட்டிலும் மிக வேகமாக அது திரும்பி வந்துவிடும். தாடகை மேலே இராமன் அம்பை விட்டான். அது என்ன ஆயிற்று என்று கம்பர் அழகாக உலகியலை வைத்துப் பாடினார்.
"சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல்
அல் ஒக்கும் நிறத்தினாள்மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் போயிற்று அன்றே!" --- கம்பராமாயணம்.
இராமன் விட்ட அம்பு, முனிவர் சாபம் இட்டால் எப்படி வேகமாகப் போய்ச் சாபத்துக்கு ஆளானவர்களைத் தாக்குமோ, அவ்வளவு வேகமாகத் தாடகையைத் தாக்கியது. அந்தத் தாடகையின் மார்பு வைரம் பாய்ந்த பாறை போல் இருக்கிறது. அதைத் தொளைத்துக் கொண்டு போயிற்று இராமன் விட்ட அம்பு. அதற்குக் கம்பர் கூறும் உவமையைக் கவனிக்க வேண்டும். கல்லாத மனிதர்களுக்குக் கற்றவர்கள் உபதேசம் செய்தால் அது அவர்களது ஒரு காதில் புகுந்து மற்றொரு காதின் வழியே எவ்வளவு வேகமாக வெளியே போய்விடுமோ அவ்வளவு வேகமாகப் போயிற்றுஎன்கிறார்.
ஐந்து பொறிகளுக்கும் அடிமைப்பட்டுச் சுழன்று கொண்டே இருக்கிறவர்கள் என்ன சொன்னாலும் ஏற்கமாட்டார்கள். எப்போதும் மனம் சுழன்று கொண்டே இருக்கும் மக்களுக்கு அமைதி என்பது இல்லை. இறைவன் திருமுன் இருந்து, "இவ்வாறு நான் சுழலுகிறேன்" என்று நாம் சொல்லிப் புலம்ப வேண்டும். எவ்வாறு புலம்பவேண்டும்?
"குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரிற் கொட்பு அடைந்த இப் பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்"
என்று நாம் புலம்ப வேண்டும் என்று வழிகாட்டினார் அருணகிரிநாதப் பெருமான்.காரணம் நாம் சிக்குண்டு கிடக்கும் பாசம் என்னும் கயிற்றை அறுத்துத் தள்ளக் கூடிய ஞானம் என்னும் வாள் இறைவனிடம்தான் உண்டு.
"கு" என்பது உலகம். இங்கே நாம் வாழ்கிற வாழ்க்கை பாச வாழ்க்கை. குப்பாச வாழ்க்கை. ஆன்மாவைக் கட்டியிருப்பது பாசம். ஆன்மாவானது கடவுளிடம் சொல்லாதவாறு பாசம் என்ற கயிறு அதைக் கட்டியிருக்கிறது. அந்தக் கயிற்றை ஞானமென்னும் கத்தியினால் துண்டித்தால்தான் ஆன்மா இறைவனை அடைய முடியும். அந்தக் கட்டு இருக்கிற வரைக்கும் இறைவனை அடைய முடியாது.
பசுவானது தன் கன்றுக் குட்டிக்குக் கொடுப்பதற்காக மடி நிறையப் பாலை வைத்திருக்கிறது. ஆனால், மாட்டுக்காரன் கன்றுக் குட்டியை முளையோடு முளையாகச் சேர்த்துக் கட்டி விடுகிறான். கன்றை அவிழ்த்து விட்டால்தான் பசுவின் பாலைக் கன்றுக் குட்டி உண்ண முடியும். ஆன்மாக்கள் பாசம் என்ற கயிற்றினால் கட்டப்பட்டுள்ளன. கயிறு அறுபட்டால்தான் இறைவனை அடைய முடியும். இறைவன் ஆன்மாவுக்கு இன்பம் தருவதற்காகவே இருக்கிறான். அதைப் பெறமுடியாமல் பாசமாகிற கயிற்றால் கட்டுண்டிருக்கிறது ஆன்மா. பாசம் என்ற கயிற்றினால் கட்டப்பட்டு வாழ்கின்ற வாழ்க்கை இவ்வுலக வாழ்க்கை. அது பாச வாழ்க்கை.
இந்தப் பாச வாழ்க்கையில் ஐந்து பேர்கள் கூத்தாடுகிறார்கள். இவர்கள் திரைக்கு மறைவில் கூத்தாடினால்தான் திரைக்கு முன்னே இருக்கிற உயிர்கள் கூத்தாடும். ஐம்பொறிகளைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்கள் ஆடுகின்ற படியெல்லாம் ஆடிக்கொண்டே, சுற்றிக் கொண்டே இருக்கிறோம். அதனாலே மீண்டும் மீண்டும் பிறவிதான் வருகிறது. ஐந்து இந்திரியங்களுக்கும் கட்டுப்பட்டே மனிதன் வாழ்கிறான். எத்தனை தூரம் அவை அவனை ஆட்டி வைக்கின்றனவோ, அத்தனை தூரம் அவன் ஆடுகிறான். அவற்றைத் திருப்திப்படுத்துவதற்கான காரியங்களையே செய்து கொண்டிருக்கிறான். இந்த உலகத்தில் பிறந்து,உடம்பையும், உடம்பில் ஐந்து இந்திரியங்களையும் பெற்றிருப்பது இந்த உலகிலுள்ள பொருள்களைத் தன் ஆற்றல் கொண்ட மட்டும் அனுபவித்து இன்புறுவதற்காகவே என்று நினைக்கிறான். அதனாலேயே மீண்டும் மீண்டும் பிறவி வந்து கொண்டே இருக்கிறது. பிறவி வளர வளரத் துன்பமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
"இந்த உலகமாகிய பாச வாழ்க்கையில் கூத்தாடுகின்ற ஐந்து பேர்கள் என் நெஞ்சை ஆட்டுகிறார்கள். அவர்கள் சுற்றுகின்ற சுற்றுக்கு ஏற்ப என் நெஞ்சு சுழன்று கொண்டே இருக்கிறது. ஒரு கணமும் நிற்பது இல்லை. உன்னை நினைக்கலாம் என்றால் மனம் அமைதியாக நின்றால் அல்லவா நினைக்க முடியும்? எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிற என் நெஞ்சில் உன் நினைவு ஒரு கணம் வந்தாலும் சிதறுண்டு போகிறது. இதற்குக் காரணமாய் இருப்பது ஐந்து இந்திரியங்களின் ஆட்டம். அதற்கு இடமாக இருப்பது பூமி. பூமியிலே பாசம் நிரம்பி வாழ்க்கையில் ஐம்பொறிகள் மனத்தை ஆட்ட நான் ஆடுகிறேன். சுழற்சியை அடைந்த பாச நெஞ்சினை உடைய பாவியாக நான் இருக்கிறேன். இப்பாச நெஞ்சனை ஈடேற்ற மாட்டாயா?" என்று முருகப் பெருமானிடம் வேண்டுகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.
"கொட்பு அடைந்த நெஞ்சினை உடையவனாக இருக்கிறேன்" என்று எப்போதும் இறைவனையே மனத்துள் கொண்டு இருந்த அருணகிரிநாதரே சொன்னால், நாம் எல்லாரும் எங்கே இருக்கின்றோம் என்பது விளங்கும். அவரே சொல்லி அருளியதுபோல, "சரண கமலாலயத்தை அரை நிமிட நேர மட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத சட கசட மூட மட்டிகள்" நாம். இறைவனை நினைந்து அறியாதவர்கள். ஐந்து இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கிற ஒருவனை, ஐந்து இந்திரியங்களுக்கும் உட்பட்டு எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும் நெஞ்சுடைய நம்மால் நினைக்கத்தான் முடியுமா? அவனை நினைக்க வேண்டுமென்றால் இந்திரியங்கள் நமக்கு அடங்கினவை ஆக வேண்டும்.
நாம் அகங்காரம், மமகாரம் அடங்கினவர்களாக ஆகவேண்டும். இந்தச் சுழற்சி நீங்க வேண்டும். யாரை வேண்டியனால் சுழற்சி நீங்கும்? நம்மை ஆட்டி வைக்கின்ற ஐந்து பேர்களின் கொட்டம் அடங்க, இந்த ஐந்து பேருக்கும் அப்பாற்பட்ட வேறு ஒருவன் அருள் வேண்டும். அவன் யார்? அவனே ஐந்து பேரை அடக்கும் ஆற்றல் படைத்த முருகப் பெருமான். அவன் ஐந்து பேரை அடக்கியவன்.
முருகப்பெருமான் அசுரர்களோடு போர் செய்து அவர்களைச் சங்காரம் செய்தார். அசுரர்கள் படைக்குத் தலைவனாக இருந்தவன் சூரபதுமன். அவனுக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் சேர்த்தால் பெருந் தலைவர்கள் ஐவர் ஆவார்கள். யானைமுகம் படைத்த தாரகாசுரன் ஒருவன். அவன் சூரனுக்குச் சகோதரன். சிங்கமுகாசுரன் மற்றொரு சகோதரன். கிரெளஞ்சாசுரன் சூரபதுமனுக்குக் கவசம் போன்றவன். பானுகோபன் சூரபதுமனுடைய மகன். இந்த நால்வரோடு சூரபதுமனும் சேர்ந்தால் ஐவர். இந்த ஐவரோடும் போரிட்டுச் சங்காரம் செய்தவர் ஆறுமுகம் படைத்த அண்ணல். ஐந்து அசுரர்களையும் அடக்கி ஒழித்து,தேவர்களுக்கு இன்பம் தந்த பெருமான் ஆறுமுகன்.
ஆறுமுகப் பெருமான் அவதாரம் செய்தவுடனே சூரபதுமனைப் போய்க் கொல்லவில்லை. "நான் உன் கொட்டத்தை அடக்கத் தான் அவதாரம் செய்திருக்கிறேன். ஜாக்கிரதை"எனச் சூரனுக்கு எச்சரிக்கை செய்ய விரும்பியவனைப் போல, முன்னாலே தன் அவதாரத்தை அழுகையினால் தெரிவித்தான். பாலுக்காக அழும் குழந்தையைப் போல அழுது காட்டினான். கேட்டு, "ஐயோ, நம்மைக் கொல்ல வந்த எமன் பிறந்து விட்டானே!” எனச் சூரன் அழுதான். ஆனால்,அழுத மறுகணமே மாயை அவனை மூடி விட்டது. இந்த உடம்பு நிலை அற்றது என்று நமக்கு நன்றாகத் தெரியும். இறந்த பிணத்தோடு சுடுகாடு போய் வருகிறோம். வீட்டுக்கு வந்த மறுகணமே நாமும் ஒரு நாள் இறக்கத்தானே போகிறோம் என்ற நினைப்பு சிறிதும் இன்றி,பல காரியங்களைச் செய்கிறோம். அதுதான் மாயை. மாயையின் வாடை படுகின்ற நமக்கே அப்படியானால், மாயையின் பிள்ளையாகிய சூரபதுமனைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?
"திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்தி,சரவணப் பூந்தொட்டில் ஏறி,அறுவர் கொங்கை
விரும்பி,கடல் அழ,குன்று அழ,சூர் அழ,விம்மி அழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே". --- கந்தர் அலங்காரம்.
குழந்தை முருகன் தன் இடுப்பில் கட்டியிருக்கும் கிண்கிணி ஒசையை எழுப்பினார். அந்த நாதம் போர்க் காலத்தில் எழுப்புகின்ற ஒலியைப் போல நாலு பக்கமும் முழங்கியது. அந்த ஒலியையும் சூரன் கேட்டான். அப்பொழுதும் அவன் கொட்டம் அடங்கவில்லை. இப்பொழுது முருகன் தன் சின்னக் கையைத் தட்டினான். கை தட்டல் கிராமங்களில் இரவுக் காலங்களில், தனிவழியேபோகிறவர்கள் கையைத் தட்டிக்கொண்டுதான் போவார்கள். பூச்சி புழுக்கள் கை தட்டும் சத்தத்தைக் கேட்டவுடனே ஓடிவிடும்.
உலக உயிர்களுக்குத் துன்பத்தைத் தரக் கூடிய பூச்சி புழுக்களாகிய அசுரக் கூட்டங்கள், தன்னுடைய வருகையை உணர்ந்து கொண்டு ஓடிவிடமாட்டாவா என்ற கருணையினால் முருகப் பெருமான் தன் சின்னஞ் சிறு கைகளைச் சேர்த்துத் தட்டினான். கையைத் தட்டின மாத்திரத்தில் குன்றுகள் எல்லாம் குலுங்கின. எட்டுத் திக்குகளிலும் உள்ள மலைகள் பாதியாய்ப் பிளந்தன. சூரபதுமனுக்கு அந்தச் சத்தம் கூடவா கேட்கவில்லை? கை தட்டிய சத்தம் கேட்காவிட்டாலும், குன்றுகள் பாதி பாதியாய்ப் பிளந்து விழுந்தது கூடவா கண்ணில் படவில்லை? முருகன் தனது தாய்தந்தையர் மாத்திரம் மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்று எண்ணி இருந்தால், அவர்கள் காதில் மட்டும் விழும்படி சப்பாணி கொட்டியிருப்பான். தேவர்கள் மகிழ வேண்டும், தன்னுடைய அவதாரத்தின் காரணத்தைப் பகைவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணி அறுமுகப் பெருமான் தன் பன்னிரண்டு கைகளால் சப்பாணி கொட்டுகிறான். அதனால் விளைந்ததை, "இரு நான்கு வெற்பும் அப்பாதியாய் விழ, மேருங் குலுங்க, விண்ணாரும் உய்யச் சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடைச் சண்முகனே" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.
No comments:
Post a Comment