பொது --- 1044. வாதம் தலைவலி

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

வாதந் தலைவலி (பொது)

 

முருகா! உன் அடியார் போல நானும் ஒழுகி,

திருவடியைப் பெற அருள்வாய்.

 

 

தானந் தனதன தானந் தனதன

     தானந் தனதன ...... தனதான

 

 

வாதந் தலைவலி சூலம் பெருவயி

     றாகும் பிணியிவை ...... யணுகாதே

 

மாயம் பொதிதரு காயந் தனின்மிசை

     வாழுங் கருவழி ...... மருவாதே

 

ஓதம் பெறுகடல் மோதுந் திரையது

     போலும் பிறவியி ...... லுழலாதே

 

ஓதும் பலஅடி யாருங் கதிபெற

     யானுன் கழலிணை ...... பெறுவேனோ

 

கீதம் புகழிசை நாதங் கனிவொடு

     வேதங் கிளர்தர ...... மொழிவார்தம்

 

கேடின் பெருவலி மாளும் படியவ

     ரோடுங் கெழுமுத ...... லுடையோனே

 

வேதந் தொழுதிரு மாலும் பிரமனு

     மேவும் பதமுடை ...... விறல்வீரா

 

மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபட

     வேல்கொண் டமர்செய்த ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

 

வாதம், தலைவலி, சூலம், பெருவயிறு,

     ஆகும் பிணி இவை ...... அணுகாதே,

 

மாயம் பொதிதரு காயம் தனின் மிசை

     வாழும் கருவழி ...... மருவாதே,

 

ஓதம் பெறுகடல் மோதும் திரை, அது

     போலும் பிறவியில் ...... உழலாதே,

 

ஓதும் பல அடியாரும் கதிபெற,

     யான் உன் கழல் இணை ...... பெறுவேனோ?

 

கீதம், புகழ் இசை நாதம், கனிவொடு

     வேதம் கிளர்தர ...... மொழிவார்தம்,

 

கேடின் பெருவலி மாளும் படி,அவ

     ரோடும் கெழுமுதல் ...... உடையோனே!

 

வேதம் தொழு திருமாலும் பிரமனும்

     மேவும் பதம் உடை ...... விறல்வீரா!

 

மேல் வந்து எதிர் பொரு சூரன் பொடிபட,

     வேல்கொண்டு அமர்செய்த ...... பெருமாளே.

 

பதவுரை

 

            கீதம் புகழ் இசை நாதம் --- இசை இன்பமும்தேவரீரது திருப்புகழைச் சொல்லும் பாடல் இன்பமும்

 

            கனிவோடுவேதம் கிளர் தர மொழிவார் தம்--- உள்ளம் கனிந்துவேதங்களை நன்கு விளங்கும்படி ஓதுபவர்களுடைய

 

            கேடின் பெருவலி மாளும்படி--- கேட்டினைத் தருகின்ற ஊழ்வினையின் பெருவலியானது அவர்களைத் தாக்காது ஒழியும்படி,

 

            அவரோடும் கெழுமுதல் உடையோனே--- அவர்களோடு எப்போதும் உடனிருந்து காக்கும் பெருங்கருணை உடையவரே!

 

            வேதம் தொழு திருமாலும் பிரமனும்--- வேதங்கள் தொழுகின்ற திருமாலும்பிரமதேவனும்

 

            மேவும் பதம் உடை விறல் வீரா--- விரும்பிப் போற்றும் திருவடிகளை உடைய வெற்றி வீரரே!

 

            மேல் வந்து எதிர்பொரு சூரன் பொடிபட--- மேல் எழுந்து வந்து போர் செய்த சூரபதுமன் பொடியாகும்படி,

 

            வேல் கொண்டு அமர்செய்த பெருமாளே--- வேலாயுதத்தைக் கொண்டு போர் புரிந்த பெருமையில் மிக்கவரே!

 

            வாதம்--- வாதம் சம்பந்தமான நோய்கள்,

 

            தலைவலி---மண்டை இடி எனப்படும் தலை நோவு.

 

            சூலம்--- சூலைநோய்,

 

            பெருவயிறு--- மகோதரம்,

 

            ஆகும் பிணி இவை அணுகாதே--- ஆகிய இந்த நோய்கள் அடியேனை அணுகாமல்படிக்கு,

 

            மாயம் பொதி தரு காயம் தனின் மிசை வாழும் கரு வழி மருவாதே --- மாயையால் ஆன இந்த உடலைக் கொண்டு நான் வாழ்ந்து மீளவும் கருவில் புகுதலை விரும்பாலும்,

 

            ஓதம் பெறுகடல் மோதும் திரை அதுபோலும் பிறவியில் உழலாதே--- பெருங்கடலில் வீசி மோதுகின்ற அலைகள் போன்ற பிறவியில் அடியேன் உழலாமல்படிக்கு,

 

            ஓதும் பலஅடியாரும் கதிபெற--- தேவரீரது திருப்புகழை ஓதுகின்ற பல அடியார்களும் நற்கதி அடைய

 

            யான் உன் கழல் இணை பெறுவேனோ --- (அவ்விதமே ஒழுகி) அடியேனும் தேவரீரது கழலணிந்த திருவடிகளை அடையப் பெறுவேனோ?

                        

பொழிப்புரை

 

            இசை இன்பமும்தேவரீரது திருப்புகழைச் சொல்லும் பாடல் இன்பமும்உள்ளம் கனிந்துவேதங்களை நன்கு விளங்கும்படி ஓதுபவர்களுடையகேட்டினைத் தருகின்ற ஊழ்வினையின் பெருவலியானது அவர்களைத் தாக்காது ஒழியும்படிஅவர்களோடு எப்போதும் உடனிருந்து காக்கும் பெருங்கருணை உடையவரே!

 

            வேதங்கள் தொழுகின்ற திருமாலும்பிரமதேவனும்விரும்பிப் போற்றும் திருவடிகளை உடைய வெற்றி வீரரே!

 

            மேல் எழுந்து வந்து போர் செய்த சூரபதுமன் பொடியாகும்படி,

வேலாயுதத்தைக் கொண்டு போர் புரிந்த பெருமையில் மிக்கவரே!

 

            வாதம் சம்பந்தமான நோய்கள்மண்டை இடி எனப்படும் தலை நோவுசூலைநோய்மகோதரம்ஆகிய இந்த நோய்கள் அடியேனை அணுகாமல்படிக்குமாயையால் ஆன இந்த உடலைக் கொண்டு நான் வாழ்ந்து மீளவும் கருவில் புகுதலை விரும்பாலும்பெருங்கடலில் வீசி மோதுகின்ற அலைகள் போன்ற பிறவியில் அடியேன் உழலாமல்படிக்குதேவரீரது திருப்புகழை ஓதுகின்ற பல அடியார்களும் நற்கதி அடைய,  அவ்விதமே ஒழுகி அடியேனும் தேவரீரது கழலணிந்த திருவடிகளை அடையப் பெறுவேனோ?

 

 

விரிவுரை

 

கீதம் புகழ் இசை நாதம் கனிவோடுவேதம் கிளர்தர மொழிவார் தம் கேடின் பெருவலி மாளும்படி அவரோடும் கெழுமுதல் உடையோனே --- 

 

கெழுமுதல் - பொருந்துதல்.

 

பெருவலி --- ஊழின் பெருவலி.

 

இறைவனது திருப்புகழைக் கூறும் அருட்பாடல்களை இசைபொருந்தப் பொருள் உணர்ந்து ஓதுகின்றவர்களை, "வாதிய வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே" என்று அருளினால் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

"மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயற்காழி

நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய் நவிற்றிய தமிழ்மாலை

ஆதரித்து இசை கற்றுவல்லார் சொலக் கேட்டு உகந்தவர் தம்மை

வாதியாவினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே."

 

வழிபடுகின்ற அடியவர்கள் இறைவனே தனக்கு உற்ற துணை என்னும் கருத்தோடு ஓதுவார்கள் என்கிறார் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

"மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது

சாலும்அஞ்சப் பண்ணிநீண்ட தத்துவம் மேயதுஎன்னே

நாலுவேதம் ஓதலார்கள் நம்துணை என்று இறைஞ்சச்

சேலும் மேயும் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே."

 

தன்னைப் பாடி வழிபடுகின்ற அடியவர்களுக்கு அளப்பில்லாத அருளைப் பொழிவார் இறைவன் என்கின்றனர திருஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் பெருமானும்.

 

"கரைஆர்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலை மலைதன்னை

வரைஆர்தோளால் எடுக்கமுடிகள் நெரித்து மனம்ஒன்றி

உரைஆர்கீதம் பாடநல்ல உலப்புஇல் அருள்செய்தார்

திரைஆர்புனல்சூழ் செல்வ நறையூர்ச் சித்தீச் சரத்தாரே." --- திருஞானசம்பந்தர்.

 

"விளக்கினார் பெற்ற இன்பம்,

     மெழுக்கினாற் பதிற்றி ஆகும்,

துளக்கல்நன் மலர் தொடுத்தால் 

     தூயவிண் ஏறல் ஆகும்,

விளக்கு இட்டார் பேறு சொல்லின் 

     மெய்ந் நெறி ஞானம் ஆகும்,

அளப்பு இல கீதம் சொன்னார்க்கு

     அடிகள் தாம் அருளும் ஆறே."     --- அப்பர்.

 

பின்வரும் பிரமணாங்களையும் கருத்தில் கொள்ளலாம்..

 

"கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்

பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலும்இடம்,

வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்

போதத்தால் வழிபட்டான்புள்ளிருக்கு வேளூரே."

 

"பண்ஒன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக

மண்இன்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவும்இடம்,

எண்இன்றி முக்கோடி வாழ்நாளது உடையானைப்

புண்ஒன்றப் பொருதுஅழித்தான்புள்ளிருக்கு வேளூரே."

  

வாதம்--- 

 

உடம்பில் உள்ள மூன்று நாடிகளில் ஒன்று வாதநாடி. இது மிகுந்தாலும் குறைந்தாலும் வாதம் சம்பந்தமான நோய்கள் உண்டாகும். அண்டவாதம்பட்சவாதம்பாரிசவாதம் முதலிய வாத நோய்கள் இறைவனைப் பிடிவாதமாக வணங்காத பாவிகட்கு வரும்.

வாதம் சம்பந்தமான நோய்கள்,


சூலம்--- 

 

வயிற்றுவலி.

 

பெருவயிறு--- 

 

பானை போல் வயிறு பெருத்து வேதனை செய்யும். மகா + உதரம் = மகோதரம்.

 

ஆகும் பிணி இவை அணுகாதே--- 

 

"நோய்கள் பிறவிகள்தோறும் எனை நலியாதபடி உனதாள்கள் அருள்வாயே" என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் வேண்டி உள்ளார்.

 

முருகன் பவரோக வைத்தியநாதன்அவருடைய சீடர்களாகிய அகத்தியர் போகர் முதலியோர்களும் மருத்துவர்கள். முருகனை மனமொழி மெய்களால் வழிபடும் அடியார்கட்குப் பிணியே வராது. நோயற்ற இனிய வாழ்வில் வாழ்வார்கள்.

 

"முருகா எனவுனை ஓதும் தவத்தினர், மூதுஉலகில்

அருகாத செல்வம் அடைவர்வியாதி அடைந்து நையார்,

ஒருகாலமும் துன்பம் எய்தார்பரகதி உற்றிடுவார்,

பொருகாலன் நாடுபுகார், சமராபுரிப் புண்ணியனே!"  --- திருப்போரூர்ச்சந்நிதிமுறை

 

மாயம் பொதி தரு காயம் தனின் மிசை வாழும் கரு வழி மருவாதே --- 

 

இந்த உடம்பானது மாயையால் ஆனது. பிறவிகள் தோறும் ஈட்டிய நல்வினை என்னும் புண்ணியம்தீவினை என்னும் பாவம் ஆகிய இருவினைகளின் பயனாக இந்த உடம்பானது இறைவனால் படைத்தளிக்கப்படுகின்றது. இருவினைகளை அனுபவித்துக் கழித்துமேலும் வினைகள் சாராமல் வாழ்ந்துஇறைவன் திருவடியைச் சார்வதற்காக வந்த இந்த அருமையான உடம்பு நிலையில்லாதது. மாற்றத்திற்கு உரியது. "வேற்று விகார விடக்கு உடம்பு" என்றார் மணிவாசகப் பெருமான். பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது. 

 

"ஐந்து வகை ஆகின்ற பூதபேதத்தினால் ஆகின்ற யாக்கை நீர்மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம்புந்தி மகிழ்வுற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன்" என்றார் தாயுமானார்.

 

இந்த உடம்பே நன்மை தீமைகளை அறியத் துணை நிற்பது. உய்யும் நெறியில் நின்றுவினைகள் சாவியாகிப் போகுமாறு வாழ்ந்து ஈடேற வேண்டும். ஆவி சாவியாகிப் போக விடுதல் திருவருட்கு உடம்பாடானது அல்ல. உடம்பை உண்மை என்று கருதுகின்ற அறியாமை நீங்கவேண்டும். குரங்கின் கையில் அகப்பட்ட மாலை போல இந்த உடலின் அருமை அறியாது,இதனை வீணாக்கக் கூடாது.

 

எல்லாப் படியாலும் எண்ணினால்இவ்வுடம்பு

பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை, - நல்லார்

அறிந்திருப்பார்,ஆதலினால் ஆம் கமல நீர் போல்

பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு.                   --- நல்வழி.

 

"பஞ்சுஇட்ட அணைமிசை

கொஞ்சி,பலபல விஞ்சைச் சரசமொடு

          அணைத்து,மலர் இதழ் கடித்து,இருகரம்

          அடர்த்த குவிமுலை அழுத்தி,உரம் மிடர்

     சங்குத் தொனியொடு பொங்க,குழல்மலர்

     சிந்த,கொடிஇடை தங்கிச் சுழல்இட,

          சரத் தொடிகள் வெயில் ஏறிப்ப,மதிநுதல்

          வியர்ப்ப,பரிபுரம் ஒலிப்ப,எழுமத

     சம்பத்து இது செயல் இன்பத்து இருள்கொடு,

     வம்பில் பொருள்கள் வழங்கிற்றுது பினை

          சலித்து,வெகு துயர் இளைப்பொடு உடல்பிணி

          பிடித்தினைவரும் நகைப்ப,கருமயிர் ...... நரைமேவி,

 

தன் கைத் தடிகொடு,குந்தி கவி என,

உந்திக்கு அசனமும் மறந்திட்டுளமிக

          சலித்து,உடல் சலம் மிகுத்து,மதிசெவி

          விழிப்பு மறைபட,கிடத்தி,மனையவள்

     சம்பத்து உறைமுறை அண்டைக் கொளுகையில்,

     சண்டக் கரு நமன் அண்டி,கொளு கயிறு

          எடுத்து,விசைகொடு பிடித்து,உயிர்தனை

          பதைப்ப,தனிவழி அடித்து கொடு செல,

சந்தித்து அவர் அவர் பங்குக்கு அழுது,

இரங்க,பிணம் எடும் என்றிட்டுறை பறை

          தடிப்ப,சுடலையில் இறக்கி,விறகொடு

          கொளுத்தி,ஒருபிடி பொடிக்கும் இலை எனும்...... உடல் ஆமோ?"

 

என்கின்றார் திருவண்ணாமலைத் திருப்புகழில் அடிகளார்.

 

தாயுமான அடிகளார் புலம்புவது காண்க.

 

ஐம்பூதத்தாலே அலக்கு அழிந்த தோடம் அற

    எம்பூத நாதன் அருள் எய்தும் நாள் எந்நாளோ?

 

சத்த முதலாம் புலனில் சஞ்சரித்த கள்வர் எனும்

    பித்தர் பயம் தீர்ந்து பிழைக்கும் நாள் எந்நாளோ?

 

 நாளும் பொறிவழியை நாடாத வண்ணம் எமை

    ஆளும் பொறியால் அருள் வருவது எந்நாளோ?

 

வாக்கு ஆதி ஆன கன்ம மாயை தம்பால் வீண்காலம்

    போக்காமல் உண்மை பொருந்தும் நாள் எந்நாளோ?

 

மனம் ஆன வானரக் கைம் மாலை ஆக்காமல்

    எனை ஆள் அடிகள் அடி எய்துநாள் எந்நாளோ?

 

வேட்டைப் புலப்புலையர் மேவாத வண்ணம்மனக்

    காட்டைத் திருத்திக் கரை காண்பமது எந்நாளோ?

 

உந்து பிறப்பு இறப்பை உற்றுவிடாதுஎந்தை அருள்

    வந்து பிறக்க மனம் இறப்பது எந்நாளோ?

 

புத்தி எனும் துத்திப் பொறி அரவின் வாய்த்தேரை

    ஒத்துவிடாது எந்தை அருள் ஓங்கும் நாள் எந்நாளோ?

 

ஆங்காரம் என்னும் மத யானை வாயிமல் கரும்பாய்

    ஏங்காமல்எந்தை அருள் எய்தும்நாள் எந்நாளோ?

 

சித்தம் எனும் பௌவத் திரைக்கடலில் வாழ் துரும்பாய்

    நித்தம் அலையாது அருளில் நிற்கும்நாள் எந்நாளோ?

 

வித்தியா தத்துவங்கள் ஏழும் வெருண்டு ஓடச்

    சுத்தபர போகத்தைத் துய்க்கும் நாள் எந்நாளோ?

 

 சுத்தவித்தையே முதலாத் தோன்றும் ஓர் ஐந்துவகைத்

    தத்துவத்தை நீங்கிஅருள் சாரும் நாள் எந்நாளோ?

 

பொல்லாத காமப் புலைத்தொழிலில் என் அறிவு

    செல்லாமல்நன்னெறியில் சேரும் நாள் எந்நாளோ?

 

அடிகள் அடிக் கீழ்க்குடியாய் யாம்வாழா வண்ணம்

    குடிகெடுக்கும் பாழ் மடிமைக் கூறு ஒழிவது எந்நாளோ?

 

ஆன புறவிக்கருவி ஆறுபத்தும் மற்று உளவும்

    போன வழியும் கூடப் புல் முளைப்பது எந்நாளோ?

 

அந்தகனுக்கு எங்கும் இருள் ஆனவாறுஅறிவில்

    வந்தஇருள் வேலை வடியும் நாள் எந்நாளோ?

 

புன்மலத்தைச் சேர்ந்துமலபோதம் பொருந்துதல் போய்,

    நின்மலத்தைச் சேர்ந்துமலம் நீங்கும் நாள் எந்நாளோ?

 

கண்டுகண்டும் தேறாக் கலக்கம் எல்லாந் தீர்வண்ணம்

    பண்டைவினை வேரைப் பறிக்கும் நாள் எந்நாளோ?

 

பைங்கூழ் வினைதான் படுசாவியாகஎமக்கு

    எம் கோன் கிரண வெயில் எய்தும்நாள் எந்நாளோ?

 

குறித்தவிதம் ஆதியால் கூடும்வினை எல்லாம்

    வறுத்த வித்து ஆம் வண்ணம்அருள் வந்திடும்நாள் எந்நாளோ?

 

சஞ்சிதமே ஆதி சரக்கு ஆன முச்சேறும்

    வெந்த பொரியாக அருள் மேவும் நாள் எந்நாளோ?

 

தேகம் முதல் நான்காத் திரண்டு ஒன்றாய் நின்று இலகும்

    மோகம் மிகு மாயை முடியும் நாள் எந்நாளோ?

 

சத்த முதலாத் தழைத்து இங்கு எமக்கு உணர்த்தும்

    சுத்தமா மாயை தொடக்கு அறுவது எந்நாளோ?

 

எம்மை வினையை இறையை எம்பால் காட்டாத

    அம்மை திரோதை அகலும் நாள் எந்நாளோ?

 

நித்திரையாய் வந்து நினைவு அழிக்கும் கேவலமாம்

    சத்துருவை வெல்லும் சமர்த்து அறிவது எந்நாளோ?

 

சன்னல் பின்னல் ஆன சகலம் எனும் குப்பை இடை

    முன்னவன் ஞானக்கனலை மூட்டும் நாள் எந்நாளோ?

 

மாயா விகார மலம் ஒழி சுத்த அவத்தை

    தோயா அருளைத் தொடரும் நாள் எந்நாளோ?

 

உடம்பு அறியும் என்னும் அந்த ஊழல் எல்லாம் தீரத்

    திடம்பெறவே எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

 

செம்மை அறிவால் அறிந்து தேக ஆதிக்கு உள் இசைந்த

    எம்மைப் புலப்படவே யாம் அறிவது எந்நாளோ?

 

தத்துவமாம் பாழ்த்த சட உருவைத் தான் சுமந்த

    சித்து உருவாம் எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

 

பஞ்சப் பொறியைஉயிர் என்னும் அந்தப் பஞ்சம் அறச்

    செஞ்செவே எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

 

அந்தக் கரணம் உயிராம் என்ற அந்தரங்க

    சிந்தைக் கணத்தில் எம்மைத் தேர்ந்து அறிவது எந்நாளோ?

 

முக்குணத்தைச் சீவன்ரென்னும் மூடத்தை விட்டுஅருளால்

    அக்கணமே எம்மை அறிந்து கொள்வது எந்நாளோ?

 

காலைஉயிர் என்னும் கலாதிகள் சொற் கேளாமல்

    சீலமுடன் எம்மைத் தெளிந்துகொள்வது எந்நாளோ?

 

  வான்கெடுத்துத் தேடும் மதிகேடர் போலஎமை

    நான்கெடுத்துத் தேடாமல் நன்கு அறிவது எந்நாளோ?

 

மாயையால் ஆன இந்த உடம்பு இறையருளால் நமக்கு வாய்த்தது. அதிலும் உயர்ந்த இந்த மனிதப் பெறிவி வாய்த்தது. இதன் அருமையை எண்ணிஇந்த உட்ம்பைப் போற்றிப் பாதுகாத்துநல்வழியில் வாழ்ந்துநற்கதியை அடைதல் வேண்டும். பிறவி அற்ற பெருநிலையை அடையவதற்கு உபாயமாகவே இந்த உடம்பு நமக்கு அருளப் பெற்று உள்ளது. இன்னொரு பிறவி எடுப்பதற்கு ஏதுவாக கருவழியில் புகுதல் கூடாது. பெருவழியில் புகுதல் வேண்டும்.

 

 

ஓதம் பெறுகடல் மோதும் திரை அதுபோலும் பிறவியில் உழலாதே--- 

 

ஓதம் பெறுகடல் --- நீர் நிறைந்த பெரிய கடல். அதிலே அலைகள் மோதும் என்பதால் "மோதும் திரை" என்றார்.

 

பிறவியை "ஓதம் பெறுகடல் மோதும் திரை" என்று அடிகளார் கூறியிருத்தலை உய்த்து உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

 

(1)       கடலில் ஓயாமல் அலைகள் வீசிக்கொண்டே இருக்கின்றனபிறவியில் இன்ப துன்பங்களாகிய அலைகள் வந்துகொண்டே யிருக்கின்றன.

 

(2)      கடலில் கப்பல்கள் மிதந்து கொண்டே இருக்கின்றன. பிறவிக் கடலிலும் ஆசைகளாகிய மரக்கலங்கள் மிதக்கின்றன.

 

(3)      கடலில் திமிங்கிலங்கள் முதலைகள் வாழ்கின்றன. வாழ்க்கையிலும் நம்மை எதிர்க்கின்ற பகைவர்கள் வாழ்கின்றனர்.

 

(4)      கடலில் பலவகைப்பட்ட மீன்கள் உலாவி வயிறு வளர்க்கின்றன. வாழ்க்கையிலும்மனைவி மக்கள் முதலியோர் உலாவி வயிறு வளர்க்கின்றனர்.

 

(5)      கடலுக்குள் மலைகள் இருக்கின்றன. வாழ்க்கையில் அகங்காரமாகிய மலை பெரிதாக வளர்ந்திருக்கின்றது.

 

(6)      கடல் ஆழமும் கரையும் காணமாட்டாமல் பயங்கரமாக இருக்கின்றது. வாழ்க்கையிலும் எவ்வளவு சம்பாதித்துப் போட்டாலும் போட்ட இடங்காணாது முடிவு இன்றி பயங்கரத்தை விளைவிக்கின்றது.

 

     நல்வினை தீவினைகளின் விளைவாக இன்ப துன்பங்கள் தொடர்ச்சியாய் உண்டாவதால் பிறவிக் கடலுக்கு உவமித்துக் கூறினர் முன்னோர்.

 

கருத்துரை

 

முருகா! உன் அடியார் போல நானும் ஒழுகி,திருவடியைப் பெற அருள்வாய்.

 

            

 

 

 

 

 

 

 

 

            

 

 

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...