நுனிக் கொம்பு ஏறினால்?

 


நுனிக் கொம்பு ஏறினால்?

-----

 

     பலர் உண்மையிலேயே மிக நல்ல முறையில்மேடை நிகழ்ச்சிகளை செய்யினும்எப்பொழுது நிறுத்த வேண்டும் என்பதை அறியாமையால்பிறரால் எள்ளி நகையாடப்படுகின்றனர். ஒரு நிகழ்ச்சியைச் செய்தல் எவ்வாறு ஒரு சிறந்த கலையோஅதைவிடப் பெரிய கலைநேரம் தெரிந்து அதனை நிறுத்திக் கொள்வது. எந்த அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்ளாமல் செல்வார்களாயின்  கூட்டத்தில் உள்ளவர் எழுந்து சென்று விடுவர்.

 

     எந்த அளவு வரையில் செல்லலாம்எங்கே நிறுத்திக் கொள்ள வேண்டும்?’ என்ற திட்டங்கள் மேடை நிகழ்ச்சிகளில் மட்டும் அன்றி,  வாழ்க்கையில் எல்லாப் பகுதிகளிலும்எல்லாத் துறைகளிலும் பெரிதும் வேண்டப்படும். அன்பு செய்வதிலுங்கூட ஒர்எல்லை உண்டுஅந்த எல்லையை மீறிச் செல்வதானால் தீமையே விளையும்.  

     அன்பு செய்தல்பக்தி செய்தல் முதலிய எதிலுமே அளவு மீறிச்செல்கின்றவர் உண்டு. அவர்கள் மிகப் பெரியவர்கள். சாதாரண மக்களுக்கு உரிய சட்டம் அவர்களைக் கட்டுப்படுத்துவது இல்லை. அதேபோல அவர்கள் வாழ்க்கையை ஒட்டிப் பிறர் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியாதுஎதிலுமே ஓர் எல்லை வேண்டும். எல்லையை மீறும் பொழுது தவறாமல் தொல்லை உண்டாகும்.

     எல்லை மீறிச் செல்கின்றவர் யாவராயினும் தொல்லையை அனுபவிக்கத்தான் வேண்டும். அவர்கள் பெரியவர்களாயினும்சிறியவர்களாயினும் இயற்கையின் இந்த நியதியிலிருந்து விடுதலை பெற முடியாது! "விராவரும் புவிக்கு எ(ல்)லாம் வேதமே அன  இராமனைப் பயந்த எற்கு இடர் உண்டோ?" என்று இராமன் மீது எல்லை மீறிய அன்புகொண்டு இருந்த கைகேயிஇராமன் காட்டுக்குப் போகுமாறு ஒரு துன்பச் செயலைச் செய்தாள். இராமனை மகனாகப் பெறும் பேறு பெற்றவன் தசரதன். பெற்ற பிள்ளைகள் மீது அன்பு செய்தவது முறையே. என்றாலும்பிள்ளைப் பேறு இல்லாது இருந்துஅரிதின் பெற்ற மகன் ஆகையால்அவன் மீது அதிகப்படியான அன்பு கொண்டு இருந்தான் தசரதன். அன்பு செய்வதிலும் ஒர் அளவில்லாமல் சென்றுவிட்டான் தசரதன்.

     பேரரசனாய் இருக்கின்ற ஒருவனுக்குஇரண்டு வகைக் கடமைகள் உண்டு. ஒன்றுஅவன் தன்னுடைய நலம் தீங்குகளைப் பாராட்டாமல் தன்னால் ஆளப்படுகின்ற மக்களின் நலம் ஒன்றையே கருதி வாழ்வதாகும். இரண்டாவதுதன்னுடைய குடும்பத்தாரிடம் தந்தை என்ற முறையில் அல்லது குடும்பத் தலைவர் என்ற முறையில் அன்பு பாராட்டுவதாகும். இவ்விரண்டு வகைக் கடமைகளுள் ஏதாவது ஒன்றை மிகுதியாகச் செய்யத் தொடங்கினால்மற்ற ஒன்று துன்பம் அடைய நேரிடும். ஆதலாலேதான் இவை இரண்டையும் மன்னனாய்  இருப்பவன் அளவறிந்து செய்ய வேண்டும் என்று நீதி நூல்கள் கூறுகின்றன.

     "நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி"  என்று விசுவாமித்திரர் கேட்ட பொழுதே தசரதன் ‘'கண்ணிலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடுந்துயரம்" என்கிறார் கம்பர். பின்னர்க் கைகேயி சூழ்வினையால் இராமன் கானகம் செல்ல நேர்ந்தது. தசரதன் அக்கொடுமையை எப்படியாவது  தடுக்க முயன்றும் முடியாதவன் ஆகிவிட்டான். இன்னும் சொல்லப் போனால்இராமன் முதலியவர்கள் கானகம் சென்றதை அவன் அறியக்கூட இல்லை. மயக்கம் தெளிந்த நிலையில் ஒரு சிலர், "தேர் வந்துவிட்டது" என்று கூறினார்கள். அணித்தே நின்ற வசிட்டனை, "இராமன் வந்தானோ?" என்று வினவினான் தசரதன். விடை கூற மனமில்லாத வசிட்டன் வெளியே சென்றுவிட்டான். உடனிருந்த சுமந்திரனை நோக்கிக் குறிப்பாகப் பார்த்தான் தசரதன். தனது தேர்ப்பாகன் ஆகிய சுமந்ததினைப் பார்த்து, "இராமன் இங்கு இருக்கின்றானாஅல்லது தொலைவில் இருக்கின்றானா?" என்று கேட்டான். இராமன் தனது தம்பியோடும்துணைவியோடும் கானகம் சென்றான் என்றதுமே தசரதன் ஆவி துறந்தான்.

"நாயகன் பின்னும்தன் தேர்ப்

     பாகனை நோக்கி, ‘நம்பி

சேயனோஅணியனோ?’ என்று

     உரைத்தலும்தேர் வலானும்,

வேய் உயர் கானம்தானும்,

     தம்பியும்மிதிலைப் பொன்னும்,

போயினன்’ என்றான்என்ற

     போழ்தத்தே ஆவி போனான்."

 

இதன் பொருள் ---

 

     தசரதன்திரும்பத் தன்னுடைய சாரதியாகிய சுமந்திரனைப் பார்த்து, "இராமன் தொலைவில் உள்ளானோ அண்மையில் உள்ளானோ"என்று கேட்கசுமந்திரனும், "இராமன்இலக்குவனும்மைதிலியுமாக  மூங்கில்கள் உயர்ந்து  வளர்ந்துள்ள காட்டுக்குச்சென்றான்என்று அவன் கூறிய அப்பொழுதேதசரதன் உயிர் நீத்தான்.

 

     சக்கரவர்த்தியாகிய தசரதன் அருமை மைந்தனாகிய இராமனிடத்தில் அன்பு  வைப்பது முறைதான். என்றாலும்எல்லை மீறிய அன்பு வைப்பதானதுநுனி மரத்தில் ஏறினவன் அதற்கு மேலும் ஏற முயல்வதையே ஒக்கும்.தசரதனைப் பற்றிக் கூற வந்த கம்பநாடர்"மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன்" என்று தசரதனைக் குறித்துக் கூறுகிறார். எனவேபெற்ற பிள்ளைகள் மாட்டுக் கொண்ட அன்பே ஆயினும்எல்லை மீறினால் தீமை பயக்கும் என்பதை நன்கு அறிகின்றோம்.

 

     எந்த ஒரு செயலிலும் எல்லை மீற வேண்டிய தொல்லை உண்டாகிறது என்னும் விந்தையைக் கொஞ்சம் ஆராய வேண்டும். மிக்க ஆர்வத்தோடு ஒரு விஷயத்தைத் தொடங்குகின்றவர் யாரும் பல நேரங்களில் அந்த ஆர்வம் காரணமாக எங்கே நிறுத்துவது என்று தெரியாமல் தவிக்கின்றார். முதலில் கூறிய கலைஞரும் எப்பொழுது எங்கே நிகழ்ச்சியை முடிக்கவேண்டும் என்பதை அறிந்து கொள்ளாமல்மக்களுக்கு வெறுப்புத் தட்டுகிற வரையில் சில நேரங்களில் சென்று விடுகின்றார். தசரதனும் எந்த அளவில் மகன் மாட்டுக்கொண்ட அன்பை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதைத் தெரியாமல் உயிரையே இழந்து விடுகின்றான்.

     நெஞ்சு உரத்துக்குப் புகழ் வாய்ந்த தமிழ்ப் புலவர்கூட்டத்தில் நக்கீரர் ஒருவர். இந்தப் பெயருடன் ஒருவர் அல்லாமல் பலர் இருந்திருக்கின்றனர். அவருள் ஒரு நக்கீரர் மிக்க நெஞ்சு உரம் வாய்ந்தவராய்தான் உண்மை என்று கருதும் ஒன்றுக்காகப் போராடும் இயல்பு உடையவராய் இருந்திருக்கிறார். அவர் காலத்தில் மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் ஒருவனுக்கு ஒர் ஐயம் தோன்றியது. அம்மன்னன் மறுநாள் சங்கப் புலவர்களை அழைத்து, ‘புலவர்களே!  என் மனத்திலுள்ள ஐயத்தைப் போக்குதற்குரிய  விடையைத் தருபவர் எவராயினும்அவருக்கு ஆயிரம் பொன் கொண்ட  இந்த முடிச்சு உரியது’ என்று ஒரு பொன் முடிச்சைத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் தொங்கவிட்டு விட்டான்.

     மதுரைச் சொக்கநாதரை வணங்கும் தருமி என்ற ஆதிசைவர் இருந்தார். அவர் உறவுகள் இல்லாத அனாதையாக இருந்தார். வேதாகமங்களை ஓதி உணர்ந்த அவருக்கு இறைவனை ஆகமங்களின் வழி பூசை புரியவேண்டும் என்னும் ஆவல் மிக்கு இருந்தது. திருமணம் முடிந்து இல்லற நெறியில் நிற்பவர்தான் இறைவன் திருமேனியைத் தொட்டுப் பூசனை புரியவேண்டும். (இக்காலத்தில் அந்த முறை கடைப்பிடிக்கப்படுவது இல்லை) அவருக்கு திருமணம் செய்து இறைவனை வழிபட்டுஇறைவன் திருவடியைச் சேர வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஏழையாக இருந்தமையாலும்அனாதையாக  இருந்தமையாலும் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் சிரமம் கொண்டார். தன்னுடைய திருமண வாழ்க்கைக்காக ஏங்கி இருந்தவருக்கு மன்னன் அறிவித்த பரிசு பற்றிய செய்தி தெரிந்தது. தனக்குப் புலமை உள்ளதா என்பது பற்றிய கலவை அவருக்கு இல்லை. பரிசுப் பொருளைப் பெற்றால்திருமணம் செய்துகொள்ளலாம் என்ற அவா மட்டும் இருந்த்து. இறைவனிடம் வேண்டினார்.


"நெடிய வேதநூல்நிறைய கமம்

முடிய திய முறையில் நிற்கு எ(ன்)னும்

வடுஇல் இல்லற வாழ்க்கை ன்றிநின்

அடிய ச்சனைக்கு அருகன் ஆவனோ."

 

     "உயர்ந்த மறை நூல்கள் முற்றவும்ஆகமங்கள் முற்றவும்ஓதி அறிந்த முறையில் நிற்பேன் எனினும்குற்றமில்லாத இல்லற வாழ்க்கை இல்லாமல்தேவரீரின் திருவடியை அருச்சிப்பதற்கு உரியன் ஆவனோ (ஆகேன்)" என்று சொக்கநாதப் பெருமானிடம் முறையிடுகின்றார். இல்லற வாழ்க்கையில் நிற்பவரே சிவபெருமானை அருச்சித்தற்கு உரியவர் என்பது வேதாகமங்களின் துணிபு என்பது இதனால் அறியப்படும். 


     அப்போது அங்குப் புலவர் வடிவில் வந்த சொக்கநாதர்ஓர் ஓலையை தருமிக்குத் தந்தார். இதை மன்னிடம் கொடுத்தால் பரிசு கிடைக்கும் எனக் கூறினார். தருமி மகிழ்ச்சியோடு அதனை எடுத்துச் சென்று மன்னனிடம் காட்டினான். அரசனது  ஐயத்தைப் போக்கும் பொருள் அப்பாடலில் இருந்தமையின்மன்னன், ‘நீ சென்று அப்பொன் முடிச்சைக் கொள்வாயாக,’ என்று கட்டளை இட்டான். பொற்கிழியை அறுக்க மகிழ்ச்சியோடு தருமி சென்ற அந்த நேரத்தில், "நில்" என்று விலக்கினார் நக்கீரர்.அந்த இடிக்குரல் கேட்டு அஞ்சிவிட்டான் ஏழை அந்தணன். வாடிய மனத்துடன் இறைவன் திருமுன்னர் சென்று,


"செய்யுள் கொண்டுபோய்த் திருமுன் வைத்து உ(ள்)ளப்

பையுள் கொண்ட அப் பனவன்ன்னை நீ

மையுண் கண்ட! இவ் வழுவு பாடலைக்

கையுள் நில்கினாய் கதி இ(ல்)லேற்கு எனா."

 

இதன் பொருள் ---

 

     உள்ளத்தில் கவலை கொண்ட அம்மறையோன்(தருமி) திருப்பாசுரத்தைக் கொண்டுபோய்த் திருமுன் வைத்து, "கருமை பொருந்திய கண்டத்தை உடையவனே!  நீ குற்றமுள்ள இப்பாடலை

ஒரு பற்றும் அற்ற எனக்குக் கையில் அளித்தருளினையே அது ஏன்" என்று கூறி (பையுள் - துன்பம்.)

 

"வறுமைநோய் பிணிப்பப் பன்னாள்

            வழிபடும் அடியேன் நின்பால்

பெறுபொருள் இழந்தேன் என்று

            பேசிலேன்,யார்க்கும் மேலாம்

கறைகெழு மிடற்றோய்! நின்தன்

            கவிக்குற்றம் சில் வாழ்நாள் சிற்-

றறிவு உடைப் புலவர் சொன்னால்,

            ஆர் உனை மதிக்க வல்லார்."

 

இதன் பொருள் ---

 

     வறுமையாகிய பிணி என்னைக் கட்டி வருத்தபலநாட்களாக வழிபாடு செய்து வரும் அடியேன்உன்னிடத்துப் பெறுகின்ற பொருளை இழந்தேன் என்று கூறியது இல்லை. அனைவருக்கும் மேலாகிய நஞ்சக்கறை பொருந்திய திருமிடற்றினை உடைய இறைவனேநீ பாடியருளிய பாசுரத்திற்குசில் வாழ்நாளும் சிற்றறிவும் உடைய புலவர் ஒருவர்  குற்றம் கூறினால்உன்னை யார் மதிக்கவல்லவர்! (ஒருவரும் உன்னை மதிக்கமாட்டார்)


     நக்கீரர், ‘பிழை நிறைந்த இப்பாடலை உனக்குப் பாடித் தந்த புலவனை அழைத்துவா!’ என்று ஏவினான். இறைவன் புலவன் வேடத்தில் வந்து நக்கீரனுடன் வாதாடிய வரலாற்றைத் தமிழ் உலகம் நன்கு அறியும்.

     ஆனால்இவ்வரலாற்றிலே நக்கீரருடைய அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு அவரைப் போற்றுகின்றவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றார்கள். அளவு கடந்து படித்து விட்டால் தலைக்கனம் உண்டாகிவிடும். தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது’ என்று பாடல் சொல்லிற்று. நக்கீரர் அதனை மறுத்துப் பெண்களின் கூந்தல் செயற்கையால் மணம் பெறுகின்றதே தவிரஇயற்கை மணம் உடையது அல்ல என்று கூறினார். புலவராக வந்த சொக்கநாதர், "பத்தினிப் பெண்டிரின் கூந்தல் எத்தகையது?"  என்று கேட்டார். பத்தினிப் பெண்டிரின் கூந்தல் எத்தகையது என்று நக்கீரர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆராயாத நக்கீரர், "அவர்கள் கூந்தலும் அத்தகையதுதான்!என்று கூறிவிட்டார். மூன்றாவதாக "தெய்வமகளிர் கூந்தலுக்குமா மணம் இல்லை?" என்று கேட்டார் சொக்கநாதர். தெய்வ மகளிரைப் பார்த்தும் அறியாத நக்கீரர்உண்மை இன்னது என்று அறியாத நிலையிலும், "தெய்வமகளிர் கூந்தலுக்கும் இயற்கையில் மணம் இல்லை" என்றார். இறுதியாக "நீ வழிபடும் ஞானப் பூங்கோதையின் கூந்தல்எத்தகையது?" என்று வினவினார் வந்த புலவர்.

"பரவி நீ வழிபட்டு ஏத்தும்

            பரஞ்சுடர் திருக்காளத்தி

அரவு நீர்ச் சடையார் பாகத்து

            அமர்ந்த ஞானப்பூங் கோதை

இரவின் ஈர்ங் குழலும் அற்றோ?

            எனஅஃதும் உற்றே என்னா

வெருவிலான் சலமே முற்றச்

            சாதித்தான் விளைவு நோக்கான்."

 

இதன் பொருள் ---

 

     நீ துதித்து வழிபட்டுவணங்கும்பரஞ்சோதியும்திருக்காளத்தியில் திருக்கோயில் கொண்டு அருளியபாம்பையும் கங்கையையும் அணிந்த சடையையுடைய இறைவரும் ஆகிய சிவபரம்பொருளின்  இடப்பாகத்தில் எழுந்தருளிய ஞானப்பூங்கோதையின்  இருளை ஒத்தகுளிர்ச்சி பொருந்திய கூந்தலும் அத்தன்மைத்தோ என்று வினவஅக்கூந்தலும் அத்தன்மையை உடையதே என்று சிறிதும் அஞ்சாதுமேல் வருவதை அறியாமல் முடியவும் பொய்ம்மையைச் சாதித்தான்.

     அம்பிகையின் கூந்தல் எப்படி இருக்கும் என்றால்அது ஞானமணம் கமழக் கூடியது. எனவேதான்அவளுக்கு "ஞானப்பூங்கோதை" என்னும் திருநாமம் வழங்கப்பட்டது. மெத்தப் படித்தவர்தலைமைப் புலவர் என்னும் இறுமாப்பால்அறியாமையே மிகுந்து இருந்தது நக்கீரருக்கு. அதனை வெளிப்படுத்தினார். நுனிக் கொம்பு வரை ஏறிவிட்டநக்கீரர்நிறுத்திக் கொள்ள வேண்டிய எல்லையை மறந்து விட்டார். அகங்கார மிகுதியால் கேள்வியைக் கூடப் புரிந்து கொள்ளவில்லை. ஞானப் பூங்கோதைஎன்ற சொல்லின் பொருளைஅதாவது ஞானமாகிய கூந்தல் என்பதைக் கூட மறக்கும் அளவுக்கு ஆணவம் அவரது அறிவை மறைத்தது.

     நக்கீரர் தமது கண்ணால் கண்ட உலகப் பெண்களின் கூந்தலைப் பற்றிச் செயற்கை  மணம் உடையது என்று கூறுவது ஒருவேளை பொருத்தம் உடையதாக இருக்கலாம். ஆனால் நக்கீரர் தாம் கண்டு அறியாத தேவமகளிரைப் பற்றிப் பேசியது பொருத்தமற்றது. அதைவிடக் கேவலமானதுஞானப்பூங்கோதை என்ற சொல்லின் பொருளைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் அதுவும் செயற்கை மணமுடையது என்று கூறியது. எனவேஅகந்தை காரணமாக நுனி மரம் வரையில் ஏறிவிட்ட நக்கீரர்எங்கே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறியாமல்தமது உயிருக்கு இறுதியைத். தேடிக் கொண்டார். நம்மில் பலரும் செய்கின்ற  இத்  தவற்றையே திருவள்ளுவ நாயனார்,

"நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்

உயிர்க்கு இறுதி ஆகி விடும்"

 

என்னும் திருக்குறளில் வைத்துக் காட்டினார்.

 

     மக்கள் தமது ஊக்க மிகுதியால் தாம் செய்ய வேண்டிய காரியத்திற்கு வேண்டிய வலியை அறியாது செய்வாராயின்அது அவரது உயிர்க்கே இறுதியாய் முடியும் என்றார். எவ்வாறு என்றால்ஒருவன் ஒரு மரத்தின் கிளை நுனியில் ஏறி நின்ற பிறகும்பின்னும் ஏறிச் செல்வேன் என்று துணிவானாயின்அவ்விதம் முடியாமல்அவன் கீழே விழுந்து இறந்து போக நேருவது போல்இதுவும் ஆகும் என்று உவமை காட்டப்பட்டது.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய"முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

கண்ணுதல்பால் சென்றது காமனுக்கு வென்றியோ?

எண்ணம் இலான் போலும் எதிர்ந்தான்,--- நண்ணி

நுனிக் கொம்பர் ஏறினார்அஃது இறந்து ஊக்கின்,

உயிர்க்கு இறுதி ஆகிவிடும்.

 

            நுனிக்கொம்பு ஏறினார்,அந்த அளவைக் கடந்தால்தனது உயிரை இழப்பர். சிவபெருமானின் தவத்தைத் தேவர்கள் விரும்பியபடி கலைக்கும் பொருட்டுஅவரது வல்லமையையும் அறியாதுதனது நிலையையும் அறியாது,மலர் அம்பு எய்த மன்மதன் எரிக்கப்பட்டான் என்பது வரலாறு.

 

     மன்மதன் தனது ஆற்றலை எங்கே காட்டக் கூடாதோ அங்கே காட்டியதால் அவனது உயிருக்கு இறுதி நேர்ந்தது. நுனிக் கொம்பு வரையிலும் ஏறலாம்அதற்கு மேலும் சென்றால் உயிருக்கு இறுதி நேரும் என்பதன் மூலம் தனது வலி இன்னது என்று அறியாதார்க்கு நேரும் கதி காட்டப்பட்டது.  

                                                                                    

 

No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...