செல்லும் பொருள்,செல்லாப் பொருள்
-----
உலகில் மிக உயர்ந்த பக்குவிகளும் மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கும் அபக்குவிகளும் வாழ்கிறார்கள். அவரவர்களுக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு உபதேசங்களை அருணகிரிநாதர் அருளி இருக்கிறார்.
மிக நன்றாகப் படித்த ஒருவர் மிக உயர்ந்த நிலையில் சொன்னால் எளியவர்கள் பலருக்கு விளங்காது. எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காகக் கொஞ்சம் எளிய நடையில் சொன்னால், படித்தவர்களுக்குப் பிடிக்காது. எல்லா வகையிலும் பேசினால் யார் யாருக்கு எது பிடிக்குமோ அதை எடுத்துக்கொள்வார்கள். எல்லோருக்கும் பயன்படும் வகையில் தெளிவாகப் பேசக் கூடியவர்கள் அருளாளர்கள். தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற்று மகிழவேண்டும் என்னும் அருள் உள்ளம் படைத்தவர்கள் அவர்கள். உலகியல் வாழ்க்கையில் தொடர்புடைய மக்கள் அவரவர் மனப் பக்குவத்திற்கு ஏற்பப் பயன் அடையக் கூடிய வழிகளில் அனுபவமாக அருணகிரிநாதர் உபதேசம் செய்கிறார்.
மனம் அடங்காதவர்களுக்கு மனம் அடங்க நல்வழி காட்டுகிறார். மனம்அடங்கிய பிறகு எந்த வழியில் போக வேண்டும் என்றும் காட்டுகிறார். நல்ல மனம் உடையவர்கள், பக்குவம் இருந்தும் வழி தெரியாது நிற்கும்போது, மேற்கொள் வேண்டிய நெறியைத் தம் நெஞ்சுக்குச் சொல்வது போலச் சொல்லி வழி காட்டுகிறார். மிகக் கீழ் நிலையில் உள்ளவர்களும் பயன் பெற வேண்டும் என்று ஓர் உபதேசத்தை இப்போது சொல்கிறார். அந்த உபதேசம் அறத்தில் தொடங்குகிறது.
ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் போகிறவர்கள் பெட்டிகளில் பொருள்களைக் கட்டிக் கொண்டு போவார்கள். நீண்ட தூரம் போகிறவர்கள் தேவையான பணத்தை கொண்டு போவது வெளிநாட்டுக்குப் போகிறவர்கள் இந்த நாட்டுப் பணத்தை நிறைய எடுத்துக் கொண்டு போனாலும் பயன் இல்லை. இந்த தேசத்து நாணயம், போகும் தேசத்தில் செலாவணி ஆகாது. அங்கே செலாவணி ஆகக் கூடிய வகையில் நாணய மாற்றம் செய்து,கொண்டு போக வேண்டும்.
இந்த உலகத்தில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் நெடுந்துரப் பயணம் ஒன்று உண்டு. உலகத்தில் பிறந்த யாராலும் இந்தப் பயணத்தைத் தவிர்க்க முடியாது.உலகியல் பயணங்களுக்கு வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வது போலவே, இந்த நெடுவழிப் பிரயாணத்திற்கு முன்கூட்டியே பாதுகாப்புச் செய்ய வேண்டும். இங்கே சுகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் போகிற இடத்திலாவது சுகமாக இருக்கவேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருப்பது இயல்பு.
வீட்டின் உள்ளே இருக்கும் போது அழுக்குச் சட்டை, வெளியே போகும் போது வெள்ளைச் சட்டை என்று நாம் ஒரு ஒழுங்கு வைத்துக் கொள்கிறோம். அதே போலப் போகிற இடத்தில் சுகமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்ற நாம், சுகமாக இருப்பதற்கு வழி என்ன என்பதைச் சிந்திக்கவேண்டும். ஆனால், நாம் தவிர்க்க முடியாததான அந்த நெடுந்தூரப் பயணத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அதனால், ஏற்பாடுகளைச் செய்து கொள்வது பற்றிய எண்ணமும் உண்டாவதில்லை. இந்த உலகத்தில் நம்மிடம் உள்ள செல்வத்தை, அந்த உலகத்தில் பயன்படுவதற்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ள மறந்துவிடுகிறோம்.
இங்கே வாழும் காலத்தில் உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தூய்மையானதாக வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் மக்கள் மதிக்கமாட்டார்கள். வேறு உலகத்திற்குப் போனால் மனத்தை வளர்த்துப் பக்குவப்படுத்த வேண்டும். ஆயிரம் நூல்கள் படித்திருந்தாலும் மிக்க அறிவுடையவனாக இருந்தாலும் ஒர்இடத்திற்குப் போகும் போது நல்ல ஆடம்பரமான உடை இல்லாமல் போனால் மதிப்பு கிடைக்காது.
எந்த வகையில் பார்த்தாலும் தோற்றம் நன்றாக இருக்கவேண்டும். இங்கே உடம்பின் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும். அங்கே உள்ளத் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும். இங்கே ஆடை அழுக்கு இல்லாமல் இருக்கவேண்டும். அங்கே மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். இந்தஉலகத்தில் நம்மிடம் இருக்கும் பொருளை அந்த உலகத்தில் செலாவணி ஆகின்ற அருளாக மாற்றிக் கொள்ள வேண்டும். வேறு உலகத்தில் செலாவணி ஆகின்ற நாணயம்தான் புண்ணியம். அது அறத்தினால் வருவது. வேறு உலகத்தில் செலாவணி ஆகும் நாணயங்களைப் பெறுவதற்கு இந்த உலகத்தில் நம்மிடமுள்ள நாணயங்களைத்அற வழியில் செலவிட வேண்டும். இங்கே செய்கிற தருமம் அங்கே பயன்படும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் அப்படிச் செலவிட மனம் வரும்.அறச் செயல்களைச் செய்த உடனே கண்கூடாகப் பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்க இயலாது.
நல்ல காரியம் செய்யும்போது ஐயங்கள் உண்டாகின்றன. "இறைவனுக்குக் குடம் குடமாகப் பால் அபிடேகம் செய்கிறார்களே; இதனால் என்ன பயன்? எத்தனையோ குழந்தைகள் குடிக்கப் பால் இன்றித் தவிக்கும் போது எதற்காக இப்படிப் பாலைக் கொட்ட வேண்டும்?" என்பது போன்ற சந்தேகம் எழும். அதற்குக் கண் முன்னாலே ஒருபயனும் தோன்றவில்லை அல்லவா? "இறைவனுக்குப் பால் அபிடேகம் செய்தல் நல்லது" என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எவ்வளவு பால் அபிடேகம் செய்யவேண்டுமென்று சொல்லவில்லை. வீட்டில் குழந்தை பாலுக்காகக் கதறும் போது, இறைவனுக்குப் பால் அபிடேகம் செய் என்று சொல்லவில்லை. எவ்வளவு இயலுமோ, அந்தஅளவுக்குச் செய்தால் போதும்.நம்முடைய நாட்டில் எங்கே பார்த்தாலும் முன் காலத்தில் பசுக்கள் மிகுதியாகஇருந்தன. வறுமையான வீட்டில் கூட ஒரு மாடு இருந்தது.
அப்படி இருந்த நாட்டில் இப்பொழுது நமக்குப் பால் போதியதாக இல்லை. பால், தயிர், நெய் ஆகியவற்றில் எதுவும் சுத்தமானதாகக் கிடைக்கவில்லை. வறுமை மிகுதியான வீட்டில் ஒரு மாடாவது அந்தக் காலத்தில் இருக்கும் என்றால் எத்தனை பசுக்கள் நாட்டில் இருந்திருக்கும்! "சீர்த்த முலை பற்றி வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்" என்று ஆண்டாள் பாடியிருக்கிறாள். மனிதர்களுடைய தொகையைக் காட்டிலும் அதிகமாகப் பசுமாடுகளின் தொகை இருந்தமையால், தேவைக்கு அதிகமான பால் மிகுதியாகக் கிடைத்தகாலம் அது. தேவைக்குமேல் பால் கிடைக்குமானால், மிஞ்சின பாலை அப்படியே வைத்துப் பல நாளுக்குக் காப்பாற்ற முடியாது; புளித்துப் போய்விடும். பால் பயனின்றி வீணாகிறது என்ற எண்ணம் மக்களுக்கு உண்டாகிவிட்டால் பால் கறக்கும்ஆர்வம் குறைந்து போகும்; பசுக்களைப் பேணும் ஊக்கமும் போய்விடும்.
சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் தேவைக்கு மேல் அதிகமாகக் கோதுமை விளைந்தமையால் அவற்றைக் கப்பலில் எடுத்துப் போய்க் கடலில் கொட்டினார்கள். அடுத்த ஆண்டு கோதுமை விளைச்சல் குறைந்துவிட்டது. காரணம் என்ன? சென்ற ஆண்டு கோதுமை விளைவித்தோம். அதைக் கடலில் கொண்டு போய்க் கொட்டினார்கள். எதற்காக இவ்வாண்டு அவ்வளவு உழைக்க வேண்டும்? என்று பலர் ஊக்கம் குன்றி இருக்கக் கூடும். அப்படி இல்லாமல் எத்தனை விளைந்தாலும் அதற்குச் சிறந்த பயன் உண்டென்று தெரிந்தால், மேலும் மேலும் விளைச்சல் அதிகமாகிக் கொண்டே வரும்.
கோதுமை அளவுக்கு மிஞ்சி அமெரிக்காவில் விளைந்தது போல இந்நாட்டில் பால் அதிகம் இருந்தது. இறைவனுக்கு அபிடேகம் செய்வது உயர்வு என்று சொன்னார்கள். படிப் பால் மிஞ்சியவன் படிப் பால் கொண்டு முழுக்காட்டினான்.. குடப் பால் மிஞ்சியவனும் குடப் பால் கொண்டு முழுக்காட்டினான். மிஞ்சினால் பின்னும் அதிகப் பயனுள்ள காரியத்துக்குப் பயன்படுகிறது என்ற எண்ணம் இருந்ததே இந்த ஊக்கத்துக்குக் காரணம். பால் குறைவாக இருக்கும் காலத்தில் அபிடேகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லையே? என்ற வினா எழலாம். எந்து ஒரு வழக்கமும் இடைவிடாமல் இருந்தால்தான் சமயத்தில் நல்ல பயனைத் தரும். பால் இல்லாத காலத்தில் அபிடேகத்தை நிறுத்திவிட்டால், மீண்டும் அந்தப் பழக்கம் வருவது எளிது அல்ல. வழக்கத்தை விடாதே என்று மட்டும்சொன்னார்கள். ஒர் உத்தரணி பால்விட்டாலும் போதும். உலகியலுக்கும் அருளியலுக்கும் ஒத்த பழக்கம் இது.
நம்மிடம் இருக்கும் மிகுதியான பொருளை இறைவனுக்கு நாம் அர்ப்பணம் செய்தால், நம்மிடம் இல்லாத பொருளை அவன் நமக்கு அளிக்கிறான் என்ற நம்பிக்கை அடியார்களுக்கு இருந்தது. "இறைவனுக்கு நாம் பால் அபிடேகம் செய்வதனால் என்ன பயன் விளைந்தது?" என்று கேட்பவர்களும் உண்டு. தென்னை மரத்துக்கு வேரிலே விடுகின்ற தண்ணிர் இளநீராக வருகிறது. அப்படி இறைவனுடைய திருவடிக்கு நாம் அன்பால் செய்பவை அருளாக மாறிப் பயன் தருகின்றன. அறத்தில் நம் பொருளையும், ஆற்றலையும் செலவிட்டால் அது புண்ணியமாக மாறிமறுமைக்குப் பயன்படுகின்றது.
வங்கியில் நாம் பணம் போடுகிறோம். வங்கியில் இருப்பவர்கள் நம்முடைய பணத்தைத் தனியாக அப்படியே மூட்டை கட்டி வைப்பதில்லை. ஆனால் ,நம் பணம் அங்கே இருக்கிறது என்பதற்குக் கணக்கு உண்டு. கோயில் கட்டுபவன், தண்ணிர்ப் பந்தல் வைக்கிறவன், ஏழைகளுக்குஉபகாரம் செய்கிறவன் ஆகிய பலர் செய்யும் நற்செயல்களும் இறைவனுடைய அருளாட்சி என்னும் வங்கியில் கணக்கிடப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. நற்செயல்கள் மட்டுமல்ல. அல்லாத செயல்களுக்கும் கணக்கு உண்டு.
"தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று,
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே."
என்கிறார் அப்பர் பெருமான்.
நற்செயல்களுக்கோ, அல்லாத செயல்களுக்கோ நாம் செலவிட்ட பணத்துக்கு உரிய கணக்கு நமக்குத் தெரியாமல் இருக்கலாம். இறைவன் கணக்கு மிகச் சரியாகவே இருக்கும். அந்த உலகத்தில் நமக்குப் பயன்படுவதற்குத் தகுந்த அறக்கருணை நாணயமாகவோ, மறக்கருணை நாணயமாகவோ அவை மாறுகின்றன. எந்த செயலைச் செய்கிறோம் என்பது நம்முடைய பொறுப்பு. நன்மையைச் செய்தால் நன்மை கிடைக்கும். எனவே, நன்மை தரும் செய்ல்களையே செய்து வரவேண்டும் என்று பெரியவர்கள் வற்புறுத்தினார்கள்.
இவ்வுலகில் பிறந்த மக்கள் எல்லோரும் கடைசியாகச் செய்ய வேண்டிய பயணம் ஒன்று இருக்கிறது. அது நெடுவழி. அந்த வழியில் செல்லும்போது நமக்குத் பயன்படும் செல்வத்தை நாம் தேடிக் கொள்ள வேண்டும். ஒருவரிடம் பத்து வீடுகள் இருக்கின்றன. பல இலட்சம் ரூபாய் இருக்கிறது. நிலபுலங்கள் உள்ளன. இவை பயன்படமாட்டாவா? என்றால், "இவை யாவும் போகக்கூடிய உலகத்தில் சுகமாக இருப்பதற்குப் பயன்பட மாட்டா என்றுதான் சொல்லவேண்டும். இம்மையிலும், மறுமையிலும் சுகவாழ்வுக்குப் பயன்படும் செயல்கள் எவை என்று கேட்டால், திருவள்ளுவ நாயனார் ஓர் அருமையான வழியைக் காட்டுகிறார். வங்கியில் போட்டு வைக்கும் பணம் மறுமைக்கு ஆகாது. மறுமைக்கு ஆகும் விதத்தில் ஒரு வங்கி உள்ளது, அதில் உங்கள் பணத்தை வைப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள்வைப்பு உழி."
என்பது திருக்குறள் காட்டுகின்ற வங்கி.
"வறியவரது மிகுந்த பசியைத் தீர்த்தல் வேண்டும். அது பொருளை வைத்திருப்பவன், அப்பொருள் தனக்கு உதவும்படியாக இட்டு வைக்கும் இடம்" என்கிறார் திருவள்ளுவ நாயனார். உயிர் செல்லப் போகின்ற அந்த நெடிய பயணத்திற்கு நம் கையில் வைத்திருக்கும் பணம் உதவாது. அந்த உலகத்தில் செலாவணி ஆகக் கூடிய பணமாக அதை மாற்றிக் கொள்ள வேண்டும். பணம் இல்லாத வறியவர் வயிறு என்னும் வங்கியில் போட்டு வைக்கவேண்டும் என்கிறார் நாயனார்.
உலகியலும் அருளியலும் சில சமயங்களில் நேர்மாறாகத் தோன்றும். மிக்க ஆடம்பரமாக உடையணிந்து கொண்டிருக்கும் பெரிய பணக்காரனை உலகியலில் மதிக்கிறார்கள். அவன் ஞானியாக மாட்டான். வீதியில் ஒடு ஏந்திக் கோவணத்தோடு போகும் சிலரை ஞானிகள் என்கிறோம். அருளியலில் அவர்களுக்குத்தான் மதிப்பு உண்டு. இறைவனே கபாலியாகத் தோற்றம் அளிக்கிறான். நம்மிடம் இருக்கும் பணத்தை நாம் பணம் நிறைய இருக்கும் வங்கியில் போடுகிறோம். உலகத்துச் செல்வ நிலை இது. ஆனால் வறிஞர்களாகிய வங்கியில் போடச் சொல்கிறார்கள் திருவள்ளுவ நாயனாரும், அருணகிரிநாதப் பெருமானும்.
அப்படிச் செய்கிறபோது, நான் செய்கிறேன் என்னும் முனைப்புத் தோன்றாதபடிக்கு, கூர்மையான கதிரை வீசும் வடிவேல் பெருமானை வாழ்த்தி, அவனைத் தொழுது, தருமத்தைச் செய்ய வேண்டும் என்கிறார் அருணகிரிதாநப் பெருமான். அறம் செய்வோருக்குச் செருக்கு உண்டாவது உண்டு. நல்ல காரியங்கள் செய்பவர்கள் கர்வம் அடைவார்கள். தவம் செய்வோருக்கும் அகங்காரம் வந்துவிடுகிறது. மனிதவாழ்வில் எல்லாம் இடையிடையே போனாலும், நான் என்ற உணர்ச்சி கடைசி வரையில் செத்துப் போகாது. எதைச் செய்தாலும், "நான் செய்தேன்' என்ற நினைவு வரும்.நாலு பேர் புகழ வேண்டும் என்பதற்காகச் சிலர் அறம் செய்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்த புகழ் கிடைத்துவிட்டால அவர் செய்த அந்தத் தருமத்துக்கு உரிய பயன் அப்பொழுதே கிடைத்ததாகி விடுகிறது. இவ்வுலகில் தருமம் செய்துவிட்டு, பலபேர் புகழ வேண்டும் என்று நினைத்தால், அந்தத் தர்மத்திற்குரிய விலையாகப் புகழ் கிடைக்கிறது. மறுமைக்கான புண்ணியம் உண்டாவதில்லை. ஆகவே, தருமம் செய்யும் போது நான் செய்கிறேன்என்று நினைத்துச் செய்யக் கூடாது; புகழை எதிர்பார்த்தும் செய்யக் கூடாது.
உலகில் பொருள் பெறுவது எளிது. உயர் குணங்கள் நிரம்பியவனிடத்திலும் பொருள் இருக்கிறது. தவறான செயல்களைச் செய்கின்றவனிடத்திலும் பொருள் இருக்கிறது. பொருளைப் பெறுவது பெரிது அல்ல. அதைக் கொடுப்பது பெரிது.கொடுப்பதிலும் தன்னை மறந்து கொடுப்பது மிகமிக அருமை. ஈதலின் நோக்கமே ஆசைகளை அழிப்பதுதான். பற்றை ஒழிப்பதுதான். ஆதலால், புகழ் வேண்டும் என்னும் ஆசையை அந்த ஈகை உண்டாக்கக் கூடாது. சிலருக்கு எத்தனை முயன்றும் பொருள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இறையருள் இல்லை. ஆனால்,சிலருக்கு மிகுதியான பொருளை இறைவன் கொடுத்து இருக்கிறான். எதற்காகக் கொடுத்தான்? என்றால், "இரப்பவர்க்கு ஈய வைத்தார்" என்கிறார் அப்பர் பெருமான். அப்படி ஈபவர்க்கு என்ன வைக்கப்பட்டுள்ளது? என்றால்,"ஈபவர்க்கு அருளும் வைத்தார்" என அவரே விடைசொல்கிறார்.
பொருளை ஈட்டுவதற்குப் புண்ணியம் இல்லாத மக்களை அப்படியே விட்டுவிட மாட்டான் இறைவன். அவர்களுக்கு அருள் புரிவதற்காக, யார் செல்வர் ஆவதற்குப் புண்ணியம் பண்ணி இருக்கின்றார்களோ, அவர்களுக்குச் செல்வத்தைக் கொடுத்து இருக்கிறான். இல்லாதவர்க்கு உதவி, இன்பத்தைப் பெறுவதற்காக இறைவன் அவர்களிடம் மிகுதியான பணத்தைக் கொடுக்கிறான். அந்தப் பணத்தின் மேல் அவர்கள் ஆசை வைக்காமல், அதைக் கொடுத்தவன் இறைவன் என எண்ணி, இரப்பவர்களுக்கு எல்லாம் தம்மிடம் இருப்பதை இல்லை என்று ஒளிக்காது ஈந்து மகிழ்ந்தால், அவர்களுக்கு இறைவன் அருளைக் கொடுக்கிறான். அப்படிக் கொடுக்காதவர்க்கு என்ன வைத்துள்ளான்? என்றால், "கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்" என்கிறார் அப்பர் பெருமான். தம்மிடம் பொருள் இருந்தும், இரப்போர்க்குக் கொடுக்காமல், 'இல்லை' எனச் சொல்லி மறைத்து வைத்துக் கொள்கிறவர்களுக்குக் கடுமையான நரகத்தை வைத்திருக்கிறானாம்.
எனவே, நம்மிடம் பொருள் மிகுதியாக இருந்தால், இறைவன் அருள் பெற மிகுதியான வாய்ப்பு இருக்கிறது என்று கொள்ள வேண்டும். அந்தப் பொருளைத் தன்னுடையது என்று வைத்துக் கொண்டால் அருள் வராது. அருளைப் பெறுவதற்குத் துணையாகத்தான் இறைவன் பொருளை நம்மிடம் கொடுத்து இருக்கிறான் என்று உணர்ந்தால், இறைவனை வாழ்த்த வேண்டும் என்று தோன்றும். ஆகையால், வையில் கதிர் வடிவேலானை வாழ்த்தி வறிஞர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அருணகிரிநாதப் பெருமான் சொல்கிறார்.
நாலு பேர் காணக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆடம்பரத்துக்கும், கர்வத்துக்கும் அறிகுறி. ஆயிரம் ஆயிரம் கோயில்களை இந்நாட்டில் எழுப்பியிருக்கிறார்களே, அவற்றை எல்லாம் எழுப்பியவர் யார் என்று நமக்குத் தெரியுமா? ஆண்டவன் பெயரை வெளிப்படுத்தி, தமது பெயரை அவர்கள் மறைத்துக் கொண்டு விட்டார்கள் அவர்கள். 'நான் செய்தேன்' என்ற நினைப்பு அற்று, எல்லாம் இறைவன் திருவருளால் நிகழ்க்கின்றன என்ற எண்ணத்தில்,தம்மை மறந்து செயற்கு அரிய செயல்களைச் செய்த பெரியவர்கள் அவர்கள்.
கையை உடையவன் கொடுக்கிறான்; கை கருவியாக நின்று கொடுக்கிறது. நாம் கொடுக்கிறோம் என்று கை நினைப்பது இல்லை. அது போல நம்மைக் கருவியாகக் கொண்டு இறைவன் கொடுக்கிறான் என்று உணரவேண்டும். கொடுக்கும்போது இறைவனிடத்தில் அன்பு வேண்டும்; இரப்பவனிடத்திலும் அன்பு வேண்டும். 'வறிஞர்க்கு என்றும் கொடுங்கள் 'என்கிறார் அருணை வள்ளல். யார் வறுமை உடையவர்களோ அவர்களுக்குக் கொடுப்பது கொடை. “வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை, மற்ற எல்லாம் குறி எதிர்ப்பை நீர்து உடைத்து" என்கிறார் திருவள்ளுவர்.
'நமக்கு இருந்தால்தானே பிறருக்குக் கொடுக்க முடியும்?' என்று கேட்பவர் பலர். அரிசியில் உடைந்தது நொய். அதில் குறைந்தது குறுநொய். அதைக் "குறுணை" என்று சொல்கிறோம். பெரிய விருந்தாக வைத்தால்தான் தருமம் என்று ஆகாது. நீ விருந்து போடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சோறு சாப்பிட்டால் அதில் ஒரு பகுதியைத் தருமமாகக் கொடுக்கலாம். அரிசியாகவே கொடுக்க வேண்டுமென்பதில்லை. நொய்கூடக் கொடுக்க முடியாது என்றால் அதிலும் உடைந்த குறுநொய் இருக்கிறது. அதைக் கொடுக்கலாம் என்கிறார்.
எப்பொழுது கொடுக்க வேண்டும்? எல்லாக் காலத்தும்; என்றும் ஏன் கொடுக்க வேண்டும்?நீங்கள் இவ்வுலகை விட்டு, வேறு உலகத்திற்குக் கடைசியாகச் செய்யப் போகின்ற பயணத்தில் உங்களிடம் இருக்கும் பணம் பயன்படாது. ஆகவே, அந்த உலகத்தில் பயன்படக்கூடிய அருட்செல்வமாக அவற்றை எல்லாம் மாற்றிக் கொள்ள, வறிஞர்களுக்கு இப்பொழுதே கொடுங்கள்' என்கிறார் அருணகிரிநாதர்.
உலகமாகிய ஆற்றில், இறைவன் அருளாகிய தெப்பத்தின் மீது ஏறிக்கொண்டவர்களுக்கு, உலகத்தில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் கவலை இல்லை. அவர்கள் துன்பம் அடைவதில்லை. துன்பப் படும்போதுதான் இறைவனை நினைக்கிறோம். இது மனித இயல்பு. எப்போதும் அவனையே நினைப்பது உண்மை அடியவர் இயல்பு. அகங்காரம், மமகாரம் மாறவேண்டும். அகங்காரம் மாறும் முன்பு,எனது என்கிற மமகாரம் ஒழிய வேண்டும். மமகாரத்தை ஒழிக்க,எனது எனது என்ற எண்ணத்தை மாற்றி, எல்லாம் அவனது என்று சொல்லவேண்டும். இறைவனது கருவியாக நான் இங்கே நடமாடிக் கொண்டிருக்கிறேன் என்று எண்ண வேண்டும். நம்மிடம் வரும் வறியவர்களை அவனாகவே எண்ணி, அவன் கொடுத்திருக்கும் பொருளை ஒளிக்காமல் அவனிடமே கொடுக்க வேண்டும்.
தன்னிடம் உள்ள பொருளை இறைவனுடையது என்று எண்ணி ஏழைகளுக்குக் கொடுப்பது ஒன்றே அகங்காரம், மமகாரம் இரண்டையும் ஒழிப்பதற்கு வழி. பற்றையும் ஆசையையும் போக்கத் தியாகமே மாற்று. நல்ல வெயிலில் போக முடியாமல், புழுதிச் சூட்டைத் தாங்க முடியாமல், தவிக்கிற போது,நம்முடைய உடல் நிழலில் நாமே கொஞ்சம் தங்கி இளைப்பாற முடியாது. உடல் நிழலில் வேறு யாராவது தங்கவும் முடியாது. அந்த உடம்பின் நிழல் போல, கையில் உள்ள பொருள் கடைவழிக்கு உதவாது என்கிறார் அருணகிரிநாதர்.
"வையில் கதிர் வடிவேலோனைவாழ்த்தி,வறிஞர்க்கு என்றும்
நொய்யிற் பிளவு அளவேனும்பகிர்மின்கள், நுங்கட்கு இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறு நிழல்போல்
கையில் பொருளும் உதவாதுகாணும் கடைவழிக்கே"
என்பது அருணகிரிநாதர் அருளிய உபதேசம்.
இதன் பொருள் ---
உலகவர்களே! உங்களுக்கு இவ்விடத்தில் வெய்யிலுக்கு ஒதுங்கி நிற்க உதவாத இந்த உடம்பின் பயனற்ற நிழலைப் போல, மரண காலத்தில் ஆன்மா புறப்பட்டுச் செல்லும் இறுதி வழிக்கு, உங்களக் கையில் உள்ள பொருளும் துணையாக வராது என்பதை உணர்ந்து,கூர்மை மிகுந்து ஒளி வீசுகின்ற, வடித்து எடுத்த வேலாயுதத்தை உடைய முருகப் பெருமானை வணங்கி, ஏழைகளுக்கு எக்காலமும் நொய்யில் பாதி அளவையாவது பங்கிட்டுக் கொடுங்கள்.
"பிறக்கும் பொழுது கொடு வந்தது இல்லை, பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடு போவது இல்லை; இடை நடுவில்
குறிக்கும் இச் செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்க அறியாது
இறக்குங் குலாமருக்கு என்சொல்லுவேன்? கச்சியேகம்பனே!7"
"வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்
போதுற்று எப்போதும் புகலு நெஞ்சே! இந்தப் பூதலத்தில்
தீது உற்ற செல்வம் என்? தேடிப் புதைத்த திரவியம் என்?
காது அற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே!"
என்னும் பட்டினத்து அடிகளாரின் அருள்வாக்கை இங்கு வைத்துச் சிந்திக்கவும்.
No comments:
Post a Comment