பெருந்தகையான் செல்வம்
-----
"பெருந்தகை" என்னும் சொல்லுக்கு, மிக்க பெருமை அல்லது மேம்பாடு உடையவர் என்று பொருள். பெருமை என்னும் சொல்லுக்கு, மாட்சிமை, மிகுதி, புகழ், வல்லமை, அருமை என்று பொருள். இவை யாவும் பண்புகள். உள்ளத்தின் வெளிப்பாடுகள். புறத்தோற்றத்தை வைத்து ஒருவன் பெருந்தகையாளனா என்று மதிப்பிட முடியாது. பெருந்தகையாளர்களாக நடப்போரும்,, பெருந்தகையாளர் போலத் தோற்றம் அளிப்போரும் உலகத்தில் உண்டு. இந்த இருமைநிலை உலகத்தில் என்றும் உண்டு.
"இருவேறு உலகத்து இயற்கை; திரு வேறு; செல்வம் உடையர் ஆதலும் வேறு" என்னும் திருக்குறளின்வழி, இந்த உலகத்தின் இயற்கையானது இருவகைப்பட்டது என்றும், செல்வம் உடையர் ஆதல் வேறு; தெளிவு உடையர் ஆதல் வேறு என்றும் திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தினார். செல்வமாக இருந்தாலும், தெளிவான அறிவாக இருந்தாலும்உடையவர்கள், இல்லாதவர்கள் என்ற வேற்றுமை உலகத்தில் என்றுமே உண்டு. ஆனால், உடையவர்கள் என்பவர்கள் கேவலம் பொன்னையும் பொருளையும் மட்டுமே உடையவர்களாய் இருந்து விடாமல், நல்ல பண்பாட்டையும் நல்ல மனநிலையையும் உடையவர்களாய் இருப்பதே சிறப்பு. இவ்வியல்பு அனைவருக்கும் எளிதில் அமைந்து இருக்கக் கூடிய ஒன்று அல்ல. செல்வத்தைப் பெற்றிருப்பவருள் பலர், அதன் பயன் என்ன என்பதை அறிந்திருப்பதும் இல்லை. எண்ணிப் பார்ப்பதும் இல்லை.நிதிநிறுவனத்தில் அல்லது வங்கியில் பொருளை ஒருவர் வைத்திருப்பதற்கும்,தனிப்பட்டவர் பொருளாகவே வைத்திருப்பதற்கும் வேறுபாடு அதிகம் இல்லை.
நிதிநிறுவனத்தில் வைத்த பொருள் அந்த நிதிக்குச் சொந்தமானது அல்ல. வங்கியில் உள்ள பொருள் வங்கிக்குச் சொந்தமானதும் அல்ல. பலருக்கும் சொந்தமான பொருள். பாதுகாவல் கருதியும், வேண்டும்பொழுது எடுத்துக் கொள்ளக் கூடிய வசதி கருதியுமே நிதிநிறுவனத்தில் அல்லது வங்கியில் வைக்கப்பட்டு உள்ளது. பொருளை அந்த நிதியிலோ, வங்கியிலோ போட்டதும்,நிதியையோ, வங்கியையோ நிர்வாகம் செய்பவர்கள் அதனைத் தம்முடைய பொருளாகக் கருதிப் பயன்படுத்தத் தொடங்கி விடுவார்களேயானால், நிதியின் நிலையும், அதில் பணம் போட்டவர்களின் நிலையும் என்ன ஆகும் என்பது சொல்லத் தேவையில்லை. இக்கால நிலை என்ன என்பது நம்மில் பலரும் அறிந்திருக்கக் கூடியதே.
செல்வத்தைப் பெற்றதன் பயன், அதனைப் பாதுகாத்து, வழங்கி, அதனால் பெறும் இன்பத்தை அனுபவிக்க வேண்டுவதே ஆகும். நமது முன்னோர் இதைக் கருதியே,"செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே தப்புன பலவே"என்று பாடி (புறநானூறு) வைத்தனர். பொருளை வைத்திருப்பதில் இன்பம் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனாலும், பொருளால் பெறுதற்கு உரிய உண்மையான இன்பம்அதனை வழங்குவதால் பெறும் இன்ப அனுபவமே ஆகும். எனவேதான்,
"ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல்? தாம் உடைமை
வைத்து இழக்கும் வண்கணவர்"
என்று திருவள்ளுவ நாயனார் கூறினார். பொருளைத் தாமே அனுபவிக்கலாம் என்று எண்ணுவது பிச்சை எடுப்பதை விடக் கேவலமானது, துன்பத்தைத் தருவது என்று காட்ட,
"இரத்தலின் இன்னாது மன்ற, நிரப்பிய
தாமே தமியர் உணல்"
என்னும் திருக்குறளை அருளிச் செய்தார். தானே அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கின்றவன்கூட பொருளை அப்படியே தின்றோ, உடையாக உடுத்தியோ, அணிகலனாக அணிந்தோ அனுபவிக்க முடியாது. அல்லவா? எனவே, பணம் என்பது, அனுபவப் பொருளைப் பெறுவதற்கு உரிய ஒர் அடையாளப் பொருளாக மட்டுமே அமைந்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
பணத்தைக் கொடுத்து அனுபவப் பொருளை வாங்கி அனுபவிப்பதனால் ஒருவனுக்கு மகிழ்ச்சி தோன்றுகிறது. பணம் படைத்ததன் பயன் ஒரு வகையில் அதுதான் என்றும் சொல்லலாம். ஆனால், அது உண்மையான இன்பம் அல்ல. பொருளால் உண்டாகும் இந்த அனுபவத்தை விட, மேலான அனுபவம் மற்றொன்று உண்டு. பொருளை வாங்கி அனுபவிக்கும் பொழுது, அனுபவிப்பவன் மட்டுமே மகிழ்ச்சி அடைகிறான். ஆனால், பொருளைப் பிறருக்கு வாரி வழங்கும்போது முதலில் பொருளைத் தருதலினால் தான் பெறும் இன்பம்; இரண்டாவது,அப் பொருளைப் பெற்றவன் அடைகின்ற இன்பம் என்று இன்பம் இரட்டிப்பாக இருத்தலைக் காணலாம். இவை இரண்டையும் அல்லாமல் மூன்றாவதாக ஒர் இன்பமும் உண்டு என்பதை ஒரு சிலரே அறிவர். கொடுத்துப் பழக்கம் உடையவர்கள் மட்டுமே இந்த மூன்றாவது இன்பத்தை அறிய முடியும்.
பொருளைப் பெறுகின்றவர் முகம் மலருவதைக் கண்டு, கொடுக்கின்றவர் மறுபடியும் மகிழ்ச்சி அடைகின்றார். எனவே, கொடுக்கும் பொழுது இன்பம், கொடுக்கப்பட்டவர் பெறும் இன்பம், அந்த இன்பத்தைக் கண்டு கொடுப்பவர் பெறும் இன்பம் என இன்பம் மூன்று வகைப்படுதலைக் காணலாம். கேவலம் இன்று இருந்து நாளை அழியும் பொருளைக் கொடுத்து இத்தகைய இன்பத்தைப் பெறுவது எவ்வளவு சிறப்புடையது? வியாபார முறையைப் பார்த்தாலுங்கூட ஒன்றைக் கொடுத்து மூன்றைப் பெறுவது மிகவும் இலாபகரமான செயல்தான்.அப்படி இருக்க, மனிதர்கள் ஏன் இந்த எளிய காரியத்தைப் புரிந்து கொள்வதில்லை என்று ஒரு வினாவை எழுப்புகிறார் திருவள்ளுவ நாயனார்.
"ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல்? தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கணவர்?"
என்ற திருக்குறளில், ஒன்றைக் கொடுத்து, மூன்றைப் பெறாத வினோதமான மனிதர்களைக் கண்டு வியப்புக் கொள்கிறார் திருவள்ளுவர். பெரியவர்கள் இதுபற்றி எவ்வளவுதான் பாடி இருந்தாலும், ஈதல் என்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல. எவ்வளவு புகழ்ந்து கூறினாலும் இம்மி அளவும் கொடுத்து உதவாத புல்லர்கள், உலோபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.சுந்தரமூர்த்தி சுவாமிகள், "கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இல்லை" என்று பாடி இருப்பதில் இருந்து இது தெரியவரும்.
"புலவரை ரட்சிக்கும் தாருவே, மது-
ரிதகுண வெற்பு ஒக்கும் பூவைமார் முலை
பொரு புய,திக்கு எட்டும் போய் உலாவிய ...... புகழாளா,
பொருஅரு நட்புப் பண்பான வாய்மையில்,
உலகில் உனக்கு ஒப்பு உண்டோ எனா, நல
பொருள்கள் நிரைத்துச் செம்பாகம் ஆகிய ...... கவிபாடி,
விலைஇல் தமிழ்ச் சொற்கு உன்போல் உதாரிகள்
எவர் என,மெத்தக் கொண்டாடி,வாழ்வு எனும்
வெறிகொள் உலுத்தர்க்கு, என்பாடு கூறிடு ...... மிடிதீர,
மிக அருமைப்பட்டு,உன்பாத தாமரை
சரணம் எனப் பற்றும் பேதையேன் மிசை,
விழிஅருள் வைத்து,குன்றாத வாழ்வையும்......அருள்வாயே"
என்று அருணகிரிநாதர் பாடியருளிய திருப்புகழ்ப் பாடலில் இருந்தும் இந்த உண்மை விளங்கும். பொருட்புலவர்கள் பலர் உண்டு. பொருள் உள்ளோரை, அவரிடம் இல்லாத சிறப்புக்கள் அத்தனையும் பொருந்தி இருப்பதாக, பொய்யாகப் பாடுவார்கள். "பொய் சொன்ன வாய்க்கு போசனம் இல்லை" என்னும் வாசகம் எல்லோரும் அறிந்ததே.
"கைசொல்லும் பனைகாட்டும் களிற்றுஉரியார்
தண்டலையைக் காணார் போல,
பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும்
கிடையாது! பொருள் நில்லாது!
மைசொல்லும் கார் அளிசூழ் தாழைமலர்
பொய்சொல்லி வாழ்ந்த துண்டோ?
மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி
வாழ்வதில்லை! மெய்ம்மை தானே!"
என்கிறது "தண்டலையார் சதகம்."
"கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்;
காடுஉறையும் ஒருவனை நாடுஆள்வாய் என்றேன்;
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்;
போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்;
மல்லாரும் புயம் என்றேன் சூம்பல் தோளை;
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்;
இல்லாது சொன்னேனுக்கு 'இல்லை' என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே." --- இராமச்சந்திர கவிராயர்.
இதன் பொருள் ---
நான் கல்லாத ஒரு செல்வனை நோக்கி, 'கற்றவனே' என்றேன். காட்டினை வெட்டிப் பிழைக்கின்ற குலத்தில் தோன்றிய ஒருவனைப் பார்த்து, 'நாட்டை ஆள்பவனே' என்றேன். தீய குணம் பொருந்திய ஒருவனை 'நல்லவனே' என்றேன். போர்க்களத்தினை அறியாத ஒருவனைப் பார்த்து, 'போர் புரிவதில் வல்லவனே' என்றேன். மெலிந்த தோள்களை உடைய ஒருவனைப் பார்த்து, 'மல் யுத்தத்திற்கு ஏற்ற தோள்களை உடையவனே' என்றேன். பிறர்க்குப் பொருளைக் கொடாத ஒருவனைப் பார்த்து, 'வள்ளலே' என்றேன். இவ்வாறு பொய்யாக இல்லாததை எல்லாம் நான் சொன்னேன். (பொய்யர்க்குப் பொய்யன் என்பதைப் போல) என்னிடம் பொருள் இல்லை என்று பொய்யாகச் சொன்னான். நானும் என் குற்றத்தை உணர்ந்து பொருள் பெறாமலேயே செல்கின்றேன்.
வேண்டுவார் வேண்டுவதை வரையாது வழங்கும் வள்ளலாகப் பரம்பொருள் இருக்க, அதனை உணர்கின்ற அறிவும், அதற்கேற்ற நல்வினைப் பயனும், முயற்சியும் இல்லாத ஏழைகள் (அறிவிலிகள்), தாம் கற்ற கல்வியின் பயன், இறைவனுடைய திருவடியைத் தொழுவதே என்பதை உணராதவர்கள், பொருள் உள்ளோர் இடம் தேடிச் சென்று, இல்லாததை எல்லாம் சொல்லி, வாழ்த்திப் பாடுவார்கள். பண்புகளே அமையாதவனை, அவை உள்ளதாகவும், உடல் வளமே இல்லாதவனை, அவை நிறைந்து உள்ளதாககவும், கற்பனையாகப் பாடுவார். எல்லாம் கற்பனையாகவே முடியும். பாடுவதும் கற்பனையே. பொருள் கிடைப்பதும் கற்பனையே.
"நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்" என்பார் ஔவைப் பிராட்டியார். கொடுத்தலாகிய இயல்பு பிறவியிலேயே அமைய வேண்டிய ஒன்றாகும். அடுத்தபடியாக உள்ள கொடுக்கும் இயல்பு ஓரளவு பழக்கத்தால் வருவதாகும். முதலாவது உள்ள பிறவி இயல்பைக் கொடை என்றும், வள்ளன்மை என்றும் கூறுவர்.ஆனால், பழக்கம் பற்றியும், தேவை பற்றியும் கொடுக்கப்படுவதை, "ஒப்புரவறிதல்" என்றும் "ஈகை" என்றும் கூறுகிறார் திருவள்ளுவ நாயனார். ஒப்புரவறிதல் என்ற சொல்லுக்கு "இல்லையென இரந்து வந்தவர்கள் யாவர்க்கும் வரையாது கொடுக்கும் ஆற்றல் இல்லை யானாலும்,தம்மளவிற்கும், தம் வருவாய்க்கும் ஏற்பத் தக்கார்க்குத் தக்கவற்றை அறிந்துகொடுத்தல்" என்று பொருள் கூறுகிறார் மணக்குடவர்.
பாரியைப் போலவும், குமணனைப் போலவும், "பருவக் கொண்மூப் படி எனப் பாவலர்க்கு உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்கும்" சேரமான் பெருமாள் நாயனாரைப் போலவும் வரையாது வழங்கும் இயல்பு இல்லையானாலும், உலகியலுக்கு ஏற்ப, ஏற்பவர் நிலைமை அறிந்து, தன் நிலைமையையும் சீர்தூக்கி ஒருவன் வழங்க வேண்டும் என்பதுதான் ஒப்புரவு. ஒப்புரவு அறிகின்ற ஒருவனிடமுள்ள செல்வம், ஊர் நடுவே உள்ள குளத்தில் நீர்நிரம்பியது போல ஆகும் என்றும், அனைவர்க்கும் பயன் படக்கூடிய நல்ல பழமரம் அனைவர்க்கும் பொதுவான ஊர்ப் பொது இடத்தில் பழுத்தது போல ஆகும் என்றும்உவமைகளுடன் திருவள்ளுவ நாயனார் விளக்கம் காட்டுகிறார்.
"ஊருணி நீர் நிறைந்து அற்றே, உலகு அவாம்
பேரறிவாளன் திரு"
என்றும்,
"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்து அற்றால், செல்வம்
நயன் உடையான்கண் படின்"
என்பன திருவள்ளுவ நாயனார் அருள்வாக்குகள்.
"ஞாலம்உறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால்
எல்லவர்க்கும் நாவ லோர்க்கும்
காலம் அறிந்து அருமையுடன் பெருமை அறிந்து
உதவிசெய்து, கனமே செய்வார்,
மாலறியாத் தண்டலைநீள் நெறியாரே!
அவரிடத்தே வருவார் யாரும்,;
ஆலமரம் பழுத்தவுடன், பறவையின்பால்
சீட்டு எவரே அனுப்பு வாரே".
என்கிறது "தண்டலையார் சதகம்" என்னும் நூல்.
இதன் பொருள் ---
மால் அறியாத் தண்டலைநீள் நெறியாரே - திருமாலும் அறியாத தண்டலைநீள் நெறியாரே!, ஆலமரம் பழுத்தவுடன் பறவையின்பால் எவரே சீட்டு அனுப்புவார் - ஆலமரம் பழுத்தால் பறவைகள் வரவேண்டும் என்று சீட்டினை அனுப்புவோர் யார்? (அவ்வாறே), ஞாலம் உறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால் - உலகில் உள்ள நல்லோர்களுக்குச் செல்வம் கிடைத்தால், நாவலோர்க்கும் எல்லவர்க்கும் - புலவர்களுக்கும் இரவலர் முதலிய யாவருக்கும், காலம் அறிந்து அருமையுடன் பெருமை அறிந்து - காலமும் அருமையும் பெருமையும் உணர்ந்து, உதவி செய்து கனமே செய்வார் - பொருள் கொடுத்துப் பெருமைப் படுத்துவார்கள்; அவரிடத்தே யாரும் வருவார் - அவரிடம் எல்லோரும் வருவார்கள்.
"நடுவூருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க
படுபனை அன்னர் பலர் நச்ச வாழ்வார்;
குடிகொழுத்தக் கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை." --- நாலடியார்.
இதன் பொருள் ---
பலர் நச்ச வாழ்வார் - பலரும் தம்மை விரும்பி அணுகும்படி வள்ளன்மையுடன் வாழ்பவர்கள், நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க படுபனை அன்னர் - ஊர் நடுவில் மேடையினால் சூழ்ந்து கொள்ளுதலைப் பொருந்திய காய்த்தல் உடைய பெண்பனையை ஒப்பர்; குடி கொழுத்தக் கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள் - தமது குடி செல்வம் மிக்க காலத்தும் பிறர்க்கு வழங்கி உண்ணாத மாக்கள், இடுகாட்டுள் ஏற்றைப் பனை - சுடுகாட்டுள் நிற்கும் காய்த்தல் இல்லாத ஆண்பனையே ஆவர். (பயன் தருவது பெண்பனை. பயன் இல்லாதது ஆண்பனை.)
"மரம் பழுத்தால் வௌவாலை வா என்று கூவி
இரந்து அழைப்பார் யாவரும் அங்கு இல்லை --- சுரந்துஅமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்,
உற்றார் உலகத் தவர்." --- நல்வழி.
இதன் பொருள் ---
மரம் பழுத்தால் - மரம் பழுத்திருந்தால்,வா என்று வௌவாலைக் கூவி இரந்து அழைப்பார் - (இப் பழத்தைத் தின்னுதற்கு) வா என்று வௌவாலைக் கூவி வேண்டி அழைப்பவர், அங்கு யாவரும் இல்லை - அம் மரத்தின் அருகில் ஒருவரும் இல்லை; கன்று ஆ அமுதம் சுரந்து தரல் போல் - கன்றையுடைய பசுவானது பாலைச் சுரந்து கொடுத்தல்போல, கரவாது அளிப்பரேல் - ஒளிக்காமற் கொடுப்பாராயின், உலகத்தவர் உற்றார் - உலகத்தார் (அவ் வௌவால் போலத் தாமே வந்து) உறவினராவார்.
"மன்னிய கனிகாய் நீழல்
மற்ற எல்லாம் உதவி,பின்னும்
தன்னையும் உதவா நின்ற
தரு எனத் தம் கை ஆர்ந்த
பொன் எல்லாம் உதவி,பின்னும்
பூட்சியால் உழைத்திட் டேனும்
இன்னுயிர் உதவி யேனும்
இடுக்கண் தீர்ப்பார் நல்லோரே." --- நீதிநூல்.
இதன் பொருள் ---
நிலைத்த பழம் காய் நிழல் முதலிய பலவும் உதவிய மரம் தானும்,கோவில் வீடு கப்பல் முதலிய பலவற்றுக்கும் பயன்படும்படி தன்னையும் உதவுகின்றது. அதுபோன்று நல்லோர்கள் தம் கைப்பொருளெல்லாம் உதவிய பின்னும உடல் வருந்தி உழைத்திட்டும் இன்னுயிர் கொடுத்தும் பிறர் துன்பங்களைப் போக்குவர்.
பயன் தருகின்ற மரத்தினிடத்தில் யாரும் வந்து கேட்பது இல்லை. "இந்தா, எடுத்துக் கொள்" என்று மரம் சொல்லுவதும் இல்லை. பயன்மரம் போல வாழுகின்றவர்கள் பெரியவர்கள். சொல்லிக் கொடுப்பவர் சிறியோர். சொல்லியும் செய்யாதவர் கயவர் என்கின்றது ஔவைப் பிராட்டியின் தனிப்பாடல் ஒன்று.
"சொல்லாமலே பெரியர், சொல்லிச் சிறியர் செய்வர்,
சொல்லியும் செய்யார் கயவரே --- நல்ல
குலாமாலை வேல்கண்ணாய்! கூறுஉவமை நாடின்,
பலாமாவைப் பாதிரியைப் பார்." --- ஔவையார் தனிப்பாடல்.
இதன் பொருள் ---
மாலையை அணிந்த, வேலைப் போன்ற கண்களை உடையவளே! பெரியோர் தாம் செய்ய இருக்கும் உதவியை மற்றவர்க்குச் சொல்லாமலே செய்வர். அவரை விடத் தாழ்ந்த, இடைப்பட்டவர், தாம் செய்யும் உதவியை பற்றவர்க்குச் சொல்லிவிட்டுச் செய்வர். உதவி செய்வதாகச் சொல்லி, பின்னர் அதைச் செய்யாமல் இருப்பவர் கீழ்மக்கள். இவர்களுக்குச் சொல்லக்கூடிய உவமையை ஆராய்ந்தால், பூக்காமலே பழுக்கும் பலா மரத்தையும், பூத்த பின் காய்த்துக் கனியைத் தரும் மாமரத்தையும்,பூத்தும் கனியைத் தராத பாதிரி மரத்தையும் கூறவேண்டும்.
ஒப்புரவு அறிந்து தன்மாட்டு உள்ளதைப் பகிர்ந்து தருதல் பலவகைப்படும். உள்ள பொருளில் ஒரு பங்கைத் தருவதிலிருந்து, தரும் அளவை மிகுதிப்படுத்திக் கொண்டே சென்று, ஏறத்தாழ முழுவதையுமே தந்து விடுகின்ற பகுதி வரை, தருதல் என்பது பலவகைப். படும். சிலர் தம்மாட்டு உள்ள பொருளை, அதுவும் தமக்குத் தேவையில்லாததாய் இருந்தால் தருவர். ஆனால், தமக்கு மிகவும் தேவையாக உள்ள பொருளைத் தருதல், தம்மிடம் இல்லாவிடினும் தேடிச் சென்று சம்பாதித்துத் தருதல் ஆகிய இரண்டும் ஒப்புரவு, அறிகின்றவர்களிலும் கூடத் தலையானவர்கட்கே கூடும்.
இத்தகைய இயல்யு உடையவர்களைப் பெருந்தகையாளர்கள் என்கிறார் திருவள்ளுவ நாயனார். இவர்களிடம் செல்வம் இருக்குமேயானால், அனைவர்க்கும் அது பயன்படும். எந்தஅளவு, பயன்படும் என்று கூற வந்த நாயனார், ஒர் அழகிய, உவமையைவகுத்துக் காட்டுகிறார். கிராமங்களிலே மிகவும் வயதான வேப்பமரம் நிற்பதைச் சிலர் கண்டிருக்கலாம்; அம்மரத்தின் அடிப்பகுதி எல்லாம் வெட்டும் குத்துமாக இருத்தலையும் காணலாம். மேலே கிளைகள் ஒடிக்கப் பட்டு இருக்கும். வேர்ப்பகுதிபல இடங்களில் தோண்டப் பட்டு இருக்கும். இதன் காரணம், பழமையான அந்தவேப்பமரம் தப்பாமல் மருந்துக்குப் பயன்படக் கூடிய ஒன்று. அதனுடைய கிளை, இலை,அடிமரம், பட்டை, வேர் ஆகிய அனைத்துமே மருந்துக்குப் பயன்படுதலால், ஒவ்வொரு பகுதியையும் வெட்டிக் குத்தி மக்கள்பயன் படுத்திக் கொள்கின்றார்கள். ஒப்புரவு செய்கின்ற பெரு மக்களுள்ளும் இந்த மருந்து மரத்தின் இயல்பினைப் பெற்றவர்களும் உண்டு. அத்தகையவர்கள் பெருந்தகையாளர்கள் என்கிறார். பெருந்தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒன்றுக்கும் உதவாத செல்வந்தர்களைப் "பெருந்தகை" என்கிறோம். ஆனால், மருந்து மரம் போலப் பயன்படுபவர்களையே நாயனார், "பெருந்தகை" என்கிறார்.
"மருந்தாகித் தப்பா மரத்து அற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்"
என்பது நாயனார் அருளிய திருக்குறள்.
ஊருணி நீரைப் போலவும், பழமரத்தைப் போலவும், மருந்து மரத்தைப் போலவும் வாழ்ந்த பெருந்தகையாளர்கள் நமது காலத்திற்கு முன்னர் வாழ்ந்திருந்தனர். நமது கண்முன்னரும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். இல்லையானால், இந்த உலகம் எப்போதா மண்ணோடு மண்ணாகிப் போய் இருக்கும் என்பதை,
"பண்பு உடையார்ப் பட்டு உண்டு உலகம், அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்."
என்னும் திருக்குறளின்வழி காட்டினார் நாயனார்.
No comments:
Post a Comment