பலாப் பழமும் எட்டிப் பழமும்

 


பலாப் பழமும் எட்டிப் பழமும்

-----

 

     நல்ல மனிதர் பலர் உண்டு இந்த நானிலத்தில். ஆனால்நல்ல மனிதர் அனைவரும் நல்ல முறையில் பேசத் தெரிந்தவர் என்று கூற முடியாது. 'மனிதர் மிகவும் நல்லவர் தான்ஆனால்தம்முடைய வாயால் பகையை வளர்த்துக் கொள்கிறார்:  நுணலும் தன் வாயால் கெடும் என்பது இவருக்குப் பொருந்தும்,’  என்று பேசப்படுவதைக் கேட்கிறோம். கேட்பவர் உள்ளத்தைப் பிணிக்கும் தன்மை உடையவாயும் பகைவரும் கேட்பதற்கு விருப்பப்படும் வகையிலும் சொல்லப்படுவதே சிறந்த சொல்வன்மை ஆகும். 

 

     பகையை வளர்த்துக் கொள்பவர்களை நல்லவர்கள் என்று சமுதாயம் கருதுகின்றது.  மன நினைவால், பண்பால்,பிறருக்கு நன்மை செய்யும் இயல்பால்நல்லவர் என்ற பெயரைப் பெறுகின்றார் ஒருவர். என்றாலும்இவ்வளவு நற்பண்புகளும் உடைய அவர்,  வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால் போதும்! நல்ல நண்பர்களும் பகைவர்களாகி விடுவார்கள். அவர்கள் மனத்தில் ஒரு தீமையும் இல்லாமலே வாய்ப் பேச்சின் கொடுமையால் பகையை  வளர்த்துக் கொள்பவர்கள்.'ஏன் இப்படிப் பகையை வளர்த்துக் கொள்கிறீர்கள்?' என்று கேட்டால், 'நான் என்ன கெடுதலாகப் பேசிவிட்டேன்நான் உண்மையைத் தான் பேசுகிறேன். எனவேயாருக்கும் அஞ்சவேண்டியது இல்லைஎன்பார்கள் அந்த நல்லவர்கள்.

 

     இம்மாதிரி மனிதர்கட்கு  நேர்மாறான வகையாரும் உண்டு. அவர்கள் மனத்தில் தீய எண்ணம் தவிர வேறு எண்ணம் தோன்றுவதே இல்லை. எப்பொழுது பார்த்தாலும் யாரை ஒழித்துக் கட்டித் தாங்கள் பயன் அடையலாம் என்ற ஒரே எண்ணந்தான் அவர்கள்  மனத்தில் அல்லும் பகலும் குடிகொண்டு இருக்கும். இவ்வளவு இருந்தும்,  அவர்களிடம் ஒரு நன்மை உண்டு.எப்பொழுதும் புன்சிரிப்புடன் மிக நயமான வார்த்தைகளையே பேசுவார்கள். நல்ல பெயரை எடுத்துக் கொள்வார்கள்.

 

     இந்தப் புண்ணியவாளர்கள் எட்டிப் பழம் போன்றவர்கள்பார்ப்பதற்கு மிகவும் அழகு உடையதாகக் காணப்பட்டுஉண்டவரைக் கொல்லும் எட்டிப் பழம். அவர்களும் நயமாகப் பேசித் தம்மிடம் வந்தவர்களைத் தம் நலத்துக்குப் பயன்படுத்திக் கொண்டு காரியம் முடிந்தவுடன் சக்கையை எறிவது போல எறிந்துவிடுவார்கள். முதல் வகையார் பலாப்பழம் போன்றவர்கள். பலாப்பழம் பார்வைக்கு முசுடும்முள்ளும் நிறைந்துள்ளது. பொறுத்துக் கொண்டு அறுத்துப் பார்த்தால்உள்ளே சுவை  நிறைந்த சுளை இருப்பது போல அவர்கள் இனிய பல பண்புகள் நிறைந்தவர்களாய் இருப்பார்கள்.

     பலாப்பழத்தை ஒத்த பண்பாடு உடையவர்கள் சிறந்தவர்களாயினும்அவர்களால் உலகத்துக்கு அதிக நன்மை இல்லை. ஏனெனில்அவர்களிடம் பழகுகின்றவர்கள் பலநாள் பழகி அவர்கள் மன நிலையை அறிந்து கொண்ட பின்னரே உண்மையை அறிய முடியும். அவ்வளவு தூரம் பழகுவதற்கு முன்னரே பலாப்பழத்தை ஒத்தவர்களுடைய முள்போன்ற  வாய்ச்சொற்கள் பழகுபவரை வெருட்டிவிடும். இத்தகையவர்களால் உலகத்திற்கு அதிக நன்மை உண்டு என்று கூற முடியாவிடினும்எட்டிப் பழம் போன்ற இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களால் உலகிற்குத் தீமையே விளையும்.

      'பலாப்பழம் போன்றவரால் நன்மை இல்லைஎட்டிப் பழம் போன்றவரால் தீமைவிளையும்'  என்றால் பிறகு எப்படிப்பட்டவர்களால்தான் நன்மை விளையும்?  என்ற வினா எழுவது இயல்புதான். உள்ளத்தே  தூய்மையும் புறத்தே இன்சொல்லும் உடையவர்களாலேதான் உலகம் பயன் அடையமுடியும். அகத்தே தூய்மை உடையவர்கள்தாம் பிறருடைய நன்மையைக் கருத முடியும். ஆனால்,  எவ்வளவுதான்  உள்ளத் தூய்மை இருந்தாலும் பிறருக்கு நன்மை புரிய அவர்கள் தயாராக இருந்தாலும்,  பயன் என்ன?  நன்மையைப் பெறுகின்ற பிறர் தங்களிடம் வரவும் தம்முடைய குறைகளை  அச்சமின்றி எடுத்துக் கூறவும் முடிந்தால்தானே பயன் ஏற்படும்

     இவ்வுண்மையை நன்கு உலகுக்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டு திருவள்ளுவ நாயனார் 'இனியவை கூறல்'  என்ற ஒர் அதிகாரத்தையே வகுத்துக் காட்டினார். உண்மையிலேயே உள்ளத் தூய்மை உடையவர்கள் இனிய சொற்களையே பேசுவார்கள். அந்த இனிமை உதட்டளவில் நின்றுவிடாது. உண்மையான பரிவு அல்லது அன்பு கலந்ததாக இருக்கும் அவர்களுடைய சொற்கள். வஞ்சகம் இல்லாததாகவும் இருக்கும் அவர்களுடைய சொற்கள். நடிப்பு இருக்காது. 

"இன்சொலால் ஈரம் அளைஇ,படிறு  இலவாம் 

செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்"

என்று திருவள்ளுவ நாயனார் கூறினார். "யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே" என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். எனவேஇன்சொல் இன்றியமையாத ஒன்று. இவ்வாறு வஞ்சகம் இல்லாத அன்புடன் இனிய சொற்களைக் கூறுகின்ற பெரியோர்கள் உலகிற்குச் செய்துள்ள நன்மைகள் பலப்பல.

     அதியமான் நெடுமான் அஞ்சி என்பவன் கடை எழு வள்ளல்களுள் ஒருவன். அவன் மிகப் பெரிய நாட்டை ஆளவில்லை. தமிழ்நாட்டின் ஒரு பகுதியை ஆட்சி செய்த சிற்றரசன். அவன் காலத்தில் தமிழ் நாட்டின் மற்றொரு பகுதியை ஆட்சி செய்து வந்தான் தொண்டைமான் என்ற மற்றொரு சிற்றரசன். அந்த நாளில் தமிழ்நாட்டை ஆட்சி செய்த இந்தச் சிற்றரசர்களுள் மூண்டுகொண்டு இருந்த சண்டைக்குக் கணக்கே இல்லை. ஓயாது ஒழியாது போரிடுவதே இவர்கள் வழக்கமாய் இருந்தது.("தமிழன் என்று ஒரு இனம் உண்டுதனியே அவர்க்கு ஒரு குணம் உண்டு" என்று நாமக்கல் கவிஞர் பாடினார். நல்ல குணங்கள் பலவும் பொருந்தி இருந்தாலும்ஒற்றுமை உணர்வு இல்லாமல்ஒருவருக்கு ஒருவர் பகை உணர்வுடனேயே இருப்பதும் தமிழனுடைய குணம் என்று கொள்ளலாமோஎன்னும் அளவுக்கு தமிழ்நாட்டு அரசர்கள் வாழ்ந்தார்கள். இன்றும் அதுதான் தொடர்கிறதோமற்ற மொழிக்காரர்கள் ஏதாவது பிரச்சினை என்று வந்தால் வேற்றுமையை மறந்து ஒற்றுமை கொள்வதுபோல்தமிழினத்தில் இல்லையே!!!!!)

     அதியமான்வந்தவர்க்கு எல்லாம் வாரி வாரி வழங்கிக்  கொண்டிருந்த வள்ளல். அதனால் அவனுடைய செல்வ நிலைமை சற்றுத் தளர்ந்து இருந்தது. இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் தொண்டைமான். உடனே படையெடுத்து வந்து அதியமானுடன் போர் தொடுக்க ஆயத்தம் ஆனான். இந்த நிலையில் அதியமான் போருக்குச் சித்தமாய் இல்லை. அதற்காகக் கோழையைப் போல நாட்டை விட்டுவிட்டு ஒடி விடுவதும் முறைல்ல. பகைவனுக்குப் பணிந்து போவதும் சரியல்ல. தொண்டைமானுடன் சமாதானம் செய்துகொள்ளவே அதியமான் விரும்பினான்.

     போர் தொடுக்கச் சித்தமாய் இருக்கும் பகைவனுடன் சமாதானம் செய்துகொள்வது என்பது எளிதான காரியம் அல்ல.அவ்வாறு செய்து கொள்ள முயல்வதில் இரண்டு வகையான தொல்லைகள் உண்டு. உண்மையில்,  தான் போர் செய்ய முடியாது என்பதைத் தெரிவித்துச் சமாதானம் கேட்கலாம். இவ்வாறு செய்வதற்கும் போரில் தோல்விஅடைவதற்கும் பெரிதாக வேறுபாடு இல்லை. இதற்கு எதிராகத் தன்னுடைய பலமின்மையைக் காட்டிக் கொள்ளாமலே சமாதானத்தை அடைய முயற்சி செய்யலாம். ஆனால்,பகைவன் சமாதானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டால் ஆபத்து! இவை இரண்டு  வழியிலும் சிக்காமல் சமாதானம் பெறுவது சிறப்புடையது. 

     இப்படி சமாதானம் செய்து வைப்பவர் கிடைத்தால் நன்றாக இருக்கும்.. ஒரே ஒரு தொல்லைதான் உண்டு  இம்முறையில். நன்மை நினைப்பவர்அதாவது மனத்தால் தூயவர் ஒருவர் கிடைப்பது  கடினம். இத்தகையவர் கிடைத்தால் இவர்கள் இன்சொல் பேசுபவர்களாகவும்  இருப்பது  கடினம். தூயமனமும் இன்சொல்லும் சேர்ந்தால் ஒழிய இக்காரியத்தைச் செய்தல் இயலாது. முள்ளும் சக்கையும் இல்லா பலாப்பழமாக இருப்பவரே இக்காரியத்தைச் செய்து முடிக்க முடியும்.

     அதியமானுக்கு இப்படி ஒருவர் தேவைப்பட்ட பொழுது ஒருவர் வந்து சேர்ந்தார். அவர்தான் நாம் எல்லோரும் அறிந்த ஒளவைப் பிராட்டியார். பிற்காலத்து ஒளவையாரினும் வேறுபட்டவர் அவர். அவர் அக்காலத் தமிழ்நாடு முழுவதையும் பன்முறை சுற்றித் தமிழ் பரப்பியவர். அவர் தன்னிடம் வந்து சேர்ந்தவுடன் தன் கவலையை  விட்டான் அதியமான் தொண்டைமானிடம் தூதாக ஒளவையாரை அனுப்ப முடிவு செய்தான்.


     இனிய சொற்களைக் கூறும் பண்பும்அந்தச் சொற்களை நகைச் சுவையோடு சொல்லிக் காரியம் சாதிக்கும் இயல்பும் ஒளவையாரிடம் இருந்தன. தொண்டைமானிடம் தூதாகச் சென்றார் அவர்.தன்னிடத்தே  படைவலி மிகுந்து இருப்பதாக,  எண்ணித் தொண்டைமான் செருக்குற்றான். அவனது அறியாமையை அறிந்த அதியமான்போரின் கொடுமையையும் போரில் அவன் வலியிழந்து கெடுவதன் உறுதியையும்அதனால் நாட்டுக்கும் நாட்டு மக்கட்கும் நேரும் கேட்டையும் தெளிந்து கொள்ளுமாறு அறிவித்தற்கு ஒளவையாரை அவன்பால் தூதுவிட்டான். ஒளவையார் அவன்பால் சென்று சேர்ந்தார். தொண்டைமான் தன் படைப் பெருமையை அவருக்குக் காட்ட எண்ணி,  அவரைத் தன் படைக்கலக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்று பலவேறு படைக்கலங்களையும் காட்டினான். அவன்  கருத்தினை அறிந்த ஒளவையார்அதியமான் படைக்கலங்களைப் பழிப்பது போலப் புகழ்ந்தும்தொண்டைமான் படைக்கலங்களைப் புகழ்வது போலப் பழித்தும் ஒரு பாடலின் மூலம் காட்டினார்.

 

"இவ்வேபீலி அணிந்துமாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து
கடி உடை விய நகர் அவ்வேஅவ்வே
பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ,என்றும்

உண்டாயின் பதம் கொடுத்து,

இல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்

அண்ணல் எம் கோமான் வைந்நுதி வேலே."  --- புறநானூறு.


இதன் பொருள் ---


     இந்தப் படைக்கலங்கள் எல்லாம் மயிற்பீலி அணிவிக்கப் பெற்றுமாலை சூட்டிபிடி திருத்திகூர்மை மழுங்கிக் கெடாது இருக்க நெய்யைத் தடவிகாவல் மிக்க காப்பறையில் பாதுகாப்பாக உள்ளன. ஆனால்எமது தலைவன் அதியமானிடம் உள்ள படைக்கலங்களோ பகைவர் உடலைக் குத்திக் கிழித்ததால் நுனி முறிந்துகொல்லன் உலை க்களத்திலே செப்பனிடுவதற்காக  எப்போதும் கிடக்கின்றன. செல்வம் இருந்தால் பிறர்க்குக் கொடுத்தும்இல்லை என்றால் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்தும் உண்ணும் ஏழ்மை மிகுந்த சுற்றத்துக்குத் தலைவனாகிய அதியமான் நெடுமான் அஞ்சியின் கூரிய நுனியை உடைய வேலும் இத்தகையதே.


     ஒருவரை ஒருவரோடு சேர்த்து வைத்தல் என்னும் "சந்தி" செய்தல் எனப்படும்.  பிரித்தல் என்பது "விக்கிரகம்" செய்தல் ஆகும். சந்தி செய்யச் செல்பவனுக்குயாருக்காகச் செல்கின்றானோ அவர்பால் அன்பும்ஆக வேண்டிய காரியத்தை ஆராயும் அறிவும்ஆராய்ந்தவற்றைத் தெளிவாக எடுத்துச் சொல்லுதலில் வல்லமையும்,ஆகிய மூன்றும் தூதாகச் செல்பவனுக்குப் பொருந்தி  இருக்கவேண்டிய இன்றியமையாத குணங்கள்" என்று இந்த அதிகாரத்தின் இரண்டாம் திருக்குறளில் நாயனார் அறிவுறுத்தினார்.

 

"அன்புஅறிவுஆராய்ந்த சொல்வன்மைதூது உரைப்பார்க்கு

இன்றியமையாத மூன்று."              ---திருக்குறள்

 

     தம் தலைவனாகிய அதியமானுக்கு நன்மை செய்துஅவன் மதிப்பைக் குறைக்கும் சொல் ஒன்றைக் கூடக் கூறாமல்அவன் ஆயுதங்கள் கொல்லன் பட்டறையில் உள்ளன என்று சிரிப்பு உண்டாகும்படியும் கூறினார். அத்தோடு நில்லாமல்,கொல்லன்  பட்டறையைக் கூறினமையின்,  ஓயாது போர் செய்யும் வீரன் அதியமான் என்பதையும் எடுத்துக் கூறினார். இவ்வளவையும் சொல்வதை விடப் பெரியதுதொண்டைமான்  சினம் கொள்ளாத முறையில் இனிமையாக இவற்றைக் கூறியதுதான் சிறப்பு.  

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

"பேதையரும் நாவலரும் பேதம்இன்றியே பொருந்த,

தூது சென்ற கொன்றைத் தொடையலார் போலவே,

அன்புஅறிவுஆராய்ந்த சொல்வன்மைதூது உரைப்பார்க்கு

இன்றியமை யாத மூன்று."   

 

            பேதையார் - பரவையார். நாவலர் - சுந்தரமூர்த்தி நாயனார். கொன்றைத் தொடையலார் - சிவபெருமான்.  மூன்று --- அன்புஅறிவுசொல்வன்மை.

 

     பரவை நாச்சியார்தம்மை நீண்ட காலமாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிரிந்து இருந்தமையால்அவர் நிலையைத் தெரிந்து வரச் சிலரை விடுத்தார். அவர் வாயிலாகத் திருவொற்றியூரிலே சங்கிலியாரைத் திருமணம் செய்து கொண்டதை அறிந்தார். அதனால் அம்மையார் துயரக் கடலில் அழுந்தி இருந்தார். நம்பியாரூரர் திருவாரூர்த் திரும்பிய பொழுதுஅவருடைய பரிசனங்களில் சிலர் பரவையார் வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் உள்ளே நுழையாதவாறு தடுக்கப்பட்டனர். அவர்கள் திரும்பி வந்துதேவாசிரிய மண்டபத்தில் இருந்த நம்பியாரூரரைக் கண்டு, "அடிகளே!  நாங்கள் பரவையார் வீட்டில் நுழையாதபடி தடுக்கப்பட்டோம். திருவொற்றியூர்ச் செய்கை முற்றும் அம்மையார் உணர்ந்து இருக்கின்றார்" என்றனர். சுவாமிகள் வருந்திபரவையார் கொண்டுள்ள சினத்தைத் தீர்க்ககற்ற மாந்தர் சிலரை அனுப்பினார். அவர்கள் சென்று பரவையாரைக் கண்டார்கள். பல நியாயங்களைச் சொல்லிஅவரது சினத்தைத் தீர்க்க முயன்றார்கள்.பரவையார் அவர்கள்பால் சினம் கொண்டு, "நம்பியாரூரர் குற்றம் பொருந்தியவர். அவர் சார்பில் பேசினால்இனி எனது உயிர் போகும்" என்றார். அவர்கள் நடுங்கி வந்துதம்பிரான் தோழராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் சென்று நிகழ்ந்ததைக் கூறினார்கள்.

 

     அதைக் கேள்வியுற்ற சுவாமிகள் உள்ளம் வருந்தினார். நடுஇரவும் ஆனது. எல்லோரும் உறங்கியும் அவருக்கு உறக்கம் வரவில்லை. சிவபெருமானைத் தமது உள்ளத்தில் நினைந்து, "பெருமானே! உமது அருளால் சங்கிலியைப் பெற்றேன். அதைப் பரவை கேள்வியுற்றாள். இப்பொழுது அவளிடம் சென்றால் உயிர் விடுவேன் என்கின்றாள். நான் உமது அடியான் என்பதும்நீர் உமது தோழன் என்பதும் உண்மையானால்இன்று இரவே நீர் அவளிடம் சென்று அவள் கொண்டுள்ள புலவியைத் தீர்த்து அருளவேண்டும்" என்று வேண்டினார்.

 

     தனது அடியவர்பால் கொண்ட அன்பு காரணமாகமுற்றறிவினராகிய சிவபெருமான்பரவையாரிடம் தூது சென்றுஅந்த அம்மையார் தெளியும் வண்ணம் எடுத்துச் சொல்லிஅவரது ஊடலைத் தீர்த்து அருளினார்.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாக,"திருப்புல்லாணி மாலை"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்..

 

"துன்றிய அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று எனலால்அமைவோன் இவனே
சென்றிடவேண்டும் எனதூது புல்லைச் செழுமுகிலை
நன்றுஇசைத்து அன்று பொறையோன் விடுத்தனன் நாட்டினுக்கே".

 

இதன் பொருள் ---

 

     தூது செல்பவனுக்கு,  யாருக்காகச் செல்கின்றானோ அவர்பால் அன்பும்ஆக வேண்டிய காரியத்தை ஆராயும் அறிவும்ஆராய்ந்தவற்றைத் தெளிவாக எடுத்துச் சொல்லுதலில் வல்லமையும்பொருந்தி இருக்கவேண்டிய இன்றியமையாத குணங்கள் மூன்று என்று (திருவள்ளுவ நாயனாரால்) சொல்லப்பட்டுள்ளதால்தமக்காககௌரவர்பால் தூது செல்லத் தகுந்தவர் இவர்தான் என்றுதிருப்புல்லாணி  என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள மேகவண்ணப் பெருமாளைத் தருமபுத்திரர் தூதாக அனுப்பி வைத்தார்.

 

     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக "ஏலாதி" என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூலில் அமைந்துள்ளது காண்க.

                                

"மாண்டு அமைந்து ஆய்ந்த மதி,வனப்பே,வன்கண்மை,

ஆண்டு அமைந்த கல்வியே,சொல்லாற்றல்,- பூண்டுஅமைந்த

காலம் அறிதல்,கருதுங்கால் தூதுவர்க்கு

ஞாலம் அறிந்த புகழ்."                  --- ஏலாதி.

 

இதன் பொருள் ---

 

     மாண்டு அமைந்து - ஒழுக்கத்தில் மாட்சிமைப்பட்டுஆராய்ந்த மதி - பல நூல்களை ஆராயப்பெற்ற அறிவும்வனப்பு - தோற்றப் பொலிவும்வன்கண்மை - பகைவர்க்கு அஞ்சாமையும்ஆண்டு அமைந்த - பயின்று நிரம்பியகல்வி - கல்வியறிவும்சொல் ஆற்றல் - மாற்றாரையும் வழிப்படுத்துஞ் சொல்வன்மையும்பூண்டு அமைந்த - தகுதி பொருந்தியகாலம் அறிதல் - காலம் அறிதலும்கருதுங்கால் - ஆராயுமிடத்துதூதுவர்க்கு - தூதர்களுக்குஞாலம் அறிந்த புகழ் - உலகறிந்த புகழை விளைப்பனவாம்.        

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...