புல்லறிவாளர்க்கு உதவி செய்யாதே

                                                    புல்லறிவாளர்க்கு உதவி செய்யாதே

-----

 

            பிறருக்கு உதவுவது என்பது மிக உயர்ந்த பண்பு. பிறருக்கு உதவுபவர்களை உலகம் போற்றும். "தன் உயிர்போல் எந்நாளும் மன்னுயிருக்கு இரங்குவது தக்கது" என்கிறது "தண்டலையார் சதகம்".  "எவ்வுயிரும் என்உயிர்போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே" என்றார் தாயுமான அடிகளார்.

 

            அன்பின் அடிப்படையாகத் தோன்றும் கருணை இருந்தால்பிறர்க்கு உதவத் தோன்றும். அறிவு எங்கே இருக்கிறதோ அங்கே கருணை இருக்கவேண்டும். அறிவு மட்டும் இருந்தால் பநன் இல்லை. அறிவின் பயன்அன்புகருணைஇரக்கம்.

 

"அறிவினால் ஆகுவது உண்டோபிறிதின்நோய்

தன் நோய்போல் போற்றாக் கடை".

 

என்பது திருக்குறள். 

 

            "பிறருக்கு வரும் துன்பத்தைத் தனது துன்பமாக ஒருவன் எண்ணவில்லையானால்அவனுக்கு உள்ள அறிவினால் என்ன பயன் விளையும்?" என்று திருவள்ளுவ நாயனார் ஒரு வினாவினை எழுப்பி,  "பயன் ஏதும் இல்லை" என்னும் விடையைப் பெற வைக்கிறார்.

 

            எனவே,அன்புகருணைஇரக்கம் என்பது நல்லறிவு உள்ளவர்களுக்கே வரும். அறிவில்லா முரடர்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது. எல்லா இடத்திலேயும் இரக்கம் காட்டுவதும் அறிவுடைமையாகாது.

 

            Misplaced sympathy is harmful.  "அவரவருடைய பண்புகளை அறிந்து உதவி செய்ய வேண்டும். பண்பில்லாதோருக்கு உதவி செய்வது தவறாகவே முடியும்" என்று,

 

"நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டுஅவரவர்

பண்பு அறிந்து ஆற்றாக் கடை"

 

என்னும் திருக்குறள் வழி காட்டினார் நாயனார்.

 

            "அவரவருடைய இயல்புகளை ஆராய்ந்து செயல்களைச் செய்யாவிட்டால்நல்ல உபாயத்தால் செயல்களைச் செய்வதிலும் தவறு உண்டாகும்" என்கின்றார் நாயனார்.

நல்ல உபாயமாவதுகொடுத்தலும்இனிய சொற்களைச் சொல்லுதலும் ஆகும். அவரவர் குணங்களை அறியாதுஉபாயத்திற்கு உரியவர் அல்லாதவரிடத்தில் செய்தல் தவறு.

 

             விடத்தை நீக்குவதில் வல்ல மருத்தவர் ஒருவர்ஒருநாள் காட்டு வழியே மூலிகைகளைத் தேடிப் போய்க்கொண்டு இருந்தார். ஒரு புலி விழுந்து கிடந்து உயிருக்குப் போராடிக் கொண்டு இருப்பதைப் பார்த்தார். சிறிது தூரத்தில் நாகப்பாம்பு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. நாகப்பாம்பு அந்தப் புலியைக் கடித்துவிட்டு ஓடிக் கொண்டிருந்தது என்றும் அதனால் அந்தப் புலி விஷம் ஏறி விழுந்து கிடக்கிறது என்றும் புரிந்து கொண்டார்.

 

             புலியின் நிலைமையைப் பார்த்து இரக்கப்பட்ட மருத்துவர்,  புலி நலம் பெற்று எழுந்தால் என்ன ஆகும் என்பதைச் சற்றும் சிந்திக்கவில்லை.  அறிவின் பயன் பிற உயிர்க்கு வந்த துன்பத்தைத் தனக்கு வந்ததாக எண்ண வேண்டும் என்று திருவள்ளுவர் சொல்லி விட்டார்அல்லவாஅன்பு உள்ள இடத்தில் அறிவு வேலை செய்யாது. மருத்துவர் மனிதப் பண்பு மிக்கவர். புலிக்கு உதவவேண்டும் என்னும் எண்ணமே அவரிடம் மேலோங்கி இருந்தது.  புலிக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். புலி பிழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை வந்தவுடன்மருத்துவர்,மூலிகைகளைத் தேடத் தொடங்கினார். சிறிது நேரத்தில் நலம் பெற்று எழுந்த புலிக்கு அடங்காப் பசி ஏற்பட்டது. புலியின் பார்வையில் மூலிகையைத் தேடிக் கொண்டிருந்த மருத்துவர் பட்டார். கொடிய மிருக சாதியான புலிக்கு நன்றி உணர்வு இருக்க வாய்ப்பு சிறிதும் இல்லை. மருத்துவர் மீது பாய்ந்து கடித்தது. விடத்தைத் தீர்த்து வைத்த வைத்தியர் தீர்ந்து போய்புலிக்கு உணவு ஆனார்.

 

             கருணை காட்டி உதவ வேண்டியதுதான். அறிவில்லாத தீயவர்களுக்கு இரக்கம் காட்டி உதவினால் தீமையே பலனாகக் கிடைக்கும். அறிவில்லாத தீயவர்களுக்கு இரக்கம் காட்டி உதவுவதுஉதவியவருக்கே தீமையாக முடியும் என்பது நடைமுறை உண்மை. தீயவர்களிடம் இருப்பது தீமைக் குணம் தான். அதைத் தான் அவர்கள் கைம்மாறாகத் தருவர்.

 

             அற்புதமான வேலைப்பாடமைந்த மண்கலத்தைக் கொண்டு போய் கல்லின் மேல் வேகமாக வைத்தால் என்ன ஆகும்?  கல்லின் இயல்பு கடினமானது. எனவே,மண்கலம் சுக்குநூறாக உடைந்து போகும். அது போலஅறிவில்லாத தீயவர்களுக்கு உதவி செய்வது மண்கலத்தைக் கல்லின் மேல் போட்டு உடைப்பதற்குச் சமம்.

 

            இந்த இரண்டு உண்மைகளை வைத்துஔவையார் பாடிய "மூதுரை" என்னும் நூலில் வரும் பாடல் உணர்த்துகின்றது.

 

"வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி

ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனாற்போல், ---பாங்குஅறியாப்

புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின்மேல் இட்ட கலம்".   

 

இதன் பொருள் ---

 

            வேங்கை வரிப் புலி நோய் தீர்த்த விடகாரி - வரிகளையுடைய வேங்கைப் புலியின் விடநோயைப் போக்கிய விடகாரி ஆகிய மருத்துவன்ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல் - அப்பொழுதே அப் புலிக்குஇரையானால் போலபாங்கு அறியா - நன்றியறிவு இல்லாதபுல் அறிவாளர்க்கு - அற்ப அறிவினருக்குசெய்த உபகாரம் - செய்யப்பட்ட உதவிகல்லின் மேல் இட்ட கலம் - கல்லின்மேலே போடப்பட்ட மண்கலம்போல அழிந்து போகும். (செய்தவனுக்கே துன்பத்தை விளைக்கும்.) 

 

            தீயோர்க்கு உதவி செய்தால் துன்பமே உண்டாகும் என்பது கருத்து.

 

             விஷகாரி என்னும் வடமொழி விடகாரி என்றாயிற்று. அதற்கு விடத்தை அழிப்பவன் என்பது பொருள். கல்லின் மேல் இட்டகலம் என்பதற்குக் கல்லின்மேலே தாக்கிய மரக்கலம். வேங்கை என்ற சொல் வரிப்புலியை மட்டுமே குறிக்கும்.

 

            புல்லர்களுக்கு உதவி செய்தால் உயிர்தான் போகும் என்கிறது "விவேக சிந்தாமணி" என்னும் நூல்.

 

"வல்லியம் தனைக் கண்டு அஞ்சி

     மரம் தனில் ஏறும் வேடன்

கொல்லிய பசியைத் தீர்த்து 

     இரட்சித்த குரங்கை கொன்றான்;

நல்லவன் தனக்குச் செய்த 

     நலம் அதால் உயர்வு உண்டாகும்;

புல்லர்கள் தமக்குச் செய்தால் 

     உயிர்தனைப் போக்கு வாரே."

 

இதன் பொருள் ---

 

     முன்னொரு காலத்தில் ஒரு புலியினைப் பார்த்துப் பயந்த வேடன் ஒருவன் மரத்தில் ஏறினான். அவனுக்கு உண்டாகி இருந்த கொடும் பசியை அந்த மரத்தில் இருந்த ஒரு குரங்கு தீர்த்து வைத்தது. தனது கடும்பசியைத் தீர்த்துத் தனது உயிரைக் காப்பாற்றிய குரங்கையே அந்த வேடன் கொன்று விட்டான். (வேடன் தொழிலே உயிர்களைக் கொல்வதுதானே. அவன் உள்ளத்தில் இரக்கம் இராது.) அதுபோலநன்றி கெட்ட அற்பருக்கு நன்மையைச் செய்தால்அவர்கள் அந்த நன்றியைக் கருதாமல்நன்றி செய்வரின் உயிரையும் போக்குவர். அற்பனுக்குச் செய்யும் உதவி தீமையைத் தரும். நற்குணம் உடைய ஒருவனுக்கு ஓர் உதவியைச் செய்தால்நன்மையானது மேன்மேலும் பெருகும்.

 

 

 

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...