அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முதலி யாக்கையும் (பொது)
முருகா!
'வானுலகை ஆள வாராய்' என அடியேனுக்கு அருளாய்.
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான
முதலி யாக்கையு மிளமை நீத்தற
மூவா தாரா காவா தாரா ...... எனஞாலம்
முறையி டாப்படு பறைக ளார்த்தெழ
மூடா வீடூ டேகேள் கோகோ ...... எனநோவ
மதலை கூப்பிட மனைவி கூப்பிட
மாதா மோதா வீழா வாழ்வே ...... யெனமாய
மறலி யூர்ப்புகு மரண யாத்திரை
வாரா வானாள் போநாம் நீமீ ...... ளெனவேணும்
புதல றாப்புன எயினர் கூக்குரல்
போகா நாடார் பாரா வாரா ...... ரசுரோடப்
பொருது தாக்கிய வயப ராக்ரம
பூபா லாநீ பாபா லாதா ...... தையுமோதுங்
குதலை வாய்க்குரு பரச டாக்ஷர
கோடா ரூபா ரூபா பாரீ ...... சதவேள்விக்
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
முதலி யாக்கையும், இளமை நீத்து அற
மூவா தாராகா ஆதாரா ...... என ஞாலம்
முறை இடாப் படு பறைகள் ஆர்த்து எழ,
மூடா வீடு ஊடே கேள் கோகோ ...... என நோவ,
மதலை கூப்பிட, மனைவி கூப்பிட,
மாதா மோதா வீழா, வாழ்வே ...... என மாய
மறலி ஊர்ப் புகும் மரண யாத்திரை
வாரா, வான் ஆள் போம் நாம், நீ மீள் ...... எனவேணும்.
புதல் அறாப் புன எயினர் கூக்குரல்
போகா நாடார் பாராவார ...... ஆர் அசுர் ஓடப்
பொருது தாக்கிய, வய பராக்ரம
பூபாலா! நீபா! பாலா! தா ...... தையும் ஓதும்
குதலை வாய்க் குருபர! சடாட்சர!
கோடா ரூப அரூபா, பார் ஈ, ...... சதவேள்விக்
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள்
கோவே! தேவே! வேளே! வானோர் ...... பெருமாளே.
பதவுரை
புதல் அறாப் புன எயினர் கூக்குரல் போகா நாடார் --- புதர்கள் நீங்காத மலைச் சாரலில் உள்ள கொல்லைகளில் இருந்து கூக்குரல் இடும் வேடர்களும்,
பாராவார ஆர் அசு(ர)ர் ஓடப் பொருது தாக்கிய வய பராக்ரம --- கடல் போலப் பெருக வந்த அசுரர் சேனைகளும் பயந்து ஓட, அவர்களுடன் போர் புரிந்து தாக்கி எதிர்த்த வெற்றிவீரரே!
பூபாலா --- பூமியைக் காப்பவரே!
நீபா --- கடப்பமலர் மாலை அணிந்தவரே!
பாலா --- குழந்தையே!
தாதையும் ஓதும் குதலை வாய்க் குருபர --- தந்தையாகிய சிவபரம்பொருளும் கற்கும்படி ஓதிய மழலைச் சொற்கள் நிறைந்த திருவாயை உடைய குருபரரே!
சடாட்சர கோடு ஆர் ரூபா --- ஆறெழுத்து வடிவமாக உள்ளவரே!
அரூபா --- வடிவம் இல்லாதவரே!
பார் ஈ --- உலகத்தை ஈந்தவரே!
சத வேள்விக் குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே --- நூறு அசுவமேத வேள்விகளை முடித்தவனும், வச்சிராயுதம் உடையவனும் ஆகிய அரசன் இந்திரனுடைய பொன்னுலகைக் காத்தருளிய தலைவரே!
தேவே --- கடவுளே!
வேளே --- செவேள் பரமரே!
வானோர் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
முதலி யாக்கையும் இளமை நீத்து அற மூவா --- உயிர் வாழ்க்கைக்கு முதன்மையான உடல் இளமை நீங்கி முதுமையை அடையும் வரை,
தாராக ஆதாரா என ஞாலம் முறை இடா --- வாழ்க்கைக்குப் பற்றுகோடாக இருந்தவரே (இப்பொழுது உயிர் உடலில் நீங்கியதே) என்று உலகவர்கள் முறையிட,
படு பறைகள் ஆர்த்து எழ --- ஒலிக்கின்ற பறைகள் ஆரவாரம் செய்ய,
மூடா --- பிணத்தைத் துணியால் மூடி,
வீடு ஊடே கேள் கோ கோ என நோவ --- வீட்டுக்குள்ளே உறவினர் கோகோ என்று கூச்சலிட்டு மனம் வருந்த,
மதலை கூப்பிட --- பிள்ளைகள் அழ,
மனைவி கூப்பிட --- மனைவி அழ,
மாதா மோதா வீழா வாழ்வே என --- தாய் (தலையிலும் மார்பிலும்) அடித்துக் கொண்டு விழுந்து, என் செல்வமே என்று அலற,
மாய மறலி ஊர்ப் புகும் மரண யாத்திரை வாரா --- எமனுடைய ஊருக்குச் செல்லும் மரண யாத்திரை எனக்கு வாரா வகைக்கு,
வான் ஆள் போ(ம்) நாம் --- அடியேன் போய் வானுலகை ஆள்வதற்கு,
நீ மீள் என வேணும் --- "நீ வா" என்று அருள் புரிய வரவேண்டும்.
பொழிப்புரை
புதர்கள் நீங்காத மலைச் சாரலில் உள்ள கொல்லைகளில் இருந்து கூக்குரல் இடும் வேடர்களும், கடல் போலப் பெருக வந்த அசுரர் சேனைகளும் பயந்து ஓட, அவர்களுடன் போர் புரிந்து தாக்கி எதிர்த்த வெற்றிவீரரே!
பூமியைக் காப்பவரே! கடப்பமலர் மாலை அணிந்தவரே! குழந்தையே! தந்தையாகிய சிவபரம்பொருளும் கற்கும்படி ஓதிய மழலைச் சொற்கள் நிறைந்த திருவாயை உடைய குருபரரே!ஆறெழுத்து வடிவமாக உள்ளவரே! வடிவம் இல்லாதவரே! உலகத்தை ஈந்தவரே! நூறு அசுவமேத வேள்விகளை முடித்தவனும், வச்சிராயுதம் உடையவனும் ஆகிய அரசன் இந்திரனுடைய பொன்னுலகைக் காத்தருளிய தலைவரே! கடவுளே! செவேள் பரமரே! தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
உயிர் வாழ்க்கைக்கு முதன்மையான உடல் இளமை நீங்கி முதுமையை அடையும் வரை, வாழ்க்கைக்குப் பற்றுகோடாக இருந்தவரே! இப்பொழுது உமது உயிர் உடலில் இருந்து நீங்கியதே என்று உலகவர்கள் முறையிட, ஒலிக்கின்ற பறைகள் ஆரவாரம் செய்ய, பிணத்தைத் துணியால் மூடி, வீட்டுக்குள்ளே உறவினர் கோகோ என்று கூச்சலிட்டு மனம் வருந்த, பிள்ளைகள் அழ, மனைவி அழ, தாய் தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு விழுந்து, 'என் செல்வமே' என்று அலற, எமனுடைய ஊருக்குச் செல்லும் மரண யாத்திரை எனக்கு வாரா வகைக்கு, அடியேன் போய் வானுலகை ஆள்வதற்கு, "நீ வா" என்று அருள் புரிய வரவேண்டும்.
விரிவுரை
முதலி யாக்கையும் இளமை நீத்து அற மூவா ---
உயிர் வாழ்க்கைக்கு முதன்மையாக இறையருளால் வாய்த்த இந்த உடல் இளமைத்த் தன்மையில் இருந்து சிறிது சிறிதாக மாறி, முதுமை நிலையை வந்து அடையும்.
தாராக ஆதாரா என ஞாலம் முறை இடா ---
தாரகம் --- கடப்பதற்கு உரிய கருவி.
ஆதாரம் --- பற்றுக் கோடு. நிலைக்களம்.
வீடு ஊடே கேள் கோ கோ என நோவ ---
"கூகா என என் கிளை கூடி அழ" என்று அடிகளார் கந்தர் அனுபூதியில் அருளியது காண்க.
மறலி ஊர்ப் புகும் மரண யாத்திரை வாரா ---
மறலி - இயமன்.
உயிரானது உடம்பை விட்டு இயமன் உலகுக்குச் செல்லுகின்ற யாத்திரை மரண யாத்திரை எனப்படும். "தொலையா வழி" என்பார் அருணகிரிநாதர்.
பாராவார ஆர் அசு(ர)ர் ஓடப் பொருது தாக்கிய வய பராக்ரம ---
பாராவாரம் - கடல். கடல் போலப் பெருகி வந்த அசுரர் சேனையைப் போர் புரிந்து தாக்கிய பராக்கிரமம் உடையவர் முருகப் பெருமான்.
தாதையும் ஓதும் குதலை வாய்க் குருபர ---
குதலை - மழலைச் சொல். இனிய மொழி.
சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணம் கூறுமாறு காண்க.
திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப் பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணிவிளக்கு என வெளிப்படுத்தினர்.
பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,
"அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.
எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.
சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழறவல்லேம்” என்றனர்.
கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருந் தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.
கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர் வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.
எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன். --- தணிகைப் புராணம்.
“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ
ஞான வார்த்தை அருளிய பெருமாளே." --- (ஆலமேற்ற) திருப்புகழ்.
“நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்” --- கந்தர்அநுபூதி
“தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே” --- (கொடியனைய) திருப்புகழ்.
மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த மதியாளா.... --- (விறல்மாரன்) திருப்புகழ்.
சிவனார் மனம் குளிர, உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர்செய் குருநாதா... --- திருப்புகழ்.
பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாதது; ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.
அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே. --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.
தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.
தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான். --- தணிகைப் புராணம்.
மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!
என்னும் திருவாசகப் பாடலாலும், சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.
அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.
திருக்கோவையாரிலும்,
தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.
என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.
வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே. --- திருமந்திரம்.
கனகம் ஆர் கவின்செய் மன்றில்
அனக நாடகற்கு எம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்.... --- குமரகுருபரர்.
பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே. --- அபிராமி அந்தாதி.
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. --- அபிராமி அந்தாதி.
சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே. --- சிவஞான சித்தியார்.
சடாட்சர கோடு ஆர் ரூபா ---
சடாட்சரம் - ஆறெழுத்து. அது "குமாராய நம" என்பது. ஆறெழுத்து வடிவமாக உள்ளான் பெருமான்.
கோடு - வளைவு. எழுத்துக்கள் வளைந்து வளைந்து உள்ளன.
கருத்துரை
முருகா! 'வானுலகை ஆள வாராய்' என அடியேனுக்கு அருளாய்.
No comments:
Post a Comment