பொது --- 1069. வருக வீட்டு எனும்

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

வருக வீட்டுஎனும் (பொது)


முருகா! விலைமாதரைப் போற்றாமல், 

தேவரீரைப் போற்றி உய்ய அருள்.


தனன தாத்தன தனன தாத்தன

     தானா தானா தானா தானா ...... தனதான


வருக வீட்டெனும் விரகர் நேத்திரம்

     வாளோ வேலோ சேலோ மானோ ...... எனுமாதர்


மனது போற்கரு கினகு வாற்குழல்

     வானோ கானோ மாயா மாயோன் ...... வடிவேயோ


பருகு பாற்கடல் முருகு தேக்கிய

     பாலோ தேனோ பாகோ வானோ ...... ரமுதேயோ


பவள வாய்ப்பனி மொழியெ னாக்கவி

     பாடா நாயே னீடே றாதே ...... யொழிவேனோ


அருகு பார்ப்பதி யுருகி நோக்கவொ

     ரால்கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ ...... வெனஏகி


அவுணர் கூப்பிட வுததி தீப்பட

     ஆகா சூரா போகா தேமீ ...... ளெனவோடிக்


குருகு பேர்க்கிரி யுருவ வோச்சிய

     கூர்வே லாலே யோர்வா ளாலே ...... அமராடிக்


குலிச பார்த்திப னுலகு காத்தருள்

     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.


                          பதம் பிரித்தல்


வருக வீட்டு எனும் விரகர், நேத்திரம்

     வாளோ? வேலோ? சேலோ? மானோ? ...... எனுமாதர்,


மனது போல் கருகின, குவால் குழல்

     வானோ? கானோ? மாயா மாயோன் ...... வடிவேயோ?


பருகு பாற்கடல் முருகு தேக்கிய

     பாலோ? தேனோ? பாகோ? வானோர் ...... அமுதேயோ?


பவள வாய்ப் பனி மொழி எனாக் கவி

     பாடா நாயேன் ஈடேறாதே ...... ஒழிவேனோ?


அருகு பார்ப்பதி உருகி நோக்க, ஒர்

     ஆல்கீழ் வாழ்வார் வாழ்வே! கோகோ ...... என ஏகி


அவுணர் கூப்பிட, உததி தீப் பட,

     "ஆகா சூரா! போகாதே, மீள்" ...... என ஓடிக்


குருகு பேர்க் கிரி உருவ ஓச்சிய

     கூர் வேலாலே, ஓர் வாளாலே ...... அமர் ஆடி,


குலிச பார்த்திபன் உலகு காத்து அருள்

     கோவே! தேவே! வேளே! வானோர் ...... பெருமாளே.

பதவுரை

அருகு பார்ப்பதி உருகி நோக்க --- பார்வதி தேவியார் அருகில் இருந்து உள்ளம் கசிந்து பார்க்க,

ஓர் ஆல் கீழ் வாழ்வார் வாழ்வே --- ஒப்பற்ற கல்லால மரத்தின் கீழே வீற்றிருப்பவராகிய சிவபரம்பொருளின் செல்வமே,

கோகோ என ஏகி அவுணர் கூப்பிட --- போர்க்களத்தில் அரக்கர்கள் கோகோ என்று கூச்சலிடவும்,

உததி தீப் பட --- கடல் தீப்பட்டு எரியவும்,

ஆகா சூரா போகாதே மீள் என ஓடி --- ஆஆ சூரனே ஓடிப் போகாதே இப்படி வா என்று ஓடி,

குருகு பேர்க் கிரி உருவ ஓச்சிய --- கிரவுஞ்சம் என்னும் பறவையின் பெயரைக் கொண்ட மலையை ஊடுருவும்படி விடுத்து அருளிய

கூர் வேலாலே ஓர் வாளாலே அமர் ஆடி --- கூரிய வேலாலும், ஒப்பற்ற வாளாலும் போர் புரிந்து,

குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே --- வச்சிராயுதத்தை உடைய தேவர் கோமகன் ஆன  இந்திரனுடைய பொன்னுலகைக் காத்து அருளிய தலைவரே!

தேவே --- கடவுளே!

வேளே --- செவ்வேள் பரமரே!

வானோர் பெருமாளே ---  தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

வருக வீட்டு எனும் விரகர் --- எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என அழைக்கும் திறமைசாலிகள்,

நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ எனும் மாதர் ---  கண்கள் வாளோ, வேலாயுதமோ, சேல் மீனோ, மானோ என்று வியக்கும்படியான விலைமாதர்களின்

மனது போல் கருகின குவால் குழல் --- மனதைப் போலக் கருநிறம் பொருந்தி உள்ள அடர்ந்த கூந்தல்,

வானோ கானோ மாயா மாயோன் வடிவேயோ --- வானில் உள்ள கருமேகமோ, காடோ, அழிவில்லாத திருமாலின் வடிவம் தானோ என்றும்,

பருகு பாற்கடல் முருகு தேக்கிய பாலோ --- உண்ணத்தக்க பாற்கடலில் உள்ள சுவை மிக்க பாலோ,

தேனோ பாகோ வானோர் அமுதேயோ பவளவாய் பனிமொழி எனா --- தேனோ, வெல்லமோ, தேவர்களிடம் உள்ள அமுதம் தானோ பவளம் போல் சிவந்த வாயினின்று எழும் குளிர்ந்த பேச்சுக்கள் என்றும்,

கவி பாடா நாயேன் --- கவிகளைப் பாடி அவர்களைப் போற்றுகின்ற அடி நாயேன்,

ஈடேறாதே ஒழிவேனோ --- ஈடேறாமல் அழிந்து போவேனோ?

பொழிப்புரை

பார்வதி தேவியார் அருகில் இருந்து உள்ளம் கசிந்து பார்க்க, ஒப்பற்ற கல்லால மரத்தின் கீழே வீற்றிருப்பவராகிய சிவபரம்பொருளின் செல்வமே!

போர்க்களத்தில் வந்த அரக்கர்கள் கோகோ என்று கூச்சலிடவும், கடல் தீப்பட்டு எரியவும், ஆஆ சூரனே ஓடிப் போகாதே இப்படி வா என்று ஓடி, கிரவுஞ்சம் என்னும் பறவையின் பெயரைக் கொண்ட மலையை ஊடுருவும்படி விடுத்து அருளிய கூரிய வேலாலும், ஒப்பற்ற வாளாலும் போர் புரிந்து, வச்சிராயுதத்தை உடைய தேவர் கோமகன் ஆன  இந்திரனுடைய பொன்னுலகைக் காத்து அருளிய தலைவரே!

கடவுளே! செவ்வேள் பரமரே! தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என அழைக்கும் திறமைசாலிகள் கண்கள் வாளோ, வேலாயுதமோ, சேல் மீனோ, மானோ என்று வியக்கும்படியான விலைமாதர்களின் மனதைப் போலக் கருநிறம் பொருந்தி உள்ள அடர்ந்த கூந்தல், வானில் உருவாகும் கருமேகமோ, காடோ, அழிவில்லாத திருமாலின் வடிவம் தானோ என்றும், உண்ணத்தக்க பாற்கடலில் உள்ள சுவை மிக்க பாலோ, தேனோ, வெல்லமோ, தேவர்களிடம் உள்ள அமுதம் தானோ பவளம் போல் சிவந்த வாயினின்று எழும் குளிர்ந்த பேச்சுக்கள் என்றும், கவிகளைப் பாடி அவர்களைப் போற்றுகின்ற அடி நாயேன், ஈடேறாமல் அழிந்து போவேனோ?

விரிவுரை

வருக வீட்டு எனும் விரகர் நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ எனும் மாதர் --- 

விரகர் - திறமைசாலிகள். தந்திரக்காரர்கள். 

நேத்திரம் - கண்கள். 

சந்தியில் நின்றுகொண்டு பொதுமகளிர், வழியோடு போகும் இளைஞர்கள் மீது கண்வலை வீசி, “வணக்கம்; உங்கள் வரவு நல்வரவு. உங்களைப் பார்த்ததே பரம சந்தோஷம். ஏன் நடுத்தெருவில் நின்று பேசவேண்டும்?  உங்கள் பாதம் பட்டால் போதும். இதோ என் வீடு. வாருங்கள். உள்ளே போவோம்’ என்று அழைப்பர்.

“இங்கு நின்றது என் வீடே வாரீர்   

 என்று இணங்கிகள் மாயா லீலா

 இன்ப சிங்கியில் வீணே வீழாது அருள்வாயே”    ---  (அங்கை மென்குழல்) திருப்புகழ்.

மனது போல் கருகின குவால் குழல் வானோ கானோ மாயா மாயோன் வடிவேயோ --- 

மாயம் புரிகின்ற பொதுமகளிரின் மனமானது இருண்டு கிடக்கும். அவர்கள் மனம் போலவே கூந்தலும் கருநிறம் கொண்டதாக உள்ளது.

பருகு பாற்கடல் முருகு தேக்கிய பாலோ தேனோ பாகோ வானோர் அமுதேயோ பவளவாய் பனிமொழி --- 

பாற்கடல் முருகு - பாற்கடலின் இனிமை.

உண்ணத்தக்க பாற்கடலில் உள்ள சுவை மிக்க பாலோ,


கவி பாடா நாயேன் ஈடேறாதே ஒழிவேனோ --- 


நெய்த்த சுரிகுழல் அறலோ?முகிலோ?

     பத்ம நறுநுதல் சிலையோ?பிறையோ?

     நெட்டை இணைவிழி கணையோ?பிணையோ?......இனிதுஊறும்

நெக்க அமுது இதழ் கனியோ?துவரோ?

     சுத்த மிடறு அது வளையோ?கமுகோ?

     நிற்கும் இளமுலை குடமோ?மலையோ?......அறவேதேய்ந்து


எய்த்த இடை அது கொடியோ?துடியோ?

     மிக்க திருஅரை அரவோ?ரதமோ?

     இப்பொன் அடிஇணை மலரோ?தளிரோ?......எனமாலாய்,

இச்சை விரகுடன் மடவார் உடனே,

     செப்ப மருளுடன் அவமே திரிவேன்,

     ரத்ந பரிபுர இருகால் ஒருகால் ...... மறவேனே.

என அடிகளார் பிறிதொரு திருப்புகழிலும் பாடி இருத்தல் காண்க.

பெண்களின் அழகைப் பலவாறு புகழ்ந்து பாடி, நரகத்துக்குப் போகின்றவர்கள், இறைவனைப் புகழ்ந்து பாடி சிவகதியை அடைய முயலவில்லையே என்று பட்டினத்தடிகள் இரங்கிப் பாடுகின்றார்.  


"நெறிதரு குழலை அறல் என்பர்கள்,

நிழல் எழு மதியம் நுதல் என்பர்கள்,

நிலவினும் வெளிது நகை என்பர்கள்,

நிறம்வரு கலசம் முலை என்பர்கள்,

அறிகுவது அரிது இவ் இடை என்பர்கள்,

அடிஇணை கமல மலர் என்பர்கள்,

அவயவம் இனைய மடமங்கையர்

அழகியர், அமையும், அவர் என் செய?


மறிமழு உடைய கரன் என்கிலர்,

மறலியை முனியும் அரன் என்கிலர்,

மதிபொதி சடில தரன் என்கிலர்,

மலைமகள் மருவு புயன் என்கிலர்,

செறிபொழில் நிலவு தி(ல்)லை என்கிலர்,

திருநடம் நவிலும் இறை என்கிலர்,

சிவகதி அருளும் அரசு என்கிலர்,

சிலர் நரகு உறுவர் அறிவு இன்றியே."      --- கோயில் நான்மணி மாலை.


குருகு பேர்க் கிரி உருவ ஓச்சிய கூர் வேலாலே ஓர் வாளாலே அமர் ஆடி --- 

குருகு - பறவை. இங்கு கிரவுஞ்சம் என்னும் பறவையைக் குறிக்கும்.

    கிரவுஞ்சம் என்பது உயிர்களின் சஞ்சிதம், பிராரத்தம்,   ஆகாமியம் ஆகிய மூன்று விதமான வினைகளின் தொகுதியைக் குறிக்கும்.

சூரபதுமன் அழியாத யாக்கையைப் பெற்றவன். வச்சிரம் போன்ற உடம்பு உடையவன். வச்சிர உடம்பு என்பது என்றும் அழியாது, பிறவிகள்தோறும் உயிருக்கு வந்து பொருந்துகின்ற ஆணவமலத்தைக் குறிக்கும்.

      சிங்கமுகாசுரன் என்பது உயிர்கள் இயற்றுகின்ற கன்மம் ஆகிய மலத்தைக் குறிக்கும். கன்மம் --- வினை அல்லது செயல். அது அறச் செயல், பாவச் செயல் என்று இருவகையாக இருக்கும். இச் செயல்கள் முறையே புண்ணியம் பாவம் ஆக மாறி, வினைத் தொகுதியில் சேரும்.

      இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

"வருசுரர் மதிக்க ஒரு குருகுபெயர் பெற்ற கன

வடசிகரி பட்டு உருவ வேல்தொட்ட சேவகனும்"

என்றார் வேடிச்சி காவலன் வகுப்பில் அடிகளார். 

        "மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அருணகிரிநாதர் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்றார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.

கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. அது பொன்மலை. பொன் யாரையும் மயக்கும். கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்

கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட 

தனி வேலை வாங்கத் தகும்."

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.

       "நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.

வாள் என்பதும் எம்பெருமான் முருகனுக்கு ஓர் ஆயுதம்.


குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே --- 

குலிசம் - வச்சிராயுதம். பார்த்திபன் அரசன். 

குலிசத்தை உடைய அரசன் என்பது தேவர்களின் தலைவனான இந்திரனைக் குறிக்கும். 


கருத்துரை

முருகா! விலைமாதரைப் போற்றாமல், தேவரீரைப் போற்றி உய்ய அருள்.






No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...