அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மகளு மனைவி (பொது)
முருகா!
மரண பக்குவ காலத்திலும்
உமது திருப்புகழைப் பாட அருள் புரிவாய்.
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன
தனன தனன தாத்தன ...... தனதான
மகளு மனைவி தாய்க்குல மணையு மனைவர் வாக்கினில்
மறுகி புறமு மார்த்திட ...... வுடலூடே
மருவு முயிரை நோக்கமு மெரியை யுமிழ ஆர்ப்பவ
ருடனு மியமன் மாட்டிட ...... அணுகாமுன்
உகமு முடிவு மாச்செலு முதய மதியி னோட்டமு
முளது மிலது மாச்சென ...... வுறைவோரும்
உருகு முரிமை காட்டிய முருக னெனவு நாக்கொடு
உனது கழல்கள் போற்றிட ...... அருள்தாராய்
புகல வரிய போர்ச்சிலை விரக விசைய னாற்புக
ழுடைய திருத ராட்டிர ...... புதல்வோர்தம்
புரவி கரிகள் தேர்ப்படை மடிய அரசை மாய்த்துயர்
புவியின் விதன மாற்றினர் ...... மருகோனே
மிகவு மலையு மாக்கடல் முழுது மடிய வேற்றுரு
வெனவு மருவி வேற்கொடு ...... பொருசூரன்
விரைசெய் நெடிய தோட்கன அடலு முருவ வேற்படை
விசைய முறவும் வீக்கிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மகளும், மனைவி, தாய், குலம் அணையும் அனைவர் வாக்கினில்
மறுகி, புறமும் ஆர்த்திட, ...... உடல் ஊடே
மருவும் உயிரை நோக்கமும், எரியை உமிழ ஆர்ப்பவர்,
உடனும் இயமன் மாட்டிட ...... அணுகாமுன்,
உகமு முடிவுமாச் செலும் உதய மதியின் ஓட்டமும்,
உளதும் இலதும் ஆச்சு என ...... உறைவோரும்,
உருகும் உரிமை காட்டிய முருகன் எனவும், நாக்கொடு
உனது கழல்கள் போற்றிட ...... அருள்தாராய்.
புகல அரிய போர்ச் சிலை விரக விசையனால் புகழ்
உடைய திருதராட்டிர ...... புதல்வோர் தம்,
புரவி கரிகள் தேர்ப்படை மடிய, அரசை மாய்த்து, உயர்
புவியின் விதனம் மாற்றினர் ...... மருகோனே!
மிகவும் அலையும் மாக் கடல் முழுதும் மடிய, வேற்று உரு
எனவும் மருவி, வேல் கொடு, ...... பொருசூரன்
விரைசெய் நெடிய தோன்,கன அடலும் உருவ, வேல்படை
விசையம் உறவும் வீக்கிய ...... பெருமாளே.
பதவுரை
புகல அரிய போர்ச் சிலை விரகு (அவ்) விசயனால் --- சொல்லுதற்கு அரிய, போருக்கு உரிய வில்லை உடையவனும், திறமை மிக்கவனும் ஆகிய அருச்சுனனால்,
புகழ் உடைய திருதராட்டிர புதல்வோர் தம் புரவி கரிகள் தேர்ப் படை மடிய --- புகழ் பெற்றிருந்த திருதராட்டிரனின் மக்களின் குதிரை, யானை, தேர்கள், காலாட் படைகள் யாவும் மடிய
அரசை மாய்த்து --- கௌரவர்களின் அரசை அழித்து,
உயர் புவியின் விதன(ம்) மாற்றினர் மருகோனே --- சிறந்த பூமியின் துன்பத்தை நீக்கியவரான திருமாலின் திருமருகரே!
மிகவு(ம்) அலையு(ம்) மாக் கடல் முழுது(ம்) மடிய --- அலைகள் மிக்கு இருந்த பெரிய கடல் முழுதும் மடிய,
வேற்று உரு எனவு(ம்) மருவி --- வெவ்வேறு உருவங்களை எடுத்து,
வேல் கொடு பொரு சூரன் --- வேற்படை ஏந்திப் போர் புரிந்த சூரபதுமனின், மாலைகளை அணிந்துள்ளதால் மணம் கமழ்கின்ற பருத்த தோள்களின் வலிமை கழியுமாறும்,
வேல் படை விசையம் உறவும் வீக்கிய பெருமாளே --- வேலாயுதப் படை வெற்றி கொள்ளுமாறும் விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!
மகளு(ம்) மனைவி, தாய், குலம் --- மகள், மனைவி, தாய் மற்றும் குலத்தில் உள்ளோர்களோடு,
அணையும் அனைவர் வாக்கினில் மறுகி --- வந்து கூடிய அனைவருடைய வாக்கிலும் கலக்கம் உண்டாகி,
புறமும் ஆர்த்திட --- ஊராரும் அலறிட,
உடலூடே மருவும் உயிரை நோக்கமும் --- உடலின் உள்ளே பொருந்தி உள்ள உயிரை எடுக்கும் நோக்கத்துடன்,
எரியை உமிழ ஆர்ப்பவர் உடனும் --- கண்களில் தீப்பொறி பறக்க ஆரவாரம் செய்பவர்ளுடன்,
இயமன் மாட்டிட அணுகா முன் --- இயமன் தனது பாசத்தால் என்னை மாட்டிட அணுகும் முன்னரே,
உகமும் முடிவுமாச் செலும் --- இந்த உலக வாழ்வு முடியும்படியாகச் செல்லுகின்ற,
உதய மதியின் ஓட்டமும் --- தோன்றி வருகின்ற இடைகலை நாடியின் ஓட்டமானது,
உளதும் இலதும் ஆச்சு என ---- உள்ளது என்றும், இல்லை உயிர் பிரியும் தருணம் வந்துவிட்டது என்றும்,
உறைவோரும் உருகும் உரிமை காட்டிய --- என்னோடு உறைகின்றவர்கள் மனம் உருகி அவரவரது உறவுமுறைகளைக் கூளிக் கொள்ளுகின்ற காலத்தில்,
முருகன் எனவு(ம்) நாக் கொடு உனது கழல்கள் போற்றிட அருள் தாராய் --- அடியேன் முருகா என்று அழைத்து, என் நாவால் தேவரீரது திருவடிகளைப் போற்றி வழிபட அருள் புரிவாயாக.
பொழிப்புரை
சொல்லுதற்கு அரிய, போருக்கு உரிய வில்லை உடையவனும், திறமை மிக்கவனும் ஆகிய அருச்சுனனால், புகழ் பெற்றிருந்த திருதராட்டிரனின் மக்களின் குதிரை, யானை, தேர்கள், காலாட் படைகள் யாவும் மடிய கௌரவர்களின் அரசை அழித்து, சிறந்த பூமியின் துன்பத்தை நீக்கியவரான திருமாலின் திருமருகரே!
அலைகள் மிக்கு இருந்த பெரிய கடல் முழுதும் மடிய, வெவ்வேறு உருவங்களை எடுத்து, வேற்படை ஏந்திப் போர் புரிந்த சூரபதுமனின், மாலைகளை அணிந்துள்ளதால் மணம் கமழ்கின்ற பருத்த தோள்களின் வலிமை கழியுமாறும், வேலாயுதப் படை வெற்றி கொள்ளுமாறும் விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!
மகள், மனைவி, தாய் மற்றும் குலத்தில் உள்ளோர்களோடு, வந்து கூடிய அனைவருடைய வாக்கிலும் கலக்கம் உண்டாகி, ஊராரும் அலறிட, உடலின் உள்ளே பொருந்தி உள்ள உயிரை எடுக்கும் நோக்கத்துடன், கண்களில் தீப்பொறி பறக்க ஆரவாரம் செய்பவர்ளுடன், இயமன் தனது பாசத்தால் என்னை மாட்டிட அணுகும் முன்னரே, இந்த உலக வாழ்வு முடியும்படியாகச் செல்லுகின்ற, தோன்றி வருகின்ற இடைகலை நாடியின் ஓட்டமானது, உள்ளது என்றும், இல்லை உயிர் பிரியும் தருணம் வந்துவிட்டது என்றும், என்னோடு உறைகின்றவர்கள் மனம் உருகி அவரவரது உறவுமுறைகளைக் கூளிக் கொள்ளுகின்ற காலத்தில், அடியேன் முருகா என்று அழைத்து, என் நாவால் தேவரீரது திருவடிகளைப் போற்றி வழிபட அருள் புரிவாயாக.
விரிவுரை
மகளு(ம்) மனைவி, தாய், குலம்.... உறைவோரும் உருகும் உரிமை காட்டிய ---
அந்தகன் வருகின்ற சமயத்தில், தாய், தம்பி, மனைவி, மைந்தர் முதலியோர் அனைவரும் உடலைக் காப்பாற்றும் கடன்களைத் தருவாரே அன்றி. உயிரைக் காப்பாற்ற ஒருவராலும் முடியாது. கூற்றுவனை ஒருவரும் தடுக்க வலியில்லாமல், வாளா வருந்துவர்.
"என்பெற்ற தாயாரும் என்னைப் பிணம்என்று இகழ்ந்துவிட்டார்,
பொன்பெற்ற மாதரும் 'போ'என்று சொல்லிப் புலம்பிவிட்டார்,
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம்உடைத்தார்,
உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே." --- பட்டினத்தார்
"நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத,
"என் அடியான் உயிரை வவ்வேல்" என்று அடல் கூற்று உதைத்த
பொன் அடியே பரவி, நாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின் அடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே." --- திருஞானசம்பந்தர்.
மரணம் நேருகையில் பொறிகலங்கி, புலனழிந்து, மயங்கியிருப்பார். நாடி உள்ளதா இல்லையா என்பது குறித்து கூடி உள்ளோர் அவரவர் போக்கில் பேசிக் கொண்டு இருப்பர். அந்த மரண பக்குவ காலத்தில், இறைவன் திருநாமத்தை வாழாரச் சொல்லி, அவனது திருப்புகழை வாயாரப் பாடுகின்ற பெருவாழ்வு இறையருளால் கிட்டவேண்டும் என்பது அடிகளாரின் விண்ணப்பம்.
சத்து ஆன புத்தி அது கெட்டே கிடக்க, நமன்
ஓடித் தொடர்ந்து, கயிறு ஆடிக் கொளும்பொழுது,
பெற்றோர்கள் சுற்றி அழ, உற்றார்கள் மெத்த அழ,
ஊருக்கு அடங்கல் இலர், காலற்கு அடங்க உயிர்
தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியின்
ஓலைப் பழம்படியினால் இற்று இறந்தது என, ...... எடும் என ஒடிச்
சட்டா நவப்பறைகள் கொட்டா, வரிச்சுடலை
ஏகி, சடம்பெரிது வேக, புடம் சமைய
இட்டே, அனற்குள் எரி பட்டார் எனத்தழுவி,
நீரில் படிந்துவிடு பாசத்து அகன்று, உனது
சற்போதகப் பதுமம் உற்றே, தமிழ்க்கவிதை
பேசிப் பணிந்து உருகு நேசத்தை இன்று தர, ......இனிவரவேணும்.
என்று பழநித் திருப்புகழில் அடிகளார் முருகப் பெருமானிடம் வைத்த விண்ணப்பத்தைக் காண்க.
உயர் புவியின் விதன(ம்) மாற்றினர் மருகோனே ---
விதனம் - வேதனை, வருத்தம். பாரதப் போரின் மூலம் பூபாரம் தீர்க்க வந்தவர் கண்ணபிரான்.
"நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி,
பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய்! புயல்வண்ணா!
கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி,
மாபாரதம் அகற்ற, மற்று ஆர்கொல் வல்லாரே?"
என்று சகாதேவன் கூற்றாக வில்லிபாரதம் கூறுமாறு காண்க.
வேற்று உரு எனவு(ம்) மருவி வேல் கொடு பொரு சூரன் ---
சூரபதுமன் பலவேறு உருவங்களை எடுத்துப் போரி புரிந்தான் என்பதை,
"வெம்புய லிடையில் தோன்றி விளிந்திடு மின்னு வென்ன
இம்பரில் எமது முன்னம் எல்லையில் உருவங் கொண்டாய்
அம்பினில் அவற்றை எல்லாம் அட்டனம், அழிவு இலாத
நம்பெரு வடிவங் கொள்வ நன்றுகண் டிடுதி என்றான்."
என்று கந்தபுராணம் கூறுமாறு காண்க.
கருத்துரை
முருகா! மரண பக்குவ காலத்திலும் உமது திருப்புகழைப் பாட அருள் புரிவாய்.
No comments:
Post a Comment