காமக் கடலைக் கடக்க உதவும் தெப்பம்

 


காமக் கடலைக் கடக்க உதவும் தெப்பம்

-----

மனைவியின் இலக்கணத்தை ஓர் அதிகாரத்தில், மனைவி இன்ன இன்ன குணங்கள் நிரம்பியவளாக இருக்கவேண்டும் எனத் திருவள்ளுவ நாயனார் வரையறுக்கிறார். சுருங்கிய குறட்பாவின் மூலம் ஆழமும் விரிவுமுள்ள கருத்துக்களை வழங்குகின்ற நாயனார் அந்த அதிகாரத்துக்கு "மனைவி" அல்லது "காதலி" என்று தலைப்புக் கொடுத்து இருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. மனைவி என்பவள் கணவனுக்குத் துணையாக அறத்தின் வழியே நின்று அறத்தை வளர்ப்பவள் என்பதை அறிவுறுத்த நல்ல தமிழ்த் தொடரை அமைத்து அருளி இருக்கின்றார். மனிதன் வாழ வேண்டும். நன்றாக வாழ வேண்டும். நன்றாக வாழ்வதற்கு மூலகாரணமாய் இருப்பது அறம். அறம் இல்லாவிட்டால் நன்றாக வாழ முடியாது. அறம் செய்ய வேண்டுமானால் துணை வேண்டும். நலமான வாழ்க்கைக்குத் துணையாக இருப்பவள் மனைவி. ஆதலால், அந்த அதிகாரத்துக்கு "வாழ்க்கைத்துணை நலம்" என்று பெயர் இட்டு அருளினார். தலைப்பிலிருந்தே மனைவியின் இலக்கணம் புலப்படும். 

மனிதனுக்கு உடம்பு ஆகிய புறக்கருவியும், மனம் ஆகிய அகக்கருவியும் இறைவன் அமைத்து இருப்பதே நல்ல முறையில் வாழவேண்டும் என்பதற்காக. நல்ல முறையில் வாழ்வதாவது அறநெறியில் வாழ்வது. அறநெறியில் வாழவேண்டுமானால் தனி மனிதனால் முடியாது. அதற்கு ஒரு துணையைத் தேடிக்கொள்ள வேண்டும். அந்தத் துணைதான் மனைவி. அற வாழ்க்கைக்குத் துணையாக இருப்பவள் அவள். அவளுடைய நலத்தைச் சொல்லும் அதிகாரம் அது.  துணையாக இருக்கிறவளுடன் நடத்தும் இல்வாழ்க்கையானது, அறம் பொருள் இன்பம் ஆகியவற்றைத் தந்து, வீடாகிய பேற்றைப் பெறவும் காரணமாகவும் அமையும்.

உலகில் பல மரம் செடி கொடிகள் இருக்கின்றன. மனித பரம்பரை வளர்வது போல, மரத்தின் பரம்பரையும் வளர வேண்டும். அது வளரவேண்டுமானால் விதை உண்டாக வேண்டும். விதை கீழே விழுந்து முளைக்க வேண்டும். இலையிலோ, கிளையிலோ, வேரிலோ நினைத்த இடத்தில் விதை உண்டாகும்படி இறைவன் செய்திருக்கலாம். அங்கெல்லாம் உண்டானால் யாரும் கவனிக்க மாட்டார்கள். எல்லோரும் கவனிக்கக்கூடிய இனிமையான பழத்திற்குள் வைத்திருக்கிறான். "பழத்தை நன்றாக உண்ணுங்கள். விதையை வீசி எறந்து விடாதீர்கள். விதையை நல்ல இடத்தில் புதைத்தால் அது போன்ற சுவை மிக்க பழங்களைத் தரும் மரம் வளரும்"  என்பதைப் போல ஆண்டவன் வித்து நடுவதாகிய கடமையை, பழத்தைத் தின்பதாகிய இன்பத்தோடு சேர்த்து வைத்திருக்கிறான். அறத்தை வளர்க்கும் வேலைக்கு முன்கூட்டியே,  பழத்தை இறைவன் கூலியாகக் கொடுக்கிறான். 

நன்றாக இவ்வுலகத்தில் வாழ்க என்று நல்ல உடம்பைக் கொடுத்து அனுப்புகிறான் இறைவன். மலருக்கும்,  மலத்திற்கும் வேறுபாடு காணாமல் நல்ல ஞானிபோலவே குழந்தை பிறக்கிறது. ஆனால் அது வளர்ந்து,  பலவகைத் தொழில் புரிந்து,  அல்லாதன புரிந்து, நோயையும் நொடியையும் பெற்று வருந்துகிறது. மனிதனுக்கு எப்பொழுதும் நல்லதையே முன்னால் கொடுக்கிறான். கடமையை மாத்திரம் செய்யச் சொன்னால் மனிதன் செய்ய மாட்டான். "கோயிலுக்குப் போ" என்றால் போகமாட்டான். பிரசாதம் அல்லது உணவு கொடுக்கின்றார்கள் என்றால் ஓடுவான். பிரசாதம் அல்லது உணவு கிடைக்கும் வரையிலாவது கோயிலில் இருப்பான். மனிதனுக்கு எப்பொழுதும் இன்பத்தில் ஆசை. ஆகவே இறைவன் கடமையைச் செய்வதில் இன்பத்தையும் பிணைத்து வைத்திருக்கிறான். 

பரம்பரை வளர நாம் உலகில் வாழ்கிறோம். நாம் வாழ்வது போல உலகம் வாழவேண்டும். தொடர்ந்து மனித பரம்பரை வளர வேண்டும். பரம்பரை நல்ல முறையில் வளர வேண்டுமானால் வித்து இடுவது என்ற கடமை நல்ல முறையில் நடக்க வேண்டும். இன்பம் இல்லாவிட்டால் யாரும் கடமையைச் செய்யமாட்டார்கள். சுவை மிக்க பழத்திற்குள்ளே விதையை வைத்தாற்போல, மனித பரம்பரையின் வளர்ச்சிக்கான வித்தைக் காம இன்பத்திற்கு இடையே வைத்தான் இறைவன். முறைப்படி வாழ்ந்தால் அறத்தைச் செய்யலாம். காமத்தை அனுபவிக்கலாம். 

காமத்தின் முடிவு, பரம்பரை அறத்தைக் காப்பாற்றுவது. தசரதன் அறுபதாயிரம் மனைவியரோடு வாழ்ந்தவன். இருந்தாலும் பிள்ளைப் பேறு இல்லை. தன் குடும்பத்திற்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற நினைப்பைக் காட்டிலும், உலகம் ஆகிய குடும்பத்திற்கு ஒரு குழந்தை வேண்டும் என்று அவன் நினைக்கிறான். "நான் அறுபதினாயிரம் ஆண்டு செவ்வனே இவ்வுலகத்தைக் காத்துவிட்டேன். எனக்குக் குறை ஒன்றும் இல்லை. என் காலத்திற்குப் பிறகு,  இவ்வுலகைக் காப்பவர் இல்லாமையால், இவ் வையகம் கலங்கி விடுமே என்கிற கலக்கம் மனதில் உண்டாகிறது"  என்கிறான். 

"அறுபதினாயிரம் ஆண்டு மாண்டு உற

உறுபகை ஒடுக்கி இவ் உலகை ஓம்பினேன்;

பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்

மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு அரோ".   --- கம்பராமாயணம்.

மதுரைச் சொக்கநாதப் பெருமான் மீது அன்பு வைத்து இருந்தவர் தருமி என்ற ஆதிசைவர். அவர் பிரம்மச்சாரி. தாய்தந்தை இல்லாதவர். அவருக்குத் திருமணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. அதற்கு வேண்டிய பொருள் அவரிடத்தில் இல்லை. பாண்டியன் தனது கருத்தைத் தெரிவிக்கும் கவியை இயற்றுபவருக்கு ஆயிரம் பொன் தருவதாகச் சொல்லி ஒரு கிழியைக் கட்டித் தொங்கவிட்டிருந்தான். தருமிக்குக் கவிதை பாட வராது. அவர் இறைவனிடம் போய்,  முறையிடுகின்றார்.

"நெடிய வேதநூல், நிறைய ஆகமம்

முடிய ஓதிய முறையில் நிற்பு எனும்

வடுஇல் இல்லற வாழ்க்கை இன்றி, நின்

அடி அருச்சனைக்கு அருகன் ஆவனோ"   --- திருவிளையாடல் புராணம்.

"உயர்ந்த வேத நூல்கள் முழுதும், ஆகமங்கள் முழுதும் ஓதி அறிந்த முறையில் பிரமச்சரியத்தை மேற்கொண்டு இருக்கின்றேன். ஆனாலும், குற்றமில்லாத இல்லற வாழ்க்கை இல்லாமல்  தேவரீரின் திருவடியை அருச்சிப்பதற்கு உரிமை உள்ளவன் ஆகமாட்டேனே". என்று சோமசுந்தரப் பெருமான் திருமுன் அழுது அரற்றி,  "அரசன் கட்டித் தொங்க விட்டிருக்கும் பொன் எனக்குக் கிடைக்கும்படியாகத் திருவருள் புரியவேண்டும்" என்று முறையிட்டார். இல்லற நெறியில் நிற்பவர்தான் இறைவனுக்குப் பூசை செய்யும் அருகதை உள்ளவர் என்பது இதனால் தெரியவரும். அது மட்டுமல்ல. இறைவனுக்குத் தொண்டு செய்கின்ற பரம்பரை தன்னோடு முடிந்து போய்விடக் கூடாது என்னும் கவலையும் கூட தருமிக்கு இருந்தது. அவருடைய நியாயமான கவலையை இறைவன் மாற்றி அருளினார் என்பது புராண வரலாற்றின் மூலம் அறியவரும்.

தசரதன் விருப்பமும் தருமியின் விருப்பமும் தாம் செய்த அறம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே. அதற்குப் பிள்ளைப் பேறு வேண்டும். அதற்கு மனைவி வேண்டும். அறத்திற்குத் துணையாக நிற்பவள் மனைவி. அப்படி இல்லாமல் தனது காமத்தை மாத்திரம் தீர்ப்பவளாக ஒருவன் மனைவியை வைத்துக் கொண்டால், தாசியை வைத்துக் கொண்டது போன்றதுதான். காமம் அல்லது இன்பம், கடமையைச் செய்வதற்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கடமையை மறப்பதற்குக் காரணமாக இருத்தல் ஆகாது. மனைவி என்பவள் அழகாய் இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் சொல்லவில்லை. அழகாக இல்லாத பெண்கள் திருமணம் ஆகாமலேயே நின்று விடுவதில்லை. அழகு என்பது கண்ணுக்குக் கண் வேறுபடும். ஒருவன் கண்ணுக்கு அழகற்றவளாய்த் தோன்றுபவள், மற்றவன் கண்ணுக்கு அழகாகக் காட்சி அளிப்பாள். 

இளமைக் காலம் மட்டுமல்ல. முதுமை வந்தபோதும், கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் அன்பு பூண்டு இருந்தால், அதுதான் உண்மைக் காதல்; பருவம் கடந்தும் பசுமையாக நிலவும் உண்மையான அன்பு. உடம்பு முதிர முதிர அழகு தேயும். செல்வமும் நாளடைவில் தேயும். ஆனால் இந்த அன்பு மாத்திரம் உடம்பு தளரத் தளர வளரும். 

காமம் என்பது கடலைப் போன்றது. "காமக் கடல்" என்றுதான் திருவள்ளுவ நாயானார் சொல்லுகின்றார். "வெங் காம சமுத்திரம்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். கடலுக்குக் கரை இல்லை. வெங்காமம் என்னும் கடலுக்கும் கரை இல்லை. மனைவி மறைந்த பின்னும் மற்றோர் திருமணம் செய்து கொள்ளுகின்றவர்களைப் பார்க்கின்றோம். பேரரசர் ஆகிய தசரதர் அறுபதினாயிரம் மனைவிகளை மணந்து கொண்டவர்.  இது காமத்தின் இயற்கை. விசுவாமித்திரர் முதலிய பெரிய முனிவர்களும் காமத்தினால் அல்லற்பட்டார்கள். புறத் தோற்றத்தைக் கண்டு, தோலைக் கண்டு, மூக்கு, விழியைக் கண்டு ஏமாந்து போகிறவனுக்குக் காமம் பரவுவதற்குக் காரணம் அந்தத் தோற்றமே. 

அந்தக் காமம் என்னும் கடல், மையல் செய்யும் மங்கையரின் உறுப்புக்களில் பரவிக் கிடக்கிறது என்கிறார் அருணகிரிநாதர். "சித்ர மாதர் அல்குல் படத்தில், கழுத்தில், பழுத்த செவ்வாயில், பணையில், உந்தித் தடத்தில், தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரம்" என்கின்றார்.

"காமம்" என்பதற்கு இரண்டு விதமான பொருள் உண்டு. ஒன்று தீயது; மற்றொன்று நல்லது. தீயது மையல்.  நல்லது காதல். பொதுவாகக் காமம் என்ற சொல் பழைய நூல்களில் அன்போடு கூடிய காதலுக்கே வழங்கப்பட்டது. உறுதிப் பொருள்களுக்கு இலக்கணம் வரைந்த திருவள்ளுவர் "காமத்துப் பால்" என்றே பெயர் வகுத்திருக்கிறார். காமம் என்பதற்குத் தவறான பொருள் மட்டுமே வழங்கியிருந்தால், "இன்பத்துப் பால்" என வைத்திருக்கலாம். அப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் இக்காலத்தில் சிலர் சொல்கிறார்கள்.  காமம் என்பதற்குத் தவறான பொருள் இப்போது ஏற்பட்டு விட்டதால் அப்படிச் சொல்கிறார்கள். 

அன்புடைய காமம் காதல்.  அது நல்ல காமம். தீயது வெங்காமம்  எனப்படும் கொடுமையான காமம். புறக்கண்களால் வெறும் உடல் அழகை மாத்திரம் பார்ப்பதனால் எழுவது வெங்காமம். குணநலங்களைப் பார்க்கும் பார்வை வெங் காமத்துக்கு இல்லை. சீதாபிராட்டியை இராமனும் பார்த்தான்; அவளும் அவனைப் பார்த்தாள். இருவரும் கண்களாகிய வாசல் வழியே நுழைந்து ஒருவர் உள்ளத்தை ஒருவர் தொட்டுப் பார்த்துக் கொண்டார்கள். இது காம நோக்கு. வெங்காம நோக்கு அல்ல.

"பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து.

ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்.

வரி சிலை அண்ணலும் வாள்கண் நங்கையும்.

இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்". --- கம்பராமாயணம்.

"சித்ரமாதர்" என்கிறார் அருணகிரிநாதர். அலங்காரமான பெண்கள் என்று பொருள். தன் நாயகனுக்கு மாத்திரம் இன்பம் அளிக்க அலங்காரம் பண்ணிக் கொள்ளும் பெண்ணின் அழகு பிறர் கண்களில் படாது. பிறர் கண்களில் படவேண்டும் என்றே தம்மை அலங்காரம் பண்ணிக் கொண்டு,  ஆடவர் உள்ளங்களை மயக்கிக் கவரும் சித்திர மாதர்கள் உள்ளனர்.  அத்தகைய சித்திர மாதர் மேனி முழுவதும் வெங்காம சமுத்திரம் படர்ந்திருக்கிறது என்கிறார் அருணகிரிநாதர். அவர் கற்புடைய பெண்களைக் குறிக்கவில்லை. பிறர் கண்ணில் பட்டும் மையல் செய்யாத கற்புடைய மங்கையர்களுடைய அழகு அவர்களுடைய கணவர்களுக்கு மட்டுமே குளிர்ச்சியையும் இன்பத்தையும் அளிக்கும். கடல் பரவிக் கிடக்கின்றது என்றாலும் அதில் ஒரு துளியாவது மனிதனுடைய தாகத்தை அடக்காது. கடல் நீரைப் பருகப் பருகத் தாகந்தான் அதிகமாகும். அதைப்போல வெங்காமத்தை அனுபவிக்க அனுபவிக்க மேலும் மேலும் தாகம் உண்டாகும்.  காமம் மேலும் வளரும். அந்தக் காமக்கடல் புறப் பார்வையில் படும்படியாகச் சித்திர மாதர்களுடைய உறுப்புக்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தன் புறக் கண்களால் இந்த அழகைப் பார்த்து மனத்தை இழப்பவன், அக்கடலுள் மூழ்கித் துன்புறுகிறான். வாழ்நாளை வீணாக்கிக் கொண்டு ஆழ்ந்து போகிறான். அந்தச் சமுத்திரத்தை அருணகிரிநாதர் தாம் ஏளிதாகவே கடந்து விட்டதாகச் சொல்கிறார்.

சமுத்திரத்தைக் கடக்க வேண்டுமானால் தெப்பம் வேண்டும். தெப்பம் ஏது?  என்றால்,  "கடத்தில் குறத்தி பிரான் அருளால் கலங்காத சித்தத் திடத்தில் புணை என யான் கடந்தேன்" என்கின்றார் அருணகிரிநாதர். காமத்தை வெல்லக் காமத்தை வென்றவன்தான் வழி காட்ட முடியும். குறமகள் வள்ளியை நாடித் தேடிச்சென்று திருமணம் புணர்ந்த முருகப் பெருமான் திருவருள் என்னும் தெப்பம் தனக்குத் துணையாக வாய்த்தது என்கின்றார். வள்ளித் திருமணம் என்பது, காமத் திருமணம் அல்ல.  அது ஞானத் திருமணம். பக்குவப் பட்ட ஆன்மாவைத் தேடிச் சென்று இறைவன் அருள் புரிந்த வரலாற்றைக் குறிப்பால் உணர்த்துவது அது. இறைவன் மாசு இல்லாத அடியார்களைத் தேடிச் சென்று ஆட்கொண்டு அருள்வான். "மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே, அங்ஙனே நின்று வாழும் மயில் வீரன்" என்று முருகப் பெருமானைக் காட்டுகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

கற்பில் சிறந்த பெண்களைக் காணும்போது காம உணர்வு தலைக் காட்டாது. ஆண்களுடைய பெயர்களுக்குப் பிறகு செட்டியார், ரெட்டியார், முதலியார், ஐயர் என்ற பட்டங்கள் இருக்கின்றன. ஆனால் பெண்கள் பெயர்களுக்குப் பின் எந்தச் சாதிக்காரர்களாக இருந்தாலும் "அம்மாள்" என்ற பட்டமே உள்ளது. லட்சுமி அம்மாள், சரசுவதி அம்மாள், பாகீரதி அம்மாள் என்று எந்தப் பெண்மணியாக இருந்தாலும் அம்மாள் என்று அழைப்பதே வழக்கம். அண்ணன் தனது தங்கையை 'அம்மா' என்றே அழைக்கும் பாங்கும் இருந்தது.  தந்தையும் தனது மகளை, 'அம்மா' என்றே அழைப்பார். மனைவியைத் தவிர மற்ற பெண்கள் எல்லாரும் அம்மாவே. காமத்தை வெல்ல வேண்டியவர்கள் உலகிலுள்ள பெண்களைத் தாயாகப் பார்க்க வேண்டும். தாயாகப் பழக வேண்டும். தாயிடம் பேசுவது போலப் பேசவேண்டும். பெண்டாட்டி என்ற சொல்லுக்கு இயல்பான பொருள் பெண் என்பதுதான். அதற்கு இப்போது மனைவி என்ற பொருள் வந்துவிட்டது. மனைவி ஒருத்தியைத்தான் பெண்ணாகக் கண்டார்கள்.  மற்றவர்களைத் தாயாகப் பார்த்தார்கள். 

திருவள்ளுவர், பேராண்மை என்று சொல்கிறார். இதற்கு வீரம் என்றும் பொருள். மனிதன்,  அகவீரம், புறவீரம் என்று இரண்டு விதமான வீரம் உடையவன்.  உடம்பின் ஆற்றலால் தன்னை எதிர்க்கின்றவர்களோடு போராடி வெல்வது புறவீரம். அகவீரம் என்பது காமத்தை வெல்லும் வீரம். உலகிலுள்ள பெண்களைத் தாயாகப் பாவித்து, தன் உள்ளத்தில் எழுகின்ற வெங்காமத்தைப் பொசுக்கி வெல்கின்ற வீரமே அகவீரம். "புலன் ஐந்தும் வென்றான்தன் வீரமே வீரம்" என்பார் ஔவைப் பிராட்டியார்.

அகப் பகையை வென்றவர்கள் முனிவர்கள். புறப் பகையை அடக்கும் ஆண்மை உடையவர்களுக்கும், வீரம் மிக்கவர்களுக்கும் உட்பகையாகிய காமத்தை அடக்குவது அருமை. புறப்பகையை அடக்க ஆண்மை வேண்டுமென்றால் அகப்பகையை அடக்கப் பேராண்மை வேண்டும். அகப்பகையை வென்றவர் மாபெரும் வீரர். திருவள்ளுவ நாயனார், "பிறன்மனை நோக்காத பேராண்மை" என்கின்றார்.  

மணிவாசகப் பெருமான் அருளிய திருக்கோவையாரில் ஓர் அருட்காட்சி. ஒரு பெண் ஒர் ஆடவனிடம் தன் மனத்தைப் பறிகொடுத்து விட்டாள். ஆனால் வேறொருவனுக்கு அவளை மணம் செய்விக்க அவளுடைய பெற்றோர்கள் முடிவு செய்தார்கள். தோழியின் மூலம் தன் எண்ணத்தை அந்தப் பெண் தன் பெற்றோர்களுக்கு உணர்த்தச் சொன்னாள். 'இந்தப் பிள்ளை வேண்டாம். இவனைவிட வேறு ஒரு நல்ல ஆடவன் வருவான்' எனத் தோழியும் குறிப்பாக உணர்த்தினாள். அவர்கள் கேட்கவில்லை. பெற்றோர்கள் முடிவுப்படி அந்தப் பெண் வேறு ஒருவனை மணந்துகொண்டால் அவள் கற்பு இழந்தவளாகி விடுவாள். அதைவிட அவள் உயிரை இழந்துவிடலாம். தோழி,  "நீ இந்த அறம் மறந்த ஊரில் இருக்கவேண்டாம். உன் தலைவனோடு இரவுக்கு இரவாகவே வேறு எங்காவது போய் விடு"  என்று சொல்லி, அவள் காதலனுக்கும் தெரிவித்தாள். தோழியின் யோசனைப்படியே அந்தப் பெண் தன் காதலனுடன் போய்விட்டாள். விடிந்து,  வீட்டில் உள்ளவர்கள் எழுந்து பார்த்தபோது பெண்ணைக் காணவில்லை. தேடினார்கள். அகப்படவில்லை. தோழியைக் கேட்டார்கள். "நான்தான் அப்பொழுதே குறிப்பாகச் சொன்னேனே. அவளுக்கு முன்பே ஒரு காதலன் இருக்கிறான். அதைத் தெரிந்து கொள்ளாமல் வேறோர் ஆடவனுக்கு மணம் செய்விக்க நினைத்தீர்கள். அவள் தனது கற்பை இழக்கத் துணியவில்லை" என்று சொன்னாள். தன் உயிரினும் சிறந்த பெண் வீட்டை விட்டே போய் விட்டாள் என்றவுடன் பெண்ணின் தாய்க்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று. அவளை வளர்த்த செவிலித்தாய், "நான் போய்த் தேடிப் பார்த்து அவளை அழைத்து வருகிறேன் பார்" என்று சொல்லி வீட்டை விட்டுப் புறப்பட்டாள். மரம் இல்லாத பாலைவனத்தின் வழியே அவள் போய்க் கொண்டிருந்தாள். அப்போது கொஞ்ச தூரத்தில் அவளுக்கு முன்னால் ஒரு பெண்ணும் ஒர் ஆணும் வருவது தெரிந்தது. 'நம் மகள்தான் வருகிறாள் போலிருக்கிறதே. உடன் வரும் அந்த ஆடவன்தான் அவள் காதலனோ' என்று நினைத்தாள். "அவர்கள் என் பெண்ணும் அவள் காதலனுமாக இருக்கக்கூடாதா என்ற ஆசை அவள் நெஞ்சில் துடித்தது. வேறு யாரோ இரண்டு பேர்கள் ஆணும் பெண்ணுமாக வந்தார்கள். அப்பெண் அவள் பெண்ணைப் போலவே இருந்தாள். உடனே அவர்களிடம், அவர்களை அப்படி எதற்காகப் பார்த்தாள் என்பதைச் சொல்கிறாள். "என் பெண்ணும் அவளுடைய காதலனும் என்று எண்ணிப் பார்த்தேன். அவர்களும் இப்படியேதான் இருப்பார்கள். அவர்கள்தான் மீண்டும் வந்துவிட்டார்கள் என்று எண்ணி மகிழ்ந்தேன்.  நீங்கள் இந்த வழியாகவேதானே வந்தீர்கள்? உங்களுக்கு முன்னே உங்களைப் போலவே இரண்டு பேர் போனார்களா?"  என்று கேட்கிறாள். அவர்களுக்கு எதிரே இருவர் போனதுண்டு. அதைச் சொல்ல அந்த ஆடவன் முந்துகிறான். கண்டதைச் சொல்ல வேண்டும் அல்லவா? 

"தில்லையில் இருக்கின்ற என்னையும் ஒரு பொருளாக் கருதி ஆட்கொண்ட தில்லையம்பலப் பெருமானுக்கு உரிய மலையில் வாழும் சிங்கத்தைப் போல இருந்த ஒரு வீரனைக் கண்டேன்" என்று சொன்னான். பார்த்ததைச் சொல்ல வேண்டும். பாட்டியோ இரண்டு பேர்களைப் பார்த்தாயா என்று கேட்கிறாள். அவனோ பெண்ணைப் பற்றிச் சொல்லவில்லை. " ஆண்டான் அருவரை ஆளி (சிங்கம்) அன்னானைக் கண்டேன்"  என்று சொல்கிறான். அந்த அம்மாள் தேடி வந்தது தன் பெண்ணை, ஆனால் இவன் ஆணைக் கண்டேன் என்கிறான். அவன் ஏன் அப்படிச் சொன்னான்? ஆடவனைத்தான் அவன் பார்த்தான். பார்த்ததைச் சொல்லிவிட்டான். ஆனால் அவளை இவன் பார்க்கவில்லை. தான் பார்க்காததை அவன் சொல்லவில்லை. அந்தச் செவிலியின் உளம் குளிர வேண்டுமே. அந்தப் பெண்ணை இவன் காதலி பார்த்திருப்பாள். அவளைச் சொல்லும்படி சொல்கிறான். "வேறு பெண்ணையே பார்க்காதவன் என்றால் அவனிடம் எதிரே நின்று இத்தனை நேரமும் பேசுபவள் பெண்தானே? அவளைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டுதான் பேசினானோ?” என்று கேட்கத் தோன்றும். அவன் எதிரே நின்றவளைப் பெண்ணாகப் பார்க்கவில்லை. தாயாகப் பார்த்தான். அது எப்படித் தெரிகிறது? " தூண்டா விளக்கு அனையாய், என்னையோ அன்னை சொல்லியதே?” என்றுதான் தான் காதலியை நோக்கி அவன் சொன்னான்.  இப்படித் தன் மனைவி ஒருத்தியையே பெண்ணாகவும், மற்றவர்களை எல்லாம் தாயாகவும் பார்க்கும் தமிழரின் பண்பட்ட மரபை மணிவாசகப் பெருமான் "திருக்கோவையார்" என்னும் அருள் நூலில் ஓர் அருட்காட்சியாகவே காட்டுகின்றார். புறத் தோற்றத்தைக் கண்டு, பொறிகளின் வயப்பட்டு அறிவு இழந்து வெங்காம சமுத்திரத்திலே ஆழ்ந்து போகின்றவர்கள், அதில் இருந்து மீள வேண்டுமானால் அவர்களுடைய பார்வை மாற வேண்டும். 

முருகப் பெருமானைத் தந்தையகவும், வள்ளிநாயகியை தாயாகவும் பார்த்துப் பார்த்துத் தியானம் செய்து காமத்தை வெல்லலாம் என்கின்றார் அருணகிரிநாதர். சிவப்பிரகாசர் இந்தக் கருத்தைச் "சோணசைல மாலை" என்னும் அருள் நூலில் இவ்வாறு பாடுகிறார். 

"கண்புனல் துளிப்ப அழல்படும் இழுதின்

      கரைந்துஉகு நெஞ்சில், நின் தனையே

பெண்பயில் உருவமொடு நினைந்து, எனது

      பெண்மயல் அகற்றும் நாள் உளதோ"

"திருக்கயிலை நாயகனே, கண்கள் நீர் பொழிய நெருப்பில் இட்ட வெண்ணெய்போல் கரைந்து உருகும் எனது நெஞ்சில் தேவரீரை, உமது திருவருளாகிய சத்தியோடு நினைந்து, எனது பெண்ணாசையைத் துறக்கும் நாள் எந்நாளோ" என்று ஏங்குகின்றார். அருணகிரிநாதர், வெங்காம சமுத்திரத்தைக் கடக்கத் தமக்கு அருளியவன் காட்டிலுள்ள குறத்தியின் தலைவன் என்றார். முருகன் என்று சொல்லாமல், வள்ளிமணாளன் என்கின்றார்.

முருகனுக்குக் குமாரன் என்ற பெயர் உண்டு. மாரன் என்பது மன்மதனுக்குப் பெயர். காம உணர்ச்சியை எழுப்புகிறவன் மாரன் ஆகிய மன்மதன். குமாரன் என்பதற்கு மாரனைக் குற்சிதம் (அருவருப்புக் கொள்ளச்) செய்யும் பேரழகு உடையவன் என்பது பொருள். தியான நிலையில் இருந்த சிவபெருமான் மீது மன்மதன் மலரம்பை விட்டுத் தியானம் கலையச் செய்தான். நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனையே சுட்டெரித்தார் சிவபிரான். பிறகுதான் பார்வதி திருமணம் நிகழ்ந்தது. பின்பே முருகப் பெருமானின் அவதாரம். ஆகவே, முருகன் பிறப்பதற்கு முன் மன்மதன் அழிந்தான். குமாரன் அவதரிக்கும் முன்பே மார தகனம் நடந்தது. குமாரன் எங்கே இருக்கிறானோ அங்கே மாரனுக்கு வேலை இல்லை. குமாரனுடைய அருள் இருந்தால் மாரனை வென்று விடலாம். 

உலகத்தில் சித்திர மாதர் மையல் வலைப்பட்டு, மனம் அழிந்து, பலர் துன்பத்தில் துவளுவதைப் பார்த்து வருந்தி, தாமே துன்பப்படுவது போல வாடி, "இனி எனக்குத் துன்பம் இல்லை. நான் காட்டிலுள்ள குறமகளாகிய வள்ளிநாயகனின் அருளினால் உண்டான சித்த உறுதியையே தெப்பமாகக் கொண்டு சித்திர மாதர்களின் மேனி எல்லாம் படர்ந்து பரவி இருக்கிற வெங்காம சமுத்திரத்தைக் கடந்து விட்டேன்" எனச் சொல்கிறார் அருணகிரிநாதர்.

"கடத்தில் குறத்தி பிரான் அருளால், கலங்காத சித்தத் 

திடத்தில் புணைஎன யான்கடந்தேன், சித்ர மாதர்அல்குல் 

படத்தில், கழுத்தில், பழுத்த செவ்வாயில், பணையில்,உந்தித் 

தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே".

என்பது கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் பாடி பாடல்.

"அழகிய பெண்களுடைய பாம்பின் படம் போன்ற அல்குலிலும், கழுத்திலும், அழகு மிகுந்த செவ்வாயிலும், மூங்கில் போன்ற தோள்களிலும், கொப்பூழ் ஆகிய தடாகத்திலும், கொங்கைகளிலும் கிடக்கின்ற, வெம்மை மிகுந்த கொடிய காமம் என்னும் கடலை, வள்ளிமணாளனின் திருவருளால் சிறிதும் கலக்கம் அடையாத உள்ள உறுதியைத் தெப்பமாகக் கொண்டு அடியேன் கடந்த கரை ஏறினேன்" என்கிறார் அருணகிரிநாதர்.

வெங்காம சமுத்திரம் --- முறையற்ற காமமாகிய கடல்.



No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...