மனத் தூய்மை
----
மனத் தூய்மை, நல்லொழுக்கம், தவம் முதலியன யாருக்கும் ஒரு நாளில் பொருந்திவிடுவன அல்ல. பல்வேறு நல்லியல்புகளை ஏற்று, வாழ்க்கையில் செயற்படுத்தி உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலமே அவை வாய்க்கும். ஒழுக்கத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அல்லது வீழ்ச்சிக்கும், உள்ளமே அடிப்படை. உள்ளத்தில் தோன்றிய ஒன்று, அது நல்லது ஆனாலும் சரி, கெட்டது ஆனாலும் சரி, உடனடியாகச் செயலுக்கு வராது போனாலும் காலப் போக்கில் செயற்பட்டு அதற்குரிய பயனைத் தந்தே தீரும்.
திருவள்ளுவ நாயனார் குற்றத்தினை மட்டும் கூறவில்லை; கடியவில்லை. குற்றத்தின் காரணத்தையும் கண்டு கடிகிறார். மனிதனின் தேவைகள் எப்பொழுதும் குறைவாகவே இருக்க வேண்டும். தேவைகளைப் பெருக்கிக் கொள்வதால், வாழ்க்கை ஆடம்பரமாவது மட்டுமல்லாமல், ஆசையையும் தூண்டும். ஆசையானது இல்லாத ஒன்றைப் பெறத் தூண்டும். அப்பொழுது உள்ளம் களவை நாடும். ஆதலால் களவு என்னும் தீய ஒழுக்கத்தில் இருந்து விடுபட, தேவையைக் குறைக்க வேண்டும். தனது பொருளியல்புக்கு ஏற்றவாறு அடக்கமாக, எளிமையாக வாழுதல் வேண்டும்.
"அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார், களவின்கண்
கன்றிய காத லவர்"
என்பது திருக்குறள்.
"களவு என்னும் கார் அறிவாண்மை" என்கிறார் திருவள்ளுவ நாயனார். களவு என்பது இருண்ட அறிவினை உடைய வல்லமை. அது, "அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல்" என்கிறார் நாயனார். களவு என்னும் இருண்ட அறிவினை உடைய வல்லமை, அளவு என்ற சொல்லும் வல்லமை உடையவரிடம் இல்லையாம். களவு எனும் இருண்ட அறிவு, கருதிய இன்பத்தைத் தருவதில்லை. மாறாக, நீங்காத துன்பத்தையே தருகிறது. களவில் ஈடுபட்ட நெஞ்சத்தினர் நேரிய முயற்சிகளில் ஈடுபடுதலும் இல்லை. ஆதலால், களவினால் ஒரோவழி ஆக்கம் வந்தாலும், அது அளவிறந்து ஆவதுபோல் ஆகிப் பின்னர் கெடும். இன்ப நப்பாசைகளைத் தோற்றுவித்து, பின் அவற்றை நிறைவு செய்து கொள்ள முடியாத அவல நிலைமையையும், களவின் வழிவந்த துன்பங்களையும் ஒருசேர அனுபவிக்கும் நிலை ஏற்படுகிறது.
ஒருவர்க்குப் பொருள் எப்பொழுதும் தனித்து வராது. பொருள் நல்வழியில் வருவதும் உண்டு. ஊக்கம், உழைப்பு, ஆற்றல் நிறைந்த முயற்சி ஆகியவற்றுடன் பொருள் வருமானால், பொருள் கழிந்தாலும் இந்த இயல்புகள் நம்மிடத்தே தங்கி நின்று, மீண்டும் பொருளைக் கொண்டுவந்து சேர்க்கும். களவு, வஞ்சனை, சூது முதலிய இயல்புகள் பொருளைக் கொண்டு வருவதும் உண்டு. இவ்வாறு வந்து சேரும் பொருள்கள், செலவழிந்து விட்டால் பொருளுடன் வந்த பாவங்கள் போகா. ஆனால், களவு, வஞ்சனை, சூது முதலியவை வீழ்ச்சிக்கே வழி வகுக்கும். இந்த வழியை நாடுபவர் பொருள் வாழ்வு நன்றாம அமையாது. அவர்களது உடல் வாழ்க்கையும் கூட நன்றாக அமையாது.
"அளவு அல்ல செய்து ஆங்கே வீவர், களவு அல்ல
மற்றைய தேற்றா தவர்”
என்று கூறுகிறார் திருவள்ளுவ நாயனார்.
வாழ்க்கையை அறிவு, அனுபவம் என்னும் இரண்டு உந்துசக்திகள் வழி நடத்திச் செல்லவேண்டும். அறிவில் அனுபவம் விளைகிறது. அனுபவத்தில் அறிவு விளைகிறது. இந்த இரண்டு சக்திகளையும் முறையாகப் பற்றி, நெறியில் நின்று வாழ்பவர்கள் வாழ்க்கையின் வரம்புகளை அறிவார்கள். அவர்கள் நெஞ்சத்தில் அறவுணர்வு நிலைபெற்று இருக்கும். இதே போலக் களவு உடையவர் உள்ளத்தே வஞ்சனை நிலைபெற்று நிற்கும்.
"அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்,
களவு அறிந்தார் நெஞ்சில் கரவு" --- திருக்குறள்.
களவு என்னும் இருண்ட அறிவு நிலையில் இருந்து நீங்கியவர்கள், தவம் செய்து பெறக்கூடிய புத்தேள் உலகத்தையும் பெறுவர் என்று நாயனார் தெளிவுபடுத்துகிறார்.
"கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை, கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு" --- திருக்குறள்.
எனவே, மனிதர்கள் தனிநிலையில் குற்றங்களில் இருந்து நீங்கி, நலம் பெற்று இன்புற்று வாழ்வதற்கு வாய்மையில் சிறந்த ஒழுக்கம் இல்லை. தனிமனிதனை சமுதாயத்தோடு இணைத்து எவ்வித இடையீடும் இல்லாமல் இன்ப நலம் செழிக்கப் பிணைத்து வைக்கும் பெருநெறி வாய்மையே நெறியாகும். இன்றைய உலகியலில் "உண்மை", "சத்தியம்" என்ற பெயர்களில் நிலவும் ஒழுக்கக் கருத்துகளை விட எல்லாவகையாலும் சிறந்த கருத்து உடையது "வாய்மை” என்பது. இதுவே திருவள்ளுவ நாயனார் கூறும் ஒழுக்கம் ஆகும். தீமை பயவாத சொல்லே வாய்மை என்பது நாயனார் கண்ட முடிவு. இக்கருத்தினை வலிமையாகவே அறிவுறுத்துகிறார்.
"வாய்மை எனப்படுவது யாது எனின், யாதுஒன்றும்
தீமை இலாத சொலல்" --- திருக்குறள்.
எனவே, யாருக்கும் - யாதொன்றுக்கும் எந்தக் காலத்திலும் எந்த வகையிலும் எந்த அளவிலும் தீமை பயவாத சொற்களே வாய்மையில் சிறந்த சொற்கள் என்பதனை உணர்த்த "யாது ஒன்றும் தீமை இலாத சொலல்" என்று கூறுகின்றார். சொற்களின் ஒழுக்கத் தகுதியை ஆராய்வதற்கு அந்தச் சொற்களால் விளையும் பயனே உரைகல்லாக அமையும். ஆதலால், நிகழ்ந்தது கூறல் வாய்மை அல்ல. நன்மை பயக்குமானால் நிகழ்ந்ததைக் கூறலாம், தீமை விளைக்குமாயின், நிகழ்ந்தைதைக் கூறியதும் பொய்யே என்பது திருவள்ளுவ நாயனார் காட்டும் தெளிவான ஒழுக்கம். நிகழாததைக் கூறுவது மட்டும் அல்ல, பொய்யைக் கூறினாலும், அதனால் நன்மை விளையுமாயின், வாய்மை என்றே கொள்ளப்பெறும்.
"பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்." --- திருக்குறள்.
இவ்வாறு பொய்ம்மையும் வாய்மையாதல் பெரும்பாலும் சமுதாயக் கூட்டு வாழ்க்கையில் அடிக்கடி நிகழும். சிலருக்கு நல்லதை அப்படியே நல்லதாக எடுத்துக் கொள்ளும் சக்தி இருக்காது. அவர்களுக்குக் கவர்ச்சி தேவைப்படும். இனிய பூச்சு தேவைப்படும். முறையான நன்மை என்பது எப்பொழுதும் கவர்ச்சியாகக் காட்சி அளிக்காது. ஆனால், ஆழமான மாறாத நல்லின்பத்தை அது தரும். இத்தகு நல்லின்பத்திற்கு அழைத்துச் செல்லப் பொய்மையும் வாய்மையாக அவசியம் கருதிக் கருதப்படுகிறது. ஆனாலும் பொய், பொய்யேதான். அது எப்போதும் வாய்மையாகி விடுவதில்லை. நன்மை விளைந்தால் போதுமா? விளையும் நன்மைக்கு ஆழமான இயல்பு கூறுகிறார் திருவள்ளுவ நாயனார். அந்த நன்மை "புரை தீர்ந்த நன்மை"யாக இருக்கவேண்டும். பெரும்பாலும் தனக்கு நன்மை அல்லது தன்னை மிகவும் நெருங்கிச் சார்ந்திருப்பவர்க்கு நன்மை என்ற மனப்போக்கே மக்களின் இயல்பாக உள்ளது. ஆனால், யாதொரு குற்றமும் இல்லாத நன்மை விளையும் பொழுதே பொய்ம்மையும் வாய்மையாகக் கருதப்பெறும்.
குற்றத்தில் இருந்து நீங்கிய நன்மையை அறம் என்றார் நாயனார். அது, கேட்டையாவது, மரணத்தையாவது அடைய நின்ற ஓர் உயிருக்கு, சொற்களின் பொய்ம்மையால், அந்தக் கேட்டிலிருந்தும், மரண தண்டத்தில் இருந்தும் நீக்கி, நன்மையை அடையச் செய்தல்.
--- தீமையைத் தராத நடந்ததைச் சொல்லுதலும், நன்மையைத் தரும் நடவாததைச் சொல்லுதலும் வாய்மை.
--- நன்மையைத் தராத நடவாததைச் சொல்லுதல் பொய்ம்மை. தீமையைத் தரும் நடந்ததைச் சொல்லுதல் பொய்ம்மை.
பாரதப் போரின் 15-ஆம் நாள் அன்று, பொய் சொல்லமாட்டேன் என்ற தருமரைப் பார்த்து கண்ணன் ஏது காட்டி, அசுதவத்தாமா என்னும் யானை இறந்ததாகச் சொல்லுமாறு வற்புறத்திக் கூறுவதாக அமைந்த பாடல் ஒன்று திருவள்ளுவ நாயனார் காட்டிய வாழ்வியல் நெறிக்குச் சரியான சான்றாக அமையும்
"உம்மையில் மறுமைதன்னில்
உறு பயன் இரண்டும் பார்க்கின்,
இம்மையில் விளங்கும் யார்க்கும்
அவர் அவர் இயற்கையாலே
மெய்ம்மையே ஒருவர்க்கு உற்ற
விபத்தினை மீட்கும் ஆகின்,
பொய்ம்மையும் மெய்ம்மை போலப்
புண்ணியம் பயக்கும் மாதோ!" --- வில்லிபாரதம், 15-ஆம் போர்.
இதன் பதவுரை ---
உம்மையில் - கழிந்த பிறப்பிலும், மறுமை தன்னில் - இனி வரும் பிறப்பிலும், உறு - பொருந்திய, பயன் இரண்டும் -வினைப்பயன்கள் இரண்டும், பார்க்கின் - ஆராயுமிடத்து, இம்மையில் அவர் அவர் இயற்கையாலே - இப்பிறப்பில் காணப்படுகிற அவரவரது தன்மைகளினாலே, யார்க்கும் - எல்லார்க்கும், விளங்கும் - விளங்கும்; ஒருவர்க்கு உற்ற விபத்தினை - ஒருவர்க்கு நேர்ந்த மிக்க ஆபத்தை, பொய்ம்மையும் - அசத்தியமும், மெயம்மையே மீட்கும் ஆகில் - உண்மையாகவே போக்குமானால், மெய்ம்மை போல - சத்தியம் போலவே, புண்ணியம் பயக்கும். நல்வினைப் பயனைத் தரும்.
இப்பிறப்பில் ஒருவர் அனுபவிக்கிற இன்பதுன்பங்களினால் முற்பிறப்பில் அவர்செய்த நல்வினை தீவினைகளை ஊகித்து அறியலாம் என்பதும், இப்பிறப்பில் ஒருவர் செய்யும் நல்வினை தீவினைகளைக் கொண்டு வருபிறப்பில் அவர் அடையப் போகும் இன்பதுன்பங்பளை ஊகித்து அறியலாம். பெரிய ஆபத்துக் காலத்தில் அதனை நீக்கும் பொருட்டுப் பொய் கூறலாம் என்று கண்ணன் வற்புறுத்தினான்.
பகையும் பிணக்கும் சமுதாயத்தில் தோன்றிப் புரையோடிப் போகாமல் தடுக்கும் நெறியே வாய்மை. வாய்மை என்பது சொல்லாக மட்டும் நின்று பொருள் உணர்த்தாமல், சொல்பவரின் ஒழுக்கத்தையும் காட்டுகிறது. "மெய்ம்மை" "உண்மை” என்ற சொற்களுக்கு இத்தகைய ஆற்றல் இல்லை. உள்ளதைக் கூறல் உண்மை. நிகழ்ந்ததைக் கூறல் மெய்ம்மை. உண்மை உள்ளத்தைப் பொருத்தது. மெய்ம்மை செயல்களையும் நிகழ்வுகளையும் பொருத்தது. இவற்றால் விளையும் பயன்கள் மிகுதியும் சிறப்புடையனவாக அமைய வாய்மையே மிகவும் சிறந்த ஒழுக்கம்.
வடையின் வாசனையை எலிக்குக் காட்டிப் பிடிப்பதைப்போல, மக்களைத் தம் வலையில் வீழ்த்திச் சுரண்டி அடக்கி ஆளவே பலர் வாயினால் இனிய சொற்களைப் பேசுவர். கையினால் இனிய செயல்கைளயும் செய்வர். "ஒருவன் தன் மனமானது அறிந்த ஒன்றை, பிறர் அறியவில்லை என்று பொய்யாகச் சொல்லாது ஒழியவேண்டும். அப்படிப் பொய் கூறிய பின்னர், தனது மனமே அந்தப் பாவத்துக்குச் சாட்சியாய் நின்று, அப் பாவத்தின் பயனாகிய துன்பத்தை அடைவிக்கும்" என்கின்றார் நாயனார்.
"உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை, அற்றே தவத்திற்கு உரு" என்னும் திருக்குறளுக்கு இணங்க, உயிர்க்கு உறுகண் செய்யாது இருப்பதோடு, பொய்ம்மை கூறியேனும் உயிர்களைக் காக்கவேண்டும் என்பதைக் கூறிய நாயனார். தனக்கு வரும் தீங்குகள் எவ்வளவு ஆனாலும், பொறுத்துக் கொள்ளவேண்டுமே அன்றி, அவைகளைத் தவிர்த்தல் பொருட்டு, பொய்ம்மை கூறாது இருக்கவேண்டும் என்று கூறுகின்றார். இதனை உணர்த்தவே
"தன் நெஞ்சு அறிவது பொய்யற்க, பொய்த்தபின்
நன் நெஞ்சே தன்னைசு சுடும்"
என்கிறார் திருவள்ளுவ நாயனார். ஒருவன், பிறர் பார்க்கவில்லை என்பதால், தான் எது கூறினாலும் பொருந்தும் என்று எண்ணி, தன் மனம் அறிந்த பொய் ஒன்றினைச் சொல்லுதல் ஆகாது என்றும், அவ்வாறு சொல்லுவானாயின், அவன் மனமே அவன் சொல்லிய பொய்யாகிய பாவத்திற்குச் சாட்சியாய் இருந்து, பின்னர் துன்பத்தைத் தருவிக்கும் என்று கூறுவதால், ஒருவன் பொய் கூறித் தப்பித்துக் கொள்ள முயலுவானாயின், அம் முயற்சி பயன்படாது என்றும், பொய்ம்மை வெளிப்பட்டுத் தீங்கினைப் பயக்கும் என்றும் சொன்னார்.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்லவேண்டாம்" என்பது உலகநீதி என்பதை அறிக.
'கண்டவர் இல்' என, உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், 'அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,... --- கலித்தொகை, நெய்தல்கலி.
இதன் பொருள் ---
நெஞ்சைக் காட்டிலும் அணுகிய சாட்சி வேறு இல்லை. ஆகையால், அறியாதவர்கள் தம் மனம் இது செய்தல் ஆகாது என்று மீளாது, வேறு விலக்குவார் இல்லாமல், உலகத்தில் கண்டவர்களும் இல்லை என்று கருதி, தாம் செய்யும் தீவினைகளுள் தமது நெஞ்சு அறியவே செய்த கொடிய தீவினைகளை, பின்பு பிறர் அறியாமல் மறைத்தார்களாயினும், அவை மறையா..
"தன்னைத் தன் நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின்
பின்னைத் தான் எய்தா நலன் இல்லை--தன்னைக்
குடிகெடுக்கும் தீ நெஞ்சின் குற்றவேல் செய்தல்
பிடிபடுக்கப் பட்ட களிறு." --- அறநெறிச்சாரம்.
இதன் பொருள் ---
தன் செயல்களுக்குத் தன் மனத்தினையே சான்றாக வைத்து ஒருவன் அடங்குவானாயின், பின்னர் அவனால் அடைய முடியாத இன்பம் எவ்வுலகத்தும் இல்லை. தன்னைத் தான் பிறந்த குடியோடு கெடுக்கின்ற தீய நெஞ்சினுக்குத் தொண்டு பூண்டு ஒழுகுதல், பார்வை விலங்காக நிறுத்தப்பெற்ற பெண் யானையை விரும்பிக் குறியிடத்து அகப்பட்ட ஆண் யானையைப் போல் எக்காலத்தும் வருந்துதற்குக் காரணமாகும்.
ஒருவன் சொல்லுவன பிறருக்கு இனியன போலத் தோற்றம் அளிக்கலாம். பலர் அதை நம்பவும் செய்யலாம். ஆனால், அதனால் பயனில்லை. பலரும் நம்புகிறார்கள் என்பதற்காகவே, சொன்ன பொய்யானது வாய்மை ஆகிவிடாது. உள்ளத்தினாலும் பிறருக்குத் தீமை கருதாத ஒழுக்கத்தையே வாய்மை ஒழுக்கம் என்று திருவள்ளுவ நாயனார் வரையறுத்துக் கூறுகிறார். நெருப்பும் சுடும். நெருப்பு இருக்கும் இடமும் சுடும். அதுபோலத் தீமை தங்கியுள்ள நெஞ்சும் சுடும்.
உள்ளத்தால், செயலால் நன்மை நாடும் வாய்மை ஒழுக்கம் மேற்கொண்டு ஒழுகினாலே போதும். உடம்பினை வருத்தும் தவங்கள் செய்ய வேண்டாம். ஆரவாரத் தன்மை உடைய அறங்களைச் செய்ய வேண்டாம். உடலின் தூய்மை தண்ணீரால் கழுவுவதின் மூலம் கிடைக்கிறது. இன்று கழுவினால் தூய்மையாக இருக்கும். ஆனாலும் நாளை தூய்மை குறையும். மீண்டும் கழுவித் தூய்மை செய்துகொள்ள வேண்டும்.
"புறந்தூய்மை நீரான் அமையும், அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்" --- திருக்குறள்.
உடல் துய்மையைத் தொடர்ந்து கவனித்து அடிக்கடி கழுவித் தூய்மை செய்துகொண்டு, தனக்கும் பிறருக்கும் மகிழ்வைத் தரக்கூடிய வகையில் வாழ்வதைப் போல, வாய்மையால் அடிக்கடி நினைந்து நினைந்து, மனத் தூய்மையைப் பேணிக் காப்பாற்றுதல் வேண்டும்.
No comments:
Post a Comment