பொது --- 1065. பொதுவதாய்த் தனி

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்


பொதுவதாய்த் தனி (பொது)

முருகா! 

தேவரீரது அருட்கருணை உபதேசம் அற்புதம்.


தனன தாத்தன தனன தாத்தன

     தனன தாத்தன ...... தந்ததான


பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல்

     இரவு போய்ப்புகல் ...... கின்றவேதப்


பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு

     வெளிய தாய்ப்புதை ...... வின்றியீறில்


கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு

     கமுத மாய்ப்புல ...... னைந்துமாயக்


கரண மாய்த்தெனை மரண மாற்றிய

     கருணை வார்த்தையி ...... ருந்தவாறென்


உததி கூப்பிட நிருத ரார்ப்பெழ

     உலகு போற்றிட ...... வெங்கலாப


ஒருப ராக்ரம துரக மோட்டிய

     வுரவ கோக்கிரி ...... நண்பவானோர்


முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை

     முலைகள் தேக்கிட ...... வுண்டவாழ்வே


முளரி பாற்கடல் சயில மேற்பயில்

     முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே.

                 பதம் பிரித்தல்

பொது அதாய், தனி முதல் அதாய், பகல்

     இரவு போய், புகல் ...... கின்ற வேதப்


பொருள் அதாய், பொருள் முடிவு அதாய், பெரு

     வெளி அதாய், புதைவு ...... இன்றி, ஈறு இல்


கதி அதாய், கருத அரியதாய், பருகு

     அமுதம் ஆய், புலன் ...... ஐந்தும் மாயக்


கரணம் மாய்த்து, எனை மரணம் மாற்றிய,

     கருணை வார்த்தை ...... இருந்த ஆறு என்?


உததி கூப்பிட, நிருதர் ஆர்ப்பு எழ,

     உலகு போற்றிட, ...... வெம் கலாப


ஒரு பராக்ரம துரகம் ஓட்டிய

     உரவ, கோக் கிரி ...... நண்ப! வானோர்


முதல்வ! பார்ப்பதி புதல்வ! கார்த்திகை

     முலைகள் தேக்கிட ...... உண்டவாழ்வே!


முளரி பாற்கடல் சயில மேல் பயில்

     முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே.

பதவுரை

உததி கூப்பிட நிருதர் ஆர்ப்பு எழ --- கடல் ஓலமிடவும், அசுரர்கள் போரொலி செய்யவும்,

உலகு போற்றிட --- உலக மக்கள் போற்றிப் புகழவும், 

வெம் கலாப ஒரு பராக்ரம துரகம் ஓட்டிய உரவ --- விரும்பப்படுகின்ற தோகையினை உடைய மயிலாகிய, ஒப்பற்ற வீரமான குதிரையை, ஓட்டிச் செலுத்திய வலிமையுள்ளவரே!

கோக் கிரி நண்ப --- மலைகளை விரும்பி எழுந்தருளி இருப்பவரே!

வானோர் முதல்வ --- தேவர்கள் தலவரே!

பார்ப்பதி புதல்வ --- உமாதேவயின் திருப்புதல்வரே!

கார்த்திகை முலைகள் தேக்கிட உண்ட வாழ்வே --- கார்த்திகை மாதர்களின் மார்பகங்களில் தேங்கி இருந்த பாலைப் பருகிய செல்வரே!

முளரி பாற்கடல் சயிலம் மேல் பயில் --- தாமரை மீதும், திருப்பாற் கடலிலும், திருக்கயிலை மலையின் மீதும் (முறையே) வீற்றிருக்கும்,

முதிய மூர்த்திகள் தம்பிரானே --- மூத்தவர்களாகிய பிரமன், திருமால், அரன் எனப்படும் கடவுளருக்கும் தனிப்பெரும் தலைவரே!

பொதுவது ஆய் --- எல்லாவற்றிற்கும் பொதுவானது ஆகி, 

தனி முதல் அது ஆய் ---  தனிப்பட்ட மூல முதற்பொருளாகி,

பகல் இரவு போய் --- பகல் இரவு கடந்ததாகி,

  புகல்கின்ற வேதப்பொருள் அது ஆய் --- சொல்லப்படுகின்ற வேதப் பொருளாகி,

பொருள் முடிவு அது ஆய் --- பொருள்களின் முடிவானதாகி,

பெருவெளி அது ஆய் --- பெரிய வெட்ட வெளியாய் ஆகி,

புதைவு இன்றி --- மறையாதது ஆகி, 

ஈறு இல் கதி அதாய் --- முடிவு இல்லாத கதிப் பொருள் ஆகி,

கருது அரியது ஆய் --- கருதுதற்கு அரியது ஆகி, 

பருக அமுதமாய் --- உண்ணும் அமுதம்போல் ஆகி,

புலன் ஐந்தும் மாய --- சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து புலன்களும் ஒடுங்கி அழியுமாறும்,

கரணம் மாய்த்து --- கரணங்களும் ஒடுங்கும்படியாகவும் செய்து,

எனை மரணம் மாற்றிய --- அடியேனை மரணம் இல்லாத பெருநிலையில் வைத்த,

கருணை வார்த்தை இருந்த ஆறு என்! --- தேவரீரது அருள் உபதேசம் அற்புதம்! அற்புதம்.

பொழிப்புரை

கடல் ஓலமிடவும், அசுரர்கள் போரொலி செய்யவும், உலக மக்கள் போற்றிப் புகழவும்,  விரும்பப்படுகின்ற தோகையினை உடைய மயிலாகிய, ஒப்பற்ற வீரமான குதிரையை, ஓட்டிச் செலுத்திய வலிமையுள்ளவரே!

மலைகளை விரும்பி எழுந்தருளி இருப்பவரே!

தேவர்கள் தலவரே!

உமாதேவயின் திருப்புதல்வரே!

கார்த்திகை மாதர்களின் மார்பகங்களில் தேங்கி இருந்த பாலைப் பருகிய செல்வரே!

தாமரை மீதும், திருப்பாற் கடலிலும், திருக்கயிலை மலையின் மீதும் முறையே வீற்றிருக்கும் மூத்தவர்களாகிய பிரமன், திருமால், அரன் எனப்படும் கடவுளருக்கும் தனிப்பெரும் தலைவரே!

எல்லாவற்றிற்கும் பொதுவானது ஆகி,  தனிப்பட்ட மூல முதற்பொருளாகி, பகல் இரவு கடந்ததாகி, சொல்லப்படுகின்ற வேதப் பொருளாகி, பொருள்களின் முடிவானதாகி, பெரிய வெட்ட வெளியாய் ஆகி, மறையாதது ஆகி,  முடிவு இல்லாத கதிப் பொருள் ஆகி,

கருதுதற்கு அரியது ஆகி, உண்ணும் அமுதம்போல் ஆகி,  சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து புலன்களும் ஒடுங்கி அழியுமாறும், கரணங்களும் ஒடுங்கும்படியாகவும் செய்து, அடியேனை மரணம் இல்லாத பெருநிலையில் வைத்த, தேவரீரது அருள் உபதேசம் அற்புதம்! அற்புதம்.

விரிவுரை

ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாது, அருட்பெருஞ்சோதியாய், கருணையே வடிவமாக விளங்குகின்ற பரம்பொருளை "அது" என்று கூறுவர் அருளாளர்கள். "அது பழச்சுவை என, அமுது என, அறிதற்கு அரிது என, அரிது என அமரரும் அறியார்" என்பது மணிவாசகம்.

கடவுள் என்ற சொல்லுக்கு கடந்தது என்பது பொருள்.  கண்ணினால் உருவத்தை மட்டுமே அறியலாம். ஓசையைக் கேட்க முடியாது. காதினால் ஓசையை மட்டும் கேட்கலாம்.  உருவத்தைக் கண்ணால் அறிய முடியாது. இவ்வண்ணமே ஒவ்வொரு புலனால் ஒவ்வொன்றையே அறிய முடியும்.  இறைவன் ஓசை, ஒளி, சுவை, நாற்றம், ஊறு என்ற ஐந்தில் ஒன்றாக இருப்பார் எனில், இந்த ஐம்புலன்களால் அறியலாகும். அவர் இந்த ஐந்துமே அன்றி தத்துவம் கடந்த தனிப் பரம்பொருள்.  பொறி புலன்களால் அறியப்படாதவர். அருகில் நின்று இறைவனைக் காண்கின்றனர் அமரர். ஆனால், அவர்கள் கட்புலன் இறைவனைக் காணும் ஆற்றல் சிறிதும் இன்றி தடைபட்டுத் தவிக்கின்றது.

"நோக்கினும் நுழைகிலை, நுவலுகின்றது ஓர்

வாக்கினும் அமைகிலை, மதிப்ப ஒண்கிலை,

நீக்க அரும் நிலைமையின் நிற்றி, எந்தை, நீ

ஆக்கிய மாயம் ஈது அறிகிலேம் அரோ." --- கந்தபுராணம்.

விண்ணிலும், மண்ணிலும், பொன்னிலும், பெண்ணிலும், மக்களிலும், தன்னிலும் வைத்துள்ள பற்றுக்கள் அனைத்தும் நீக்கிய தத்துவ ஞானிகளாலும் கூட, ஞானக் கண்ணாலேயே காண முடியும். திருவருட்கண் ஒன்றாலேயே இறைவனைக் காண இயலும். அவனருளாலே தான் அவனைக் காண இயலும்.

வயிரமே ஆனாலும்,  அது பட்டை தீட்டப்படவேண்டும். பட்டை தீட்டுவதற்கு ஒருவன் வேண்டும். பட்டை தீட்டப்பட்டாலும், அதற்குப் புறம்பாக ஒரு ஒளிப் பொருள் இருந்தால் தான், அந்த ஒளியின் துணையைக் கொண்டு அது ஒளிவிடும். அது போல ஆன்மா முதலில் பக்குவம் அடையவேண்டும். அது இறையருளால் இயலும். பக்குவம் அடைந்த பின், இறையருள் துணைக் கொண்டே இறையருளை உணர முடியும்.


மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி

     மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால்,

ஒப்புஉடையன் அல்லன்; ஒருவன் அல்லன்;

     ஓர்ஊரன் அல்லன்; ஓர் உவமன்இல்லி,

அப்படியும் அந்நிற மும்அவ் வண்ணமும்

     அவன்அருளே கண்ணாகக் காணின் அல்லால்,

இப்படியன் இந்நிறத்தின் இவ்வண் ணத்தன்

     இவன்இறைவன் என்றுஎழுதிக் காட்ட ஒணாதே.--- அப்பர்.

இப்படிப்பட்ட அருமையான நிலையை அடிகளார் இந்தப் பாட்டில் காட்டி அருளுகிறார்.


பகல் இரவு போய் --- 

இரவு - மறைப்பு. 

பகல் - நினைப்பு.

வடமொழியில் கேவலம் சகலம் எனப்படும்.

நினைப்பு மறப்பு இன்றிய நிலையே சமாதி நிலை. 

இந்த நிலையைத்தான் எல்லாப் பெரியோர்களும் வியந்து கூறுகின்றனர். இதனைப் பெறுதற்கு ஒவ்வொருவரும் முயற்சித்தல் வேண்டும்.

இறைவனுடைய திருமேனி நமது உடம்பு போன்றது என்று மயங்கித் திரிபவர் பலர்.  வாய்க்கு வந்தவாறு பிதற்றுவர் பலர்.  நமது உடம்பு எலும்பு நரம்பு உதிரம் முதலிய ஏழு தாதுக்களால் ஆயது.  இறைவனுடைய உருவம் இத்தன்மையது அல்ல. எல்லாவற்றையும் கடந்த அது அறிவு மயமானது. 


"இராப்பகல் அற்ற இடம்காட்டி, யான் இருந்தே துதிக்கக்

குராப்புனை தண்டைஅம் தாள்அருளாய், கரி கூப்பிட்டநாள்

கராப்படக் கொன்று,அக் கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்

பராக்ரம வேல, நிருத சங்கார, பயங்கரனே." --- கந்தர் அலங்காரம். 


"அராப்புனை வேணியன்சேய் அருள்வேண்டும், அவிழ்ந்த அன்பால்

குராப்புனை தண்டையந்தாள் தொழல் வேண்டும், கொடிய ஐவர்

பராக்கு அறல் வேண்டும்,  மனமும் பதைப்பு அறல் வேண்டும், என்றால்

இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிது அல்லவே."   --- கந்தர் அலங்காரம்.


ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம் அகற்றிவளர்

     அந்திபகல் அற்ற நினைவு ...... அருள்வாயே.... --- திருப்புகழ்.


கருதா மறவா நெறிகாண, எனக்கு

இருதாள் வனசம் தர என்று இசைவாய்

வரதா, முருகா, மயில் வாகனனே

விரதா, சுர சூர விபாடணனே.                  --- கந்தர் அநுபூதி.


இரவுபகல் அற்றஇடத்து ஏகாந்த யோகம்

வரவும் திருக்கருணை வையாய் பராபரமே....

கங்குல்பகல் அற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி

எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே...       ---  தாயுமானார்.

பருக அமுதமாய் --- 

"தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்" என்பது மணிவாசகம்.

புலன் ஐந்தும் மாய, கரணம் மாய்த்து --- 

"மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப்

புலன் ஐந்தின் வழி அடைத்து, அமுதே

ஊறி நின்று என்னுள் எழுபரஞ் சோதி"

என்பது மணிவாசகம்.

இதன் பொருள் --- "பகைத்து, என்னை மயக்கச் செய்யும் வஞ்சனையைச் செய்கின்ற ஐம்புலன்களின், வாயில்களையும் அடைத்து அமுதமே சுரந்து நின்று என்னகத்தே தோன்றுகின்ற ஒளியே!" 

மனம் ஒன்றி இருந்து இறைவனுக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்ற நினைப்பு வருகிறது. ஆனால் ஐந்து பொறிகளும் அதற்கு விரோதமாக இருக்கின்றன. அவற்றை அடக்கும் திண்மை நம்மிடம் இருப்பதில்லை. நாம் தினமும் வழிபாடு செய்கிறோம். ஏதாவது கூச்சல் கேட்டால் அது என்ன சத்தம் என்று கேட்கக் காது போய்விடுகிறது. இறைவனுக்கு அழகாக அலங்காரம் பண்ணியிருக்கிறார்கள்  ஆனால் கோயிலுக்குள் போனால் இறைவனைக் கண் பார்ப்பதில்லை. அங்கே உள்ள வேறு காட்சிகளைப் பார்க்க ஓடி விடுகிறது. பட்டினத்து அடிகள்,

"கைஒன்று செய்ய, விழிஒன்று நாட, கருத்து ஒன்று எண்ண,

பொய்ஒன்று வஞ்சக நா ஒன்று பேச, புலால் கமழும்

மெய்ஒன்று சார, செவிஒன்று கேட்க விரும்பும் யான்

செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே."

என்று பாடுகிறார்.

ஐந்து இந்திரியங்களும் வெவ்வேறாகக் சிதறுண்டு இருந்தாலும் அவற்றை நெறிப்படுத்தி இறைவன்பால் ஒருமுகமாகச் செலுத்துவது வழிபாடு. வழிபாடு செய்ய உட்கார்ந்தும் இந்த ஐந்து இந்திரியங்களை வெவ்வேறு வழியில் செல்ல விட்டு, மனம் எதையோ நினைத்துக் கொண்டிருந்தால் அது வழிபாடு ஆகாது. வாய்ப் பாட்டுக்காரர் ஒரு பாட்டுப் பாட, குழல் ஊதுகிறவர் வேறொரு பாட்டை வாசிக்க, மிருதங்கக்காரன் ஏதோ ஒரு தாளத்துக்கு வாசித்தால் அது கச்சேரி ஆகாது. ஒரே கூச்சலாக இருக்கும். அது போலத்தான் ஐந்து இந்திரியங்களும் வெவ்வேறு காரியங்களைச் செய்ய,  நாம் வழிபாடு செய்தால் அது வழிபாடாக இராது.

"ஓர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலர்இட்டு உனதாள்

சேர ஒட்டார் ஐவர்; செய்வது என் யான்? சென்று தேவர் உய்யச்

சோர நிட்டூரனை சூரனை கார் உடல் சோரி கக்கக்

 கூர கட்டாரி இட்டு ஓர் இமைப் போதினில் கொன்றவனே!"

இந்த ஐம்புலப் பகையை மாய்த்து, நல்லறிவு பெற்று தவ உணர்வு சிறக்க வேண்டுமானால், இறைவன் திருவருளை நாடி இருத்தல் வேண்டும்.

கரணம் --- கருவி. புறத்தே உள்ள கருவிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன. அகத்தே உள்ள கருவிகள் அந்தக் கரணம் என்று சொல்லப்படும். அவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு.

வெம் கலாப ஒரு பராக்ரம துரகம் ஓட்டிய உரவ --- 

வெம் - விருப்பம்.

துரகம் - குதிரை. வேகாமகச் செல்லக் கூடியது குதிரை. முரகப் பெருமான் ஆரோகணித்து உள்ள மயிலும் வேகமாகச் செல்வதால் அதனை அழகிய கலாபத்தை உடைய துரகம் என்று குறிப்பிட்டார் அடிகளார்.

முளரி பாற்கடல் சயிலம் மேல் பயில் முதிய மூர்த்திகள் தம்பிரானே --- 

முளரி - தாமரை. பிரமதேவன் வாசம் செய்வது தாமலை மலலிர்.

பாற்கடலில் பள்ளி கொண்டு இருப்பவர் திருமால்.

சயிலம் - மலை. இங்கே திருக்கயிலை மலையைக் குறிக்கும்.

மூவர்க்கும் தனிப் பெருங்கடவுளாக விளங்குபவர் முருகப் பெருமான்.


"உடல்சின மோடு சூரன் ஒருவனாய் அங்கண் நின்றான்

அடல்வலி கொண்ட வாளி அந்தர நெறியான் மீண்டு

புடையுறு சரங்க ளோடு பொள்ளெனத் தூணி புக்க

சுடர்நெடுந் தனிவேல் அண்ணல் அவன்முகம் நோக்கிச்சொல்வான்."    


வெம்புயல் இடையில் தோன்றி விளிந்திடு மின்னு என்ன

இம்பரில் எமது முன்னம் எல்லையில் உருவம் கொண்டாய்,

அம்பினில் அவற்றை எல்லாம் அட்டனம், அழிவி லாத

நம்பெரு வடிவங் கொள்வ நன்றுகண் டிடுதி என்றான்."


கூறிமற்று இனைய தன்மை குரைகடல் உலகம், திக்கு

மாறிலாப் புவனம், அண்டம், வானவர், உயிர்கள் யாவும்

ஆறுமா முகத்து வள்ளல் மேனியில் அமைந்தது அன்றி

வேறிலை என்ன ஆங்கோர் வியன்பெரு வடிவங் கொண்டான்."


எனவரும் கந்தபுராணப் பாடல்களைக் காண்க.


கருத்துரை

முருகா! தேவரீரது அருட்கருணை உபதேசம் அற்புதம்.


No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...