பெரியோரை அவமதித்தால் கேடு நிச்சயம்

 

பெரியோரை அவமதித்தால் கேடு நிச்சயம்

----

"நெருப்பினால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளல் ஆகும். ஆனால், பெரியாரிடத்தில் தவறு செய்து ஒழுகுபவர் தப்பிப் பிழைத்தல் ஆகாது" என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

"எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம், உய்யார்

பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்."

என்பது அவர் அருளிய திருக்குறள்.

காடுகளிலே உள்ள மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து, அதனால் உண்டாகும் தீயினிடத்தில் ஒருவன் அகப்பட்டுக் கொள்வானானால், அந்தத் தீயானது உடம்பினைப் பிடிக்கும் முன்னரோ அல்லது உடம்பினைப் பற்றிய பின்னரோ தப்பிச் சென்று காத்துக் கொள்ளலாம். ஆனால், நிறைமொழி மாந்தருக்குச் செய்த அவமானம் செய்த ஒருவன், அவரிடத்தில் உண்டான கோபத் தீயில் இருந்து தன்னை எவ்விதத்திலும் காத்துக் கொள்ளுதல் முடியாது. அவரிடத்தில் பிழைத்தவர் அழிந்து போதல் நிச்சயம். எனவே, பெரியவரிடத்தில் பிழை செய்தல் ஆகாது.

"பணியப் படுவார் புறங்கடையர் ஆக, 

தணிவுஇல் களிப்பினால் தாழ்வார்க்க் - அணியது 

இளையாள் முயக்கு எனினும், சேய்த்து அன்றே மூத்தாள் 

புணர்முலைப் போகம் கொளல்." 

என்று "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில் குமரகுருபர அடிகளார் அருளி உள்ளார்.

இதன் பொருள் ---

பணியப் படுவார் - தம்மால் வணங்கி வரவேற்றுக் கொள்ளத் தக்க பெரியோர், புறங்கடையர் ஆக - (தம்மைக் காண்பது கருதித்) தமது தலைவாயிலில் வந்து நிற்கவும், தணிவு இல் களிப்பினால் தாழ்வார்க்கு - அமைவு இல்லாத செல்வத்தால் உண்டான மகிழ்ச்சியினால், (விரைவில் எழுந்து சென்று அவரை எதிர்கொண்டு அழைத்து உபசரிக்காமல்) காலம் தாழ்த்துவார்க்கு, அணியது இளையாள் முயக்கு எனினும் - (அப்போதைக்கு) அவருக்கு நெருக்கமாக இருப்பது திருமகளின் சேர்க்கையாக இருந்தாலும்,  சேய்த்து இன்றே மூத்தாள் தொலையாத போகம் கொளல் - மூத்தவள் ஆகிய மூதேவியினது நெருங்கிய சேர்க்கையால் உண்டாகும் இடையறாத போகத்தை அவர் கொள்வது வெகு தொலைவில் இல்லை.

செல்வச் செருக்கினால் கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்த பெரியோர் தம்மிடத்து வந்தபோது,  அவர் வரவு தமது பாக்கியம் என்று கருதாது, செல்வச் செருக்கினால் அறிவு மயங்கி, அவமரியாதை செய்தவர் விரைவில் கேட்டினை அடைவார் என்பது கருத்து.

தணிவில் களிப்பு - தணிவு இல்லாத களிப்பு. 'தணிவு' என்னும் சொல்லுக்கு  'அடங்குதல்' என்று பொருள். செல்வம் போதும் என அடங்காத மனம். "செல்வம் என்பது சிந்தையின் நிறைவு" என்று சிம்பர மும்மணிக் கோவையில் அடிகளார் அருளி உள்ளார். களிப்பு என்னும் சொல்லுக்கு, மகிழ்ச்சி என்புத பொருளாயினும், செருக்கு, மயக்கம்,வெறி, சிற்றின்பத்தால் உண்டாகும் உள்ளக் களிப்பு என்றே பொருள் கொள்ளுதல் பொருந்தும்.

செல்வம் மிகுந்த போது களிப்பாகிய செருக்கு வந்து மூடும் என்பதைப் பின்வரும் பிரமாணங்களால் தெளியலாம். 

"சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்

எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்

முந்திரிமேல் காணி மிகுவதேல், கீழ்தன்னை

இந்திரனா எண்ணி விடும்.           --- நாலடியார்.

இதன் பொருள் ---

      ஆட்சிக்கு உரிய அளவற்ற செல்வம் பெற்றாலும் மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்த சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.  ஆனால் முந்திரி அளவுக்கு மேல் காணி அளவாகச் செல்வம் பெற்றாலும், கீழ்மகன் தன்னை என்றும் இந்திரனாக எண்ணி இறுமாந்து திரிவான்.

    முந்திரி, காணி என்றது, அந்நாளில் வழக்கில் இருந்த அளவுகள். முந்திரி என்பது 320-ல் ஒரு பங்கு. காணி என்பது, 80-ல் ஒரு பங்கு.

"வெள்எலும்பு பெற்றநாய் துண்ட விடக்கு உறின்

கொள்ளும் நனிகளி, கோடியும் வேண்டுமோ?

உள்ளதுடன் இம்மி மிகினும் உறுப கீழ்

வெள்ளத்து அனைய வியப்பு."

என்று பெரியோர் காட்டினார்.  வெள்ளை நிறத்துடன் கூடிய எலும்பைப் பெற்று இருந்த நாய்க்கு, ஒரு சிறு மாமிசத் துண்டு கிடைத்துவிட்டால் மிக்க களிப்பினை அடையும். அதுபோலவே, கோடி அளவு அல்ல, சிறிதளவு செல்வம் இருந்து, அது சிறிது மிகுந்துவிட்டாலும், கீழ்மக்கள் அளவற்ற வியப்பினை அடைவார்கள்.

செல்வம் கீழ்மக்களிடத்தில் வந்து சேர்ந்து விட்டால், என்ன நடக்கும் என்பதை அழகாகப் பின்வரும் பாடல் காட்டுகிறது. இந்தப் பாடல் வில்லிபாரதத்திலும் வருகிறது.

"செல்வம் வந்து உற்ற காலைத்

     தெய்வமும் சிறிது பேணார்,

சொல்வன அறிந்து சொல்லார்,

     சுற்றமும் துணையும் பேணார்,

வெல்வதே கருமம் அல்லால்

     வெம்பகை வலிது என்று எண்ணார்,

வல்வினை விளைவும்ஓரார்,

     மண்ணின் மேல் வாழும் மாந்தர்." --- விவேக சிந்தாமணி.

 இதன் பொருள் ---

      இந்த நிலவுலகத்தில் வாழுகின்ற மனிதர்களில் அறிவு அற்றவர்களாக உள்ளவர்கள், தங்களுக்குப் பெருத்த செல்வம் வந்து பொருந்திய போது, தமது அறியாமை காரணமாக, தெய்வத்தையும் சிறிதும் வழிபடமாட்டர்கள்; சொல்ல வேண்டியதை அறிந்து, பிறர் மகிழும்படி சொல்லமாட்டார்கள்; உறவினர்களையும், உதவியாக உள்ள நண்பர்களையும் போற்றிக் கொள்ள மாட்டார்கள்; எப்பொழுதும் எதையும் வெல்ல வேண்டும் என்பதே கருத்தாகக் கொண்டு செயல்படுவதைத் தவிர, எதிரிகள் வலிமை உடையவர்களாக இருந்தாலும், அதைச் சிறிதும் எண்ணித் துணிய மாட்டார்கள்; தாம் செய்யும் பாவச் செயல்களால் விளையப் போகும் தீமைகளையும் ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.

            அறிவில் சிறியவர்களே மதித்துப் போற்றுகின்ற செல்வமானது ஒருவனுக்கு வந்துவிட்டால், பிறரிடம் அன்போடு உரையாடாமையால், வாய் உள்ளவரும் ஊமையராவர்; பிறர் சொல்வதை மதித்துக் கேளாமையால், காது உள்ளவரும் செவிடராவர்; பிறரை ஏறெடுத்தும் பாராமையால், கண் உள்ளவரும் குருடராவர்.

"சிறியரே மதிக்கும் இந்தச் செல்வம் வந்து உற்ற ஞான்றே

வறியபுன் செருக்கு மூடி, வாய்உளார் மூகர் ஆவர்;

பறிஅணி செவி உளாரும் பயில்தரு செவிடர்ஆவர்;

குறிஅணி கண்உ(ள்)ளாரும் குருடராய் முடிவர் அன்றே." --- குசேலோபாக்கியானம். 

      வினையின் காரணமாக வந்து உற்ற உடலும், பெற்ற பொருளும், முற்றவும் அழிந்து போவதை உலக அனுபவங்களால் நாளும் அறிந்து இருந்தும்,  தனது உயிர்க்கு வேண்டிய உறுதியை விரைந்து தேடிக் கொள்ளாமல், அஞ்ஞான இருளில் மூழ்கி இருந்து மடிந்து போவது அழகல்ல. உயிரோடு உடன் பிறந்த உடலே பிணமாய் ஒழிகின்றது. தனது உடம்பின் நிழல் கூட வெய்யிற்கு ஒதுங்க உதவுவதில்லை. அப்படி ஒழிவதை நேரில் பலமுறை கண்டு இருந்தும், தாம் சேர்த்து வைத்துள்ள நிலையில்லாத பொருளை "என்னுடையது, என்னுடையது" என்று களித்து இருப்பவர் அறிவில்லாதவர் என்கின்றார் திருமூல நாயானர்.

"தன்னது சாயை தனக்கு உதவாது கண்டும்,

என்னது மாடு என்று இருப்பர்கள் ஏழைகள்;

உன் உயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது

கண்ணது காண்ஒளி கண்டு கொ(ள்)ளீரே."  --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

      தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக்  கண்டுவைத்தும், அறிவில்லாதார்,  தம்முடைய செல்வமானது தமது துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்து இருக்கின்றனர். கருதி உணரப்படுகின்ற உயிர் காணப்படும் உடம்போடே ஒன்றாய்ப் பிறந்தது. ஆயினும், அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டு ஒழிகின்றது. (அங்ஙனமாக, உடன் பிறந்து உடம்பே உயிரை விட்டு ஒழியும்போது, உடம்புக்கு வேறாய், இடையே வந்த செல்வமா நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்?) பொருள்களைக் காணும் ஆற்றல் உங்கள் கண்ணில் உள்ளது. அதனைக் கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டு கொள்ளுங்கள். (சாயை --- நிழல். மாடு --- செல்வம்) 

      வெய்யிலுக்கு ஒதுங்குவதற்கும் உதவாத இந்த உடம்பின் நிழல்போல, உங்கள் கையில் உள்ள பொருளும் உங்களுக்கு, நீங்கள் செல்லப் போகின்ற இறுதிப் பயணத்துக்கு உதவாது, எனவே, முருகப் பெருமானை நினைந்து, நொய்யில் பாதி அளவாவது, இல்லை என்று வந்தோருக்குக் கொடுத்து உதவுங்கள் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 "வையின் கதிர் வடிவேலோனை வாழ்த்தி, வறிஞர்க்கு என்றும்

நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள், நுங்கட்கு இங்ஙன்

வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறு நிழல்போல்

கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே."                 --- கந்தர் அலங்காரம்.

 

     பின்வரும் பாடல்களையும் இங்கு வைத்து எண்ணி நலம் பெறலாம்...

 "என்பொருள் என் பொருள் என்று சீவன்விடு

    மனமே! ஒன்று இயம்பக் கேளாய்;

உன்பொருள் ஆனால் அதன்மேல் உன்நாமம்

    வரைந்து உளதோ? உன்த(ன்)னோடு

முன்பிறந்து வளர்ந்ததுகொல்? இனி உ(ன்)னைவிட்டு

    அகலாதோ? முதிர்ந்து நீ தான்

பின்பிறக்கும் போது, அதுவும் கூட இறந்

    திடும் கொல்லோ? பேசுவாயே."    --- நீதிநூல்.

என்னுடைய பொருள், என்னுடைய பொருள் என்று உயிரை விடுகின்ற எனது நெஞ்சமே! உனக்கு ஒன்று சொல்லுகின்றேன், கேள். உன்னுடைய பொருளானால் அப்பொருளின் மேல் உனது பெயர் எழுதப்பட்டிருக்கின்றதா? நீ பிறக்கும்போது உன்னுடனேயே அது பிறந்து வளர்ந்ததா?  இனிமேலும் அது உன்னை விட்டு நீங்காதா?  நீ மூப்பு அடைந்து சாவும்பொழுது அதுவும் உன்னோடு கூடச் செத்துவிடுமா? ஆராய்ந்து சொல்வாயாக.

  

"நோக்கு இருந்தும் அந்தகரா, காது இருந்தும்

    செவிடரா, நோய் இல்லாத

வாக்கு இருந்தும் மூகையரா, மதியிருந்தும்

    இல்லாரா, வளரும் கைகால்

போக்கு இருந்தும் முடவரா, உயிர் இருந்தும்

    இல்லாத பூட்சி யாரா

ஆக்கும் இந்தத் தனம், அதனை ஆக்கம் என

    நினைத்தனை நீ அகக் குரங்கே."      --- நீதிநூல். 

      எனது நெஞ்சமாகிய வஞ்சகக் குரங்கே! நீ கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய், குற்றமற்ற வாய் இருந்தும் ஊமையாய், அறிவு இருந்தும் மூடனாய், நீண்ட கைகால்கள் இருந்தும் முடவனாய், உயிர் இருந்தும் அது இல்லாத வெற்று உடலினனாய்ப் பயன் இழக்கச் செய்யும்,  இந்தத்  தீப்பொருளை, வளரும் செல்வமாம் வாழ்வு என நினைக்கின்றாய்.

"வில்லது வளைந்தது என்றும், 

வேழம்அது உறங்கிற்று என்றும்

வல்லியம் பதுங்கிற்று என்றும் 

வளர்கடா பிந்திற்று என்றும்

புல்லர்தம் சொல்லுக்கு அஞ்சிப் 

பொறுத்தனர் பெரியோர் என்று

நல்லது என்று இருக்க வேண்டா 

நஞ்சு எனக் கருதலாமே." --- விவேக சிந்தாமணி.

இதன் பொருள் ---

உலகத்தவர்களே! பகைவரைக் கொல்வதற்கு வளைக்கப்பட்டு இருக்கும் வில்லைப் பார்த்து, இந்த வில்லானது வளைந்து போனது அது தீங்கு செய்யாது என்றும்; காலம் பார்த்துத் தனது பகையை முடிக்கக் கருதி உறங்குகின்ற யானையைப் பார்த்து, இந்த யானையானது உறங்கிவிட்டது. அதனால், அது தீங்கு செய்யாது என்றும், ஒரு விலங்கைக் கொல்வதற்குக் காலம் பார்த்துப் பதுங்கிக் கிடக்கும் புலியைப் பார்த்து, இந்தப் புலியானது பதுங்கி விட்டது அதனால் இது தீங்கு செய்யாது என்றும், தனது பகையின் மேல் பாய்வதற்காக ஓடி வந்து பின்னிடுகின்ற ஆட்டுக் கடாவைப் பார்த்து, இந்த ஆட்டுக்கடாவானது பாய்வதை விடுத்து, பின்னே சென்று விட்டது அதனால் இது பின்னும் பாய்ந்து வந்து தீங்கு செய்யாது என்றும், தம்மை நிந்திப்போர் தாமாகவே கெட்டுப் போவார்கள் என்பதை அறிந்து, கீழ்மக்களின் நிந்தனையைப் பொறுத்துக் கொண்டு வாளா இருக்கும் பெரியோர்களைப் பார்த்து, இந்தப் பெரியவர்கள் கீழ்மக்களின் சொற்களுக்குப் பயந்தே பொறுத்துக் கொண்டார்கள். எனவே, இவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்றும், எண்ணிக் கொண்டு, இச் செய்கைகளால் வருவது நன்மையே என்று முடிவு கட்டி இருந்துவிட வேண்டாம். இவற்றால் வருவது நஞ்சைப் போன்ற கேடுதான் என்று எண்ணலாம்.

எனவே, கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கி, ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இருக்கும் பெரியவர்களை அவமதித்தால் கேடு நிச்சயம் என்பதை அறிதல் வேண்டும்.




No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...