36. ஆரியக் கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு


பேரிசைக்கும் சுற்றமுடன் மைந்தரும்,மா

     தரும்சூழப் பிரபஞ் சத்தே

பாரியைபுற் றிருந்தாலும், திருநீற்றிற்

     கழற்காய்போல் பற்றில் லாமல்,

சீரிசைக்குந் தண்டலையார் அஞ்செழுத்தை

     நினைக்கின்முத்தி சேர லாகும்;

ஆரியக்கூத் தாடுகினும் காரியமேற்

     கண்ணாவ தறிவு தானே.”


இதன் பொருள் —-


ஆரியக்கூத்து ஆடுகினும் காரியம்மேல் கண் ஆவது அறிவு - ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தின் மேல் கண்ணாக இருப்பதே அறிவுடைமை ஆகும். (ஆகையால்) 


பேர்  இசைக்கும் சுற்றமுடன் மைந்தரும் மாதரும் சூழ - புகழ்ந்து சொல்லப்படும் உறவினருடன் மக்களும் பெண்டிரும் சூழ்ந்திருக்குமாறு, பிரபஞ்சத்தே பார் இயைபு உற்று இருந்தாலும் - இந்தப் பிரபஞ்சத்தில் உலக இன்பங்களில் ஈடுபட்டு இருந்தாலும், திருநீற்றில் கழல்காய் போல் பற்று இல்லாமல் - திருநீற்றில் உள்ள கழற்காய் (திருநீற்றில்  படாது இருப்பது) போல பற்று இல்லாமல்,  சீர் இசைக்கும் தண்டலையார் அஞ்சு எழுத்தை நினைக்கின் முத்தி சேரலாகும் -  சிறப்புப் பொருந்திய திருத்தண்டலை இறைவரின் (சிவாயநம எனும்) ஐந்தெழுத்தினையும் நினைத்தால் வீடு பெறலாகும்.


(ஆரியக்கூத்து : ஆரியர்களால் ஆடப்படும் ஒரு வகைக் கூத்து; கழைக் கூத்தென்றுங் கூறுவர். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தின்மேற் கண்ணாயிரு' என்பது பழமொழி.) 

No comments:

Post a Comment

36. ஆரியக் கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு

“ பேரிசைக்கும் சுற்றமுடன் மைந்தரும் , மா      தரும்சூழப் பிரபஞ் சத்தே பாரியைபுற் றிருந்தாலும் , திருநீற்றிற்      கழற்காய்போல் பற்றில்...