“சோடாய் மரத்திற் புறாரெண் டிருந்திடத்
துறவுகண் டேவேடுவன்
தோலாமல் அவையெய்யவேண்டும் என்றொருகணை
தொடுத்துவில் வாங்கிநிற்க,
ஊடாடி மேலே எழும்பிடின் அடிப்பதற்
குலவுரா சாளிகூட
உயரப் பறந்துகொண் டேதிரிய, அப்போ
துதைத்தசிலை வேடன் அடியில்,
சேடாக வல்விடம் தீண்டவே அவன்விழச்
சிலையில்தொ டுத்தவாளி
சென்றிரா சாளிமெய் தைத்துவிழ, அவ்விரு
சிறைப்புறா வாழ்ந்த அன்றோ?
வாடாமல் இவையெலாம் சிவன்செயல்கள் அல்லாது
மனச்செயலி னாலும்வருமோ?
மயிலேறி விளைாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமர! ஈசனே!”
இதன் பொருள் —
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
மரத்தில் புறா, ரெண்டு சோடாய் இருந்திட - ஒரு மரத்தில் இரு புறாக்கள் இணையாக இருக்க, வேடுவன் துறவு கண்டே - ஒரு வேடுவன் அவற்றின் வாய்ப்பான நிலையைக் கண்டு, தோலாமல் அவை எய்ய வேண்டும் என்று - தவறாமல் அவற்றை ஓர் அம்பினாலேயே அடித்தல் வேண்டும் என நினைத்து, வில் வாங்கி ஒரு கணை தொடுத்து நிற்க - வில்லை வளைத்து ஓர் அம்பு பூட்டிக் கொண்டு நிற்கும்போது, மேலே எழும்பிடின் அடிப்பதற்கு உலவு ராசாளி கூட ஊடாடி - மேலே எழுந்தால் தாக்கிப் பற்றுவதற்குத் திரியும் இராசாளிப் பறவையும் சுழன்றுகொண்டு, உயரப் பறந்து கொண்டே திரிய - வானத்தில் பறந்து கொண்டிருக்க, அப்போது - அந்த வேளையில், உதைத்த சிலைவேடன் அடியில் - (தன்னை) மிதித்த வில்லேந்திய வேடனின் காலில், சேடு ஆக வல்விடம் தீண்டவே - கொடிய நஞ்சையுடைய பாம்பு நன்றாகக் கடிக்க, அவன் விழ - அவ்வேடன் (உயிர் நீங்கி) விழவும், சிலையில், தொடுத்த வாளி சென்று - வில்லில் பூட்டிய அம்பு போய் இராசாளி மெய் தைத்து விழ - இராசாளியின் உடலில் தைத்ததனால் அதுவும் இறந்து விழவும், அங் இரு சிறைப்புறா வாழ்ந்த அன்றோ - சிறகுகளை உடைய அந்த இரண்டு புறாக்காளும் உயிர் தப்பின அல்லவா?, இவையெலாம் சிவன் செயல்கள் அல்லாது - இவைகளெல்லாம் சிவபரம்பொருளின் அருட் செயல்களே அன்றி, மனச் செயலினாலும் வாடாமல் வருமோ? - (ஒருவருடைய) மன வலிமையினாலும் தவறாமல் உண்டாகுமோ?
விளக்கம் —-
எந்த எந்த உயிர்கள் என்ன என்ன வினைகளைப் புரிந்தனவோ, அந்த அந்த வினைகளுக்குத் தக்கவாறு இறைவன் பிறக்க வைக்கின்றான். நம் விருப்பம்போல் பிறவி எடுக்க இயலாது. விருப்பம்போல் உயிர்கள் தாமே பிறக்கலாம் என்னில், எல்லா உயிர்களும் அரசன் வீட்டிலும், பெருந் தனவந்தன் வீட்டிலுமே அன்றோ பிறக்க விழையும். அப்படிப் பிறக்குமானால், அரசனுக்கு நாள்தோறும் பல்லாயிரம் மக்கள் பிறக்க நேரிடும். அரசனுக்கும் தனவந்தனுக்கும் பெரும்பாலும் மக்கட்பேறு இன்மையே கண்கூடு. விருப்பம் போல் பிறப்பதற்குத்தான் இயலாது. இறப்பதும் கூட ஆன்மாவின் விருப்பப்படி நடவாது. இறப்பும் நம் வசத்தில் இல்லை. இந்த உடம்பு முகந்துகொண்ட வினைகளைத் துய்த்து முடிந்தால்தான் மரணம் எய்தும். வினையின் துய்ப்பு முடிந்து விட்டால் ஒரு கணம் கூட இவ்வுடம்பு நில்லாது. "வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய், வினைதான் ஒழிந்தால் தினைப் போதளவும் நில்லாது" என்பார் பட்டினத்து அடிகளார்.
ஒருவன் ஏதோ துன்பம் காரணமாக உயிர்விடத் துணிந்தான். ஒன்றிலிருந்து தப்பினால் மற்றொன்றில் மரணம் வரவேண்டும் என்று கருதினான். ஐந்து வகையான கருமங்களை மேற்கொண்டான். (1) கடற்கரை ஓரத்திலே கடல்புறமாகச் சாய்ந்துள்ள மரத்தின்மீது ஏறி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண் டான்; (2) நஞ்சையும் அருந்திக் கொண்டான்; (3) மண்ணெண்ணெயால் உடம்பை நனைத்துத் தீ வைத்துக் கொண்டான்; (4) கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டான்; (5) ஒரு வேளை கடலில் வீழ்ந்தாலும் கடலால் மரணம் வரட்டும் என்று கருதினான். இந்த ஐந்தினின்றும் மரணம் வராமல் தப்பிக் கரையேறினான். எப்படி? கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட போது, நஞ்சின் வேகத்தால் சிறிது மயங்கி இருந்தபடியால் குறி தவறி சுருக்கிட்ட கயிற்றில் குண்டு பட்டது. அதனால் கயிறு அறுந்து கடலில் வீழ்ந்தான். சுருக்கிட்டு மாளக் கருதியதும், கைத் துப்பாக்கியால் மாளக் கருதியதும் நிறைவேறவில்லை. மூன்றாவது, கடலில் விழுந்தபடியால், எண்ணெயால் உடம்பு எரியாமல் கடல் நீரில் அவிந்து விட்டது. நான்காவது, கடல் நீரில் அலையினால் மோதப்பட்டு உவர் நீரைப் பருகி திக்குமுக்காடி வாந்தி எடுக்க, அவன் முன்னர் அருந்திய யஞ்சு வெளிப்பட்டது. ஐந்தாவது, கடல் அலை அவனை உயிருடன் கரையில் ஒதுக்கி விட்டது. ஆதலின், இறப்பும் பிறப்பும் வினையின் விளைவினால் வருமே அன்றி, விருப்பம் போல் வாரா. உயிர்களுக்கு வினையின் பயனை ஊடுவது இறைவன் அருட்செயல்.
ஒரு நாடக மேடையில் அவரவர் வாங்கிய நுழைவுச் சீட்டின் உயர்வு தாழ்வுக்கு ஏற்றவாறு நுழைந்து உயர்வும் தாழ்வுமான இடங்களில் அமர்கின்றனர். அதேபோல், உலகமாகிய நாடகமேடையில் அவரவர்கள் செய்த புண்ணிய பாவங்களுக்குத் தக்கவாறே ஆன்மாக்களை இறைவன் பிறப்பித்து இன்ப துன்பங்களை நுகருமாறு புரிகின்றனன்.
ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே;
அடக்குவித்தால் ஆர்ஒருவர் அடங்கா தாரே;
ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே;
உருகு வித்தால் ஆர்ஒருவர் உருகா தாரே;
பாட்டுவித்தால் ஆர்ஒருவர் பாடா தாரே;
பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே;
காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே
காண்பார்ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே. --- அப்பர்.
ஊட்டுவிப்பானும், உறக்குவிப்பானும், இங்குஒன்றோடு ஒன்றை
மூட்டுவிப்பானும், முயங்குவிப்பானும், முயன்ற வினை
கூட்டுவிப்பானும், இருவினைப் பாசக் கயிற்றின்வழி
ஆட்டுவிப்பானும் ஒருவன்உண்டே தில்லை அம்பலத்தே. --- பட்டினத்தார்.
பாட்டுவித்தால் பாடுகின்றேன்; பணிவித்தால்
பணிகின்றேன்; பதியே! நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன்; குழைவித்தால்
குழைகின்றேன்; குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன்; உறக்குவித்தால்
உறங்குகின்றேன்; உறங்காது என்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன்; அந்தோ! இச்
சிறியேனால் ஆவது என்னே.
உடுப்பவனும் உண்பவனும் நானேஎன்
னவும்நாணம் உறுவது, எந்தாய்!
தடுப்பவனும் தடைதீர்த்துக் கொடுப்பவனும்
பிறப்பிறப்புத் தன்னை நீக்கி
எடுப்பவனும் காப்பவனும் இன்பஅனு
பவஉருவாய் என்னுள் ஓங்கி
அடுப்பவனும் நீஎன்றால், அந்தோ! இச்
சிறியேனால் ஆவது என்னே. --- திருவருட்பா.
No comments:
Post a Comment