அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வங்கார மார்பிலணி
(திருச்செங்காட்டங்குடி)
முருகா!
மெய்யுபதேசம் புரிந்து
அருளி,
திருவடியில் சேர்த்து அருள்வாய்.
தந்தான
தானதன தானதன தானதன
தந்தான தானதன தானதன தானதன
தந்தான தானதன தானதன தானதன ...... தனதான
வங்கார
மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
வண்காதி
லோலைகதிர் போலவொளி வீசஇதழ் ...... மலர்போல
மஞ்சாடு
சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமயல் ......
இடுமாதர்
சங்காளர்
சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியென் ......உழலாமற்
சங்கோதை
நாதமொடு கூடிவெகு மாயையிருள்
வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது
தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் ......
புரிவாயே
சிங்கார
ரூபமயில் வாகனந மோநமென
கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென ......
விருதோதை
சிந்தான
சோதிகதிர் வேலவந மோநமென
கங்காள வேணிகுரு வானவந மோநமென
திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு ...... முருகோனே
இங்கீத
வேதபிர மாவைவிழ மோதியொரு
பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
யின்பான தேனிரச மார்முலைவி டாதகர ......
மணிமார்பா
எண்டோளர்
காதல்கொடு காதல்கறி யேபருகு
செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ
டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் ......பெருமாளே.
பதம் பிரித்தல்
வங்கார
மார்பில் அணி தாரொடு,உயர் கோடு அசைய,
கொந்து ஆர மாலை குழல் ஆரமொடு தோள்புரள,
வண் காதில் ஓலைகதிர் போல ஒளி வீச, இதழ் ...... மலர்போல,
மஞ்சு
ஆடு சாபநுதல் வாள்அனைய வேல்விழிகள்,
கொஞ்சார மோக கிளியாக நகை பேசியுற,
வந்தாரை வாரும் இரும் நீர் உறவு என ஆசை மயல்
...... இடுமாதர்,
சங்காளர், சூதுகொலை காரர், குடி கேடர், சுழல்
சிங்கார தோளர்,பண ஆசையுளர், சாதியிலர்,
சண்டாளர், சீசி, அவர் மாய வலையோடு அடியேன்..... உழலாமல்,
சங்கு
ஓதை நாதமொடு கூடி, வெகு மாயைஇருள்
வெந்து
ஓட, மூலஅழல் வீச, உபதேசம் அது
தண்காதில் ஓதிஇரு பாதமலர் சேரஅருள் ......
புரிவாயே.
சிங்கார
ரூப மயில் வாகன நமோ நம என,
கந்தா குமார சிவதேசிக நமோ நம என,
சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம என, ...... விருதுஓதை
சிந்துஆன
சோதி கதிர் வேலவ நமோ நம என,
கங்காள வேணி குரு ஆனவ நமோ நம என,
திண்சூரர் ஆழி, மலை தூள்பட வை வேலைவிடும் ......முருகோனே!
இங்கீத
வேத பிரமாவை விழ மோதி, ஒரு
பெண்காதலோடு வன மேவி, வளி நாயகியை,
இன்பான தேன் இரச மார் முலை விடாத கர ...... மணிமார்பா!
எண்தோளர்
காதல்கொடு, காதல் கறியே பருகு,
செங்காடு மேவி பிரகாச மயில் மேல் அழகொடு
என்காதல் மாலைமுடி ஆறுமுகவா! அமரர்
......பெருமாளே.
பதவுரை
சிங்கார ரூபமயில்
வாகன நமோநம என --- அலங்கார உருவத்தனே, மயில் வாகனனே, போற்றி, போற்றி, என்றும்,
கந்தா குமார சிவதேசிக
நமோநம என
--- கந்தப் பெருமானே, குமாரக் கடவுளே, சிவகுருநாதனே, போற்றி, போற்றி, என்றும்,
சிந்தூர பார்வதி
சுதாகர நமோநம என --- குங்குமம் அணிந்த பார்வதியின் பிள்ளையாய் அமைந்தவரே
போற்றி, போற்றி, என்றும்,
விருது ஓதை சிந்து ஆன
சோதிகதிர் வேலவ நமோநம என --- வெற்றிச் சின்னங்களின் ஓசைகள்
கடல்போல முழங்க, ஒள் வடிவம் கொண்ட
வேலாயுதரே போற்றி, போற்றி, என்றும்,
கங்காளவேணி குரு ஆனவ
நமோநம என
--- எலும்பு மாலைகளை அணிந்தவரும்,
திருச்சடைமுடியினை
உடையவருமான சிவபிரானுக்கு குருநாதன் ஆனவரே போற்றி, போற்றி, என்றும் (யாவரும் துதித்து நிற்க),
திண்சூரர் ஆழி மலை
தூள்பட, வைவேலை விடு
முருகோனே ---
வலிமை மிக்க சூரபதுமன் முதலியவரையும், கடலையும், கிரெளஞ்ச மலையையும் பொடியாகும்படி
கூரிய வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகப் பெருமானே!
இங்கீத வேத பிரமாவை
விழ மோதி ---
இனிமை வாய்ந்த வேதம் பயின்ற பிரமன் விழும்படியாக மோதியவரே!
ஒரு பெண் காதலோடு வனம்
மேவி
--- ஒப்பற்ற பெண் (வள்ளிநாயகி) மேல் காதலோடு அவள் வசித்த காட்டிற்குச்
சென்று
வளிநாயகியை இன்பான
தேன் இரச மார்முலை விடாத கர மணிமார்பா --- வள்ளிநாயகியின் இன்பம் நிறைந்த, தேனைப் போல் இனிமையான மார்பகங்களை விட்டு
நீங்காத கரதலமும் அழகிய திருமார்பும் உடையவரே!
எண் தோளர்
காதல்கொடு காதல் கறியே பருகு --- எட்டுத் தோள்களை உடைய சிவபிரான்
ஆசையுடனே பிள்ளைக்கறியை உண்ணப் புகுந்த
செங்காடு மேவி பிரகாச
மயில் மேலழகொடு --- திருச்செங்காட்டங்குடி என்னும் திருத்தலத்தைச்
சார்ந்து, ஒளிவீசும் மயில் மீது
அழகோடு வீற்றிருந்து,
என் காதல் மாலைமுடி
ஆறுமுகவா
--- எனது உள்ளத்து அன்பின் காரணமாக எழுந்த இந்தத் தமிழ் மாலையைப் புனைந்தருளும்
ஆறுமுகப் பரம்பொருளே!
அமரர் பெருமாளே --- தேவர்கள்
போற்றும் பெருமையில் மிக்கவரே!
வங்கார மார்பிலணி தாரொடு உயர் கோடு அசைய ---
மார்பில் அணிந்துள்ள பொன்மாலையுடன் உயர்ந்த மார்பகங்களும் அசைய,
கொந்து ஆர மாலை
குழல் ஆரமொடு தோள்புரள --- மலர்க் கொத்துக்கள் நிறைந்த மாலையினை
அணிந்த கூந்தலும் மணிமாலையும் தோளில் புரண்டு அசைய,
வண்காதில் ஓலைகதிர்
போலவொளி வீச
--- வளமான காதில் காதணி சூரிய ஒளி போன்ற ஒளியை வீச,
இதழ் மலர்போல --- உதடுகள்
குமுதமலர் போல் விளங்க,
மஞ்சாடு சாபநுதல் ---
மேகம்
தவழும் வானில் தோன்றும் வானவில் போன்ற நெற்றியுடன்,
வாள் அனைய வேல்விழிகள் --- ஒளி வீசுகின்ற வேலைப்
போன்ற கண்கள், ஆகிய இவற்றுடன்
கொஞ்சார மோக கிளியாக
நகை பேசி ---
கொஞ்சுதல் மிக்க ஆசைக் கிளி போன்று சிரித்துப் பேசி,
உற வந்தாரை வாரும்
இரு(ம்) நீர் உறவு என --- நெருங்கி வந்தவர்களை வாரும், இங்கே இரும், நீர் நமக்கு உறவினர் ஆயிற்றே, என்று உபசாரமாகக் கூறி,
ஆசைமயல் இடுமாதர் --- ஆசை மயக்கத்தை
ஊட்டுகின்ற பொது மாதர்கள்,
சங்காளர் சூது கொலைகாரர்
குடிகேடர்
-- கூடிக் களிப்பவர்கள், சூதாடிகள், கொலையும் செய்யும் குணத்தினர், குடியைக் கெடுப்பவர்கள்,
சுழல் --- திரிகின்றவர்கள்,
சிங்கார தோளர் --- அலங்காரமான
தோள்களை உடையவர்கள்,
பண ஆசை உளர் --- பணத்தில் ஆசை
வைத்தவர்கள்
சாதி இலர் --- சாதிபேதம் பார்க்காமல்
யாரோடும் கூடுபவர்கள்,
சண்டாளர் --- இழிகுணம் கொண்டவர்கள்,
சீசி அவர் மாய வலையோடு
அடியென் உழலாமல் --- சீ, சீ, என்று வெறுக்கத்தக்க இத்தகையோரது
மாயவலையில் அடியேன் சிக்கி அலையாமல்,
சங்கு ஓதை நாதமொடு
கூடி ---
யோகநெறியில் நிற்பதால் உண்டாகும் பத்து விதமான ஓசைகளை அனுபவித்து, அதனோடு கலந்து,
வெகு மாயை இருள் வெந்து
ஓட
--- மிக்க மாயையாகிய இருளளால் ஒரும் துன்பம் வெந்து அழிந்து போக,
மூல அழல் வீச --- மூலாக்கினி
வீசிட,
உபதேசம் அது தண் காதில் ஓதி --- உபதேசத்தை
எனது குளிர்ந்த காதில் தேவரீர் ஓதி,
இரு பாத மலர்
சேரஅருள் புரிவாயே --- இரு திருவடி மலர்களையும் அடியேன் சேரும்படியாகத்
திருவருளைத் தந்தருள்க.
பொழிப்புரை
அலங்கார உருவத்தனே, மயில் வாகனனே, போற்றி, போற்றி, என்றும், கந்தப் பெருமானே, குமாரக் கடவுளே, சிவகுருநாதனே, போற்றி, போற்றி, என்றும், குங்குமம் அணிந்த பார்வதியின்
பிள்ளையாய் அமைந்தவரே போற்றி, போற்றி, என்றும், வெற்றிச் சின்னங்களின் ஓசைகள் கடல்போல
முழங்க, ஒள் வடிவம் கொண்ட
வேலாயுதரே போற்றி, போற்றி, என்றும், எலும்பு மாலைகளை அணிந்தவரும், திருச்சடைமுடியினை உடையவருமான
சிவபிரானுக்கு குருநாதன் ஆனவரே போற்றி, போற்றி, என்றும் யாவரும் துதித்து நிற்க, வலிமை
மிக்க சூரபதுமன் முதலியவரையும்,
கடலையும், கிரெளஞ்ச மலையையும் பொடியாகும்படி
கூரிய வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகப் பெருமானே!
இனிமை வாய்ந்த வேதம் பயின்ற பிரமன்
விழும்படியாக மோதியவரே!
ஒப்பற்ற பெண்ணாகிய வள்ளிநாயகி மேல்
காதலோடு அவள் வசித்த காட்டிற்குச் சென்று, அந்த வள்ளிநாயகியின் இன்பம் நிறைந்த, தேனைப் போல் இனிமையான மார்பகங்களை விட்டு
நீங்காத கரதலமும் அழகிய திருமார்பும் உடையவரே!
எட்டுத் தோள்களை உடைய சிவபிரான்
ஆசையுடனே பிள்ளைக்கறியை உண்ணப் புகுந்த திருச்செங்காட்டங்குடி
என்னும் திருத்தலத்தைச் சார்ந்து,
ஒளிவீசும்
மயில் மீது அழகோடு வீற்றிருந்து,
எனது
உள்ளத்து அன்பின் காரணமாக எழுந்த இந்தத் தமிழ் மாலையைப் புனைந்தருளும் ஆறுமுகப்
பரம்பொருளே!
தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!
மார்பில் அணிந்துள்ள பொன்மாலையுடன்
உயர்ந்த மார்பகங்களும் அசைய, மலர்க் கொத்துக்கள்
நிறைந்த மாலையினை அணிந்த கூந்தலும் மணிமாலையும் தோளில் புரண்டு அசைய, வளமான காதில் காதணி சூரிய ஒளி போன்ற
ஒளியை வீச, உதடுகள் குமுதமலர்
போல் விளங்க, மேகம் தவழும் வானில்
தோன்றும் வானவில் போன்ற நெற்றியுடன், ஒளி
வீசுகின்ற வேலைப் போன்ற கண்கள்,
ஆகிய இவற்றுடன்
கொஞ்சுதல்
மிக்க ஆசைக் கிளி போன்று சிரித்துப் பேசி, நெருங்கி வந்தவர்களை வாரும், இங்கே இரும், நீர் நமக்கு உறவினர் ஆயிற்றே, என்று உபசாரமாகக் கூறி, ஆசை மயக்கத்தை
ஊட்டுகின்ற பொது மாதர்கள்; கூடிக் களிப்பவர்கள்; சூதாடிகள்; கொலையும் செய்யும் குணத்தினர்; குடியைக் கெடுப்பவர்கள்; திரிகின்றவர்கள்; அலங்காரமான தோள்களை உடையவர்கள்; பணத்தில் ஆசை வைத்தவர்கள்; சாதிபேதம் பார்க்காமல் யாரோடும்
கூடுபவர்கள்; இழிகுணம் கொண்டவர்கள். சீ, சீ, என்று வெறுக்கத்தக்க இத்தகையோரது
மாயவலையில் அடியேன் சிக்கி அலையாமல், யோகநெறியில்
நிற்பதால் உண்டாகும் பத்து விதமான ஓசைகளை அனுபவித்து, அதனோடு கலந்து, மிக்க
மாயையாகிய இருளளால் ஒரும் துன்பம் வெந்து அழிந்து போக, மூலாக்கினி வீசிட, உபதேசத்தை
எனது குளிர்ந்த காதில் தேவரீர் ஓதி, இரு திருவடி மலர்களையும் அடியேன்
சேரும்படியாகத் திருவருளைத் தந்தருள்க.
விரிவுரை
கொங்கு
நாட்டில், இப்போது பவானி என்று
வழங்கப்படும் திருநணா என்ற பாடல் பெற்ற திருத்தலத்தின் அருகில் உள்ளது பூநாச்சி
என்னும் கிராமம். அந்த கிராமத்தில்,
நெடுங்காலம்
பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்த சிதம்பர ஜோசியர், இலட்சுமி அம்மாள் என்னும் தம்பதியருக்கு, திருச்செங்கோட்டிற்குச் சென்று
வழிபட்டதன் பலனாக ஒரு பெண் குழந்தை பிறந்து, அதற்கு நாகம்மாள் என்று பெயரிட்டு
வளர்த்து வந்தனர். பிறகு,
25.11.1870 - இல்
ஒரு ஆண் குழந்து பிறந்தது. அவருக்கும் திருச்செங்கோட்டு இறைவரின் திருநாமமாகிய
அர்த்தநாரி என்று பெயரிட்டு அழைத்து, வளர்த்தனர்.
இள வயதிலேயே தந்தையை இழந்து, மாமாவிடம் வளர்ந்து
வந்தார். பள்ளிப் பாடம் ஏறவில்லை. ஒன்பது
வயதில் திருமணம் ஆயிற்று. அவரது அத்தை மகன் வேலை பார்க்கும் மைசூர் அரண்மனைக்கு, சென்று மாதம் ஒன்பது ரூபாய் ஊதியத்தில்
சமையல் உதவியாளராகச் சேர்ந்தார்.
அர்த்தநாரியின்
மனைவியர் இருவரும், மக்களும் இறந்து
போனதால், வாழ்க்கையில்
வெறுப்புற்று இருந்தார். அவருக்குத் தீராத குன்ம நோய் வந்தது. மைசூர் சமஸ்தானத்தில்
உள்ள கோயில்களுக்கு எல்லாம் சென்று வந்தும் அவருக்கு வந்த நோய் தீரவில்லை.
பார்க்காத மருத்துவமும் இல்லை.
ஒருநாள், அரண்மனையில் வேலை செய்யும் கொத்தன்
ஒருவன், அர்த்தநாரியிடம், "நீ பழநி ஆண்டவரைத்
தரிசித்தால் நோய் தீரும்" என்றான். 1908-ஆம் ஆண்டு சனவரி மாதம் 18- ஆம் நாள் பழநியை வந்து அடைந்தார்.
பெருமானைத் தரிசித்து அன்று முதல் திருக்கோயில் பணிகளில் ஈடுபட்டு வந்தார். நான்கு
ஆண்டுகள் பழநியில் இருந்த காலத்தில், திருவிழாக்
காலத்தில், மதுரைத் தேவதாசி
ஒருத்தி பழநிக்கு வந்து, "வங்கார மார்பில்
அணி" என்னும் மேற்குறித்த திருச்செங்காட்டங்குடித் திருப்புகழைப் பாடி நடனம்
ஆடினாள். அப் பாடலில், "சிங்கார ரூபமயில் வாக
நமோ நம" என்ற வரியைப் பாடுங்கால், அர்த்தநாரிக்கு
மனம் ஒன்றிப் போய், கண்களில் தாரை
தாரையாக கண்ணீர் வர, மெய்ம்மறந்து போனார்.
அதுவரை, தமிழ்நாட்டில்
பிறந்தாலும், கன்னட நாட்டிலேயே
வாழ்ந்து தமிழே சிறிதும் அறியாது இருந்த அர்த்தநாரிக்கு அந்தத் திருப்புகழைக்
கேட்ட மாத்திரத்திலேயே ஒரு தெய்வீக உணர்ச்சி எழுந்தது. அங்குள்ளவர்களைக் கேட்டு, அது திருப்புகழ்ப்
பாடல் என்று அறிந்து, தமிழை ஒரு சிறுவன்
மூலம் கற்று, திருப்புகழ்ப்
பாடல்களை இசையோடு பாடும் ஆற்றலைத் திருமுருகன் அருளால் பெற்றார். அவரை "மைசூர்
சுவாமிகள்" என்று மக்கள் அழைத்தனர். இரமணர், சேஷாத்திரி சுவாமிகள் போன்ற மகான்களின்
அருளைப் பெற்று, பின் நாளில் வள்ளிமலை
சென்று, அங்கே ஆசிரமம்
அமைத்து, சின்னமாம் ஏகதாரையைக்
கையிலே ஏந்தி, சென்னை மாகாணம்
எல்லாம் சொர்ண மாரி போலத் திருப்புகழைப் பாடிப் பரப்பி, திருப்புகழ் சுவாமிகள் என்றும், வள்ளிமலை சுவாமிகள் என்றும், திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள்
என்றும் போற்றப்பட்ட மகான் அவரே.
பானை
சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, திருப்புகழுக்கு உள்ள
அருளாற்றலுக்குச் சான்ளாக இத் திருப்புகழ் விளங்கியதை அறிந்து இன்புறலாம்.
வங்கார
மார்பில் அணி தாரொடு உயர் கோடு அசைய ---
வங்காரம்
- பொன். பொன்போலும் அழகிய மார்பு.
தார்
- மாலை. பொன்போலும் அழகிய மார்பில் அணிந்துள்ள மாலை.
கோடு
- யானையின் தந்தம், மேட்டு நிலம்.
மலை. இவைகள் பெண்களின் பருத்த முலைகளுக்கு உவமையாகச் சொல்லப்படும்.
அழகிய
பொன்போலும் மார்பில் அணிந்துள்ள மாலையோடு, முலைகளும் அசையும்படி, காண்பவர்
கருத்தைக் கவரும் வண்ணம் நடந்து வருபவர் விலைமாதர்கள்.
கொந்து
ஆர மாலை குழல் ஆரமொடு தோள்புரள ---
கொந்து
- கொத்து. மலர்க் கொத்தைக் குறித்தது.
மஞ்சாடு
சாபநுதல் ---
மஞ்சு
- மேகம்.
சாபம்
- வில். வானில் தோன்றும் வில்லைப் போன்ற நெற்றியினை உடையவர்கள்.
வாள்
அனைய வேல்விழிகள் ---
வாள்
- ஒளி, கூர்மை.
ஒளி
வீசுகின்ற கூர்மையான வேலைப் போன்ற கண்கள்.
கொஞ்சார
மோக கிளியாக நகை பேசி ---
கிளியின்
பேச்சு கொஞ்சுவதைப் போல் இருக்கும். எனவே, கொஞ்சுகிளி என்பர். கிளியைப் போலக் கொஞ்சி, சிரித்துப்
பேசுவர்கள் விலைமாதர். அது கேட்டோரின் சிந்தையை மயக்கும்.
உற
வந்தாரை வாரும் இரு(ம்) நீர் உறவு என ஆசைமயல் இடுமாதர் ---
தன்னிடத்தில்
வந்தவர்கள் பொருள் மிகுதி படைத்தவர்களானால், அவர்களை வணக்கம் கூறி, "வாருங்கள் என
உபசரித்து. தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, இது உங்கள் வீடு, இனி, நான் வேறு
நீங்கள் வேறு அல்ல, நீங்கள் இங்கேயே இருத்தல் வேண்டும், உங்களை விட்டால் எனக்கு
உறவு ஏது?" என்றெல்லாம்
ஆசை வார்த்தைகளைப் பேசி, அறிவு மயக்கத்தை உண்டுபண்ணி வசப்படுத்துபவர்
விலைமாதர்.
சங்காளர்
சூது கொலைகாரர் குடிகேடர் --
சங்கம்
- கூடுதில்,
சூது
- உள்ளத்திலே பொருள் கருதி, அன்புள்ளவர்
போலச் சூது செய்பவர். சூதும் வாதும் வேதனை செய்யும். கொலையும் செய்யத்
துணிபவர்கள். குடி கொடுக்கின்றவர்கள்.
சுழல் ---
பொருளாசை
கொண்டு, அது உள்ளவரை நாடித் திரிகின்றவர்கள்,
சிங்கார
தோளர்
---
சிங்காரம்
- அலங்காரம்.
பண
ஆசை உளர்
---
பொன்னிலும், பொருளிலும் ஆசை வைத்தவர்கள்
சாதி
இலர்
---
வருபவர்கள்
பொருள் உடையவராக இருந்தால் போதும். சாதிபேதம் பார்க்காமல் யாரோடும் கூடுபவர்கள்,
சண்டாளர் ---
கயமைத்
தன்மை உடையவர்கள். தீய குணங்களைக் கொண்டவர்கள்.
சங்கு
ஓதை நாதமொடு கூடி ---
ஓதை
- ஓசை. கேட்கப்படுவது.
நாதம்
- ஒலி. உணரப்படுவது.
அட்டாங்க
யோகம் என்னும் மார்க்கத்தில், ஏழாவது
படியிலையில் சொல்லப்படுவது. தியானம் ஆகும். தியானம் என்பதன் பொருள் இடைவிடாது
நினைத்தல்.
தியானம்
என்பது சாதனை யோகம், சாத்திய யோகம் என்று இருவகைப்படும்.
இதனைத்
திருமந்திரம் விளக்குமாறு காண்க.
வரும்
ஆதி ஈர் எட்டுள் வந்த தியானம்
பொருவாத
புந்தி புலன்போக மேவல்,
உருவாய
சத்தி பரத்தியானம் உன்னும்
குருவார்
சிவத்தியானம் யோகத்தின் கூறே.
இதன்
பொருள் --- தாரணை
நிலையில் சொல்லியவாறு, `பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, அந்தக்கரணம் நான்கு, பிரகிருதி ஒன்று` என்னும் பதினைந்துடன் புருடன் ஒன்று
கூடப் பதினாறையும் தியான முறைப்படி அவ்வவ் ஆதாரங்களில் வைத்துத்
தியானித்தல், கருவி கரணங்களில்
இருந்து நீங்கி நிற்கும் சாதன யோகமாகவே முடியும். அதற்குமேல் ஒளி வடிவாகிய
சத்தியையும், அதற்குமேல் அருவாய்
நிற்கும் சிவத்தையும் தியானித்தலே சாத்திய யோகமாம். ஆகவே, தியான யோகம், சாதன சாத்திய வகையால் இங்ஙனம் இருகூறாய்
நிற்கும் என்க.
ஆஞ்ஞை
என்னும் புருவமத்தியில் புருடனை விழுங்கி நிற்கும் ஒளி வடிவாக இறைவனைத்
தியானிப்பின், அது சத்தித்
தியானமாகும்.
ஒளி
வடிவிற்கு மேலானது அருவம். இறைவனை நிராதாரமான உச்சியில் அருவமாகத் தியானித்தல்
சிவத்தியானம் ஆகும்.
இந்தச்
சத்தி சிவத் தியானமே சாத்திய யோகத்தியானம் என்க.
ஒண்ணா
நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப்
பார்த்துக் கலந்து, அங்கு இருந்திடில்,
விண்
ஆறு வந்து வெளி கண்டிட ஓடிப்
பண்ணாமல்
நின்றது பார்க்கலும் ஆமே.
இதன்
பொழிப்புரை
: புறத்தில்
உள்ளவர்களால் பார்க்க இயலாத கண்ணில் (திறவாது மூடியிருக்கின்ற நெற்றிக் கண்ணில்)
மின்னல் போலத் தோன்றிய ஒளியைப் பின் அக்கண் நிரம்பக் குறைவின்றிப் பார்த்து, அதனொடு உணர்வு ஒன்றியிருப்பின், பிற முயற்சிகளுள் யாதும் செய்யாமலே அந்த
ஒளியை நன்கு தரிசித்திருக்கலாம்.
ஒருபொழுது
உன்னார் உடலோடு உயிரை,
ஒருபொழுது
உன்னார் உயிருள் சிவனை,
ஒருபொழுது
உன்னார் சிவன் உறை சிந்தையை
ஒருபொழுது
உன்னார் சந்திரப் பூவே.
இதன்
பொழிப்புரை
: உலகர்
பலரும் அழிபொருளாகிய உடம்பை உணர்கின்றார்களே அல்லாமல், அதனோடு வேறு அறக் கலந்து நிற்கின்ற
அழிவில்லாத பொருளாகிய உயிரை அறிதல் இல்லை. இனி, ஒரு சிலர் உயிரை அறியினும், அவ்வுயிர்க்கு உயிராய் நிற்கின்ற சிவனை
அறிகின்றார்களில்லை. இனிச் சிலர்,
`உயிர்க்குயிராய்ச்
சிவன் ஒருவன் இருக்கின்றான்` என்று உணரினும், `அவன், ஆஞ்ஞை என்னும் புருவமத்தியில், தியானத்தால் காணத்தக்கவன்` என்று உணரமாட்டாதவர் ஆகின்றனர். இன்னும்
ஒரு சிலரோ, `அவ்வாறு காணத்
தக்கவன்` என்று உணர்ந்தும் ஒரு
நொடி நேரமாயினும் அந்தத் தியானத்தைத் தலைப்பட எண்ணாமலே இருந்து ஒழிவர்!
தியானத்தின்
சிறப்பை அறிந்திருந்தும் அதில் நில்லாதவர் அறியாதாரோடு ஒப்ப அறிவிலிகளே ஆவர்.
தியானத்துக்கு
இலக்கணம் இவ்வாறு கூறப்பட்டது.
மனத்து
விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து
விளக்கினைச் செல்ல எருக்கி
அனைத்து
விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து
விளக்கது மாயா விளக்கே.
இதன்
பொழிப்புரை
: மேல்
மாடத்தில் ஏற்ற வேண்டுவதாகிய விளக்கை நன்றாக ஏற்றிய பின்னும், மாளிகையை அழிக்க அதன் ஒரு பக்கத்தில்
பற்றியுள்ள `சினம்` என்னும் நெருப்பை முற்ற அணைத்துவிட்டுக்
கீழ் நிலையில் உள்ள மற்றைய விளக்குகளும் அணைந்து போகாதபடி எல்லாவற்றிலும் திரியை
ஒரு சேரத் தூண்டி வைத்தால், முன்பு மேல்
மாடத்தில் ஏற்றப்பட்ட விளக்கு உண்மையில் ஏற்றப்பட்டதாகும்.
இவ்வாறு, புருவ மத்தியில் இறைவனைக் கண்டு வணங்குவதே, இடைவிடாது
நினைத்தல் என்னும் தியானம் ஆகும். தியானம் என்பது, உயிர்க்கு உயிராகப்
பொருந்தி இருக்கும் இறைவனை, உள்முகமாகத் தரிசிப்பது.
இதை
விடுத்துப் பலவாறு முயன்றாலும் இறைவனைக் காணமுடியாது என்கின்றார் திருமைல நாயனார்.
எண்ணாயிரத்து
ஆண்டு யோகம் இருக்கினும்,
கண்ணார்
அமுதனைக் கண்டு அறிவார் இல்லை;
உண்நாடி
உள்ளே ஒளிபெற நோக்கிடில்
கண்ணாடி
போலக் கலந்து நின்றானே.
இதன்
பொழிப்புரை
: நெடுங்காலம்
யோகம் செய்யினும், மேற்கூறிய தியான
நிலையை அடைய முயல்பவர் அரியர். அந்நிலையை அடைந்தால், சிவன், கண்ணாடியுள்ளே இருக்கின்ற பொருள் இனிது
விளங்குதல்போல, உயிர்க்குயிராய்
நிற்கின்ற நிலை இனிது விளங்கும்.
தியானத்தின்
பயனைப் பின்வரும் பாடலில் காட்டினார் நாயனார்.
நாட்டம்
இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்,
வாட்டமும்
இல்லை; மனைக்கும் அழிவுஇல்லை;
ஓட்டமும்
இல்லை; உணர்வு இல்லை; தான் இல்லை;
தேட்டமும்
இல்லை; சிவன்அவன் ஆமே.
இதன்
பொழிப்புரை
: ஒருவன்
ஆக்ஞைத் தியானம் செய்தால் துன்பம்,
இறப்பு, கவலை, ``எனது`` என்னும் பற்று, ``யான்`` என்னும் முனைப்பு, இவை காரணமாகச் சிலவற்றைத் தேட முயலும்
முயற்சி ஆகிய அனைத்தும் அவனுக்கு இல்லாது ஒழியும். பின்பு அவன் சிவனேயாய்
விடுவான்.
தியான
நிலையை அடைவதே, உடம்பு பெற்றதன்
பயன் என்பதைப் பின்வரும் பாடலால் வலியுறுத்துவார் நாயனார்.
நயனம்
இரண்டையும் நாசிமேல் வைத்திட்
டுயர்வெழா
வாயுவை உள்ளே அடக்கித்
துயரற
நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது
காயம் பயமில்லை தானே.
இதன்
பொழிப்புரை
: ஆஞ்ஞைத்
தியானத்தை முறைப்படி செய்து அதனால் இன்புற்றிருப்பவர்க்கு இவ்வுடம்பு தரும் பயன்
இவ்வின்ப நிலையே ஆகும். ஆகவே, இப்பயனை இவ்வுடம்பு
தாராது ஒழியின், அதனால் பயன்
வேறில்லை.
இவ்வாறு
தியான நிலையில் நின்றார்க்கு விளையும் பயன்
பின்வரும் பாடால் கூறப்பட்டது.
மணிகடல்
யானை வார்குழல் மேகம்
அணிவண்டு
தும்பி வளை பேரிகை யாழ்
தணிந்து
எழு நாதங்கள் தாம்இவை பத்தும்
பணிந்தவர்க்கு
அல்லது பார்க்க ஒண்ணாதே.
இதன்
பொழிப்புரை
: `மணியின் ஓசை, கடல் ஓசை, யானை பிளிறும் ஒலி, குழல் இசை, மேகத்தின் முழங்கு குரல், வண்டு, தும்பி இவற்றின் ஒலி, சங்கநாதம், முரசின் முழக்கம், யாழ் இசை` என்னும் ஒலிகள் போன்ற மெல்லிய ஒலிகள்
பத்தினையும் ஆஞ்ஞைத் தியானத்தை அடைந்தவர்கட்கு அல்லது, மற்றையோர்களுக்குக் கேட்டல்
கூடாததாகும்.
எனவே, `கேட்கப்படுதல் தியானத்தில் நிலைத்து
நின்றமைக்கு அறிகுறி` என்றவாறாயிற்று.
வெகு
மாயை இருள் வெந்து ஓட ---
மாயை
என்பது அறிவு மயக்கதைச் செய்வது. பக்குவப் பாட்டார்க்கு அறிவில் தெளிவை உண்டு
பண்ணுவது.
இருள்
- துன்பத்தைக் குறித்து நின்றது. மாயை உண்டு பண்ணும் அறிவு மயக்கதால் வரும்
துன்பம் இல்லாமல் போகும்படி, யாகமார்க்கத்தில்
நிற்றலை வேண்டும்.
மூல
அழல் வீச
---
மூலம் - மூலாதாரம், இது குதத்திற்கும் குறிக்கும்
நடுவில் இருப்பது, முக்கோண
வடிவுள் நான்கு இதழ்க் கமலம், மாணிக்க நிறமாய் உள்ளது. கணபதி, குண்டலினி சத்தி, 'ஓம்' என்ற ஓரெழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.
ஆதார மூலத்து அடியில் கணபதியைப்
பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்.
முக்கோண வடிவமாகிய மூலாதாரத்தின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் கணபதியின்
திருவடித் தாமரைகளைப் பணிவது எப்போது.
--- பத்திரகிரியார்
மெய்ஞ்ஞானப்புலம்பல்.
மூலத்து உதித்து எழுந்தமுக்கோணச் சதுரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே.
எங்கும் நிறைந்த பொருளே, மூலாதாரத்தில் உதித்த திரிகோண வடிவமாய் உள்ள யந்திரத்தின் கண்ணே எழுந்தருளி இருக்கும்
வாலாம்பிகைத் தாயை வணங்காமல் அறிவிழந்தேன். --- பட்டினத்தார்
பூரணம்.
மூலாதாரத்தில் உள்ள மூலாக்கினியை நன்கு யோகசாதனத்தினால் ஒளிவிடச் செய்தல்
வேண்டும்.
மூலாதாரத்தின் மூண்டு எழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்து... --- ஔவையார்.
உபதேசம்
அது தண் காதில் ஓதி இரு பாத மலர் சேரஅருள் புரிவாயே ---
இவ்வாறு
அட்டாங்கயோக நிலையில் உயர்ந்து நின்றவர்க்கு, இறைவனே குருவாக வந்து ம்பெய்ப்பொருளை உபதேசித்து
அருள் புரிவான். இதன் பயனாக இறைவன் திருவடியை அடைந்து பேரானந்தப் பெருவாழ்வை உற்று, உயிரானது
இன்புற்று இருக்கும். எனவே, அதனை முருகப் பெருமானிடத்து அடிகளார்
வேண்டுகின்றார்.
எண்
தோளர் காதல்கொடு காதல் கறியே பருகு செங்காடு மேவி.... அமரர் பெருமாளே ---
திருச்செங்காட்டங்குடி
என்னும் திருத்தலத்தில் பரஞ்சோதியார் என்னும் சிறுத்தொண்டரை ஆட்கொண்டு அருள் புரிய
வேண்டி, சிவபரம்பொருள் புரிந்த
திருவிளையாடலை,
இப்பாடலில்
குறித்து அருள்கின்றார் அடிகளார்.
சோழ
நாட்டு, காவிரித் தென்கரைத்
திருத்தலம்,
திருச்செங்காட்டங்குடி
ஆகும். திருவாரூர்
மாவட்டத்திலுள்ள நன்னிலத்தில் இருந்து நாகூர் செல்லும் சாலை வழியில் திருப்புகலூர்
அடைந்து, அங்கிருந்து தெற்கே
திருக்கண்ணபுரம் செல்லும் சாலை வழியாகச் சென்று திருசெங்காட்டங்குடி என்னும்
திருத்தலத்தை அடையலாம்.
நன்னிலத்தில்
இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் இத்தலம்
இருக்கிறது. திருசெங்காட்டங்குடியில் இருந்து அருகில் உள்ள திருமருகல், திருசாத்தமங்கை, திருப்புகலூர் ஆகிய மற்ற
திருத்தலங்களையும் வழிபடலாம்.
திருவாரூரில்
இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., தூரத்திலுள்ள திருப்புகலூர் சென்று
அங்கிருந்து 4.5 கி.மீ. சென்றும், இத் திருத்தலத்தை
அடையலாம்.
இறைவர், உத்தராபதீசுவரர், ஆத்திவனநாதர், மந்திரபுரீசுவரர், கணபதீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர் என்னும்
திருநாமங்களைக் கொண்டு விளங்குகின்றார்.
இறைவியார், சூளிகாம்பாள், திருகுகுழல் உமைநங்கை என்னும்
திருநாமங்களோடு விளங்குகின்றார்.
தல
மரம் ஆத்தி.
திருஞானசம்பந்தப்
பெருமானும், அப்பர்
பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்ற திருத்தலம்.
கிழக்கு
நோக்கி, ஐந்து நிலையுள்ள
இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் உள்ளது. கோயில் வாயிலில் சத்திய தீர்த்தம் எனப்படும்
திருக்குளம் உள்ளது. கோபுரத்தின் உட்புறம் தல விருட்சமான ஆத்தி மரம் உள்ளது.
இறைவன் அமர்ந்திருக்க, சிறுத்தொண்டர் அவரை
அமுது செய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது. முன் மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள்
தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். உட்பிராகாரத்தில் பிட்சாடனர், சிறுத்தொண்டர், அவரது மனைவி திருவெண்காட்டு நங்கை, மகன் சீராளதேவர், அவரது வீட்டு பணியாள் சந்தனநங்கை
ஆகியோர் மூலத் திருமேனிகளையும்,
63
மூவர் திருமேனிகளையும் தரிசிக்கலாம். பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், சித்தி விநாயகர், நால்வர், சங்கபதுமநிதிகள் ஆகிய சந்நிதிகள்
அடுத்து உள்ளன. வாதாபி கணபதி தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார்.
இத்
திருத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும்
தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
விநாயகர்
வழிபாடு தமிழகத்தில் உருவாக காரணமாக இருந்தவர் இத்தலத்திலுள்ள வாதாபி விநாயகர்.
பல்லவ மன்னன் நரசிம்மவர்மனிடம் சேனாதிபதியாக இருந்த பரஞ்ஜோதி ஒருசமயம்
வடநாட்டிற்கு போருக்குச் சென்றார். சாளுக்கிய மன்னன் புலிகேசியை வென்று, சாளுக்கிய நாட்டின் தலைநகரமான வாதாபி
என்ற ஊரில் இருந்த கணபதி சிலையை,
தன்
வெற்றியின் அடையாளமாக தமிழகம் கொண்டு வந்தார். தன்னுடைய சொந்த ஊரான இத்தலத்தில்
அந்தச் சிலையை பிரதிஷ்டை செய்தார். வாதாபியிலிருந்து வந்ததால் இந்த விநாயகர்
வாதாபி விநாயகர் என்ற பெயர் பெற்றார். இந்த விநாயகர் ஒட்டிய வயிறுடன் காட்சி
தருவது விசேஷம். விநாயகர் சதுர்த்தியன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படும்.
"உத்ராபதியார்
" திருமேனி உருவான விதம் பற்றி சொல்லப்படும் செவிவழி வரலாறாவது - ஐயடிகள்
காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன்,
சிறுத்தொண்டருக்கு
இறைவன் அருள் புரிந்த செய்தியைக் கேட்டு, இத்தலத்திற்கு
வந்து, பல நாட்கள் தங்கி
வழிபட்டு வந்தார். உத்திராபதியாரின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், "இத்திருக்கோயிலைத்
திருப்பணி செய்து, உத்தராபதியார்
திருவுருவம் அமைத்துச் சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகில், யாம் சண்பகப்பூ மணம் வீசக் கட்சி
தருவோம்" என்றருளினார். ஐயடிகள் அவ்வாறே செயல்படலானார். கொல்லர்கள்
உத்ராபதியார் உருவம் அமைக்கத் தொடங்கினர். பல இடர்பாடுகள் - கும்பாபிஷேக நாள்
நெருங்கியது. மன்னனோ விரைவில் முடிக்க கட்டளையிட்டான். வடிவம் நன்கு அமைய வேண்டுமே
என்ற கவலையுடன் உலைக்களத்தில் ஐம்பொன்னை உருக்கிக் கொண்டிருந்தனர். இறைவன்
சிவயோகியார் வடிவில் அங்கு வந்து நீர் கேட்டார். இருந்தவர்கள், "உலைக்களத்தில் நீர்
ஏது? காய்ச்சிய மழுதான்
உள்ளது; வேண்டுமானால்
ஊற்றுகிறோம்" என்றனர். சிவயோகியார், "நல்லது; அதையே ஊற்றுங்கள்" என்றார்.
கொல்லர்கள் காய்ச்சிய மழுவை ஊற்ற,
வாங்கியுண்ட
சிவயோகியார் அங்கிருந்து மறைந்தார். உத்தராபதீஸ்வரர் உருவானார். செய்தியறிந்த
மன்னன் வியந்து போற்றி, அத்திருவுருவை
கோயிலில் எழுந்தருளுவித்து - கும்பாபிஷேகம் செய்வித்தான். ஐயடிகள் காடவர்கோனுக்கு
இறைவன் சண்பகப்பூவின் மணம் வீச,
காட்சித்
தந்தருளினார். (ஆதாரம் - கோயில் வரலாறு.)
மூலவர்
கணபதீஸ்வரருக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் உத்தராபசுபதீஸ்வரர் நின்ற கோலத்தில்
காட்சி தருகிறார். காவியுடை அணிந்து, கையில்
திருவோடு, திரிசூலம், உடுக்கை வைத்திருக்கிறார். சிவன்
சிலையாக மாறியபோது நெற்றியில் சிறிய புடைப்பு இருந்தது. அதனை சிற்பிகள் செதுக்கவே
ரத்தம் பீறிட்டது. கலங்கிய சிற்பிகள் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைத்தவுடன் ரத்தம் நின்றது.
தற்போதும் நெற்றியில் இந்த காயத்துடன் உத்திராபசுபதீஸ்வரர் காட்சி தருகிறார்.
சாயரட்சை பூஜையின்போது மட்டும் காயத்தில் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைக்கின்றனர். சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை மாதப்பிறப்பன்றும், சித்திரை பரணி, வைகாசி திருவோணம், ஐப்பசி பரணி ஆகிய நாட்களில் 2 முறையும் என மொத்தம் வருடத்திற்கு
பத்து நாட்கள் மட்டும் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
சிவபெருமான்
ஆடிய நவதாண்டவங்களில் திருசெங்காட்டங்குடியில் ஆடியது உபயபாத நர்த்தனம்
எனப்படுகிறது.
சிவபெருமான், அடியார் பொருட்டு
பூமியில் வந்து, தமது திருவடி தோய
நடந்து அருள் செய்தத் திருத்தலங்கள், சிதம்பரம், திருஆலவாய், திருவாரூர், திருக்கச்சூர்
ஆலக்கோயில், திருகுருகாவூர்
வெள்ளடை, திருஅம்பர்மாகாளம், திருமறைக்காடு, திருவாய்மூர், திருப்பஞ்ஞீலி, திருப்பெருந்துறை, திருச்சாய்க்காடு, திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் ஆகியவை
ஆகும்.
இத்திருத்தலம்
இறைவன் உத்திராபதீஸ்வரராகத் தோன்றி, சிறுத்தொண்ட நாயனார் இல்லம் முதலாக
கணபதீச்சர ஆலய ஆத்திமரம் வரை தனது பொற்பாதம் பதித்த சிறப்பினை உடையது.
சிறுத்தொண்டர் வரலாறு
சிறுத்தொண்ட
நாயனாரின் இயற்பெயர் - பரஞ்சோதியார். திருச்செங்காட்டங்குடி என்னும்
திருத்தலத்தில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர். ஆயுள்வேதக் கலைகளிலும் வடமொழிக்
கலைகளிலும் புலமை வாய்ந்தவர். படைத் தொழில், யானையேற்றம், குதிரையேற்றம் முதலியவற்றிலும் பயிற்சி
பெற்றவர். சிவபத்தியிலும், சிவனடியார் பத்தியிலும் சிறந்தவர்.
பரஞ்சோதியார்
சோழ மன்னனிடத்தில் அமைச்சராய் அமர்ந்து கடனாற்றி வந்தார். அவர், வேற்றரசர்களை வெல்வதிலும், அவர்கள் நாடுகளைப் பற்றுவதிலும்
பேர்பெற்று விளங்கினார். ஒரு முறை
வடபுலத்திலே உள்ள வாதாபி என்னும் நகரத்தில் போர் மூண்டது. அப் போரில் பரஞ்சோதியார்
தலைப்பட்டு வெற்றி பெற்றார். அவ் வெற்றியின் பயனாக மணி, நிதி முதலியவற்றைக் குவியல்
குவியலாகவும், யானை குதிரை
முதலியவற்றைக் கூட்டம் கூட்டமாகவும் பரஞ்சோதியார் திரட்டி வந்தார். அவற்றைக் கண்ட
மன்னன், பரஞ்சோதியார் திறத்தை
வியந்து பேசினான். அப்பொழுது அங்கு இருந்த மற்றை அமைச்சர்கள் மன்னனைப் பார்த்து, "இவர்
சிவனடியார். இவருக்கு எதிராவார் ஒருவரும்
இல்லை" என்று சொன்னார்கள். அது கேட்ட
மன்னன் நடுக்குற்றான். "அந்தோ கெட்டேன். இதுவரை இவரைச் சிவனடியார் என்று
உணர்ந்தேனில்லை. போர்முகத்துக்கு அனுப்பினேன், பாவியானேன்" என்று வருந்தினான்.
பரஞ்சோதியார் காலில் விழுந்து,
"அடியவரே, என் பிழை பொறுத்து அருளல்
வேண்டும்" என்று வேண்டினான். பரஞ்சோதியார், "என் கடமையைச் செய்தேன், அதனால் என்ன தீங்கு" என்றார்.
மன்னன் அவருக்கு நிதிக்குவியல்களையும், விருத்திகளையும்
கொடுத்து, "உமது மெய்ந்நிலையை
நான் அறியாதவாறு நடந்து வந்தீர். இனி என் கருத்துக்கு இசைந்து நடக்குமாறு
வேண்டுகிறேன். இனி, இப்பணி செய்தல்
வேண்டாம். திருத்தொண்டு செய்தல் வேண்டும்" என்று வணங்கி விடை கொடுத்தான்.
பரஞ்சோதியார் விடைபெற்றுத் தம் திருப்பதி சேர்ந்தார்.
பரஞ்சோதியார்
திருச்செங்காட்டங்குடியில் உள்ள கணபதீச்சரப் பெருமானை வழிபடுவார். தமக்கு இல்லக்
கிழத்தியாக வாய்த்த திருவெண்காட்டு நங்கையார் என்னும் பெருமாட்டியுடன் கலந்து
நல்லறம் ஓம்புவார். சிவனடியார்களுக்கு அமுதூட்டிய பின்னர்த் தாம் உண்பார். அவர், அடியவர்களிடத்தில் மிகச் சிறியராய்
நடப்பார். அதனால், அவருக்குச் "சிறுத்தொண்டர்"
என்னும் திருப்பெயர் வழங்கலாயிற்று.
இவ்வாறு
ஒழுகி வரும் நாளில், சிறுத்தொண்டர்
மனைவியார் கருவுற்றார். அவருக்கு ஒரு மகன் பிறந்தான். சீராளதேவர் என்னும்
திருப்பெயர் சூட்டப்பட்டது. அவர் தக்க பருவத்தில் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
திருச்செங்காட்டங்குடிக்குத்
திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளினார். அவர் தம் வருகையைக் கேள்வியுற்ற
சிறுத்தொண்டர், அவர் எதிர்கொண்டு
அழைத்து வந்தார். அன்பில் மூழ்கிப் பலவித
உபசாரம் செய்தார். திருஞானசம்பந்தப்
பெருமான், சிறுத்தொண்டரைத் தமது
திருப்பதிகத்தில் வைத்துச் சிறப்பித்து அருளினார்.
சிறுத்தொண்டரின்
திருத்தொண்டு திருக்கயிலையையும் ஈர்த்தது. அவர் அன்பை நுகரச் சிவபெருமான்
திருவுள்ளம் கொண்டார். ஒரு வயிரவத் திருக்கோலம் தாங்கி, திருச்செங்காட்டங்குடி சேர்ந்தார்.
பசியால் பீடிக்கப் பட்டார் போல் நடந்தார். "சிறுத்தொண்டரின் வீடு எங்கே"
என்று கேட்டு வந்தார். வீட்டின் வாயிலில் வந்து நின்று, "சிறுத்தொண்டர் வீட்டில் உள்ளாரா?" என்று கேட்டார். தாதியாராகிய
சந்தன நங்கையார், "மாதவர்
வந்துள்ளார்" என்று விரைந்து வந்து வயிரவர் திருவடியிலே விழுந்து வணங்கி, "நாயனார் அடியவர்களைத்
தேடிச் சென்றிருக்கிறார். அடிகள் உள்ளே எழுந்தருளலாம்" என்று சொன்னார்.
அதற்கு வயிரவர், "பெண்கள் உள்ள
இடத்தில் நாம் தனித்துப் புகுவதில்லை" என்று திருவாய் மலர்ந்து
அருளினார். அவ்வுரை திருவெண்காட்டு நங்கையாருக்குக்
கேட்டது. 'அடியவர் போய் விடுவாரோ' என்று எண்ணி ஓடி வந்தார். வந்து, "அடிகளே! நாயனார், அடியவர்கட்கு நாள்தோறும் அமுது
செய்விப்பது வழக்கம். இன்று ஓர் அடியவரும் வரவில்லை. அதனால், அவர் அடியவர்களைத் தேடிப்
போயுள்ளார். இப்பொழுது வருவார். புதிதாக
அடிகள் எழுந்தருளி இருக்கிறீர். அடிகள்
திருவேடத்தைப் பார்த்தால் நாயனார் மகிழ்வெய்துவார். அடிகள் உள்ளே எழுந்தருள்க" என்று
வேண்டினார். அவ் வேண்டுதலுக்கு இசையாது, "நாம்
இருப்பது வடதேசம். சிறுத்தொண்டரைக் காணவே
வந்தோம். அவர் இல்லாத வேளையில் இங்கே தங்கமாட்டோம். கணபதீச்சரத்தில் திருஆத்தியின்
கீழ் இருப்போம். சிறுத்தொண்டர் வந்ததும் தெரிவியுங்கள்" என்று கூறிக்
கணபதீச்சரத்தைச் சேர்ந்தார்.
அடியவர்கள்
யாரையும் காணாது சிறுத்தொண்டர் வீடு வந்தார்.
நிலைமையை மனைவியார்க்குக் கூறி வருந்தினார். அம்மையார், நாயனாரைப் பார்த்து, "இப்பொழுது இங்கே ஒரு
வயிரவர் வந்தார்" என்று சொன்னார். அதைக் கேட்டதும் நாயனார் "உய்ந்தேன், உய்ந்தேன்" என்று கூத்தாடினார்.
அவர் எங்கே என்று கேட்டு, ஓடோடிச் சென்று வயிரவரைக் கண்டார், வணங்கினார். வயிரவர், நாயனாரைப் பார்த்து,
"பெரிய
சிறுத்தொண்டர் நீரோ" என்றார். நாயனார் வயிரவரை மீண்டும் வணங்கி, "சிவனடியார்கள்
எளியேனை அப்படிச் சொல்வது வழக்கம். அடிகளே! ஏழைக் குடிலுக்கு எழுந்தருளல்
வேண்டும்" என்று முறையிட்டார். வயிரவர் சிறுத்தொண்டரைப் பார்த்து, "உம்மைக் காண வந்தோம்.
நாம் வடதேசத்தினோம். எமக்கு அமுதளிக்க உம்மால் இயலாது" என்றார். அதற்குச்
சிறுத்தொண்டர், "அடிகளின் உணவு
முறையைத் தெரிவியுங்கள். அவ்வாறே
செய்விப்பேன். அருமை ஒன்றும் இல்லை" என்றார். அதுகேட்ட வயிரவர், "நாம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை உண்போம்.
அந்த நாள் இந்நாள் ஆகும். பசுவைக் கொன்று சமைத்து உண்பது எமது வழக்கம். இது உமக்கு
அருமையானது அன்றோ" என்றார். அதற்குச் சிறுத்தொண்டர், "சால நன்று எமக்கு முந்நிரையும் (பசு, ஆடு, எருமை) உண்டு. ஒன்றும்
குறைவில்லை. அடிகளுக்குத் திருவமுது ஆகும் பசு இன்னதென்று தெரிவித்தல் வேண்டும்.
தெரிந்தால், நான் போய் விரைவில்
அமுதாக்குவித்துத் திரும்புவேன்" என்றார்.
வயிரவர், "தொண்டரே! நாம் உண்ணும் பசு நரப் பசுவாகும். ஐந்து
வயது உடையதாய், உறுப்பில் பழுது
இல்லாததாய் இருத்தல் வேண்டும். இன்னும் அதன் இயல்பைக் கூறுவோம். கூறினால், அது உமக்கு புண்ணில் வேல் எறிந்தால்
போல் தோன்றும்" என்றார். சிறுத்தொண்டர் "நன்றாகக் கூறலாம்"
என்றார். வயிரவர், "அச் சிறுவன் ஒரு குடிக்கு ஒருவனாய்
இருத்தல் வேண்டும். அவனைத் தாய் உவந்து பிடிக்கத் தந்தை உவந்தே அரிதல் வேண்டும்.
இவ்வாறு அரிந்து சமையல் செய்தால் நாம் உண்போம்" என்றார். சிறுத்தொண்டர், "இதுவும் எமக்கு அரிது
அன்று. அடிகள் திருவமுது செய்ய இசைவது போதும்" என்றார்.
சிறுத்தொண்டர்
பேரானந்தத்துடன் வீடு நோக்கி வந்தார். அவரது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக்
கொண்டு இருந்த திருவெண்காட்டு நங்கையார், நாயனார்
முகமலர்ச்சியோடு வருதவதைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார். நாயனார் வயிரவர்
விருப்பத்தைத் தெரிவித்தார். அது கேட்ட அம்மையார், "ஒரு குடிக்கு ஒருவனாக உள்ள சிறுவனுக்கு
ஏங்கே போவது" என்றார். நாயனார்
அம்மையாரைப் பார்த்து, "நினைவு நிரம்பப்
பொருள் கொடுத்தாலும், பிள்ளையை யாரும்
தரமாட்டார்கள். தந்தாலும் உவப்புடன் அரியும் பெற்றோர் இருப்பாரா? இனிக் காலம் தாழ்த்தல் ஆகாது. நமது
அருமைப் புதல்வனை அழைப்போம்" என்றார். அம்மையார், "நம் குலமணியைப் பள்ளியில் இருந்து
அழைத்து வாரும்" என்றார்.
பள்ளியிலிருந்து
ஓடி வந்து தன்னைத் தழுவிக்கொண்ட சீராளதேவனை, தோள் மேல் சுமந்து வீட்டுக்கு
வந்தார். அம்மையார் பிள்ளையை வாங்கினார்.
தலைமயிரைத் திருத்தினார். முகம் துடைத்தார். திருமஞ்சனமாட்டி அலங்கரித்துத் தமது
ஆருயிர்க் கணவரிடம் கொடுத்தார். சிறுவனை
அன்போடு வாங்கிய சிறுத்தொண்டர் அடுக்களைக்குச் செல்லாமல் வேறோர் இடம் சென்றார்.
அம்மையார் பாத்திரங்களைக் கழுவி எடுத்துக் கொண்டு பின் சென்றார். பிள்ளையின் தலையைச் சிறுத்தொண்டர் பிடிக்க, அம்மையார் பிள்ளையின் கால்களை மடியிலே
இறுக்கினார். இரண்டு கைகளையும் தமது இரண்டு கைகளால் பற்றினார். சீராளதேவர்
பெற்றோர் மகிழ்வதாகக் கருதி நகை செய்தார்.
சிறுத்தொண்டரும் அம்மையாரும், நம்
புதல்வன் நமக்குப் பெரும்பேற்றை அளித்தான் என்று மகிழ்வெய்தினர். அம் மகிழ்வுடன்
செயற்கரும் செய்கையினைச் செய்தனர்.
பள்ளியினில்
சென்று எய்துதலும்
பாத சதங்கை
மணியொலிப்பப்
பிள்ளை
ஓடி வந்து எதிரே
தழுவ எடுத்துப்
பியலின்மேல்
கொள்ள
அணைத்துக் கொண்டு, மீண்டு
இல்லம் புகுதக்
குலமாதர்
வள்ளலார்
தம் முன்சென்று
மைந்தன் தன்னை எதிர்வாங்கி.
குஞ்சி
திருத்தி முகம் துடைத்துக்
கொட்டை அரைநாண்
துகள்நீக்கி
மஞ்சள்
அழிந்த அதற்கு இரங்கி
மையும் கண்ணின் மருங்கு
ஒதுக்கிப்
பஞ்சி
அஞ்சு மெல்லடியார்
பரிந்து திருமஞ்சனம்
ஆட்டி
எஞ்சல்
இல்லாக் கோலஞ்செய்து
எடுத்துக் கணவர்
கைக்கொடுத்தார்.
அச்சம்
எய்திக் கறி அமுதாம்
என்னும் அதனால், அரும்புதல்வன்
உச்சி
மோவார், மார்பின்கண்
அணைத்தே முத்தம் தாம்
உண்ணார்,
பொச்சம்
இல்லாத் திருத்தொண்டர்
புனிதர் தமக்குக் கறி
அமைக்க
மெச்சு
மனத்தார் அடுக்களையின்
மேவார், வேறு கொண்டு அணைவார்.
ஒன்று
மனத்தார் இருவர்களும்
உலகர் அறியார் என, மறைவில்
சென்று
புக்கு, பிள்ளைதனைப்
பெற்ற தாயார்
செழுங்கலங்கள்
நன்று
கழுவிக் கொடுசெல்ல,
நல்ல மகனை எடுத்து உலகை
வென்ற
தாதையார் தலையைப்
பிடிக்க விரைந்து, மெய்த்தாயர்.
இனிய
மழலைக் கிண்கிணிக்கால்
இரண்டும் மடியின்
புடை இடுக்கி,
கனிவாய்
மைந்தன் கைஇரண்டும்
கையால் பிடிக்க, காதலனும்
நனி
நீடு உவகை உறுகின்றார்
என்று மகிழ்ந்து
நகைசெய்யத்
தனிமா
மகனைத் தாதையார்
கருவி கொண்டு தலை அரிவார்.
பொருஇல்
பெருமைப் புத்திரன்மெய்த்
தன்மை அளித்தான்
எனப்பொலிந்து,
மருவு
மகிழ்ச்சி எய்த, அவர்
மனைவியாரும் கணவனார்
அருமை
உயிரை எனக்கு அளித்தான்
என்று மிகவும் அகம் மலர,
இருவர்
மனமும் பேருவகை
எய்தி அரிய
வினைசெய்தார். --- பெரியபுராணம்.
"தலை இறைச்சி
அமுதுக்கு உதவாது" என்று அதை விலக்குமாறு தோழியாரிடம் அம்மையார் கூறினார்.
மற்ற உறுப்புக்கள் எல்லாம் சமைக்கப்பட்டன. சோறும் ஆக்கப்பட்டது.
நாயனார்
களிகூர்ந்து, திரு ஆத்தியை அடைந்து, "அடிகள் விரும்பியவாறு
சமையல் செய்யப்பட்டது. அருள் கூர்ந்த எழுந்தருள்க" என்று வேண்டினார்.
இருவரும் வீடு சேர்ந்தனர்.
நாயனாரும்
அம்மையாரும் முறைப்படி வயிரவருக்கு வழிபாடு செய்து "அமுது படைக்கும் வகை
எப்படி" என்று கேட்டனர். "சோற்றுடன் கறிகளையும் ஒக்கப் படைக்க"
என்றார் வயிரவர். திருவெண்காட்டு நங்கை பரிகலம் திருத்தி, சோறு கறிகளை முறைப்படி படைத்தார்.
அதனைப் பார்த்த வயிரவர், "பசுவின் உறுப்புக்கள்
எல்லாவற்றையும் சமைத்தீரா" என்று கேட்டார். "தலை இறைச்சி திருவமுதுக்கு
ஆகாது என்று அதனைக் கழித்தோம்" என்றார் திருவெண்காட்டு நங்கையார்.
"தலையும் வேண்டும்" என்றார் வயிரவர். நாயனாரும் அம்மையாரும் திகைத்து
நிற்கையில், தாதியாராகிய சந்தன
நங்கையார், "வயிரவர் திருவமுது
செய்யும்போது அவர்தம் எண்ணம் தலை இறைச்சியின் மீது செல்லினும் செல்லும் என்று
நினைந்து, அதையும் சமையல்
செய்து வைத்திருக்கிறேன்" என்றார். திருவெண்காட்டு நங்கையார் அகமகிழ்ந்து தலை
இறைச்சியையும் கொண்டு வந்து படைத்தார்.
பிறகு
வயிரவர், சிறுத்தொண்டரைப்
பார்த்து, "நாம் தனியே
உண்பதில்லை. சிவனடியார்களுடன் உண்பதே வழக்கம்.
அவர்களை அழைத்து வாரும்" என்றார். நாயனாருக்கு வருத்தம் மேலிட்டது.
"ஐயோ, இரு திருவமுது செய்ய
இடையூறு நேர்ந்ததே" என்று ஏங்கியபடியே வெளியே போனார். சிவனடியார் ஒருவரையும்
காணவில்லை. நிலையை வயிரவருக்குத் தெரிவித்தார். "திருநீரு அணிந்தவர்க்கே நான்
சோறிடுவது வழக்கம்" என்று சொல்லி வணங்கினார்.
வயிரவர், நாயனாரை நோக்கி, "உம்மைப் போலத் திருநீறு இட்டவரும் உளரோ? ஆகவே, நீர் எம்மோடு திருவமுது செய்வீர்"
என்றார். நங்கையாரை நோக்கி,
"நமக்குப்
படைத்த சோறு கறிகளில் இருந்து எடுத்து இவருக்கும் படைக்க" என்று பணித்தார்.
நங்கையாரும் அப்படியே செய்தார். 'நாம் உண்டால்
வயிரவரும் உண்பார்' என்று எண்ணி, சிறுத்தொண்டர் உண்ணப் புகுந்தார்.
நாயனாரைப் பார்த்து வயிரவர்,
"நாம்
உண்டு ஆறு மாதங்கள் ஆயிற்று. நீரோ நாளும் உண்பவர். நாம் உண்ணும் வரை பொறுக்கல்
ஆகாதா? நம்முடன் உணவு
கொள்வதற்குப் புத்திரன் இல்லையோ?
இருப்பின், அவனை அழையும்" என்றார். நாயனார், "எனக்குப் புதல்வன் உண்டு. ஆனால் அவன்
இப்போது இங்கு உதவான்" என்றார். வயிரவர், "அவன் வந்தால் அன்றி நாம் உண்ணோம்.
அவனைத் தேடி அழைத்து வாரும்" என்றார்.
நாயனாரும்
நங்கையாரும் செய்வது அறியாமல், திருவருளை நினைந்து
வெளியே வந்து, "மைந்தா! மணியே! சீராளா! வாராய்! வாராய்!
வயிரவர் உண்ண அழைக்கின்றார், வாராய்!
வாராய்!" என்று ஓலமிட்டு அழைத்தனர். ஆண்டவன் அருளால், சிராளதேவர் பள்ளியினின்று ஓடி வருபவர்
போல வந்தார். அம்மையார் அருமைப் புதல்வரை எடுத்து அணைத்து, நாயனார் கையில் கொடுத்தார். நாயனார், "அடியவர் அமுது
செய்யப் பெற்றோம் பெற்றோம்" என்று ஆனந்தம் கொண்டார். பிள்ளையுடன் வீட்டிற்கு விரைந்து வந்தார்.
அதற்கு முன்னரே வயிரவர் மறைந்தருளினார். சிறுத்தொண்டர் திகைத்தார், விழுந்தார், எழுந்தார், மயங்கினார். "வயிரவர் எங்கே
எங்கே" என்றார். இறைச்சியும் அமுதும் கலத்தில் காணோம். நடுக்குற்று வெளியே
வந்தார்.
அப்பொழுது
சிவபெருமான் உமாதேவியாருடனும், முருகப்
பெருமானுடனும் மழவிடைமேல் காட்சி தந்தார். பெருமான் அந்த நால்வருக்கும் அருள்
சுரந்து, தங்களைப் பிரியாத
பெருவாழ்வு நல்கி, உடன் அழைத்துச்
சென்றார்.
வையம்
நிகழும் சிறுத்தொண்டர்
"மைந்தா வருவாய்"
என அழைத்தார்,
தையலாரும்
தலைவர்பணி
தலை நிற்பாராய்த் தாம்
அழைப்பார்,
"செய்ய
மணியே! சீராளா!
வாராய், சிவனார் அடியார்யாம்
உய்யும்
வகையால் உடன்உண்ண
அழைக்கின்றார்" என்று
ஓலமிட.
பரமர்
அருளால் பள்ளியினின்று
ஓடி வருவான் போல்வந்த
தரம்
இல் வனப்பில் தனிப்புதல்வன்
தன்னை எடுத்துத்
தழுவி, தம்
கரமுன்
அணைத்துக் கணவனார்
கையில் கொடுப்பக்
களிகூர்ந்தார்
புரமூன்று
எரித்தார் திருத்தொண்டர்
உண்ணப் பெற்றோம் எனும்பொலிவால்.
வந்த
மகனைக் கடிதில் கொண்டு,
அமுது செய்விப்பான் வந்தார்,
முந்தவே
அப் பயிரவராம்
முதல்வர் அங்கண்
மறைந்துஅருள,
சிந்தை
கலங்கிக் காணாது
திகைத்தார், வீழ்ந்தார், தெருமந்தார்,
வெந்த
இறைச்சிக் கறி அமுதும்
கலத்தில் காணார்
வெருவுற்றார்.
செய்ய
மேனிக் கருங்குஞ்சிச்
செழுங் கஞ்சுகத்துப்
பயிரவர், யாம்
உய்ய
அமுது செய்யாதே
ஒளித்தது எங்கே எனத்தேடி
மையல்
கொண்டு புறத்து அணைய,
மறைந்த அவர்தாம், மலைபயந்த
தையலோடும்
சரவணத்துத்
தனயரோடும் தாம் அணைவார்.
தனிவெள்
விடைமேல் நெடுவிசும்பில்
தலைவர் பூத கணநாதர்
முனிவர்
அமரர் விஞ்சையர்கள்
முதலாய் உள்ளோர்
போற்றிசைப்ப,
இனிய
கறியும் திருவமுதும்
அமைத்தார் காண
எழுந்தருளிப்
பனிவெண்
திங்கள் முடிதுளங்கப்
பரந்த கருணை நோக்கு அளித்தார்.
அன்பின்
வென்ற தொண்டரவர்க்கு
அமைந்த மனைவியார் மைந்தர்
முன்பு
தோன்றும் பெருவாழ்வை
முழுதும் கண்டு
பரவசமாய்
என்பும்
மனமும் கரைந்து உருக
விழுந்தார், எழுந்தார், ஏத்தினார்,
பின்பு
பரமர் தகுதியினால்
பெரியோர் அவருக்கு அருள்புரிவார்.
கொன்றை
வேணியார் தாமும்,
பாகங் கொண்ட
குலக்கொடியும்,
வென்றி
நெடுவேல் மைந்தரும், தம்
விரைப்பூங் கமலச் சேவடிக்கீழ்
நின்ற
தொண்டர் மனைவியார்
நீடு மகனார் தாதியார்
என்றும்
பிரியாதே இறைஞ்சி
இருக்க உடன்கொண்டு ஏகினார். ---
பெரியபுராணம்.
கருத்துரை
முருகா!
மெய்யுபதேசம் புரிந்து அருளி, திருவடியில் சேர்த்து
அருள்வாய்.
No comments:
Post a Comment