திருவாஞ்சியம் - 0820. இபமாந்தர்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இபமாந்தர் சக்ர (திருவாஞ்சியம்)

தனதாந்த தத்த தனதன
     தனதாந்த தத்த தனதன
          தனதாந்த தத்த தனதன ...... தனதான


இபமாந்தர் சக்ர பதிசெறி
     படையாண்டு சக்ர வரிசைக
          ளிடவாழ்ந்து திக்கு விசயம ...... ணரசாகி

இறுமாந்து வட்ட வணைமிசை
     விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
          யெழிலார்ந்த பட்டி வகைபரி ...... மளலேபந்

தபனாங்க ரத்ந வணிகல
     னிவைசேர்ந்த விச்சு வடிவது
          தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு ...... வியபோது

தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு
     பிடிசாம்பல் பட்ட தறிகிலர்
          தனவாஞ்சை மிக்கு னடிதொழ ...... நினையாரே

உபசாந்த சித்த குருகுல
     பவபாண்ட வர்க்கு வரதன்மை
          யுருவோன்ப்ர சித்த நெடியவன் ...... ரிஷிகேசன்

உலகீன்ற பச்சை யுமையணன்
     வடவேங்க டத்தி லுறைபவ
          னுயர்சார்ங்க சக்ர கரதலன் ...... மருகோனே

த்ரிபுராந்த கற்கு வரசுத
     ரதிகாந்தன் மைத்து னமுருக
          திறல்பூண்ட சுப்ர மணியஷண் ......முகவேலா

திரைபாய்ந்த பத்ம தடவய
     லியில்வேந்த முத்தி யருள்தரு
          திருவாஞ்சி யத்தி லமரர்கள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இபமாந்தர், சக்ரபதி, செறி
     படை ஆண்டு, சக்ர வரிசைகள்
          இடவாழ்ந்து, திக்கு விசயம் ...... மண் அரசாகி,

இறுமாந்து, வட்ட அணைமிசை
     விரி சார்ந்து, வெற்றி மலர்தொடை
          எழில் ஆர்ந்த பட்டி வகை, பரி ...... மள லேபம்

தபன அங்க ரத்ந அணிகலன்,
     இவை சேர்ந்த விச்சு வடிவது,
          தமர்சூழ்ந்து மிக்க உயிர் நழு- ...... வியபோது

தழல்தாம் கொளுத்தி இட, ஒரு
     பிடிசாம்பல் பட்டது அறிகிலர்,
          தனவாஞ்சை மிக்கு, உன் அடிதொழ ...... நினையாரே.

உபசாந்த சித்த குருகுல
     பவ பாண்டவர்க்கு வரதன், மை
          உருவோன், ப்ர சித்த நெடியவன், ...... ரிஷிகேசன்,

உலகு ஈன்ற பச்சை உமைஅணன்,
     வடவேங்கடத்தில் உறைபவன்,
          உயர் சார்ங்க சக்ர கர தலன் ...... மருகோனே!

த்ரிபுராந்தகற்கு வர சுத!
     ரதி காந்தன் மைத்துன முருக!
          திறல்பூண்ட சுப்ரமணிய! சண் ......முக!வேலா!

திரைபாய்ந்த பத்ம தடவயல்
     இயில்வேந்த! முத்தி அருள்தரு
          திருவாஞ்சியத்தில் அமரர்கள் ...... பெருமாளே.


பதவுரை

      உபசாந்த சித்த குருகுல பவ --- சாந்த சித்தத்தை உடையவர்களும், குரு வமிசத்தில் தோன்றியவர்களுமான

      பாண்டவர்க்கு வரதன் --- பஞ்சபாண்டவர்களுக்கு  வரங்களை அருள்பவனும்,

      மை உருவோன் --- கருநிறம் உடையவனும்,

     ப்ரசித்த நெடியவன் --- புகழப்படும் நெடுமாலும்,

     ரிஷிகேசன் --- புலன்களை வென்றவனும்,

      உலகு ஈன்ற பச்சை உமை அணன் --- உலகங்கள் யாவையும் ஈன்றவளும், பச்சைநிறத் நிருமேனியை உடையவளும் ஆன உமாதேவியின் அண்ணனும்,

      வடவேங்கடத்தில் உறைபவன் --- வடவேங்கடம் என்னும் திருமலையில் வாழ்பவனும்,

      உயர் சார்ங்க சக்ர கர தலன் மருகோனே --- சிறந்த சாரங்கம் என்னும் வில்லையும், சுதரிசனம் என்னும் சக்கரத்தையும் திருக்கரத்தில் ஏந்தியவரும் ஆகிய திருமாலின் திருமருகரே!

      த்ரிபுராந்தகற்கு வர சுத --- திரிபுரங்களுக்கு அந்தகனாக இருந்த சிவபெருமானுக்கு வாய்த்த திருமகனே!

      ரதி காந்தன் மைத்துன முருக --- இரதியின் கணவன் ஆகிய மன்மதனுக்கு மைத்துனன் முறையான முருகப்பெருமானே!

      திறல் பூண்ட சுப்ரமணிய --- ஆற்றல் வாய்ந்த சுப்பிரமணியரே!

     ஷண்முக --- ஆறுமுகப் பரம்பொருளே!

     வேலா --- வேலாயுதரே!

      திரை பாய்ந்த பத்ம தடவயலியில் வேந்த --- நீர் பாயும் தாமரைக் குளங்கள் உள்ள வயலூரின் அரசரே!

      முத்தி அருள் தரு திருவாஞ்சியத்தில் அமரர்கள் பெருமாளே --- முத்தியை அருள்கின்ற திருத்தலமாகிய திருவாஞ்சியத்தில் வீற்றிருக்கும், தேவர்களால் போற்றப்படும் பெருமையில் மிக்கவரே!

      இப மாந்தர் சக்ர பதி --- யானைப்படை, காலாட்படை முதலிய படைகளையுடைய சக்ரவர்த்தியாகி,

      செறி படை ஆண்டு --- நிறைந்துள்ள நால்வகைச் சேனைகளையும் ஆண்டு,

      சக்ர வரிசைகள் இட வாழ்ந்து --- ஆணைச் சக்கரமானது முறை செய்யும் அரசராகி வாழ்ந்து,

     திக்கு விசய மண் அரசாகி இறுமாந்து --- திக்குவிஜயம் புரிந்து, இந்தப் புவிக்கு அரசர் ஆகி, மிக்க பெருமை உற்று,

      வட்ட அணைமிசை விரி சார்ந்து --- வட்ட வடிவான அணையின் மேல் விரிப்பில் சாய்ந்து இருந்து,

      வெற்றி மலர்தொடை --- வெற்றி மாலைகளும்,

      எழில் ஆர்ந்த பட்டி வகை பரிள லேபம் --- அழகு மிகுந்த ஆடைகளும், நறுமணக் கலவைப் பூச்சுக்களும்,

      தபன அங்க ரத்ந அணிகலன் --- கதிரவன் போல் ஒளி வீசும் இரத்தினங்களாலான ஆபரணங்களும்,

      இவை சேர்ந்த விச்சு வடிவது --- ஆகிய இவையெல்லாம் சேர்ந்துள்ள ஒரு மனித வித்துவின் வடிவமான இந்த உடலானது.

       தமர் சூழ்ந்து மிக்க உயிர் நழுவிய போது --- உறவினர்கள் சூழ்ந்திருக்க, உயிர் பிரிந்து போனபோது,

      தழல்தாம் கொளுத்தி இட --- நெருப்பிலே இடப்பட்டுக் கொளுத்தி விட,  

      ஒரு பிடி சாம்பல் பட்டது அறிகிலர் --- முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆவதை யாரும் அறியார்.

      தன வாஞ்சை மிக்கு உன் அடிதொழ நினையாரே --- பொருளாசை மிகுந்து, உமது திருவடிகளைத் தொழ நினைக்கமாட்டார்கள்.


பொழிப்புரை


         சாந்த சித்தத்தை உடையவர்களும், குரு வமிசத்தில் தோன்றியவர்களுமான, பஞ்சபாண்டவர்களுக்கு வரங்களை அருள்பவனும், கருநிறம் உடையவனும், புகழப்படும் நெடுமாலும், புலன்களை வென்றவனும், உலகங்கள் யாவையும் ஈன்றவளும், பச்சைநிறத் நிருமேனியை உடையவளும் ஆன உமாதேவியின் அண்ணனும், வடவேங்கடம் என்னும் திருமலையில் வாழ்பவனும், சிறந்த சாரங்கம் என்னும் வில்லையும், சுதரிசனம் என்னும் சக்கரத்தையும் திருக்கரத்தில் ஏந்தியவரும் ஆகிய திருமாலின் திருமருகரே!

         திரிபுரங்களுக்கு அந்தகனாக இருந்த சிவபெருமானுக்கு வாய்த்த திருமகனே!

         இரதியின் கணவன் ஆகிய மன்மதனுக்கு மைத்துனன் முறையான முருகப்பெருமானே!

         ஆற்றல் வாய்ந்த சுப்பிரமணியரே!

        ஆறுமுகப் பரம்பொருளே!

        வேலாயுதரே!

         நீர் பாயும் தாமரைக் குளங்கள் உள்ள வயலூரின் அரசரே!

         முத்தியை அருள்கின்ற திருத்தலமாகிய திருவாஞ்சியத்தில் வீற்றிருக்கும், தேவர்களால் போற்றப்படும் பெருமையில் மிக்கவரே!

         யானைப்படை, காலாட்படை முதலிய படைகளையுடைய சக்ரவர்த்தியாகி, நிறைந்துள்ள நால்வகைச் சேனைகளையும் ஆண்டு, ஆணைச் சக்கரமானது முறை செய்யும் அரசராகி வாழ்ந்து, திக்குவிஜயம் புரிந்து, இந்தப் புவிக்கு அரசர் ஆகி, மிக்க பெருமை உற்று, வட்ட வடிவான அணையின் மேல் விரிப்பில் சாய்ந்து இருந்து, வெற்றி மாலைகளும், அழகு மிகுந்த ஆடைகளும், நறுமணக் கலவைப் பூச்சுக்களும், கதிரவன் போல் ஒளி வீசும் இரத்தினங்களாலான ஆபரணங்களும்,  ஆகிய இவையெல்லாம் சேர்ந்துள்ள ஒரு மனித வித்துவின் வடிவமான இந்த உடலானது உறவினர்கள் சூழ்ந்திருக்க, உயிர் பிரிந்து போனபோது, நெருப்பிலே இடப்பட்டுக் கொளுத்தி விட,  முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆவதை யாரும் அறியார். பொருளாசை மிகுந்து, உமது திருவடிகளைத் தொழ நினைக்கமாட்டார்கள்.


விரிவுரை

இத் திருப்புகழில் அடிகளார், மனிதர்கள் தமக்கு வாய்த்த உடம்பு நிலையானது அல்ல என்பதை உணர்ந்து, உடம்போடு கூடி வாழும் காலத்திலேயே அறச் செயல்களைச் செய்து, இறைவனுடைய திருவடி தொழுது உய்யும் நெறியை அறியாமல் வாழ்ந்து, முடிவில் இந்த உடம்பானது ஒரு பிடி சாம்பல் ஆகும்படி இறந்து ஒழிகின்றார்கள் என்பதை உணர்த்துகின்றார்.

மிக உயர்ந்த நிலையில் உள்ளோரும் கூ, இறப்பினை அடைவர். இறந்த உடல் ஒரு பிடி சாம்பல் ஆகும்.

முடிசார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு
பிடிசாம்பராய் வெந்து மண் ஆவதும் கண்டு, பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பது அல்லால், பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்ய வேண்டும் என்றே அறிவார் இல்லையே.                                     
என்று பட்டினத்தார் பாடினார்.

உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?
கழப்பின் வாராக் கையுறவு உளவோ?
அதனால்,
நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேர் அற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து,
அன்பு என் பாத்தி கோலி, முன்புற
மெய் எனும் எருவை விரித்து, ஆங்கு ஐயம் இல்
பத்தித் தனிவித்து இட்டு, நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி, நேர் நின்று
தடுக்குநர்க்கு அடங்காது இடுக்கண் செய்யும்
பட்டி அஞ்சினுக்கு அஞ்சி, உள் சென்று
சாந்த வேலி கோலி, வாய்ந்தபின்
ஞானப் பெருமுளை நந்தாது முளைத்து,
கருணை இளந்தளிர் காட்ட, அருகாக்
காமக் குரோதக் களை அறக் களைந்து,
சேமப் படுத்துழி, செம்மையின் ஓங்கி
மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டு அம் எனக்
கண்ணீர் அரும்பி, கடிமலர் மலர்ந்து, புண்ணிய
அஞ்செழுத்து அருங் காய் தோன்றி, நஞ்சுபொதி
காள கண்டமும், கண்ஒரு மூன்றும்,
தோள் ஒரு நான்கும், சுடர்முகம் ஐந்தும்,
பவளநிறம் பெற்று, தவளநீறு பூசி,
அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்,
காணினும் கேட்பினும் கருதினும் களிதரும்

சேண் உயர் மருத மாணிக்கத் தீங்கனி
பையப் பையப் பழுத்துக் கைவர,
எம்ம னோர்கள் இனிது இனிது அருந்திச்
செம்மாந்து இருப்ப, சிலர் இதின் வாராது,
மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கி,

காமக் காடு மூடி, தீமைசெய்
ஐம்புல வேடர் ஆறு அலைத்து ஒழுக,
இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓட,
கல்லா உணர்வெனும் புல்வாய் அலமர,
இச்சைவித்து உகுத்துழி யான் எனப் பெயரிய

நச்சு மாமரம் நனிமிக முளைத்து,
பொய் என் கவடுகள் போக்கி, செய்யும்
பாவப் பல்தழை பரப்பி, பூவெனக்
கொடுமை அரும்பி, கடுமை மலர்ந்து,
துன்பப் பல்காய் தூக்கி, பின்பு

மரணம் பழுத்து, நரகிடை வீழ்ந்து,
தமக்கும் பிறர்க்கும் உதவாது
இமைப்பில் கழியும் இயற்கையோர் உடைத்தே.                                                      

என்று திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் பட்டினத்து அடிகள் பாடி உள்ளது காண்க.

இதனையே, "தினமணி சார்ங்க பாணி" எனத் தொடங்கும் சீகாழித் திருப்புகழிலும் அடிகள் காட்டினார்.

"தன் கைத் தடிகொடு, குந்தி கவி என,
உந்திக்கு அசனமும் மறந்திட்டு, ளமிக
          சலித்து, உடல் சலம் மிகுத்து, மதிசெவி
          விழிப்பு மறைபட, கிடத்தி, மனையவள்
     சம்பத்து உறைமுறை அண்டைக் கொளுகையில்,
     சண்டக் கரு நமன் அண்டி, கொளு கயிறு
          எடுத்து, விசைகொடு பிடித்து, உயிர்தனை
          பதைப்ப, தனிவழி அடித்து கொடு செல,
சந்தித்து அவர் அவர் பங்குக்கு அழுது,
இரங்க, பிணம் எடும் என்றிட்டு, றை பறை
          தடிப்ப, சுடலையில் இறக்கி, விறகொடு
          கொளுத்தி, ஒருபிடி பொடிக்கும் இலை எனும்......                                                உடல் ஆமோ"?

என்று திருவண்ணாமலைத் திருப்புகழிலும் அடிகளார் காட்டி உள்ளது காண்க.


இப மாந்தர் சக்ர பதி ---

இபம் - யானை.

சக்ரம், சக்கரம் - திருவாணைச் சக்கரம். அந்தச் சக்கரத்திற்குப் பதியாக விளங்குபவர் சக்கரபதி ஆவார். 
        
விச்சு வடிவது ---

விச்சு - விதை.

"அறுகுநுனி பனி அனைய சிறிய துளி, பெரியதொரு ஆகம் ஆகி" எனத் திருவிடைமருதூர்த் திருப்புகழில் அடிகாளர் காட்டி உள்ளது காண்க.
        
தமர் சூழ்ந்து மிக்க உயிர் நழுவிய போது ---

தமர் - தம்மவர், உறவினர்கள்.

எல்லாரும் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே உயிரானது இந்த உடலில் இருந்து நழுவிப் போகும்.

தழல்தாம் கொளுத்தி இட ---

தழல் - நெருப்பு. உயிர் நீங்கிய உடலுக்குப் பிணம் என்று பேர்.

எதற்கும் உதவாத அந்த பிண உடலை, நெருப்பிலை இட்டுக் கொளுத்தி விடுவார்கள்.

ஒரு பிடி சாம்பல் பட்டது அறிகிலர் ---

பருத்து இருந்த உடலானது முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆவதை அறிந்தாவது, உடம்பு உள்ளபோதே பயனுள்ள வாழ்வை வாழ முயலவேண்டும்

தன வாஞ்சை மிக்கு உன் அடிதொழ நினையாரே ---

அப்படிக்கு அல்லாமல், பொன்னிலும் பொருளிலும் ஆசை வைத்து, அதைத் தேடி உழல்வதிலேயே காலத்தைக் கழிப்பார்கள். "இரையைத் தெடுவதோடு, இறையையும் தேடு" என்பதற்கு இணங்க, இறைவன் திருவடியைப் போற்றி, அவனருளைத் தேடுவதை மறந்து வாழ்வார்கள்.

உபசாந்த சித்த குருகுல பவ ---

உபசாந்தம் - மன அமைதி.

பவம் - பிறப்பு.

உலகு ஈன்ற பச்சை உமை அணன் ---

"அண்ணன்" என்னும் சொல் "அணன்" எனக் குறுகி வந்தது.

உலகங்கள் யாவையும் ஈன்றவளும், பச்சைநிறத் நிருமேனியை உடையவளும் ஆன உமாதேவியின் அண்ணன் திருமால்.

வடவேங்கடத்தில் உறைபவன் ---

வடவேங்கடம் என்னும் திருமலையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருந்து அருள் புரிபவர் திருமால்.

உயர் சார்ங்க சக்ர கர தலன் மருகோனே ---

முருகப் பெருமான், சிறப்பு வாய்ந்த சாரங்கம் என்னும் வில்லையும், சுதரிசனம் என்னும் சக்கரத்தையும் திருக்கரத்தில் ஏந்தியவரும் ஆகிய திருமாலிக்குத் திருமருகர் ஆவார்.

த்ரிபுராந்தகற்கு வர சுத ---

அந்தகன் - எமன். திரிபுரங்களுக்கு அந்தகனாக இருந்தவர் சிவபெருமான். அவருடைய அருளால் அவதரித்தவர் முருகப் பெருமான்.  

ரதி காந்தன் மைத்துன முருக ---

திருமாலின் திருமகனாக அவதரித்தவன் மன்மதன். எனவே, திருமாலின் மருகனான முருகப் பெருமானுக்கு, மன்மதன் மைத்துன முறையினை உடையவன். மன்மதன் இரதி தேவியின் கணவன். எனவே, "ரதிகாந்தன்" என்றார்.

திரை பாய்ந்த பத்ம தடவயலியில் வேந்த ---

திரை என்னும் சொல் இங்கு நீரைக் குறித்து நின்றது. நீர் நிறைந்த குளங்களில் தாமரை மலர்ந்து இருக்கும்.

தடம் - நீர்நிலை.

வயலி - வயலூர் என்னும் திருத்திலம்.


முத்தி அருள் தரு திருவாஞ்சியத்தில் அமரர்கள் பெருமாளே --

முத்தித் தலங்கள் ஏழு என்று பெரியோர் கொண்டனர். ஏழு என்பது அவரவரும் பலவிதமாக்க் கொள்ளுகின்றனர்.

அருணகிரி நாதப் பெருமான் திருவாஞ்சியத்தை முத்தி தரும் தலமாகக் கொண்டார்.

திருவாஞ்சியம்,சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம். மயிலாடுதுறை - பேரளம் இரயில் பாதையில் நன்னிலம் இரயில் நிலையத்திற்கு மேற்கே 9 கீ.மீ.தூரத்தில் உள்ளது. நன்னிலத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. (ஸ்ரீவாஞ்சியம் என்றும் வழங்கப்படுகின்றது).


இறைவர்                   : திருவாஞ்சியநாதர்
இறைவியார்               : வாழவந்தநாயகி, மங்களநாயகி
தல மரம்                    : சந்தனம்
தீர்த்தம்                     : குப்த கங்கை, யம தீர்த்தம்.

மூவர் முதலிகளால் பாடல் பெற்ற திருத்தலம். மாணிக்கவாசகரும் கீர்த்தித் திருவகவலிலும், திருக்கோவையாரில் 268-வது பாடலிலும் இத்தலத்தைக் குறித்துள்ளார்.

இறைவன் திருக்கயிலையிலிருந்து இத்தலத்திற்கு வந்ததால், அம்பிகை "வாழவந்த நாயகி"யாக இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள் என்ற செய்தி இத்தல புராணத்தில் காணப்படுகின்றது. பராசர முனிவர் இத்தலத்தில் நீராடி, வீரதனு மன்னனைப் பற்றியிருந்த பிரமகத்தியைப் போக்கிய சிறப்பால் இத்தீர்த்தம் அம்முனிவர் பெயரால் விளங்குகின்றது. அத்திரி முனிவர் நீராடித் தத்தாத்ரேயரை மகவாகப் பெற்ற சிறப்பால் அத்திரி தீர்த்தம் என்று வழங்குகிறது.

பூமகள், திருமகள் இருவர்க்கும் ஏற்பட்ட பிணக்கால் திருமகள் திருமாலை விட்டுப் பிரிந்தாள் என்றும், திருமால் திருவாஞ்சியத்தை அடைந்து இவ்விறைவனை வழிபட்டு, திருமகளை வாஞ்சித்துப் பெற்றதால் திருவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது என்றும் தலபுராணம் கூறுகிறது.

உரோமச முனிவர் தவம் செய்து முத்திப் பெற்ற வரலாறு புராணத்தில் கூறப்படுகிறது. திருமால் வழிபட்டுத் திருமகளை அடைந்ததோடு, காத்தல் தொழிலைப் பெற்றார். நான்முகன் வழிபட்டுப் படைத்தல் தொழிலைப் பெற்றார். இந்திரன் சாபம் நீங்கப் பெற்றான். மகுடவர்த்தனன் என்னும் மன்னன் பகைவர்களால் உண்டாகும் அச்சம் நீங்கப்பெற்றான். மகாதனு என்ற மன்னன் அரக்க உருவம் நீங்கி ஆனந்த வடிவமுற்றான். விருட்சி என்பவனின் மனைவி சாருமதி கயநோய் நீங்கப் பெற்றாள். தர்மத்துவசன் என்ற வணிகன் நற்கதி எய்தினான்.

 இயமன் எல்லா உயிர்களையும் கவரும் தன் பாவம் தீர இத்தலத்து இறைவரை வழிபட்டுப் பாவம் நீங்கப்பெற்று, இவ்விறைவனுக்கு வாகனமாகும் பேற்றையும் பெற்றான். இயமனுக்கு மூலத்தானம் தனியே உள்ளது. இறைவன் இயமனுக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்த ஐதீகத் திருவிழா மாசி மாதம் பரணியில் நிகழ்கின்றது. இத்தலத்தில் வாழ்கின்ற/ இறக்கின்றவர்களுக்கு எமவாதனை இல்லை எனவும், இங்கு இறப்போர் வலச் செவியில் இறைவன்திருவைந்தெழுத்தினை ஓதி, சிவலோகத்தில் சேர்ப்பித்துக் கொள்கிறான் எனவும் தலபுராணம் கூறுகின்றது.

 இத்தல தீர்த்தம் (குப்தகங்கை), அத்திரி, பரத்துவாசர், ஜமதக்கினி, விசுவாமித்திரர், வசிட்டர், கௌதமர் ஆகியோர் நிறுவியருள் பெற்ற சிறப்புடையது. காசியில் கங்கை தன்னிடம் மக்கள் போக்கிக்கொள்ளும் பாவங்கள் சேர்ந்ததைத் தீர்க்க கங்கை வந்து இத்தலத்தில் தங்கி வழிபட்டுப் பாவங்களை நீக்கிக் கொண்டாள். இறைவன் தீர்த்தம் கொடுக்கும் சிறப்பால் உயர்வு பெற்ற சிறப்புடையத் தலமாகும். நான்கு யுகங்களில் முறையே புண்ணிய தீர்த்தம், அத்திரி தீர்த்தம், பராசர தீர்த்தம், முனி தீர்த்தம் என்ற நாமங்களைக் கொண்டு விளங்கியுள்ளது. கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் இறைவன் இங்குத் தீர்த்தம் கொடுத்தருளுகின்றார். பஞ்சமா பாதகம், பிரமகத்தி, நோய்கள், பிற பீடைகள், சிவத்துரோகம் முதலிய பாவங்கள் அனைத்தையும் நீக்கி வெற்றி, ஆனந்தம், வீடுபேறு முதலிய பயன்களை அளிக்கவல்லது இத்தலம். இத்தீர்த்தக் கரையில் தருமம் செய்வோர் சிறந்த பலன்களைப் பெறுவர்.

இது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்பிலும் சிறந்து விளங்குகிறது.

தருமை ஆதீன குருமுதல்வர் ஆகிய குருஞானசம்பந்தர் சிவபோகாசாரத்தில் முத்தித் தலங்களில் ஒன்றாக இதனைக் குறித்தருளுகிறார்.

கருத்துரை

இது வேண்டுகோள் ஏதும் இல்லாத திருப்புகழ்ப் பாடல். பொருள் ஆசை மிக்கு உழன்று மடியாமல், அருள் ஆசை கொண்டு வாழவேண்டும்.

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...