அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சித்திரத்திலும்
(திருவிற்குடி)
முருகா!
விலைமாதர் மயலில் அழியாமல்,
தேவரீது திருவடியைப் பெற
அருள்வாய்.
தத்த
தத்ததன தத்த தத்ததன
தத்த தத்ததன தத்த தத்ததன
தத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான
சித்தி
ரத்திலுமி குத்த பொற்பவள
மொத்த மெத்தஅழ குற்ற குத்துமுலை
சிற்ப சிற்பமயி ரொத்த சிற்றிடைய ......
வஞ்சிமாதர்
சித்த
மத்தனையு முற்ற ளப்பகடல்
மொய்த்த சிற்றுமண லுக்கு மெட்டியது
சிக்கு மைக்குழல்கள் கஸ்து ரிப்பரிம ......
ளங்கள்வீசப்
பத்தி
ரத்திலுமி குத்த கட்கயல்கள்
வித்து ருத்தனுவ ளைத்த நெற்றிவனை
பற்க ளைப்பளிரெ னச்சி ரித்துமயல் ......
விஞ்சைபேசிப்
பச்சை
ரத்னமயி லைப்பொ லத்தெருவி
லத்தி யொத்தமத மொத்து நிற்பர்வலை
பட்டு ழைத்துகுழி யுற்ற அத்தியென ......
மங்குவேனோ
தத்த
னத்தனத னத்த னத்தனன
தித்தி மித்திமிதி மித்தி மித்திமித
தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடென ......
சங்குபேரி
சத்த
முற்றுகடல் திக்கு லக்கிரிகள்
நெக்கு விட்டுமுகி லுக்கு சர்ப்பமுடி
சக்கு முக்கிவிட கட்க துட்டசுர ......
ரங்கமாள
வெற்றி
யுற்றகதிர் பத்தி ரத்தையரு
ளிச்சு ரர்க்கதிப திப்ப தத்தையுறு
வித்த ளித்தமதி பெற்ற தத்தைமண ......
முண்டவேலா
வெட்கி
டப்பிரம னைப்பி டித்துமுடி
யைக்கு லைத்துசிறை வைத்து முத்தர்புகழ்
விற்கு டிப்பதியி லிச்சை யுற்றுமகிழ் ......
தம்பிரானே.
பதம் பிரித்தல்
சித்தி
ரத்திலும் மிகுத்த பொன் பவளம்
ஒத்த மெத்த அழகு உற்ற குத்துமுலை,
சிற்ப சிற்ப மயிர் ஒத்த சிற்றிடைய ......
வஞ்சிமாதர்,
சித்தம்
அத்தனையும் உற்று அளப்ப, கடல்
மொய்த்த சிற்று மணலுக்கும் எட்டியது,
சிக்கு மைக் குழல்கள் கஸ்துரிப் பரிம......
ளங்கள்வீசப்
பத்திரத்திலும்
மிகுத்த கண் கயல்கள்,
வித்துருத் தனு வளைத்த நெற்றி,வனை
பற்களைப் பளிர் எனச் சிரித்து, மயல் ......விஞ்சைபேசிப்
பச்சை
ரத்ன மயிலைப் பொலத் தெருவில்
அத்தி ஒத்த மதம் ஒத்து நிற்பர்வலை
பட்டு உழைத்து, குழி உற்ற அத்தி என
......மங்குவேனோ?
தத்த
னத்தனத னத்த னத்தனன
தித்தி மித்திமிதி மித்தி மித்திமித
தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடு என ......
சங்குபேரி
சத்தம்
உற்றுகடல் திக்குலக்கிரிகள்
நெக்கு விட்டு, முகிலுக்கு சர்ப்பமுடி
சக்கு முக்கிவிட, கட்க துட்டஅசுரர் ...... அங்கம் மாள
வெற்றி
உற்ற கதிர் பத்திரத்தை அருளி
சுரர்க்கு அதிபதிப் பதத்தை, அறு
வித்து, அளித்த மதி பெற்ற
தத்தை மணம் ....உண்டவேலா
வெட்கிடப்
பிரமனைப் பிடித்து, முடி-
யைக் குலைத்து, சிறை வைத்து, முத்தர்புகழ்
விற்குடிப் பதியில் இச்சை உற்றுமகிழ் ......
தம்பிரானே.
பதவுரை
தத்த னத்தனத னத்த
னத்தனன தித்தி மித்திமிதி மித்தி மித்திமித தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடு என
சங்கு பேரி சத்தம் உற்று --- தத்த னத்தனத னத்த னத்தனன தித்தி
மித்திமிதி மித்தி மித்திமித தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடு என்ற தாள ஒத்துடன்
சங்கு முழங்க, முரசு ஒலி செய்ய,
கடல் திக்குலக் கிரிகள்
நெக்கு விட்டு
--- கடலும், எட்டுத் திக்குகளில்
உள்ள சிறந்த மலைகளும் நெகிழ்ந்து கட்டு விட,
முகிலுக்கு சர்ப்ப
முடி சக்கு முக்கி விட --- மேக முழக்கத்தைக் கேட்டு ஆதிசேடனது
முடிகளும், கண்களும் துன்பம்
அடைய,
கட்க துட்ட அசுரர்
அங்கம் மாள
--- வாள் ஏந்திய துட்டத் தனம் மிகுந்த அசுரர்களின் உடலின் உறுப்புகள் வெட்டுப்பட,
வெற்றி உற்ற கதிர்
பத்திரத்தை அருளி --- வெற்றி பொருந்தியதும் ஒளி மிக்கதும் ஆன வேலாயுதத்தை
விடுத்து அருளி,
சுரர்க்கு அதிபதிப்
பதத்தை உறுவித்து அளித்து --- தேவர்களுக்கு அவர்களின் ஆதிபத்திய நிலை
மீண்டும் உண்டாகுமாறு அருள் புரிந்து,
மதி பெற்ற தத்தை மணம்
உண்ட வேலா
--- அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பெற்ற கிளி போன்றவளான தேவயானை அம்மையைத்
திருமணம் செய்து கொண்ட வேலாயுதக் கடவுளே!
வெட்கிடப் பிரமனைப்
பிடித்து முடியைக் குலைத்து சிறை வைத்து --- வெட்கப்படும்படி
பிரமனைப் பிடித்து, அவன் குடுமியை
அலைவித்துச் சிறையிலிட்டு,
முத்தர் புகழ்
விற்குடிப் பதியில் இச்சை உற்று மகிழ் தம்பிரானே --- சீவன்முக்தர்கள்
புகழ்கின்ற திருவிற்குடி என்னும் திருத்தலத்தில் விரும்பித் திருக்கோயில் கொண்டு மகிழ்கின்ற
தனிப்பெரும் தலைவரே!
சித்திரத்திலும்
மிகுத்த
--- ஓவியத்திலும் சிறந்து,
பொன் பவளம் ஒத்த --- பொன்னைப் போலும், பவளத்தைப் போலும்,
மெத்த அழகு உற்ற குத்து முலை --- மிக்க
அழகுடன் குத்திட்டு விளங்கும் முலைகளையும்,
சிற்ப சிற்பம் மயிர்
ஒத்த சிற்றிடைய வஞ்சி மாதர் சித்தம் அத்தனையும் முற்று அளப்ப --- மிக நுண்ணிய மயிரிழை
போன்று மெல்லிய இடையையும் கொண்ட வஞ்சிக் கொடி போன்ற விலைமாதர்களுடைய உள்ளம் முழுமையும்
அளந்தால்,
கடல் மொய்த்த சிற்று
மணலுக்கும் எட்டியது --- அது கடலில் மொய்த்துள்ள சிறு மணல் அளவையும் எட்டத் தக்கது.
சிக்கு மை குழல்கள்
கஸ்துரிப் பரிமளங்கள் வீச --- சிக்குப்பட்டுள்ள கரிய கூந்தல்கள்
கத்தூரி மணம் வீச,
பத்திரத்திலும்
மிகுத்த கண்கயல்கள் --- வாளினும் மிக்க கூரிய கண்களாகிய கயல்மீன்கள்,
வித்துருத் தநு
வளைத்த நெற்றி
--- மின்னல் வில்லாக வளைந்த்து போன்ற நெற்றி ஆகியவைகளுடன்,
வனை பற்களைப் பளிர் எனச்
சிரித்து
--- உரு அமைந்த பற்கள் தெரியப் பளீரென்று சிரித்துக் காட்டி,
மயல் விஞ்சை பேசி --- காம உணர்வு
மிக்க வித்தைப் பேச்சுக்களைப் பேசி,
பச்சை ரத்ன மயிலைப்
பொல
--- பச்சை நிறம் பொருந்திய அழகிய மயிலைப் போன்ற சாயலுடன்,
தெருவில் அத்தி ஒத்த மதம்
ஒத்து நிற்பர்
--- தெருவில் மதம் பிடித்த யானையைப் போன்று நிற்பார்கள்.
வலைபட்டு உழைத்து --- (இத்தகைய
விலைமாதர்களின்) வலையில் விழுந்து,
அவர்களுக்காகப்
பொருள் தேடி
உழைத்து,
குழி உற்ற அத்தி என
மங்குவேனோ ---
குழியில் விழுந்த யானையைப் போல அழிந்து படுவேனோ?
பதவுரை
தத்த னத்தனத னத்த னத்தனன தித்தி
மித்திமிதி மித்தி மித்திமித தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடு என்ற தாள ஒத்துடன்
சங்கு முழங்க, முரசு ஒலி செய்ய, கடலும், எட்டுத் திக்குகளில்
உள்ள சிறந்த மலைகளும் நெகிழ்ந்து கட்டு விட, மேக முழக்கத்தைக் கேட்டு ஆதிசேடனது
முடிகளும், கண்களும் துன்பம்
அடைய, வாள் ஏந்திய துட்டத்
தனம் மிகுந்த அசுரர்களின் உடலின் உறுப்புகள் வெட்டுப்பட, வெற்றி பொருந்தியதும்
ஒளி மிக்கதும் ஆன வேலாயுதத்தை விடுத்து அருளி, தேவர்களுக்கு
அவர்களின் ஆதிபத்திய நிலை மீண்டும் உண்டாகுமாறு அருள் புரிந்து, அயிராவதம் என்னும்
யானையால் வளர்க்கப்பெற்ற கிளி போன்றவளான தேவயானை அம்மையைத் திருமணம் புரிந்து
கொண்ட வேலாயுதக் கடவுளே!
வெட்கப்படும்படி பிரமனைப் பிடித்து, அவன் குடுமியை அலைவித்துச் சிறையிலிட்டு, சீவன்முக்தர்கள் புகழ்கின்ற
திருவிற்குடி என்னும் திருத்தலத்தில் விரும்பித் திருக்கோயில் கொண்டு மகிழ்கின்ற தனிப்பெரும்
தலைவரே!
ஓவியத்திலும் சிறந்து, பொன்னைப் போலும், பவளத்தைப் போலும், மிக்க அழகுடன் குத்திட்டு விளங்கும்
முலைகளையும், மிக நுண்ணிய மயிரிழை
போன்று மெல்லிய இடையையும் கொண்ட வஞ்சிக் கொடி போன்ற விலைமாதர்களுடைய உள்ளம் முழுமையும்
அளந்தால், அது கடலில்
மொய்த்துள்ள சிறு மணல் அளவையும் எட்டத் தக்கது. சிக்குப்பட்டுள்ள கரிய கூந்தல்கள்
கத்தூரி மணம் வீச, வாளினும் மிக்க கூரிய
கண்களாகிய கயல்மீன்கள், மின்னல் வில்லாக வளைந்த்து
போன்ற நெற்றி ஆகியவைகளுடன், உரு அமைந்த பற்கள்
தெரியப் பளீரென்று சிரித்துக் காட்டி, காம
உணர்வு மிக்க வித்தைப் பேச்சுக்களைப் பேசி, பச்சை நிறம் பொருந்திய அழகிய மயிலைப்
போன்ற சாயலுடன், தெருவில் மதம்
பிடித்த யானையைப் போன்று நிற்பார்கள். இத்தகைய விலைமாதர்களின் வலையில் விழுந்து, அவர்களுக்காகப் பொருள் தேடி உழைத்து, குழியில் விழுந்த யானையைப் போல அழிந்து
படுவேனோ?
விரிவுரை
சித்திரத்திலும்
மிகுத்த பொன் பவளம் ஒத்த மெத்த அழகு உற்ற குத்து முலை ---
சித்திரம்
- ஓவியம். ஓவியமானது எப்போதும் ஒரு தன்மைத்தாக அழகுடன் விளங்கும். ஆனால், மனித வடிவம் மாற்றத்திற்கு உட்பட்டது.
இளமைப் பருவத்தில் குத்திட்டு நிற்கும் முலைகள், வயது ஏற ஏறத் தளர்ந்து
போகும். தளராத முலைகளை உடையவர்கள் விலைமாதர்கள் என்கின்றார் அடிகளார்.
சிற்ப
சிற்பம் மயிர் ஒத்த சிற்றிடைய வஞ்சி மாதர் சித்தம் அத்தனையும் முற்று அளப்ப கடல்
மொய்த்த சிற்று மணலுக்கும் எட்டியது ---
சிற்பம்
- நுண்ணிய வேலைப்பாடு உள்ளது.
மாதர்களின்
இடையானது நுட்பமான மயிரைப் போன்று மெலிந்துள்ளது.
ஆனால், அவர்களின் மனநிலை மிகப் பெரியது. அளக்க
முடியாதது.
கடற்பரப்பில்
உள்ள மணல்களையும் அளந்து எண்ணிவிடலாம். மாதர்களின் உள்ளத்தை அளக்க யாராலும்
முடியாது.
அளவிட
முடியாதவைகள் எவைஎவை என்று "குமரேச சதகம்" என்னும் நூல் கூறுமாறு காண்க.
வாரி
ஆழத்தையும், புனல் எறியும்
அலைகளையும்,
மானிடர்கள் சனனத்தையும்,
மன்னவர்கள்
நினைவையும், புருடர் யோகங்களையும்,
வானின்உயர் நீளத்தையும்,
பாரில்எழு
மணலையும், பல பிராணிகளையும்,
படி ஆண்ட மன்னவரையும்,
பருப்பதத்தின்
நிறையும், ஈசுரச் செயலையும்,
பனிமாரி பொழி துளியையும்,
சீரிய
தமிழ்ப்புலவர் வாக்கில் எழு கவியையும்,
சித்தர் தமது உள்ளத்தையும்,
தெரிவையர்கள்
சிந்தையையும் இவ்வளவு எனும்படி
தெரிந்து அளவிடக் கூடுமோ?
வாரிச
மடந்தைகுடி கொண்டநெடு மாலுக்கு
மருகன் என வந்த முருகா!
மயிலேறி
விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
பத்திரத்திலும்
மிகுத்த கண்கயல்கள் ---
பத்திரம்
- வாள்.
வாளினும்
மிக்க கூரிய கண்களாகிய கயல்மீன்கள்,
வித்துருத்
தனு வளைத்த நெற்றி ---
வித்துரு
- மின்னல்.
தனு
- வில்.
தெருவில்
அத்தி ஒத்த மதம் ஒத்து நிற்பர் ---
அத்தி
- யானை.
தெருவில்
மதம் பிடித்த யானையைப் போன்று நிற்பார்கள் விலைமாதர்கள்.
வலைபட்டு
உழைத்து, குழி உற்ற அத்தி என
மங்குவேனோ ---
இத்தகைய
விலைமாதர்களின் வலையில் விழுந்து,
அவர்களுக்காகப்
பொருள் தேடி
உழைத்து, குழியில் விழுந்த
யானையைப் போல அழிந்து படுவேனோ என்று
இரங்குகின்றார் அடிகாளர்.
உயிர்கள், ஐம்புலன்களுக்கு
ஆட்பட்டு,
குற்றம்
உண்டாக நடந்து அழிகின்ற இயல்பினை உடையவை என்பதை, "கோயில் நான்மணி மாலை"
என்னும் நூலில்,
பட்டினத்தடிகள்
காட்டி உள்ளமை உணர்தற்கு உரியது.
"அழுக்கு
உடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி
விளைவாய்த்
தூண்டிலின் உள் இரை விழுங்கும்
பன்மீன்
போலவும்,
மின்னுபு
விளக்கத்து விட்டில் போலவும்,
ஆசையாம்
பரிசத்து யானை போலவும்,
ஒசையின்
விளிந்த புள்ளுப் போலவும்
வீசிய
மணத்தின் வண்டு போலவும்
உறுவது
உணராது செறுவுழிச் சேர்ந்தனை;
நுண்ணூல்
நூற்றுத் தன் அகப் படுக்கும்
அறிவில்
கீடத்து நுந்துழி போல
ஆசைச்
சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு
இடர்கெழு
மனத்தினோடு,
இயற்றுவது
அறியாது
குடர்கெவு
சிறையறைக் குறங்குபு கிடத்தி,
கறவை
நினைந்த கன்று என இரங்கி
மறவா
மனத்து மாசுஅறும் அடியார்க்கு
அருள்
சுரந்து அளிக்கும் அற்புதக் கூத்தனை
மறையவர்
தில்லை மன்றுள் ஆடும்
இறையவன்
என்கிலை என் நினைந்தனையே.
ஆசையே
மேலும் மேலும் பலபிறவிகளை ஆக்குவிக்கும். ஆசையானது மனத்தில் முளைக்கும் தோறும், அறிவு என்னும் வாளால்
அறுத்து நீக்குதல் அறிவுடைமை ஆகும். அப்போதுதான், பொருள்களின் மேல் வைத்த
பற்று நீங்கி,
இறைவன்
திருவருட் பற்று உண்டாகும்.
ஆசைக்கு
அடிமைப்பட்டவன் அகிலலோகத்தினுக்கும் அடிமைப் பட்டவன் ஆவான். ஆசையினைத் தனக்கு
அடிமையாகக் கொண்டவன், அகிலலோகத்தையும் தனக்கு அடிமையாகக் கொண்டவன் ஆவான்.
மீனானது
தூண்டில் முள்ளில் கோத்த இரையை, தன்னைப் பிடிக்க வைத்த வஞ்சக இரை என்று எண்ணாமல், அதன் சுவைக்கு
ஆசைப்பட்டு,
அதனை
விழுங்கி இறந்தது.
விட்டில்
பூச்சியானது,
சுடர்
விட்டு எரியும் விளக்கினைக் கண்டு, அது தான் உண்ணும் ஒரு பழம் எனப் பார்வையால்
உணர்ந்து,
அதனை
உண்ண வந்து மடிந்தது. உலகவர் தமது கண்ணால் ஒரு உருவத்தைக் கண்டு மயங்கி, அதனால்
கிடைக்கும் இன்பத்தைப் பொய் எனக் கருதாது, மெய் எனக் கருதி அழிவர்.
வேடர்கள்
வஞ்சனையால் இசைக்கும் இசையால் மயங்கி வந்து பறவைகள் தமக்கு விரித்துள்ள வலையில் விழும்.`
யானையானது, தன்னைப்
பிடிப்பதற்காக வைத்த பார்வை யானையின் இன்பத்தை அனுபவிக்க வேண்டி வந்து, தன்னைப்
பிடிப்பதற்காக வைத்த குழியில் விழுந்து துன்பமுறும். அதுபோல, உடல் சுகத்தை வேண்டி, வேசையர்கள்
இன்பத்தை நாடி,
மாந்தர்
அழிவர்.
வண்டுகள்
மலர் மணத்தை விரும்பிச் சென்று, சில மலர்களை மொய்த்து, அதனால் உயிர் நீங்கும்.
இவ்வாறு
மெய்,
வாய், கண், மூக்கு, செவி என்னும்
ஐம்புலன்களின் வழி, பரிசம், சுவை, பார்வை, மணம், ஓசை என்னும்
ஐம்புலன்களுக்கு ஆட்பட்டு அழிதல் கூடாது, என்பதை அறிவுறுத்த, படுகுழியில்
விழுந்த யானையைப் போல, தான் அழிதல் கூடாது என்று அடிகளார் வேண்டுகின்றார். யானையானது
படுகுழியில் விழுந்தால், தேற வாய்ப்பு இல்லை.
படியின், அப்பொழுதே
வதைத்திடும்
பச்சை நாவியை நம்பலாம்;
பழி நமக்கு என வழி மறித்திடும்
பழைய நீலியை நம்பலாம்;
கொடும்
மதக் குவடு என வளர்ந்திடு
குஞ்சரத் தையும் நம்பலாம்;
குலுங்கப் பேசி நகைத்திடும் சிறு
குமரர் தம்மையும் நம்பலாம்;
கடை
இலக்கம்அது எழுதிவைத்த
கணக்கர் தம்மையும் நம்பலாம்;
காக்கை போல் விழி பார்த்திடும் குடி
காணி யாளரை நம்பலாம்;
நடை
குலுக்கியும் முகம் மினுக்கியும்
நகை நகைத்திடும் மாதரை
நம்பஒணாது, மெய், நம்பஒணாது, மெய்,
நம்பஒணாது, மெய் காணுமே.
என்பது
விவேக சிந்தாமணி.
இதன்
பொருள் ---
வயிற்றிலே
போய்ப் படிந்த உடனே சிறுகச் சிறுகக் கொல்லுகின்ற தன்மை உடைய சுத்தி செய்யாத
பச்சைப் பாடாணத்தை நம்பி உண்ணலாம். (அதற்கு மாற்று மருந்து உட்கொண்டு தேறலாம்).
பழிச்
செயல் என்று தெரிந்தும் அதற்கு அஞ்சாது, வழிப்பறி
செய்யும் தொழிலில் வல்லவரான பழைய திருடர்களையும் நம்பலாம்.
குன்றைப்
போன்று வளர்ந்துள்ளதும், கொடுமை பொருந்தியதும், மதம் பிடித்ததும் ஆகிய
யானையையும் நம்பி அதனருகில் செல்லலாம்.
உள்ளன்பு
இல்லாமல்,
உடல்
குலுங்கப் பேசிச் சிரித்தே நட்புக் கொள்ளுகின்ற சிறியவர்களையும் நம்பலாம்.
மற்றவருக்குக்
கணக்கைக் காட்டாது, தாம் விரும்பிக் கேட்டதைக் கொடாத குடிமக்களைக்
கெடுக்கும்படியாக பலவகையான பொய்த் தீர்வைகளை மோசக் கணக்காக எழுதி வைத்த ஊர்க்
கணக்கர்களையும் நம்பலாம்.
ஒரே
கண்ணைக் கொண்டு இரு பக்கங்களிலும் கவனமாகப் பார்த்துக் கொண்டு இருக்கும்
காக்கையைப் போல,
தமது
கண்களால், அறுவடைக்
காலத்தில் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டு இருந்து, பயிரிடுவோருக்கு உரிய
பயன் கிடைக்காமல் செய்யும் காணி ஆட்சியாளரையும் நம்பலாம்.
குலுக்கி
நடந்தும்,
முகத்தை
பூச்சுக்களால் மினுக்கியும், பல் எல்லாம் தெரியக் காட்டிச் சிரித்து நடித்தும், ஆண்களை
மயக்கும் பொதுமாதரை நம்பக் கூடாது. இது உண்மை. நம்பக் கூடாது. இது உண்மை. நம்பக்
கூடாது. இது உண்மை.
வேசையர்கள்
மீது ஆசை வைத்து உழன்றால் எல்லாவற்றையும் ஒருவன் இழக்க நேரிடும் என்பதை
அறிவுறுத்தும் பாடல் ஒன்று,,,
அறம்
கெடும்,
நிதியும்
குன்றும்,
ஆவியும்
மாயும்,
காய
நிறம்
கெடும்,
மதியும்
போகும்,
நீண்டதோர்
நரகம் கிட்டும்,
மறம்
கெடும்,
கீர்த்தி
நீங்கும்,
வசைமொழி
பரவும்,
சாதித்
திறம்
கெடும்,
வேசைமாதர்
சேர்க்கையை விரும்பினார்க்கே.
--- விவேக சிந்தாமணி.
காமத்தால்
இந்திரன் கலக்கம் எய்தினான்,
காமத்தால்
இராவணன் கருத்து அழிந்தனன்,
காமத்தால்
கீசகன் கவலை உற்றனன்,
காமத்தால்
இறந்தவர் கணக்கு இலார்களே. --- விவேக சிந்தாமணி.
பூவில்
வேசிகள் வீடு சந்தைப் பெரும்பேட்டை;
புனைமலர் படுக்கை வீடு
பொன்வாசல்
கட்டில்பொது அம்பலம் உடுத்த துகில்
பொருவில்சூ தாடுசாலை
மேவலா
கியகொங்கை கையாடு திரள்பந்து
விழிமனம் கவர்தூண்டிலாம்
மிக்கமொழி
நீர்மேல் எழுத்ததிக மோகம் ஒரு
மின்னல்இரு துடைசர்ப்பமாம்
ஆவலாகிய
வல்கு லோதண்டம் வாங்குமிடம்
அதிகபடம் ஆம்மனதுகல்
அமிர்தவாய்
இதழ்சித்ர சாலையெச் சிற்குழி
அவர்க் காசை வைக்கலாமோ
மாவடிவு
கொண்டே ஒளித்தவொரு சூரனை
வதைத்தவடி வேலாயுதா
மயிலேறி
விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
என்பது
குமரேச சதகம்.
பூவில்
வேசிகள் வீடு பெருஞ் சந்தைப்பேட்டை - உலகில் பொதுமகளிர் வீடு பெரிய சந்தைப்பேட்டை;
மலர்புனை
படுக்கை வீடு பொன் வாசல் - மலர்களாலே அணி செயப்பெற்ற
படுக்கை அறை பொன்பறிக்கும் வாயில்;
கட்டில்
பொது அம்பலம் - படுக்கைக் கட்டில் பலருக்கும் பொதுவான இடம்;
உடுத்த
துகில் பொருஇல் சூதுஆடு சாலை - அவர்கள் உடுத்த ஆடை ஒப்பற்ற சூதாடும் அரங்கு;
மேவல்
ஆகிய கொங்கை கை ஆடு திரள் பந்து - விருப்பத்தை ஊட்டும் அவர்களின் கொங்கைகள் பலர்
கையாலும் ஆடத்தக்க
திரண்ட பந்து;
விழி
மனம் கவர் தூண்டில் ஆம் - அவர்களின் கண்கள் பலருடைய மனத்தையும் கவர்கின்ற தூண்டில்
ஆகும்;
மிக்க
மொழி நீர்மேல் எழுத்து - மிகைப்பட்ட அவர்கள் பேச்சு நீர்மேல் எழுத்தாகும்;
அதிக
மோகம் ஒரு மின்னல் - அவர்கள்
காட்டும் மிக்க ஆசை ஒரு மின்னல் போன்று மாறக்
கூடியது;
இரு
துடை சர்ப்பம் ஆம் - அவர்களுடைய இரண்டு துடைகளும்
பாம்புகள்;
ஆவலாகிய
அல்குலோ தண்டம் வாங்கும் இடம் - விருப்பத்தை ஊட்டும் அல்குலோ எனில் தண்டனையை
நிறைவேற்றும் இடம்;
அதி
கபடம் ஆம் மனது கல் - மிக்க வஞ்சகம் பொருந்திய அவர்கள் உள்ளம் கல்லாகும்;
அமிர்த
வாய்இதழ் சித்திரசாலை எச்சில் குழி - அமுதம் எனக் கூறும் வாயிலுள்ள இதழ்
ஓவியக்கூடத்திலே பலரும் எச்சில் துப்ப இருக்கும் எச்சிற்குழி;
அவர்க்கு
ஆசை வைக்கலாமோ - அவர்களிடம் காதல் கொள்வது
தகாது.
முகிலுக்கு
சர்ப்ப முடி சக்கு முக்கி விட ---
சக்கு
- கண்.
கட்க
துட்ட அசுரர் அங்கம் மாள ---
கட்கம்
- வாள்.
வெற்றி
உற்ற கதிர் பத்திரத்தை அருளி ---
பத்திரம்
- வாள். ஆயுதம். இங்கு வேலாயுதத்தைக் குறித்தது.
வெட்கிடப்
பிரமனைப் பிடித்து முடியைக் குலைத்து சிறை வைத்து ---
பிரமதேவனை அவனது
நான்கு முடிகளும் தொங்கிக் கவிழ்ந்து பொடிபட, வலிமையாகக் குட்டியவர் முருகப்பெருமான். சிவபரம்பொருளுக்கு குருவாக இருந்து
அருள் உபதேசம் புரிந்தவரும் அவரே.
எவர்தமக்கு ஞானகுரு ஏகாம்பரேசர்,
அவர்தமக்கு ஞானகுரு யாரோ? - உவரியணை
கட்டினோன் பார்த்திருக்கக் காதலவன் தலையில்
குட்டினோன் தானே குரு. --- காளமேகம்.
வனஜ ஜாதனை அன்று முனிந்தற
வலியபார விலங்கிடு புங்கவன் --- பூதவேதாள வகுப்பு.
அயனைத் தலையில்
குட்டிச் சிறை வைத்த வரலாறு
குமாரக்கடவுள் திருவிளையாடல் பல புரிந்து வெள்ளி மலையின்கண் வீற்றிருந்து
அருளினர். ஒரு நாள் பிரமதேவர் இந்திராதி தேவர்களுடனும், கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் முதலிய கணர்களொடும் சிவபெருமானைச் சேவிக்கும் பொருட்டு திருக்கயிலாய
மலையை நண்ணினர். பிரமதேவனை ஒழிந்த எல்லாக் கணர்களும், யான் எனது என்னும் செருக்கு இன்றி சிவபெருமானை வணங்கி வழிபட்டுத்
திரும்பினார்கள். ஆங்கு கோபுர வாயிலின் வடபால் இலக்கத்து ஒன்பான் வீரர்களும்
புடைசூழ நவரத்தின சிங்காசனத்தில் குமரநாயகன் நூறு கோடி சூரியர்கள் திரண்டாலென்ன
எழுந்தருளி இருந்ததை அறிந்து, அவரிடம்
வந்து திருவடிமலர் தொழுது தோத்திரம் புரிந்து சென்றனர்.
பிரமதேவர் குமரக்கடவுளைக் கண்டு வணங்காது, “இவன் ஓர் இளைஞன் தானே” என்று
நினைத்து இறுமாந்து சென்றனர். இதனைக் கண்ட முருகப் பெருமான் சிவன் வேறு தான் வேறு
அன்று. மணியும்
ஒளியும்போல், சிவனும்
தானும் ஒன்றே என்பதையும், முருகனாகிய தன்னை ஒழித்து சிவபெருமானை வழிபடுவோர்க்குத் திருவருள்
உண்டாகாது என்பதையும் உலகினர்க்கு உணர்த்தவும், பிரமனுடைய செருக்கை நீக்கித் திருவருள் புரியவும் திருவுளம் கொண்டார்.
தருக்குடன் செல்லுஞ் சதுர்முகனை அழைத்தனர். பிரமன் கந்தவேளை அணுகி
அகங்காரத்துடன் சிறிது கைகுவித்து வணங்கிடாத பாவனையாக வணங்கினன்.
கந்தப்பெருமான் “நீ யாவன்” என்றனர்.
பிரமதேவர் அச்சங்கொண்டு “படைத்தல்
தொழில் உடைய பிரமன்” என்றனன்.
முருகப்பெருமான், அங்ஙனமாயின் உனக்கு வேதம் வருமோ?” என்று வினவினர்.
பிரமன் “உணர்ந்திருக்கிறேன்” என்றனன்.
“நன்று! வேதவுணர்ச்சி உனக்கு இருக்குமாயின் முதல் வேதமாகிய
இருக் வேத்தைக் கூறு,” என்று குகமூர்த்தி கூறினர்.
சதுர்முகன் இருக்கு வேதத்தை ஓம் என்ற குடிலை மந்திரத்தைக் கூறி
ஆரம்பித்தனன். உடனே இளம் பூரணணாகிய எம்பெருமான் நகைத்து திருக்கரம் அமைத்து, “பிரமனே நிற்றி! நிற்றி! முதலாவதாகக் கூறிய `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்குதி என்றனர்.
தாமரைத்தலை இருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாமறைத்தலை எடுத்தனன் பகர்தலும், வரம்பில்
காமர்பெற்று உடைக் குமரவேள், நிற்றி, முன் கழறும்
ஓம் எனப்படு மொழிப்பொருள் இயம்புக,என்று உரைத்தான். ---கந்தபுராணம்.
ஆறு திருமுகங்களில் ஒரு முகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து
அமலன் வினவுதலும், பிரமன்
அக்குடிலை மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தனன். கண்கள் சுழன்றன. சிருட்டிகர்த்தா நாம் என்று எண்ணிய ஆணவம்
அகன்றது. வெட்கத்தால்
தலைகுனிந்தனன். நாம் சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட காலையில், இதன் பொருளை உணராமல் போனோமே? என்று ஏங்கினன். சிவபெருமானுக்குப் பீடமாகியும், ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடமாகியும், காசியில் இறந்தார்களுக்கு சிவபெருமான் கூறுவதாகியுமுள்ள தாரகமாகிய பிரணவ
மந்திரத்தின் பொருளை உணராது மருண்டு நின்றனன்.
குமரக்கடவுள், “ஏ
சதுர்முகா! யாதும் பகராது நிற்பதென்? விரைவில் விளம்புதி” என்றனர்.
பிரமன் “ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை
உணரேன்” என்றனன்.
அது கேட்ட குருமூர்த்தி சினந்து, "இம்முதலெழுத்திற்குப் பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய
வல்லாய்? இப்படித்தான்
சிருட்டியும் புரிகின்றனையோ? பேதாய்!” என்று நான்கு தலைகளும்
குலுங்கும்படிக் குட்டினார்.
“சிட்டி செய்வது இத் தன்மையதோ? எனச் செவ்வேள்
குட்டினான் அயன் நான்குமா
முடிகளுங் குலுங்க” ---கந்தபுராணம்.
பிரமதேவனது அகங்காரம் முழுதும் தொலைந்து புனிதனாகும்படி குமாரமூர்த்தி, தமது திருவடியால் ஓர் உதை கொடுத்தனர். பிரமன் பூமியில்
வீழ்ந்து அவசமாயினன். உடனே பகவான் தனது பரிசனங்களைக் கொண்டு பிரமனைக் கந்தகிரியில்
சிறையிடுவித்தனர்.
“அயனைக் குட்டிய பெருமாளே” ---
(பரவைக்கு) திருப்புகழ்.
“ஆரணன் தனை வாதாடி ஓர்உரை
ஓதுகின்றென, வாராது எனா, அவன்
ஆணவம்
கெடவே காவலாம் அதில் இடும்வேலா. --- (வாரணந்) திருப்புகழ்.
வேத நான்முக மறையோனொடும் விளை-
யாடியே, குடுமியிலே கரமொடு
வீற மோதின மறவா!... --- (காணொணாதது) திருப்புகழ்.
“.......................................படைப்போன்
அகந்தை உரைப்ப,மறை
ஆதி எழுத்துஎன்று
உகந்த பிரணவத்தின் உண்மை --
புகன்றிலையால்,
சிட்டித் தொழில்அதனைச் செய்வதுஎங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறைஇருத்தும் கோமானே” ---
கந்தர் கலிவெண்பா.
முத்தர் புகழ்
விற்குடிப் பதியில் இச்சை உற்று மகிழ் தம்பிரானே ---
சீவன்முக்தர்கள்
புகழ்கின்ற திருவிற்குடி என்னும் திருத்தலத்தில் விரும்பித் திருக்கோயில் கொண்டு மகிழ்கின்ற
தனிப்பெரும் தலைவர் முருகப் பெருமான்.
திரு விற்குடி
வீரட்டம்
இது
சோழ நாட்டு, காவிரித்
தென்கரைத் திருத்தலம்.
திருவாரூர்
- மயிலாடுதுறை சாலையில் வெட்டாறு தாண்டி, கங்களாஞ்சேரிக்குப்
பிரியும் வலப்புறப் பாதையில் திரும்பி கங்களாஞ்சேரி அடைந்து, நாகப்பட்டினம், நாகூர் செல்லும் சாலையில்வலதுபுறம்
திரும்பி விற்குடி இரயில் பாதையைக் கடந்து விற்குடியை அடைந்து, "விற்குடி
வீரட்டேசம்" என்னும் பெயர்ப் பலகை காட்டும் பாதையில் இடப்புறமாகத் திரும்பி 2 கி.மீ. சென்று, இடப்புறமாகப் பிரியும் (வளப்பாறு
பாலத்தைக் கடந்து) சாலையில் சென்றால் திருக்கோயிலை அடையலாம்.
நாகப்பட்டினத்திலிருந்து
காரைக்கால் வழியாகத் திருவாரூருக்குச் செல்லும் பேருந்தில் வந்து, விற்குடியில் கூட்டு ரோடில் இறங்கி 1 கி.மீ. சென்றும் திருக்கோயிலை
அடையலாம். கோயில் வரை பேருந்து,
கார்
செல்லும். திருவாரூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
இறைவர்
: வீரட்டானேசுவரர்
இறைவியார்
: ஏலவார் குழலி, பரிமள நாயகி
தல
மரம் : துளசி
தீர்த்தம் : சக்கரதீர்த்தம், சங்கு தீர்த்தம்
திருஞானசம்பந்தப்
பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளிய திருத்தலம்.
சிவபெருமான்
எட்டு வீரச் செயல்கள் நிகழ்த்திய அட்ட வீரட்டத்தலங்களில் திருவிற்குடியும்
ஒன்றாகும்.
சலந்தராசுரன்
என்பவன் பிரமதேவரை நோக்கிக் கடும் தவம் செய்து சாகாவரம் கேட்டான். பிரமதேவர்
அவ்வாறு சாகாவரம் தர இயலாது என்று கூற, சலந்தாசுரன்
"தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது
எனக்கு அழிவு வரட்டும்" என வரம் வாங்கி விட்டான். தனது வரத்தின் பலத்தாலும், உடல் வலிமையாலும் செருக்குற்று
தேவர்களுக்கு தொல்லைகள் பல கொடுத்தான். தேவர்கள் திருக்கயிலை மலையை அடைந்து
சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். சலந்தாசுரன் போர்க்கோலம் பூண்டு திருக்கயிலை மலையை
அடைந்தான். சிவபெருமான் ஒரு முதிய அந்தணர் வேடத்தில் சலந்தாசுரன் முன்பு
தோன்றினார். அதற்கு முன்பு திருமாலை சலந்தாசுரன் போல் வடிவெடுத்து அவன் மனைவி
பிருந்தை முன் செல்லும்படி கூறினார் சிவபெருமான். கணவன் தான் வந்திருக்கிறார் என
வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என நினைத்ததால்
அவளது மனம் களங்கம் அடைந்தது. இத்தருணத்தில் சலந்தாசுரனிடம் தான் கூறும் ஒரு சிறிய
செயலை அவனால் செய்ய முடியுமா என்று சிவபெருமான் கேட்டார். தன்னால் எதையும் சாதிக்க
முடியும் என்று செருக்குடன் சலந்தாசுரன் கூறினான். சிவபெருமன் தனது காற்பெருவிரலால்
மண்ணில் ஒரு வட்டமிட்டு, "அந்த வட்டத்தைப்
பெயர்த்து உன் தலை மேல் தாங்கி நில்" என்று சலந்தாசுரனிடம் கூறினார். அவனும்
பெரு முயற்சிக்குப் பின் அந்த வட்டத்தைப் பெயர்த்தெடுத்து தன் தலை மேல்
தாங்கினான். மனைவி பிருந்தையின் மனம் சிறிது நேரம் களங்கப்பட்டதால், அந்த வட்டச் சக்கரம் சலந்தாசுரன் உடலை
இருகூறாகப் பிளந்துவிட்டு இறைவனின் கரத்தில் அமர்ந்தது. சலந்தாசுரன் என்பவனை
சக்கரத்தால் சிவபெருமான் அழித்த இத்திருத்தலம் அட்டவீரட்டானத் தலங்களில் ஒன்றாகப்
போற்றப்படுகிறது.
சலந்தாசுரன்
மனைவி தன் கணவர் இறக்கக் காரணமாக இருந்த திருமாலைப் பார்த்து "நான் கணவனை
இழந்து வருந்துவது போல, நீயும் உன் மனைவியை
இழந்து வருந்த வேண்டும்" என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால்
தான், விஷ்ணு இராமாவதாரம்
எடுக்க வேண்டி வந்து, மனைவியைப் பிரிந்து
வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து
பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீக்குளித்த இடத்தில் சிவன் ஒரு விதை
போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது. இந்த துளசியால் மாலை
தொடுத்து திருமாலுக்கு சாற்ற அவரின் பித்து விலகுகிறது. துளசி தான் இங்கு தல
விருட்சம் என்பது குறிப்பிடத் தக்கது.
இராஜகோபுரம்
ஐந்து நிலைகளை உடையது. கோயிலுக்கு எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. நல்ல
படித்துறைகளும் சுற்றுச்சுவரும் கொண்ட பெரிய குளம். குளத்தின் கரையில் விநாயகர்
கோயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், எதிரில் வலப்புறமாக உள்ள முதல் தூணில்
நாகலிங்கச் சிற்பம் அழகாகவுள்ளது. வெளிப்பிராகாரத்தில் பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய
இடமும், திருமால் வழிபட்ட
சிவாலயமும் உள்ளன. உள் பிராகாரத்தில் வலமாக வரும்போது மகாலட்சுமி, வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர்
பள்ளியறை, பைரவர், சனிபகவான், தனிக் கோயில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன் சந்நிதி, ஞானதீர்த்தமென்னும் கிணறு, பிடாரி, மாரி முதலிய சந்நிதிகள் உள்ளன.
சலந்தரனைச் சங்கரித்த மூர்த்தியின் உற்சவத் திருமேனி தரிசித்து மகிழ வேண்டிய
ஒன்று. வலது உள்ளங்கையில் சக்கரம் ஏந்தியுள்ளார். ஏனையகரங்களில் மான், மழு ஏந்தி, ஒரு கை ஆயுத முத்திரை தாங்கியுள்ளது.
அழகான ஐம்பொன் திருமேனி - வலமாக வந்து துவார பாலகரைத் தொழுது, துவார கணபதி, சுப்பிரமணியரை வணங்கி உள்ளே சென்றால்
மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சதுர ஆவுடையார் மீதுள்ள மூர்த்தியின்
பாணம் உருண்டையாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக, பிரம்மா, மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர் ஆகியோர் உள்ளனர்.
சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது.
முன்னால்
இடப்புறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். அம்பாள்
சந்நிதியின் எதிரில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரு ராசிகளும் உரிய
கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. அபிஷேக நீர் வெளிவரும் கோமுகம், ஒரு பெண் தாங்குவது போன்ற அமைப்பில்
உள்ளது. மண்டபத்தின் இடதுபுறம் நடராச சபையும், எதிரில் தெற்கு வாயிலும் சாளரமும்
உள்ளன. பக்கத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தின்
தீர்த்தங்கள் இரண்டு. சக்கரதீர்த்தம் கோயிலின் முன்னாலும், சங்குதீர்த்தம் கோயிலின் பின்புறமும்
உள்ளது.
இத்திருத்தலத்தில்
உள்ள முருகன் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்து
தன்னுடைய இரு தேவியருடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
அட்ட
வீரட்டத் தலங்கள்
திருக்கண்டியூர்
- பிரமன் சிரம் கொய்தது.
திருக்கோவலூர்
- அந்தகாசூரனை வதைத்தது.
திருவதிகை
- திருபுரங்களை எரித்தது.
திருப்புறியலூர்
- தக்கன் சிரம் கொய்தது.
திருவிற்குடி
- சலந்தராசுரனை வதைத்தது.
திருவழுவூர்
- யானையை உரித்தது.
திருக்குறுக்கை
- மன்மதனை எரித்தது.
திருக்கடவூர்
- எமனை உதைத்தது.
கருத்துரை
முருகா! விலைமாதர் மயலில்
அழியாமல், தேவரீது திருவடியைப்
பெற அருள்வாய்.
No comments:
Post a Comment