எட்டிகுடி - 0840. ஓங்கும் ஐம்புலன்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஓங்கும் ஐம்புலன் (எட்டிகுடி)

முருகா!
உபதேசப் பொருள் தந்து ஆண்டருள்வாய்.


தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான
     தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான


ஓங்கு மைம்புல னோட நினைத்தின் ...... பயர்வேனை
     ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந் ...... தனையாள்வாய்

வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் ...... புகடாவி
     வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் ...... குமரேசா

மூங்கி லம்புய வாச மணக்குஞ் ...... சரிமானு
     மூண்ட பைங்குற மாது மணக்குந் ...... திருமார்பா

காங்கை யங்கறு பாசில் மனத்தன் ...... பர்கள்வாழ்வே
     காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

ஓங்கும் ஐம்புலன் ஓட நினைத்து இன்பு ...... அயர்வேனை,
     "ஓம்"பெறும் ப்ரணவ ஆதி உரைத்து,ன்....தனை ஆள்வாய்,

வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் ...... புகள் தாவி
     வாங்கி நின்றன ஏவில் உகைக்கும் ...... குமரேசா!

மூங்கில் அம்புய வாச மணக் குஞ் ...... சரிமானும்,
     மூண்ட பைங்குற மாது மணக்கும் ...... திருமார்பா!

காங்கை அங்குஅறு பாசில் மனத்து அன் ...... பர்கள் வாழ்வே!
     காஞ்சிரங்குடி ஆறுமுகத்து எம் ...... பெருமாளே.


பதவுரை


      சூரர் குலக்கொம்புகள் வெம் கணை வாங்கி தாவி --- சூராதி அவுணர்கள் வில்லை வளைத்து கொடிய அம்புகளை ஏவி பாய்ந்து வந்து,

      வாங்கி நின்றன ஏவில் உகைக்கும் குமரேசா --- வளைத்து நின்ற அந்தச் சேனையை அம்பைச் செலுத்தியே வென்ற குமாரக் கடவுளே!

      மூங்கில் அம் புய --- மூங்கிலைப் போன்று அழகிய திருத்தோள்களை உடைய,

     வாச மணக் குஞ்சரிமானும் --- வாசம் மணக்கும் தேவயானை அம்மையாரையும்,

      மூண்ட பைங்குற மாது மணக்குந் திருமார்பா --- தேவரீர் மீது அன்பு மூண்டுள்ள அழகிய குறமாது ஆகிய வள்ளியம்மையையும் மணந்து கொண்ட திருமார்பினரே!

      காங்கை அங்கு அறு --- மனக்கொதிப்பு அற்று,

     பாசில் மனத்து அன்பர்கள் வாழ்வே --- பாசம் நீங்கிய மனத்தவர்களுமான அன்பர்களின் பெருவாழ்வு ஆனவரே!

       காஞ்சிரங்குடி ஆறுமுகத்து எம் பெருமாளே --- காஞ்சிரங்குடி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள ஆறுமுகப் பரம்பொருளே!

       ஓங்கும் ஐம்புலன் ஓட --- ஆசையை மிகுத்து, ஓங்கும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து புலன்களும் இழுத்த வழியிலேயே அடியேனும் ஓட

       நினைத்து இன்பு அயர்வேனை --- அவற்றால் பெறப்படும் இன்பத்தையே நுகர்ந்து தளர்ச்சி அடைகின்ற அடியேனை,

      ஓம் பெறும் ப்ரணவ ஆதி உரைத்து --- ஓம் என்னும் பிரணவம் முதலான மந்திரங்களை அடியேனுக்கு உபதேசித்து,

      எந்தனை ஆள்வாய் --- என்னை ஆண்டு அருள்வாயாக.

பொழிப்புரை

    
     சூராதி அவுணர்கள் வில்லை வளைத்து கொடிய அம்புகளை ஏவி பாய்ந்து வந்து, வளைத்து நின்ற அந்தச் சேனையை அம்பைச் செலுத்தியே வென்ற குமாரக் கடவுளே!

     மூங்கிலைப் போன்று அழகிய திருத்தோள்களை உடைய, வாசம் மணக்கும் தேவயானை அம்மையாரையும், மூண்டுள்ள அன்பினை உடைய அழகிய குறமாது ஆகிய வள்ளியம்மையையும் மணந்து கொண்ட திருமார்பினரே!

     மனக்கொதிப்பு அற்று, பாசம் நீங்கிய மனத்தவர்களுமான அன்பர்களின் பெருவாழ்வு ஆனவரே!

       காஞ்சிரங்குடி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள ஆறுமுகப் பரம்பொருளே!

      ஆசையை மிகுத்து ஓங்கும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து புலன்களும் இழுத்த வழியிலேயே அடியேனும் ஓட, அவற்றால் பெறப்படும் இன்பத்தையே நுகர்ந்து தளர்ச்சி அடைகின்ற அடியேனை, "ஓம்" என்னும் பிரணவம் முதலான மந்திரங்களை அடியேனுக்கு உபதேசித்து, என்னை ஆண்டு அருள்வாயாக.

விரிவுரை

மூங்கில் அம் புய வாசமணக் குஞ்சரிமானும் ---

மூங்கிலைப் போலும் அழகிய தோள்களை உடையவர் தேவயானை அம்மையார்.  பெண்களின் தோள்களை மூங்கிலுக்கு ஒப்பிடுவது உண்டு.

"வேய் உறு தோளி" பங்கன் என்றார் திருஞானசம்பந்தர். 
"வேய் அனைய தோள் உமை ஓர் பாகம்" என்றும் பாடினார்.

குஞ்சரம் - யானை. 

தேவலோக யானையாகிய ஐராவதத்தினால் வளர்ந்தவள் தேவகுஞ்சரி எனப்பட்டார்.

காங்கை அங்கறு பாசில் மனத்து அன்பர்கள் வாழ்வே ---

காங்கை - வெப்பம். 

காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றத்தால் உள்ளமானது எப்போதும் கொதிப்பிலேயே இருக்கும். உள்ளம் குளிர்ந்து இருக்காது. தணிந்த சிந்தையில் தான் இறைவன் குடி கொள்ளுவான். அழகும் தண்மையும் உள்ள நிலை அந்தண்மை. அந்தணர் என்போர் அறவோர். எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுதல் வேண்டும்.

காஞ்சிரங்குடி ----

காஞ்சிரம் -- எட்டி. எட்டிகுடி, காஞ்சிரங்குடி எனலாயிற்று.

எட்டிகுடி, நாகப்பட்டினத்துக்கு அருகே கீழ்வேளூர் இரயில் நிலையத்திற்குத் தெற்கே பத்து கி.மீ. தொலைவில் உள்ளது

கருத்துரை

முருகா! உபதேசப் பொருள் தந்து ஆண்டருள்வாய்.

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...