பணிவு வேண்டும்






காக்க பொருளா அடக்கத்தை, ஆக்கம்
அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு.

இத் திருக்குறளின் வழி, "அடக்கத்தை நற்பொருளாகக் காத்துக் கொள்ள வேண்டும், அந்த அடக்கத்தை விட உயிருக்கு ஆக்கத்தைத் தருவது ஏதும் இல்லை" என்று அருளினார் நாயனார்.

ஐம்பெரும் பூதங்கள் வழி, உலகம் இயங்குவதுபோல், ஐம்புலன்கள் வழி, மனித வாழ்க்கை இயங்குகின்றது. ஐம்புலன்களை வேடர் என்பார் ஆன்றோர்.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களின் கருவியாக மனிதன் அமைந்து விடுவானானால், அது அவனுக்குத் துன்பமாகவே முடியும். ஐம்புலன்கள் வழியே மனிதன் இயங்காமல், ஐம்புலன்களை இயக்கிச் செலுத்த வேண்டும். ஐம்புலன்களும் மனித வாழ்வுக்குத் துணை செய்யவே இறைவனால் படைக்கப்பட்டன. அவற்றை உணர்ந்து, அறநெறியில் வாழ்வது தனது கடைமையாய் இருக்க, அவற்றிற்கு மனிதன் அடிமை ஆதல் கூடாது.

"அறிவு வழிச் செல்கின்றவனுக்கு வாழ்க்கை ஓர் இன்ப நாடகம். உணர்ச்சி வழிச் செல்பவனுக்கு அது ஓர் அவல நாடகம்" என்றார் வால்டேர் என்னும் அறிஞர்.

அறிவுக்கும் உணர்வுக்கும் எப்போதும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். அறிவு வென்றால் மனிதனுக்கு ஆக்கம். உணர்வு வென்றால் மனிதனுக்குச் சீரழிவு. உணர்ச்சி என்னும் மதம் பிடித்த யானையைத் தன் போக்கில் போகவிடாமல், அறிவு, மனத்திண்மை என்னும் அங்குசத்தால் அடக்கிப் பணிகொள்ள வேண்டும்.

அடக்கமாக இருந்தால் அமரர் உலகை அடையலாம். அடங்காதவனாக இருந்தால் நரகலோகம் வாய்க்கும்.

"அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை
ஆர்இருள் உய்த்து விடும்"

என்றார் திருவள்ளுவ நாயனார்.

மன அடக்கம் உடையவரையே நட்பாகக் கொள்ளுதல் வேண்டும் என்கின்றது அறநெறிச்சாரம் என்னும் நூல்.

"இம்மை அடக்கத்தைச் செய்து, புகழ் ஆக்கி,
உம்மை உயர்கதிக்கு உய்த்தலால் -- மெய்ம்மையே
பட்டாங்கு அறம் உரைக்கும் பண்பு உடையாளரே
நட்டார் எனப்படு வார்"      ---  அறநெறிச்சாரம்.

இந்தப் பிறவியில் மனம் மொழி மெய்களால் அடக்கத்துடன் வாழ்ந்து, புகழினைப் பெருக்கி, மறுபிறப்பில் வீடுபேற்றினை அடைவித்தலால், இயல்பாகவே இந்த உலகத்தில் அத்தகைய உண்மை அறத்தினை உரைக்கும் பண்பினை உடையவர்களே நட்பினர் என்று கூறப்படுவதற்கு உரியவர் ஆவார்.

செல்வம் உடையார் உலகில் தருக்கித் திரிவது இயல்பே. நான் ஈட்டிய செல்வம் ஏழு தலைமைறைக்கும் வரும் என்று கூறி ஆர்ப்பரிப்பவர் உண்டு.

அத்தகைய செல்வர்களும் பணிந்து போகவேண்டும் என்கின்றார் திருவள்ளுவர். எல்லாருக்கும் பணிவுடைமை வேண்டப்படுவதே ஆயினும், செல்வர்களுக்குக் கட்டாயம் பணிவு தேவை என்கிறார் அவர். தாங்கள் ஈட்டிய செல்வத்தைக் காப்பதற்குப் பணிவு உடைமையே துணை செய்யும்.

"எல்லார்க்கும் நன்றாம் பணிதல், அவர் உள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து"

என்பது திருக்குறள்.

"ஒட்டகம் ஊசி முனையில் நுழைந்தாலும் நுழையலாம். ஆனால், பணக்காரன் பரலோகத்தில் நுழையவே முடியாது என்று விவிலியம் கூறும். "தன்னைத் தாழ்த்திக் கொள்பவன் எவனோ, அவனே பிறரால் உயர்த்தப் படுவான்" என்றார் இயேசுபிரான்.

காரணம், இறைவன் முன் எல்லோரும் சிறியவர்களே.  இறைவனே மிகப் பெரியவன். "மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய்" என்பார் அப்பரடிகள்.

தக்பீர் முழக்கம் கேட்டால் உள்ளம் இனிக்கும் என்று நாகூர் அனீபா அவர்கள் பாடுவார்கள். அதுவே இனிமையாக இருக்கும். "அல்லாஹூ அக்பர்" என்பது தான் தக்பீர் முழக்கம். இதன் பொருள்,"இறைவன் மிகப் பெரியவன்" என்பதே. நம்மால் முடியாதவற்றை எல்லாம் முடித்துக் கொடுப்பவன் இறைவன்.

அவனருள் இருந்தால் துரும்பு கூடப் பெரிய தொழிலைச் செய்யும் என்னும் கருத்தில், "அருள் பெறில் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும், அருள் பெற முயலுக" என்று இறைவன் அருளியதாக வள்ளல்பெருமான் பாடுவார்.

அப்படிப்பட்ட இறைவன் எங்கும் எதிலும் நிறைந்து, சர்வ அந்தர்யாமியாக விளங்குகின்றான். அவனுடைய அருளால் செல்வம் வந்தது என்று தெளிந்தால், பணிவு இருக்கும்.

பணிவுடன் வாழ்ந்து, பரமனைப் பணிந்து, உயர்வோமாக.

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...