திரு ஆரூர் - 0828. பாலோ தேனோ பலவுறு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பாலோ தேனோ பலவுறு (திருவாரூர்)

முருகா!
விலைமாதரின் அழகில் உருகிய எனது மனம்,
தேவரீரின் திருப்புகழை ஓதி உருக அருள்வாய்.


தானா தானா தனதன தனதன
     தானா தானா தனதன தனதன
     தானா தானா தனதன தனதன ...... தனதான


பாலோ தேனோ பலவுறு சுளையது
     தானோ வானோர் அமுதுகொல் கழைரச
     பாகோ வூனோ டுருகிய மகனுண ......வருண்ஞானப்

பாலோ வேறோ மொழியென அடுகொடு
     வேலோ கோலோ விழியென முகமது
     பானோ வானூர் நிலவுகொ லெனமகண் ......மகிழ்வேனை

நாலாம் ரூபா கமலஷண் முகவொளி
     யேதோ மாதோம் எனதகம் வளரொளி
     நானோ நீயோ படிகமொ டொளிரிட ......மதுசோதி

நாடோ வீடோ நடுமொழி யெனநடு
     தூணேர் தோளா சுரமுக கனசபை
     நாதா தாதா எனவுரு கிடஅருள் ......புரிவாயே

மாலாய் வானோர் மலர்மழை பொழியவ
     தாரா சூரா எனமுநி வர்கள்புகழ்
     மாயா ரூபா அரகர சிவசிவ ...... எனவோதா

வாதா டூரோ டவுணரொ டலைகடல்
     கோகோ கோகோ எனமலை வெடிபட
     வாளால் வேலால் மடிவுசெய் தருளிய ...... முருகோனே

சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள்
     ஓதார் சீராள் கதிர்மதி குலவிய
     தோடாள் கோடா ரிணைமுலை குமரிமுன் ......அருள்பாலா

தூயா ராயார் இதுசுக சிவபத
     வாழ்வா மீனே வதிவமெ னுணர்வொடு
     சூழ்சீ ராரூர் மருவிய இமையவர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பாலோ? தேனோ? பலவுறு சுளை அது
     தானோ? வானோர் அமுதுகொல்? கழை ரச
     பாகோ? ஊனோடு உருகிய மகன் உண ...... அருள்ஞானப்

பாலோ? வேறோ? மொழி என, அடுகொடு
     வேலோ? கோலோ? விழி என, முகம் அது
     பானோ? வான்ஊர் நிலவுகொல்? னமகள் ......மகிழ்வேனை,

நாலாம் ரூபா, கமலஷண் முக ஒளி,
     ஏதோ மா தோம் எனது அகம் வளர் ஒளி
     நானோ? நீயோ? படிகமொடு ஒளிர்இடம் ...... அதுசோதி,

நாடோ? வீடோ? நடுமொழி என, நடு
     தூண் ஏர் தோளா! சுரமுக கனசபை
     நாதா! தாதா! என உருகிட அருள் ......புரிவாயே.
  
மாலாய் வானோர் மலர்மழை பொழி
     அவதாரா! சூரா! என முநிவர்கள் புகழ்
     மாயா ரூபா! அரகர சிவசிவ ......என ஓதா

வாதாடு ஊரோடு அவுணரொடு அலைகடல்
     கோகோ கோகோ என, மலை வெடிபட,
     வாளால் வேலால் மடிவுசெய்து அருளிய ......முருகோனே!

சூலாள், மால்ஆள், மலர்மகள், கலைமகள்,
     ஓதார் சீராள், கதிர்மதி குலவிய
     தோடாள், கோடுஆர் இணைமுலை குமரி, முன் ...... அருள்பாலா!

தூயார் ஆயார் இது சுக சிவபத
     வாழ்வாம், ஈனே வதிவம் என் உணர்வொடு
     சூழ் சீர் ஆரூர் மருவிய இமையவர் ...... பெருமாளே.


பதவுரை


         மாலாய் வானோர் மலர்மழை பொழி அவதாரா --- அன்பு கொண்டு தேவர்கள் மலர்மழை பொழிந்து வாழ்த்திட பூமியில் திருவவதாரம் புரிந்தவரே!

         சூரா என முநிவர்கள் புகழ் மாயாரூபா --- சூரரே என முனிவர்கள் புகழும் அழியாத வடிவத்தை உடையவரே!

         அரகர சிவசிவ என ஓதா --- அரகர சிவசிவ என்று தேவரீரை ஓதி வழிபடாமல்,

         வாதாடு ஊரோடு அவுணரொடு --- வாதாடி நின்ற அவணர்களுடன், அவர்தம் ஊரவரும்,

       அலை கடல் கோ கோ கோ கோ என --- அலைகடலும்  கோகோ என்று அலறவும்,

         மலை வெடி பட --- கிரவுஞ்ச மலையும், ஏழு குலமலைகளும் வெடிபட்டுப் பொடியாகவும்,

         வாளால் வேலால் மடிவு செய்து அருளிய முருகோனே --- வாளாலும், வேலாலும் அழியச் செய்து அருளிய முருகப் பெருமானே!

         சூலாள் --- சூலத்தை ஏந்தியவளான துர்க்கை,

        மால்ஆள் மலர்மகள் --- திருமாலுக்குத் தேவியான மலர்மகள்,

       கலைமகள் --- கலைமகள், (ஆகிய மூவரும்)

         ஓது ஆர் சீராள் --- ஓதி வழிபடுகின்ற பெருமைக்கு உரியவள்,

        கதிர்மதி குலவிய தோடாள் --- சூரியனையும், சந்திரனையும் தனது காதுகளில் தோடாக அணிந்தவள்,

         கோடு ஆர் இணைமுலை குமரி --- மலை போன்ற இருமுலைகளை உடைய உண்ணாமுலை அம்மை,

        முன் அருள் பாலா --- முன்னாளில் அருளிய திருக்குழந்தையே!

       தூயார் ஆயார் இது சுக சிவபத வாழ்வு ஆம் --- தூய உள்ளத்தோடு கொண்டாடுகின்றவர்கள் இந்த (திருவாரூர்) வாழ்வே சுகமான சிவபத வாழ்வு ஆகும் என்று எண்ணி,

         ஈனே வதிவம் என் உணர்வொடு சூழ் --- இங்கேயே தங்கி வாழ்வோம் என்னும் ஞான உணர்வோடு வந்து சூழ்ந்துள்ள,

         சீர் ஆரூர் மருவிய இமையவர் பெருமாளே --- சிறப்பு மிக்க திருவாரூரில் விரும்பித் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருந்து, தேவர்களும் வந்து போற்றும் பெருமையில் மிக்கவரே!

         பாலோ தேனோ பலஉறு சுளை அதுதானோ --- பாலோ, தேனோ, பலாப் பழத்தின் சுளைதானோ?

         வானோர் அமுது கொல் --- தேவர்கள் உண்ணும் அமுதம் தானோ?

        கழை ரச பாகோ --- கரும்பு ரசப் பாகோ?

         ஊனோடு உருகிய மகன் உண அருள்ஞானப் பாலோ --- உள்ளத்தோடு ஊனும் உருகும்படியாகத் தேவாரத் திருப்புதகங்க்ளை அருளிய திருஞானசம்பந்தப் பெருமான் உண்ண (உமாதேவியார்) அருளிய ஞானப் பால்தானோ?

         வேறோ மொழி என --- வேறு என்னவென்று கூறத் தக்கதோ (இந்தப் பெண்களின்) மொழி என்றும்,

         அடு கொடு வேலோ கோலோ விழி என --- கொல்லும் தன்மையை உடைய வேலோ, அம்பு தானோ (அம்மாதர்களின்) கண்கள் என்றும்,

         முகம் அது பானோ வான் ஊர் நிலவு கொல் என --- முகமானது சூரிய ஒளிதானோ, அல்லது ஆகாயத்தில் ஊர்ந்து செல்லும் சந்திர ஒளியோ என்றும்,  

         மகள் மகிழ்வேனை --- பெண்களிடம் கலந்து மகிழ்கின்ற என்னை,
 
         நாலாம் ரூபா --- பல வடிவமும் கொண்ட உருவத்தரே!

       கமல ஷண்முக ஒளி ஏதோ --- தாமரை போன்ற அறுமுக ஒளியோ, அல்லது வேறு எதுவோ என்று சொல்லும்படியாக,

         மா தோம் எனது அகம் வளர் ஒளி --- பெரிய குற்றம் பொருந்திய எனது மனத்தில் வளர்கின்ற சோதியே,!

         நானோ நீயோ படிகமொடு ஒளிர் இடம் அது சோதி --- நானோ நீயோ என்று கூறமுடியாதது போல் ஒன்றுபட்டு, பளிங்குபோல் விளங்கும் இடம் அது ஒரு சோதி மயமானது,

         நாடோ வீடோ --- அது இந்த நாட்டிலோ அல்லது மோட்ச வீட்டிலோ?

         நடு மொழி என --- மெய்த்தன்மையை உடையவரே!

       நடு தூண் நேர் தோளா --- நாட்டப்பட்டுஉள்ள தூணை நிகர்த்த திருத்தோள்களை உடையவரே!

         சுர முக கன சபை நாதா --- தேவர்கள் முன்னிலையில் பெருமை தங்கிய சபையில் விளங்கும் நாதரே!

         தாதா என உருகிட அருள் புரிவாயே --- கொடை வள்ளலே! என்று மனம் உருக அருள் புரிவாய்.

பொழிப்புரை

     அன்பு கொண்டு தேவர்கள் மலர்மழை பொழிந்து வாழ்த்திட பூமியில் திருவவதாரம் புரிந்தவரே!

         சூரரே என முனிவர்கள் புகழும் அழியாத வடிவத்தை உடையவரே!

         அரகர சிவசிவ என்று தேவரீரை ஓதி வழிபடாமல், வாதாடி நின்ற அவணர்களுடன், அவர்தம் ஊரவரும், அலைகடலும்  கோகோ என்று அலறவும்,  கிரவுஞ்ச மலையும், ஏழு குலமலைகளும் வெடிபட்டுப் பொடியாகவும்,  வாளாலும், வேலாலும் அழியச் செய்து அருளிய முருகப் பெருமானே!

         சூலத்தை ஏந்தியவளான துர்க்கை, திருமாலுக்குத் தேவியான மலர்மகள், கலைமகள், (ஆகிய மூவரும்) ஓதி வழிபடுகின்ற பெருமைக்கு உரியவள்; சூரியனையும், சந்திரனையும் தனது காதுகளில் தோடாக அணிந்தவள்; மலை போன்ற இருமுலைகளை உடைய உண்ணாமுலை அம்மை முன்னாளில் அருளிய திருக்குழந்தையே!

     தூய உள்ளத்தோடு கொண்டாடுகின்றவர்கள் இந்த (திருவாரூர்) வாழ்வே சுகமான சிவபத வாழ்வு ஆகும் என்று எண்ணி,  இங்கேயே தங்கி வாழ்வோம் என்னும் ஞான உணர்வோடு வந்து சூழ்ந்துள்ள, சிறப்பு மிக்க திருவாரூரில் விரும்பித் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருந்து, தேவர்களும் வந்து போற்றும் பெருமையில் மிக்கவரே!

         பாலோ, தேனோ, பலாப் பழத்தின் சுளைதானோ? தேவர்கள் உண்ணும் அமுதம் தானோ? கரும்பு ரசப் பாகோ?  உள்ளத்தோடு ஊனும் உருகும்படியாகத் தேவாரத் திருப்புதகங்க்ளை அருளிய திருஞானசம்பந்தப் பெருமான் உண்ண (உமாதேவியார்) அருளிய ஞானப் பால்தானோ? வேறு என்னவென்று கூறத் தக்கதோ (இந்தப் பெண்களின்) மொழி என்றும், கொல்லும் தன்மையை உடைய வேலோ, அம்பு தானோ (அம்மாதர்களின்) கண்கள் என்றும், முகமானது சூரிய ஒளிதானோ, அல்லது ஆகாயத்தில் ஊர்ந்து செல்லும் சந்திர ஒளியோ என்றும்,  பெண்களிடம் கலந்து மகிழ்கின்ற என்னை, பல வடிவமும் கொண்ட உருவத்தரே! தாமரை போன்ற அறுமுக ஒளியோ, அல்லது வேறு எதுவோ என்று சொல்லும்படியாக பெரிய குற்றம் பொருந்திய எனது மனத்தில் வளர்கின்ற சோதியே! நானோ நீயோ என்று கூறமுடியாதது போல் ஒன்றுபட்டு, பளிங்குபோல் விளங்கும் இடம் அது ஒரு சோதி மயமானது. அது இந்த நாட்டிலோ அல்லது மோட்ச வீட்டிலோ? மெய்த்தன்மையை உடையவரே! நாட்டப்பட்டு உள்ள தூணை நிகர்த்த திருத்தோள்களை உடையவரே! தேவர்கள் முன்னிலையில் பெருமை தங்கிய சபையில் விளங்கும் நாதரே! கொடை வள்ளலே! என்று மனம் உருக அருள் புரிவாய்.

விரிவுரை

தூயார் ஆயார் இது சுக சிவபத வாழ்வு ஆம் ஈனே வதிவம் என் உணர்வொடு சூழ் சீர் ஆரூர் மருவிய இமையவர் பெருமாளே ---

தூயார் --- உள்ளத்தால் தூய அடியவர்கள்.

ஆயார் --- கொண்டாடுகின்றவர்கள்.

ஈனே --- இங்கேயே.


திருவாரூர் சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் - திருத்துறைப்பூண்டி இரயில் பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிருந்து பேருந்து வசதி உள்ளது.

இறைவர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்
இறைவியார் : அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகைநீலோத்பலாம்பாள்
தல மரம் : பாதிரி
தீர்த்தம் : கமலாலயம், சங்கு தீர்த்தம், கயாதீர்த்தம், வாணி தீர்த்தம்

திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தான். அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த விடங்கத் தலங்கள் எனப்படும்.

இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.

 கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி.

எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரக்ஷை எனப்படும் திரு அந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.

இத்தலம் பிறக்க முத்தி தருவது என்று புகழப்படும் சிறப்பினை உடையது.

 இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய தலம்.

தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (வீதி விடங்கர்); ஆதாரத் தலங்களுள் இது "மூலாதார"த் தலம்.

சப்தவிடங்கத் தலங்கள் -----

1.    திருவாரூர் – வீதிவிடங்கர் -  அசபா நடனம்
2.    திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்.
3.    நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம்.
4.    திருகாறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம்.
5.    திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்.
6.    திருவாய்மூர் – நீலவிடங்கர் – கமல நடனம்.
7.    திருமறைக்காடு – புவனிவிடங்கர் – அம்சபாத நடனம்.

பஞ்ச பூதத் தலங்களுள் பிருதிவித் தலம். தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி.

தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர். ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை; அவருடன் 1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுவார், 3. உருத்திரப் பல்கணத்தார், 4. விரிசடை மாவிரதிகள், 5. அந்தணர்கள், 6. சைவர்கள், 7. பாசுபதர்கள், 8. கபாலியர்கள் ஆகிய எட்டுக் கணங்கள் சூழ வருவாராம்.

ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்ற திருவாதிரைத் திருநாளில் இந்த எண்கணங்களும் பெருமானுடன் பவனி வந்ததை அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் கீழ் கண்டவாறு சொல்லோவியமாகத் தீட்டுகிறார்.

அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொடு அருளிப்பாடியர்
உரிமையில் தொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே.
                                                                                   
"மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்" என்று திருமுதுகுன்றத்து ஈசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டு, அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்டத் திருத்தலம்.

சுந்தரர் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அவருக்காக இத்தல தியாகேசப் பெருமானார் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடையத் திருத்தலம். பரவை நாச்சியார் வாழ்ந்த பதி. சுந்தரர் இழந்த வலக் கண்ணைப் பெற்ற பதி.

சுந்தரர், "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கே உரியது.

 இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி.

தண்டியடிகள் அவதரித்து, முத்தி அடைந்தத் திருத்தலம். இத்திருக்கோயில் வளாக மூன்றாவது சுற்றில் மூலாதார கணபதிக்கு அருகில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.

அறுபத்து மூவருள் ----

நமிநந்தி அடிகள், (நீரால் விளக்கெரித்தவர்)

செருத்துணை நாயனார், (கழற்சிங்க நாயனாருடைய மனைவி சிவபூசைக்குரிய பூவை மோந்ததற்காக அவருடைய முக்கை அரிந்தவர்)

கழற்சிங்கர், (சிவபூசைக்குரிய பூவை மோந்ததற்காக தன் மனைவியின் மூக்கை அறுத்த தண்டனை போதாதென்று அவள் கையையும் வெட்டியவர்)

விறன்மிண்டர் (சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடக் காரணமாய் இருந்தவர்)

ஆகியோரின் முக்தித் தலம்.

சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்தத் (கமலாபுரம்) தலம். இஃது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7கி.மீ. தொலைவில் உள்ளது.  திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.

          இசைஞானியார்
          அவதாரத் தலம்       : திருவாரூர் (கமலாபுரம்).
          வழிபாடு              : லிங்க வழிபாடு.
          முத்தித் தலம்         : திருநாவலூர்
          குருபூசை நாள்        : சித்திரை - சித்திரை.


நமிநந்தி அடிகள் வரலாறு

சோழநாட்டிலே ஏமப்பேறூரிலே தோன்றியவர் நமிநந்தி அடிகள். அவர் அந்தணர். வாய்மையில் சிறந்தவர். திருநீற்று அன்பர். இரவும் பகலும் ஆண்டவன் அடியை நினைப்பதையே பேரின்பமாகக் கொண்டவர். அவர் திருவாரூருக்குச் சென்று இறைவனை வழிபடுவது வழக்கம்.

ஒருநாள் புற்றிடங்கொண்ட புனிதரைப் பணிந்து, அருகே உள்ள அரனெறி என்னும் கோயிலை அடைந்து திருத்தொண்டுகள் செய்தார். ஆங்கே தீபத் தொண்டு செய்தல் வேண்டும் என்னும் விருப்பம் அவருக்கு எழுந்தது. அவ் வேளை, மாலைக் காலமாய் இருந்தமையால் அவர், வேறிடம் செல்ல மனம் கொண்டாரில்லை. அருகே இருந்த வீட்டிற்குள் நுழைந்தார்.  திருவிளக்கு ஏற்ற நெய் கேட்டார். அவ் வீட்டில் உள்ளவர்கள் சமணர்கள்.

சமணர்கள் அடிகளை நோக்கி, "கையிலே கனல் உடைய கடவுளுக்கு விளக்கு எதற்கு? இங்கு நெய்யில்லை. நீரை முகந்து விளக்கு எரியும்" என்றார்கள். அவ் உரையைக் கேட்ட நாயனார் மனம் வருந்தினார். மன வருத்தத்தோடு சிவசந்நிதியை அடைந்து, பெருமானை வணங்கி விழுந்தார். அச் சமயத்தில், "கவலை ஒழி. அருகே உள்ள குளத்து நீரை முகந்து விளக்கு ஏற்று" என்று ஒரு வானொலி எழுந்தது. நாயனார்க்கு அளவில்லா இன்பம் உண்டாயிற்று.

நமிநந்தியடிகள் குளத்தில் இறங்கி, நீரை முகந்து கொண்டு வந்து, திரியிட்ட அகலிலே வார்த்து ஒரு விளக்கை ஏற்றினார். அது சுடர் விட்டு எரிந்தது. அடியவர் மகிழ்ந்து, திருக்கோயில் முழுவதும் தண்ணீரால் விளக்கு எரித்தார். சமணர்கள் நாணுற்றார்கள்.   

நமிநந்தியடிகள் நாள்தோறும் திருவிளக்குத் தொண்டு செய்து வந்தார். அவர், திருவிளக்கினுள் விடியுமளவும் நின்று எரியும் பொருட்டு நீர் குறையும் தகழிகளுக்கு எல்லாம் நீர் வார்ப்பார். இரவில் தம் ஊருக்குச் செல்வார். மனையில் நியதி தவறாமல் சிவபிரானை அர்ச்சிப்பார். திருவாரூரை அடைந்து தொண்டு செய்வார்.

திருவாரூர் சிவமயமாக விளங்கிற்று. நமிநந்தியடிகளின் திருத்தொண்டு குறைவு அற நிகழ்ந்து வர, சோழ மன்னன் அமுதுபடி முதலான நிபந்தங்கள் அமைத்தான். நாயனார், வீதிவிடங்கப் பெருமானுக்குத் திருவிழாச் செய்ய, அப் பெருமான் திருவடியை நோக்கி முறையிட்டார். ஆண்டவன் அருளால் பங்குனி உத்திரத் திருவிழா நன்கு நடைபெற்றது.

அவ் விழாவிலே ஒருநாள் சிவபெருமான் திருமணலிக்கு எழுந்தருளினார். எல்லாக் குலத்தவர்களும் ஆண்டவனைத் தொழுது உடன் சென்றார்கள். அவர்களோடு நமிநந்தியடிகளும் சென்று ஆண்டவன் திருவோலக்கத்தைக் கண்டு ஆனந்தம் உற்றார். பொழுது போயிற்று. சிவபெருமான் திருமணலியில் இருந்து திருவாரூருக்கு எழுந்தருளினார். நாயனார் சிவபெருமானை வணங்கித் தம் ஊரை அடைந்தார். அடைந்தவர் மனைக்குள் நுழைந்தாரில்லை. புறக்கடையிலே துயின்றார்.

மனைவியார் வந்து நாயனாரைப் பார்த்து, "வீட்டுக்குள் வந்து சிவபூசை முதலியன முடித்துத் துயிலும்" என்றார். அதற்கு நாயனார், "இறைவனார் இன்று திருமணலிக்கு எழுந்தருளினார்.  எல்லாச் சாதியாருடன் நானும் போனேன். பிராயச்சித்தம் செய்து மனைக்குள் நுழைந்து பூசை செய்தல் வேண்டும். தண்ணீர் கொண்டு வா" என்றார். அம்மையார் வீட்டிற்குள் சென்றார்.  அதற்குள் சிவபெருமான் திருவருளாலோ, அயர்வாலோ நாயனாருக்கு உறக்கம் வந்தது. சிவபெருமான் அவர் கனவிலே தோன்றித் "திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லாரும் நம் கணங்கள். அத் தன்மையை நீ காண்பாய்" என்று அருளி மறைந்தார். உடனே நாயனார் துயில் நீங்கி, "இரவில் சிவபூசை செய்தேனில்லை. நான் நினைத்தது குற்றம்" என்று எழுந்தபடியே சிவ வழிபாடு செய்தார். நிகழ்ந்ததை மனைவியாருக்குச் சொன்னார். விடிந்ததும் அவர் திருவாரூரை அடைந்தார். அங்கே எல்லாரும் சிவகணங்களாக விளங்குதலைக் கண்டார். விழுந்து விழுந்து அவர்களை வணங்கினார். அவர்கள் எல்லாரும் பழையபடியே ஆயினர். அதையும் நாயனார் கண்டார். "என் பிழை பொறுத்து அருளல் வேண்டும்" என்று நாயனார் ஆண்டவனைத் தொழுதார்.

நமிநந்தியடிகள் தம் ஊரை விடுத்துத் திருவாரூரிலே குடி புகுந்து, அடியவர்களுக்கு வேண்டுவன எல்லாம் செய்து வந்தார்.  அவர், தொண்டர்க்கு ஆணி என்று அப்பர் பெருமானாரால் சிறப்பிக்கப் பெற்றார்.

நமிநந்தியடிகள் முறைப்படி திருத்தொண்டுகளைச் செய்து தியாகேசப் பெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

நமிநந்தி அடிகள் பிறந்த குலத்தின் சார்பாகச் சில நடைமுறைகள் அக்காலத்தில் வகுக்கப்பட்டன. அதன்படி, வெளியில் எங்காவது சென்று வந்தால், குளித்து முடித்தே வீட்டுக்குள் புகவேண்டும் என்பது நியதியாக இருந்தது.

அடியவர்களுக்கு இந்த நியதி எல்லாம் பொருந்தாது என்பதை எடுத்துக் காட்டவே, நமிநந்தி அடிகள் வாழ்வில் இந்த நிகழ்வு காட்டப்பட்டது. இது இறைவன் திருவிளையாடல்.

இறைவனுக்கு அடியவராக இருப்பவர் யாவராயினும் அவர் நம்மால் வணங்கத் தக்கவர். அடியாராக இல்லாதார் எப்படிப்பட்டவர் ஆயினும் அவர் நம்மால் போற்றத் தக்கவர் அல்லர் என்னும் கருத்து அமைந்த, அப்பர் பெருமான் திருத்தாண்டகப் பாடல் ஒன்றைக் காண்போம்.

"நாம்ஆர்க்கும் குடிஅல்லோம்; நமனை அஞ்சோம்;
         நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணிஅறியோம்; பணிவோம் அல்லோம்;
         இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை;
தாம்ஆர்க்கும் குடிஅல்லாத் தன்மையான
         சங்கரன் நல் சங்கவெண் குழைஓர் காதில்
கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்
         கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே".

இதன் பொழிப்புரை :

தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும், நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய், அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம்.

ஆதலின் .நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை.

தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும் இதனையே தமது திருப்பாடல்களில் வலியுறுத்திக் காட்டினார்.

அடிமையில் குடிமை இல்லா
     அயல் சதுப்பேதிமாரில்
குடிமையில் கடைமை பட்ட
     குக்கரில் பிறப்பரேலும்,
முடியினில் துளபம் வைத்தாய்!
     மொய்கழற்கு அன்பு செய்யும்*
அடியரை உகத்தி போலும்
     அரங்கமா நகர் உளானே.

இதன் பொழிப்புரை ---

திருமுடியில் திருத்துழாய் மாலையை அணிந்தவனே! எனக்குக் கைங்கரியம் செய்வதில் ஊற்றம் இல்லாதவர்களாய், அடிமைக்க் மாறுபட்டவர்களாய், நான்கு வேதங்களையும் ஓதிய வேதியர்களைக் காட்டிலும், குடிப்பிறப்பினால் கீழான சண்டாளருக்கும் கூழ்ப்பட்ட சாதியில் பிறந்தவர்களே ஆனாலும், உன் நெருங்கிய திருவடிகளுக்கு அன்பு செய்யும்படியான அடியவர்களையே விரும்புபவன் நீ.

குக்கர் - நாய்.

வேத அத்யயனம் (கற்பதன்) பண்ணுவதன் மூலம் அவர்கள் உண்மையில் அறிய வேண்டியது என்ன? என்றால் எம்பெருமான் நாராயணனே எல்லா உலகுக்கும் ஜகத் காரணன், ரக்ஷகன், ஸ்வாமி. நாம் அவனுக்கு சொத்து போல உடைமை. நமது ஆத்ம சொரூபத்தின் பலனே அவனுக்கும் அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்வது தான் என்கிற உணர்வு, ஞானம் வர வேண்டும். வந்தால்தான் வேதம் அறிந்தவர்களுக்கு வர வேண்டிய ஞானமாகிய உணர்வு வந்த்தாக அர்த்தம். அப்படி வந்தவர்கள் தான் சதுர்வேதிகள்.

ஆழ்வார் சதுப்பேதிமார்கள் என்கிறார். இந்த ஞானம் வராதும்- அதனை அறியாமலும், வேறு பயன்களைப் பெற்று வாழ இருப்பவர்களை "அயல் சதுப்பேதிமார்கள்" என்று பாசுரத்தில் சொல்லுகிறார்.

விஷ்ணு பக்தி இல்லாது, வேதம் அறிந்தாலும் வீண் என்கிறது சாஸ்திரம். இப்படி கைங்கர்யத்தில் நாட்டம் இல்லது நாலு வேதங்களையும் கற்றவர்களைக் காட்டிலும் மேலானவர்கள் யார்? என்பதை அருளுகிறார்.

வேதநெறி காட்டிய வழிகளைக்  கடைப்பிடிக்காது,
வேதம் செய்யாதே என்று விலக்கி வைத்தது எல்லாம் செய்தும், பகவானுக்கு எதிராக இருந்தும், பலபல பாவங்களைச் செய்து, அதனால் பல பல தாழ்ந்த பிறவிகளில் மீண்டும் பிறந்து உழல்கிறோம். அப்படி மிகவும் கீழான தாழ்ந்த சண்டாள ஜாதியைத் தான் "குக்கர்" என்கிறார். இப்படி குடிப்பிறப்பால் மிகவும் சண்டாளனாக பிறந்தாலும், அரங்கனிடத்தில் அன்பு பூண்டு, வாழும் சோம்பராக நல்ல ஞானம் கொண்டவரானால் அவரது பிறப்பு தாழ்ந்தது அல்ல என்கிறார் ஆழ்வார்

இராமன் காட்டில் இலக்குவமனிடம் ஜடாயுவைப் பார்த்த பின்பு, "லக்ஷ்மணா! நல்ல சாதுக்கள்-, தர்மம் அறிந்தவர்கள், சூரர்கள், எல்லாம் சரணம் அடையத் தகுந்த மஹா புருஷர்களே. அவர்கள் விலங்குகளாயும் இதர தாழ்ந்த யோநிகளிலும் உண்டு" என்றார். இதனால், பகவானைப் பற்றிய ஞானம் விலங்குகள் பறவைகளுக்கும் ஏற்படும் என்பது தெரிகிறது.

வேதத்தின் பொருளை விளக்க வந்த இராமாயணத்தில், காட்டில் திரியும் குகப்பெருமாள் போன்ற வேடர்களும், சபரி போன்ற வேடுவச்சிகளும், அனுமான், சுக்ரீவன் போன்ற வானரங்களும், ஜடாயு போன்ற பறவைகளும், விபீடணன் போன்ற அரக்கர்ர்களும் எம்பெருமானைப் பற்றிய ஞானத்தோடு இருந்தார்கள் என்பது தெரியும்.

மற்றொரு இதிகாசமான மகாபாரதத்திலும், தாழ்ந்த ஜாதியில் பிறந்த விதுரர், வேடனாய் மாமிச வியாபாரம் செய்து வந்த தர்மவ்யாதன்,  ஆய்ப்பாடியில் வாழ்ந்த எல்லா இடைச்சியர்கள் போன்ற அனைவரும் எம்பெருமானை உணர்ந்து, எல்லாம் கண்ணன் என்று இருந்தார்கள்.

அடியவர்களைப் பழிப்பவர்கள், உயர்ந்த சாதியர் ஆனாலும், அவர்களைப் புலையர் என்கின்றார் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்.

"அமர ஓர் அங்கம் ஆறும்,
     வேதம் ஓர் நான்கும் ஓதி,
தமர்களில் தலைவர் ஆய
     சாதி அந்தணர்களேலும்,
நுமர்களைப் பழிப்பர் ஆகில்,
     நொடிப்பதோர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும்,
     அரங்கமா நகர் உளானே".

இதன் பொழிப்புரை ---

அரங்க மாநகர் உள்ளானே! ஒப்பற்ற சிட்சை, வியாபகரணம், சந்தசு, நிருத்தம், சோதிடம், கல்பம் என்ற ஆறு வகையான வேத அங்கங்களையும், நிகர் அற்ற நான்கு வேதங்களையும் நெஞ்சில் பதியும்படி ஓதி, உன் அடியார்களில் முதல்வராய் பிராமண சாதியைச் சார்ந்தவர்கள் ஆயினும், தேவரீருடைய அடியார்களை, அவர்களுடைய பிறப்பு நோக்கிப் பழித்தால், அந்த நொடியிலேயே, அப்போதே, அந்தப் பிராமணர்கள் சண்டாளர்கள் ஆவார்.


நாட்டமிகு தண்டியடிகள் வரலாறு

தண்டியடிகள் சோழநாட்டிலே திருவாரூரிலே தோன்றியவர்.  பிறவிக் குருடர். அகக் கண்ணினாலே ஆண்டவனை வழிபடுவார்.  அவர் திருவாரூர்த் திருக்கோயிலை வலம் வருவார். திருவைந்தெழுத்தை ஓதுவார். திருக்கோயிலுக்கு மேல்பால் ஒரு குளம் உண்டு. அதன் பக்கமெல்லாம் சமண மடங்கள். நிரம்பி இருந்தன. அதனால், திருக்குளம் இடத்தால் சுருக்கமுற்று இருந்தது.

தண்டியடிகள், திருக்குளத்தைப் பெருக்க முயன்றார். அவர் திருக்குளத்தின் உள்ளே ஒரு தறி நட்டார். கரையிலே மற்றொரு தறி நட்டார். இரண்டுக்கும் இடையே ஒரு கயிறு கட்டினார்.  கயிற்றைத் தடவிக்கொண்டே போவார். மண்ணை வெட்டுவார்.  அதைக் கூடையிலே சுமந்து வருவார், கொட்டுவார்.

இச் செயலைச் சமணர்கள் கண்டார்கள். பொறாமை கொண்டார்கள். அவர்கள் நாயனாரைப் பார்த்து, "மண்ணைக் கல்லாதீர், பிராணிகள் இறக்கும். அவைகளை வருத்த வேண்டாம்" என்று சொன்னார்கள். அதற்கு அடிகள், "அறிவு கெட்டவர்களே! இது சிவத்தொண்டு. அறத்தொண்டு. இதன் பெருமை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். சமணர்கள் வெகுண்டு, "நாங்கள் சொன்னது அறவுரை. அதைக் கேட்கின்றாய் இல்லை.  உனக்குச் செவியும் இல்லை போலும்" என்றார்கள். நாயனார், "மந்த உணர்வும், குருட்டு விழியும், கேளாச் செவியும் உங்களுக்கே உண்டு. சிவனடியை அன்றிப் பிறிது ஒன்றை என் கண் பாராது. அந்த நுட்பம் உங்களுக்கு விளங்காது. புற உலகம் எல்லாவற்றையும் நான் காணக் கண் பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார். சமணர்கள், "நீ உன் தெய்வ வல்லமையால் கண் பெறுக. பார்ப்போம். பெற்றால் நாங்கள் இந்த ஊரில் இருப்பதில்லை" என்று கூறினார்கள். அத்தோடு நில்லாமல், நாயனாருடைய மண்வெட்டியையும், குறித் தறிகளையும், கயிற்றையும் பறித்துப் பிடுங்கி எறிந்தார்கள். தண்டியடிகளுக்கு வெகுளி மேலிட்டது. அவர் திருக்கோயில் திருவாயிலுக்குச் சென்று ஆண்டவனை இறைஞ்சினார்.  "ஐயனே! இன்று சமணர்கள் என்னை அவமானம் செய்தார்கள் அதனால் நான் மிகவும் வருந்துகிறேன். அதை ஒழித்தருள்க" என்று வேண்டி, அவர் தமது திருமடத்தை அடைந்தார்.  துன்பத்தில் மூழ்கித் துயின்றார்.

சிவபெருமான் அன்றிரவு நாயனார் கனவிலே தோன்றி, "அன்பனே! கவலை வேண்டாம். உன் கண் காணவும், சமணர்கள் கண் குருடாகவும் அருள் செய்வோம்" என்று திருவாய் மலர்ந்து அருளினார். அப்பொழுதே சிவபெருமான் சோழமன்னன் கனவிலும் தோன்றி, "தண்டி என்பவன் நமக்குக் குளம் கல்லினான். அதற்குச் சமணர்கள் இடையூறு செய்தார்கள். நீ அவனிடம் சென்று, அவன் கருத்தை முடிப்பாயாக" என்று கட்டளையிட்டார். மன்னன் விழித்து ஆண்டவன் அருளைப் போற்றினான்.

பொழுது விடிந்ததும் மன்னன் நாயனார்பால் அணைந்தான்.  அவன் தான் கண்ட கனவை நாயனாருக்குத் தெரிவித்தான்.  நாயனாரும் சமணர்கள் செய்ததையும், அதன் பொருட்டுத் தாம் ஏற்ற சூளையும் மன்னனுக்கு விளங்க உணர்த்தினார். மன்னன் சமணர்களை அழைப்பித்து விசாரணை புரிந்தான். சமணர்கள், தண்டி கண் பெற்றால், தாங்கள் இவ் ஊரை விட்டுப் போவதாக உறுதி கூறினார்கள்.

தண்டியடிகள் குளக்கரைக்குச் சென்றார். மன்னனும் உடன் போந்தான். மன்னன், கரையிலே நின்று தண்டியடிகளை நோக்கி, "சிவநேயரே சிவன் அருளால் கண்ணைப் பெறுதலைக் காட்டுக" என்றான். நாயனார், "சிவபெருமானுக்கு நான் தொண்டு செய்வது உண்மையாயின், மன்னன் எதிரே நான் கண் பெறுதல் வேண்டும்.  சமணர்கள் கண் இழத்தல் வேண்டும்" என்று சொல்லித் திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டே திருக்குளத்தில் மூழ்கினார். கண் பெற்றே எழுந்தார். சமணர்கள் கண்ணிழந்து தடுமாறினர்.

அக் காட்சி கண்ட மன்னன், சமணர்களை ஊரை விட்டுத் துரத்தினான். சமணர்களுடைய பாழிகளையும் பள்ளிகளையும் இடித்தான். திருக்குளத்தை நாயனார் கருத்துப்படி ஒழுங்கு செய்தான். நாயனாரைப் பணிந்து விடைபெற்றுச் சென்றான்.   தண்டியடிகள் வழக்கம்போலத் தமது தொண்டைச் செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

செருத்துணை நாயனார் வரலாறு

செருத்துணை நாயனார் தஞ்சாவூரிலே, வேளாளர் மரபிலே தோன்றியவர். சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்தவர். அவர் திருவாரூரை அடைந்து திருத்தொண்டு செய்து வந்தார். அங்கே வழிபாட்டுக்கு வந்த கழற்சிங்க நாயனாருடைய மனைவியார், பூ மண்டபத்தின் பக்கத்திலே கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தார். அதைச் செருத்துணை நாயனார் பார்த்தார். விரைந்து ஓடினார். கத்தி எடுத்தார். அம்மையார் கூந்தலைப் பிடித்தார். கீழே தள்ளினார். அம்மையாரின் மூக்கை அறுத்தார். செருத்துணை நாயனார் பலநாள் தொண்டு செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

கழற்சிங்க நாயனார் வரலாறு

கழற்சிங்க நாயனார் பல்லவ குலத்திலே தோன்றியவர்.  சிவபத்தர். வடபுல மன்னர்கள் வென்று எங்கும் சைவம் தழைக்கச் செங்கோல் ஓச்சினார். பல திருப்பதிகளுக்குப் போய் ஆண்டவனை வழிபடுவது அவர்தம் வழக்கம்.

ஒருநாள் கழற்சிங்கர், தமது மனைவியாருடன் திருவாரூரை அடைந்து, தியாகேசப் பெருமானைத் தொழுதார். அவ் வேளையில், அம்மையார் திருக்கோயிலை வலம் வந்தார்.  அங்கே உள்ள பெருமைகளைத் தனித்தனிக் கண்டு மகிழ்வெய்தினார். பூ மண்டபத்தின் பக்கத்திலே புதுப் பூ ஒன்று விழுந்து கிடந்தது. அம்மையார் அப் பூவை எடுத்து மோந்தார்.

அங்கே தொண்டு செய்துகொண்டு இருந்த செருத்துணை நாயனார் அதைப் பார்த்தார். அவர், அம்மையார் பூ மண்டபத்து உள்ள பூவை எடுத்து மேந்தார் எனக் கருதி, விரைந்து ஓடி, அம்மையார் மூக்கை அறுத்தார். அம்மையார் மூக்கில் இருந்து உதிரம் சோர்ந்தது. கூந்தல் சோர்ந்தது.  அம்மையார் பூமியிலே விழுந்து புலம்பினார்.

கழற்சிங்க நாயனார் அங்கே வந்தார். "இச் செயலை அஞ்சாது செய்தவர் யார்" என்று கேட்டார். செருத்துணை நாயனார் போந்து, நிகழ்ந்ததைக் கூறினார். கழற்சிங்க நாயனார், "அப்படியா, பூவை எடுத்தது கை அல்லாவா. அதையே முதலில் துணித்தல் வேண்டும்" என்று சொல்லித் தம்முடைய உடைவாளை உருவினார். தேவியார் கையைத் துணித்தார். அச் செயற்கரும் செய்கை கண்ட அமரர்கள் பூ மழை பொழிந்தார்கள். கழற்சிங்க நாயனார் பன்னெடு நாள் சிவத்தொண்டு செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

விறல்மிண்ட நாயனார் வரலாறு

சேர நாட்டிலே, செங்குன்றூரிலே, வேளாள குலத்திலே தோன்றியவர் விறல்மிண்ட நாயனார். திருத்தொண்டர்களை வணங்கி பின்னரே சிவபெருமானைப் பணிவது அவருடை வழக்கம். அவர், பல திருப்பதிகளைத் தொழுது திருவாரூரை அடைந்த போது, அங்கே ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள், தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளி உள்ள அடியார்களை வணங்காது, ஒருவாறு ஒதுங்கிச் சென்றதைக் கண்டு, "திருத்தொண்டர்களுக்கு வன்தொண்டனும் புறம்பு. அவனை ஆண்ட சிவனும் புறம்பு" என்றார். விறல்மிண்ட நாயனார் அடியவரிடத்துக் கொண்டுள்ள அன்பு உறுதியைக் கண்டு, நம்பியாரூரர் தம் கருத்து முற்றுப் பெறவும், உலகு உய்யவும் தியாகேசப் பெருமான் அருளால் திருத்தொண்டத் தொகையைப் பாடி அருளினார். அத் திருத்தொண்டத் தொகை விறல்மிண்ட நாயனாருக்குப் பெருமகிழ்ச்சி ஊட்டிற்று. சிவபெருமான், தம் கணங்களுக்குத் தலைவராய் இருக்கும் பெருவாழ்வை விறல்மிண்ட நாயனாருக்கு அளித்தருளினார்.

 திருவாரூர்க் கோயில் - தியாகராஜர் திருக்கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.

 கிழக்குக் கோபுர வாயிலின் கோயிலுள் நுழைந்தால் வீதிவிடங்க விநாயகருக்குப் பின்னால் "பிரமநந்தி" எழுந்தருளியுள்ளார்; மழைவேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பால் கறக்க அடம்பிடிக்கும் பசுக்கள் நன்றாகப் பால் கறக்க, இப்பிரமநந்திக்கு அறுகுச் சாத்தி அதை பசுக்களுக்குக் கொடுக்கப்படும் வழக்கமும், நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகின்றது.

கருத்துரை

முருகா! விலைமாதரின் அழகில் உருகிய எனது மனம், தேவரீரின் திருப்புகழை ஓதி உருக அருள்வாய்.

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...