திரு ஆரூர் - 0829. பாலோ தேனோ பாகோ





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பாலோ தேனோ பாகோ (திருவாரூர்)

முருகா!
தாய் (தந்தை) மனம் மகிழ வாழ்ந்து ஈடேற அருள்வாய்.


தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான


பாலோ தேனோ பாகோ வானோர்
     பாரா வாரத் ...... தமுதேயோ

பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
     பானோ வான்முத் ...... தெனநீளத்

தாலோ தாலே லோபா டாதே
     தாய்மார் நேசத் ...... துனுசாரந்

தாரா தேபே ரீயா தேபே
     சாதே யேசத் ...... தகுமோதான்

ஆலோல் கேளா மேலோர் நாண்மா
     லானா தேனற் ...... புனமேபோய்

ஆயாள் தாள்மேல் வீழா வாழா
     ஆளா வேளைப் ...... புகுவோனே

சேலோ டேசே ராரால் சாலார்
     சீரா ரூரிற் ...... பெருவாழ்வே

சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பாலோ? தேனோ? பாகோ? வானோர்
     பாராவாரத்து ...... அமுதேயோ?

பாரோர் சீரோ? வேளேர் வாழ்வோ?
     பானோ? வான்முத்து ...... என,நீளத்

தாலோ தாலேலோ பாடாதே,
     தாய்மார் நேசத்து ...... உனு சாரம்

தாராதே, பேர் ஈயாதே, பே-
     சாதே, ஏசத் ...... தகுமோதான்?

ஆலஓல் கேளா, மேல்ஓர் நாள், மால்
     ஆனாது, ஏனல் ...... புனமேபோய்

ஆயாள் தாள் மேல் வீழா, வாழா,
     ஆளா வேளைப் ...... புகுவோனே!

சேலோடே சேர் ஆரால் சால ஆர்
     சீர் ஆரூரில் ...... பெருவாழ்வே!

சேயே! வேளே! பூவே! கோவே!
     தேவே! தேவப் ...... பெருமாளே.


பதவுரை

     ஆல ஓல் கேளா மேல் ஓர் நாள் --- (வள்ளிநாயகி) ஆலோலம் என்று கூவி பறவைகளை ஓட்டும் குரலோசை கேட்ட முன்னொரு நாளில்,

       மால் ஆனாது --- உள்ளத்தில் மிக்கு எழுந்த ஆசை குன்றாது

     ஏனல் புனமே போய் --- (அம்மையார் இருந்த) தினைப் புனத்திற்குச் சென்று,

       ஆயாள் தாள்மேல் வீழா வாழா --- (அந்த வள்ளித்) தாயின் பாதங்களில் விழுந்து அங்கேயே வாழ்ந்து இருந்து,

      ஆளா வேளைப் புகுவோனே --- அவளுக்கு ஆளாகப் புகுந்து பொழுது கழித்து விளையாடியவரே!

      சேலோடே சேர் ஆரால் சால ஆர் சீர் ஆரூரில் பெருவாழ்வே --- சேல் மீனோடு சேர்ந்து ஆரல் மீன்கள் மிக நிறைந்துள்ள சீர்பெற்ற திருவாரூர் என்னும் திருத்தலத்தின் பெருஞ் செல்வமே!
        
      சேயே --- செம்மையானவரே!

     வேளே --- முருகவேளே!

     பூவே --- பொலிவு மிக்கவரே!

     கோவே --- உயிர்களுக்குத் தலைவரே!

     தேவே --- கடவுளே!

     தேவப் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      பாலோ தேனோ பாகோ --- பால் தானோ, தேன் தானோ, வெல்லக்கட்டி தானோ?

      வானோர் பாராவாரத்து அமுதேயோ --- தேவர்கள் பாற்கடலில் இருந்து கடைந்தெடுத்த அமுதமோ?

      பாரோர் சீரோ --- இவ்வுலகில் உள்ளோரின் சிறப்புப் பொருளோ?

     வேள் ஏர் வாழ்வோ --- மன்மதனுக்கு நிகரான வாழ்வோ?

      பானோ --- சூரியனோ?

     வான்முத்து என --- சிறந்த முத்தோ (என்றெல்லாம் என்னைக் கொஞ்சி)

      நீளத் தாலோ தாலேலோ பாடாதே --- விரிவாகத் தாலோ தாலேலோ என்று தாய்மார் தாலாட்டுப் பாடாமலும்,

      தாய்மார் நேசத்து உ(ன்)னு சாரம் தாராதே --- தாய்மார் அன்புடன் என்னை நினைத்து தாய்ப்பால் தராமலும்,  

      பேர் ஈயாதே --- நல்ல பெயரைச் சூட்டாமலும்,

     பேசாதே --- அன்புடன் என்னோடு பேசாமலும்,

      ஏசத் தகுமோ தான் --- ஏச்சுக்கு இடமாக நான் வளர்வது நீதியாகுமோ?
  

பொழிப்புரை

         வள்ளிநாயகி ஆலோலம் என்று கூவி பறவைகளை ஓட்டும் குரலோசை கேட்ட முன்னொரு நாளில்,  உள்ளத்தில் மிக்கு எழுந்த ஆசை குன்றாது, அம்மையார் இருந்த தினைப் புனத்திற்குச் சென்று, அந்த வள்ளித் தாயின் பாதங்களில் விழுந்து அங்கேயே வாழ்ந்து இருந்து, அவளுக்கு ஆளாகப் புகுந்து பொழுது கழித்து விளையாடியவரே!
        
         செம்மையானவரே!

     முருகவேளே!

     பொலிவு மிக்கவரே!

     உயிர்களுக்குத் தலைவரே!

     கடவுளே!

     தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

     சேல் மீனோடு சேர்ந்து ஆரல் மீன்கள் மிக நிறைந்துள்ள சீர்பெற்ற திருவாரூர் என்னும் திருத்தலத்தின் பெருஞ் செல்வமே!

     பால் தானோ, தேன் தானோ, வெல்லக்கட்டி தானோ? தேவர்கள் பாற்கடலில் இருந்து கடைந்தெடுத்த அமுதமோ? இவ்வுலகில் உள்ளோரின் சிறப்புப் பொருளோ? மன்மதனுக்கு நிகரான வாழ்வோ?  சூரியனோ? சிறந்த முத்தோ என்றெல்லாம் என்னைக் கொஞ்சி, விரிவாகத் தாலோ தாலேலோ என்று தாய்மார் தாலாட்டுப் பாடாமலும், தாய்மார் அன்புடன் என்னை நினைத்து தாய்ப்பால் தராமலும்,  நல்ல பெயரைச் சூட்டாமலும், அன்புடன் என்னோடு பேசாமலும்,  ஏச்சுக்கு இடமாக நான் வளர்வது நீதியாகுமோ?

விரிவுரை

இத் திருப்புகழில் அடிகளார், ஒருவன் தமது தாய் தந்தையர் மனம் குளிரும்படி வாழவேண்டும் என்னும் உண்மையை உணர்த்துகின்றார். "அன்னையும் பிதாவும் முன் அறி தெய்வம்" என்பது நமது அன்னையின் அருவாக்கு. தாய் தந்தையர் மனம் கோணும்படி வாழ்தல் கூடாது. அப்படி வாழ்ந்தால் இறையருள் கிட்டாது என்னும் உண்மையை உணர்த்துகின்றார்.


வானோர் பாராவாரத்து அமுதேயோ ---

பாராவாரம் - கடல்.

இங்குப் பாற்கடலைக் குறித்து நின்றது. தேவர்கள் பாற்கடஙைக் கடைந்த போது அதில் இருந்து அமுதம் பிறந்தது. அந்த அமுதம் போன்றவன் எனது மகன் என்று தாய் கொஞ்சுவாள்.

பானோ ---

பானு - சூரியன்.

வான்முத்து என ---

வான்முத்து - சிறந்த முத்து.


நீளத் தாலோ தாலேலோ பாடாதே ---

தால் - நாக்கு.

நாவினால் இனிமையான ஓசையை எழுப்பி, குழந்தையை உறங்க வைப்பதற்கு தாலாலோ பாடுதல் என்று பொருள்.


தாய்மார் நேசத்து உ(ன்)னு சாரம் தாராதே ---

உன்னு - விரைந்து எழுதல்.

சாரம் - சாறு, பயன், சிறந்தது.

தாய்ப்பாலைக் குறித்து நின்றது.

கிழந்தைக்குப் பசிக்குமே என்பதை உணர்ந்து தாய் பாலூட்டுவாள். குழந்தை பசிக்கு அழும்போது, அதைப் பொறுக்க மாட்டாத தாய் விரைந்து எழுந்து வந்து, அன்போடு அணைத்துப் பாலூட்டுவாள்.


ஏனல் புனமே போய்,ஆல ஓல் கேளா மேலே் ஓர் நாள், மால் ஆனாது, ஆயாள் தாள்மேல் வீழா வாழா ---

ஏனல் - தினை.

ஆயாள் - தாய்.

ஆல ஓலம் - பறவைகளை விரட்ட எழுப்பும் குரல் ஓசை.

"நாவலர் பாடிய நூல்இசையால் வரு நாரதனார் புகல் ...... குறமாதை நாடியெ, கானிடை கூடிய சேவக!" என்று அடிகளார் போற்றினார்.

நாரதன் அன்று சகாயம் மொழிந்திட,
     நாயகி பைம்புனம் ...... அதுதேடி,
நாணம் அழிந்து, ரு மாறிய வஞ்சக!
     நாடியெ பங்கய ...... பதம் நோவ,

மார சரம் பட மோகம் உடன் குற-
     வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய்,
மா முநிவன் புணர் மான் உதவும், தனி
     மானை மணம் செய்த ...... பெருமாளே.

என்று "பாரநறுங்குழல்" எனத் தொடங்கும் திருப்புகழ்ப் பாடலில் அடிகளார் காட்டி உள்ளதையும் எண்ணுக.

"பணி யா எ, வள்ளி பதம் பணியும், தணியா அதிமோக தயாபரனே!" என்று கந்தர் அனுபூதியில் அழகாகக் காட்டி உள்ளார் அடிகளார்.

நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியாகிய, வள்ளிநாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளிநாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

"நாந்தகம் அனைய உண்கண் நங்கை கேள், ஞாலம் தன்னில்                     
ஏந்திழையார்கட்கு எல்லாம் இறைவியாய் இருக்கும்நின்னைப்                               
பூந்தினை காக்க வைத்துப் போயினார், புளினர் ஆனோர்க்கு                       
ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் அயன் படைத்திலன் கொல்?"ன்றான்.

"வார் இரும் கூந்தல் நல்லாய், மதி தளர்வேனுக்கு உன்தன்                  
பேரினை உரைத்தி, மற்று உன் பேரினை உரையாய் என்னின்,                                   
ஊரினை உரைத்தி, ஊரும் உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி" என்றான்.

"மொழிஒன்று புகலாய் ஆயின், முறுவலும் புரியாய் ஆயின்,                              
விழிஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்                                
வழி ஒன்று காட்டாய் ஆயின், மனமும் சற்று உருகாய் ஆயின்                             
பழி ஒன்று நின்பால் சூழும், பராமுகம் தவிர்தி" என்றான்.   
    
உலைப்படு மெழுகது என்ன உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான் போல வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு மதியப் புத்தேள் கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு தன்மைத்து அன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்.

இவ்வாறு எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

நம்பி சென்றதும், முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.  தாமதிக்காமல் வா" என்றார். என் அம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா, நீங்கு உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனே, முருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

நம்பி, அக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக. உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு வேண்டியது யாது?" என்று கேட்டான். பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார்.  நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ! ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார் பெருமான்.

(இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம் பெற, பக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார், பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறி, தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய், முதல்வா!" என்றார். அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு ஆனந்தமுற்று, ஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள் மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம் செல்.  நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

அம்மையார் மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து,  "அம்மா! தினைப்புனத்தை பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச் சென்றேன்" என்றார். 

"அம்மா! கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது. முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.   

மை விழி சிவப்பவும், வாய் வெளுப்பவும்,
மெய் வியர்வு அடையவும், நகிலம் விம்மவும்,
கை வளை நெகிழவும் காட்டும் தண் சுனை
எவ்விடை இருந்து உளது? இயம்புவாய் என்றாள்.  

இவ்வாறு பாங்கி கேட், அம்மையார், "நீ என் மீது குறை கூறுதல் தக்கதோ?" என்றார். 

வள்ளியம்மையாரும் பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார் போல வந்து, "பெண்மணிகளே! இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும் உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று எண்ணி, புனம் சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன் தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்" என்றாள்.

தோட்டின் மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்                   
கூட்டிடாய் எனில், கிழிதனில் ஆங்கு அவள் கோலம்
தீட்டி, மா மடல் ஏறி, நும் ஊர்த் தெரு அதனில்
ஓட்டுவேன், இது நாளை யான் செய்வது" என்று உரைத்தான்.                                 

பாங்கி அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல் ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை உரைத்து, உடன்பாடு செய்து, அம்மாதவிப் பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி நீங்கவும், பரமன் வெளிப்பட்டு, பாவையர்க்கு அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச் செல்" என்று கூறி நீங்கினார்.

இவ்வாறு பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி மகிழ்ந்து, வள்ளியம்மையை நோக்கி, "அம்மா! மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.

வள்ளிநாயகி அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு குடிலுக்குச் சென்றார்.

வள்ளிநாயகியார் வடிவேல் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர். பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர் உள்ளம் வருந்தி, முருகனை வழிபட்டு, வெறியாட்டு அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி, "நாம் இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.

முருகவேள் தினைப்புனம் சென்று, திருவிளையாடல் செய்வார் போல், வள்ளியம்மையைத் தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த பாங்கி, வெளி வந்து, பெருமானைப் பணிந்து, "ஐயா! நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள். இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம் ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.

தாய்துயில் அறிந்து, தங்கள் தமர்துயில் அறிந்து, துஞ்சா
நாய்துயில் அறிந்து, மற்றுஅந் நகர்துயில் அறிந்து, வெய்ய
பேய்துயில் கொள்ளும் யாமப் பெரும்பொழுது அதனில், பாங்கி
வாய்தலில் கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்.

(இதன் தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய தமரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில் திருவருளாகிய பாங்கி,  பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப் பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. தாய் துயில் அறிதல் என்னும் தலைப்பில் மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)

வள்ளி நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.

பாங்கி பரமனை நோக்கி, "ஐயா! இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும். இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத் தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன் சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி விடுத்து, குகைக்குள் சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில் தங்கினார்.

விடியல் காலம், நம்பியின் மனைவி எழுந்து, தனது மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்த்தைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி, எம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது.  எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்க, அம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

இடையில் நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக் கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார். முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார் "அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன் எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின் அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள் என்ன செய்வோம்? தாயே தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப் பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.

கந்தக் கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார் தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து, நாங்கள் செய்த தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து, திருத்தணிகையில் வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது


ஆளா வேளைப் புகுவோனே ---

எம்பெருமான் வள்ளிநாயகிக்கு ஆளாகப் புகுந்து பொழுது கழித்து விளையாடியதை அடிகளார் பல திருப்புகழ்ப் பாடல்களில் வைத்துப் போற்றி உள்ளார்.

விருதுகவி விதரண விநோதக் காரப் ...... பெருமாளே!
     விறல் மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் ...... பெருமாளே.
                           --- (ஒருபொழுதும்) திருப்புகழ்.

தெள்ளும் ஏனல் சூழ்புனம் மேவிய
     வள்ளி வேளைக்கார! மனோகர!
     தில்லை மேலைக் கோபுர மேவிய ...... பெருமாளே.
                           --- (கொள்ளையாசை) திருப்புகழ்.

வேடு கொண்டு உள வேடா! வேடைய
     வேழ வெம்புலி போலே வேடர்கள்
     மேவு திண்புன மீதே மாதொடு ...... மிகமாலாய்,

"மேகம் என் குழலாய் நீ கேள் இனி
     வேறு தஞ்சமும் நீயே ஆம்" என
     வேளை கொண்ட பிரானே வானவர் ...... பெருமாளே.
                           --- (தோடுமென்குழை) திருப்புகழ்.

வேடர் செழும் தினை காத்து, தண் மீதில் இருந்த பிராட்டி,
     விலோசன அம்புகளால் செயல் ...... தடுமாறி,
மேனி தளர்ந்து, ருகாப் பரிதாபம் உடன், புன மேல் திரு
     வேளை புகுந்த பராக்ரமம், ...... அதுபாடி,

நாடு அறியும்படி கூப்பிடு நாவலர் தங்களை, ஆர்ப் பதி
     னாலு உலகங்களும் ஏத்திய ...... இருதாளில்,
நாறு கடம்பு அணியாப் பரிவோடு புரந்த பராக்ரமம்
     நாட, அருந்தவம் வாய்ப்பதும் ...... ஒருநாளே?
                                    --- திருப்புகழ்.

வெற்றி மிகுசிலையினால் மிக்கோர் தம்
     வித்து விளைபுனமும், வேய்முத்து ஈனும்
     வெற்பும் உறையும் மயில் வேளைக் காரப் ....பெருமாளே.
                           --- (முத்துமணி) திருப்புகழ்.

சொர்க்க கனதள விநோதக் கார!
     முத்தி விதரண உதாரக் கார!
     சுத்த மறவர்மகள் வேளைக் காரப் ...... பெருமாளே.
                           --- (விட்டபுழுகு) திருப்புகழ்.

வேடை மயல் உற்று, வேடர் மகளுக்கு
     வேளை என நிற்கும் ...... விறல்வீரா!
மேல் அசுர்ர் இரட்ட தேவர்சிறை வெட்டி,
     மீள விடுவித்த ...... பெருமாளே.
                           --- (தோடுபொரு) திருப்புகழ்.

வீசிய தென்றலொடு அந்தியும், பகை-
     யாக முயங்க, அநங்கனும் பொர,
     வேடை எனும்படி சிந்தை நொந்திட, ...... அடைவாக

வேடர் செழும்புன வஞ்சி அஞ்சன
     வேலின் உளங்கள் கலங்கி இன்புற
     வேளை எனும்படி சென்று இறைஞ்சிய .....பெருமாளே.
                           --- (பூசல்தரும்) திருப்புகழ்.

கோலப்பெண் வாகு கண்டு, மால் உற்று, வேளை கொண்டு,
     கூடிக் குலாவும் அண்டர் ...... பெருமாளே.
                           --- (சீறிட்டுலாவு) திருப்புகழ்.

கலக இரு பாணமும் திலக ஒரு சாபமும்,
     களபம் ஒழியாத கொங் ......     கையும் ஆகி,
கவரும் அவதாரமும், கொடிய பரிதாபமும்,
     கருதி, இது வேளை என்று, ...... உகிராத

குலதிலக மானுடன் கலவி புரிவாய்! பொரும்
     குலிச கர வாசவன் ......         திருநாடு
குடிபுக, நிசாசரன் பொடிபட, மகீதரன்
     குலைய, நெடு வேல்விடும் ...... பெருமாளே.
                           -- (தலைவலைய) திருப்புகழ்.


சேயே ---

சேயவன் - செம்மையானவன். செம்பொருள் இறைனவ் என்பதால் சேயே எனப்பட்டார்.

சேய் - குழந்தை. குழந்தேவேலர்.

வேளே ---

வேள் - விரும்பப்படுபவர்.

உலகவர்களால் விரும்பப்படுபவன் மன்மதன். அவன் கருநிறம் பொருந்திய திருமாலின் திருமகன். எனவே, அவன் "கருவேள்" எனப்பட்டான்.

எம்பெருமான் முருகன் அருள் நாட்டம் உள்ள அணியவர்களால் பெரிதும் விரும்பப்படுபவர். அவர் "செவ்வேள்" எனப்பட்டார்.

பூவே ---

பூ - பொலிவு.

சேலோடே சேர் ஆரால் சால ஆர் சீர் ஆரூரில்
பெருவாழ்வே ---

சிறப்புப் பொருந்திய திருவாரூர் சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் - திருத்துறைப்பூண்டி இரயில் பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிருந்து பேருந்து வசதி உள்ளது.

இறைவர் --- வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்
இறைவியார் --- அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
தல மரம் --- பாதிரி
தீர்த்தம் --- கமலாலயம், சங்கு தீர்த்தம், கயாதீர்த்தம், வாணி தீர்த்தம்

திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தான். அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த விடங்கத் தலங்கள் எனப்படும்.

இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.

 கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி.

எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரக்ஷை எனப்படும் திரு அந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.

இத்தலம் பிறக்க முத்தி தருவது என்று புகழப்படும் சிறப்பினை உடையது.

 இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய தலம்.

தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (வீதி விடங்கர்); ஆதாரத் தலங்களுள் இது "மூலாதார"த் தலம்.

சப்தவிடங்கத் தலங்கள் -----

1.    திருவாரூர் – வீதிவிடங்கர் -  அசபா நடனம்
2.    திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்.
3.    நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம்.
4.    திருகாறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம்.
5.    திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்.
6.    திருவாய்மூர் – நீலவிடங்கர் – கமல நடனம்.
7.    திருமறைக்காடு – புவனிவிடங்கர் – அம்சபாத நடனம்.

பஞ்ச பூதத் தலங்களுள் பிருதிவித் தலம். தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி.

தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர். ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை; அவருடன் 1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுவார், 3. உருத்திரப் பல்கணத்தார், 4. விரிசடை மாவிரதிகள், 5. அந்தணர்கள், 6. சைவர்கள், 7. பாசுபதர்கள், 8. கபாலியர்கள் ஆகிய எட்டுக் கணங்கள் சூழ வருவாராம்.

ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்ற திருவாதிரைத் திருநாளில் இந்த எண்கணங்களும் பெருமானுடன் பவனி வந்ததை அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் கீழ் கண்டவாறு சொல்லோவியமாகத் தீட்டுகிறார்.

அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொடு அருளிப்பாடியர்
உரிமையில் தொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே.
                                                                                   
"மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்" என்று திருமுதுகுன்றத்து ஈசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டு, அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்டத் திருத்தலம்.

சுந்தரர் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அவருக்காக இத்தல தியாகேசப் பெருமானார் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடையத் திருத்தலம். பரவை நாச்சியார் வாழ்ந்த பதி. சுந்தரர் இழந்த வலக் கண்ணைப் பெற்ற பதி.

சுந்தரர், "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கே உரியது.

 இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி.

தண்டியடிகள் அவதரித்து, முத்தி அடைந்தத் திருத்தலம். இத்திருக்கோயில் வளாக மூன்றாவது சுற்றில் மூலாதார கணபதிக்கு அருகில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.

அறுபத்து மூவருள் ----

நமிநந்தி அடிகள், (நீரால் விளக்கெரித்தவர்)

செருத்துணை நாயனார், (கழற்சிங்க நாயனாருடைய மனைவி சிவபூசைக்குரிய பூவை மோந்ததற்காக அவருடைய முக்கை அரிந்தவர்)

கழற்சிங்கர், (சிவபூசைக்குரிய பூவை மோந்ததற்காக தன் மனைவியின் மூக்கை அறுத்த தண்டனை போதாதென்று அவள் கையையும் வெட்டியவர்)

விறன்மிண்டர் (சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடக் காரணமாய் இருந்தவர்)

ஆகியோரின் முக்தித் தலம்.

சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்தத் (கமலாபுரம்) தலம். இஃது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7கி.மீ. தொலைவில் உள்ளது.  திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.

          இசைஞானியார்
          அவதாரத் தலம்       : திருவாரூர் (கமலாபுரம்).
          வழிபாடு              : லிங்க வழிபாடு.
          முத்தித் தலம்         : திருநாவலூர்
          குருபூசை நாள்        : சித்திரை - சித்திரை.


நமிநந்தி அடிகள் வரலாறு

சோழநாட்டிலே ஏமப்பேறூரிலே தோன்றியவர் நமிநந்தி அடிகள். அவர் அந்தணர். வாய்மையில் சிறந்தவர். திருநீற்று அன்பர். இரவும் பகலும் ஆண்டவன் அடியை நினைப்பதையே பேரின்பமாகக் கொண்டவர். அவர் திருவாரூருக்குச் சென்று இறைவனை வழிபடுவது வழக்கம்.

ஒருநாள் புற்றிடங்கொண்ட புனிதரைப் பணிந்து, அருகே உள்ள அரனெறி என்னும் கோயிலை அடைந்து திருத்தொண்டுகள் செய்தார். ஆங்கே தீபத் தொண்டு செய்தல் வேண்டும் என்னும் விருப்பம் அவருக்கு எழுந்தது. அவ் வேளை, மாலைக் காலமாய் இருந்தமையால் அவர், வேறிடம் செல்ல மனம் கொண்டாரில்லை. அருகே இருந்த வீட்டிற்குள் நுழைந்தார்.  திருவிளக்கு ஏற்ற நெய் கேட்டார். அவ் வீட்டில் உள்ளவர்கள் சமணர்கள்.

சமணர்கள் அடிகளை நோக்கி, "கையிலே கனல் உடைய கடவுளுக்கு விளக்கு எதற்கு? இங்கு நெய்யில்லை. நீரை முகந்து விளக்கு எரியும்" என்றார்கள். அவ் உரையைக் கேட்ட நாயனார் மனம் வருந்தினார். மன வருத்தத்தோடு சிவசந்நிதியை அடைந்து, பெருமானை வணங்கி விழுந்தார். அச் சமயத்தில், "கவலை ஒழி. அருகே உள்ள குளத்து நீரை முகந்து விளக்கு ஏற்று" என்று ஒரு வானொலி எழுந்தது. நாயனார்க்கு அளவில்லா இன்பம் உண்டாயிற்று.

நமிநந்தியடிகள் குளத்தில் இறங்கி, நீரை முகந்து கொண்டு வந்து, திரியிட்ட அகலிலே வார்த்து ஒரு விளக்கை ஏற்றினார். அது சுடர் விட்டு எரிந்தது. அடியவர் மகிழ்ந்து, திருக்கோயில் முழுவதும் தண்ணீரால் விளக்கு எரித்தார். சமணர்கள் நாணுற்றார்கள்.   

நமிநந்தியடிகள் நாள்தோறும் திருவிளக்குத் தொண்டு செய்து வந்தார். அவர், திருவிளக்கினுள் விடியுமளவும் நின்று எரியும் பொருட்டு நீர் குறையும் தகழிகளுக்கு எல்லாம் நீர் வார்ப்பார். இரவில் தம் ஊருக்குச் செல்வார். மனையில் நியதி தவறாமல் சிவபிரானை அர்ச்சிப்பார். திருவாரூரை அடைந்து தொண்டு செய்வார்.

திருவாரூர் சிவமயமாக விளங்கிற்று. நமிநந்தியடிகளின் திருத்தொண்டு குறைவு அற நிகழ்ந்து வர, சோழ மன்னன் அமுதுபடி முதலான நிபந்தங்கள் அமைத்தான். நாயனார், வீதிவிடங்கப் பெருமானுக்குத் திருவிழாச் செய்ய, அப் பெருமான் திருவடியை நோக்கி முறையிட்டார். ஆண்டவன் அருளால் பங்குனி உத்திரத் திருவிழா நன்கு நடைபெற்றது.

அவ் விழாவிலே ஒருநாள் சிவபெருமான் திருமணலிக்கு எழுந்தருளினார். எல்லாக் குலத்தவர்களும் ஆண்டவனைத் தொழுது உடன் சென்றார்கள். அவர்களோடு நமிநந்தியடிகளும் சென்று ஆண்டவன் திருவோலக்கத்தைக் கண்டு ஆனந்தம் உற்றார். பொழுது போயிற்று. சிவபெருமான் திருமணலியில் இருந்து திருவாரூருக்கு எழுந்தருளினார். நாயனார் சிவபெருமானை வணங்கித் தம் ஊரை அடைந்தார். அடைந்தவர் மனைக்குள் நுழைந்தாரில்லை. புறக்கடையிலே துயின்றார்.

மனைவியார் வந்து நாயனாரைப் பார்த்து, "வீட்டுக்குள் வந்து சிவபூசை முதலியன முடித்துத் துயிலும்" என்றார். அதற்கு நாயனார், "இறைவனார் இன்று திருமணலிக்கு எழுந்தருளினார்.  எல்லாச் சாதியாருடன் நானும் போனேன். பிராயச்சித்தம் செய்து மனைக்குள் நுழைந்து பூசை செய்தல் வேண்டும். தண்ணீர் கொண்டு வா" என்றார். அம்மையார் வீட்டிற்குள் சென்றார்.  அதற்குள் சிவபெருமான் திருவருளாலோ, அயர்வாலோ நாயனாருக்கு உறக்கம் வந்தது. சிவபெருமான் அவர் கனவிலே தோன்றித் "திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லாரும் நம் கணங்கள். அத் தன்மையை நீ காண்பாய்" என்று அருளி மறைந்தார். உடனே நாயனார் துயில் நீங்கி, "இரவில் சிவபூசை செய்தேனில்லை. நான் நினைத்தது குற்றம்" என்று எழுந்தபடியே சிவ வழிபாடு செய்தார். நிகழ்ந்ததை மனைவியாருக்குச் சொன்னார். விடிந்ததும் அவர் திருவாரூரை அடைந்தார். அங்கே எல்லாரும் சிவகணங்களாக விளங்குதலைக் கண்டார். விழுந்து விழுந்து அவர்களை வணங்கினார். அவர்கள் எல்லாரும் பழையபடியே ஆயினர். அதையும் நாயனார் கண்டார். "என் பிழை பொறுத்து அருளல் வேண்டும்" என்று நாயனார் ஆண்டவனைத் தொழுதார்.

நமிநந்தியடிகள் தம் ஊரை விடுத்துத் திருவாரூரிலே குடி புகுந்து, அடியவர்களுக்கு வேண்டுவன எல்லாம் செய்து வந்தார்.  அவர், தொண்டர்க்கு ஆணி என்று அப்பர் பெருமானாரால் சிறப்பிக்கப் பெற்றார்.

நமிநந்தியடிகள் முறைப்படி திருத்தொண்டுகளைச் செய்து தியாகேசப் பெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

நமிநந்தி அடிகள் பிறந்த குலத்தின் சார்பாகச் சில நடைமுறைகள் அக்காலத்தில் வகுக்கப்பட்டன. அதன்படி, வெளியில் எங்காவது சென்று வந்தால், குளித்து முடித்தே வீட்டுக்குள் புகவேண்டும் என்பது நியதியாக இருந்தது.

அடியவர்களுக்கு இந்த நியதி எல்லாம் பொருந்தாது என்பதை எடுத்துக் காட்டவே, நமிநந்தி அடிகள் வாழ்வில் இந்த நிகழ்வு காட்டப்பட்டது. இது இறைவன் திருவிளையாடல்.

இறைவனுக்கு அடியவராக இருப்பவர் யாவராயினும் அவர் நம்மால் வணங்கத் தக்கவர். அடியாராக இல்லாதார் எப்படிப்பட்டவர் ஆயினும் அவர் நம்மால் போற்றத் தக்கவர் அல்லர் என்னும் கருத்து அமைந்த, அப்பர் பெருமான் திருத்தாண்டகப் பாடல் ஒன்றைக் காண்போம்.

"நாம்ஆர்க்கும் குடிஅல்லோம்; நமனை அஞ்சோம்;
         நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணிஅறியோம்; பணிவோம் அல்லோம்;
         இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை;
தாம்ஆர்க்கும் குடிஅல்லாத் தன்மையான
         சங்கரன் நல் சங்கவெண் குழைஓர் காதில்
கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்
         கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே".

இதன் பொழிப்புரை :

தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும், நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய், அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம்.

ஆதலின் .நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை.

தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும் இதனையே தமது திருப்பாடல்களில் வலியுறுத்திக் காட்டினார்.

அடிமையில் குடிமை இல்லா
     அயல் சதுப்பேதிமாரில்
குடிமையில் கடைமை பட்ட
     குக்கரில் பிறப்பரேலும்,
முடியினில் துளபம் வைத்தாய்!
     மொய்கழற்கு அன்பு செய்யும்*
அடியரை உகத்தி போலும்
     அரங்கமா நகர் உளானே.

இதன் பொழிப்புரை ---

திருமுடியில் திருத்துழாய் மாலையை அணிந்தவனே! எனக்குக் கைங்கரியம் செய்வதில் ஊற்றம் இல்லாதவர்களாய், அடிமைக்க் மாறுபட்டவர்களாய், நான்கு வேதங்களையும் ஓதிய வேதியர்களைக் காட்டிலும், குடிப்பிறப்பினால் கீழான சண்டாளருக்கும் கூழ்ப்பட்ட சாதியில் பிறந்தவர்களே ஆனாலும், உன் நெருங்கிய திருவடிகளுக்கு அன்பு செய்யும்படியான அடியவர்களையே விரும்புபவன் நீ.

குக்கர் - நாய்.

வேத அத்யயனம் (கற்பதன்) பண்ணுவதன் மூலம் அவர்கள் உண்மையில் அறிய வேண்டியது என்ன? என்றால் எம்பெருமான் நாராயணனே எல்லா உலகுக்கும் ஜகத் காரணன், ரக்ஷகன், ஸ்வாமி. நாம் அவனுக்கு சொத்து போல உடைமை. நமது ஆத்ம சொரூபத்தின் பலனே அவனுக்கும் அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்வது தான் என்கிற உணர்வு, ஞானம் வர வேண்டும். வந்தால்தான் வேதம் அறிந்தவர்களுக்கு வர வேண்டிய ஞானமாகிய உணர்வு வந்த்தாக அர்த்தம். அப்படி வந்தவர்கள் தான் சதுர்வேதிகள்.

ஆழ்வார் சதுப்பேதிமார்கள் என்கிறார். இந்த ஞானம் வராதும்- அதனை அறியாமலும், வேறு பயன்களைப் பெற்று வாழ இருப்பவர்களை "அயல் சதுப்பேதிமார்கள்" என்று பாசுரத்தில் சொல்லுகிறார்.

விஷ்ணு பக்தி இல்லாது, வேதம் அறிந்தாலும் வீண் என்கிறது சாஸ்திரம். இப்படி கைங்கர்யத்தில் நாட்டம் இல்லது நாலு வேதங்களையும் கற்றவர்களைக் காட்டிலும் மேலானவர்கள் யார்? என்பதை அருளுகிறார்.

வேதநெறி காட்டிய வழிகளைக்  கடைப்பிடிக்காது, வேதம் செய்யாதே என்று விலக்கி வைத்தது எல்லாம் செய்தும், பகவானுக்கு எதிராக இருந்தும், பலபல பாவங்களைச் செய்து, அதனால் பல பல தாழ்ந்த பிறவிகளில் மீண்டும் பிறந்து உழல்கிறோம். அப்படி மிகவும் கீழான தாழ்ந்த சண்டாள ஜாதியைத் தான் "குக்கர்" என்கிறார். இப்படி குடிப்பிறப்பால் மிகவும் சண்டாளனாக பிறந்தாலும், அரங்கனிடத்தில் அன்பு பூண்டு, வாழும் சோம்பராக நல்ல ஞானம் கொண்டவரானால் அவரது பிறப்பு தாழ்ந்தது அல்ல என்கிறார் ஆழ்வார்

இராமன் காட்டில் இலக்குவமனிடம் ஜடாயுவைப் பார்த்த பின்பு, "லக்ஷ்மணா! நல்ல சாதுக்கள்-, தர்மம் அறிந்தவர்கள், சூரர்கள், எல்லாம் சரணம் அடையத் தகுந்த மஹா புருஷர்களே. அவர்கள் விலங்குகளாயும் இதர தாழ்ந்த யோநிகளிலும் உண்டு" என்றார். இதனால், பகவானைப் பற்றிய ஞானம் விலங்குகள் பறவைகளுக்கும் ஏற்படும் என்பது தெரிகிறது.

வேதத்தின் பொருளை விளக்க வந்த இராமாயணத்தில், காட்டில் திரியும் குகப்பெருமாள் போன்ற வேடர்களும், சபரி போன்ற வேடுவச்சிகளும், அனுமான், சுக்ரீவன் போன்ற வானரங்களும், ஜடாயு போன்ற பறவைகளும், விபீடணன் போன்ற அரக்கர்ர்களும் எம்பெருமானைப் பற்றிய ஞானத்தோடு இருந்தார்கள் என்பது தெரியும்.

மற்றொரு இதிகாசமான மகாபாரதத்திலும், தாழ்ந்த ஜாதியில் பிறந்த விதுரர், வேடனாய் மாமிச வியாபாரம் செய்து வந்த தர்மவ்யாதன்,  ஆய்ப்பாடியில் வாழ்ந்த எல்லா இடைச்சியர்கள் போன்ற அனைவரும் எம்பெருமானை உணர்ந்து, எல்லாம் கண்ணன் என்று இருந்தார்கள்.

அடியவர்களைப் பழிப்பவர்கள், உயர்ந்த சாதியர் ஆனாலும், அவர்களைப் புலையர் என்கின்றார் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்.

"அமர ஓர் அங்கம் ஆறும்,
     வேதம் ஓர் நான்கும் ஓதி,
தமர்களில் தலைவர் ஆய
     சாதி அந்தணர்களேலும்,
நுமர்களைப் பழிப்பர் ஆகில்,
     நொடிப்பதோர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும்,
     அரங்கமா நகர் உளானே".

இதன் பொழிப்புரை ---

அரங்க மாநகர் உள்ளானே! ஒப்பற்ற சிட்சை, வியாபகரணம், சந்தசு, நிருத்தம், சோதிடம், கல்பம் என்ற ஆறு வகையான வேத அங்கங்களையும், நிகர் அற்ற நான்கு வேதங்களையும் நெஞ்சில் பதியும்படி ஓதி, உன் அடியார்களில் முதல்வராய் பிராமண சாதியைச் சார்ந்தவர்கள் ஆயினும், தேவரீருடைய அடியார்களை, அவர்களுடைய பிறப்பு நோக்கிப் பழித்தால், அந்த நொடியிலேயே, அப்போதே, அந்தப் பிராமணர்கள் சண்டாளர்கள் ஆவார்.


நாட்டமிகு தண்டியடிகள் வரலாறு

தண்டியடிகள் சோழநாட்டிலே திருவாரூரிலே தோன்றியவர்.  பிறவிக் குருடர். அகக் கண்ணினாலே ஆண்டவனை வழிபடுவார்.  அவர் திருவாரூர்த் திருக்கோயிலை வலம் வருவார். திருவைந்தெழுத்தை ஓதுவார். திருக்கோயிலுக்கு மேல்பால் ஒரு குளம் உண்டு. அதன் பக்கமெல்லாம் சமண மடங்கள். நிரம்பி இருந்தன. அதனால், திருக்குளம் இடத்தால் சுருக்கமுற்று இருந்தது.

தண்டியடிகள், திருக்குளத்தைப் பெருக்க முயன்றார். அவர் திருக்குளத்தின் உள்ளே ஒரு தறி நட்டார். கரையிலே மற்றொரு தறி நட்டார். இரண்டுக்கும் இடையே ஒரு கயிறு கட்டினார்.  கயிற்றைத் தடவிக்கொண்டே போவார். மண்ணை வெட்டுவார்.  அதைக் கூடையிலே சுமந்து வருவார், கொட்டுவார்.

இச் செயலைச் சமணர்கள் கண்டார்கள். பொறாமை கொண்டார்கள். அவர்கள் நாயனாரைப் பார்த்து, "மண்ணைக் கல்லாதீர், பிராணிகள் இறக்கும். அவைகளை வருத்த வேண்டாம்" என்று சொன்னார்கள். அதற்கு அடிகள், "அறிவு கெட்டவர்களே! இது சிவத்தொண்டு. அறத்தொண்டு. இதன் பெருமை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். சமணர்கள் வெகுண்டு, "நாங்கள் சொன்னது அறவுரை. அதைக் கேட்கின்றாய் இல்லை.  உனக்குச் செவியும் இல்லை போலும்" என்றார்கள். நாயனார், "மந்த உணர்வும், குருட்டு விழியும், கேளாச் செவியும் உங்களுக்கே உண்டு. சிவனடியை அன்றிப் பிறிது ஒன்றை என் கண் பாராது. அந்த நுட்பம் உங்களுக்கு விளங்காது. புற உலகம் எல்லாவற்றையும் நான் காணக் கண் பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார். சமணர்கள், "நீ உன் தெய்வ வல்லமையால் கண் பெறுக. பார்ப்போம். பெற்றால் நாங்கள் இந்த ஊரில் இருப்பதில்லை" என்று கூறினார்கள். அத்தோடு நில்லாமல், நாயனாருடைய மண்வெட்டியையும், குறித் தறிகளையும், கயிற்றையும் பறித்துப் பிடுங்கி எறிந்தார்கள். தண்டியடிகளுக்கு வெகுளி மேலிட்டது. அவர் திருக்கோயில் திருவாயிலுக்குச் சென்று ஆண்டவனை இறைஞ்சினார்.  "ஐயனே! இன்று சமணர்கள் என்னை அவமானம் செய்தார்கள் அதனால் நான் மிகவும் வருந்துகிறேன். அதை ஒழித்தருள்க" என்று வேண்டி, அவர் தமது திருமடத்தை அடைந்தார்.  துன்பத்தில் மூழ்கித் துயின்றார்.

சிவபெருமான் அன்றிரவு நாயனார் கனவிலே தோன்றி, "அன்பனே! கவலை வேண்டாம். உன் கண் காணவும், சமணர்கள் கண் குருடாகவும் அருள் செய்வோம்" என்று திருவாய் மலர்ந்து அருளினார். அப்பொழுதே சிவபெருமான் சோழமன்னன் கனவிலும் தோன்றி, "தண்டி என்பவன் நமக்குக் குளம் கல்லினான். அதற்குச் சமணர்கள் இடையூறு செய்தார்கள். நீ அவனிடம் சென்று, அவன் கருத்தை முடிப்பாயாக" என்று கட்டளையிட்டார். மன்னன் விழித்து ஆண்டவன் அருளைப் போற்றினான்.

பொழுது விடிந்ததும் மன்னன் நாயனார்பால் அணைந்தான்.  அவன் தான் கண்ட கனவை நாயனாருக்குத் தெரிவித்தான்.  நாயனாரும் சமணர்கள் செய்ததையும், அதன் பொருட்டுத் தாம் ஏற்ற சூளையும் மன்னனுக்கு விளங்க உணர்த்தினார். மன்னன் சமணர்களை அழைப்பித்து விசாரணை புரிந்தான். சமணர்கள், தண்டி கண் பெற்றால், தாங்கள் இவ் ஊரை விட்டுப் போவதாக உறுதி கூறினார்கள்.

தண்டியடிகள் குளக்கரைக்குச் சென்றார். மன்னனும் உடன் போந்தான். மன்னன், கரையிலே நின்று தண்டியடிகளை நோக்கி, "சிவநேயரே சிவன் அருளால் கண்ணைப் பெறுதலைக் காட்டுக" என்றான். நாயனார், "சிவபெருமானுக்கு நான் தொண்டு செய்வது உண்மையாயின், மன்னன் எதிரே நான் கண் பெறுதல் வேண்டும்.  சமணர்கள் கண் இழத்தல் வேண்டும்" என்று சொல்லித் திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டே திருக்குளத்தில் மூழ்கினார். கண் பெற்றே எழுந்தார். சமணர்கள் கண்ணிழந்து தடுமாறினர்.

அக் காட்சி கண்ட மன்னன், சமணர்களை ஊரை விட்டுத் துரத்தினான். சமணர்களுடைய பாழிகளையும் பள்ளிகளையும் இடித்தான். திருக்குளத்தை நாயனார் கருத்துப்படி ஒழுங்கு செய்தான். நாயனாரைப் பணிந்து விடைபெற்றுச் சென்றான்.   தண்டியடிகள் வழக்கம்போலத் தமது தொண்டைச் செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.


செருத்துணை நாயனார் வரலாறு

செருத்துணை நாயனார் தஞ்சாவூரிலே, வேளாளர் மரபிலே தோன்றியவர். சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்தவர். அவர் திருவாரூரை அடைந்து திருத்தொண்டு செய்து வந்தார். அங்கே வழிபாட்டுக்கு வந்த கழற்சிங்க நாயனாருடைய மனைவியார், பூ மண்டபத்தின் பக்கத்திலே கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தார். அதைச் செருத்துணை நாயனார் பார்த்தார். விரைந்து ஓடினார். கத்தி எடுத்தார். அம்மையார் கூந்தலைப் பிடித்தார். கீழே தள்ளினார். அம்மையாரின் மூக்கை அறுத்தார். செருத்துணை நாயனார் பலநாள் தொண்டு செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

கழற்சிங்க நாயனார் வரலாறு

கழற்சிங்க நாயனார் பல்லவ குலத்திலே தோன்றியவர்.  சிவபத்தர். வடபுல மன்னர்கள் வென்று எங்கும் சைவம் தழைக்கச் செங்கோல் ஓச்சினார். பல திருப்பதிகளுக்குப் போய் ஆண்டவனை வழிபடுவது அவர்தம் வழக்கம்.

ஒருநாள் கழற்சிங்கர், தமது மனைவியாருடன் திருவாரூரை அடைந்து, தியாகேசப் பெருமானைத் தொழுதார். அவ் வேளையில், அம்மையார் திருக்கோயிலை வலம் வந்தார்.  அங்கே உள்ள பெருமைகளைத் தனித்தனிக் கண்டு மகிழ்வெய்தினார். பூ மண்டபத்தின் பக்கத்திலே புதுப் பூ ஒன்று விழுந்து கிடந்தது. அம்மையார் அப் பூவை எடுத்து மோந்தார்.

அங்கே தொண்டு செய்துகொண்டு இருந்த செருத்துணை நாயனார் அதைப் பார்த்தார். அவர், அம்மையார் பூ மண்டபத்து உள்ள பூவை எடுத்து மேந்தார் எனக் கருதி, விரைந்து ஓடி, அம்மையார் மூக்கை அறுத்தார். அம்மையார் மூக்கில் இருந்து உதிரம் சோர்ந்தது. கூந்தல் சோர்ந்தது.  அம்மையார் பூமியிலே விழுந்து புலம்பினார்.

கழற்சிங்க நாயனார் அங்கே வந்தார். "இச் செயலை அஞ்சாது செய்தவர் யார்" என்று கேட்டார். செருத்துணை நாயனார் போந்து, நிகழ்ந்ததைக் கூறினார். கழற்சிங்க நாயனார், "அப்படியா, பூவை எடுத்தது கை அல்லாவா. அதையே முதலில் துணித்தல் வேண்டும்" என்று சொல்லித் தம்முடைய உடைவாளை உருவினார். தேவியார் கையைத் துணித்தார். அச் செயற்கரும் செய்கை கண்ட அமரர்கள் பூ மழை பொழிந்தார்கள். கழற்சிங்க நாயனார் பன்னெடு நாள் சிவத்தொண்டு செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

விறல்மிண்ட நாயனார் வரலாறு

சேர நாட்டிலே, செங்குன்றூரிலே, வேளாள குலத்திலே தோன்றியவர் விறல்மிண்ட நாயனார். திருத்தொண்டர்களை வணங்கி பின்னரே சிவபெருமானைப் பணிவது அவருடை வழக்கம். அவர், பல திருப்பதிகளைத் தொழுது திருவாரூரை அடைந்த போது, அங்கே ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள், தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளி உள்ள அடியார்களை வணங்காது, ஒருவாறு ஒதுங்கிச் சென்றதைக் கண்டு, "திருத்தொண்டர்களுக்கு வன்தொண்டனும் புறம்பு. அவனை ஆண்ட சிவனும் புறம்பு" என்றார். விறல்மிண்ட நாயனார் அடியவரிடத்துக் கொண்டுள்ள அன்பு உறுதியைக் கண்டு, நம்பியாரூரர் தம் கருத்து முற்றுப் பெறவும், உலகு உய்யவும் தியாகேசப் பெருமான் அருளால் திருத்தொண்டத் தொகையைப் பாடி அருளினார். அத் திருத்தொண்டத் தொகை விறல்மிண்ட நாயனாருக்குப் பெருமகிழ்ச்சி ஊட்டிற்று. சிவபெருமான், தம் கணங்களுக்குத் தலைவராய் இருக்கும் பெருவாழ்வை விறல்மிண்ட நாயனாருக்கு அளித்தருளினார்.

 திருவாரூர்க் கோயில் - தியாகராஜர் திருக்கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.

 கிழக்குக் கோபுர வாயிலின் கோயிலுள் நுழைந்தால் வீதிவிடங்க விநாயகருக்குப் பின்னால் "பிரமநந்தி" எழுந்தருளியுள்ளார்; மழைவேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பால் கறக்க அடம்பிடிக்கும் பசுக்கள் நன்றாகப் பால் கறக்க, இப்பிரமநந்திக்கு அறுகுச் சாத்தி அதை பசுக்களுக்குக் கொடுக்கப்படும் வழக்கமும், நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகின்றது.

கருத்துரை

முருகா! தாய் (தந்தை) மனம் மகிழ வாழ்ந்து ஈடேற அருள்வாய்.

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...