விஜயபுரம் - 0823. குடல்நிணம் என்பு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குடல்நிணம் என்பு (விஜயபுரம்)

முருகா!
உமதருளால் பெற்ற இந்த உடம்பைக் கொண்டு,
உமது திருவடியைச் சேர அருள்.


தனதன தந்தன தானன
தனதன தந்தன தானன
     தனதன தந்தன தானன ...... தனதான


குடல்நிண மென்புபு லால்கமழ்
குருதிந ரம்பிவை தோலிடை
     குளுகுளெ னும்படி மூடிய ...... மலமாசு

குதிகொளு மொன்பது வாசலை
யுடையகு ரம்பையை நீரெழு
     குமிழியி னுங்கடி தாகியெ ...... யழிமாய

அடலையு டம்பைய வாவியெ
அநவர தஞ்சில சாரமி
     லவுடத மும்பல யோகமு ...... முயலாநின்

றலமரு சிந்தையி னாகுல
மலமல மென்றினி யானுநி
     னழகிய தண்டைவி டாமல ...... ரடைவேனோ

இடமற மண்டு நிசாசர
ரடைய மடிந்தெழு பூதர
     மிடிபட இன்பம கோததி ...... வறிதாக

இமையவ ருஞ்சிறை போயவர்
பதியு ளிலங்க விடாதர
     எழில்பட மொன்று மொராயிர ...... முகமான

விடதர கஞ்சுகி மேருவில்
வளைவதன் முன்புர நீறெழ
     வெயில்நகை தந்த புராரிம ...... தனகோபர்

விழியினில் வந்து பகீரதி
மிசைவள ருஞ்சிறு வாவட
     விஜயபு ரந்தனில் மேவிய ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

குடல், நிணம், என்பு, புலால் கமழ்
குருதி, நரம்பு, இவை தோல்இடை
     குளுகுளு எனும்படி மூடிய, ...... மலமாசு

குதிகொளும் ஒன்பது வாசலை
உடைய குரம்பையை, நீர்எழு
     குமிழியினுங் கடிதாகியெ ...... அழி, மாய

அடலை உடம்பை அவாவியெ
அநவரதம் சில சாரமில்
     அவுடதமும் பல யோகமும் ...... முயலாநின்று,

அலமரு சிந்தையின் ஆகுலம்
அலம்அலம் என்றறு, னி யானும்நின்
     அழகிய தண்டை விடா மலர் ...... அடைவேனோ?

இடம் அற மண்டு நிசாசரர்
அடைய மடிந்து, ழு பூதரம்
     இடிபட, இன்ப மகா உததி ...... வறிதாக,

இமையவரும் சிறை போய், வர்
பதியுள் இலங்க விடுஆதர
     எழில்படம் ஒன்றும் ஒராயிர ...... முகமான,

விடதர கஞ்சுகி மேருவில்
வளைவதன் முன், புரம் நீறுஎழ
     வெயில் நகை தந்த புராரி, ...... மதனகோபர்

விழியினில் வந்து, பகீரதி
மிசை வளரும் சிறுவா, வட
     விஜயபுரந்தனில் மேவிய ...... பெருமாளே.


பதவுரை


         இடம் அற மண்டு நிசாசரர் அடைய மடிந்து --- இடைவெளி விடாது எங்கும் பரவி இருந்த அசுரர்கள் எல்லாரும் மடியவும்,

         எழு பூதரம் இடிபட --- (கிரெளஞ்சமலை முதலான) ஏழு குலகிரிகள் இடிபட்டுப் பொடியாகவும்,

         இன்ப மகா உததி வறிதாக --- காட்சிக்கு இன்பம் தரும் பெருங்கடல் வற்றிப் போகவும்,

         இமையவரும் சிறை போய் அவர் பதியுள் இலங்க விடு ஆதர --- தேவர்களும் சூரபதுமன் இட்ட சிறையிலிருந்து நீங்கி, அவர்களது அமராவதி நகரில் விளங்கவும் செய்வித்த ஆதரவாளரே!

         எழில் படம் ஒன்றும் ஒராயிர முகமான --- அழகிய பணாமுடி பொருந்திய, ஓராயிரம் முகங்களைக் கொண்ட

         விட தர கஞ்சுகி --- விடத்தைத் தரித்துள்ள ஆதிசேடன்

         மேரு வில் வளைவதன் முன் புர நீறு எழ --- மேருமலை என்ற வில்லில் நாணாகப் பூட்டப்பட்டு அந்த வில் வளைபடும் முன்னரே திரிபுரத்தை சாம்பலாகச் செய்ய

         வெயில் நகை தந்த புராரி --- ஒளிவீசும் புன்சிரிப்பை வெளியிட்ட திரிபுரப் பகைவரும்,

         மதன கோபர் விழியினில் வந்து --- மன்மதனைக் கோபித்து நெற்றி விழியால் எரித்தவரும் ஆகிய சிவபரம்பொருளினது திருக்கண்களிலிருந்து நெருப்புப் பொறியாகப் பிறந்து,

         பகீரதி மிசை வளரும் சிறுவா --- கங்கையின் மீது வளர்ந்த சிறுவரே!

         வட விஜயபுரந்தனில் மேவிய பெருமாளே --- வட விஜயபுரம் என்ற திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோல் இடை --- குடல், கொழுப்பு, எலும்பு, மாமிசம், பரந்துள்ள ரத்தம், நரம்பு இவைகளைத் தோலின் இடையே கொண்டு,

         குளுகுளு எனும்படி மூடிய மலமாசு குதிகொளும் --- குளிர்ச்சியாக இருக்குமாறு அமையும்படி வைத்து மூடப்பட்டுள்ளதும்,  மலங்களும், பிற அழுக்குகளும் பொதிந்துள்ள,

         ஒன்பது வாசலை உடைய குரம்பையை --- ஒன்பது துளைகளை உடைய சிறு குடிசையாகிய இந்த உடலை,

          நீர் எழு குமிழியினும் கடிதாகியெ அழி மாய அடலை உடம்பை அவாவியெ --- நீரிலே தோன்றும் குமிழியிலும் விரைந்து அழியப் போகின்ற, துன்பத்துக்கு இடமாகிய இந்த உடலை விரும்பி,

         அநவரதம் சில சாரம் இல் அவுடதமும் --- நாளும், சில பயனற்ற மருந்துகளையும்,  
       பல யோகமும் முயலா நின்று --- பலவித யோகப் பயிற்சிகளையும் முயன்று மேற்கொண்டு,

         அலமரு சிந்தையின் ஆகுலம் அலம் அலம் -- கலக்கப்படுகின்ற மனத் துன்பம் போதும், போதும்.

         என்று --- என்று தெளிந்து,

        இனி யானும் --- இனியாவது அடியவனாகிய நானும்,

        நின் அழகிய தண்டை விடா மலர் அடைவேனோ --- தேவரீரது அழகிய, தண்டையை எப்போதும் அணிந்துள்ள  திருவடிமலரை அடைவேனோ?

பொழிப்புரை

     இடைவெளி இல்லாது எங்கும் பரவி இருந்த அசுரர்கள் எல்லாரும் மடியவும்,  கிரெளஞ்சமலை முதலான ஏழு குலகிரிகள் இடிபட்டுப் பொடியாகவும்,  காட்சிக்கு இன்பம் தரும் பெருங்கடல் வற்றிப் போகவும், தேவர்களும் சூரபதுமன் இட்ட சிறையிலிருந்து நீங்கி, அவர்களது அமராவதி நகரில் விளங்கவும் செய்வித்த ஆதரவாளரே!

         அழகிய பணாமுடி பொருந்திய, ஓராயிரம் முகங்களைக் கொண்ட விடத்தைத் தரித்துள்ள ஆதிசேடன், மேருமலை என்ற வில்லில் நாணாகப் பூட்டப்பட்டு, அந்த வில் வளைபடும் முன்னரே திரிபுரத்தை சாம்பலாகச் செய்ய ஒளிவீசும் புன்சிரிப்பை வெளியிட்ட திரிபுரப் பகைவரும், மன்மதனைக் கோபித்து நெற்றி விழியால் எரித்தவரும் ஆகிய சிவபரம்பொருளினது திருக்கண்களிலிருந்து நெருப்புப் பொறியாகப் பிறந்து, கங்கையின் மீது வளர்ந்த சிறுவரே!

         வட விஜயபுரம் என்ற திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         குடல், கொழுப்பு, எலும்பு, மாமிசம், பரந்துள்ள ரத்தம், நரம்பு இவைகளைத் தோலின் இடையே கொண்டு, குளிர்ச்சியாக இருக்குமாறு அமையும்படி வைத்து மூடப்பட்டுள்ளதும்,  மலங்களும், பிற அழுக்குகளும் பொதிந்துள்ள, ஒன்பது துளைகளை உடைய சிறு குடிசையும், நீரிலே தோன்றும் குமிழியிலும் விரைந்து அழியப் போகின்றதும், துன்பத்துக்கு இடமாகியதுமாகிய இந்த உடலை விரும்பி,  நாளும், சில பயனற்ற மருந்துகளையும், பலவித யோகப் பயிற்சிகளையும் முயன்று மேற்கொண்டு, கலக்கப்படுகின்ற மனத் துன்பம் போதும், போதும். என்று தெளிந்து, இனியாவது அடியவனாகிய நானும், தேவரீரது அழகிய, தண்டையை எப்போதும் அணிந்துள்ள  திருவடிமலரை அடைவேனோ?

விரிவுரை

குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோல் இடை, குளுகுளு எனும்படி மூடிய மலமாசு குதிகொளும், ஒன்பது வாசலை உடைய குரம்பை ---

இந்த மனித உடம்பானது ஏழுவகையான தாதுக்களால் ஆனது.  அவை....

தொக்கு - தோல்
உதிரம் - இரத்தம்
ஊன் - தசை
மூளை - நரம்பு மண்டலங்கள்
நிணம் - கொழுப்பு
என்பு - எலும்பு
சுக்கிலம் - சுரோணிதம்

"தொக்கு உதிரத்தோடு ஊன் மூளை நிணம் என்பு
சுக்கிலம் தாதுக்கள் ஏழு".

என்பது ஔவை குறள் ஆகும்.

மலம் என்பது அழுக்கைக் குறிக்கும். இங்கு உயிர்க்கு அமைந்துள்ள மும்மலங்களாகிய ஆணவம், மாயை, கன்மம் ஆளியவற்றைக் குறித்து நின்றது.

மாசு - உடம்பின் உள்ளே பொருந்தி உள்ள அழுக்கு.ஒவ்வொரு அழுக்கும் வெளியேற ஒரு வாயிலை இறைவன் வகுத்தான். அவை ஒன்பது துளைகள் ஆகும்.

இதைனப் பட்டினத்து அடிகளார் பாடல் ஒன்று தெளிவாக்கும்.

நினைமின் மனனே ! நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொன் அம்பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே !
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க;
      
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;
      
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்று இவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்;
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக்கொன்றன.
      
தின்றனை அனைத்தும், அனைத்து நினைக் கொன்றன;
பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன;
ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை;
சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை;
      
இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை;
ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும்,
புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
என்னநின்று இயங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாகக் கருதினை; இதனுள்
      
பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி;
மீளும் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி;
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி;
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி;

சலமும் சீயும் சரியும் ஒருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம், முடிவில் சுட்டு எலும்பு ஆகும்
உடல் உறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை. 
      
ஒழிவு அரும் சிவபெரும்போக இன்பத்தை,
நிழல் எனக் கடவா நீர்மையொடு பொருந்தி
எனது அற, நினைவு அற, இருவினை மலம் அற,
வரவொடு செலவு அற, மருள்அற, இருள்அற,
இரவொடு பகல்அற, இகபரம் அற, ஒரு
      
முதல்வனை, தில்லையுள் முளைத்து எழும் சோதியை,
அம்பலத்து அரசனை, ஆனந்தக் கூத்தனை,
நெருப்பினில் அரக்கு என நெக்கு நெக்கு உருகித்
திருச்சிற் றம்பலத்து ஒளிரும் சிவனை,
நினைமின் மனனே ! நினைமின் மனனே !
      

நீர் எழு குமிழியினும் கடிதாகியெ அழி மாய அடலை உடம்பை அவாவ ---

ஐந்து வகை ஆகின்ற பூதபேதத்தினால் அமைந்த இந்த உடம்பானது நீரிலே தோன்றும் குமிழி போன்று அழகாகத் தான் இருக்கின்றது. ஆனால், எப்போது, எப்படி அழிந்து போகும் என்பது நம்மால் ஆறிய முடியாது. விரைந்து அழியும் தன்மையை உடையது நீர்க்குமிழி. அதுபோலத்தான் இந்த உடம்பும் அழிந்து போகும் என்று அருளாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

"நீர்க்குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை, நில்லாது செல்வம்" என்றருளினார் அடிகளார் கந்தர் அலங்காரத்தில்.

மாய உடம்பு என்றார். மாயை என்றால் தோன்றி ழிவது என்று பொருள். தோன்றிய யாவும் அழியக் கூடியவையே ஆகும்.

அழிந்து போகக் கூடிய இந்த உடம்பை நிலையானது என்று மங்கி உணர்ந்து, இதைப் பேணுவதிலேயே காலம் கழிகின்றது.


அநவரதம் சில சாரம் இல் அவுடதமும், பல யோகமும் முயலா நின்று ---

இந்த உடம்பைப் பேணுவதற்காக நாள்தோறும் மருந்துகளைதை தேடி அலைகின்றோம்.

"நிலையாகவே இன்னும் நெடுநாள் இருந்த பேரும், நிஐயாகவே இன்னும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர்" என்றார் தாயுமான அடிகளார்.

இந்த உடம்பை நிலைத்திருக்கச் செய்வதற்கா, பற்பல மருந்துகளைத் தேடி உண்பதோடு, பலவிதமான யோகங்களையும் முயன்று வருவது மனித இயல்பு. இதனால் பயனில்லை.

உடம்பினை நெடிது உய்க்கும் உபாயத்தைத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்து உள்ளார்.

"அற்றால் அறவறிந்து உண்க அஃது உடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு".

அலமரு சிந்தையின் ஆகுலம் அலம் அலம் ---

எவ்வளவுதான் விதவிதமான மருந்துப் பொருள்களை உண்டாலும், யோகங்களைப் பயின்றாலும் இந்த உடம்பானது நிலைத்து இருப்பது இல்லை. முதுமை, நோய், நரை, திரை முதலியன தோன்றத்தான் செய்கின்றன. மயற்சி அனைத்தும் பலனற்றுப் போகும்போது, எண்ணியது ஈடேறாதபோது, சிந்தை நொந்து வருந்தவது இயல்பு.

இப்படி எத்தனையோ பிறவிகளில் நிகழ்ந்து உள்ளது. எனவே, பிறவியினால் வரும் துன்பம் இனி வேண்டாம் உன்று இரங்கினர் முன்னோர்.

நின் அழகிய தண்டை விடா மலர் அடைவேனோ ---

புறுதற்கு அரிய இந்த மானிடப் பிறப்பைப் பெற்றபின், பெறுதற்கு அரிய பிரான் திருவடியைப் பேணுவதே அறிவுடைமை ஆகும்.

உடம்பினைப் பெற்ற பயனாவது எல்லாம்
உடம்பினில் உத்தமனைக் காண்.

ஒரு பயனாவது உடம்பின் பயனே
தரு பயனாம் சங்கரனைச் சார்.

பிறப்பினால் பெற்ற பயனாவது எல்லாம்
துறப்பதாம் தூநெறிக்கண் சென்று.

மாசற்ற கொள்கை மனத்தில் அடைந்தக்கால்
ஈசனைக் காட்டும் உடம்பு.

உயிர்க்கு உறுதி எல்லாம் உடம்பின் பயனே
அயிர்ப்பு இன்றி ஆதியை நாடு.

உடம்பினால் பெற்ற பயன்ஆவ எல்லாம்
திடம்பட ஈசனைத் தேடு.

என்பது ஔவைக் குறள்.

எழில் படம் ஒன்றும் ஒராயிர முகமான விட தர கஞ்சுகி, மேரு வில் வளைவதன் முன் புர நீறு எழ, வெயில் நகை தந்த புராரி ---

மேர்வை வில்லாகவும், விடம் பொருந்திய ஆயிரம் பணாமகுடங்களை உடைய ஆதிசேடன் என்னும் பாம்பை வில்லில் பூட்டப்பட்ட நாணாகவும் கொண்டார் சிவபெருமான்.  அந்த வில்லை வளைப்பதன் முன்னர், தமது சிறுநகையால் முப்புரங்களை எரித்து அழித்தார்.

முப்புரங்களை சிரித்து எரி கொளுத்திய வரலாறு.

கமலாட்சன், வித்யுன்மாலி, தாராகாட்சன் என்ற மூன்று அசுர வேந்தர்கள் சிறந்த சிவனடியார்கள். இவர்கள் இரும்பு, வெள்ளி, பொன் என்ற உலோகங்களாலாய மூன்று புரங்களில் வாழ்ந்தார்கள். இமையவருக்கு இடுக்கண் புரிந்தார்கள்.

திரிபுர வாசிகளின் சிவபக்தி குலையுமாறு திருமால் புத்தாவதாரம் எடுத்து, நாரதரைச் சீடராகப் பாடச் செய்து திரிபுர நகர்களில் தெய்வம் இல்லை என்று பிரசாரம் புரிந்தார். திரிபுரத் தலைவர்கள் மூவர் மட்டும் உறுதி குலையாது சிவபக்தியில் சிறந்து இருந்தார்கள். திரிபுர வாசிகள் சிவபக்தி குலைந்தார்கள்.  தேவர்கள் சிவபெருமானிடம் திரிபுரத்தை அழிக்குமாறு முறையிட்டார்கள்.

அப்போது, இந்தப் பூமியே தேராகவும், கீழே உள்ள எழு உலகங்கள் கீழ்த் தட்டுக்களாகவும், மேலே உள்ள எழு உலகங்கள் மேல் தட்டுக்களாகவும், எண்திசைப் பாலகர்கள் தூண்களாகவும், மேருமலை வில்லாகவும், வாசுகி நாணாகவும், பிரமன் சாரதியாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், திருமால் பாணமாகவும், அதற்கு அக்கினி வாயாகவும், வாயு அம்பின் குதையாகவும் இவ்வாறு தேவர்கள் கூட்டமே தேராக அமைத்துத் தந்தார்கள். கரிய உருவுடைய திருமால் அம்பாக ஆனார்.

இறைவர், இமவரை தரும் கருங்குயிலுடன் *இடபாரூடராய் இரதத்தை அடைந்து இமையவர் எண்ணத்தின்படி அதில் திருவடியை ஊன்ற, அதன் அச்சு முறிந்தது.

தச்சு விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு முறிந்தததுஎன்றுஉந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற                  --- திருவாசகம்.

உடனே நாராயணர் இடபமாக, அவ்விடபமேல் எம்பெருமான் ஏறுதலும் திருமால் தாங்கும் சத்தி அற்றுத் தரைமேல் விழ, சிவபெருமான் திருவருள் கொண்டு இறங்கி, இன்னருள் புரிந்து சக்தியை நல்கினர். திருமால் திரிபுர சம்மார காலத்தில் சிவபெருமானை இடபமாய்த் தாங்கினர் என்பதை மணிவாசகனார் மறைமொழியாலும் காண்க.

கடகரியும் பரிமாவும் தேரும்உகந்து ஏறாதே
இடபம்உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பேடி,
தடமதில்கள் அவைமுன்றும் தழல்எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.

விரிஞ்சன் விநாயக பூசனை புரிய அவரருளால் இரதம் முன்போலாக, சிவபெருமான் தேவியாருடன் தேர்மேல் எழுந்தருளினார். மூத்தபிள்ளையார், இளையபிள்ளையார், நாராயணர், நான்முகன், அயிராவதன் முதலியோர் தத்தம் ஊர்திகளில் ஊர்ந்து இருமருங்கும் சூழ்ந்து வரவும், இருடிகள் எழுவரும் வாழ்த்தவும், திருநந்திதேவர் பொற்பிரம்பு தாங்கி முன்னே செல்லவும் பானுகம்பன், வாணன் சங்குகன்னன் முதலிய சிவகணநாதர்கள் வாச்சியமிசைக்கவும், கறைமிடற்று அண்ணல் இரதாரூடராய்த் திரிபுரத்தை நெருங்கினர்.

அண்டர்கள் அக்காலை அரனாரைப் பணிந்து “அண்ணலே! வில்லை வளைத்துக் கணை விடவேண்டும்” என்று பிரார்த்திக்க, அழல் உருவாகிய சிவபெருமான் தமது திருக்கரத்தேந்திய மேருமலையாகிய வில்லில் பணியரசாகிய நாணை ஏற்றினர். அதில் அம்புபூட்டித் திரிபுரத்தை அழிப்பின், அந்தரர் அந்தமில்லா அகந்தை உறுவர் என்றும், தனக்கு ஓர் ஆயுதமேனும் படையேனும் துணை வேண்டுவதில்லை என்பதை தேவர்கள் தெரிந்து உய்தல் வேண்டுமென்றும், சங்கல்ப மாத்திரத்தாலேயே சகலமும் செய்ய வல்லான் சிவபெருமான் என்பதை உலகம் உணருமாறும் இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக் கடைக்கணித்துப் புன்னகை புரிந்தனர். அக்கணமே புரங்கள் மூன்றும் சாம்பராயின. பெருந்தவராயிருந்து சிவனடியே சிந்தித்து வந்த மூவரும் யாதொரு தீமையும் இன்றிப் பெருமான்பால் வந்து பணிய, திருநீலகண்டர் அவர்களைத் துவாரபாலகராக அருளி, தேவர்களை அரவரிடத்திற்கு அனுப்பி வெள்ளிமாமலைக்கு எழுந்தருளினார். இமையவர் இடுக்கண் அகன்று இன்புற்றனர்.


"மாலாய வாளியைத் தொடுத்து அரக்கர்களின் ஒரு மூவர்
மாளாது பாதகப் புரத்ரயத்தவர்
தூளாகவே முதல் சிரித்த வித்தகர்"   ---  (ஆனாத) திருப்புகழ்.

"கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என வானோர்
எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப
வல்லாய்எரி காற்றுஈர்க்குஅரி கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே”.   ---  திருஞானசம்பந்தர்.

வரிஅரவே நாண்ஆக மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்
பொரிசுடலை ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்
கரிஉரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.    ---  திருஞானசம்பந்தர்.

குன்ற வார்சிலை நாண் அராஅரி
         வாளி கூர்எரி காற்றின் மும்மதில்
வென்றவாறு எங்ஙனே விடைஏறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை
         சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே. ---  திருஞானசம்பந்தர்.

கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்
         கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்
பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்
         பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்
         கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய
         திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.  ---  அப்பர்.

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்
வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே
கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்
கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே. ---  சுந்தரர்.

வில்மதனை வென்றது அவர் விழியே, ஒன்னார்தம்
பொன்எயில் தீ மடுத்தது இன்நகையே, பூமிசையோன்,
தார்முடி கொய்தது உன் உகிரே, ஆர் உயிர் உண்
கூற்று உயிர் உண்டது அடித்தலமே, ஏற்றான்
பரசும், பினாகமும், சூலமும் என்னே
கரமலர் சேர்ப்பக் கொளல்.            ---  சிதம்பர செய்யுட்கோவை.

காலில் துலங்கு நகத்தாலும்,
     கையில் பொலிகூர் நகத்தாலும்,
சீலத்து அரக்கன் உரம் கொண்டீர்;
     திசை மாமுகனைச் சிரம் கொண்டீர்;
மேலைப் புரத்தை நகைத்து எரித்தீர்;
     வில்வேள் புரத்தை விழித்து எரித்தீர்;
சூலப்படை ஏன்? மழுப்படை ஏன்?
     சுமந்தீர், அருணை அமர்ந்தீரே.         ---  திருவருணைக் கலம்பகம்.

மதன கோபர் ---

மன்மதனைக் கோபித்து செற்றி விழியால் அழித்தவர் சிவபெருமான்.

மதனகோப வரலாறு

இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார்.

"எந்தாய்! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை யான் நோக்கி, மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச் செய்தனர்.  அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால், மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியை, கிரியை, யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, ஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி, தானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர்".

"சிவபெருமான் ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது. இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபன்மன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில் அமர்ந்துள்ளார். இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.

இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய், அருவமும், உருவமும், உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றால், உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"

ஆவிகள் அனைத்தும் ஆகி, அருவமாய் உருவமாகி
மூவகை இயற்கைத்து ஆன மூலகாரணம் ஆது ஆகும்
தேவர்கள் தேவன் யோகின் செயல்முறை காட்டும் என்னில்,
ஏவர்கள் காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும்நீரார்.

"சிவமூர்த்தியின்பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி மறந்து, சிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபன்மனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், சிவபெருமானுடைய பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை".

"சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன்பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாக்கும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால், உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன் மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார். இதுவே செய்யத்தக்கது" என்றார்.

அது கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார்.

திருமால், "பிரமதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி நகரை அடைந்து, மன்மதனை வருமாறு நினைந்தார். மாயவானகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை மணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.

கங்கையை மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்
மங்கையை மேவ, நின் வாளிகள் தூவி,
அங்கு உறை மோனம் அகற்றினை, இன்னே
எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்.

பிரமதேவர் கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருமானது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா?

மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி, திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.

"அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும், திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச்செய்து, இந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து, புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுது உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த காசிபர், வசிட்டர், மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைத்தாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது".

"சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில், வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர் யாரும் இல்லை".

"திரிபுர சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"

"தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"

"முன் ஒரு நாள், தாங்களும், நாராயணமூர்த்தியும் 'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட போது, அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"

"சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"

"உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"

"திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"

"உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே!"

"தாருகா வனத்தில், இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யனை, புலி, மான்,முயலகன், பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள் உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"

"சர்வ சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ?
இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."

இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம் ஆராய்ந்து, பெருமூச்சு விட்டு, மன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடைய விண்ணவரிடம் விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவு பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு
யாராவது ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமமோ? ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து, பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும் வந்து சேரும்".

ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,
ஓவில் குறை ஒன்று அளரேல், அது முடித்தற்கு
ஆவி விடினும் அறனே, மறுத்து உளரேல்
பாவம் அலது பழியும் ஒழியாதே.

"பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ? பாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ? பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபன்மனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்ச பாணங்களுடன் செல்ல வேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.

அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான்.

பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு.  ஆராய்ந்து சொல்" என்றார்.

மனமதனை அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு தெளிந்து, பிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள வேண்டாம்" என்றான்.

பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்ப மாட்டோம்.  யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.

மன்மதன், பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்று, நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள் போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க, மீனக் கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின் மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது, தேரை விட்டு இறங்கி, தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு, பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்' என்று ஊங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்தி தேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.

மன்மதன் திருநந்தி தேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன் திருவருள் வழியே ஆகட்டும்.  இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் ஏற்றி, அரும்புக் கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.

இது நிற்க, மனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி, "மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான். எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான்மேல் படுதலும், பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது. 

மதன கோபர் விழியினில் வந்து, பகீரதி மிசை வளரும் சிறுவா ---

                                                                                 -  "தேசுதிகழ்
பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப் பூங்கோதைஇடப்
பாங்கு உறையும் முக்கண் பரஞ்சோதி, – ஆங்குஒருநாள்

வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கு இரங்கி,
ஐந்து முகத்தோடு அதோமுகமும் -  தந்து,

திருமுகங்கள் ஆறுஆகி, செந்தழல்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறி ஆறு உய்ப்ப,  -  விரிபுவனம்

எங்கும் பரக்க, இமையோர் கண்டு அஞ்சுதலும்,
பொங்கு தழல்பிழம்பை பொன்கரத்தால்  - அங்கண்

எடுத்து அமைத்து, வாயுவைக் "கொண்டு ஏகுதி"என்று, எம்மான்
கொடுத்து அளிப்ப, மெல்லக் கொடுபோய், - அடுத்தது ஒரு

பூதத் தலைவ! "கொடுபோதி”, எனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்று உய்ப்ப, - போதுஒருசற்று

அன்னவளும் கொண்டு அமைதற்கு ஆற்றாள், சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்ப,  திருவுருவாய் - முன்னர்

அறுமீன் முலைஉண்டு, அழுது, விளையாடி,
நறுநீர் முடிக்கு அணிந்த நாதன் - குறுமுறுவல்

 கன்னியொடும் சென்று அவட்குக் காதல் உருக்காட்டுதலும்,
அன்னவள் கண்டு, அவ்வுருவம் ஆறினையும் - தன்இரண்டு

கையால் எடுத்து அணைத்து, கந்தன் எனப்பேர் புனைந்து,
மெய்ஆறும் ஒன்றாக மேவுவித்து, -  செய்ய

முகத்தில் அணைத்து,  உச்சி மோந்து, முலைப்பால்
அகத்துள் மகிழ் பூத்து அளித்து, - சகத்துஅளந்த

வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே"!               --- கந்தர் கலிவெண்பா.

வெண்மையான ஒளி விளங்குகின்ற, அழகிய திருக்கயிலை மலையில், தொடுக்கப் பெற்ற அழகிய பூமாலையினை அணிந்த உமாதேவியாரை தமது இடப்பாகத்திலே வீற்றிருக்கப் பெற்ற மூன்று திருக் கண்களை உடைய மேலான சோதி வடிவாகிய சிவபெருமான், அவ்விடத்து ஒருநாள்  கொடிய அசுரர்கள் செய்யும் துன்பத்தைத் தாங்க இயலாத தேவர்களின் முறையீட்டிற்குத் திருவுளம் இரங்கி,  தம் ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் ஐந்து திருமுகங்களுடன் கீழ் நோக்கிய திருமுகம் ஒன்றினையும் கொண்டு, ஆறு திருமுகங்களை உடையவராய், செந்தழல் வடிவாகிய ஆறு நெற்றிக் கண்களின் நின்றும், ஒரே சமயத்தில் ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்த, அத்தீப் பொறிகள் விரிந்து நின்ற உலகங்கள் எங்கும் பரவ,  அவற்றைத் தேவர்கள் கண்டு பயப்படவும், அதனை அறிந்து பொங்கிய அத் தீப்பொறிகளின் திரட்சியினைத் தம் அழகிய திருக் கரத்தால் உடனே அவ்விடத்தினின்றும் எடுத்து, அவற்றின் வேகத்தை அடக்கி, வாயுதேவனை நோக்கி,  'நீ இவற்றை எடுத்துச் செல்வாயாக' என்று சிவபெருமான் அவனிடம் கொடுத்து அருள, வாயுதேவனும் அவற்றைப் பெற்று மெல்லக் கொண்டு சென்று, தன்னால் இயலாமல், தன்னை அடுத்து நிற்பவனாகிய அக்கினி தேவனை நோக்கி,  'ஒப்பற்ற ஐம்பூதங்களுக்குத் தலைவனாய் உள்ள அக்கினித் தேவனே, நீ இப்பொறிகளை எடுத்துச் செல்வாயாக' என்று கூறி அவனிடம் கொடுக்க, அக்கினி தேவனும் அவற்றைப் பெற்றுத் தாங்க இயலாமல் சென்று, குளிர்ந்த கங்கை ஆற்றில் கொண்டுபோய் விடுக்க, அந்த கங்கா தேவியும் அவற்றைச் சிறிது நேரமும் தாங்கிக் கொண்டு இருப்பதற்கு வலிமை அற்றவளாய், தனது தலைமீது தாங்கிச் சென்று சரவணப் பொய்கையில் விடுக்க, அவ்விடத்து அத்தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளின் திருவுருவங்களாய் மாற, முதற்கண் கார்த்திகைப் பெண்கள் அறுவர் முலைப்பாலை அக்குழந்தைகள் பருகி, அழுது விளையாடி இருக்க, மணமிக்க கங்கை நீரைச் சடைமுடியில் தரித்த சிவபெருமான்,  புன்சிரிப்பை உடைய உமாதேவியாரொடு சரவணப் பொய்கையினை அடைந்து, தனது திருமகனுடைய திருவுருவங்களை அத்தேவிக்குக் காண்பித்தலும்,  உமாதேவியார் கண்டு, அந்த ஆறு திருவுருவங்களையும், தன்னுடைய இரண்டு திருக்கரங்களாலும் ஒருசேர எடுத்து, ஆறு திருவுருவங்களையும் ஒரு திருவுரு ஆக்கிச் சேர்த்துத் தழுவி, கந்தன் என்று திருநாமம் சூட்டி, தனது செவ்விய திருமுகத்தில் சேர்த்து அணைத்து, உச்சியை முகந்து, திருவுளத்தில் மகிழ்ச்சி உற்று, தனது திருமுலைப் பாலை அளித்து, உலகத்தைத் தனது ஈரடியால் அளந்த திருமாலாகிய வெள்ளை இடபத்தின் மீது எழுந்தருளி இருக்கும் சிவபெருமானது திருக்கரத்தில் கொடுத்து இருக்க, அவ் அம்மையப்பர் திருவுளம் மகிழ்ச்சி கூர உயர்வு உற்று இருந்தவர் முருகப் பெருமான்.

வட விஜயபுரந்தனில் மேவிய பெருமாளே ---

விஜயபுரம் என்ற திருத்தலம் திருவாரூர் இரயில் நிலையத்தில் இருந்து திருவாரூர் நகருக்குச் செல்லும் வழியில் உள்ளது.

கருத்துரை

முருகா! உமதருளால் பெற்ற இந்த உடம்பைக் கொண்டு, உமது திருவடியைச் சேர அருள்.

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...