குண்டர்கள் யார்?

 

குண்டர்கள் நரகத்தில் விழுவார்கள்

-----

 

     திருப்பெரும்புதூர் என்னும் திருத்தலத்திற்கு அண்மையில் உள்ள "வல்லக்கோட்டை" என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் பாடி அருளிய திருப்புகழ்.

 

தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்

     ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்

     சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் ...... பெரியோரைத்

 

தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள்

     ஈவது கண்டுத கைந்த குண்டர்கள்

     சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் ......தொலையாமல்

 

வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள்

     நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள்

     மானவ கந்தைமி குந்த குண்டர்கள் ...... வலையாலே

 

மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்

     தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்

     வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி ...... விழுவாரே

 

ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும்

     வாலியு மம்பர மும்ப ரம்பரை

     ராவண னுஞ்சது ரங்க லங்கையு ...... மடைவேமுன்

 

ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ

     சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற

     ராம சரந்தொடு புங்க வன்திரு ...... மருகோனே

 

கோழி சிலம்பந லம்ப யின்றக

     லாப நடஞ்செய மஞ்சு தங்கிய

     கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல ...... வயலூரா

 

கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்

     வேல னெனும்பெய ரன்பு டன்புகழ்

     கோடை யெனும்பதி வந்த இந்திரர் ...... பெருமாளே.

 

     ஓதுவதற்கு எளிமையாக இத் திருப்புகழ்ப் பாடலைப் பதம் பிரித்துத் தருகின்றேன்.

 

தோழமை கொண்டு சலம்செய் குண்டர்கள்,

     ஓதிய நன்றி மறந்த குண்டர்கள்,

     சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள், ...... பெரியோரைத்

 

தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள்,

     ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்,

     சூளுறவு என்பது ஒழிந்த குண்டர்கள்,......தொலையாமல்

 

வாழ நினைந்து வருந்து குண்டர்கள்,

     நீதி அறங்கள் சிதைந்த குண்டர்கள்,

     மான அகந்தை மிகுந்த குண்டர்கள், ...... வலையாலே

 

மாயையில் நின்று வருந்து குண்டர்கள்,

     தேவர்கள் சொங்கள் கவர்ந்த குண்டர்கள்,

     வாதை நமன் தன் வருந்திடும் குழி ...... விழுவாரே.

 

ஏழு மரங்களும், வன் குரங்கு எனும்,

     வாலியும் அம்பரமும் பரம்பரை

     ராவணனும் சதுர் அங்க லங்கையும் ......அடைவேமுன்

 

ஈடு அழியும்படி, சந்த்ரனும், சிவ

     சூரியனும், சுரரும் பதம்பெற,

     ராம சரம் தொடு புங்கவன் திரு ...... மருகோனே!

 

கோழி சிலம்ப நலம் பயின்ற

     கலாப நடஞ்செய, மஞ்சு தங்கிய,

     கோபுரம் எங்கும் விளங்கு மங்கல ...... வயலூரா!

 

கோமள அண்டர்கள், தொண்டர், மண்டலர்,

     வேலன் எனும் பெயர் அன்புடன் புகழ்

     கோடை எனும் பதி வந்த இந்திரர் ...... பெருமாளே.

 

இதன் பொழிப்புரை ---

 

         மராமரங்கள் ஏழும், வலிமை மிக்க குரங்காகிய வாலியும், கடலும், அசுர பரம்பரையில் வந்த இராவணனும், அவனது நால்வகைப் படையும் (யானை, தேர், குதிரை, காலாட்படை) இருந்த இலங்கையும், மற்ற எல்லாவகைச் செல்வமும் குன்றி அழியும்படியும்,  சந்திரனும், சிவசூரியனும், தேவர்களும் தமது பதவியிலே நிலைபெறவும்,  ராமபாணத்தைத் தொடுத்து விடுத்த இராமச்சந்திர மூர்த்தியின் திருமருகரே! சேவல் இனிது கூவ, அழகிய தோகையை உடைய மயில் நடனம் செய்ய,  மேகங்கள் தங்கும் உயரமான கோபுரங்கள் எங்கும் விளங்கும் மங்களகரமான வயலூரில் மேவிய வள்ளலே!

 

         இளமை மிகுந்த தேவர்களும், தொண்டர்களும், மண்டலாதிபர்களும், வேலன் என்னும் திருப்பெயரை அன்புடன் புகழ்கின்ற, கோடைநகர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய,  இந்திராதியரால் துதிக்கப் பெற்ற பெருமையின் மிக்கவரே!

 

         நட்புப் பூண்டு இருந்து, பின்னர் நண்பருக்கு வஞ்சகம் செய்யும் கீழோர், அறிவு நூல்களைப் போதித்த ஆசிரியரது நன்றியை மறந்த கீழோர், மேற்கொண்ட விரதங்களை இடையில் விலக்கிய கீழோர், பெரியோர்களை நிந்தையான தூஷண வார்த்தைகளைச் சொல்லிய கீழோர், தருமம் செய்வதைக் குறுக்கே நின்று தடுத்த கீழோர், சத்திய வார்த்தை கூறி அதனை மறந்த கீழோர், எப்போதும் தாம் அழியாமல் வாழ நினைத்து அதற்காகவே வருந்தும் கீழோர், நீதியையும், தருமத்தையும் அழித்த கீழோர், தன்னைப் பெரிதாக எண்ணிக் கொண்டு செருக்கு மிகுந்துள்ள கீழோர், மாயையாகிய வலையில் அகப்பட்டு உழன்று வருந்தும் கீழோர்,  தெய்வச் சொத்தை அபகரித்த கீழோர், (ஆகிய இந்தக் கீழ்மக்கள் யாவரும்) வேதனைக்கு இடமாகிய, யமனது நரகக் குழியில் விழுபவர்கள் ஆவார்கள்.

 

தோழமை கொண்டு சலம் செய் குண்டர்கள் ---

 

குண்டகன் --- கணவனைப் பிழைத்து, சோர நாயகனுக்குப் பிறந்தவன்.

 

மனத்தினால் பிழைத்தவள் வயிற்றில் பிறந்தவனுக்கு நற்குணங்கள் அமையா. ஒருவனிடம் நட்புக் கொண்டு, பழகிய பின்னர், அந்த நண்பனுக்குத் தீங்கு செய்பவன். மித்திரத் துரோகம் மிகப் பொல்லாதது.

 

நட்புஇடைக் குய்யம்வைத்து எய்யா வினைசூழ்ந்து   

வட்கார் திறத்தராய் நின்றார்க்குத் - திட்பமாம்   

நாள்உலந்தது அன்றே நடுவன் நடுஇன்மை   

வாளா கிடப்பன் மறந்து.                   --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

      நண்பரிடத்து வஞ்சகம் செய்தலை மனத்தில் கொண்டு, அவர் அறியாமல், அவர்க்குத் தீங்கு செய்யக் காலம் பார்த்து, அவர்கட்கு உள்ள பகைவரோடு சேர்ந்து கொண்டு நிற்பவர்க்கு வாழ்வதற்குப் பலமாய் உள்ள ஆயுட்காலம் முடிந்ததில்லை. த்தகைய வஞ்சகரின் வாழ்நாள் முடிவு வராமையினால், இவருடைய நடுவுநிலை இல்லாமையை, நடுவு நிலைமையுடைய இயமன் நினையாமல் சும்மா இருப்பன்.

 

"சலம் பற்றிச் சால்பு இல செய்யார், மாசு அற்ற

குலம் பற்றி வாழ்தும் என்பார்". 

 

என்பார் திருவள்ளுவ நாயனார்.

 

சலம் --- வஞ்சகம், துரோகம்.

 

நிலத்தவர் வானம் ஆள்பவர், கீழோர்,

         துயர்கெட நெடிய மாற்கு அருளால்,

அலைத்த வல்அசுரர் ஆசற ஆழி

         அளித்தவன் உறைவிடம் வினவில்

சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத்

         தன்மையார் நன்மையால் மிக்க

உலப்புஇல் பல்புகழார் ஓமமாம் புலியூர்

         உடையவர் வடதளி அதுவே.    --- திருஞானசம்பந்தர்.

 

ஓதிய நன்றி மறந்த குண்டர்கள் ---

 

     ஓதுவித்த நன்றியை மறக்கக் கூடாது. ஆசிரியருடைய உபகாரத்தை எப்போதும் நினைக்க வேண்டும். "ஓதுவித்தவர் கூலி கொடாதவர்" கொடிய நரகில் உழல்வார் என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் காட்டி உள்ளார்.

 

     மேலும் குருநாதனுக்கு மனம் மகிழுமாறு குருதட்சணை தந்து அருள் பெறவேண்டும். உதங்க முனிவர் குருதட்சணை தரும்பொருட்டு அரும்பாடு பட்டனர். குருபக்தி காரணமாக ஏகலைவன் தனது வல்விரலையே வழங்கினான்.

 

சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள் ---

 

சூழ்தல் --- ஆராய்தல், கருதல்.

 

கருதி ஆராய்ந்து ஒரு விரதத்தை மேற்கொண்டு அதனை இடையில் விடுதல் கூடாது. விரதங்களுக்குள் தலையாயது கொல்லா விரதம்.

 

நோன்பு எனப்படுவது கொன்று தின்னாமை...   --- ஔவையார்.

 

கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க

எல்லார்க்கும் சொல்லுவதுஎன் இச்சை பராபரமே.  

                                              ---  தாயுமானார்.

 

கொல்லா நெறியே குருவருள் நெறி எனப்

பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே.  ---  திருவருட்பா.

 

கொல்லா விரதத்தை மேற்கொண்டு, உடல் சிறிது நோய்வாய்ப் பட்டால், அதுவே அதற்குக் காரணம் என்று பிறழ உணர்ந்து மீண்டும் புலால் உணவை உண்பர். இது மிகவும் அறியாமை.

 

பெரியோரை தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள் ---

 

பெரியோர்களைச் சிறிதும் அச்சம் இன்றி அவர்கள் மனம் திடுக்கிடுமாறு நிந்தனைகளை உரைப்பது கொடிய பாவம்.

 

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம், உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.         ---  திருக்குறள்.

 

ஈவது கண்டு தகைந்த குண்டர்கள் ---

 

ஒல்லும் வகையால் அறம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர், செய்பவரையாவது தடுக்காமல் இருக்கவேண்டும்.

 

தாமும் கொடுக்கமாட்டார். கொடுப்பவரையும் தடுப்பார். அது எதுபோல் என்றால், நல்ல காய்கனிகளை உதவும் மரத்தைச் சூழ்ந்து இருக்கும் உடை முள்ளைப் போல் என்று அறிக.

 

தாமும் கொடார், கொடுப்பார் தம்மையும் ஈயாதவகை

சேமம் செய்வார் சிலர்உண்டே, --- ஏமநிழல்

இட்டுமலர் காய்கனிகள் ஈந்துஉதவும் நன்மரத்தைக்

கட்டுமுடை முள்ளெனவே காண்.             ---  நீதிவெண்பா.

 

ஈவது விலக்கேல்...                           --- ஔவையார்.

 

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்,

உண்பதூஉம் இன்றிக் கெடும்.                 --- திருக்குறள்.

 

சூளுறவு என்பது ஒழிந்த குண்டர்கள் ---

 

சூளுறவு --- ஆணையிடுதல். தான் வழிபடும் தெய்வத்தின் மீதும், தாய் தந்தை இருவர் மீதும் ஆணையிட்டு, அதனை மீட்டும் துறத்தல் பெரும்பாவம்.

 

பரத்தைபால் அணைந்து நண்ணிய கணவனாரை நோக்கி, எம்மைத் தீண்டுவீராகில் திருநீலகண்டத்தின் மீது ஆணை என்று மனைவியார் கூறினார். அது கேட்ட திருநீலகண்டனார் உள்ளம் நடுங்கி, மனைவியாரையே அன்றி மற்றை மாதரையும் தீண்டாது, புலன்களை வென்று பெரிய வீரராக விளங்கினார்.

 

ஆதியார் நீலகண்டத்து அளவு தாம்கொண்ட ஆர்வம்

பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி,

ஏதிலார் போல நீங்கி,எம்மை என்றதனால் மற்றை

மாதரார் தம்மை என்தன் மனத்தினால் தீண்டேன் என்றார்.  --- பெரியபுராணம்.

 

தொலையாமல் வாழ நினைந்து வருந்து குண்டர்கள் ---

 

ஒழிவு இன்றித் தாமே வாழவேண்டும். பிறர் வாழக் கூடாது என்று எண்ணி, பிறர் நலத்தை எல்லாம் கவர்ந்துகொண்டு வாழ்பவர். இதுவும் வெறுக்கத்தக்க பாவம்.

 

நீதி அறங்கள் சிதைந்த குண்டர்கள் ---

 

நீதி --- ஒரு சமுதாயத்திற்கு, ஒரு குலத்திற்கு, ஒரு பகுதியினருக்கு என்று ஏற்பட்டது.

 

அறம் --- எல்லோருக்கும் பொதுவாக உள்ளது. 

 

மன்னவர்க்கு ஏற்பட்டது மனுநீதி. வேட்டையாடுதல் மன்னவர்க்கே உரியது. பிறருக்கு ஏற்றது அன்று. குற்றம் செய்வாரைத் தண்டித்தல், ஒறுத்தாரை ஒறுத்தல் முதலியனவும் மன்னர் நீதி.

 

நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது

வஞ்சம் அன்று மனுவழக்கு........          ---  கம்பராமாயணம்.

 

தீங்கு செய்தார்க்கு நன்மை செய்யவேண்டும் என்பது அறம்.  அது மன்னனை ஒழிந்த ஏனையோருக்கு உரியது.

 

இன்னை செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்னே பயத்ததோ சால்பு.                ---  திருக்குறள்.

 

பொய் சொல்லக்கூடாது என்பது எல்லோருக்கும் பொதுவான அறம்.

 

இவ்வாறு அறத்திற்கும் நீதிக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும்.

 

மான அகந்தை மிகுந்த குண்டர்கள் ---

 

மானம் --- பெருமை. இங்கு தற்பெருமையைக் குறிக்கின்றது.  தற்பெருமை கொண்டு செருக்குற்று அடக்கமின்றி அலைவர்.

 

வலையாலே மாயையில் நின்று வருந்து குண்டர்கள் ---

 

வலை --- உயிர்களைச் சிக்க வைத்துத் துன்பம் செய்வது.  ஆசையாகிய வலையில் சிக்குண்டு மாயையில் மயங்கி அவமே அழிதல்.

 

மாயமயக்கு ஒழிந்தார் வேறுஒன்றை நாடுவரோ

நேயஅருள் நிலையில் நிற்பார் பராபரமே.      ---  தாயுமானார்.

 

தேவர்கள் சொங்கள் கவர்ந்த குண்டர்கள் ---

 

சொம் --- சொத்து.

 

கடவுளுடைய சொத்துக்களைக் கவர்ந்து கொள்வது மிகமிகக் கொடிய பாவம். கோயில் கட்டுவதாகவும், மடாலயம் கட்டுவதாகவும், தண்ணீர்ப் பந்தல் வைப்பதாகவும், அன்னதானம் செய்வதாகவும் வசூலித்து, வயிறு வளர்ப்பவர் பலர். இவர்கள் தீவாய் நரகில் வீழுந்து பலகாலும் பெருந்துன்பம் அடைவர்.

 

மேலும் திருக்கோயில்களுக்குத் தலைவராக இருந்து தேவாலயங்களின் உடைமைகளை நெஞ்சம் அஞ்சாது கவர்ந்து கொள்பவர் பலர்.

 

வாதை நமன்தன் வருந்திடும் குழி விழுவாரே ---

 

மேற்கூறிய பாவங்களைச் செய்தவர்கள் இயமனுடைய ரௌரவம் முதலிய நரகக் குழியில் வீழ்ந்து அநேக காலம் துன்புறுவார்கள்.

 

கொல்வதே கன்றி நின்றார்,

         கொடியவர், கடிய நீரார்,

இல்லையே இம்மை அல்லால்

           உம்மையும் உயிரும் என்பார்,

அல்லதும் தவமும் இல்லை,

           தானமும் இழவுஎன் பாரும்,

செல்ப அந் நரகந் தன்னுள்

           தீவினைத் தேர்கள் ஊர்ந்தே.       --- முத்தியிலம்பகம்.

 

சுவர்க்கமும் நரகமும் இல்லை என்று பிதற்றுவாரும் உளர்.  ஆனால், தெய்வப் புலவர் திருவள்ளுவர் சுவர்க்கத்தையும் நரகத்தையும் உண்டு என்று கூறுகின்றனர்.

 

அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை

ஆர்இருள் உய்த்து விடும்.

 

உண்ணாமை உள்ளது உயிர்நிலை, ஊன்உண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு.

 

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை, கள்ளார்க்குத்

தள்ளாது புத்தேள் உலகு.                     ---  திருக்குறள்.

 

 

 

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...